Wednesday, May 30, 2018

ஒக்கூர் மாசாத்தியார்


  முனைவர். வீ. ரேணுகா தேவி




மக்களின் வாழ்வியலை, அவர்களின் காதலையும், வீரத்தையும் அகம் புறம் எனப் பிரித்துப் பாடிய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். காதலும் வீரமும் நாடு, இனம், மொழி கடந்தவை. எனவே அவற்றைப் பாடிய இலக்கியங்கள் உலகில் வாழும் அனைவருக்கும் உரியன. அவை Universal literature.

சங்க இலக்கியங்களாகத் தொடுக்கப்பட்ட பாடல்கள் 2381. ஆசிரியர் பெயர் தெரிந்த பாடல்கள் 2279, அவற்றை பாடிய புலவர்கள் 475, அவர்களில் சிவகங்கை சீமையைச் சேர்ந்தவர்கள்,
1. புலவர் நல்லந்துவனார்
2. அல்லூர் நன்முல்லையார்
3. வெள்ளைக்குடி நாகனார்
4. ஒக்கூர் மாசாத்தியார்
5. ஒக்கூர் மாசாத்துவனார்
6. மாங்குடி மருதனார்
7. கனியன் பூங்குன்றனார்
8. இடைக்காடர்
9. வேம்பற்றூர் குமரன்
10. பாரி மகளிர்
11. கிள்ளி மங்கலம் கிழார்
12. கிள்ளிமங்கலம் சேரகோவனார்
13. இரணியமுட்டத்து பெருங்குன்றூர்க் கொசிகன்

சங்ககாலத்துப் பெண்மணிகள் பலர் கல்வி கேள்வி வீரப்பண்பு முதலிய எல்லாத்துறைகளிலும் சிறந்திருந்தனர். ஒரு நற்றாய், தன் மைந்தனை வேல் கைக்கொடுத்துப் போர்முகத்துக்கு அனுப்புவளாயின், அவள் தன் வீரத்தறுகண்மையை என்னவென்பது. அந்த வீரத்தாயை பாடியவள் வேறுயாருமில்லை அவர் ஒக்கூர் மாசாத்தியார்.

அதியன் பரிசில் நீட்டித்த போது வெகுண்ட அவ்வை நான் ஒன்றும் நீ அளிக்கப் போகும் பரிசுகளுக்காகக் காத்திருப்பவள் அல்ல. நான் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு வரவேற்பு உண்டு. என்னுடைய கல்வி கேள்விகளில் நம்பிக்கை உண்டு. எனவே நான் புறப்படுகிறேன். கற்றார்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதனை 
”மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே”
 என்னும் அவ்வையின் வரிகள் அன்றே வெளிப்படுத்தின. 

அக்கால அறிஞர்கள் தம் வயிற்றுப்பாட்டிற்கு வழிகாண்பதே வாழ்க்கை அதற்காகப் பிறரைப் பாடிப்பிழைப்பதே தம்தொழில் என்பதை மறந்து, தவறு கண்டவழி, அத்தவறு செய்தான் அந்நாடாளும் அரசனே யெனினும், அவன் அரசன்; தமக்கு வேண்டும் பொன்னும் பொருளும் அளித்துப் புரப்பவன்; ஆகவே, அவனைக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பதா என எண்ணாது இடித்துக்கூறித் திருத்துவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

அத்தகு புலவர் வரிசையிலே வந்தவர் தான் ஒக்கூர் மாசாத்தியார். அவர் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்தவை எட்டு. அவற்றுள் ஒன்று புறத்துறை தழுவிய பாடல் ஏனைய ஏழும் அகத்துறைக் கருத்துக்கள் கொண்டவை. குறுந்தொகைப் பாடல்கள் 126, 139, 186, 220, 275 அகநானூறு 324, 381, புறநானூறு 279. அவர் பாடிய பாக்கள் எல்லாவறுள்ளும், தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் சிறப்பளித்துத் தனக்கும் புகழ் அளித்த பெரும்பாட்டு, புறநானூற்றில் காணப்படும் பாடல் 279.

தமிழ்நாட்டுச் சிற்றூர்த் தெருவொன்றில் நடந்த நிகழ்ச்சி, நாடு காவலுக்கான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம்; காலை நேரம், ஊர் நடுவே அமைந்திருக்கும் மன்றத்தே உள்ள போர்ப்பறை ஒலிக்கத் தொடங்கிவிட்டது, அதைக் கேட்டாள் ஒரு கிழவி, நாடு காவலுக்கு நம் தொண்டும் இருக்கவேண்டும், நம் குடிலிருந்து ஓர் ஆள் செல்லவேண்டுமே என்று எண்ணினாள் ஏக்கம் மேற்கொண்டாள; காரணம், போருக்குச் செல்லத்தக்க பேராண்மை மிக்க ஆண்மகன் ஒருவனும் அவள் வீட்டில் இல்லை; அவள் ஆண் துணை அற்றவள் அன்று உடன்பிறந்த ஆண்மக்களையோ மணந்த கணவணையோ பெறாதவள் அன்று, அத்தகைய உறவினரைப் பெற்றே இருந்தாள், ஆனால், சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற போரில் கலந்துகொண்டு, பகைவர் யானைப்படையைப் பாழ்செய்துவிட்டுக் களத்திலேயே மாண்டு மறைந்துபோனான் அவள்  அண்ணன், முன்னாள் நடைப்பெற்ற போரில், பகைவர் யானைவரிசைகளை எதிர்த்துப் போரிட்டு இறந்துபோனான் அவள் கணவன், இருந்த ஆண்மக்கள் இருவரும் இவ்வாறு இறந்துவிட்டனர், அவர்கள் இறந்துவிட்டனர் என்று அவள் கவலை கொள்ளவில்லை, இன்று நடைபெறப்போகும் போருக்குத் தானும் ஒரு வீரனை அனுப்பமுடியவில்லையே, என்றே கலங்கினாள், கலங்கி நின்றவள், சிறிது நேரத்துக்கெல்லாம் எதையோ எண்ணிக்கொண்டவள்போல் தெருக்கோடிக்கு விரைந்தோடினாள். அவள் மகன் அங்கே மயிரை விரித்துக் கொண்டு மண்ணில் புரண்டு ஆடிக்கொண்டிருந்தான். ஒரே மகன், ஆடும் பருவம் கடவாத இளைஞன், அவன் கையைப் பிடித்து அழைத்து வந்தாள், வீட்டினுட் கொண்டுசென்று நீராட்டினாள், பெட்டியில் மடித்துவைத்திருந்த தூய வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து உடுத்தினாள், பறட்டைத்தலையில் எண்ணெய் தடவி வாரி முடித்தாள், அவள் முன்னோர் ஆண்ட வேலைக் கையிலே கொடுத்தாள், தெருவிற்கு அழைத்துவந்து, “அதோ, அங்கேதான் நடை பெறுகிறது போர், போ அங்கே விரைந்து” என்று வழிகாட்டி அனுப்பி, அவன் செல்லும் திசை நோக்கி நின்றாள். அவள் வரலாற்றினையும், அன்று அவள் நடந்துகொண்ட செய்கைகளையும் கண்டனர் அத்தெருவார். அவருள்ளம் திடுக்குற்றது. “என்னே இவள் துணிவு! இவள் செயல், அம்ம! அம்ம!! கொடிது!! மறக்குடி மகள் என்பது இவளுக்கே தகும்” என்று வியந்து பாராட்டினர்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் எங்கோ ஒரு பகுதியிலிருந்த சிற்றூர்த் தெருவொன்றில் நிகழ்ந்த இந்நிகழ்ச்ச்சியைத் தமிழர்கள் தமிழகம் உள்ள வரையிலும் மறவாதிருக்கச்செய்த மாண்பு மாசாத்தியார்க்கே உரியது.
“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தருமே;
மேனுள் உற்ற செரூவிற்கு இவள் தன்னை
யானை எறீந்து களத்தொழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்உ இவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே;
இன்றும், செருப்பறாஇ கேட்டு விருப்புற்றூ மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்
பாறூமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
’செருமுகம் நோக்கிச் செல்க’ என விடுமே” 

வீரச்சுவையை விளங்கப் பாடிய மாசாத்தியார், இன்பச்சுவை சொட்டும் அகப்பாடல் சிலவும் பாடியுள்ளார்; பொருள் கருதிப் பிரித்து சென்ற கணவன் நினைவாகவே இருக்கிறாள் ஒருத்தி; ஒருநாள் மாலைக்காலத்தே, அவளும் அவள் தோழியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்நேரத்தில், எங்கிருந்தோ வந்த மணியோசை, காலையில் சென்று காட்டில் மேய்ந்து மாலையில் வீடுதிரும்பும் ஆனிரைகளின் கழுத்தில் கட்டிய மணிகளினின்றூம் வந்திருக்கும்; அல்லது காவலர் புடைசூழத் திரும்பிவரும் கணவன் ஏறிவரும் தேரில்கட்டிய மணிகளினின்றும் வந்திருக்கும். ஆகவே, அவளால் ஓசையைக்கண்டு துணிய முடியவில்லை. மணியோசை கேட்கிறது என்றால், அது மிகச் சேய்மையிலிருந்து வந்திருத்தல் இயலாது; அண்மையிலிருந்தே வந்திருத்தல் வேண்டும்; சிறிதுநேரம் கழித்தால் உண்மை விளங்கிவிடும்; ஆனால், அதுவரை காத்திருக்கவிடவில்லை அவள் உள்ளம்; உடனே அறிந்துகொள்ளத் துடித்தாள்; ஆகவே, அண்மையில் கிடந்த உயர்ந்த கல்மீது ஏறி நின்று பார்த்து அறிந்துகொள்ளலாம் வா எனத் தோழியை அழைக்கிறாள். தலைவியின் உள்ளத்துடிப்பையுணர்த்தும் ஒரு செய்யுள்;
“முல்லை யூர்த்த கல்லுய ரேறீக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி!
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண்மணி கொல்லோ!
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்லில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணல் காட்டாறு வரூஉம் 
தேர்மணி கில்? ஆண்டு இயம்பிய உளவே.”

தலைவியின் ஆர்வ உள்ளத்தைக்காட்டிய மாசாத்தியார், தலைவனின் விரைவுள்ளத்தையும் அவன் உள்ளம் அறிந்து ஒட்டும் தேர்ப்பாகனையும் நமக்கு அறிவிக்கும் முறைச் சாலச்சிறாந்தது. வந்த வேலை முடிந்ததும், வீடு அடைவதில் பெருவிருப்புடையன் தலைவன் என்பதை அறிவான் பாகன்; ஆகவே, தேரை விரைந்து ஒட்டிவந்து தலை மகளின் வீட்டு வாயிலில் நிறுத்தி, “இறங்குக” என்று தலைமகனை நோக்கிக் கூறினான். அதுகேட்ட தலைவன் வியப்புற்றுக் கூறுகிறான்; “பாக! தேர் ஏறியது தான் எனக்குத் தெரியும்; தேர் ஓடியதாகவே எனக்குத் தோன்றாவில்லை; இதோ, தலைவியின் வீட்டின்முன் நிறுத்தி விட்டு “இறங்குக” என்ற நின் சொல் கேட்டு வியப்புற்றேன்; வாயுவேகம், மனோவேகம் என்பார்களே, அப்படியல்லவோ வந்திருக்கிறது தேர்! ஒருவேளை காற்றையே குதிரையாக மாற்றிப் பூட்டிக்கொண்டனையோ? அல்லது உன் மனத்தையே குதிரையாக மாற்றிப் பூட்டி ஓட்டிணையோ? எவ்வாறு இவ்வளவு விரைவில் வந்தது தேர்?” என்று பாராட்டிக்கொண்டே, தோளோடு தழுவி அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விருந்தளித்து மகிழ்ந்தான்.
“ஏறியது அறிந்தன் றல்லது, வந்தவாறு
நனியறிந் தன்றே இலனே;……
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
“இழிமின்” என்றநின் மொழிமருண் டிசினே;
வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ?
மானுரு வாகநின் மனபூட் டினையோ?
உரைமதி; வாழியே! வலவ.”

மழை பெய்துவிட்ட நிலத்தில் தேர்உருளை ஒடிய வழியே, நீர் விரைந்து ஒடுவது ஊர்ந்து செல்லும் பாம்பு விரைந்து பாய்வதுபோலும் என உவமை காட்டுவதும்,
“தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேர்.” 

இலக்கியங்கள் எழுந்த காலத்தின் நிலையைக் காட்டும் காலக் கண்ணாடி. பாரதியும், அவ்வையும், மாசாத்தியாரும் இம்மண்ணிலே தான் பிறந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலம் வேறு வேறு. பிற்கால அவ்வை போர்த் தொழில் புரியேல் என்றாள். அவள் தன்முன்னே கணவனை இழந்த மனைவியும், பிள்ளையை இழந்த தாயும், உடன் பிறந்தவர்களை இழந்த சகோதரியும் வந்து நிற்கிறாள். அவர்கள் ஒரு குடி மக்கள். எனவே போர் வேண்டாம் என்கிறாள். பாரதி வாழ்ந்த காலத்தில் அடிமைப்பட்டு, உணர்வற்றுக் கிடந்த மக்களைப் பார்க்கிறார். எனவே ரௌத்திரம் கொள், போர்த்தொழில் பழகு என்கிறார். மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப செய்கிறார். எனவே இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தையும், சூழலையும், மக்களையும், அவர்தம் வாழ்வியலையும் எடுத்துரைக்கும் கருத்துப் பெட்டகங்கள். அவற்றை போற்றுவோம் பாதுகாப்போம், தமிழை வளர்ப்போம்.

துணை நூல்கள்:
சங்க இலக்கியங்கள், 2007, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை.
ரேணுகா தேவி. வீ, 2012, சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

தொடர்பு:
முனைவர். வீ. ரேணுகா தேவி
தகைசால் பேராசிரியர், மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Sunday, May 27, 2018

கல்வெட்டுகளில் குற்றமும் தண்டனையும்


— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
          தமிழகத் தொல்லியல் துறையின் வெளியீடான ”சோழர் சமுதாயம்’ என்னும் நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். நூலில் திரு. இல. தியாகராசன் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று. ”சோழர் காலக் குற்றங்களும் விசாரணைகளும்”  என்னும் தலைப்புக்கொண்டது. மன்னர்களின் காலத்தில் எவ்வகைக் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதையும், குற்றவாளிகள் எவ்வகையில் தண்டிக்கப்பெற்றார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள அக்கட்டுரை ஓரளவு துணை செய்தது. மேலும் சில செய்திகளைத் தேடும் முயற்சியை உள்ளம் நாடியது. அவ்வாறு கிடைத்த செய்திகளையும் சேர்த்த பதிவை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

          தொடக்கமாக, மேற்குறித்த நூலில் காணப்பட்ட சில செய்திகள். அரசுக்கு வரி செலுத்தாமல் ஏய்த்தல் இன்று பரவலாக நாம் காணும் குற்றம். அரசர் காலத்திலும் இக்குற்றம் இருந்துள்ளது. பொதுச் சொத்துகளை முறைகேடாகத் தனியார் பயன்கொள்ளுதல். அரசின் உள்ளாட்சி நிருவாகத்தில் முறையான கணக்குக் காட்டாதிருத்தல்.   கோயில்களில் ஏற்படுத்தப்பட்ட நிவந்தங்களைச் சரிவரச் செய்யாதிருத்தல். கோயில் செல்வங்களைத் திருடுதல்.  சோழ அரசர்களின் சிறந்த நிருவாகத்தையும் கடந்து இவை போன்ற முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

          கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில், மேற்சொன்ன குற்றங்களை மிகுதியும் செய்தவர்கள் பிராமணர்களும் தேவகன்மிகளும் எனக் காண்கிறோம். தேவகன்மிகள் என்போர் கோயில்களில் பணிபுரிவோர். பிராமணர்கள், தேவதான ஊர்களையும், பிரமதேயச் சதுர்வேதிமங்கலங்களையும் நிருவாகம் செய்தவர்கள். அரசன் ஓர் ஊரையே கோயிலுக்குக் கொடையாக அறிவித்தல் வழக்கம். அவ்வூரின் வருவாய் கோயிலுக்கே சேரும் என்பது அக்கொடையின் நோக்கம். அவ்வகை ஊர்களின் நிருவாகப் பொறுப்பும், ஊரின் வருவாய் முறையாகக் கோயிலுக்குச் சென்றடைவதைக் கண்காணிக்கும் பொறுப்பும் ஊர்ச்சபையைச் சார்ந்தது. அவ்வகை ஊர்ச் சபையில் பிராமணரே மிகுதியும் இருந்தனர் எனலாம். அடுத்து, வேதம் வல்ல பிராமணர்க்கு ஓர் ஊர் அல்லது ஊரின் ஒரு பகுதியை அரசன் உரிமையாக்குவான். அவ்வகை ஊர்கள் சதுர்வேதி மங்கலங்கள் எனப் பெயர் பெறும். இவ்வூர்களின் நிருவாகப்பொறுப்பு சபை, பெருங்குறி என்னும் அமைப்பைச் சாரும். இவ்வகைச் சபையில் இருப்போர் பிராமணரே. இவ்விருவகை ஊர்களும் தன்னாட்சி பெற்றவை. மிகுந்த அதிகாரம் உடையவை.

வரி ஏய்ப்பு:
          அரக்கோணம் வட்டம், திருமால்புரம் ஊர்க்கல்வெட்டு வரி ஏய்ப்பு ஒன்றைப்பற்றி விரிவாகக் கூறுகிறது. வரி ஏய்ப்பைப் பற்றிய இக்கல்வெட்டின் வரிகளே நூற்றுக்குமேல் உள்ளன என்பது வியப்பு; சிறப்பும்கூட. தற்காலத்தில், சில நிதி முறைகேட்டுக் குற்றங்களைப்பற்றிய ஆவணங்கள் நூறு, ஆயிரம் எனப் பக்கங்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். திருமால்புரத்துக் கோயிலுக்குக் கொடையாகச் சிற்றியாற்றூர் என்னும் ஊர் அளிக்கப்பட்டது. அவ்வூரின் இறையாக (அதாவது அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியாக) மதிப்பிட்ட விளைச்சல் வருவாய், 3561 காடி நெல்லும், 200 கழஞ்சுப் பொன்னும் ஆகும். ஆனால், பொறுப்பிலிருந்த பிரமதேயச் சபை, இதை அரசு வரிப்பொத்தகத்தில் பதிக்கவில்லை. அரசு இறைக்கணக்கில் எழுதவில்லை. கல்வெட்டுச் சொல் வழக்கில், இதை “வரியிலிடுதல்” என்று குறிப்பர். வரியிலிடாது ஏய்த்த இந்தக் குற்றம் கி.பி. 893 முதல் கி.பி. 974 வரை ஏறத்தாழ எண்பத்திரண்டு ஆண்டுகள் நடந்துள்ளது. குற்றம் கண்டுபிடிக்கப் பட்டுச் சினமடைந்த அரசன் ஊர் நிலங்களைக் கோயில் நிருவாகத்தாரின் பொறுப்பில் மாற்றிவிடுகிறான். பிரமதேயச் சபையினர் தண்டிக்கப்படுகிறார்கள்.

இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடியில் ஊழல்:
          மேற்குறித்த திருமால்புரத்து அக்னீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான   நிலங்களைக் கோயிலில் பூசை உரிமை பெற்ற உண்ணாழிகை உடையார்கள் (சிவப்பிராமணர்கள்) தங்கள் உடைமையாகப் பயன்படுத்தியதோடு, கோயிலின் வழிபாட்டு நிவந்தங்களைச் செய்யாது விடுகின்றனர். இறைவனுக்குப் படைக்கும் அமுதுபடியில், கறியமுது, நெய்யமுது, தயிரமுது ஆகியன இடம்பெறுதல் நடைமுறை. இங்கே ஊழல் செய்த சிவப்பிராமணர்கள், வெறும் அரிசியை அவித்துப் படைத்தனர்; கறியமுது, நெய்யமுது, தயிரமுது ஆகியன இல்லை. குற்றமிழைத்தவரிடமிருந்து எழுபத்து நான்கு கழஞ்சுப்பொன் தண்டம் பெறப்பட்டது.

மற்றுமொரு ஊழல்:
          திருச்சானூர் திருப்பாலதீசுவரர் கோயில் திருவிழா நடத்தக் கொடையாகக் கோயில் பண்டாரத்தில் (கருவூலத்தில்) முதலாகச் செலுத்தப்பட்ட இருபத்தாறு கழஞ்சுப் பொன்னைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அதன் பொலிசையில் (வட்டியில்) திருவிழாவினை நடத்த ஒப்புக்கொண்ட பிரமதேயச் சபையினர், அதைச் செயல்படுத்தாமல் ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு 217 ஆண்டுகள் கடந்தபின்னர், ஊழலைக் கல்வெட்டுச் சான்றுகளோடு கோயிலின் கண்காணிகளான மாகேசுவரர்கள் அரசனிடம் நிறுவியபின், அரசன் பிரமதேயச் சபையினரின் உரிமையைப் பறித்ததோடு முதலாக வைத்த இருபத்தாறு கழஞ்சுப் பொன்னைக் கோயில் கருவூலத்தில் திரும்பக் கட்டவைத்தான்.

தேடுதல் மூலம் கிடைத்த செய்திகள்:
          தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காடு ஊரில் உள்ள அக்னீசுவரர் கோயிலின் நிலத்தை, ஊரிலிருந்த சிலர் தம் உடைமையாக்கிக்கொண்டு பலனைப் பெற்றுவந்தனர். கோயில் மாகேசுவரர் அரசன் முதலாம் இராசேந்திரனிடம் வழக்குத் தொடுத்தனர். அரசனின் ஆணைப்படி வழக்கினை ஆராய்ந்த இராசேந்திரசோழ மூவேந்த வேளான் ஊழல் நடந்தது உண்மை என அறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்கிறான். தண்டமாக நானூறு காசுகள் செலுத்தவேண்டும். செலுத்த இயலாமல் குற்றவாளிகள் நிலத்தை இறையிலி செய்து கோயிலுக்கே கொடுத்துவிடுவதாக வேண்டியதால், அந்நிலம் அவ்வாறே இறையிலி செய்யப்பட்டது. (இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண்: 139/1935-36.).

          திருத்துறைப்பூண்டி திருத்துறை நாயனார் கோயிலைச் சேர்ந்த கணக்கர், தானத்தார், முதலிகள் சிலர் கோயிலின் சொத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தமையும், அவர்கள் சிவத்துரோகிகள் என்று அடையாளப்படுத்தப்பெற்று, சிவத்துரோகிகள் பெறும் தண்டனைக்குள்ளானமையும் இக்கோயில் கல்வெட்டு ஒன்றின்மூலம் தெரியவருகின்றன. (கல்வெட்டு எண்: 139/1976-திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டுகள்-துறை வெளியீடு-1978.)

          தஞ்சை மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுதமங்கலம் சோமநாத சுவாமி கோயில் கல்வெட்டு கூறும் செய்தி சற்றே மாறுபட்டது. சோமநாத சருப்பேதி மங்கலம், சீதக்க மங்கலம்  என இரு மங்கலங்கள். முடிகொண்ட சோழப்பேராற்றிலிருந்து அணைவழி நீர்ப்பாசனத்திற்காக நீர் பாய்ச்சுவது பற்றி இரு ஊராரிடையே ஒரு பிணக்கு ஏற்பட்டது. (தகராறு என்னும் சொல்லுக்கு அன்று வழங்கிய அழகிய தமிழ்ச்சொல் பிணக்கு. கல்வெட்டில் “அணைப்பிணக்கு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.) இந்தப்பிணக்கின் காரணமாக ஒருவன் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், தவறுதலாக வேறொருவன் தண்டிக்கப்பட்டுவிடுகின்றான். இது தெரியவந்த பின்னர், தவறுதலாகத் தண்டிக்கப்பட்டவனின் மகனுக்கு இழப்பீடு தரப்படுகிறது. இது போன்ற குறிப்புகளில், ஒருவனுக்குப் பதில் இன்னொருவன் என்று நாம் வழக்கமாக எழுதுவோம். பதில் என்பது வடமொழிச் சொல் என்று எனக்குத் தோன்றியதால், அதைத் தவிர்த்து எழுத ”தவறுதலாக வேறொருவன்”  என்று மேலே நான் எழுதியுள்ளேன். ஆனால், கல்வெட்டு எழுதப்பெற்ற கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், கல்வெட்டில் “பதில்” என்பதற்குத்  ”தலைமாறு”  என்று நல்ல தமிழ்ச் சொல்லைக் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவறான தண்டனை தரப்பட்டது தெரிந்தவுடன், தண்டனை பெற்றவனின் மகனுக்கு இழப்பீடாக நிலம் அளிக்கப்பட்டது. இது போன்ற நிலக்கொடை, “உதிரப்பட்டி”  என்று அழைக்கப்பட்டது. (தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை-நன்னிலம் கல்வெட்டுகள்-1980. க.வெ.எண்: 267/1978)

சோழர் காலத்தில் குற்றமும் தண்டனையும்:
          கே.கே.பிள்ளை அவர்கள் தாம் எழுதிய “தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும்” என்னும் நூலில், சோழர் காலத்துச் சூழல் எவ்வாறிருந்தது எனக்குறித்துச் செல்கிறார். குற்றங்கள், இருவகையாகப் பார்க்கப்பட்டன. ஒன்று உடலைப் பற்றிய குற்றங்கள்; மற்றது உடைமையைப் பற்றிய குற்றங்கள். குற்றங்களுக்குத் தண்டனையாகக் குற்றவாளிகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதைத்தான் கிராம நீதிமன்றங்கள் முறையாகக் கொண்டிருந்தன. திருடு, பொய்க் கையொப்பம், விபச்சாரம் ஆகியன கொடுங்குற்றங்களாகக் கருதப்பட்டன. சில குற்றங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள், கோயில்களுக்கோ அன்றி மடங்களுக்கோ இவ்வளவு தானம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

          சில தீர்ப்புகள் வியப்பளிக்கக் கூடியவை. பிராமணனைக் கொன்ற ஒருவனைச் சிலர் எருமைக்கடாவின் காலில் பிணித்து விட்டனர். கடாவினால் அவன் அங்குமிங்கும் இழுப்புண்டு மாண்டுபோனான். அவ்வாறு கொன்றவர்களுக்குக் கழுவாயாக மடத்தில் சிறப்பு வழிபாடு ஒன்று நிறுவ வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

          பரிவேட்டைக்குச் சென்ற செல்வப்பேரரையன் என்பானைத் தேவன் என்பவன் கைப்பிழையால் அம்பெய்து கொன்றுவிட்டான். இவன் அறியாமல் செய்த குற்றத்துக்குக் கழுவாயாகக் கோயிலுக்கு அரை நந்தா விளக்கு வைத்து வர வேண்டுமென்று தீர்ப்பாயிற்று. (கட்டுரை ஆசிரியர் கருத்து: அரை நந்தா விளக்கு எப்படி என்னும் ஐயம் எழலாம். முழு நேரம் எரிகின்ற விளக்கு அரை நேரம் எரிந்தால் அரை விளக்கு எனக் கொள்ளவேண்டும். முழு நேர விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகளைக் கொடுக்கவேண்டும் என்பது அன்றைய வழக்கம். எனவே, அரை விளக்கெரிக்க நாற்பத்தைந்து ஆடுகள் தரப்படவேண்டும்).

இந்தியத்தொல்லியல் ஆண்டறிக்கை:
          இந்தியத்தொல்லியல் ஆண்டறிக்கைகளில், 1887 முதல் 1905 வரையிலான ஒரு தொகுதியைப் படித்துக்கொண்டிருந்தபோது இரு செய்திகள் தெரியவந்தன. சீயமங்கலம் என்னும் ஊரிலுள்ள தூணாண்டார் கோயில் கல்வெட்டு ஒன்று (க.வெ. எண்: 64/1900) கூறும் செய்தி: ஒருவன், தவறுதலாகத் தன் ஊரினன் ஒருவனைக் கொன்றுவிடுகிறான். ஆண்டறிக்கை, இந்நிகழ்ச்சியை “shot a man by mistake“ என்று குறிப்பிடுவதால், கொலை, அம்பெய்தியதன் காரணமாகவே நிகழ்ந்திருக்கக்கூடும் எனலாம். அரசு சார்பாக நிருவாக அலுவலர் ஒருவரும், நாட்டார் சபையினரும் ஒன்றுகூடிக் கொலைக்குற்றத்தை ஆராய்கிறார்கள். குற்றம், பிழையினால் நேர்ந்ததால் குற்றவாளி இறக்கவேண்டியதில்லை என்றும், சீயமங்கலம் தூணாண்டார் கோயிலில் விளக்கொன்றை எரிக்கவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அதன்படி, குற்றவாளி, பதினாறு பசுக்களைக் கொடையாகக் கோயிலுக்கு அளிக்கிறான்.  

          திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று (க.வெ. எண்: 77/1900) கூறும் செய்தி: குற்றம் சாட்டப்பட்டவன், வேட்டைக்குச் சென்றபோது, அவனது குறி தவறி, ஆள் ஒருவனைத் தாக்கி அவன் இறந்துபோகிறான். நாட்டார் சபை கூடிக் குற்றவாளி கோயிலுக்குப் பதினாறு பசுக்களை அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறது.  (இந்நிகழ்ச்சி, மேலே கே.கே. பிள்ளை அவர்களின் நூலில் காணப்படுகின்ற செய்தி என்றே கொள்ளலாம். பதினாறு பசுக்கள், அரை விளக்குக்காகவும், முப்பத்திரண்டு பசுக்கள் ஒரு விளக்குக்காகவும் கொடையாக அளிக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுகளில் வருகின்றன. ஆடுகளாகக் கொடுக்கும்போது, ஒரு விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகள் எனவும், தொண்ணூற்றாறு ஆடுகள் எனவும் இருவகையாகக் கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. மேற்குறித்த இரு கல்வெட்டுகளிலுமே, ஒரு இராசகேசரிவர்மன் குலோத்துங்கன் குறிப்பிடப்பெறுகிறான். எனவே, 12-ஆம் நூற்றாண்டுச் சூழலை இக்கல்வெட்டுகள் உணர்த்துவதோடு, குற்றமிழைத்தவன் இறக்கவேண்டியதில்லை என்னும் தீர்ப்பு மொழி, கொலைக் குற்றத்துக்குத் தண்டனையாக மரணமே வழக்கத்தில் இருந்ததைப் புலப்படுத்துகிறது என்று ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது.

          திருப்புலிவனம் வியாக்கிரபாத ஈசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றிலும், மேற்குறித்தவாறு, பிழையால் நேர்ந்த கொலைக்குத் தண்டனையாகக் குற்றவாளி பதினைந்து பசுக்களைக் கோயிலுக்கு அளிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடப்படுகிறது.   

கதம்பர் காலக் குற்றம் ஒன்று:
          கதம்பர் குல அரசன் இரண்டாம் ஜயகேசியின் காலத்தில் (12-ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) நீதி நிருவாகம் எவ்வாறிருந்தது என்னும் ஒரு குறிப்பில் ஒரு குற்றமும் அதன் தண்டனையும் கூறப்பட்டுள்ளது. பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தவல்ல குற்றங்களில் அரசனின் நேரடித் தலையீடும், தீர்ப்பும் இருந்தன. பிற குற்றங்களின் தன்மைக்கேற்ப, குற்றங்களை “த4ர்ம அத்4யக்ஷ” என்னும் தலைமை நீதியரசரும் அவரின்கீழ் இருந்த நீதியரசர்களும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்கினர். கள்வர், திருடர், பகைவர் யாராயினும் அவர்கள் உடலால் தாக்கப்படக்கூடாது எனச் சட்டம் இருந்தது. அவர்களுக்கு மூன்று க3த்3யாணம் பொன் தண்டமாக விதிக்கப்பட்டது. கொலைக்குற்றத்துக்குத் தண்டனையாக மரணம் இருந்ததில்லை. இழப்பீடாகப் பணம் தண்டமாகப் பெறப்பட்டது.  கொலையுண்டவரின் குடும்பத்துக்கு நூறு க3த்3யாணம் பொன் தரப்பட்டது. அதில் பகுதியான ஐம்பது பொன் அரசபண்டாரத்தில் செலுத்தப்பட்டது. 

          நரசிம்மர் கோயில் ஒன்றில், இறைவனுடைய அணிகலன்களைக் கோயிலின் செல்வாக்குள்ள வைணவப் பிராமணன் ஒருவன் களவாடிய குற்றம் அரசன் இரண்டாம் ஜயகேசியின் முன்னிலைக்கு வருகிறது.  களவாடப்பட்ட அணிகலன்களுக்கு ஈடான மதிப்புள்ள பிராமணனின் சொத்துகள் அவனிடமிருந்து மீட்கப்படுகின்றன.

          ”காலப்போக்கில் தமிழகக் கல்வெட்டுகள்”  என்னும் கட்டுரையில் (வரலாறு-ஆய்விதழ் 2016) தொல்லியல் துறை அறிஞர் சு.இராசகோபால் அவர்கள் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார்:

          இடைக்காலத்தில் பல்வேறு இடங்களில் கைப்பிழையால் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்தபோது தண்டனையாகக் கோயில்களில் விளக்கெரியச் செய்தமையைக் கரந்தை, தாமரைப்பாக்கம் கல்வெட்டுகளால் அறியலாம். குடுமியான்மலையில் காய்ச்சிய கொழுவினை உருவு பிரத்தியம் செய்து பிழை அல்லது பிழையின்மையை உறுதி செய்ததை ஒரு கல்வெட்டுப் பதிவு காட்டுகிறது. ஜம்பையில், அதிக/தவறான வரிவிதிப்புக் காரணமாகப் பெண்ணொருத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியும் பதிவாகியுள்ளது.

தண்டனை போன்றதொரு சடங்கு:
          கருநாடகத்தில் 17-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு சடங்கு தண்டனை போன்ற தன்மையைக் கொண்டுள்ளதைக் காண்கிறோம். மைசூர் மாவட்டம் யளந்தூரில் உள்ள 17-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி குறிப்பிடத்தக்கது. கருநாடகத்தில் குயவர்கள் கும்பார செட்டிகள் என அழைக்கப்பெறுகிறார்கள். மேற்படிக் கல்வெட்டில் அவர்கள் “கோவர்”  எனக்குறிக்கப்பெறுகின்றனர். தமிழகக் கல்வெட்டுகளில் இடம்பெறும் “வேட்கோவர்”  என்னும் சொல்லின் வடிவமே இது என்பதில் ஐயமில்லை. இந்தக் கோவர்கள் மறுக்கப்பட்ட சில உரிமைகளைப்  பெறுவதற்காகப் போராடுகையில், கொதிக்கின்ற நெய்யில் தம் கைகளை அமிழ்த்தி எடுக்கிறார்கள். இச்சடங்கில் அவர்கள் வெற்றி பெறுவதாகக் கல்வெட்டு கூறுகிறது.

          மண்டியா மாவட்டம், மத்தூர் வட்டத்து ஊர் ஒன்றில் ஒரு நிலக்கிழான் (வேளாளத்தலைவன்), கோயில் சொத்து மற்றும் பூசை உரிமைக்காகப் பிராமணர்க்கெதிரான ஒரு வழக்கில், கொதிக்கும் நெய்யில் மூன்று முறை கைகளை அமிழ்த்தி வென்றதை அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் காலம் கி.பி. 1654.

          காய்ச்சிய நெய்யில் கையை விட்டு மெய்யை வெளிப்படுத்தும் மரபு தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளமை, கொங்குமண்டலச் சதகத்தில் கூறப்பட்ட செய்தியொன்றால் அறியலாகும்.

          கொங்கு மண்டல சதகம் 52
ஆணூர் என்னும் ஊர் காரையூர் எனவும் வழங்கப்பட்டுவந்தது.
இதன் ஊர்த்தலைவர் “சர்க்கரை”.
இவர் மீது பாடப்பட்ட நூல்களுள் ஒன்று “நல்லதம்பி சர்க்கரை காதல்”.
இவர் காயும் நெய்யில் கையை விட்டுச் சத்தியம் செய்த செய்தி இந்த நூலிலும் கூறப்பட்டுள்ளது.
கீழக்கரைப் பூந்துறை நாட்டில் இருப்பது திருச்செங்கோடு.
இவ்வூரில் வீரபத்திரர் என்னும் புலவர் ஒருவர் இருந்தார்.
இவருக்குக் காமிண்டன் என்னும் பெயரும் உண்டு.
இவர் ஏகாலியர் (வண்ணார்) குலத்தவர்.
இவர் சர்க்கரையாரின் கொடை பற்றிக் கேள்விப்பட்டுக் காரையூர் வந்தார்.
சர்க்கரையார் வீரபத்திரரிடம் அன்புடன் உரையாடினார்.
வீரபத்திரருக்கு விருந்தளிக்க விரும்பினார்.
“இதோ வந்துவிடுகிறேன். உணவு உண்டு செல்லலாம்” என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டு சமையலறைக்குள் சென்றார். 
சமையலறையில் சற்றே காலம் தாழ்ந்தது.
அந்த வேளையில் வீட்டு வேலையாள் ஒருவர் வந்து “உணவு படைக்கச் சற்றே காலமாகும்” என்றார்.
இந்தச் சொற்களைக் கேட்ட புலவர் காமிண்டன், சர்க்கரையார் தம்மைப் புறக்கணிப்பதாக எண்ணினார்.
சர்க்கரையார் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
சர்க்கரையார் சமையல் முடிந்த பின்னர் புலவரை அழைக்க வந்தார்.
புலவரைக் காணவில்லை.
தேடிச் சென்று கண்டார்.
விருந்துண்ண வருமாறு அழைத்தார்.
“எதிர்த்தவருக்கு மிண்டன்; புலவருக்குத் தொண்டன் என்று உங்களைப் பற்றிச் சொல்லக் கேட்டு வந்தேன். தாங்கள் என்னைப் புறக்கணித்து விட்டீர்கள்” – என்றார் புலவர்.
இதைக் கேட்ட சர்க்கரையார் புலவரை வீட்டுக்கு அழைத்துவந்து காயும் நெய்யில் தன் கையை விட்டு, “தங்களைப் புறக்கணிக்கவில்லை” என்று சத்தியம் செய்தார்.
புலவர் அமைதி பெற்று அவர் அளித்த உணவை உண்டார்.
பின்னும் நிறைவடையவில்லை.
உண்ட எச்சில் வாயையும், கையையும் கழுவி விடவேண்டும் என்றார் புலவர்.
சர்க்கரையார் அவற்றையும் செய்தார்.
இத்தகைய சான்றோர் வாழ்ந்தது கொங்குமண்டலம்.

முனைவர் ந. ஆனந்தி உரை விளக்கம்:
முகம் சோர்ந்து அகன்றிரும் ஏகாலிப் பாவலன் முன்னம் நின்றே
இகழ்ந்தேன் இலை ஐய என்று சுடு நெயினில் கையை விட்டு
உகந்தே உணும் எச்சில் வாயைக் கழுவி உவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ் பெறு சர்க்கரையும் கொங்கு மண்டலமே. 52

கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு)


துணை நின்ற நூல்கள் (கட்டுரையில் குறிப்பிடாதவை):
எபிகிராஃபியா கர்னாடிகா – தொகுதி-4,7 – மைசூர்ப் பல்கலை வெளியீடு-1975




___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.


உயிர்த்தெழு தமிழா


——    திருத்தம் பொன். சரவணன்

உயிர்த்தெழு தமிழா உடைத்திடு தடைகளை
மயிர்த்திரள் நாமென்று நினைத்திடும் மடையர்களை
புடைத்திடு தமிழா புயலென வீசிடு
படைத்திடு புதியதோர் தமிழகப் பொன்னாடு !

பொங்கும் தமிழ்பேசும் பொலிகாளை இளைஞர்களே
சிங்கம் போலெழுந்து நீங்கள் சீறிவிட்டால்
தங்கும் இடமின்றித் தீயவர்கள் தெறித்தோட
அங்கே தோன்றிடுமே தமிழகப் பொன்னாடு !

காகம் விரித்திட்ட காவிரி ஆறெங்கே?
தாகம் எடுத்திட்டால் குடிக்க நீரெங்கே?
மேகம் பொய்த்தாலும் முயன்று தளராமல்
போகம் மூன்றெடுத்த உழவன் தானெங்கே?

நெல்விளைந்த மண்ணெல்லாம் கல்விளைந்த கட்டிடமாய்
புல்முளைத்த இடமெல்லாம் புதுப்புது நகர்களாய்
சொல்விளைந்த பள்ளிகளே சீர்கெடுக்கும் பாழிகளாய்
வல்வினையோ இதுவென்று வாளாது இருக்கலாமா?

கடமை கண்ணியம் சிறிதுமில்லை கட்டுப்பாடும்
காசெடுக்கச் சென்றால் இயந்திரத்தில் தட்டுப்பாடும்
கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும்
விண்ணென்று வெகுளாமல் வீற்று இருக்கலாமா?

கோடிகள் கொண்டோடிக் கொடியோர்கள் வாழ்ந்திருக்க
வாடிய வயிறுடனே உழவர்கள் சாகலாமோ?
கூடிய கொள்ளையர்கள் கொட்டம் அடங்கிடவே
மூடிய கைகொண்டு முகங்களைப் பெயர்த்தெறி !



________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html

கம்போடியாவில் தமிழர்களும் பௌத்தப் பரவலும்


―  முனைவர். அரங்கமல்லிகா


          ''உலக அளவில் தமிழர்கள் கடல்  நீரோட்ட  ஆமைவழித் தடங்களை அடிப்படையாகக் கொண்டு வணிகம் செய்துள்ளனர். தமிழகத்தை அரசர்கள் ஆட்சி செய்த காலத்திற்கு முன்னரே கடல் வணிகம் சிறந்து நடைபெற்றுவந்தது. குறிப்பாக, கம்போடியாவில் பல்லவர்கள் சேர சோழ பாண்டியர்கள் பயணம் செய்ததற்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கடல்வழி பயணம் செய்துள்ளனர்'' என ஒரிசா பாலு கூறுவது கவனத்திற்குரியது.

          தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக கடற்கரை பகுதி கண்டங்களில் தமிழர்களின் வணிகம் அவர்கள் மேற்கொண்ட அரசியல் உறவு கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வரை பரவி இருந்தது.

          கம்போடியாவில் 5ஆம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் நிலைத்திருக்கிறது. ஆதிகாலத்தில் இது மகாயான பௌத்தம் என அழைக்கப்பட்டது.13 ஆம் நூற்றாண்டிலிருந்து பழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் தேரவாத பௌத்தம் கம்போடியாவில் நிலைத்திருப்பதாகக் கூறுவர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கம்போடியா தமிழ் சைவ வைணவ சமயங்களை உள்வாங்கியிருக்கிறது. தமிழர்கள் குறிப்பாக, இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, முறையே சமண, பௌத்த மதங்களினுடைய எழுச்சி தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதற்கான இலக்கியச் சான்றுகளாக இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மாசாத்துவன் என்ற வணிகரும் மாநாயக்கன் என்ற வணிகரும் முறையே கடல் கடந்து வாணிகத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பௌத்தமும் அங்கே சென்றிருக்க வாய்ப்பிருக்கின்றது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

          இதற்கு கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் ஒரு சான்றாக அமைகிறது. அங்கோர்வாட் இரண்டாம் சூர்யவர்மன் (கி.பி1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் பல்வேறு சிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபங்களின் கூரைகள் பாம்புகளின் உடல்களையும் சிங்கம் அல்லது கருடனின் தலைகளைக் கொண்ட உருவங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிறிய கோவில்களும் அங்கே இருப்பதைக் காணமுடிகிறது. இரண்டாம் சூர்யவர்மன், வர்மன் என்ற பல்லவ மன்னனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் அங்கோர்வாட்டில் பெருமாள் கோயிலைக் காட்டியவர் ஆவார். இவர் கெமர் பேரரசின் சிறந்த அரசராக விளங்குவதற்கு இந்தக் கோவில் கட்டிடக் கலையே சான்றாக இருக்கின்றது. போரின் மூலம் இந்த இடத்தைக் கைப்பற்றிய சூர்யவர்மன், சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க முயன்றிருக்கிறார். சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்றுச் சுவரே சுமார் 3.6கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் இதன் பிரமாண்டத்தைக் கற்பனை செய்துகொள்ளலாம். அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்தக் கோயில் அமைந்திருப்பதனால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்த்துக்கீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது. இந்தக் கோயில் போன்ற ஒன்றை இப்போது கட்ட வேண்டும் என்றால் 300 ஆண்டுகள் ஆகும் எனப் பொறியாளர்கள் கூறுகிறார்கள். கோயில் கட்டி முடித்த சில காலங்களில் மன்னர் இறந்துவிடவே அதன் பிறகு ஆறாம் ஜெயவர்மன் காலத்தில் இந்தக் கோவில் 'புத்த' கோயிலாக மாறி இருக்கிறது. 

          பழங்காலத்தில் வைணவக் கோயிலாக இருந்த இந்த வழிபாட்டுத்தலம் புத்த வழிபாட்டுத் தலமாக எவ்வாறு மாறியது என்பது இந்தக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.          

          பழங்காலத்தில் கம்போடியாவில் ஃபூனான் முதல் அங்கோர் வரை பௌத்தத்தின் வரலாற்றை விளக்கமாகப் பேச முடியாது என்றாலும் பௌத்தம் இங்கு வந்த பிறகு புத்தரின் வரமுத்திரை மற்றும் பரிநிர்வாண நிலை கொண்டு கம்போடியாவில் பௌத்தம் இருந்ததை உணர்ந்து கொள்ளமுடிகிறது. இங்கே தேரவாத பௌத்தம் பழக்கத்தில் இருந்தது என்பர். இதற்கு தாய்லாந்தில் இருந்த தேரவாதம், ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்து சமூகத்திலிருந்து மன்னர்கள் வெவ்வேறு நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்கள் பௌத்தத்தை ஆதரித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனால்தான் எங்கெல்லாம் பௌத்தமும் சமணமும் பேசப்பட்டனவோ அங்கெல்லாம் சைவமும் வைணவமும் பேசப்பட்டிருக்கின்றன. பௌத்த அறிஞர்கள் வைணவத்தை மகாயான பௌத்தம் என்று அழைப்பர். கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி 12ஆம் நூற்றாண்டு வரையில் பௌத்தம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்த அடிப்படையில் அது தேரவாத பௌத்தமாக வெளிநாடுகளிலும் பரவி இருந்திருக்கிறது. தேரவாதம் என்பது

1.  திரிலக்கனம்
2.  அனிச்சா
3.  துக்கா
4.  அநாத்மா
5.  எண் வழி மார்க்கம்
6.  12 நிதானங்கள்
பற்றிய தொகுப்பு ஆகும். இதனை கம்போடிய அரசு நடைமுறையில் காணமுடிகிறது என ஆய்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இலக்கியத் தரவுகளின் படி, 'திரிபிடகம்' அறியப்பட்டிருக்கிறது. அங்கோர்வாட் கோயில் தமிழர்களின் கோயில் கலை வரலாற்று அடையாளமாக இருந்தாலும் அது கட்டிடக் கலை, மன்னர்களின் படையெடுப்பு, மன்னர்களின் சிறந்த நிர்வாகம் முதலியவற்றைப் பேசக்கூடிய கெமர் பேரரசின் வரலாற்று ஆவணமாக இருந்தாலும் அதற்குப் பிறகு 7ஆம் ஜெயவர்மனின் ஆட்சியில் இது புத்த வழிபாட்டுத் தலமாக மாறியிருக்கிறது என்று கருத்துச் சொல்லப்படுகிறது. 



ஆனால், கிபி. முதல் நூற்றாண்டிலிருந்து கிபி.6ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியா முழுவதும் பௌத்தம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதற்குத் தமிழர்களின் வணிகப் பயணமே காரணமாக இருக்கிறது. இக்காலகட்டத்தில்தான், ஃபூனான் வம்சத்தினரை கம்போடிய அரசர் என அழைக்கின்றனர். கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கம்போடிய அரசர்கள் ஃபூனான் வம்சத்தினர் என அழைக்கப்பட்டாலும் கம்போடியாவில் வடக்கும் தெற்கும் முரண்பட்டே இருந்திருக்கின்றன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் ஒரு பிடிக்குள் இருந்திருக்கிறது. 8ஆம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்து தனிநாடாக்கி ஆளத் தொடங்கியவன்தான் 2ஆம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவரிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் எளிமையான வாழ்வுக்குரியவர்களாக இருந்திருக்கிறார்கள். பௌத்தத் துறவிகளாக வாழ ஆசைப்பட்டுள்ளனர். பௌத்தத் துறவிகளாக வாழும் விருப்பமுள்ள இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பௌத்த வழிபாடு பெரிதாக இல்லை என்று கூறுகின்றனர். எனினும், தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து சென்ற மன்னன் மற்றும் பல்லவ மன்னர்கள் இங்கே ஆட்சி செய்ததனால், தமிழர்களுடைய அரசாட்சியும் அங்கு வாழக்கூடிய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது, தமிழகத்தில் மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருப்பதனால், தமிழகத்தினுடைய பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்முறையும் அங்கே அறிமுகப்படுத்தி தமிழ் நாகரீகத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்தச் சூழலில், கம்போடியாவில் பௌத்த மதத்தைப் பொறுத்தவரையில் தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள இந்தத் தேரவாத பௌத்தம் கம்போடியாவில் தா ப்ரோம் கோயிலில் நுழைந்தவுடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள புத்த சிற்பம் அமைந்திருப்பதைக் கொண்டு இந்தியாவினுடைய ஆளுகையில் உள்ள பௌத்தம் கம்போடியாவிலும் நிலைபெற்றிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன், 'கம்போடியாவில் ஆட்சி செய்துவந்த 30 மன்னர்களின் பெயர்கள் தமிழ் இன வழித்தோன்றலான நந்திவர்மன் என்ற பெயர் இருந்துவருகிறது இதில் கம்போடிய நாட்டின் வரலாற்றில் தமிழக மன்னர்கள் வருகை புரிந்ததற்கான குறிப்புகள் புத்தக வடிவில் உள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌண்டையன் என்ற மன்னன் வருகை புரிந்ததற்கான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன' என்று ஒரிசா பாலு குறிப்பிடுவதைக் கொண்டு காஞ்சிபுரம் பௌத்தத்தின் அடையாளம் சார்ந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதே போல, 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ மன்னர்கள் கம்போடியாவில் ஆட்சி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார். அதில் ஒன்றாக, தமிழகத்தின் காஞ்சிபுரம் கல்வெட்டில் கம்போடியாவில் இருந்துவந்த பல்லவ வழித் தோன்றல்களான நந்திவர்மனின் மகனுக்கு 13 வயதில் முடிசூட்டு விழா நடத்தப்பட்டதற்கான குறிப்புகள் காஞ்சிபுரம் கல்வெட்டில் உள்ளது என்றும் கூறுகிறார்.



          ''தா ப்ரோம் கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவு கொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்ததுமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்பன பற்றியெல்லாம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரைக் கிடைக்கவில்லை'' என்று கோ.ஜெயக்குமார் கூறுகிறார்.  

          ''மகேந்திர வர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டில் திருமால் அவதாரங்களில் ஒன்றாக புத்தர்பிரான் போற்றப்பட்டுள்ளார். ராஜசிம்ம பல்லவன், சீன வணிகர் வழிபட்ட நாகைபட்டினத்தில் புத்தவிகாரம் நிறுவினார். சிவபெருமானை இறைஞ்சி மங்கலம்பாடி இயற்றிய மிருகச்சகடிகம் என்ற நாடக நூலை எழுதிய சூத்திரிகன், நூலின் இறுதியில் பௌத்த சமயத்தின் புகழைப் பாடியுள்ளார். தேவாரத் திருமுறைகளைத் தொகுத்துத் திருநெறித் தமிழைப் பரவச் செய்த ராஜராஜ சோழன், நாகையில் புத்தவிகாரம் கட்டி ராஜராஜ பெரும்பள்ளி என்று பெயரிட்டான். காஞ்சி நகர அரசன் சீனத்திலும் ஜப்பானிலும் கிபி 6ஆம் நூற்றாண்டில் பௌத்தத்தைப் பரப்பி அழியாப் புகழ் பெற்றான். காஞ்சியைச் சேர்ந்த திக்நாகர் மிகப்பெரிய பௌத்த ஆசிரியர். இவர் மாணவரே காஞ்சித் தமிழரும் நாளந்தா பல்கலைக்கழகத் தலைமை பேராசிரியருமான தருமபலார்(கிபி.528-560). சீத்தலைச் சாத்தனார், புத்தத்ததர், புத்த நந்தி, சாரிபுத்தர் போன்ற தமிழ் பௌத்தர்கள் பாலி மொழியை நன்கு பயின்று பௌத்த சமய நூல்களில் பெரும் புலமை பெற்றிருந்தனர். கலையிலும் சிறந்து விளங்கினர்'' என்பதிலிருந்து பௌத்த நெறி எல்லா நாடுகளுக்கும் பரவி இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

          அயோத்தி தாசர், பேராசிரியர் க.அப்பாதுரையார், ஆகியோர் தமிழ் பௌத்தத்தை முன்னெடுத்து இலங்கையிலிருந்து பௌத்தத்தைக் கற்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அயோத்திதாசர் இந்துமதத்தை அந்த மதத்திலிருந்து அடிப்படைக் கருத்துகளை விமர்சித்து பௌத்தத்தோடு தொடர்புப்படுத்தி தமிழ் பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அதற்குத் தமிழ் இலக்கியத்திலுள்ள மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் புராண இதிகாச காப்பியங்களிலுள்ள தத்துவங்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கான விளக்கங்களைப் பௌத்தம் சார்ந்து ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டுபிடித்து தமிழ் பௌத்தத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பௌத்தம் நாடு கடந்து பயணப்பட்டிருந்தாலும் தமிழர்களின் வாழ்வியலோடு அது தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. அன்பையும் அறத்தையும் போதிக்கக்கூடிய பௌத்தம் புத்தருடைய அடிப்படை ஒழுக்கம் சார்ந்த சிந்தனைகளின் கருத்தியலாகவே பார்க்கப்படுகிறது. தனிமனித விடுதலையும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்தோடு இருப்பதையும் முன்னிலைப்படுத்தும் பௌத்தம் தென்கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பௌத்தம் இந்தியாவின் தாயகம் என்றாலும் அது இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலேயே அதிகமாக வழிபாடு கூடிய பயிற்சியுடன் பழக்கத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

          எனவே, வணிகத்தாலும் தமிழர் மரபுகள் கம்போடியாவில் நிலைப்பட்டிருப்பதைத் தமிழுக்கும் பௌத்தத்திற்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள தேரவாத பௌத்தமும் பயன்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புத்தரின் சிந்தனைகள் பேசப்பட்டாலும் அறஹந்த் நிலையடைந்த புத்தர் பௌத்தச் சிந்தனைகளை எழுதி வைத்துப் பேசவில்லை. அவருடைய சீடர்கள் தொகுத்த தொகுப்பே திரிபிடகமாக அறியப்பட்டிருக்கிறது. பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுகவேண்டிய விநயம், தம்மம் குறித்துப் பேசுகிறது இந்நூல். புத்தருடைய பழைய கொள்களைகளைப் பின்பற்றி வரும் பௌத்த மதத்திற்கு தேரவாத பௌத்த மதம் என்றும் புத்தர் காலத்திற்குப் பின்னால் புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்த மதத்திற்கு மகாயான பௌத்தம் என்றும் பெயரிட்டு இரு பெரும் பிரிவாக பௌத்தத்தைப் புழக்கத்தில் கொண்டுவந்துள்ளனர்.

          கப்பலில் பயணம் செய்வோருக்குத் துன்பத்திலிருந்து நல்லோரைக் காப்பாற்றுவதற்காக மணிமேகலா தெய்வம், காதல் தெய்வமாக இருந்ததைத் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலைச் சுட்டிக்காட்டுவதைப் போல கம்போடியாவிலும் மணிமேகலை கடல் தெய்வமாக நம்பப்படுகிறாள். தேரவாத பௌத்தம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. ஆனால், புத்தரின் நினைவாகப் பல ஸ்தூபிகளையும் விகாரங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனித இனத்தை மேம்படுத்த நல்லொழுக்க விதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பஞ்சசீலங்களும் எண்வகை மார்க்கங்களும் பன்னிரண்டு நிதானங்களும் நான்கு உண்மைகளும் பௌத்தத்தின் நடைமுறையை உறுதிப்படுத்துகின்றன. 

          சீலம் அதாவது ஒழுக்கம், சமாதி அதாவது மன ஒருமை, பஞ்சா அதாவது விழிப்புணர்வு ஞானம் ஆகிய மூன்றும் மனம் சார்ந்த ஒழுக்கத்தையும் நற்காட்சி, நற்சிந்தனை, நற்சொல், நற்செயல், நல்முயற்சி, நல்மன ஒருமை, நல்ல பேரின்பம் ஆகிய எட்டையும் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கத்தையும் இது விரிவாகப் பேசுகிறது. வாழ்வில் துன்பம் இருக்கிறது. துன்பம் நீக்க முடியும். துன்பம் தோன்றக்கூடியது என்றாலும் அதை நீக்குவதற்கு உரிய வழியும் உண்டு என நான்கு உண்மைகளை மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன், பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு. வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் எனப் பன்னிரண்டை நேரிடையாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடிக்கவேண்டிய அவசியத்தை மணிமேகலையின் மூலம் அறியமுடிகின்றது. எனவே, கம்போடியாவைப் பொறுத்தவரையில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்தல் மந்திரத் தந்திரங்களைப் பயன்படுத்துதல் ஆகியன மகாயானப் பிரிவின் ஓர் அம்சமாகக் கருதுவதால், இந்து சமய யோக நெறிகளைப் போலப் பின்பற்றி புத்தரின் கோட்பாடுகள் பேசப்படுகின்றன. இது வைணவத் தலமான அங்கோர்வாட் பௌத்த தலமாக மாறியதாகக் கூறப்படும் கருத்திலிருந்து மாறுபட்டு இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டுகளில் சமணமும் பௌத்தமும் தென்கிழக்காசிய நாடுகளில் பரவியதனால் அது பௌத்தத் தலமாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

          தமிழர்கள் குறிப்பாக பழங்குடியினர் மற்றும் வணிகர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் பிழைப்பிற்காகக் கடல் கடந்து பயணப்பட்டாலும் அவர்கள் காஞ்சியை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்றுப் படி பௌத்தத்தைக் குறிப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. தமிழரின் பண்பாட்டு அடையாளம், மீட்டுருவாக்கம் செய்வதற்கு அங்கோர்வாட் கோயில் ஒரு பெரிய சான்றாக அமைகிறது.  

பயன்பட்ட நூல்கள்:
1.தமிழ்மணம்
2.தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்-முனைவர். பிக்கு போதிபாலா முனைவர் க.ஜெயபாலன், உபசாகர் இ.அன்பன்
3.கம்போடியாவில் நிலைத்து நிற்கும் தமிழர் மரபு-ஒரிசா பாலு



படம் உதவி: 
விக்கிபீடியா (அங்கோர்வாட்)  
தேமொழி (பல்லவ மன்னர்கள்)


________________________________________________________________________
தொடர்பு: முனைவர். அரங்கமல்லிகா (arangamallika@gmail.com)


சூரிய மழை பொழிந்த கவிஞன்


―  தமிழ்மைந்தன் சரவணன்


          என் பள்ளி, கல்லூரி நாட்களில் கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளின் பால் எனக்கு ஏற்பட்ட தீவிரமான ஈர்ப்புக்குப் பின் மற்ற பிற கவிஞர்கள் எழுதிய புதுக்கவிதை நூல்களையும் வாசிக்கும் ஆர்வம் எனக்குள் பன்மடங்கு வளர்ந்திருந்த சமயம் தான் அந்தக் கவிதைநூலை நூல்நிலையத்தில் கண்டேன். அதன் தலைப்பே "சூரிய மழை " என்று வித்தியாசமாக அமைந்திருந்தது. வாசகனின் மனதிற்குள் ஒரு பிரும்மாண்டமான படிமக் காட்சியை தோற்றிவைத்தது.

          “வாழ்க்கை ராவண வதத்திற்கு என் அம்பறாத்தூளியில் உள்ள சிறு அம்புகளே இந்த கவிதைகள் இதன் கூர்மையும் வலிமையும் துருப்பிடிப்பதைவிட உரசியும் எய்யப்பட்டும் வீர மரணம் எய்தவே விரும்புகின்றன.”

என்று இலட்சிய முழக்கமிட்ட அந்தக் கவிஞனை நினைத்துப் பார்க்கிறேன்.

          எங்கள் ஊரான மண்ணச்சநல்லூரின் நூல் நிலையத்தில் அந்தச் சூரிய மழையில் நான் நனைந்த நாட்கள் பசுமையானவை. என் மரணம்வரை நினைவு சுரங்கத்தில் நீடித்திருப்பவை.  அந்த நூலை வாசித்த சில நாட்களின் பிறகு, திருச்சி தெப்பக்குளம் கடை வீதியில் அமைந்துள்ள பழனியப்பா பிரதரஸ் புத்தக நிலையத்தை நான் கடந்து சென்ற போது " சூரிய மழை " கவிதை நூலைக் கண்டேன் . உடனே அதை வாங்கிய நான் இன்றளவும் அந்த நூலைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.










"சூரிய மழை " நூலுக்குப் பிறகு அந்தக் கவிஞர் அனிதா எழுதிய 
"தேரில் வருகிறாள் தேவதை"
"ஒரு ரோஜா பூவும் இரண்டு உதடுகளும்"
"கனவுகள் பூப்பறிக்கும்"
போன்ற கவிதை நூல்களையும் நான் வாசித்த அந்த நாட்கள் இனிமையானவை.  பிற்பாடு வேலை தேடி சென்னை வந்த பின்பு அடிக்கடி ஒரு எண்ணம் எழும் அந்தக் கவிஞன் இப்பொழுது எங்கே என்பதே அது.

"நல்லாம்பள்ளியின் எல்லைக் கல்லே
உலகத்தின் எல்லைக் கல் ஆகி விடுமா" ?
என்று தன் கவிதை நூலில்,  தன் காதல் நாயகியைப் பார்த்து கவிஞர் எழுப்பிய கேள்வியில் இருந்து அவர் பொள்ளாச்சியை அடுத்த சிறு கிராமமான நல்லாம்பள்ளியை சேர்ந்தவர் என்று உணரமுடிந்தது. தமது கவிதை நூலில்  அவரது தொடர்பு முகவரியாக  திருவொற்றியூரை கவிஞர் கூறியிருந்தார். 1982-இல் திருவொற்றியூரில்  தங்கியிருந்தார் என்று நினைக்கிறேன். இப்பொழுது அவர் இருக்கிறாரா ? இருக்கிறார் எனில் இலக்கிய உலகில் ஏன் பங்கேற்கவில்லை ? ஒரு பழைய திரை நட்சத்திரங்களின் இன்றைய வாழ்க்கை குறித்து நம் ஊடகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுகின்றன. ஒரு இலக்கிய வாதி என்றால்  ஊடகங்கள் மற்றும் மக்களின் இந்த பாரா முகம் ஏன் ? என்பனபோன்ற கேள்விகள் என்னை ஆட்கொள்ளும்.

இந்த கட்டுரையை வாசிக்கும் தமிழர்கள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள். உங்களுக்கு அவரை பற்றி ஏதேனும் தெரிந்தால் எனக்குத் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். இந்த பதிவோடு அவரின் கவிதை நூல் முகப்பு அட்டையையும் , கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையையும் இணைத்துள்ளேன்.



________________________________________________________________________
தொடர்பு: தமிழ்மைந்தன் சரவணன் (saravananmetha@gmail.com)



Wednesday, May 16, 2018

நெம்புகோலாகும் நிஜங்கள்


 — முனைவர் ச.கண்மணி கணேசன்


வெற்றிக்கரை தேடும் ஆசைப் படகுகளே !
வாழ்க்கைக் கடலில் விசையாய்ப் பாயும்போது
ஏமாற்றப் புயல் வீசும்; இடைஞ்சல் பாறை தட்டும்;
உடையும்; உருக்குலையும்; துன்பஅலையும் தூக்கிஎறியும்
  கரையில்லாக் கடலுண்டா? நதியுண்டா? நிலையுண்டா ?
  படகுகள் கரையேறாமை கடலின் குற்றமா? கரையின் குற்றமா ?
    முயன்றால் படகுகள் முழுதாய்க் கரையேற
    நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு.
குறிக்கோள் வானில் குஞ்சுகளோடும்  பிஞ்சுகளோடும்
கும்பலாய் அலையும் கூட்டுப் பறவைகளே!
திசைதெரிய வில்லையென்று மருண்டுநீர் சோர்ந்துவிட்டால்
அந்தரத்தில் ஆவிபோம் ஐயமில்லை சத்தியம்
  திசைகள் இருப்பதோ திட்டமாய் நிச்சயம்
  தெரியாத திண்டாட்டம் திசையின் குற்றமா? வானின் குற்றமா?
    தவிக்கும் பறவைகள் தாமாய்க் கூடடைய
    நெம்புகோலாகும் நிஜங்கள் பலஉண்டு 
நீதிவேண்டிப் போட்ட வழக்குகள் கோடி
பாதிவழியில் பயணம் தடைப்பட்டு ஓடி
மீதிவாழ்க்கை கேள்விக் குறியாய் நாடி
நாதியின்றி மிரண்டிருக்கும்; விதியை நொந்து நலிந்து நிற்கும்
  சட்டம் இருப்பது நம் கையில் ; திட்டம் இருப்பதும் நம் கையில்
  தீர்ப்பின்றித் தள்ளுபடியானால் சட்டத்தின் குற்றமா? வழக்கின் குற்றமா?
    இல்லாத தீர்ப்பை இனிமேல் எழுதிட
    நெம்புகோலாகும் நிஜங்கள் பலஉண்டு
பயிற்சி இல்லாத கைகள் பூப்பறிக்கும் போது; முட்கள் தைப்பது இயற்கை
பயிற்சி இல்லாத கைகள் படகு வலிக்கும் போது; சுழலில் சிக்குவதும் இயற்கை
பயிற்சி இல்லாத சிறகுகள் பறக்கத் தொடங்கும் போது; தரையில் வீழ்வதும் இயற்கை
கடமைச் சுமையைத் தோளில் தூக்க ;நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு




ஒளித்துளிகளே;மின்மினிகளே
இருளைக் கிழித்து நின்று தனிமைப் படாதீர்கள்
ஓங்கார நாதம் போல் ஒன்றுபடுங்கள்
ஒன்றன்மேல் ஒன்றாய்ச் சுருண்டு விழும் அலை போல
ஒளிவெள்ளம் பாய்ச்ச உங்களால் முடியும்
அந்த வெளிச்சத்தில் இருளின் திண்மை கரைந்துபோம்
தோளுயர்த்தி நில்லுங்கள்
வெற்றியின் எதிர்பதம் வேகமாய்ப் புறமுதுகிடும்

இன்பமும் துன்பமும் இறைவகுத்த   நியதி
மலரும் முள்ளும் அழகினில் பாதி
உலவும் தென்றலைச் சித்திரை வேனிலில்
அனுபவிப்பது போல் சுகம் பெறுக

ஒளியும் இருளும் மாறி மாறி வரும் உலகம்
இயல்பென ஏற்று இருப்பது மனிதம்
ஒளியின் நிழலில் ஒதுங்கி நின்று
இருளில் விளக்கையேற்றி வாழ்க

நம்பிக்கை நம்பர் ஒன் நெம்புகோல்
நெம்புகோல் நம்பர் டூ  நெஞ்சுறுதி
முயற்சி மூன்றாவது நெம்புகோல்
 நாலாம்  நெம்புகோல் நான்  சொல்வேன்
தோல்வியில் துவளாச் சோர்வின்மை

வம்புகள் வாதங்கள் பேசுவதில் பலனில்லை
தெம்புடன் கையில் நெம்புகோல் எடுங்கள்
ஒளிமயமான எதிர் காலத்தைத்
தேடி ஓடும் வாழ்வு சுவைக்கும் .



________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)




                                                                                                                                

பாலகுமாரன்


― ருத்ரா இ.பரமசிவன்


பாலகுமாரன்
https://www.facebook.com/bala.kumaran.39794




மெர்க்குரிப் பூக்கள் எனும்
தொடர்கதை மூலம்
மற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத‌
ஒரு நெருடல் மூலையில்
தன் பிரகாசத்தை துவக்கினார்.
அவர் எழுத்துக்கள்
துண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல்
சொல் கோர்த்து வந்து
பக்கங்கள் நிறையும் போது
சிந்தனையின் கூர்மை அங்கே
பொய்மான் கரடு போல்
ஒரு பிரமிப்பான உவமையை
வேர் பிடித்து நிற்கும்.
அற்புத எழுத்தாளர் சுஜாதாவை
அடுத்து நிற்கும் நிழலா இவர்
என்று சில சமயங்களில் தோன்றலாம்.
இரும்புக்குதிரை தாயுமானவன்
போன்ற நாவல்கள்
இவர் தனித்தமைக்கு உயர்வான சான்றுகள்.
நவீனத்துவம் பின் நவீனத்துவமாக‌
முரண்டு பிடித்துக்கொண்டு
பிரசவம் ஆகும் போது
அந்த இலக்கியத்தின் வடிவத்தை
கன்னிக்குடம் உடைத்து
ரத்தம் சொட்ட சொட்ட‌
தமிழ்ச் சொற்களில் பிழிந்து தந்தவர்.
மிஸ்டிக் தனமாய் முகம் மறைக்கும்
அவர் குங்குமப்பொட்டில்
ஏதோ அபிராமி வழிபாடு தென்பட்டபோதும்
ஜெயகாந்த யதார்த்தத்தை
நிறைய தூவித்தருவார்.
படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கத்தோன்றாத‌
அருமையான நடை.
கரடு முரடாக நம்மை எங்கோ
தள்ளிக்கொண்டு போய்
ஒரு குகைக்குள் முட்ட வைப்பார்.
ஆம் ஆன்மீகத்தின் நெருக்கடிக்குள் தான்
நாத்திகம் நாற்று பாவுவதாக‌
காட்டுவார்.
வாழ்க்கையின் முற்றிப்போன‌
முரண்பாடுகள் தான்
தத்துவம் என்று உட்பொதிவாய்
நிறைய எழுதியுள்ளார்.
ஆம் ஒரு கோணத்தில் அந்த‌
வெண்தாடியில் சிவப்புப்பொட்டு
இனம் புரியாத ஒரு "மார்க்ஸ்"
போலத் தோன்றலாம்.
எழுத்தில்
அவருடைய அதிரடி நடைகள் தான்
சினிமாக்களுக்கு "வசனம்" எழுத
அழைத்துச்சென்றது.
கமல் ரஜனியோடு
இவர் வசனமும் அங்கே நடித்தது
என்றால் மிகையாகாது.
"நான் ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி"
என்ற "பஞ்ச்"
நாளைய நமது செங்கோல் ஆகலாம்.
ஆனாலும் அந்தச் செங்கோல்
இவரது பேனாவிலிருந்து தான்
கிளைக்கின்றது.
எழுத்தை ஒரு மவுன ஆயுதம்
ஆக்கியவர் பாலகுமாரன்.
நாத்திகத்தின் ஒரு காக்டெயில் வாடையுடன்
ஆத்திக தோற்றம்
பொய்மை எனும் விசுவரூபம்
எடுப்பதை நாம் இவர் கதைகளில்
பார்க்கலாம்.
சிந்தனைகளின்
சைக்கடெலிக் எனும்
காமாசோமா வண்ணக்கலவையில்
சைகோத் தனங்களின்
சவ்வூடு பரவல் தான்
மனித வாழ்க்கை என்றே
தன் கதைகளில் நிறுவி நிற்பார்.
உபனிஷதங்கள் எனும் வைக்கோற்படப்பில்
நாத்திக ஊசி கிடப்பதை
கையில் எடுத்து தன் கதையின்
கந்தல் யதார்த்தங்களை அழகாய்
தைத்துத் தந்து இலக்கியம் படைத்தவர்
இந்த எழுத்துச்சித்தர்.
இவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.





படம் உதவி: https://www.facebook.com/bala.kumaran.39794

________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




Sunday, May 13, 2018

திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டுகள்



— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழுவின் திருவையாறு மரபு நடைப்பயணத்தின்போது (06-05-2018) திருச்சென்னம்பூண்டித் திருக்கடைமுடி மஹாதேவர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். கல்வெட்டுகள் பலவற்றைக் கொண்டுள்ள  வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இக்கோயிலின் நிலைக்காலில் உள்ள கல்வெட்டின் ஒளிப்படம் கீழே தரப்பட்டுள்ளது.  கல்வெட்டின் பாடமும் விளக்கமும் இங்கே:

கல்வெட்டுப்பாடம்:


1    ஸ்வஸ்திஸ்ரீ
2    தெள்ளாற்றெ
3    றிந்த  நந்தி
4    ப்போத்தரைய
5    ர்க்கு யாண்டு
6    18 ஆவது தி
7    ருக்கடைமுடி
8    மஹாதேவர்க்
9    கு இரண்டு நொ
10   ந்தா விளக்கினு
11   க்கு குடுத்த பொ
12   ன் அறுபதின்
13   கழஞ்சு இப்பொ
14   ன் கொண்டு பலி
15   சை ஊட்டினா
16   ல் நாழ்வாய் நா
17   ழி நெய் முட்டாமே





விளக்கம்:
பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன், அவனை எதிர்த்த சோழரையும், பாண்டியரையும் வெள்ளாறு என்னுமிடத்தில் நடந்த போரில் தோற்கடித்ததனால் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அழைக்கப்பெறுகிறான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 825-850. இவனது 18-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுதான் நாம் இங்கு காணுவது. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 843.  கல்வெட்டுப்படம் முழுக்கல்வெட்டையும் காட்டவில்லை.  

“ஸ்வஸ்திஸ்ரீ”  என்னும் மங்கலச் சொல்லுடன் கல்வெட்டு தொடங்குகிறது. ஸ்வஸ்திகச் சின்னமும், ஸ்ரீவத்சமும் இணைந்ததுதான் “ஸ்வஸ்திஸ்ரீ”.  இச்சொல் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. சோழ அரசர்கள், பரகேசரி, இராசகேசரி என்னும் சிறப்புப் பெயர்களைத் தம் பெயருடன் இணைத்துக்கொண்டதுபோல், பல்லவர் தம் பெயருடன் போத்தரையர் (போத்தரைசர்) என்னும் சிறப்புப் பெயரை இணைத்துக்கொண்டனர்.  போத்து என்பது ஆண்கன்றினைக் குறிப்பது. பல்லவரின் இலச்சினை நந்தி (காளை) ஆகையால், அரசர்கள் போத்தரையர் என்று சிறப்புப் பெயரை இணைத்துக்கொண்டனர் எனக் கருதலாம். அரசரின் ஆட்சியாண்டு பதினெட்டு என்பது தமிழில் வழங்கும் எண்களின் குறியீட்டில் எழுதப்பட்டுள்ளது (ய=10 அ=8, யஅ=18). கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கடைமுடி மகாதேவர்  என்பது. கடை என்னும் காலின் அடியையும், முடி என்னும் தலை முடியையும் அயனும், மாலும் காணப் பெறாமல் நின்ற காட்சியை இலிங்கோத்பவர் சிற்பத்தில் காண்கிறோம். அதன் அடிப்படையில் திருக்கடைமுடி மகாதேவர் என்னும் பெயர் அமைந்திருக்கக் கூடும். ஆனால், இதே கோயிலின் வேறு கல்வெட்டுகள் இறைவனின் பெயரைத் திருச்சடைமுடி மகாதேவர் என்றும்  குறிப்பிடுகின்றன.

கல்வெட்டு, கோயிலுக்கு நொந்தாவிளக்குக்கு (நந்தாவிளக்கு என்னும் வழக்கும் உண்டு) அறுபது கழஞ்சு பொன் கொடை கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இந்தப் பொன் அறுபது கழஞ்சு ஸ்ரீபண்டாரத்தில் (கோயில் கருவூலத்தில்) முதலாக (மூலதனமாக) வைக்கப்படும். அதிலிருந்து கிடைக்கப்பெறும் பலிசையால் (வட்டி) நாள்தோறும் ஒரு நாழி நெய்யைக் கொண்டு விளக்கேற்றப்படும். பலிசை, சில கல்வெட்டுகளில் பொலிசை எனவும் குறிக்கப்பெறும். விளக்கெரிக்கும் செயலுக்குத் தடை ஏற்படக்கூடாது என்பதைக் குறிக்கக் கல்வெட்டில் “முட்டாமே”  (முட்டாமல்) என்று குறித்திருப்பதைக் காணலாம்.



___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.



என் அம்மா

என் அம்மா 

 — முனைவர் ச.கண்மணி கணேசன்


காலைக் கதிரவன் உதித்தவுடன்
                  தட்டியெழுப்புவாள் என் அம்மா 
கண்ணை விழித்துப் பார்த்தவுடன்
                  கனிவாய்ச் சிரிப்பாள் என் அம்மா 
பல்லைத்தேய்த்து நான் குளிக்கத்
                  துணையாய் இருப்பாள் என் அம்மா 
பள்ளிச் சீருடை அணிவித்துப்
                  பசியை நீக்குவாள் என் அம்மா 
அம்மா டாடா காட்டினால்  தான்
                  அழாமல் வருவேன் பள்ளிக்கு 
மாலை நேரம் வீடு வந்தால்
                  அம்மா முகம்தான் டானிக்கு 


பாடம் படிக்க அமர்ந்து விட்டால்
                  சிம்ம சொப்பனம் தான் எனக்கு 
கெஞ்சிக் கொஞ்சி மிஞ்சி அம்மா 
                  சொல்லித் தருவதென் நன்மைக்கு 
அழகான என் அம்மா கதை சொன்னால்
                  துக்கமும் துயரமும் ஓடிவிடும் 
அன்புள்ள என் அம்மா மடியமர்ந்தால் 
                  தூக்கம்தானே ஓடிவரும் 
உலகிலேயே உயர்ந்தவள் 
                  என் அம்மா அம்மா அம்மா தான்.  



படம் உதவி: ஓவியர் எஸ். இளையராஜா
http://www.elayarajaartsgallery.com/o-painting.php
Mobile No : +91 98411 70866 
Email : artistilayaraja@gmail.com


________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)