-- நிவேதிதா லூயிஸ்
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர்
தமிழகத்தின் முதல் கிறிஸ்தவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் என ஜெபமணி மாசிலாமணி அம்மாளின் பெயர் பதிவாகியுள்ளது. எனது "முதல் பெண்கள்" நூலாக்கத்தின்போது மானுடவியல் ஆய்வாளர் முனைவர் ஆ.சிவசுப்பிரமணியன், பிலோ ஜாண் அம்மாள்தான் ஜெபமணி அம்மாளின் பெயர்த்தி என தகவல் தந்து, அவரைத் தொடர்புகொள்ள வழியேற்படுத்தித் தந்தார். முதல் பெண்கள் நூலில் ஜெபமணி அம்மாளைப் பற்றி எழுதிய தகவல்கள் பிலோ அம்மாள் தந்தவையே. நூல் வெளியீட்டு விழாவுக்கு அவரால் வர இயலவில்லை என்பதால், ஜெபமணி-மாசிலாமணி தம்பதியின் உறவினரை மனமுவந்து அனுப்பினார். தொடர்ச்சியாக அவர்கள் குடும்பத்துடன் பேசிவருகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. பெரியவர் வ.உ.சிதம்பரனார், திரு வி.க., ம.பொ.சி. உள்ளிட்டவர்கள் பற்றி அவ்வப்போது அம்மாவுடன் பேசிக்கொள்வதில் ஓர் ஆனந்தம். விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த அன்றைய காலத்தையும் ஒவ்வொருவர் பட்ட துன்பத்தையும், சின்னச் சின்ன விஷயங்களில் அவர்கள் கொண்ட மகிழ்வையும் பேசிக்கொண்டிருப்போம்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பிலோ அம்மாவின் கணவர் மறைந்த ஜாண் ஐயாவின் நூலைப் பெறுவதற்காக ஒரு நாள் இரவு 9 மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தன் தாத்தா மாசிலாமணி, பாட்டி ஜெபமணியின் வாழ்க்கை வரலாற்றைத் தான் நன்றாக இருக்கும்போதே தொகுக்கப் போவதாக பிலோ அம்மா சொன்னார். மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்கப்படுத்தி, பாராட்டிவிட்டு வந்தேன்.
அதன்பின் அவ்வப்போது பேசுவார். கொம்பாடி, சில்லாநத்தம் என மாசிலாமணியுடன் தொடர்புடைய ஊர்களுக்குச் சென்று வரும்போதெல்லாம் சிறு குழந்தை போன்ற குதூகலத்துடன் அங்கு சென்று வந்ததை அழைத்து விவரிப்பார். தன் 84வது வயதில் இவ்வளவு அலைந்து திரிந்து தன் குடும்ப வரலாற்றை ஆய்ந்து, தமிழ் மக்களுக்கு பிலோ அம்மா அளித்திருக்கும் நூல், 'நீதிக்கு வாதிப்பேன் நின்று'.
இந்நூல் நாம் கண்டிராத ஒரு புதிய தமிழ்நாட்டை நமக்கு அறிமுகம் செய்கிறது. மாசிலாமணி, ஜெபமணி இருவரது வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாது, அவர்கள் வழி வ.உ.சி., ரோச் விக்டோரியா, ரோட்ரிக்ஸ், முத்தையா தாஸ், ஐயாத்துரை பாகவதர், ராஜாஜி, என நாம் நன்றாக அறிந்த, அறியாத தலைவர்களை நூல் பேசுகிறது. ஏரியூர் அரசியல் மகாநாடு உள்ளிட்ட நாம் வாசிக்க மறந்த வரலாற்றின் பக்கங்களை இந்த நூல் கண்முன் விரிக்கிறது.
என்னை மிகவும் கவர்ந்தவை என நூலின் சில பகுதிகளைச் சுட்டலாம். தாதாபாய் நௌரோஜி குறித்து மாசிலாமணி எழுதிய கவிதை, மாசிலாமணியை பிபின் சந்திர பாலுடன் ஒப்பிட்டு தமிழ்நாட்டின் சந்திரபாலர் என வழங்கியது, சாதியை மாசிலாமணி சாடியது போன்றவை மிக முக்கியப் பதிவுகள்.
"மானிடவர்க்கத்துள்ளே மாபழி மேல் கீழ் என்னும்
பாரிடை நிற்கச் செய்த பாவமே பற்றிற் றென்னக்
கூறிட வழியுமாகிக் குறைகளும் மெத்த வாச்சே
யாரிடை செப்பச் சொல்லாய் யாமுறுந் துயரைத் தீராய்"
என்று மாசிலாமணி பாடியுள்ள கவி அவரது எண்ண ஓட்டத்தைச் சொல்கிறது. வ.உ.சி. யின் உண்மையான ஆத்ம நண்பர் என முத்தையா தாஸ் மாசிலாமணியைக் குறிப்பிட்டுக் கைப்பட எழுதியுள்ள குறிப்பு நூலில் இடம்பெறுகிறது. சில்லாநத்தத்தில் மாசிலாமணி ஏற்படுத்திய கதர் தொழிலும், அங்கிருந்து வார்தாவிலிருந்த காந்திக்கு நூல் அனுப்பப்பட்டதையும் அறியமுடிகிறது. தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்க காந்தியிடம் மாசிலாமணி சிறப்பு அனுமதி பெற்றது, அவரது கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக மேடையேறியது, கராச்சி மாநாட்டில் மாசிலாமணி ஆங்கில உரை நிகழ்த்தியது என வாசிக்க, அன்றைய காலத்தில் விடுதலைப் போராட்டம் எப்படி மாநிலங்களின் எல்லைகளை விரிவாக்கியிருந்தது; வடவர் தெற்கைச் சேர்ந்தவர்களுக்கு இடையே இருந்த இணக்க உணர்வு போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் எப்படி விடுதலைப் போரில் மேடையாக மாறியது என்பதையும் அங்காங்கே நூல் சுட்டிச்செல்கிறது. ஆலயத்தின் முன்பு நடந்த 'நாத்திக அக்கிரமப் பிரச்சாரத்தைக் கண்டிக்கும் கூட்டம்', அதில் மாசிலாமணி ஆற்றிய உரையையும், அதே மாசிலாமணி பெரியாருடன் அமர்ந்திருக்கும் படத்தையும் ஒருங்கே நூலில் காணமுடிகிறது. பெரியாரை எதிர்த்து அவரது கூட்டத்திலேயே பேசி, அதனால் பல சங்கடங்களுக்கு மாசிலாமணி ஆளானதாகவும் நூல் குறிப்பிடுகிறது. ஆனாலும் இருவருக்கும் இடையே இருந்த புரிந்துணர்வு, அரசியல் நாகரிகம் வியப்பு கொள்ளச்செய்கிறது.
அதே சமயம் இந்த நூல் மாசிலாமணியை 'அரசியல்ரீதியாக சரியான' மனிதராகக் கட்டமைக்கவும் இல்லை. அவரது முரண்களை பூடகமாகக் கண்முன் விரிக்கிறது. சாதியத்தை சாடிப் பாடல் எழுதிய மாசிலாமணி, சிறையில் தன் மூத்திரக் கலயத்தை எடுக்க மறுத்து, தோட்டியை வரச்செய்யும் கதையும் நேர்மையாக நூலில் எடுத்தாளப்படுகிறது. ஒரு படைப்பின் சிறப்பு அதன் நேர்மையில் இருக்கிறது என்பதைத் திடமாக நம்புவதால், தன் தாத்தாவின் பண்புகளை எந்த ஒளிவு மறைவுமின்றி குறிப்பிடும் பிலோ அம்மாவைப் புரிந்துகொள்ளமுடிகிறது; அவர் மேல் மதிப்பு இன்னும் கூடுகிறது.
கடைசி வரை தன்னை 'கத்தோலிக்கர்' என்ற அடையாளத்துக்குள் மாசிலாமணி வைத்திருந்தார் என பிலோ அம்மாள் எழுதுகிறார். 'இந்தியக் கத்தோலிக்கன் என்ற அடைமொழிகளுக்குள் கத்தோலிக்கனுக்கே அவர் முன்னுரிமை கொடுத்தார். அது அவர் அறியாமை என்று கொண்டாலும், தமது கருத்தில் உறுதியாக இருந்தார்', என நூல் குறிப்பிடுகிறது. போலவே ஜெபமணி அம்மாள் தினமும் காலையில் ஜெபமாலையையும், குறிப்பிடம் நூலையும் எடுத்துக்கொண்டு ஆலயம் போகும் வழக்கம் உள்ளவர் எனவும் பிலோ பதிவு செய்கிறார். கத்தோலிக்கக் கிறிஸ்தவம் என்ற அமைப்புக்குள் இருந்துகொண்டே, விடுதலைப் போராட்டத்தில் தாங்களும் பங்கேற்று, பலருக்கு வழிகாட்டியாகவும் இந்தத் தம்பதி இருந்துள்ளனர்.
1909ம் ஆண்டே திருமணம் ஆனாலும், 1937ம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் சான்று பெற்றுள்ளது. ஒருவேளை ஜெபமணி அம்மாள் தேர்தலில் பங்கேற்கும் எண்ணம் வந்த பிறகு, அதற்குச் சமர்ப்பிக்கவேண்டிய அஃபிடவிட்டுக்காக மணச்சான்று பெற்றிருக்கக் கூடும். 'ஆர்ப்பாட்ட அரசியலை' மாசிலாமணி செய்யவில்லை எனக் குறிப்பிட்டு மூத்த கிறிஸ்தவ ஆய்வாளர் கலாபன் வாஸ் (Kalaban Vaz) எழுதிய கடிதம், நூலில் இடம்பெற்றுள்ளது. நூலின் பல பகுதிகள் மாசிலாமணி-ஜெபமணி தம்பதியின் மகன் அலாஷியஸ் ராஜ் நேரடியாகக் கண்டுணர்ந்து எழுதிய 'நீதிக்கு வாதிப்பேன் நின்று' நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதால் முதன்மை சான்றுகள் அவை என்பது தெளிவாகிறது. ம.பொ.சி. இந்த நூலைப் பள்ளிகளில் பாடநூலாக்க வேண்டும் என பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
'தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் கிறிஸ்தவர்; தென்னாடு விழிப்படையக் காரணமாயிருந்த தலைவர்களில் ஒருவர்' என தமிழ்மணி இதழ் மாசிலாமணியைப் பாராட்டியிருப்பதை நூல் குறிப்பிடுகிறது. 'கத்தோலிக்கப் பிரமுகர்களின் சத்தியாகிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ. ஏ. மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாகிரகம் செய்தனர்' என தினமணி பதிவு செய்துள்ளதையும் நூல் சுட்டுகிறது. விடுதலைப் போராட்டத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு அதிகம் பேசப்படவில்லை என்ற என் நீண்ட நாள் ஆதங்கத்தை இந்த நூல் ஓரளவுக்கேனும் தீர்க்கிறது.
நூலின் பின் இணைப்புகள் இன்னும் சுவாரசியமானவை. மாசிலாமணி குறித்து மற்றவர்கள் படைப்புகள் மட்டுமல்லாமல், அவரது படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. 'பஞ்ச நிவர்த்திப்பா', 'இந்திய பிரலாபப் பத்து', 'சட்டசபை நிராகரணச் சிந்து', 'பாரதமாதா புலம்பல்' போன்றவை ஐந்தாவது ஃபார்ம் (அன்றைய பத்தாம் வகுப்பு) வரை கற்ற மாசிலாமணியின் மொழிப்புலமையை எடுத்துச் சொல்கின்றன. இவை தவிர அவரது ஆங்கிலக் கவிதை, உரைநடையும் இடம்பெற்றுள்ளன. (கர்ப்பத்தடை எதிர்ப்பு குறித்த அவரது பாடலும் உண்டு; எனக்கு அதில் முற்றிலும் உடன்பாடில்லை)
1935 முதல் 1956 வரை சென்னை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஜெபமணி அம்மாள். 'அகில இந்திய அளவில் இப்பெருமை பெற்ற கிறிஸ்தவப் பெண்மணி அவர் ஒருவரே' என 1973ம் ஆண்டு வெளியிடப்பட்ட அன்னையின் அருட்சுடர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிலோ அம்மாள் பதிவு செய்கிறார். தியாகிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தையும் வாங்கவில்லை, தாமிரப் பத்திரமும் அம்மையார் பெற்றுக்கொள்ளவில்லை எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டுக்காகவும், தாய் திருச்சபையின் நலனுக்காகவும் வாழ்ந்து தியாகம் செய்த மாசிலாமணி அவர்களைக் கிறிஸ்தவத் தமிழ்ச் சமுதாயம் விழித்தெழுந்து நினைத்துக் கொள்ளுமா? என லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் எம்.எக்ஸ். மிராண்டா கேள்வி எழுப்பியிருக்கிறார். அதே கேள்வியை நானும் முன்வைக்கிறேன். தமிழ்க் கிறிஸ்தவச் சமூகம் இந்தத் தம்பதியைக் குறித்துக் குறைந்த பட்சம் அறிந்துகொள்ள முன்வருமா? 150 ரூபாய் மதிப்புள்ள நூலை 100 ரூபாய்க்குத் தரமுடியும் என பிலோ அம்மாள் குறிப்பிடுகிறார்.
"நீதிக்கு வாதிப்பேன் நின்று"
பிலோ ஜாண்
செல்வி பதிப்பகம், 9443702800
சிறப்புச் சலுகை விலை ரூ.100/-
தொடர்பு கொள்க: திரு. இளங்கோ- 9443702800
---
No comments:
Post a Comment