-- இறை.மதியழகன்
"உண்ணச் சிறிது போதும், உறங்கப் படுக்கை போதும்,
எண்ணப் பொழுது வேண்டும், எழுத உரிமை வேண்டும்”
என்று தன்னை உள்ளிருந்து இயக்கும் குரலுக்குச் செவிமடுத்து, அயராது இயங்கி, 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும், "அன்னை மொழியின்றி அன்னிய மொழி இல்லை” என்ற முழக்கத்துடன் தமிழ்நெறித் திருமணங்களுக்குப் புதிய முறைவகுத்து 4000க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்தும் வாழ்ந்து மறைந்த இளங்குமரனாரின் வாழ்க்கையையும் தமிழ்ப்பணிகளையும் களப்பணிகளையும் ஒரு கோட்டுச் சித்திரமாக இக்கட்டுரையில் அளிக்க முயல்கிறேன்.
இளங்குமரனார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் 1927, ஜனவரி 30 அன்று பிறந்தார். இளங்குமரனாரின் தந்தை இராமு. அவர் எப்போதும் படித்துக் கொண்டே இருந்ததால் 'படிக்க இராமு' என்று ஊர்மக்களால் அழைக்கப்பட்டவர். தாயார் வாழவந்தம்மையார்.
திருக்குறளை 12 வயதிலும், தொல்காப்பியத்தை 16 வயதுக்குள்ளும் முழுமையாகக் கற்று, 18 வயதில் சங்க இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றார். ஆழ்வார் பாடலில் கிருட்டிணனுடைய பெயர் 'இளங்குமரன்' என்று தமிழில் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்து, இளம் வயதிலேயே தனித்தமிழ்ப் பற்றினால் இளங்குமரன் எனப் பெயரை மாற்றிக்கொண்டார்.
இளங்குமரன் எட்டாம் நிலை படித்த முடித்தவுடன் ஈராண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து வாழவந்தாள்புரத்தில் உள்ள பள்ளியிலேயே 1946-ஆம் ஆண்டு தனது ஆசிரியப் பணியைத் துவங்கினார். அதே ஆண்டு 16-ஆவது வயதில், செல்வம் அம்மையாரை மணந்து மணவாழ்க்கையையும் துவங்கினார். அந்தப் பள்ளி மூடப்படும் சூழல் உண்டானபோது இளங்குமரனாரே தனது சேமிப்பிலிருந்து அந்தப் பள்ளியை வாங்கி அதில் பணிபுரிந்து கொண்டே பள்ளியைச் சிலகாலம் நடத்தி வந்தார்.
பின்னர் 1951-ஆம் ஆண்டு கரிவலம்வந்தநல்லூரில் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆசிரியப் பணியோடு நிற்காமல் மேடைப் பேச்சு, பட்டிமன்றம், திருமணங்கள் நடத்தி வைப்பது எனத் தமிழ்வலம் வந்தார். தலைமை ஆசிரியரோ பெருஞ்சினம் கொண்டார். இளங்குமரனாரை அழைத்து அவற்றையெல்லாம் விட்டுவிடச் சொன்னார். ஆனால் இளங்குமரனார் அப்பள்ளியில் பணியாற்றுவதை விட்டுவிட்டார். பிறகு, 6 ஆண்டுகள் தளவாய்புரத்திலும் மதுரை திருநகர்ப் பகுதியிலுள்ள பள்ளியிலும் சுமார் 27 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இளங்குமரனார் செய்த தமிழ்ப் பணிகள் கணிசமானவை.
அப்பணியிலிருந்து 1985ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று, மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் தமிழண்ணலின் அழைப்பின் பேரில், தமிழியப்புல ஆய்வறிஞராகவும், வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றினால் பெறக்கூடியதைவிடக் குறைவான ஊதியம் என்றபோதும்கூட ஆய்வின் மீதிருந்த பேரார்வத்தால் அப்பணியில் இணைந்தார். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே" என்ற உண்மைப் பொருளை அந்தச் செந்தமிழ் அந்தணர் உணர்ந்திருந்தார்.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து பின் 62-ஆம் வயதில் பணிஓய்வு பெற்ற நாளை “முழுதுறு பொதுவாழ்வைத் துவங்கிய நாள்” என்று அவர் குறிப்பிடுவது, தன்னை முழுமையாகப் பொதுவாழ்வுக்கு அர்ப்பணிக்கும் நாளுக்காகக் காத்திருந்த அவரது ஆழ்மன ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது.
'செந்தமிழ்ச் செல்வி', தமிழ்ப் பொழில்' ஆகிய இரு இதழ்களிலும் ஆசிரியர் குழுவில் இணைந்து சீரிய எழுத்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். குளித்தலையில் கா.சு.பிள்ளை நினைவுக் கூட்டங்கள் உட்பட பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை வழங்கியிருக்கிறார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இவர் ஆற்றொழுக்காக வழங்கிய பொழிவுகள் (சொற்பொழிவைப் பொழிவு என்றே இளங்குமரனார் குறிப்பிடுவது வழக்கம்) ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும்.
பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் தொடங்கப்பட்ட பல சீரிய திட்டங்களுக்கு இளங்குமரனார் பெரும்பங்காற்றினார். 'அகர முதலி” திட்டத்தின் ஆய்வுக்குழு உறுப்பினர், 'சுவடிப் புல'த்தில் கருத்துரைஞர் குழு உறுப்பினர், 'இராசராசன் விருது'க்கான தேர்வுக்குகுழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளில் பணியாற்றினார்.
தமிழுக்கு இளங்குமரனாரின் மிக முக்கியக் கொடையாக கருதப்படுபவை 550-க்கும் மேலான எண்ணிக்கையில் அவர் வெளியிட்டிருக்கும் நூல்கள். இவ்வளவு நூல்களை ஒருவர் எழுத இயலுமா என்று மலைப்பாக இருக்கலாம். இந்த எண்ணிக் கை துல்லியமானதுதானா என்ற ஐயமும் எழலாம்.
இளங்குமரனார், 1962-64 மூன்று ஆண்டுகளில் மட்டும் வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 64 என்பதையும், 2009-ல் வெளியான தன்வரலாற்று நூலான 'ஒரு புல்' நூலின் முதல் பகுதியில் அவரது 330 நூல்களை அவர் பட்டியலிட்டிருப்பதையும், தனது 75-ஆவது அகவை நிறைவு நாளில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு 81 நூல்களை இயற்றி, மாபெரும் வெளியீட்டு நிகழ்வை நடத்தினார் என்ற தகவல்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் 550 என்ற அந்த எண்ணிக்கையைப் பற்றி இருந்த ஐயம் நீங்கிவிடும்.
அவர் கொடையாக விட்டுச் சென்ற நூல்கள் நூற்றுக்கணக்கில் இருப்பினும் அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடத்தக்கக் காரணங்களுக்காக இங்கு சற்று விரிவாகக் காண்பது பொருத்தமானதாக இருக்கும்.
தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக் காப்பியமான, குண்டலகேசியில் நமக்குக் கிடைத்திருப்பவை 19 பாடல்கள் மட்டுமே. குண்டலகேசி தொடர்பான பிற இலக்கியங்களை ஆராய்ந்து, அதனடிப்படையில் 1127 பாடல்களைத் தானே இயற்றி, அக்காப்பியத்தை மீட்டுருவாக்கம் செய்து தந்திருக்கிறார். அதற்கு இளங்குமரனார் கையாண்ட அணுகுமுறை தனித்துவமிக்கது.
குண்டலகேசி ஒரு பௌத்த சமய நூல். அதற்கு எதிரான தருக்க நூலாக வெளியானது ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான சமண சமய நூல் 'நீலகேசி'. நீலகேசி முழுமையாகக் கிடைத்திருக்கிறது. நீலகேசியை ஆராய்ந்து அதன் அடிப்படையில் புனைவுக் காப்பியமாகக் குண்டலகேசியை மீட்டுருவாக்கி 1958-ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் வெளியிட்டார் இளங்குமரனார். இந்த நூலுக்குத் தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். இந்த நூலுடன் சிங்கப்பூருக்கும் ஒரு வலுவான தொடர்புண்டு.
குண்டலகேசி நூலுக்குப் புரவலராக இருந்து வெளியிட்டவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கோவலங்கண்ணனார். இவர் பாவாணர் அறக்கட்டளையை நிறுவியவர். இந்த நூல் மட்டுமன்றி இளங்குமரனாரின் 'அகல்' எனும் ஆராய்ச்சி நூலையும், வாழ்க்கை வரலாற்று நூலின் முதல் தொகுதியையும், 'தேவநேயப்பாணம்' என்ற பன்னூல் தொகுதிகளையும் வெளியிட்ட பெருமையும் சிங்கைக் கோவலங்கண்ணனாருக்கே உரியது.
குண்டலகேசியைப் போலவே பெருமுயற்சி செய்து இளங்குமரனார் மீட்டுருவாக்கம் செய்த இன்னொரு நூல் 'காக்கைப்பாடினியம்'. தொல்காப்பியத்துக்குப் பின் இயற்றப்பட்ட அரிய இலக்கண நூல். பெண்பால் புலவர் ஒருவர் இயற்றிய உலகின் முதல் இலக்கண நூல்.
இலக்கிய உரையாசிரியர்களின் உரைகளில் எங்கெல்லாம் தமிழ் இலக்கண நூற்பாக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் (20000-க்கும் மேற்பட்டவை) தேடியெடுத்துத் தொகுத்து அகரவரிசைப்படுத்தி 'மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை' என்னும் ஒரு நூலை இளங்குமரனார் வெளியிட்டார்.
அதன் பின்னர், அந்த நூலில் இருக்கும் நூற்பாக்களை, இயற்றிய ஆசிரியர் பெயரால் அடைவு செய்து காக்கைப்பாடினியார் நூற்பாக்களைத் தனியாக எடுத்தார். அந்நூல் யாப்பிலக்கணத்தை மட்டுமே வரையறுத்த நூல் என்பதைக் கண்டறிந்து, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம், ஒழிபு என யாப்பிலக்கண வைப்பின்படி வகைப்படுத்தி உரையும் வழங்கி ஒப்படைத்திருக்கிறார் இந்த முதுமுனைவர். இந்த நூலுக்கு மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
தான் இயற்றிய நூல் ஒன்றுக்கு முன்னுரை வாங்க, பாவேந்தர் பாரதிதாசனை ஒருமுறை சென்று சந்தித்திருக்கிறார் இளங்குமரனார். அப்போது "எங்கே, நீ எழுதிய பாட்டொன்று சொல்!" எனப் பாவேந்தர் கேட்க, 'களிற்றானைக் கூட்டங்கள்' என்று தொடங்கும் ஒரு பாடலைப் பாடிக் காண்பித்திருக்கிறார்.
“இது களவழி நாற்பது போல் இருக்கிறதே" என்று பாராட்டிவிட்டு, "உனக்கொன்று சொல்வேன். இனி அவன்ட்டப் போய் முன்னுரை, இவன்ட்டப் போய் முன்னுரை என்று கேட்காதே. ஏன்னா, வேட்டி கட்டத் தெரிஞ்சவனுக்குக் கோவணம் கட்றது எப்படின்னு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை!" என்று அவருக்கே உரிய பாணியில் அறிவுரை வழங்கியிருக்கிறார் பாவேந்தர். அதன் பின்னர், தான் எந்த நூலுக்கும் யாரிடமும் சென்று முன்னுரை வாங்கவில்லை.
இளங்குமரனார் மதிப்பூதியமாகவோ அன்பளிப்பாகவோ தனக்கு வழங்கப்படும் ரொக்கத் தொகைகளை, பெரும்பாலும் அப்பொழுதே "இன்ன நூல் வெளியீட்டுக்குப் பயன்படுத்தப் போகிறேன்" என்று அறிவித்துவிடுவார் அல்லது "தாங்கள் வழங்கிய தொகையை இந்த நூலாக்கத்துக்குப் பயன்படுத்திக் கொண்டேன்” என்று அந்த நூலிலேயே பதிவு செய்து விடுவார்.
அவரை நாடிவந்த பல விருதுகளைத் தவிர்த்து, தமிழக அரசின் 'நல்லாசிரியர் விருது', 'திரு.வி.க. விருது' உட்பட சில பெருமை வாய்ந்த விருதுகள், குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'குறள் ஞாயிறு' விருது எனத் தவிர்க்க இயலாமல் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டார். தமிழ் மொழிக்காகவும் தமிழருக்காகவும் கருத்துப் பணியோடு நின்றுவிடாமல், களப்பணியாளராகவும் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார்.
திராவிட இயக்கங்கள் தோன்றியபின் வைதீக முறையைத் தவிர்த்து, இயக்கத் தலைவர்கள் முன்னிலையில் பல திருமணங்கள் நடைபெற்றன என்றாலும் அவை பெரும்பாலும் சொற்பொழிவுகளாலும் அரசியல் தொண்டர்களாலும் சூழப்பட்ட ஒரு நிகழ்வாக இருந்ததால், அரசியல் சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டை விரும்பியோருக்கு வேறு திருமண நெறிமுறை வகுக்கப்படாத சூழல் இருந்துவந்தது.
"திருமணமோ அல்லது மற்றைய சடங்குகளோ அவரவர் தாய்மொழியிலேயே நடத்துதல் முறைமையும் அறமும் ஆகும். ஏனெனில், என்ன செய்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிய வேண்டும். புரியாமல் நடத்தும் சடங்கு பொருந்தாச் சடங்கு என்பது வெளிப்படை" என்பது இளங்குமரனாரின் எண்ணம். பிறமதங்கள் தாய்மொழியில் சடங்குகளை நடத்த அனுமதிக்கும் போது நாம் இனிமேலும் பிறமொழியைத் தெய்வ மொழியெனக் கருத வேண்டியதில்லை என்பது தனித்தமிழ் முன்னோடியான அவரது எண்ணம்.
தமிழர்தம் இல்லத் திருமணங்கள் தமிழ் நெறிப்படி நடத்தப்படவேண்டும் என்றும் அவ்வாறு நடத்திட முடியும் என்றும் உறுதியோடு வழிகாட்ட, தனி ஒருவராகக் களம் இறங்கினார் இளங்குமரனார். அது ஒரு புரட்சிகரமான சமுதாய மாற்றம் என்பதால் எல்லா நிகழ்வுகளும் முழு வரவேற்போடும் வெற்றியோடும் நிகழ்ந்தன எனக் கூறிட இயலாது.
சில இடங்களில் முதலில் ஒத்துக்கொண்டு பிறகு இறுதி நேரத்தில் தமிழ்வழியில் அல்லாமல் வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. முதலில் ஒப்புக்கொண்டோர் வெளியில் காத்திருந்து ஐயாவை வணங்கி மன்னிப்புக் கேட்டுத் திருப்பி அனுப்பிய நிகழ்வும் நடந்திருக்கிறது. ஆயினும் அவர் தளரவில்லை.
அதேவேளையில் ஒரு சாரார் புரோகிதரை அழைத்து வருவதும், மறுசாரார் இளங்குமரனாரை அழைத்து வருவதும், பின் தமிழ்த் திருமண முறையை இறுதிவரை பார்த்து, புரோகிதரே பாராட்டிவிட்டுத் திரும்பிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. மெல்லமெல்ல எதிர்ப்புச் சூழல்கள் குறைந்து, செந்தமிழ் அந்தணராக ஐயா தமிழ்ச் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலை உண்டானது.
வாழவந்தாள்புரம் சுற்று வட்டாரத்தில் 1952-ல் தனது 22-ஆவது வயதில் திருமணம் நடத்தி வைக்கத் தொடங்கிய இளங்குமரனார் பின்னர் தமிழகத்தின் பல நகரங்களிலும் மலேசிய நாட்டில் பல இடங்களிலும் தமிழ்வழி நெறிப்படி நடத்தி வைத்தத் திருமணங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இளங்குமரனார் தமிழ் இலக்கியங்களை ஆய்ந்து பண்டைய தமிழர் திருமண முறைகளையும் தற்போதுள்ள நடைமுறைகளையும் தழுவி, தானே ஒரு புதிய நெறிமுறையை உருவாக்கி, அதன்படி ஒவ்வொரு திருமணத்தையும் வந்திருப்போர் ஈடுபாட்டுடன் விழாவில் ஒன்றி மனமார வாழ்த்தும் வகையில் நடத்தித் தருவார்.
ஐயாவின் மெல்லிய அதேநேரம் உறுதியான தெளிவான குரல் வளம், அனைவர் மனதையும் ஈர்த்து நிகழ்வில் ஒன்ற வைத்துவிடும். என்னுடன் பிறந்த ரெட்டைப் பிறப்பான தங்கை மணிமேகலை மனோகர் திருமணமும், கரூர் அருகில் உள்ள எனது சொந்த ஊரான, சின்னத்தாராபுரத்தில் இளங்குமரனார் நடத்தித் தந்த தமிழ்நெறித் திருமணங்களுள் ஒன்று.
திருமணம் மட்டுமின்றி பிற குடும்ப நிகழ்வுகளான பெயர் சூட்டு விழா, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா போன்ற பத்து நிகழ்வுகளைத் தமிழ் நெறியில் நடத்துவது எப்படி என்பதை 'தமிழ்நெறிக் கரணங்கள்' என்ற நூலில் விளக்கியிருக்கிறார். மேலும் பலருக்குப் பயிற்சி அளித்து அடுத்த தலைமுறைச் செந்தமிழ் அந்தணர்களையும் உருவாக்கியிருக்கிறார். இளங்குமரனாரிடம் பயிற்சி பெற்று அவர் பணியினைத் தொடர்பவர்களில் மலேசியாவில் வாழும், தமிழ் தெறி வாழ்வியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் திரு. அருள் முனைவர் அவர்களும் ஒருவர்.
இளங்குமரனாரின் மனைவி செல்லம் அம்மையார் 1977-இல் இயற்கை எய்தினார். பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழுக்காகத் தவவாழ்வு வாழ முடிவு செய்த இளங்குமரனார், திருச்சிக்கு அருகே அல்லூர் என்ற ஊரில் 'திருவள்ளுவர் தவச்சாலை'யை 1994-ஆம் ஆண்டு துவக்கி அங்கே 2014 வரை, 20 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு வளம் சேர்த்தார். அதன்பின் மதுரை திருநகரில் எழுத்துப்பணிகளைத் தொடர்ந்தார்.
அந்தத் தவச்சாலையை அவர் அமைத்துக்கொண்ட பாங்கு மிகவும் ஆழமான தமிழுணர்வால் எழுந்த சிந்தனைகளை உள்ளடக்கியிருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறம் ஒரு சிறு திருவள்ளுவர் ஆலயம். அதன் கருவறையை அவர் அமைத்த விதம் புதுப்பாதை காட்டுவது.
தான் திருமண நிகழ்வுகளை நடத்திவைக்கச் சென்ற ஆயிரக்கணக்கான ஊர்களில் ஒவ்வோர் ஊரிலிருந்தும், ஒரு சிறு கல்லை ஏற்கனவே சேமித்து வைத்திருந்திருக்கிறார். அதிலிருந்து அறத்துப்பாலைக் குறிக்க 380 கற்களாலான ஒரு வெண்ணிறக் குன்றும், பொருட்பாலைக் குறிக்க 700 கற்களாலான செந்நிறக் குன்றும், இன்பத்துப்பாலைக் குறிக்க 2500 கற்களால் ஆன நீலநிறக் குன்றும் அமைத்து, அவை ஒவ்வொன்றின் உச்சியிலும் குன்றின் வண்ணத்திலேயே ஒரு விளக்கையும் அமைத்திருக்கிறார். அவற்றின் முன் ஐம்பொன்னால் ஆன ஒரு திருவள்ளுவர் சிலையை நிறுவியிருக்கிறார். என் தந்தையார் பாவலர் இறையரசனாருடன், நான் தவச்சாலைக்குச் சென்ற போது ஐயாவே அதன் அமைப்புகளை விளக்கிக் கூறினார்.
அந்தத் தவச்சாலையில் இலக்கியக் கூட்டங்கள், மனநல ஆலோசனைகள், என மக்களுக்குப் பயனுள்ள பல நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வாழ்ந்தார். இவைதவிர, ஆண்டு விழாக்கள், கவனக நிகழ்வுகள், இயற்கை மருத்துவம், மூச்சுப் பயிற்சி வகுப்புகள் என பல நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து தனி இயக்கமாகவே இயங்கிக் கொண்டிருந்தார் இளங்குமரனார். தவச்சாலையிலிருக்கும் 40,000 நூல்களைக் கொண்ட பாவாணர் ஆராய்ச்சி நூலகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்பவருக்கு, அங்கேயே தங்கி ஆய்வுசெய்ய வசதி இருந்தது.
மாதத்தில் 10 நாட்கள் பொழிவுகள், திருமணங்கள் நடத்தி வைத்தல், மீதம் 20 நாட்கள் எழுத்துப் பணி என்று 200 ஆண்டுகள்
அவர் தொடர்ந்து செயலாற்றினார். தவச்சாலையிலேயே திருமணம் நடத்த வேண்டுமெனில் அதற்கென சில விதிமுறைகளை வகுத்திருந்தார்.
காதல் மணமாக இருக்க வேண்டும். சாதி சமயம் பாராது நடைபெறும் திருமணமாக இருக்க வேண்டும். பெற்றோர் இசைவோடு திருமணம் நடத்தப்பட வேண்டும். திருக்குறள் ஓதித் திருமணம் நடத்த ஒப்புதல் தர வேண்டும். மணக்கொடை (வரதட்சணை) கூடாது. ஆக அதிகமாக 100 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் எளிமையான திருமணமாக இருக்க வேண்டும்.
தமிழர்தம் இல்லத் திருமணங்கள் தமிழ் நெறிப்படி நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நடத்திட முடியும் என்றும் உறுதியோடு வழிகாட்ட, தனி ஒருவராகக் களம் இறங்கினார் இளங்குமரனார். தானே உருவாக்கிய தமிழ்நெறி முறைப்படி இளங்குமரனார் தான் நடத்தி வைக்கும் திருமண நிகழ்வை மங்கல வாழ்த்து, மொழி வாழ்த்து கூறித் தொடங்குவார். வந்தோரை வரவேற்று, மணவிழா நிகழப் போவதை எடுத்துரைப்பார், தமிழ்ப்பண்பாட்டு விளங்களைக் கூறி தமிழர் திருமணச்சடங்கு நெறிமுறைகளை விவரிப்பார்,
- "உலகம் வாழ்க... உயர்வெலாம் வாழ்க" என மணமக்களைக் கூறவைப்பார்.
- ஒரு தட்டில் மண் பரப்பி, அதன் மேல் பூக்களைத் தூவி, திருக்குறள் நூலை வைத்து மணமக்களை அவற்றைத் தொட்டு வணங்கச் செய்து, "வள்ளுவம் வாழ்க - வாழ்வியல் வாழ்க" என மும்முறை அவர்களைக் கூறச் செய்து, வள்ளுவர் படத்துக்கு மலர் தூவ வைப்பார்.
- "சான்றோர் வாழ்க சால்புகள் வாழ்க" என மும்முறை கூற வைப்பார் "மணமக்கள் வாழ்க வாழ்க" என பொதுமக்களைக் கூற வைப்பார்.
- மணமக்கள், "பெற்றவர் வாழ்க பெருந்தகை வாழ்க" என மும்முறை கூற பெற்றோர்கள் மலர் தூவி "வாழ்க வாழ்க"எனக் கூற வண்டும்.
- அகநானூற்றுப் பாடல்கள் 86, 136 ஆகியவற்றின் அடிப்படையில் மகளிர் நால்வரை அழைத்து மங்கல நாண் எடுத்துத் தர மணமகன் அதை மணமகள் கழுத்தில் அணிவிப்பார்.
- மாலை, துணைமாலைகளை இருவரையும் மாற்றச் செய்து இடம் மாற்றியும் அமரச் செய்வார்.
- மணமக்கள் இருவரும் இணைந்து விளக்கேற்றச் செய்து பொதுமக்களிடம் வாழ்த்து பெறச் செய்வார்.
- அரசாணிக்கால் நடுதல், முளைப்பாலிகை வைத்தல், பட்டம் கட்டுதல், மெட்டி அணிவித்தல் ஆகிய முறைகளைச் செய்வார்.
- திருக்குறள் கூறும் ஐம்புலத்து ஆறு ஓம்புதலுக்கு அடையாளமாக ஐந்து இலைகளை இட்டுச் சோறு படைக்கச் செய்வார்.
இவ்வாறு சடங்குகளின் விளக்கங்களை நம் செம்மொழியில் கூறி, குத்துவிளக்கை ஏற்றவைத்து, அவர் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிவைத்து வளமாக வாழும் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
தனது தனித்தமிழ் இயக்க வழிகாட்டியாக மறைமலை அடிகளையும், தனித்தமிழ் சொல்லாராய்ச்சிக்கு வழிகாட்டியாக தேவநேயப் பாவாணரையும், தமிழ்த்தொண்டுக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் இலக்குவனாரையும், வாழ்வியல் வழிகாட்டியாக திரு.வி.க.வையும் கொண்டு வாழ்ந்த இளங்குமரனார் தனது 94- ஆம் வயதில் 2021 ஜூலை 25 அன்று தமிழோடு கலந்தார். அவரது இறுதி ஊர்வலம் தமிழக அரசு மரியாதையோடு நடத்தப்பட்டது.
இறுதியாக, இப்படிச் சொல்ல விழைகிறேன்; நடமாடும் நல்லதமிழ்ச் சொற்களஞ்சியம், வியக்க வைக்கும் வேர்ச்சொல் ஆய்வாளர், தவச்சாலை அமைத்து வாழ்ந்த தமிழ் மாமுனிவர், இலக்கண இலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்த முதுமுனைவர், பல்லாயிரம் திருமணங்களைத் தமிழ் நெறிப்படி நடத்திவைத்த செந்தமிழ் அந்தணர், இரா.இளங்குமரனார். அவர்தம் வாழ்க்கை , தமிழ் மொழியின் அரிய அறிவுச் செல்வங்களை அனுதினமும் ஆராய்ந்து அள்ளி ஒன்றுதிரட்டி உலகுக்குக்காட்டி ஒப்படைத்துச் சென்ற நீண்டதொரு பயணம்.
வயதும் முதுமையும் அவருக்குத் தடையாக ஒருபோதும் இருந்ததில்லை. “சோம்பல் என்பதைச் சுட்டெரிக்கும் பிறவி என் பிறவி" என்பது அவருடைய உற்சாகமூட்டும் சொற்றொடர். இன்று வாழும் தலைமுறையும், அடுத்தடுத்த தலைமுறைகளும் 'என் பாட்டன் சொத்து' என்று உரிமையுடனும் இறுமாப்புடனும் அனுபவித்துப்பயன்பெற' தமிழ் வளம்' என்று அனைத்து நூல்களையும் இளங்குமரனார் வழங்கிச் சென்றிருக்கிறார்.
ஓய்விலா உழைப்பு, சோர்வறியாப் பயணம், தன்னை முன்னிலைப்படுத்தாமல் தமிழை முன்னிலைப்படுத்திய உழைப்பு என அந்தத் தமிழ் முன்னோடி காட்டிய வழியில் நாமும் செயல்படுவோம்.
இறை.மதியழகன்
mathi.sconce@gmail.com
நன்றி: தி சிராங்கூன் டைம்ஸ் - பிப்ரவரி 2022