Sunday, February 20, 2022

சாதி எதிர்ப்பும் கிறித்தவமும்!!

 -- முனைவர் த. ஜான்சி பால்ராஜ்


சாதி, சமயச் சடங்குகள், மரபுசார் நம்பிக்கைகள், பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில்  மக்களின் மூளைக்கு விலங்கிட்டு சமூகத்தில் ஆங்காங்கே ஒருசிலர் தங்களை மேல்மட்டத்தினராகக்  காண்பிக்கும் ஒரே நோக்கத்தில் அடுத்தடுத்த அடிமைமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே தங்களின் வசதியான வாழ்கையைத் தக்கவைத்துக் கொண்டிருந்த சமூகத் தீமை இன்றுவரையிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையின் ஆரம்பக் காலகட்டம் மிகக் கொடூரமானதாக இருந்திருப்பதை வரலாற்றுப் பின்புலங்கள் சுட்டி நிற்கின்றன. அறியாமைகளின் அளவைப்பொறுத்தே ஒரு நாடு அல்லது சமூகம் அயலார்களின் கொடுக்குப் பிடிக்கு இலக்காகும் தன்மையை தெளிவாக வெளிப்படுத்தும்.  இயற்கை வளமும் சிறந்த கலாச்சார மரபுகளையும் தாங்கி நின்ற நமது நாடும் அதன் சிறப்புகளை மக்கள் மற(றை)க்கும் அளவுக்கு அறியாமை திரைகளுக்குள் மூழ்கிக்கிடந்தது. 

பல இனத்தவரும் மதத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்த கூட்டுச் சமூகத்தில் சொந்த நாட்டினரே ஒருவரையொருவர் சாதி சமய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த அடிமைத் தனங்களைப் போட்டிப்போட்டுத் திட்டமிட்ட ஆதிக்கத்தைச் செலுத்திவந்தனர்....!  வேடிக்கையான இந்நிலையை நமது நாட்டிற்கு நாடு கண்டு போகவந்தோர் பலரும் வியந்துரைத்துப் போயிருக்கின்றனர். இதுவே ஐரோப்பியர்களின் இந்தியக் காலனியாதிக்கத்திற்கும் அடிகோலியது என்பர்...!

இந்தியக் கலாச்சாரத்தின் ஒருபகுதியான சாதியவெறி தங்களுக்குக் கீழிருந்த சாதியினரை ஆதிக்கம் செய்து மகிழ்வதிலேயே தன்நிறைவைப் பெற்றுக் கொண்டிருந்தன.  தங்களுக்கு மேல்நிலையிலிருந்தோருக்கு அடிபணிந்து போவதைப் பெருமையாகக் காண்பித்தும் தங்களுக்குக் கீழிருந்தோருக்கு அதைப் பாடமாக கற்பித்தும் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். இதன் நிறுத்தமற்ற, கண்செருகிப் போன, மிக மலிவான எண்ணத் தாக்குதல்களால் சமூகம் கூறுபட்டுக் கிடந்தது...!

இந்நிலையில் வாணிப நோக்கில் வந்த ஐரோப்பியர்களாலும்,  சமயப் போதனைகளையும் வழிபாட்டு முறைமைகளையும் மேற்கொள்ள வந்த பாதிரிமார்களாலும்  இந்தியர்களிடையே கிறித்தவம் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் வந்த கத்தோலிக்கப் பாதிரிமார்கள் பலரும் இங்கிருந்த மக்களின் சாதி சமய நிலைமைகளை முழுமையாக அறிய இயலாமல்  அவர்களிடமிருந்த சாதியத்தையும் சேர்த்தே கிறித்தவத்தில் சேர்த்தனர். அவரவர் சாதி முறைமைகளை விட்டு விட வேண்டியதில்லை, கிறிஸ்துவை ஏற்றால் போதும் என்ற விதத்திலேயே சுவிசேஷத்தை நற்செய்தியாக அறிவித்தனர். குறிப்பாக ராபர்ட்_டி_நொபிலி தன்னை இத்தாலிய பிராமணன் என்று சொல்லிக் கொண்டு உயர் சாதியினராக கருதப்பட்ட பிராமணர்களுக்கு கிறிஸ்துவை நற்செய்தியாக அறிவிக்க முயன்றார். அவரது நோக்கம் சமூகத்தின் உயர்மட்டத்தினரை ஏற்க செய்துவிட்டால் ஏனையோர்களும் எளிதில் 'போலச்செய்தல்' என்ற பின்பற்றும் இயல்பினால் எளிதில் ஏற்கச் செய்துவிடலாம் என்றிருப்பினும்,  மறைமுகமாக கிறித்தவம் உயர்சாதியினருக்கானது என்ற தவறான போக்கிற்கு அவரது செயல்பாடு வழிவகுத்து நின்றது.

கான்ஸ்டன்டைன் நோபிள் எனப்பட்ட வீரமாமுனிவரைத் தவிர மற்றவர் அனைவருமே தமிழகத்தின் சாதியக் கொள்கைகளை அதன் விஷமம் புரியாமல் அப்படியே ஏற்றிருக்கின்றனர்.  இதன் நீட்சியாகவே இந்தியாவில் சமத்துவத்தை உலகிற்குப்  போதித்த கிறித்தவ  தேவாலயங்களுக்குள்ளும் சாதிப்பாகுபாடு கடைபிடிக்கப்பட்டது. மிகக் குறைவான எண்ணிக்கைகளில் தான் அன்றைய உயர்ந்த சாதியினராக கருதப்பட்டோர் கிறித்தவத்தை ஏற்றிருந்தனர்.

அவர்களும் ஆலயத்திற்குள் மற்ற தாழ்த்தப்பட்ட சாதியினர்களோடு அமரவோ புனிதத் திருவிருந்தென்ற "ஐக்கியத்தில்" பங்குபெறவோ மாட்டோம் என்றதால்  அவர்களுக்கு ஒரு திசையிலும் மற்றவர்களுக்கு நேர் எதிர் திசையிலும் இடமளிக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றிருக்கின்றன...!   ஆரம்பக்கால தமிழகக் கிறித்தவத்தில் அனுமதிக்கப்பட்ட இப்பிழையான அனுசரிப்பால்  இன்றுவரை ஒரே ஊரில் சாதிக்கொரு சபையென்பது கிறித்தவக் கொள்கைகளுக்கு எதிரான தவறென்ற உணர்வின்றி மிக எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

இந்நிலை சுமார் இரு நூறாண்டுகள் தொடர்ந்து கிறித்தவத்தில் புரையோடிப் போய் சாதியத்தின் தாக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவ சமய எழுப்புதலினால் இந்தியாவிற்கு மிஷனெரிமார்களின் வருகை அதிகரித்தது. இவர்கள் புராட்டஸ்டண்ட் (Protestant) பிரிவு கிறித்தவத்தினர். இவர்களும் ஏற்கனவே இருந்துவந்த சாதியக் கொள்கைகளை ஏற்பது தான் சமயப்பணிக்குச் சாத்தியம் என்று கருதிச்  செயல்பட்டனர். இதற்கு விதிவிலக்காக ஒன்றிரண்டு மிஷனெரிகள் சாதிப் பாகுபாட்டினால் மக்கள் அடையும் இன்னல்களையும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் நீக்க முயற்சித்திருக்கின்றனர்.

திருநெல்வேலி அப்போஸ்தலன் - ரேனியஸ்:
அவர்களுள் 'திருநெல்வேலி அப்போஸ்தலன்' என்ற பெருமைக்குரிய சார்லஸ் தியாப்பிலஸ்  ஈவால்ட் ரேனியஸ் (Charles Theophilus Ewald Rhenius;  November 5, 1790 – June 5, 1838) என்பவர் முதன்மையானவர். ஜெர்மன் தேசத்தினரான இவர் கி.பி 1814 ஆம் ஆண்டு இந்தியா வந்து,  1820 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையைத் தலைமையிடமாக கொண்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஒரு சிறு பகுதியைக் கூட விடாமல் சுவிசேஷத்தை நற்செய்தியாய் அறிவிக்க அரும்பாடு பட்டார். இருப்பினும்,  அவரது பணிகளை ஆய்வு செய்தால் அவர் வெறுமனே கிறித்துவ  சமயப்பணிகளை மட்டுமே செய்யவில்லை, மக்கள் மீது உண்மையான அன்பும் கரிசனையும் கொண்டார், தமிழகத்தில் காணப்பட்ட சாதியம் சார்ந்த அடக்குமுறைகளையும் தீண்டாமை கொடுமைகளையும் கண்டு அவற்றைக் களைய முற்பட்டார் என்பது புலனாகும். குறிப்பாக, சாதிப்பாகுபாடற்ற தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டுமென கனவு கண்டார். எனவே முதலில் கல்விப்பணியைத் துவங்கிய அவர், அதில் எள்ளளவும் சாதிப்பாகுபாடுகள் இருந்துவிடக்  கூடாதென்பதில் மிகக் கவனமாக செயல்பட்டார். மாணக்கர்கள் தங்களுக்குள்  எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தினார். தாம் சமயப்பணி செய்த ஊர்களிலெல்லாம்  பள்ளிகளையும் ஏற்படுத்தினார்.


அதில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டி, தங்கும் விடுதியுடனான ஆசிரியப் பயிற்சிப் பள்ளியும் (செமினெரி) நடத்தினார். அவற்றில்  சாதி வேறுபாடு பாராட்டிய உயர்சாதி மாணாக்கர்கள் தங்களுக்கும் தாழ்ந்தசாதியின மாணாக்கர்களுக்கும் இடையே தடுப்புச் சுவர் அல்லது தட்டி மறைவு வைக்க வேண்டும் என்று ரேனியசோடு வாதிட்டனர். ஆனால் எவ்விதத்திலும் சாதி வேறுபாட்டை செமினெரியில் அனுமதிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார் ரேனியஸ். 'அவர்களது  பார்வையில் இல்லாமலாவது நாங்கள் இருந்து உணவு உண்கிறோம், இல்லையேல் எங்களை சாதியை விட்டே நீக்கிவிடுவர்'  என்று அவர்கள் கெஞ்சியும் அனுமதி தர மறுத்து சாதி வேறுபாட்டை அனுசரித்துத்தான் இதை நடத்தியாக வேண்டுமென்றால் இந்தச்  செமினெரியே வேண்டாமென்று அதை மூடிவிட்டார். 1818 ல் துவக்கப்பட்ட அச்செமினெரி அவரது இப்புரட்சிகரமான சிந்தனையால் 1821ல் மூடப்பட்டது. ஆனாலும் மிகவிரைவில் சாதிமதப் பேதமற்ற ஆசிரியப் பயிற்சிப் பள்ளியாக திறக்கப் படும் என்ற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. மீண்டும் அது 1822ஆம் ஆண்டு திறக்கப்பட்டு சாதிப் பாகுபாடற்ற பள்ளியாக நடைபெற்றது. அதில் ஒருபோதும் சாதி வேறுபாடு  கடைபிடிக்கப்படவில்லை.

கிறித்தவ மிஷனெரிமார்கள் இந்தியாவில் கல்விப் பணியையும் இன்னும் பிற சமூகப்பணிகளையும் அவர்களது சமயப்பணியின் வளர்ச்சிக்காகவே செய்து போயினர் என்ற வரலாற்றாசிரியர்கள் சிலரின் கூற்று ஏற்கத்தக்கதல்ல...!    இந்தியர்களிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இச்சாதியத்தை அயல்நாட்டினரான மிஷனெரி ரேனியஸ் தான் முதன் முதலில் எதிர்த்தவர் என்பது இந்திய சாதி எதிர்ப்பு வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது கண்டு கொள்ளப்படாத உண்மை.

தமிழகத்தில் ரேனியஸ் மேற்கொண்ட இதே சாதி எதிர்ப்பைக் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 1924 ஆம் ஆண்டு சமத்துவத்தை விரும்பிய சில அரசியல் தலைவர்களால்  திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவியில் ஏற்படுத்தப்பட்ட 'தமிழ் குரு குலத்திலும்' ரேனியஸ் செமினெரியில் நடந்த அதே சாதிப்பாகுபாடு காணப்படுவதை அறிந்து அதற்கு எதிராக நடந்த சர்ச்சைகள் ஏராளம். அந்தச் சமூக ஆரோக்கியத்திற்கு அடிகோலிய அப்போராட்டம் 'குருகுலப் போராட்டம்' (கி.பி1925) என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டு வியக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

மனிதச் சமூகத்தின் உள்ளார்ந்த வளர்ச்சிகளுக்கு முக்கியம் அளிக்கப்படாத வெற்று சமயப் பக்திகளும் அதுசார்ந்த செயல்பாடுகளும் என்றும் நிலைப்பதில்லை, மக்கள் மனத்திலும், இறைவனின் பார்வையிலும்..!! 
       
     

முனைவர் த.ஜான்சி பால்ராஜ்,  வரலாற்று ஆய்வாளர்

------

No comments:

Post a Comment