Thursday, February 3, 2022

அறம் என்றால் என்ன?


- சொல்லாக்கியன் 


மனித வாழ்வின் பயன் யாது? காம இன்பம் துய்ப்பதும், குழந்தை பெறுவதும், செல்வம் சேர்ப்பதும் என்றால், அதாவது இன்பமும் பொருளும் என்றால், மனிதரில் பலரும் வாழ்வின் பயனை அடைந்து விட்டனர் என்றே சொல்லலாம். இவை எல்லாவற்றையும் பெற்றப் பின்பும், மனம் எதையோ வேண்டி நிற்கின்றதே, அது எது? அறம். அது விளைவிக்கும் அமைதியும் ஆனந்தமும்தான் வாழ்வின் பண்பும் பயனுமாகின்றது.

திருவள்ளுவர் காலத்தில், களப்பிரர் காலத்தில், பௌத்தமும், சமணமும் மேலோங்கி இருந்திருக்க வேண்டும். துறவு வாழ்வும் மிகுந்திருக்க வேண்டும். பெரும்பாலான அத்துறவிகளும், தங்களின் மிக அடிப்படையான தேவைகளுக்கு, சமூக உழைப்பாளர்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்திருக்கும். துறவிகள் மிகுந்து, உழைப்பாளர் குறைந்ததால், சமூகத்தின் சமநிலை கெட்டிருக்கும். சமூக சமநிலையை மீட்க, எக்காலமும் நிலைக்க, ஒரு புதிய புரட்சிகரமான கருத்தொன்றை முன்வைக்கின்றார், திருவள்ளுவர். அதுதான், இல்லறம். 

சமூகத்தில், கணவன், மனைவி, பிள்ளை என குடும்பமாய் வாழ்ந்தும், உற்றார், உறவினர், நட்பு, விருந்தினர், சான்றோர் ஆகியோருடன் இனிமையாய் பழகியும் உதவியும், புலன்களை ஒழுங்குபடுத்தியும், மனத்தை தூய்மைப்படுத்தியும், உயிர்மையை உணரலாம், இறைமையை அடையலாம், பிறப்பும் அறுக்கலாம்.

அறவழியில் பொருள் ஈட்டி, பொருள் கொண்டு இன்பம் துய்த்து, இன்பத்தாலேயே வீடு எய்தும் நுணுக்கம்தான், திருக்குறள் காட்டும் இல்லறம். மேலும், இளவயதில், துறவு பூணுதல் கடினம். குடும்ப வாழ்க்கைக்கு ஏங்க நேரலாம். தவறான, அறமற்ற வழிகளில் போக நேரலாம். ஆனால், அறவழியில் வாழ்ந்து, அனுபவித்து, பின் முதுமையில் துறவு போதல் எளிது. எனவேதான், அறத்துப்பாலில், இல்லறத்தை அடுத்து, துறவறத்தை இயலாக்கினார். 




'அறம்' என்பதற்கான வரையறையும், இலக்கணமும், சான்றும் இறைமை என்பதால், அறத்துப்பாலில், 'கடவுள் வாழ்த்'தை முதல் அதிகாரமாய், திருவள்ளுவர் அமைத்துள்ளார். பிரபஞ்சக் கடலே, அருமை மற்றும் பொருண்மை என இறைமைக்குள் இரண்டாய் இருக்கும்போதும், அவன் அருமையான உயிர்மையாய் நிலைக்கின்றான். மனிதரின் உயிர்மை, இறைமையுடன் ஒன்றாமல், இல்லற வாழ்விலோ, துறவு வாழ்விலோ, பிறப்பறுக்க முடியாது.

'அன்பே' எளிமையாக இறைமையை அடையும் குணம். துறவு வாழ்வில், அன்புக்கு, இயல்பான இடமில்லை. குடும்ப வாழ்வில், அன்பு செலுத்துவது இயல்பானது, எளியது, இனியது. அன்பால் இறைமையுடன் ஒன்றலாம். எல்லா இடத்தும், எல்லாரிடத்தும், எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்துவது, இறைமையாகும். துறவறத்தாலாவது, இல்லறத்தாலாவது, இறைமையுடன் ஒன்றியவர் பிறப்பறுப்பர். ஒன்றாதவர், ஊழ்வினைக்கேற்ப மீண்டும் பிறப்பெடுப்பர்.

அறத்துப்பாலில், கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக, வான் சிறப்பை அமைக்கிறார், திருக்குறளார். இறைமையின்றி எப்படி இவ்வுலகம் இல்லையோ, அதே போன்று, நீரின்றி உயிர் தோன்றுவதோ, மனித இனம் நிலைப்பதோ இல்லை என்பதால், இச்சிறப்பு. இறைமையை உணர்வதற்கு, மனித முயற்சியோடு, இறைவனின் அருள் தேவை என்பதுபோல், இயல்பாக, இயற்கையாக உணவு போதாதபோது, உணவை உற்பத்தி செய்யும் உழவு முயற்சிக்கும், மழையின் அருள் தேவை.

மழையின்றி, இறைவழிபாடும், உதவியும், ஓகமும், தியானமும், ஒழுக்கமும் சமூகத்தில் நிகழாது, நிலைக்காது. மழையின், நீரின் முக்கியத்துவத்தைக் கூறுவதன் மூலம், மழை பெய்ய வேண்டி மரங்களைக் காப்பதையும், வளர்ப்பதையும், பெய்த நீர் வீணாகாமல் சேமிக்க வேண்டியும், உழவுக்கும், குடிப்பதற்கும் பகிர்ந்தளிக்க வேண்டியும், பூமிப்பந்து மிகுந்த வெப்பமாகாமல் தடுக்க வேண்டியும், சமூக செயல்பாடுகளும், ஒழுங்கும் நிலைக்க வேண்டியும் நாம் செயலாற்ற அறிவுறுத்துகிறார், வள்ளுவப் பெருந்தகை.

குடும்ப வாழ்வு தன்னிலையை முன்னிலைப்படுத்துகின்றது. துறவு வாழ்வோ, சமூகநிலையை முன்வைக்கின்றது. ஆனாலும், குடும்ப வாழ்வில் கிடைக்கும் மனைவி, பிள்ளை, நட்பு, உறவால் ஏற்படும் சுகங்கள், துறவு வாழ்வில் கிடைப்பதில்லை. குடும்ப வாழ்வே, இயல்பான தெரிவு. எனவே தான், இல்லறவியல், துறவறவியலுக்கு முன்னதாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு, தன்சுகத்தை தியாகம் செய்யும் துறவறமும் தேவைப்படுகின்றது. இல்லறமா? துறவறமா?, இது ஒரு மனச்சிக்கல். முதலில் இல்லறம், பின்பு துறவறம் என, இச்சிக்கல் தீர்க்கப்படுகின்றது. இரண்டிற்கும் இலக்கு, உயிர்மையை உணர்ந்து, இறைமையில் ஒன்றி, பிறப்பறுத்தல் என்பதும், முடிவற்ற அமைதியிலும், நிபந்தனையற்ற ஆனந்தத்திலும் திளைப்பதும்தான். நடைமுறையில், குடும்ப வாழ்வும், சமூக வாழ்வும் பிணைந்த வாழ்க்கை முறைகளும் உள்ளன.

முதுமையில் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல், உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றும் 'அறம்' என்பதை இன்றிலிருந்தே செய்க. அம்முயற்சியும் பயிற்சியும், இறைமையுடன் ஒன்றும்போது, ஐயம் நீக்கும் பொலிவான துணையாகும். இறைமையுடன் ஒன்றும் போது அகத்தில் இருந்து இன்பம் வருகின்றது, பிறப்பும் அழிகின்றது. மற்ற இன்பங்கள் அனைத்தும் புறத்தில் இருந்து வருபவை, அவை பிறப்பை அறுக்காது. ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம், புலன்களை அடக்கி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றும் அறம்தான். இயல்கின்ற இளமைக் காலத்தில் செய்யாமல், முதுமையில் செய்ய முடியாமல் போனால், அவர் மீதமுள்ள வாழ்நாள் எல்லாம், பழிதான் மிஞ்சும்.

குடும்ப வாழ்வின் மூலமே எவ்வாறு சிறிது சிறிதாக புலனடக்கி, மனத்தைத் திருத்தி, செயலைக் கட்டுப்படுத்தி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றலாம் என்று, ஒரு புரட்சிகரமான ஒருங்கிணைந்த மாற்று வாழ்வியலை வடிவமைத்துத் தந்திருக்கிறார், எம்மான். துறவறத்தால் கிடைக்கும் பலன்கள் எல்லாம், இல்லறத்தில் எவ்வப்பொழுதெல்லாம் இன்பநலன்களாய் கிட்டுகின்றது என்று, ஒப்பீட்டு ஆய்வினை இல்லறவியல் நெடுக நிகழ்த்துகிறார்.

தன்னலமாக இல்லாமல், பசித்தவர்க்கும், வறியவர்க்கும், துறவிகளுக்கும், முதியவர்களுக்கும் உதவி, குடும்ப வாழ்வை மேற்கொள்பவரின் பிறப்பும் அறும் என்கிறார், வள்ளுவர். மனைவியிடமும், பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும், விருந்தினரிடமும், பிற உயிர்களிடமும் அன்பாய்ப் பழகினாலேயே, புலனடக்கத்தின் விளைவான, உயிர்மையை உணர்தலும், இறைமையுடன் ஒன்றுதலும் நிகழும். இயல்பாக, கட்டாயமின்றி, அன்பான குடும்ப வாழ்க்கை வாழ்பவன், துறவிகளைக் காட்டிலும் சிறந்தவன். குடும்ப வாழ்வே அறம் என்கிறார், குறளடியார். துறவிகள், தம் பிறப்பறுக்க வேண்டும் எனும் தன்னலத்தவர். ஆனால், குடும்பனோ, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், உறவினர்கள், விருந்தினர், பிற உயிர்கள் என அனைவருக்காகவும், தன்னலனை குறைத்து வாழ்கின்றான். பயனடைந்தவர்கள் யாவரும், அவனை தெய்வமாகவே மதித்து வணங்குவர்.

ஐம்பூதங்களை அடக்கி ஆட்டுவிக்கும் திறன், துறவிக்கு மட்டும் கிட்டுவதல்ல. அன்பான வாழ்க்கை நடத்தும் கணவனை மட்டும் வணங்கும் பெண்ணாலும் மழையை நினைத்த நேரத்தில் வரவழைக்கக் கூடிய திறனைப் பெற முடியும். முழுமையாக ஒன்றும் தன்மை, பலவற்றை ஆளும் திறனை அளிக்கின்றது. நல்ல மனைவியைப் பெறுவதே அறம். 

அறிவறிந்த பிள்ளைகளை, குடும்ப வாழ்வில் பெற்றால், அது, உலக வாழ்வில் பெறும் எல்லா சுகங்களிலும், பெருமைகளிலும் சிறந்ததாகும். அப்பெருமையே, மனதை, நன்றியுடன் இறையுடன் ஒன்ற வைத்து, பிறப்பறச் செய்யும். பண்புடைய பிள்ளைகளைப் பெற்றால், பிறப்பு எடுக்க வேண்டியதாயின், அப்பெற்றோர்களுக்கு தீங்கு நேராது. தம் குழந்தை சிறிய கைகொண்டு அடித்துக் கலக்கிக் குழப்பித் தெறிக்கும் கூழ், அமிழ்தத்தினும் இனிதாம். குழந்தையின் கூழ் ஒழுகும் கையை பெற்றோர் சுவைத்து எடுக்கையில் ஏற்படும் ஆனந்தம், இறைமையுடன் ஒன்றுவதற்கு ஈடானது. தம் பிள்ளைகளின் மேனியை மெல்ல தொடுதலும், அவர்களுடைய அன்பான சொற்களைக் கேட்டு இன்புறுதல், மெய்யுணர்வை அடைவது போன்றது, மந்திரத்தால் விளையும் தெளிவைப் போன்றது. கல்வியும், செல்வமும் ஊழின் விளைவுகள் என்பதால், தம்மைக் காட்டிலும் தம் மக்கள் அறிவு கொண்டு இருந்தால், மேலும் நன்மையுற, நல்வினையே புரிவர். உலக மக்களும் அவ்வாறே செய்ய முனைவர். தன் மகனைச் சான்றோன் என கேட்கும் போது, பிள்ளை பெற்ற போது கிடைத்த இன்பத்தைக் காட்டிலும் மிகுதியான ஆனந்தத்தை அடைவாளாம், தாய். நன்மக்களே அறம்.

மனைவியும், கணவன் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகள் மட்டும், குடும்ப வாழ்வில் இன்பம் அளிப்பதில்லை. குடும்ப நண்பர்களும் அன்பாலும், பழகும் ஆர்வத்தாலும் இன்பம் சேர்க்கின்றனர். இத்தகைய உலக இன்பம், ஓக தியானத்தில், இறைமையுடன் ஒன்றி விளையும் ஆனந்தத்திற்கு ஒப்பானது. அறமே முழுமைபெற அன்பைச் சார்ந்திருக்கின்றது. அறத்தை அறியாத மறவர்க்கும் அன்பே காரணமாகின்றது. அன்பில்லாமை, பிறப்பை மீண்டும் உண்டாக்கும். இல்லற வாழ்வு, அன்பில்லாமல், மிகுந்த வலிமையான உடல் உறவினால் கிட்டும் இன்பத்தால் மட்டும், நிறைவுறாது. அன்பு என்பது உயிரின் இயல்பு. அன்பு இல்லாதவர், வெறும் எலும்பும் சதையும் தோலால் போர்த்தப்பட்ட பிணமாவர். அன்பே அறம். முகமலர்ச்சியுடன் விருந்தோம்புபவன் இல்லத்தில், செல்வம் மனமுவந்து தங்கும். விருந்தினரின் தேவையறிந்து செய்யும் விருந்தோம்பல், வேள்விக்கும் ஓக தியானத்திற்கும் ஒப்பானது. விருந்தோம்பல் அறம்.

இல்லற வாழ்வில் இருந்து, அன்புடன் கூறிய இனிமையான சொல், துறவு வாழ்க்கையில், இறைமையுடன் ஒன்றியவரின் அருள் மிகுந்த சொல்லுக்கு, இணையானது. முகத்தில் அமைதி நிலவ, இனிமையாக பார்த்து, மனம் நிறைந்த இனிமையான சொல்லைக் கூறுதலே அறம். 

இங்கே, துறவறத்தில் உள்ள புலனடக்கம், மனவடக்கம், செயலடக்கம் ஆகிய யாவற்றையும் ஒருங்கே காணலாம். எல்லார் இடத்தும் இனிமையான சொல்லைக் கூறினால், பிறப்பறும். நல்லதையே நினைத்து, இனிமையாக கூறினால், ஏற்கனவே சேர்ந்துவிட்ட தேவையற்ற குணங்களும் குறையும், அறத்தின் பயனும் விளையும்.

அறம் எனும் சொல் ஒற்றைப் பொருளைக் குறிப்பது அல்ல. அது பலபொருள் குறிக்கும் ஒரு சொல். இம்மையில் இடையறா இன்பமும் மறுமையில் பிறப்பறுதலும் எய்த வைக்கும், இறைமையில் ஒன்றுதலும், உயிர்மையை உணர்தலும், மனம் அடங்கலும், புலன் அடங்கலும், செயல் இல்லாமையும், இவற்றை அடைய துணைபுரியும் நல்ல மனைவி, நன்மக்கள், அன்புடைமை, விருந்தோம்பல், இனியது கூறல், அடக்கம், ஒழுக்கம், பொறுமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் உண்ணாமை, வாய்மை, தவம், துறவு, மெய்யுணர்தல் ஆகிய ஊழால் விளைந்த பண்புகள், செயல்பாடுகள், இலக்குகள், வீடு அடைதல் யாவுமே அறம்.

இறுதிச்சொல்லாக, எப்பண்பு, எச்செயல் எல்லாம், புலனடங்கி, மனமடங்கி, உயிர்மையை உணர்ந்து, இறைமையுடன் ஒன்றி, இன்பம் எய்தி, பிறப்பறுக்கின்றதோ அவை யாவும் அறமே!!


நன்றி: குறள் நெறி - பிப்ரவரி இதழ்

-------------








No comments:

Post a Comment