Monday, March 15, 2021

நூல் விமர்சனம்: கல்வெட்டுகளில் தேவதாசி

முனைவர் க.சுபாஷிணி


வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சாந்தினிபி அவர்கள் எழுதி, விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் ''கல்வெட்டுகளில் தேவதாசி'. தேவதாசி அல்லது தேவரடியார் என்று குறிப்பிடப் படுவோர் யார் என்ற கேள்வியும், அதன் பின்னணியிலான சர்ச்சைகளும், அவர்களைப் பொதுவாகவே பாலியல் தொழில் சார்ந்தவர்களாக எண்ணக்கூடிய சிந்தையும் அதிகரித்து வெளிப்பட்ட சூழலில், தேவரடியார் என்பவர் யார் என்பதை கல்வெட்டுகளின் சான்றுகளின் அடிப்படையை வைத்து ஆராய்ந்து தனது கருத்துக்களை முன்வைத்து எழுதி இருக்கின்றார் நூலாசிரியர்.

நூலின் 12 தலைப்புகளில் தேவரடியார் தொடர்பான செய்திகள் ஆராயப்படுகின்றன. தேவரடியார் தோற்றம், தேவரடியார்களின் பெயர்கள், அவற்றிற்கான விளக்கம், கோயிலுக்குள் பணிசெய்ய வந்தது எப்படி, கோயில்களில் தேவரடியார்கள், அவர்களது கடமை, அவர்களது போராட்டம், சிறப்பான செயல்பாடுகள், அவர்களது பொருளாதார சமூக நிலை, கோயில்களில் கொள்ளைகளும் நடந்தன போன்ற செய்திகள், கால ஓட்டத்தில் தேவரடியார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம், அம்மாற்றத்தின் பின்னணி, தேவதாசிகள் எனப்படுவோருக்குள் உள்ள பிரிவு என நூல் விரிவாக ஆராய்கின்றது.

நூலில் மிக முக்கியமாக தேவரடியார் -தேவதாசி என்ற இரண்டு சொற்களுக்கு விளக்கம் வழங்கப்படுகின்றது. அதனை அடுத்து தேவரடியார் எனப்படுபவர் அல்லது தேவர் மகளார் என மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெயரிடப்பட்ட பெண்கள் எத்தகைய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள், அவர்களைப்பற்றி பல்வேறு கோயில்களில் வழங்கப்பட்டுள்ள கல்வெட்டுச் சான்றுகள் பற்றிய செய்தி என்பவை நூலில் பல இடங்களில் விளக்கப்படுகின்றன.

நூலில் தனியொரு அத்தியாயமாக `பொருளாதார சமூக நிலை` என்ற தலைப்பில் நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்கள் நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன. `அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு` என்ற அறிவுக்கு ஒவ்வாத பழமொழி கடந்த நூற்றாண்டில் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் வந்திருக்க வேண்டும். ஏனெனில் காலம் காலமாக தங்கள் குடும்ப வாழ்க்கையின் பொருளாதார நிலையைத் தக்கவைக்க பெண்கள் விவசாயத்திலும், தொழிற்சாலைகளிலும், வெளி இடங்களிலும், பொது இடங்களிலும், பணிபுரிந்த செய்திகளை நாம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அந்தப் பணியைச் செய்வதில் இச்சிறு நூல் பங்களித்துள்ளது.

தேவரடியார் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட பெண்களின் நிலை அவலநிலைக்கு மாறியதற்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசியல் நிலைத்தன்மை முக்கிய காரணமாகிறது. குறிப்பாக விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் கோயில் கலாச்சாரம் என்பது மாற்றம் கண்டு, பெண்கள் பாலியல் ரீதியாகக் குறிவைத்துத் தாக்கப்படும் அவலநிலை ஏற்பட்டது.

தேவரடியார் எனும் சொல்லில் `ர`கரம் நீக்கப்பட்டு `தேவடியாள்` என மாறி, பரத்தை எனும்  சொல்லாக நம் சமூகத்தில் ஒரு சொல் உருவாகியிருப்பது அவலம். தமிழைச் சிறப்பித்து செம்மொழியைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அழுக்கேறிய சிந்தனையுடன் தேவரடியார் என்ற சொல்லைச்  சிதைத்ததோடு அதன் பொருளையும் சிதைத்து பெண் சமூகத்திற்குக் கேட்டினை விளைவித்த செயலை நாம் கண்டிக்க வேண்டியது அவசியம். அச்சொல்லை நம் பேச்சு வழக்கிலிருந்தே தமிழ் மக்கள் ஒதுக்க வேண்டியதும் தமிழுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது.  மிகப்பழமையான பல செய்திகளைக் கல்வெட்டு சார்ந்து கூறும் ஆசிரியர்,  இக்கால மற்றும் இடைக்கால அரசியல் மற்றும் சமூக செய்திகளையும் நூலில் பல இடங்களில் இணைத்திருக்கிறார். அத்துடன் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் ஏற்பட்ட உடல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாலியல் தொழிலுக்கு எதிரான சட்டங்கள், கடந்த நூற்றாண்டில் பல தளங்களில் பாலியல் தொழிலுக்கு எதிராக நிகழ்ந்த சமூக நலன் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமன்றி  சில மதம் சார்ந்த அமைப்புகளின் `நாட்டிய எதிர்ப்பு இயக்கம்` போன்ற செய்திகளும் இணைக்கப் பட்டிருப்பது சிறப்பு. இது பாராட்டுதலுக்குரியது.

நூலில் பல சான்றுகள் பேசப்படுகின்றன ஆனால் இந்த நூலில் கூறப்படுகின்ற சான்றுகளுக்கான துணை குறிப்புகளோ அல்லது `சைட்டேஷன்` என்று சொல்லப்படுகின்ற சான்றுகள் தொடர்பான ஆவணங்கள் பற்றிய செய்திகள் இடம் பெறாமல் இருப்பது ஒரு பெரும் குறையாகவே காண்கிறேன். இந்த நூல் எடுத்துக் கொண்ட தலைப்பு ஆழமானது, கணமானது. இத்தகை தலைப்பு பற்றி கூறுகின்ற நூல் ஒவ்வொரு கல்வெட்டுகளைப் பற்றிய செய்திகளையும்,  அரசியல் தொடர்பான செய்திகள் கூறப்படும் போது அல்லது வரலாற்று நிகழ்வுகள் பதியப்படும் போது அவை பற்றிய சரியான துணை குறிப்புகளையும் பட்டியலிட்டிருக்க வேண்டும். அது இடம்பெறாமல் இருப்பது இந்த நூலில் நான்  காணும் மிகப்பெரிய ஒரு குறை என்றே கருதுகிறேன். ஆசிரியர் தனது அடுத்த பதிப்பில் இந்தக் குறையை நீக்கி எல்லாச் சான்றுகளுக்கும் முறையான துணை குறிப்புகளை வழங்கி இந்த நூலின் தரத்தை மேலும் உயர்த்துவார் என்று நம்புகின்றேன்.

ஏறக்குறைய 102 பக்கங்கள் கொண்ட இந்த நூல் கணமான பொருளை, வரலாறு, சமூகவியல், அரசியல் என்ற முப்பரிமாணத்தில் அலசி ஆராய்கின்றது. தமிழ் ஆய்வுலகத்திற்கு, அதிலும் குறிப்பாக சமூகவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபடுவோருக்கு இந்த நூல் நிச்சயம் பயனளிக்கும்.

---


No comments:

Post a Comment