Thursday, May 15, 2014

சிற்பம்/ஓவியம் - ரசனை / மஹாபலிபுரம் - -வராக மண்டபம்--03


வராக மண்டபம் - கஜலட்சுமி

முதல் பகுதியில் நாம் பார்த்த கொற்றவை சிற்பத்திற்கு சமமாக, கர்பகிரஹத்தின் வலப்பக்கம் இருக்கும் கஜலட்சுமியின் சிற்பம் மிக அழகுணர்ச்சி உடையது. இதன் இடது பக்கம் இருக்கும் துர்கை சிற்பம் தரும் உணர்வுகளில் இருந்து மிகவும் வேறுபட்ட உணர்வை கஜலட்சுமியின் சிற்பம் தருகிறது. இந்த காட்சியானது கஜலட்சுமியின் நீராடல், இதைப் புனித நீராடல் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன். இத்தொகுதியில் யானை குடங்களில் தண்ணீர் மொண்டு தன் எஜமானியைக் குளிர்விப்பதும், தோழிகள் மலர்ந்த முகத்துடன் பூக்களும், வாசனை திரவியங்களும், மலர்களும் கொண்டு தலைவியை குளிர்விப்பது மிகவும் அழகியல் ததும்பும் காட்சியாகத் தோன்றுகிறது.

கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரை இருக்கை முழுவதுமாக மலர்ந்திருக்கிறது. இந்த நிலையானது,  தேவி தலைவனை எதிர்கொள்ளும் முன்னே ஆயத்தமாகி இருக்கும் பாவனையாக என்னிடம் காட்டுகின்றது. அதனால் தான் தாமரை முழுவதுமாக மலர்ந்திருக்கும் நிலை எனக்கு ஒரு குறியீடாகத் தோன்றுகிறது.



இந்தப் புரிதலில் ஒருவேளை உங்களுக்கும் எனக்கும் சில பிரச்சினைகள் வரலாம், எவ்வாறு நாங்கள் வணங்கும் தேவியை இப்படித் தவறாக நீ பார்க்கிறாய் என்று கூட யாரேனும் கேட்கலாம்?. இறைவழிபாடு மீது எனக்கும் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் சிற்பங்கள் வெறுமனே வணங்குவதற்கு என்று மட்டும் தோன்றவில்லை. அந்தச் சிற்பம் மீது ஆடைகள் சாத்தி வணங்குவதைக் கூட நான் வன்முறையாகத் தான் பார்க்கிறேன். இந்த இடைவெளி தான் கலைஞர்களை மக்கள், தங்களிடம் இருந்து அந்நியப் படுத்தும் இடமாக நான் பார்க்கிறேன், இது இன்றைய நவீன கலைஞர்களுக்கும் பொருந்தும் நிலை தான்.

என்னைப் பொருத்தவரை சிற்பங்களில் தெரியும் நிர்வாணம் நமது தொன்மையைப் பேசுகின்றது. இது போன்ற சிற்பங்களின் வாயிலாக மட்டுமே  நாம் வழிபடும் தெய்வங்களை நமது வரலாற்றோடு இணைத்துப் பார்க்க சாதாரன மனிதர்களாலும் முடிகிறது. அவற்றின் வாயிலாக புராணங்களை நிதானமாக அனுக முடிகின்றது. இது இன்னும் சில கதவுகளைக் கடந்து நமக்கும் புராணத்திற்குமான இடைவெளியை குறைக்க உதவும். சரி, மீண்டும் கஜலட்சுமியைப் பார்க்கச் செல்வோம்.

இந்தப் புனித நீராடல் ஒரு தலைவியை, தலைவனோடு வழியனுப்புதல் பொருட்டு நடக்கும் ஒரு சடங்கினைப் போன்ற காட்சியைத் தருகின்றதால் , தலைவியை -அதாவது கஜலட்சுமி எனும் தத்துவம் பற்றி நாம் சிறிது கவனிக்க வேண்டிய அவசியம் வருகிறது, அவள் சமுத்திரத்தின் மகள் என்றும், செல்வத்தின் மூலம் என்றும் கிடைக்கிறது. கடலில் இருக்கும் செல்வம் பற்றி இன்னும் அறிவியலாலேயே முழுவதும் அறிந்து கொள்ள முடியவில்லை தானே!!

ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கையில் இது போன்ற குறியீடுகளைப் பற்றியும் பேச்சு எழுந்தது, நிறையவே நம் பழைய கலைகளில் இருக்கும் குறியீடுகளைப் பற்றி பேசினார். கடல் என்று பல இடங்களில் புராணம் காட்டுவதும் ஒரு குறியீடு தான், அவர்கள் ‘அண்டத்தையே கடல்’ என்று குறிக்கிறார்கள் என்றார். அப்படியென்றால் திருப்பாற்கடலில் மலையைக் கடையும் கதை - அவை எல்லாமுமே ஒரு குறியீடுதான், சமுத்திரம் என்பது அண்டமாக, அதில் பாற்கடல் எனும் ஒரு பகுதி மட்டும் (மில்கிவே) உருவாகிறது, கடைதல் என்பதே ஒரு பிக்பேங்க மாதிரி என்றார் அவர். இது அறிவியல் பார்வையில் அபத்தமாகத் தோன்றினாலும், அந்தக் குறியீடுகள் என்ற பதம் ஆற்றும் செயல், முக்கியமாக புராணத்தின் மையத்தை (நம்பிக்கை) தகர்க்கிறது என்றால் அவை ஏன் அறிவியலாகவும் இருக்கக் கூடாது என்று எண்ணிப் பார்க்க இடமளிக்கிறது (Art is a Science). சிறிய எறும்புகளுக்கு நம் உருவம் புலப்படாதது போல் நம்மாலும் பார்க்க இயலாத பரிமாணங்கள் இருக்கத் தானே செய்கின்றன, இந்த மர்மம் கலைகளாகவே எடுத்துரைக்கவும் படுகின்றன (Science is an Art).

இந்தச் சிற்பத்தில் கஜலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரைக்குக் கீழே அலைகள் இருப்பதை கவனித்துப் பாருங்கள்!! கடலில் தாமரை மலருமா என்ன?? புராணங்களின் படி இது பாற்கடல், அப்படியென்றால் இந்தக் குறியீடு இன்னும் பல விளக்கங்களைக் கோருவதற்கு இடமளிக்கின்றது.

அதுபோல காலங்காலமாக நாம் புராணங்களில் அழித்து வரும் நாகர்கள் குறியீடுகளா? அது என்ன வரலாற்றை எல்லாம் சொல்கிறது என்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இம்மல்லைச் சிற்பங்கள் வேறு சில இடங்கள் குறிப்புணர்த்துகின்றன, அதைப் பற்றி வேறு ஒரு பகுதியில் பார்ப்போம்.

இத்தொடரில் குறியீடு, சரித்திரம், புராணம் பற்றியெல்லாம் பேசினாலும், ஒரு சாதாரண பார்வையாளனாய் என்னை அல்லது என்னைப் போன்றவர்களை இச்சிற்பங்கள் எப்படிக் கவர்கிறது? அதை எப்படி எல்லாம் நாம் பார்த்து ரசிக்க இடமளிக்கிறது? அதனோடு எவ்வாறு உரையாட முடியும் என்கிற நிலைகளை புனைவோடு நிரப்புவதற்கு தான் முயற்சி செய்து வருகிறேன்

மீண்டும் சிற்பக் காட்சிக்கே வருவோம், இதைக் குறியீடாகப் பார்க்காமல், புராணமாகவும் பார்க்காமல் அந்தச் சிற்பத் தொகுதி(panel)யாக மட்டும் பார்த்தோமேயானால், அதாவது மையமாக இருக்கும் தேவியின் பின்புறம் நிற்கும் யானைகள், தோழிகளின் கைகளில் இருக்கும்  பொருட்கள் எல்லாம், அவளை ஒரு tribal (பழங்குடி) இனத் தலைவியாக அடையாளம் காட்டுகிறது - முக்கியமாக தோழமையுடன் அருகில் நிற்கும் யானைகள். அவ்வாறன்றி ஒரு பழங்குடி இனத்திற்கே அவள் மணமுடித்து சென்றிருக்கலாம். அவள் தலைவனை (திருமால்) மணமுடித்தோ அல்லது வினை முடித்து அகத்தே திரும்புபவனை (அவதாரம் முடித்து) எதிர்நோக்குவதற்காக தலைவி தயாராகிக் கொண்டிருக்கிறாள் மிக அழகாக, நறுமணத்துடன்.

அந்தத் தலைவன் எப்படி தலைவியை அடைந்திருக்கிறான்?, எப்படி வினை முடித்திருக்கிறான் ?அல்லது எந்த அவதாரத்தில் இருந்து திரும்புகிறான்? என்பதை அருகில் இருக்கும்  சிற்பக் காட்சி விளக்குகிறது.

தெரியுமா உங்களுக்கு:
இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லை என்றாலும் -
பல்லவர்களுக்கும் பவுத்த சமயத்திற்கும் தொடர்பு இருந்தமைக்குப் பல சான்றுகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் கஜலட்சுமியைப் போன்ற சித்திரம் புத்தனின் பிறப்பைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது.
கஜலக்ஷ்மி எனும் அம்சம் முன்னொரு காலத்தில் ஆண் தெய்வமாகவும் வழங்கப் பட்டிருக்கிறது, அதுவும் 07-08 ஆம் நூற்றாண்டு வரை என்று சொல்கிறார்கள்.

ஓவியங்கள் - 19ம் நூற்றாண்டு படங்களில் திருப்பாற்கடல் பற்றிய ஓவியங்கள் - ஓவியர் பெயர் தெரியவில்லை.





அடுத்த பகுதியில் சந்திப்போம்


 பகிர்வு திரு ஜீவ.கரிகாலன்..........

4 comments:

  1. சிற்பம் சித்திரம் சங்கீதம் -சிறந்தவர் தமிழரன்றி எவருண்டு?

    சிறப்பான விளக்கங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. சிற்பங்கள் பற்றிய உங்கள் பார்வையிலிருந்து நிறைய தெரிந்து கொள்ளமுடிகிறது. உங்கள் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் 'சிறிய எறும்புகளுக்கு நம் உருவம் தெரியாது போல'! எங்களுக்குத் தெரியாத பல கோணங்களை காட்டுகிறீர்கள், பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..

    ReplyDelete