Thursday, February 10, 2022

பரதவர்...

 -- முனைவர். எஸ். சாந்தினிபீ


சாதிகள் இல்லாத காதல் திருமணத்தை வாழ்க்கை முறையாக, வரதட்சணைக் கொடுமை இல்லாத இன்றைய ஐரோப்பியச் சமுதாயத்தை ஒத்த சமூகத்தில் வாழ விரும்பாதவர் மிகச் சிலரே.   நமது முன்னோர் இனிமையாக இப்படி வாழ்ந்த காலம் சங்க காலம்.   மண்ணின் இயற்கை அமைப்பின் அடிப் படையில், வாழ்விடத்தை ஐந்து வகையாகப் பிரித்திருந்தனர்.   மனிதாபிமானத்திற்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லாத கருத்தான சாதி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு சொல்லும் மடமையைக் கடந்து வாழ்ந்திருந்தனர்.   நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரித்து அறியப்பட்டது.   அப்பொழுது இந்த பிரிவு தான் நடைமுறையில் இருந்தது.

குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம்,  காடும் காட்டிற்கு அருகில் இருக்கின்ற இடங்களும் முல்லை,  விவசாய நிலம் மருதம்,  கடலும் கடற்கரையும் நெய்தல்,  இந்த நான்கில் ஏதேனும் ஒன்று தன்னுடைய இயல்பில் திரிந்து வறண்டு பயனற்றதாகப் போகுமானால் அதனை பாலை என்றனர்.  வாழும் நிலத்தில் விளைந்ததை உண்டார்கள். உணவை அடிப்படையாகக் கொண்டதே தொழில், தொழிலுக்குத் தக்க உடை.  இந்த ஐந்து பிரிவு நிலங்களிலும் வாழ்ந்த மக்களின் உணவும் உடையும் தொழிலும் பழக்கவழக்கங்களும் விளையாட்டுக்களும் பொழுது போக்குகளும் பாட்டுக்களும் இசைக்கருவிகளும் வேறு வேறு.  நெய்தல் நிலத்தில் பரதவர், நுழைஞர், உமணர் வாழ்ந்ததைச் சங்க நூல் தொல்காப்பியம் அறிமுகப்படுத்தும். 

பரதவர், மீன் மற்றும் கடற் பொருட்களை வாணிபம் செய்தனர். இவர்கள் தலைமை இனத்தினர் என்று தெரிகிறது, நுழைஞர் கடலுக்குள் நுழைந்து மீன் பிடிப்பவர், உமணர் உப்பு தயாரிப்பவர், இன்று பரதவர் மட்டும் காலம் பல கடந்தும் அறியப்படுகிறனர். இன்றும் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். ஒரே தொழிலைச் செய்யும் பலரும் இன்று சமயம்  சாதி அடிப்படையில் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். இந்த பரதவர் தொடர்பாக சில குறிப்புகள் பிற்காலச் சோழர் காலத்திய (8 ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை) கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. 

கோயிலில் இருக்கும் கடவுளுக்கும் பிராமணர்களுக்கும் மன்னருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆடை நெய்து கொடுக்கும் பணியைச் செய்து வந்ததாக பல கல்வெட்டுக்கள் நமக்குச் சொல்கின்றன. மீன்பிடித் தொழிலிலிருந்து நெசவுத் தொழிலுக்கு எப்படி மாறினார்கள் இந்த பரதவர் ? இது நம் அனைவரின் பொதுச் சிந்தனையில் உதிக்கும் ஒரு கேள்வி.   இதற்கு உதாரணம் ஒன்று, இன்றைய எடப்பாடியில் நெசவைத் தொழிலாகக் கொண்ட பலர் தாங்கள் பரதவர் என்பர். மீன்பிடித் தொழிலிலிருந்து ஏதோ காரணத்தினால் முன்னோர்கள் இடம் பெயர்ந்து தொழிலை மாற்றிக் கொண்டதாக இன்றும் அவர்களிடம் வழக்கத்தில் உள்ள வாய்வழிச் செய்தியை நம்மில் பலரறிவோம், கல்வெட்டுச் செய்தியும் வாய்வழிச் செய்தியும் இணைந்து செல்கின்றன. 

இருதொழிலுக்கும் என்ன தொடர்பு என்று ஆழ்ந்து நோக்கும் போது பல உண்மைகள் தெரிய வந்தன. மீன் பிடிப்பதற்கு வலை பின்ன வேண்டும். மீனின் அளவுக்கு ஏற்ப வலை மாறுபடும், தொலை தூரம் சென்று ஆழ் கடலில் மீன் பிடிக்க வலுவான வலை தேவை.  இப்படி பலதரப்பட்ட வலைகள் பின்னுதல் அவசியம். வலை மட்டுமா? படகுகளில் கப்பல்களில் கடலில் நெடுந்தூரம் செல்கையில்,  கப்பல்களை  காற்றோட்டத்தின்  திசைக்கேற்ப   செலுத்துவதற்காகப் பெரிய திரைச் சீலைகள் கொண்ட பாய்மரங்கள் அமைக்கப்படும். நமக்குச் சட்டென்று நினைவுக்கு வருவது எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' என்னும் பாட்டு.  அதில் பெரிய பெரிய திரைச் சீலைகள் கொண்ட பாய்மரங்களைப் பார்த்துள்ளோம். இவை பருத்தி நூலால் செய்யப் பட்டவையே. அவற்றை விரித்துப் பிடிப்பதற்காகக் கோல் வைக்க வேண்டும் எந்த இடத்தில் எப்படிக் கோல் வைத்தால் எந்தக் கோணத்தில் சரியாக இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக அறிந்திருந்த பரதவர் அந்தக் கோலை வைப்பார்கள். 

அவர்கள் இந்த திரைச்சீலைகளுக்குச் சாயம் முக்கி எடுப்பார்கள். அவ்வாறே  நூல் பிரித்தல், இழைகளைச் செம்மைப் படுத்துதல், பின்னுதல், சாயம் ஏற்றுதல் போன்ற இவர்களின் பணிகள் அனைத்தும் நெசவுக்கும் பொருந்தும். அங்கேயும் நூலை இழை இழையாக எடுத்து சிக்குகளை அகற்றவும் அதன்பின் தறியில் கோல்கள் வைத்து நூலை விரித்து, அதன் பின்னரே நூலைத் துணியாக நெய்து நமக்குக் கொடுப்பார்கள்.  தொழிலில் இத்தனை ஒற்றுமைகள் இருப்பதால் துணி நெய்வதற்கு பரதவர்கள் ஆடை நெய்வதில் வல்லவர்களாக மாறினர் போலும்.   தொழிலின் அடிப்படையில் இருக்கும் இத்தகைய ஒற்றுமையும் அனுபவமே துணி நெய்தலில் பயன்பட்டது.  துணி நெய்தலில்  இவ்வளவு திறமையும் அனுபவம் கொண்டவர்கள் பரதவர்கள். இதனால் தான் மன்னனுக்கும் கடவுளுக்கும் துணி நெய்யும் தகுதி பெற்றவர்களாக கருதப்பட்டு இருக்கிறார்கள். கோயில் பணியில் அமர்த்தப்பட்டும்  இருக்கிறார்கள். 

இன்றைய புதுச்சேரியில் இருக்கும் திருபுவனை பெருமாள் கோயில் கல்வெட்டு ஒரு தகவல் சொல்கிறது. சில பரதவர்களை இக்கோயிலுக்கும் அந்தணர்களுக்கும் ஆடை நெய்ய மன்னன் அனுப்பி வைக்கிறார். அவர்களிடத்தில் தன்னுடைய கட்டளையை ஓர் ஓலை மூலம் கொடுத்தார். அந்த ஓலை கொண்டு வருபவர் அந்த ஊரின் தலைமையிடம் கொண்டு சேர்க்க, தலைமை தன்னுடைய அங்கத்தினர் ஒப்புதலுடன் பணியும் சன்மானமும் தருவது அன்றைய நடைமுறை, *கல்வெட்டு இந்த செய்தி தான் சொல்கிறது. ஆனால் அதில் ஒரு வார்த்தை வருகிறது, இந்த பரதவர்களை இரு சாதியினரின் கலப்பு என்று பொருள்படும்படி வடசொல் ஆன "ஆயோகவர்" என்ற சொல் வருகிறது. அப்படிக் குறிப்பிட ஒரு காரணம் இருந்தது.  

நமது மண்ணில் நிலத்தின் அடிப்படையில் இயற்கையின் அடிப்படையில் அறிவியலின் அடிப்படையில் ஐந்து வகையான பிரிவுகள் இயங்கி வந்த அதே காலகட்டத்தில்,  வடக்கில் வேறு ஒரு பழக்கம் இருந்தது.   சாதிய முறை அல்லது சனாதன தர்மம் அங்கு நிலவியது.   மனிதர்களைப் பிறப்பால் உயர்வு தாழ்வு என அடையாளப் படுத்துவதுடன் அவர்களுக்கான  உணவு, உடை, வீடு, வாழ்விடம், தொழில் இவை அனைத்தையும்  சாதியின் அடிப்படையிலேயே அமைத்திருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதியைச் சேர்ந்தவர்களை மணம் முடிக்க வேண்டும். ஆனால் சட்டம் எப்படி இருந்தாலும் அன்றைய நடைமுறை வேறுவிதமாக இருந்திருக்கிறது. அது கிட்டத்தட்ட கிபி இரண்டாம் நூற்றாண்டிலேயே ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளாத அவர்களின் எண்ணிக்கை அவர்களுடைய குழந்தைகளின் எண்ணிக்கை ஒரு கணிசமான தொகையை எட்டியது. 

அது வரையிலும் வேறு சாதியுடன் திருமணம் செய்து கொண்டவர்கள் சாதியை விட்டு நீக்கி வைக்கப்பட்டு அவர்களுக்குச்  சாதியும்  மறுக்கப்பட்டது. ஒரு கணிசமான மக்கள் தொகை சாதிக்கு வெளியே இருக்கிறது என்பதை உணர்ந்தார்கள் போலும், பின்னர் அவர்களுக்கும் ஒரு சாதியின் பெயர் கொடுத்து ஒரு தொழிலைக் கொடுத்துச் சாதி அமைப்புக்குள் சேர்த்துக் கொண்டார்கள். அதன்படி கணவன் உயர்ந்த சாதியாகவும் மனைவி தாழ்ந்த சாதியாகவும் இருந்தால் அவர்களின் குழந்தைகள் அனுலோமா என்றும்; ஆண்மகன் தாழ்ந்த சாதியாகவும் பெண் உயர்ந்த சாதியாகவும் இருப்பின் அவர்களின் குழந்தைகள் பிரதிலோமா என்றும் அழைக்கப் பட்டனர். அனுலோமா உயர்ந்தவர் பிரதிலோமா தாழ்ந்தவர் என்று கருதப்பட்டார்கள், அவர்களுக்கு சில தொழில்களையும் சொன்னார்கள். அனுலோமாவினருக்கு கோயிலைச் சார்ந்த பணிகள் இருந்தன. அப்படிப்பட்ட அனுலோமா பிரதிலோமாவை குறிப்பதுதான் இந்த ஆயோகவர் என்னும் சொல்.   

பரதவர்கள் எப்போது வேற்று சாதியுடன் மணம் புரிந்தார்கள்? அவர்களை ஏன் ஆயோகவர் என்று கல்வெட்டு குறிக்கிறது? இதுதானே நமக்குள் எழும் அடுத்த கேள்வி,  அதற்கும் ஒரு விடை உண்டு. வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவர்கள்  கோயிலையும் கோயில் கலாச்சாரத்தையும் உண்டாக்கினர். மன்னர்களும் அவர்களுக்கான நிலம், தொழில் வல்லுநர்கள், நீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தார்கள். அப்படித் தான் திறமை பெற்ற நெசவாளிகளான பரதவர்  மன்னரால் அனுப்பப் பட்டனர். ஆனால் வடக்கரின் பார்வையில் சாதி குறுக்கே நின்றது போலும், எனவே அந்த பரதவர்களை ஆயோகவர் என்று ஒரு சாதியின் பெயர் சூட்டி அவர்களை உயரிய சாதி என்று தங்களது மனதிற்கு ஒரு சமாதானத்தைச் சொல்லிக் கொண்டு துணி நெய்யும் அனுமதியும், ஊருக்குள் வாழும் தகுதியும் கொடுக்கிறார்கள். 

ராஜராஜசோழனின் காலத்திலும் ஊருக்குள் வாழும் ஒரு முக்கியமான கலைஞன் என்றால் அவர் நெய்தல் தொழிலாளியே, அன்று முதல் கோயில் பணியில் ஈடுபட்ட பரதவர்கள் ஆயோகவர் ஆகிப் போனார்கள். சில தலைமுறைகளுக்குப் பின் அதே பரதவர் வம்சாவளியினர் கோயில்களுக்கு தான தர்மங்களை வழங்கியதைக் கல்வெட்டுகள் சொல்கின்றன. பிற்காலச் சோழர்களின் இறுதிக்காலத்திலும் பின்னர் வந்த விஜயநகர மன்னர்கள் காலத்திலும் இந்த பரதவர்கள் கோயில் நிர்வாகத்தில் பங்கு பெறத் தொடங்கியிருந்தார்கள்.

இதில் வரும் அடிப்படை அடிநாதம் என்னவெனில் சாதி இல்லாது வாழ்ந்த மக்களின் மீது தங்களின் தேவைக்கு ஏற்ப சாதிப் பெயர்கள் ஏற்றப்பட்டன. சாதி, மனிதன் தோன்றிய போதே பிறந்துவிட்ட ஒன்றல்ல. சாதியை மறுத்தால் மடிந்து போக அது நமது இதயத் துடிப்போ, மூச்சுக் காற்றோ அல்ல எனும் வரலாற்றுப் புரிதலோடு,  தீர்க்கமான மனிதராக முன்னோர்கள் சொல்லிச் சென்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் உயரிய கருத்தை நம் மனதில் பதியவைத்து வாழ்வோமானால் எதிர்காலம் ஒளிரும். 


* Tribhuvani varadaraja Perumal temple (Naduvil Viranarayana Vinnagar) - The inscription, of the 9th year (of Vikrama Chola), records a gift of land for weavers of the anuloma class, who enjoyed the privilege of weaving and supplying clothes to temples and kings (ARE 208 of 1919).














- முனைவர். எஸ். சாந்தினிபீ, பேராசிரியர், வரலாற்றுத் துறை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
அலிகர், உத்திரப் பிரதேசம்.

நன்றி:  கடற்கரை;   ஜன-பிப் 2022 இதழ் 






1 comment:

  1. மிகச்சிறப்பான கட்டுரை.. வாழ்த்துக்கள் பேராசிரியர்.. 🙏🙏💐💐💐👌🏻

    ReplyDelete