Wednesday, March 3, 2021

தமிழ்ச் சொல், பிறமொழிச் சொற்களை வேறுபடுத்திக் காண்பது எவ்வாறு?

தமிழ்ச் சொல், பிறமொழிச் சொற்களை வேறுபடுத்திக் காண்பது எவ்வாறு?

--- துரை.ந.உ.


இலக்கணத்தைக் கூறிப்பயம்காட்டாமல், விதிகளைச் சொல்லிப் பயம்கூட்டாமல் சொல்ல முயன்றிருக்கிறேன், சில எளிய குறிப்புகளின் மூலம், எவை எல்லாம் தமிழில்லை என்று.

1) ர்,ழ்- எழுத்துகள், தமிழ் எழுத்திலக்கணத்தின்படி, குறிலை முதலெழுத்தாக உள்ள சொல்லில் இரண்டாம் எழுத்தாக வராது. அவ்வாறு வரும் சொற்கள் தமிழில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் .
எ.கா:
தர்மன், கர்ணன், அர்ச்சுனன், நிர்மலா - தமிழில்லை
அர்த்தம், அர்ச்சனை, அர்ப்பணம்
கர்ப்பம், தர்க்கம், தர்மம், மர்மம், வர்க்கம்
சர்ப்பம், சர்வம், சொர்க்கம், சர்க்கரை
நிர்வாகம், நிர்மூலம், நிர்ணயம், நர்த்தனம் — தமிழில்லை.

2) மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்கள் தமிழில்லை
எ.கா :
ப்ரபஞ்சன், ப்ரியா, க்ரே, ப்ளூ - தமிழில்லை

3) வல்லின மெய்யெழுத்தில் (க்,ச்,ட்,த்,ப்,ற்) முடியும் சொற்கள் தமிழில்லை
எ.கா :
அசோக், பிரசாந்த், கான்க்ரீட், சோசப், - தமிழில்லை.

4) சொல்லின் நடுவில்வரும் வல்லின மெய்யெழுத்தில் -க்,ச்,ட்,த்- ஐத் தொடர்ந்து அதனதன் உயிர்மெய்யெழுத்துகள் மட்டுமே வரும் . வேறெழுத்துகள் வந்தால் தமிழில்லை .
எ.கா: க்-ஐத் தொடர்ந்து - க,கா,கி,கீ,கு,கூ ………… மட்டுமே வரும்.
விக்ரம், பத்மினி, வித்வான், அக்ரகாரம், உத்ரம் - தமிழில்லை

5) செள - இல் துவங்கும் சொல் தமிழில்லை
எ.கா :
செளக்கியம், செளந்தர்யம் - தமிழில்லை

6) யகரத்தில், யா- ஐத்தவிர , பிற எழுத்துகளில் தொடங்கும் சொல் தமிழில்லை
எ.கா :
யந்திரம் , யமன், யுவன், யுவதி - தமிழில்லை

7) ர, ல - இல் தொடங்கும் சொல் தமிழில்லை
எ.கா :
ராமன், ரங்கன், லட்சுமி, லட்சம், லட்சியம் - தமிழில்லை

கூடுதலாக, 
எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் , இருந்தாலும் இதையும் பதிந்தால்தான் ஆரம்பத்தில் இருப்போருக்கும் பயன்தரும்

8) கிரந்த எழுத்துகள் - ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ, ஸ்ரீ - மற்றும் இவற்றின் இனம் ) இருக்கும் சொற்கள் தமிழில்லை
எ.கா :
ஸ்ருதி, லஷ்மி, ஜெயமோகன், ஹிந்து, தக்ஷன், சுபஸ்ரீ = தமிழில்லை




No comments:

Post a Comment