Friday, December 28, 2018

நடுவுல கொஞ்சம் "கடவுளை"காணோம்

—  ருத்ரா இ.பரமசிவன்


நீக்கமற நிறைந்திருக்கும்
கடவுள்
நடுவுல கொஞ்சம் காணவே இல்லையே!
எங்கே?
சபரிமலையில் தான்.

ஆண்பாதி பெண்பாதியாய்
அந்த அர்த்தநாரீஸ்வரன்
அங்கே அந்த படிகளில்
ஏறிக்கொண்டிருந்தான்.
அவன் போய்த் தான் அங்கே
தரிசனத்தைக் காட்ட வேண்டும்.

பக்தர்கள் அவனைத் தடுத்து
நிறுத்தினார்கள்.
"யாரடா நீ! நாடகக்காரனா?
அந்த பெண்வேடத்துக்கு வயது என்ன?
அம்பது வயது தாண்டினாத்தான்
இந்தப்படிகளைத் தாண்ட முடியும்.
பத்து வயதிலிருந்து அம்பது வயது வரை
உள்ள பெண்மைக்கு இங்கே
அனுமதியில்லை."

"ஏனுங்க?
அவன் அடக்கமாய்த்தான் கேட்டான்.

"இது ஐதிகமில்லையடா.
பிறவியை அறுக்கத்தடையாய்
இருப்பது இந்த பெண்மைத் தன்மையே.
அது மோட்சத்தைத் தடுக்கும்"
சமஸ்கிருத ஸ்லோகங்களைக்கொண்டு
அவன்
நீட்டி முழக்கிக்கொண்டிருந்தான்.
வந்தவனோ
அப்பாவித்தனமாய்க் கேட்டான்.
"அப்படின்னா
ஆண்கள் பிறப்பிக்கும் தன்மை
இற்று விட்டவர்களா?"

"என்ன கேள்வி கேட்டாய்?
மூல வித்துகளைப் பொழிபவன் அல்லவா
ஆண்?"

"வித்துவைத்திருப்பவருக்கு அனுமதி உண்டு.
விளைய வைப்பவருக்கு அனுமதி இல்லையா?
மோட்சத்தைத் தடுப்பதற்கே காரணமான‌
விதைகளுக்கு இந்த விளைநிலத்தை
தடுக்கும் உரிமை
எங்கிருந்து வந்தது?"

அது கேள்வி அல்ல.
நெற்றிக்கண் திறந்த தீப்பொறிகளின்
பிரளயம்.
அப்புறம் அங்கே எல்லாம்
புகை அடர்ந்த சூனியம்.
பிறகு
எல்லாமே வெறிச்சோடிவிட்டது.

எங்கும் நிறைந்த இறைமைக்கு
இடையில் ஒரு
ஒரு சூனியவெளியை
உண்டாக்கிய அந்த
ஐதிகத்துள் இருந்த ஆதிக்கம்
அரக்கனாய் நின்று அங்கே இடைமறித்தது.

அரக்கனை வதம் செய்ய‌
அவன் சூலாயுதத்தை தேடினான்.
எங்கே அது?
அவனுக்கு இன்னும் அது கிடைக்கவே இல்லை.
அவனைப்பற்றிய புராணத்துக்கு
நடுவுல 
கொஞ்சம் பக்கத்தைக்காணோம்.




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





சங்க இலக்கியத்தில் திதலை

—  முனைவர்.ப.பாண்டியராஜா


1. முதலில் திதலை என்றால் என்னவென்று பார்ப்போம்.

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் - அகம் 8-12

இதன் பொருள்:
வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டானது
இரையினைத் தேடித்திரியும் வெள்ளைக் கொக்குக்கு அஞ்சி, அருகிலிருக்கும்
தழைத்த பகன்றையினை உடைய கரிய சேறும் சகதியுமாய் இருக்கும் தரையில்
திதலையைப் போன்று வரிகள் உண்டாக ஓடி, விரைவாகச் சென்று, தன்
ஈரம் மிக்க மண் வளையுள் பதுங்கிக்கொள்ளும்.

இங்குள்ள ஒவ்வொரு சொல்லையும் உற்றுப்பார்க்கவேண்டும்.

நண்டுக்கு ஒரு பக்கத்துக்கு நான்கு என மொத்தம் எட்டுக்கால்கள் உண்டு. அவற்றைத் தவிர இரண்டு கவட்டைபாய்ந்த முன்னங்கைகளும் உண்டு. இவற்றின் நுனியில் கூரான நகங்கள் உண்டு. இந்த நண்டு, முன்னால், பின்னால், பக்கவாட்டில் என்று எத்திசையிலும் செல்லக்கூடியது. இது நடப்பதோ சேற்று அள்ளல், அதாவது குழைசேறு. வைத்தவுடன் கூரான நகங்கள் பொதக்கென்று ஆழ்ந்துவிடும். இது ஒரு இரைதேடும் கொக்கைக்கண்டு அஞ்சி ஓடுகிறது. எனவே வளைந்து வளைந்துசெல்லாமல் நேராக ஓடித் தன் வளைக்குள் புகுந்துவிடும். அப்போது அந்தக் கால்கள் ஏற்படுத்தும் தடத்தைக் கற்பனை செய்து பாருங்கள். நகங்கள் சேற்றில் ஆழும்போது அவை ஏற்படுத்தும் பலவான புள்ளிகள். அந்த நகங்களை விரைவாக எடுத்து முன்னே வைக்கும்போது ஏற்படும் சிறிய நேர்கோடுகள், அந்தப் புள்ளிகளை இணைத்தவாறு செல்லும். அதுவே திதலை.

இந்தப் படம் இதனை ஓரளவு விளக்கும்.



2. இத்தகைய புள்ளிகளாகிய வரி போன்ற அமைப்பு பெண்களின் மேனியில் அரும்புகின்றது என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே - நற் 198/6-8

இதன் பொருள்:
வரிகள் பொருந்திய உயர்ந்துநிற்கும் அல்குலில் அரும்பிய திதலையும்
நேராக விளங்கும் வெண்மையான பற்களும், அழகுள்ள மாலையும்,
ஒருசில வளையல்களும், நிறைந்த கூந்தலும் உடையவள் அவள்;
அரும்புதல் என்பது முகிழ்த்து உருவாதல்.


3. இந்தத் திதலை பெண்களின் மேனியில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று பார்ப்போம்.

3.1
பொன் உரை கடுக்கும் திதலையர் - திரு 145

என்கிறது திருமுருகாற்றுப்படை, இதற்குப் பொன்னை உரைத்துப்பார்க்குபோது ஏற்படும் தடம் போன்ற திதலையையுடையவர் என்பது பொருள்:

பொன்னை எவரும் நேர்கோட்டில்தான் உரைத்துப்பார்ப்பர். அந்த உரைகல் சொரசொரப்பானது. அதில் பொன்னைத் தேய்க்குப்போது புள்ளிகளாலாகிய ஒரு நேர்கோடு உருவாகும். மேலும் உண்மையான தங்கமாயிருந்தால் மினுமினுக்கும். எனவே மினுமினுப்புடன் கூடிய புள்ளிகளாலான கோடுகளின் அமைப்பே திதலை என்றாகிறது.



3.2
மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் - மது 706-708

என்கிறது மதுரைக்காஞ்சி. இதன் பொருள்:

மாமரத்தின்
தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையர்
வெற்றிலையை நீளவாக்கில் மடித்தால் வெளிப்புறத்தில் ஒரு நீண்ட காம்பு தெரியுமல்லவா! அதுதான் ஈர்க்கு. அதைப்போன்ற மாந்தளிரின் ஈர்க்கு போன்றதாம் இந்தத் திதலை. பொதுவாக மாந்தளிரின் நிறத்தைப் பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவர். அந்தத் தளிரின் ஈர்க்குப் போன்றதாம் பெண்களின் தளிர் மேனியில் தோன்றும் திதலை.
இந்த ஈர்க்கு, பொன்னிறத்தில் நீண்டு இருப்பதைப் படத்தில் பாருங்கள்.


3.3
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர - கலி 29/7,8

என்கிறது கலித்தொகை. இதற்கு, மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல, என்பது பொருள்:

அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க, மாநிற மகளிரின் மேனியில் திதலையானது, மாந்தளிரின் மேல் மாம்பூக்களின் மகரந்தப்பொடிகள் உதிர்ந்துகிடப்பது போன்று இருப்பதாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

எந்த மரத்தின் பூவாக இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும்.

இந்த மாந்தளிர்கள் தொங்கியபடி இருப்பதை மேலுள்ள படம் காண்பிக்கிறது. அதன் மீது உதிர்ந்த பூந்தாதுக்கள் சரிந்து துகள்களாலான ஒரு நேர்கோடாகப் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும் அல்லவா! அதுவே திதலை.


4. இந்தத் திதலை பெண்களின் மேனியில் எங்கெங்கு தோன்றுகின்றன என்பதையும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

4.1
திதலையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் காணப்படுகின்றன. அவற்றில் 15 இடங்களில் திதலை என்பது அல்குலில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன. அவற்றில் 13 இடங்களில் திதலை அல்குல் என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.

அவற்றில் சில....

திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/6
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27/5
திதலை அல்குல் நின் மகள் - ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2
திதலை அல்குல் எம் காதலி - அகம் 54/21

இங்கே அல்குல் என்பது பெண்குறி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அல்குல் என்பது இடுப்புக்குச் சற்றே கீழ் உள்ள பகுதி. அது இடுப்பைச் சுற்றி எந்த இடமாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் - தேவா-சம்:582/2
(பொருள்: அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே)

என்கிற சம்பந்தர் தேவாரத்தில் அல்குலில் கோவணம் அணிந்தவராக இறைவனை விளிக்கிறார் சம்பந்தர்.

இடுப்பில் கயிறுகட்டி, அதில் கோவணத்தைச் செருகி, முன்பக்க மானத்தை மறைத்துப் பின்பக்கமாக இழுத்துப் புட்டத்திற்கு மேலே செருகியிருப்பர். எனவே, அல்குல் என்பது அடிவயிறு, அல்லது அடிமுதுகு என்றாகிறது.

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2

என்ற அடி, அல்குலில் கூந்தல் கிடந்து அசையும் என்கிறது. குட்டையான கூந்தல் முதுகில் கிடந்து அசைவதைப் பற்றி யாரும் பாராட்டிப்பேசமாட்டார்கள். நீண்ட கூந்தல் முதுகுக்கும் கீழே தொங்கி, இடுப்புக்கும் கீழே எழுந்துநிற்கும் புட்டத்தின் மேல் பட்டு, நடக்கும்போது முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைவதே துயல்வருதல்.  இதைத்தான்

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் 198/6

என்கிறது நற்றிணை. எனவே அல்குல் பெரும்பாலும் பெண்களின் இடுப்புக்குக் கீழான பின்புறம் என்பதே சரி எனப்படுகிறது.

எனவே, மிகப்பெரும்பாலும் பெண்களின் அடிஇடுப்பைச் சுற்றி அல்குல் அரும்புவதாக அறிகிறோம்.

4.2
அடுத்து, திதலை என்பது பெண்களின் மார்புப்பகுதியிலும் காணப்படும் என்கின்றன இலக்கியங்கள்.

திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே - நற் 380/3,4

என்கிறது நற்றிணை. இதன் பொருள்:
தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;

புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை - அகம் 26/12,13

என்கிறது அகநானூறு. இதன் பொருள்:
புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்

என்ற அடிகளால், பிள்ளைபெற்ற பெண்களின் மார்புப்பகுதியில் திதலை அரும்புவதாக அறிகிறோம்.

திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே - திருவா:6 41/4

என்ற திருவாசக அடியும் இதனை உறுதிப்படுத்தும்.

4.3
அடுத்து, பெண்களின் வயிற்றுப்பகுதியிலும் திதலை அரும்புவதாக அறிகிறோம்.

புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி - அகம் 86/11,12

என்கிற அகநானூற்று அடிகளுக்கு,

மகனைப் பெற்ற திதலையையுடைய அழகிய வயிற்றினையுடைய
தூய அணிகலன்களையுடைய மகளிர் நால்வர் கூடிநின்று
என்று பொருள்.

வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் - அகம் 245/8,9
(பொருள்: வரி விளங்கும் பருத்த தோளினையும், வயிற்றில் அணிந்த திதலையையும் உடைய கள்விற்கும் மகளிர், இருக்கின்ற மனையகத்தில்)

என்ற அகநானூற்று அடிகள் இதற்குச் சான்று பகர்கின்றன. இந்த மகளிர் பிள்ளைபெற்று பலநாட்கள் ஆனவர்கள்.

பசலை பாய்ந்த திதலை தித்தி
அசைந்த அம் வயிறு அடைய தாழ்ந்த - உஞ்ஞை 43/128,129

திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி - உஞ்ஞை 44/25

என்ற பெருங்கதை அடிகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.


5. அடுத்து எவ்வகைப் பெண்களுக்கு இந்தத் திதலை அரும்பும் என்று காண்போம்.

5.1
முதலாவதாக, பேறுகாலத்துக்குச் சற்றுப்பிந்திய பெண்களுக்கு மார்பில் இந்தத் திதலை அரும்பும் என்று முன்னர்க் கண்டோம்.

5.2
அடுத்து, பிள்ளை பெற்றுச் சில ஆண்டுகளான பெண்களுக்கு வயிற்றில் இந்தத் திதலை அரும்பும் என்றும் முன்னர்க் கண்டோம்.

5.3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/5,6
(பொருள்: புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளையுடைய திதலையை உடைய அல்குலுடன் முதுபெண் ஆகி)

என்ற அடிகள் ஈன்று அண்மைத்தான பெண்களுக்கு அல்குலிலும் திதலை தோன்றும் என்று உணர்த்துகின்றன. இங்கு, அம் வரி திதலை என்ற சொற்கள், திதலை என்பது (பொன்னைத் தேய்த்த) அழகிய கோடு போன்றது என்று நாம் கண்டதை உறுதிசெய்கின்றது.

5.4
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு - நற் 6/4

திதலை அல்குல் குறு_மகள் - நற் 77/11

திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை - அகம் 189/9,10

என்ற அடிகளில் காணப்படும்  குறுமகள் என்பது இளம்பெண்ணைக் குறிக்கும். இவள் திருமணப்பருவத்து இளம்பெண்.

இவளது அல்குலிலும் திதலை தோன்றும் என அறிகிறோம்.


6. அடுத்து, இந்தத் திதலை என்பது மகளிரின் மேனிக்கு அழகுசேர்ப்பது என்றும், பாராட்டப்படுவது என்றும் இலக்கியங்கள் பகர்கின்றன.

கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே - நற் 84/1-3

இதன் பொருள்:
என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
திதலை படர்ந்த அல்குலையும் பலவாறு பாராட்டி
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக

கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் - நற் 307/3-5

இதன் பொருள்:
கடலாட்டுவிழா நடைபெறும் அகன்ற இடத்தில், பெருமைமிக்க அணிகளால் பொலிவுபெற்ற உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல் நிலத் தலைவன்!

காதல்கொண்ட தலைவர்களால், இந்தத் திதலை பாராட்டப்படுவது மட்டுமன்று. காதல்வயப்பட்டு, பிரிவுத்துன்பத்தால் வாடும் தலைவிகளும் பிரிவால் வாடும் தம் கவின்பெறு திதலையை எண்ணிப் பெருமூச்சு விடுவதும் உண்டு எனக் காண்கிறோம்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27

இதன் பொருள்:
கன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல்,
பசலைநோய் உண்பதை விரும்பும்
திதலை படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகினை.


7.  அடுத்து, திதலை என்பது ஆகுபெயராகவோ, ஒப்புப்பொருளாகவோ பெண்களின் மேனி சார்ந்ததாக இல்லாமலும் சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் வருவதைக் காண்கிறோம்.

திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி - நற் 190/3,4

புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய, தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி என்பது இதன் பொருள்.

பற்பல காரணங்களால், பெண்களின் மேனியில் காணப்படும் பொன்னிற மாற்றம்தான் திதலை என்றிருக்க, ஒரு வேலுக்கு எவ்வாறு திதலை அரும்பும்?

இங்கே, திதலை எஃகின் என்ற தொடரை, தீத்தலை எஃகின் என்று பாடம் கொள்வார் ஔவை துரைசாமியார். ஆனால்,

மிகப் பல ஆசிரியர்கள் திதலை எஃகின் என்றே பாடம் கொண்டு தேமல் படர்ந்த வேல் என்று பொருள் கொள்கின்றனர்.

சிலவகை இரும்புகளைத் தேய்க்கும்போது புள்ளிகளோடு கூடிய வரிகள் தோன்றலாம். ஆனால் அதனைப் புலவர் விதந்து குறிப்பிடுவது ஏன்? பகைவரைக் குத்தியதால் வேலில் பட்ட குருதி வழிந்த தடம் துடைக்கப்படாமல் காய்ந்துபோய், பொன் உரை போலத் தோன்றுவதால் அதனையும் திதலை எஃகு என்கிறார் புலவர் என்று ஓர் அருமையான விளக்கம் தருகிறார் புலியூர்க்கேசிகனார்.

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து
கொல் துறை குற்றில மாதோ என்றும்
உண்டு ஆயின் பதம் கொடுத்து
இல் ஆயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95

என்ற ஔவையின் பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா?

இதுகாறும் கண்டவற்றால், திதலை என்பது பெண்களின் மேனியில் சின்னஞ்சிறு பொன்னிறப் புள்ளிகளால் ஏற்பட்ட வரிவரியான அமைப்பு என்பது தெரிய வருகிறது.

இதனை,
 1. தேமல்., Yellow spots on the skin, considered beautiful in women;
 2. ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். Pale complexion of women after confinement;
என்கிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).




தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/



கஜா, நாத்திகப் புயலா அல்லது ஆத்திகப் புயலா.....

—  திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்


இந்த கஜா, நாத்திகப் புயலா அல்லது ஆத்திகப் புயலா.....
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிலுவைகள் சரிந்தன;
இயேசு கிறித்துவின் சிலை சிதிலமடைந்தது..
மசூதியின் மினார்கள் முறிந்து விழுந்தன;
அம்மன் ஆலயத்தில் ஆற்று வெள்ளம் புகுந்தது
இந்த கஜா புயல் ஒரு நாத்திகப் புயலோ.

இல்லை இல்லை,  இருக்காது
இது ஆத்திகப் புயல்தான்.
அதனால்தான் இத்தனை அழிவுகள்
ஆர்ப்பாட்டங்கள்
ஆலயங்களை இடிப்பது
நாத்திகர்கள் அல்லவே. 




தொடர்பு: திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)


“ஐ” எழுத்தை முதன் முதலாகக் கொண்ட திருநாதர் குன்று வட்டெழுத்துக் கல்வெட்டு

—    துரை.சுந்தரம்


திருச்சி பார்த்தி என்பவர் முகநூலில் ஓர் அருமையான கல்வெட்டுப்படத்தைப் பதிவு செய்திருந்தார்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள திருநாதர் குன்றில் பாறைக் கல்வெட்டு ஒன்றின் படம்.  வட்டெழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டு.  கல்வெட்டு அறிஞர்கள் பலரும் சிறப்பாகக் குறிப்பிடுகின்ற ஒரு கல்வெட்டு. தமிழ்த் தொல்லெழுத்தான ‘தமிழி”  எழுத்தின் வடிவத்திலிருந்து வளர்ந்த வட்டெழுத்தின் முதல் கட்ட எழுத்து.  ”தமிழி” எழுத்து முறையில் காணப்படாத ”ஐ”  எழுத்தை முதன் முதலாகக் கொண்ட ஒரு கல்வெட்டு. இக்கல்வெட்டின் படம் இதற்கு முன்னர் சில நூல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரடியாகக் கல்வெட்டு அமைந்திருக்கும் இடத்தில் எழுத்துகளின் மீது வெள்ளைப்பொடி பூசித் தெளிவாக எழுத்துகள் தெரியும் நிலையில் இந்தப் படம் மிக அருமையாக இருந்தது.  கல்வெட்டின் காலம் கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டு. 

மேலே குறித்தவாறு, முதன் முதலில் “ஐ”  எழுத்தின் வடிவத்தை இக்கல்வெட்டில் காணலாம். ஒரு சூலம் போன்ற வடிவில் அமைந்துள்ள எழுத்து. திருச்சி பார்த்தியின் கல்வெட்டுப்படம் கீழே: 

 திருநாதர் குன்று-வட்டெழுத்துக் கல்வெட்டு - முதல் எழுத்து “ஐ”

கல்வெட்டின் பாடம் :
1   ஐம்பத்தேழன 
2  சனந்நோற்ற 
3   சந்திர நந்தி ஆ
4   சிரிகரு நிசீதிகை

விளக்கம் :  
கல்வெட்டுப் பாடத்தைக் கீழ் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.

1   ஐம்பத்து ஏழு  அனசனம்  நோற்ற
2  சந்திர நந்தி ஆசிரிகரு
3   நிசீதிகை

திருநாதர் குன்றில் இயங்கிவந்த  சமணப்பள்ளியின் ஆசிரியருள் ஒருவரான சந்திர நந்தி என்னும் துறவியார் ஐம்பத்தேழு நாள்கள்  உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்னும் செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.  அனசனம் என்னும் சொல் உண்ணாதிருத்தலைக் குறித்தது. அசனம் என்னும் சமற்கிருதச் சொல் உண்ணுதலைக்குறிக்கும். அதன் எதிர்ப்பொருளைக் குறிக்க “அன்”  என்னும் முன்னொட்டு சேர்க்கப்படல் சமற்கிருத மொழி இலக்கண மரபு. எனவே, ‘அன்”+’அசனம்”  என்பது  “அனசனம்”  என்றாயிற்று. 

வட்டெழுத்து வளர்ச்சியுற்று இரண்டாம் கட்டத்தை அடையும்போது, ‘ஐ”  எழுத்தின் வடிவம் மாறவில்லை. மற்ற எழுத்துகள் பெரும் மாற்றத்தைக் கொண்டுள்ளன. மேற்படிக் கல்வெட்டு இரண்டாம் கட்ட எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டால் எவ்வாறிருக்கும் என்பதைக் கீழுள்ள  கல்வெட்டுப் படம் காட்டும்.

கி.பி. 8-9 -ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து வடிவம்


பின் குறிப்பு :
வட்டெழுத்தில் அமைந்துள்ள இக்கல்வெட்டைத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தமிழ் பிராமி எழுத்தில் எழுதியுள்ளதாகப் பிழையாகக் குறித்துள்ளது.  துறையினர் தகுந்த திருத்தத்தைச் செய்யவேண்டும்.  தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பதிவைக் கீழ்க்கண்ட சுட்டி வழி பார்க்கலாம். 

இப்பதிவைப் பார்த்துத்தானோ என்னவோ,  வேலுதரன் அவர்களும் தம் இணைய வலைப்பூவில் மேற்படிக் கல்வெட்டு பிராமியில் எழுதப்பட்டுள்ளது எனப் பிழையாகக் குறிப்பிடுகிறார்.  அவரது பதிவைக் கீழ்க்கண்ட சுட்டி வழி பார்க்கலாம்.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. 
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156. 






Thursday, December 27, 2018

இயற்கையின் இறைவழிபாடு

—  திருத்தம் பொன். சரவணன்


வெள்ளை வெண்முகிலே !
துள்ளும் மடமயிலே !!
கொள்ளை போனதுஎன்
உள்ளமுன் அழகினிலே !!!

வெண்ணெய் தின்றுவக்கும்
கண்ணன் துயிலிருக்கும்
பெண்மை தலைக்கொண்ட
மென்மை வெண்முகிலே !

கருமை நிறங்கொண்ட
திருமால் சேர்ந்தானோ?
வெண்மை நிறம்போய்நீ
கண்மை பூண்டதென்ன?

எறியும் மின்னொளியோ(டு)
அறையும் இடியெதற்காம்?
இறைவன் திருவடிக்கோர்
முறைசெய் வழிபாடோ?

கண்ணா போற்றியென
மண்ணோர் கைகூப்ப
அளிந்ததே அக்கார்மலை !!
பொழிந்ததே புதுப்பூமழை !!!




தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் உரை

—    துரை.சுந்தரம்

முன்னுரை:


அண்மையில் 16-12-2018 அன்று கோவையில் “களம்”  அமைப்பினர் நடத்திய, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தொல்லியல் அறிஞர் திரு. சுப்பராயலு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஐராவதம் மகாதேவன் அவர்களை நினைவுகூரும் வகையிலும், தொல்லியலைப் பற்றிய வரலாற்றுப் புரிதலை உணர்த்தும் வகையிலும் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதொன்று. ஆங்கிலேயர் காலம் தொட்டுப் பல்லாண்டுகள் தொல்லியல் ஆய்வுகள் மேன்மையுடன் திகழ்ந்த நிலை மாறி அண்மைக்காலத்தில் ஒரு வெறுமையை எட்டியுள்ள சூழ்நிலையில், தற்கால இளைய சமுதாயம் அவற்றை மீட்டெடுத்துப் புத்தாக்கம் தரவேண்டிய கடமையை வலியுறுத்தும் வண்ணம் உரை அமைந்திருந்தது. தொல்லியல் துறையிலும்,  மூத்த அறிஞர்கள் இல்லாத நிலை. துறை வெறுமையாகக் காணப்படுகிறது. கல்வெட்டு, வரலாறு, மொழியியல், இலக்கியம் ஆகிய பன்முனைகளும் இணைந்து ஆழமான ஆய்வுகள் நடைபெற்றால்தான் தமிழ் மொழியின் பழமை, தமிழர் நாகரிகத்தின் பழமை ஆகியவை நிலை நிறுத்தப்பெறும் என்பதான ஒரு கருத்தை சுப்பராயலு அவர்களின் உரை நமக்குச் சுட்டிக்காட்டியது. அவர் உரையின் கருத்துகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

சிறப்புரை ஆற்றிய திரு. சுப்பராயலு அவர்கள்

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்:
ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிராமி எழுத்துகளின் ஆய்வுக்காகவே அறியப்படுகின்ற அறிஞர். பிராமிக் கல்வெட்டுகள் அமைந்திருந்த எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று, கல்வெட்டுகளைத் தொட்டுத் தடவிப் பார்த்துப் படித்தவர். திருவாதவூர் பிராமிக் கல்வெட்டைப் படிக்கையில், கட்டிடங்களுக்குச் சாரம் அமைப்பதுபோல் சாரம் அமைத்து அதன் மேலமர்ந்து எழுத்துகளைப் படித்தவர். அவரது மறைவை ஒட்டி வெளியான பல ஒளிப்படங்களில் இந்தக் காட்சியைக் காட்டும் ஒளிப்படமும் வெளியானதை நாம் அறிவோம். குளித்தலை அருகே ஐயர் மலை (ஐவர் மலை அல்ல) மீது ஏறுவது மிகக் கடினம். அக் கடினத்தையும் தாங்கிக்கொண்டு கல்வெட்டைப் படித்தவர்.

சாரத்தில் ஏறித் திருவாதவூர் பிராமிக்கல்வெட்டு படித்தல்

சென்னையில் ஐராவதம் மகாதேவன்:
1964-ஆம் ஆண்டு. சுப்பராயலு அவர்கள் சென்னைப்பல்கலையில் ஆய்வு மாணவராய் இருந்த காலம். சென்னை அருங்காட்சியகத்தில் SOUTH INDIAN ARCHAELOGICAL SOCIETY என்னும் பெயரில் ஒரு கழகம் (ASSOCIATION) தோற்றுவிக்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நிகழ்த்தப்பெற்ற காலம். அக்கூட்டங்களுக்கு ஐராவதம் மகாதேவன் அவர்கள் வருகை தருவதுண்டு. அருங்காட்சியகத்தில் அப்போது தொல்லியல்-கல்வெட்டு அறிஞர் டி.வி. மகாலிங்கம் அவர்கள் பணியில் இருந்தார். (சுப்பராயலு அவர்களின் ஆசிரியர் இவர்). ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அப்போது கல்வெட்டுகளைப்பற்றித் தெரியாது. நாணயவியலில் (NUMISMATICS)  ஆர்வம் கொண்டிருந்தார். 1965-ஆம் ஆண்டு புகளூர் பிராமிக்கல்வெட்டை நேரில் சென்று பார்த்துப் படித்து ‘இந்து’ நாளிதழில் கட்டுரை வெளியிட்டார். கல்வெட்டு ஆராய்ச்சியில் அது அவரது முதல் படி. புகளூர்க் கல்வெட்டு, தொல்லியல் துறையினரால் முதலிலேயே பார்க்கப்பட்டிருந்தது; ஆனால், படிக்கப்பட்டு அதன் பாடம் வெளியாகவில்லை. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டுச் செய்தியை வெளியிட்டது அக்காலத்தே பெரிதும் பாராட்டப்பெற்ற நிகழ்வு. காரணம், புகளூர்க்கல்வெட்டில் சேர மன்னர்களின் வரிசை கூறப்படுகிறது.

தமிழ் நாடு தொல்லியல் துறை – நாகசாமி – ஐராவதம் மகாதேவன்:
1961-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கப்பட்டது, 1962-ஆம் ஆண்டு நாகசாமி அவர்கள் துறையின் தலைவரானார். தமிழ்க் கல்வெட்டியல் துறை நாகசாமி அவர்களால் பரவலாக்கப்பட்டது; “ஜனரஞ்சகம்” என்று அதைக் குறிப்பிடலாம். ஐராவதம் மகாதேவன் அவர்கள் நாகசாமி அவர்களுடன் இணைந்துகொண்டார்.  துறை வளரும்போது அவரும் வளர்ந்தார். அப்போது துறையில் இருந்தவர்களுக்குப் பிராமி எழுத்துப் படிக்கத்தெரியும்; ஆனால், கல்வெட்டுகளை நேரில் பார்க்கும் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், 1966-ஆம் ஆண்டில், ஐராவதம் மகாதேவன் அவர்கள் நாற்பது பிராமிக் கல்வெட்டுகளை நேரில் சென்று பார்த்து TRACING முறையில் படியெடுத்துக் கல்வெட்டுகளின் பாடங்களை CORPUS OF BRAMI INSCRIPTIONS என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.  பின்னர், 1968-ஆம் ஆண்டு அது SEMINAR  ஒன்றில் வெளியாகியது. அண்மையில், பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான நூலுக்காகத் தாம் பார்த்த இடங்களுக்கெல்லாம் மீண்டும் சென்று படித்தே எழுதினார். திருத்தமாக அமையவேண்டும் என்பதே நோக்கம்.

தொல்லியல் துறையும் கே.வி. சுப்பிரமணிய அய்யரும்:
இந்தியக் கல்வெட்டுத் துறை தொடங்கி (1890-இலிருந்து) நூற்று இருபது ஆண்டுகள் ஆயின. தென்னிந்தியா முழுமைக்குமான கல்வெட்டுத் துறை 1967 வரை ஊட்டியில் இயங்கிவந்தது. நாடு முழுமைக்குமான கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவை தமிழ்க் கல்வெட்டுகள். தென்னிந்தியக் கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழ்க்கல்வெட்டுகள். கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதி. படிக்கும் பணியில் இருந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, கல்வெட்டுகளைப் படித்தலிலும், பதிப்பித்தலிலும் தேக்க நிலை உருவானது. 1914-ஆம் ஆண்டில் படி எடுத்த கல்வெட்டுகள் பல 2014-ஆம் ஆண்டு சுப்பராயலு அவர்களால் பதிக்கப்பட்டன என்பதைக்கொண்டு இத்தேக்க நிலையைப் புரிந்து கொள்ளலாம். போக்குவரத்து எளிதாக இல்லாதிருந்த காலம் அது. மதுரையில், கே.வி. சுப்பிரமணிய அய்யர் மாட்டுவண்டியில் போய் கல்வெட்டுகளைப் படித்த வரலாறு உண்டு. பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்க அடிப்படை வகுத்தவர் கே.வி. சுப்பிரமணிய அய்யரே ஆவார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பொள்ளாச்சியில் (1990-96) பணியாற்றியபோது, கே.வி. சுப்பிரமணிய அய்யரின் மகனார் வைத்தியநாத அய்யர் கோவையில் இருந்தார். அவருடன் ஐராவதம் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் உதவியும் அவருக்குக் கிட்டியது. 2003-ஆம் ஆண்டு, பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய நூலைச் செம்மைப்படுத்தி மறு TRACING முறையில் படியெடுத்து முழு நூலைப் பதிப்பித்தார். பணியில் இவருக்கு உதவியவர்கள் தொல்லியல் துறையைச் சேர்ந்த சாந்தலிங்கம், வேதாசலம் ஆகியோர் ஆவர். TRACING முறை என்பது எழுத்துகளின் மேல் வெள்ளை மையால் எழுதுவது. அதாவது விளம்பல் படி. இந்த TRACING முறை சரியான முறையல்ல.  எழுத்துகளோடு அவற்றின் அருகில் கல்லின் இயற்கைப் பொறிப்பும் இருக்கும்.  எனவே எழுத்துகளைப் படிப்பதில் தெளிவு கிட்டாது

பிராமி எழுத்து – வரலாற்றுப் பின்னணி:
வட இந்தியாவில் பிராமி எழுத்து எழுதப் பயன்பட்ட மொழி பிராகிருதம் ஆகும். பிராகிருதம் மக்கள் மொழி; அக்காலத்திய உலகியல் மொழி. சமற்கிருத மொழி, சமயச் சடங்குகளுக்காகப் பயன்பட்ட மொழியாக மட்டும் இருந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாணினி, வட இந்திய மொழிகளை ஆய்ந்து “அஷ்டத்தியாயி” என்னும் இலக்கண நூலை எழுதி, வட இந்திய மொழிகளின் பயன்பாட்டை வரையறுத்துக் கொடுத்தார். அந்த இலக்கண மரபுக்குப் பின்னர் மேற்கொண்டு சமற்கிருதம் வளர்ச்சியுறவில்லை. பின்னர், சமற்கிருதம் செப்பனிடப்பட்டு, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இலக்கியங்களில் பயிலத் தொடங்கியது.

மகத நாட்டில் வழங்கிய பிராகிருத மொழியை அசோகர் தம் ஆட்சியில் நிருவாக மொழியாக ஆக்கினார். அப்போது சமற்கிருதம் இருந்தது. ஆனால், அரசனின் சாசனங்கள் மக்களை எட்டுவதற்கு மக்களுக்குத் தெரிந்த மொழியே வேண்டியிருந்தது என்னும் காரணத்தால் பிராகிருதம் பயன்பட்டது. பின்னர் வந்த குப்தர்கள் காலத்தில் சமற்கிருதம் நிருவாக மொழியாக உருவெடுத்தது. அசோகர் பிராமிக் கல்வெட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர்களுக்குத் தெரிந்த மொழி பிராகிருதம். எனவே, தமிழ் நாட்டில் கிடைத்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகளைப் படிப்பதில், பிராகிருத அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தமிழ் நாட்டுப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியோடு பொருந்தாமையால் தெளிவற்ற நிலையே இருந்தது. கே.வி. சுப்பிரமணிய அய்யர்தாம் இக்கல்வெட்டுகளில் இருப்பது தமிழ் மொழியே என்று கண்டார். 1924-ஆம் ஆண்டில், கல்வெட்டுகளைப் படித்து வெளியிட்டார்.

அடுத்த கட்டமாக, 1935-ஆம் ஆண்டில், அறிஞர் தி.நா.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்க்கல்வெட்டுகள் பற்றிய நூலை அவர் சார்ந்திருந்த சுதேசமித்திரன் அச்சகத்தில் வெளியிட்டார். அவரே அந்நூலைப் பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் அவர், எழுத்துகளின் வளர்ச்சி குறித்த பட்டியலைக் கொடுத்திருந்தார். தமிழகத்தின் தமிழ் பிராமி, ஆந்திரத்தில் பட்டிபுரோலு என்னுமிடத்தில் கிடைத்த பிராமி இரண்டையும் ஒப்புமைப் படுத்தி தி.நா.சு. அவர்கள் ஒரு கட்டமைப்பைக் குறித்திருந்தார். அசோகன் பிராமியில் கூட்டெழுத்து முறை இருந்தது. மெய்யெழுத்து இரட்டிக்கும்போதும், இரண்டு மெய்யெழுத்துகள் ஒன்றாக வரும்போதும் இக்கூட்டெழுத்து முறையைப் பயன்படுத்தினார்கள். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : எடுத்துக் காட்டாக, ‘மக்கள்”  என எழுதுவதற்கு “மகள்”  என்பதாக எழுதி, ‘க’ எழுத்தின் கீழ் ‘க்’  எழுத்தை எழுதுவார்கள். கல்வெட்டுகளில் நாம் காணும் “ஸ்வஸ்திஸ்ரீ”  என்பதை எழுத, “ஸஸிஸ்ரீ”  என்னும் மூன்றெழுத்துகளை மேல்பகுதியில் அமைத்து, முதல் ‘ஸ’ எழுத்தின் கீழ் ‘வ’ எழுத்தையும், இரண்டாவதாக உள்ள ‘ஸி’ என்னும் எழுத்தின் கீழ் ’த்’  எழுத்தையும் எழுதுவார்கள்). இந்தக் கூட்டெழுத்து அமைப்பு தமிழ் பிராமியில் இல்லை. தமிழ் பிராமியில், மெய்யெழுத்தைக் குறிப்பதற்கே உயிர்மெய் எழுத்து எழுதப்பட்டது. உயிர்மெய் எழுத்தைக் குறிக்க, அவ்வெழுத்தின் மேல் ஒரு கோடு எழுதப்படும். (மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறை இல்லை). டி.வி. மகாலிங்கம் அவர்கள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்கத்தொடங்கி 1968-ஆம் ஆண்டில் நூல் வெளியிட்டார். ஐராவதம் அவர்களின் CORPUS OF BRAMI INSCRIPTIONS நூலுக்குப் பின்னரே டி.வி. மகாலிங்கம் அவர்களின் நூல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி எழுத்துகள் – ஆராய்ச்சி:
1968-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முயற்சி செய்தார். முத்திரைப் பொறிப்புகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி அட்டவணைப் (CONCORDANCE)  படுத்தினார். இது ஒரு முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுகிறது. சர். ஜான் மார்ஷல் (SIR JOHN MARSHAL), ஃபாதர் ஹீராஸ்  (FATHER HERAS),  ஆஸ்கோ பர்ப்போலா (ASKO PARPOLA)  போன்றவர்கள் சிந்து சமவெளி எழுத்துகளை ஆய்ந்துள்ளனர்.  ஃபாதர் ஹீராஸ்  (FATHER HERAS) அவர்கள் சிந்து சமவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம் என்று கருதினார். சிந்து வெளியில் தமிழ் மொழி இருந்தது என்பதாக 1965-இல் ஆஸ்கோ பர்ப்போலா (ASKO PARPOLA) தம் ஆய்வுக்கட்டுரையில் குறித்துள்ளார்.  தமிழ் நாட்டில் ஐந்தாறு பேர் – மதிவாணன் போன்றோர் - சிந்து எழுத்துகளைப் படிக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். 1960-இல், சோவியத் ரஷ்யாவிலும் சிந்துவெளி எழுத்துகளை ஆய்ந்துள்ளனர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் முதலில் சிந்து எழுத்துகளைப் படிக்கவில்லை. CONCORDANCE என்னும் எழுத்துகளின் தொகுப்பை வெளியிட்டார். இது ஒரு நிகண்டு போன்ற தொகுப்பு எனலாம். வடமொழியில் “கோசம்”  என்பார்கள்; அது போன்றது. சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வுத் தொடர்பாக இந்நூல் ஒரு கொடை என்பதில் ஐயமில்லை. அது போலவே, அண்மையில், பிராமி எழுத்துகளைப்பற்றி முன்னரே எழுதிய நூலை மேம்படுத்தி வெளியிட்டுள்ளார். இந்நூலும் அவர் வழங்கிய கொடையாகும். ஆஸ்கோ பர்ப்போலாவும் (ASKO PARPOLA) CONCORDANCE தொகுப்பை எழுதியுள்ளார். 1994-இல் ஒரு நூலும் எழுதியுள்ளார்.

CONCORDANCE  நூலுக்குப் பிறகு, ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து எழுத்துகள் சிலவற்றைப் படிக்கவும் தொடங்கினார். 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், உடல் நலக் குறைவு காரணமாக நூல் வெளியிடாது, நோட்டுப்புத்தகங்களில் எழுதி வைத்துள்ளார். தற்போது, அவரது எழுத்து நோட்டுகள் அனைத்தும் ரோஜா முத்தையா நூலகத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

LOGO WRITING அல்லது LOGO GRAPH என்பதான ஒருவகைக் குறியீட்டெழுத்து முறையில் அமைந்துள்ளவை சிந்துவெளி எழுத்துகள். ஒரு பெயர்ச்சொல் போலவும், அதே சமயத்தில் சொல்லின் விகுதி போலவும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளன எனலாம். எடுத்துக் காட்டாக, “இல்”  என்னும் தமிழ்ச் சொல் ’வீடு’ என்னும் பொருள் தந்தாலும், ‘ஊரில்’, ‘தெருவில்’  ஆகிய சொற்களில் காணப்படுவது போல் ஒரு விகுதியாகப் படிக்குமாறும் அமைகிறது. சிந்து வெளி எழுத்துகள் இது போல் ஒரு சிக்கலைக் கொண்டுள்ளன.

LOGO GRAPH  எழுத்துகளைச் சித்திர எழுத்துவகை எனலாம். இவ்வகை எழுத்துகளைக் கிரேக்கர்கள் ஃபினீசியரிடமிருந்து (PHOENICIANS) பெற்றார்கள். ஃபினீசியருக்கும் முன்பு  இவ்வகை எழுத்துகளை சுமேரியர்கள் பயன்படுத்தினர். ஃபினீசியர்கள், கடல்சார் வணிகர்கள். அவர்கள், LOGO GRAPH சித்திர வடிவங்களை எழுத்தாக்கினார்கள். இவ்வகை எழுத்துகளில் உயிர் எழுத்துகள் இரா. மெய் எழுத்துகள் மட்டுமே உண்டு. வேறு வேறு வகையில் படிக்கும்படி அவை அமையும். எடுத்துக்காட்டாக, ஆங்கில எழுத்துகள் K T B  ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஒரு தொகுதியை, இந்தி மொழியில், ‘கிதாப்’,  என்றோ ‘குதுப்’  என்றோ இரு வேறு முறையில் படிக்கலாம்.  ஆனால், இவ்வெழுத்துகளைப் படிக்க மொழி ஒன்றின் அடிப்படை மிகத் தேவை. மொழி இன்னதென்று தெரிந்தால் மட்டுமே மேலே குறித்தவாறு படிக்க இயலும். சிந்து வெளி எழுத்துகளின் மொழி இன்னதென்று தெரியாததாலேயே இன்னும் படிக்க இயலவில்லை. எடுத்துக்காட்டாக, ‘கெ ட ட து’   என்பதை மொழி அறிந்தவர் மட்டுமே ‘கெட்டது’  எனப்படித்தல் இயலும். சிந்து வெளி ஆய்வில் எழுத்துகளைப் படிக்க முயலும் பெரும்பாலோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி இயல் அடிப்படை ஆய்வு இப்போது இல்லை என்பது குறையாக உள்ளது. மொழி ஆய்வுக்கு மொழி இயல் மிகத் தேவை. மூல மொழி பற்றிய ஆய்வு தற்காலம் தேவை. அடிப்படை மொழி ஆராய்ச்சிக்கு முதலில் இடமளிக்கவேண்டும். பல பல்கலைக்கழகங்களில் மொழி இயல் ஆய்வுகள் இல்லை. சிந்து வெளி எழுத்துகள் பற்றிய புதிரை விடுவிக்க நாம் சுமேரியாவுக்குச் செல்லவேண்டும். சுமேரிய மொழி அறிவு வேண்டும்.

ஐராவதம் மகாதேவன் ஆய்வு செய்த சில பிராமிக் கல்வெட்டுகள்:
அ) சித்தன்ன வாசல் கல்வெட்டு: – 
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “தமிழ் – பிராமி கல்வெட்டுகள்”
நூலில் உள்ள கல்வெட்டுப் பாடமும் குறிப்பும் கீழே:


கல்வெட்டுப் பாடம்:
எருமிநாடு குமுழ்ஊர்  பிறந்த காவுடிஈ
தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்    
இக்கல்வெட்டில் கன்னட மொழித்தாக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. காரணம், எருமி நாடு என்பதை எருமை நாடு எனக் கொள்வதே. எருமை நாடு, மகிஷ மண்டலம் எனச் சமற்கிருதத்தில் குறிப்பிடப்பெறும் மைசூர் நாட்டைக் குறிக்கும். அப்பகுதியில் இருந்த ஊர் குமிழூர். இச்சொல், குமிழ் என்று தேக்கு மரவகையின் அடியாகப் பெயர் பெற்றிருக்கலாம். காவுடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர்.  ‘கௌடி’ என்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் ‘காவுடி’ என்று எழுதப்பட்டுள்ளது.  இறுதியில் உள்ள ‘இ’ , பளிஇ, கணிஇ என்ற பிற தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வரும் வகையில் இகர இறுதிச் சொல்லான காவுடி என்பதிலும் எழுதப்பெற்றுள்ளது. தென்கு சிறுபோசில் என்பது தெற்கு சிறுவாயில் என்று பிற்காலத்தில் வழக்கில் இருந்த நாட்டுப்பிரிவின் பண்டைய வடிவம். வாயில் என்ற தமிழ்ச்சொல் ‘ஹொசிலு’ என்று கன்னடப் படுத்தப்பட்டு, அதன் தமிழ் வடிவமான ‘போசில்’ என்று இடம் பெறுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

இளயர் என்ற சொல் வீரர் பிரிவினரைக் குறிக்கும். இவர்களைத் துளு நாட்டிலிருந்து வந்தவர் என்று மகாதேவன் வழக்கினை ஆதாரமாக்கிக் கூறுகிறார். இளயர் என்போர் வீரர் குழுவினர் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.

சித்தன்ன வாசல் கல்வெட்டு தனித்தன்மை வாய்ந்தது. இக்கல்வெட்டின் மூலமே, தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இருந்த தொடர்பினை நேரடியாக அறிகிறோம். எருமைநாடு என்ற பெயர் சங்க இலக்கியங்களிலேயே இடம்பெறும் ஒன்றாகும். அடுத்த ‘காவுடி’ என்ற சொல் சமண மதத்தில் இருந்த பெண்பாற் துறவியைக் குறிக்கிறது. சமண மதத்தில் அவ்வளவு பண்டைக் காலத்திலேயே பெண்குரத்தியர் இருந்ததற்கான முதற்சான்றாக இது அமைகிறது. சிறுபோசில் என்ற சொல்லும் ‘சிறுவாயில்’ என்பதன் கன்னட வடிவம் என்றாகும் நிலையில், இக்கல்வெட்டில் இடம்பெறும் கன்னட மொழியின் தாக்கத்தினை முதன் முதலாகக் காட்டும் சான்றாக இது அமைகிறது.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :
தமிழ் பிராமியில், மெய்யெழுத்தைக் குறிப்பதற்கே உயிர்மெய் எழுத்து எழுதப்பட்டது. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறை இல்லை. உயிர்மெய் எழுத்தைக் குறிக்க, அவ்வெழுத்தின் மேல் ஒரு கோடு எழுதப்படும் என்பதாகப் பார்த்தோம். இந்த அமைப்புமுறை இக்கல்வெட்டில் இருக்கிறது. இக்கல்வெட்டில், ழ், ர், ந், ன், ல், ய், ட், ம்  என்னும் மெய்யெழுத்துகள் புள்ளி பெறாமல் உயிர்மெய் எழுத்துகளாகவே எழுதப்பட்டுள்ளன. உயிர்மெய் எழுத்துகளான – அகர அல்லது ஆகார எழுத்துகள் – நா, ற, த, கா, ள, த, ன  ஆகியவற்றின் மேற்புறம் ஒரு கோடு எழுதப்பட்டுள்ளது.  அனைத்திலும் ஒன்றுபோல் கோடு இருப்பினும்,  நா, கா என்னும் இரு நெடில் எழுத்துகள் மட்டும் அவ்வெழுத்துகள் அமைந்த ‘நாடு’,  ‘காவுடி’  என்னும் சொற்களின் பொருள் சுட்டு நோக்கி நெடிலாகப் படிக்கப்பட்டுள்ளன.  ஆனால், மெய்யெழுத்துகளை உயிர்மெய் எழுத்துகளாக எழுதும் விதி முறை இக்கல்வெட்டில் ஓரிடத்தில் மட்டும் பின்பற்றப்படவில்லை. ‘இளயர்’,  ‘செய்த’  ஆகிய இரு சொற்களில் வருகின்ற ‘ய’  உயிர்மெய், ஒன்றில் மெய்யாகவும், மற்றதில் உயிர்மெய்யாகவும் எழுதப்பட்டுள்ளன.

மற்றொன்று, பிராமியில் ‘இ’ எழுத்துக்கும், ‘ஈ’ எழுத்துக்கும் தனித்தனி எழுத்துகள் இருக்கும்போது, இக்கல்வெட்டில் ‘ஈ’  எழுத்தை ‘இ’கரமாகப் படித்திருக்கிறார். ’காவுடி’  என்னும் சொல்லை அடுத்து ‘ஈ’  எழுத்து உள்ளது; ஆனால் ‘இ’கரமாகப் படித்திருக்கிறார்.
அடுத்து, மேற்படி நூலின் குறிப்பில்,
காவுடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர்.  ‘கௌடி’ என்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் ‘காவுடி’ என்று எழுதப்பட்டுள்ளது.
என்று பதிப்பாசிரியர்கள் கூறியிருக்கின்றனர்.  காவுண்டன் என்பதன் பெண்பால் பெயரே காவுடி என்னும் கருத்தும், கௌடி என்பது பெண் துறவியின் (இயற்) பெயர் என்னும் கருத்தும் முரணாக உள்ளன.

ஆ) ஆனைமலைக் கல்வெட்டு: – 


கல்வெட்டுப் பாடம்    (மேற்படி நூலில் உள்ளவாறு)
இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

குறிப்பு :     (மேற்படி நூலில் உள்ளவாறு)
இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரிஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள்.

இவம் என்னும் சொல் இபம் என்னும் சமஸ்கிருதச்சொல்லின் மறுவடிவமாகும்.   யானை என்பது இதன் பொருள். உறையுள் என்பது உறைவிடம் என்பதைக்குறிக்கும். பாதந்தான் என்பதைப் பாய் அல்லது படுக்கை தந்தான் எனக் கொள்ளலாம்.  ஆனால் இச்சொல்லைப் பதந்தன் எனக்கொண்டு மரியாதைச் சொல்லாகக் கருதுவர் ஐ.மகாதேவன். ஏரி என்னும் ஊரைச் சேர்ந்த ஆரிதன் என்பது ஒரு துறவியின் பெயர். அட்டவாயி என்பதன் தமிழ் வடிவமாக அத்துவாயி என்பதைக் கொள்ளலாம். அர்த்தம் உரைப்பவன், சமயச் சொற்பொழிவு நிகழ்த்துபவன் என்றும் இதற்குப் பொருள் கூறலாம். அரட்டன் என்பது அத்துறவியின் பெயராகவும் காசிபன் என்பது கோத்திரப் பெயராகவும் கொள்ளப்படும். ஆரிதன், அரட்ட காயிபன் என்னும் இரு துறவியருக்கான தங்குமிடமாக இக்குகைத் தளத்தைக் கொள்ளலாம்.         

சுப்பராயலு அவர்களின் கருத்து:  
ஐராவதம் மகாதேவன் ‘இவ’  எனப்படித்து யானை  எனப் பொருள் கூறுகிறார். ஆனால், ‘இவ் குன்றம்’  என்றும் படிக்கலாம். ’இவ்’  என்பது வேறு பாடம்.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :   
இக்கல்வெட்டில், பா, தா, வா, கா ஆகிய உயிர்மெய் நெடில் எழுத்துகளுக்கு மட்டும் எழுத்துகளின் மேற்புறம் கோடு உள்ளது. இக்கல்வெட்டில் ‘இகர’  உயிர் எழுத்து எழுதப்பட்டு இகரமாகவே (குறிலாக) படிக்கப்படுகிறது. ’ட்’ என்னும் மெய்யெழுத்து மட்டும் புள்ளி பெற்று மற்ற மெய்யெழுத்துகள் புள்ளி பெறாமல் உயிர்மெய் எழுத்துகளாகவே எழுதப்பட்டுள்ளன என்பது சிந்தனைக்குரியது. ஏரிஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பதாக நூல் குறிப்பில் உள்ளது. கல்வெட்டில் உள்ள பெயர்கள் துறவியர் பெயர்களானால், படுக்கை அமைத்துக் கொடுத்தவர் பெயர் கல்வெட்டில் இல்லை என்பது தெளிவு. அவ்வாறெனில், பா(ய்) தந்தான் என்பது பொருந்தாது. தந்தவனின் பெயரில்லாமல்,  தந்தான் என்று எங்ஙனம் கூற இயலும்?  அடுத்து, பாதந்தான் என்பதைப் பதந்தன் எனக்கொண்டு மரியாதைச் சொல்லாகக் கருதுவர் ஐ.மகாதேவன் என்று குறித்துள்ளனர்.  பதந்தன் என்பது எவ்வாறு மரியாதையைக் குறிக்கும்?  இவ்விரண்டு ஐயங்களுக்குத் தெளிவை அறிய ஆவல்.

பிராகிருதம் பற்றி சுப்பராயலு அவர்களின் கருத்து:
தமிழர்களுக்கு முதலில் அறிமுகமானது பிராகிருதம். பின்னரே சமற்கிருதம் அறிமுகமாகிறது. எழுத்துகளைப் பரப்புபவர் வணிகர்கள்தாம். தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் உள்ள ஆள் பெயர்கள் பிராகிருதம். பிராகிருதத்தில் மெய் இரட்டிக்காது.



குறிப்பு: ஐராவதம் மகாதேவன் குறித்து கட்டுரை ஆசிரியரின்  ஓர் நினைவுகூரல்: 

ஐ.மகாதேவன் அவர்கள் உடல் நலக் குறைவால் வீட்டில், ஓய்வாகப் படுத்திருந்த நிலையில், அறிமுகமே இல்லாத  என்னைச் சந்திக்க -  முன்னறிவிப்பு ஏதுமின்றிச் சென்றிருந்தேன்  -  அவர் அனுமதி
அளித்தமை நான் பிராமி எழுத்தில் எழுதிய கடித வேண்டுகோளைப்  பார்த்துத்தான் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். கல்வெட்டியல் ஆர்வலராக இருந்தபோதே அவரைச் சந்தித்து அவருடன் ஒளிப்படமும் 
எடுத்துக்கொண்ட மகிழ்ச்சி. அந்த ஒளிப்படம் எனக்கு ஓர் ஆவணம். 




தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. 
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156. 




                                                                                                                  

இந்துமதம் என்று ஒரு யானை


—   தேமொழி

யானைக்கும் இந்து மதத்திற்கும் இருவகையில் தொடர்புள்ளது...

சிற்பங்களில் சிலவற்றிலும், ஓவியங்கள் சிலவற்றிலும் ஒன்பது பெண்கள் இணைந்து ஒரு யானை உருவம் காணப்பெறும்.  இராஜஸ்தான் ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ளதாகக் காட்டப்பெறும் ஒரு மரச்சிற்பமும், திருக்குரங்குடி கோயிலின்  ஒன்பது பெண்களை   ஒருங்கிணைத்து  உருவாக்கப்பட்டிருக்கும் யானைச்  சிற்பமும்  எடுத்துக்காட்டுகள் (மேலும் பல சிற்பங்களும், படங்களும்  இணையத்  தேடலில் கிடைக்கப் பெறுகின்றன). 









ஆங்கிலேயர் காலத்தில் இஸ்லாம் கிறித்துவ சமயங்கள் அல்லாத பிற இந்திய மண்ணின் சமயங்கள் இந்து சமயம் என வகைப்படுத்தப் பட்ட பொழுது இவ்வாறு அதிகாரப்பூர்வமாக வேத அல்லது  வைதீக மதத்தின் பற்பல உட்பிரிவுகள் இந்துமதம் எனப் பெயர் பெற்றது என்பது வரலாறு.

ஆங்கிலேயர் காலத்தில் இவ்வாறு பெயர் பெறும் முன்னரும் இந்திய மண்ணின் பற்பல வட்டார வழிபாடுகள், தெய்வங்கள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டதும் வரலாறு.  கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இதன் துவக்கம் எனவும், ஆதி சங்கரர்   சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை வணக்கும் ஆறு உட்பிரிவினரை ஸ்மார்த்தம் என்பதன் கீழ்  தொகுத்ததாகவும் வரலாறு கூறும்.  

இச்சமயங்கள் யாவும் பிறப்பு இறப்பு, கடவுளின் தோற்றம், சமயத் தத்துவங்கள் என்று தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டவை.  இருப்பினும்  வேதம் கூறும் கடவுள்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட புராணக் கதைகளுடன் யாவும் ஒருங்கே  வளர்ந்தன.  இவற்றில் கொள்கை மாறுபாடு கொண்டவர்கள் சிலரும்  சமணம் பௌத்தம் சீக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்தில்  பிரிந்து போனதும் வரலாறு. இந்துமதக் குடையின் கீழ் இருக்கும்  சைவம், வைணவம் என்றாலும் அவர்களுக்குள்ளும்  கொள்கை அடிப்படையில் பிரிந்து போனவர்கள் உண்டு. இரண்டாம் குலோத்துங்கன் தில்லை கோவிந்தராஜரைக்  கடலில் போட்டதும் வரலாறு. இன்றுவரை லிங்காயத்துகள் தாங்கள் தனி மதம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் வழிபடுவது வேத மதக் கடவுள் என்றால் அவர்கள் இந்து மதத்தினர் என்றுதான் கூறவேண்டும் என்றும் சர்ச்சையில் இருப்பதுதான்  இந்து சமய உலகம்.

இதில்  புறச்சமயங்களுக்கு போட்டியாக மக்களை ஒருங்கிணைக்கும் திட்டங்களும் அவ்வப்பொழுது அரங்கேறின. தங்களை எண்ணிக்கையில் பலப்படுத்திக் கொள்ள வட்டார நாட்டார் வழிபாடு, மூதாதையர் வழிபாடு முறைகளும் உள்வாங்கப்பட்டு எல்லாவற்றையும் ஒரே கடவுள், அவர்களின் அவதாரங்கள்,  கடவுளரின் உறவினர்கள் என்ற பற்பலக் கதைகளுடன் ஒருங்கிணைப்பு நடந்து வந்துள்ளதும் உண்மை.

இதில் உச்சக் கட்டமாக இஸ்லாமியரையும் பௌத்தரையும் உள்ளிழுக்கும் முறையும் நிகழ்ந்தது. அதற்கு இஸ்லாமியரை எதிர்த்த விஜயநகரப்  பேரரசின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகராகிய திருமால் தங்கை திருமணம் காண வருதல், வழியில் இஸ்லாமிய பெண் வீட்டில் தங்குதல் போன்ற கதைகளும் உண்டு.  அதே போல திருவரங்கத்தில் இஸ்லாமிய தொடர்பு காட்டப்பெறும், பூரி ஜகந்நாதர் கோயிலும் அங்குள்ள வட்டார மக்களின் வழிபாடு முறையை உள்வாங்கிய நிலை ஆகியன  இந்த இணைப்பு முயற்சிக்கு மேலும் சில சான்றுகள். புத்தரும் பத்து அவதாரங்களில் ஒன்றாகிப்போனார். இவர்கள் கடவுளருக்குள்ளும் யார்தான்  பெரியவர் என்ற போட்டி. 

வடநாட்டில் இருப்போருக்கும் தென்னாட்டில் இருப்போருக்கும் சடங்குகளில் வழிபாட்டு முறைகளில் எனப் பல வேறுபாடுகள் உண்டு.  
இருப்பினும்  அனைத்து உதிரி வழிபாட்டு பின்னணியினரும் ஒன்பது பெண்கள் யானை போல ஒன்றிணைந்து உள்ளார்கள்.  


அதற்குத் தீவிர இந்துமத சமயத்தலைமையும் முழுமூச்சுடன் செயல்படுகிறது.  இந்தியா எனில் இந்துமதம் என்ற கொள்கையை ஆணித்தரமாக நம்பும், நம்ப வைக்கும் நடவடிக்கை இது.

யார் துவங்கினார் என அறிய இயலாத வரலாற்றுத் தொடக்கத்தில் இந்துமதத்தின் தோற்றப்பெருமை பேசப்படுகிறது. என்றும் நிலைத்திருக்கும் வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையில் சனாதன தர்மம் என்று பெருமிதம் பேசப்படுகிறது. 

இருப்பினும் வேதமதத்தின் உண்மையான உறுதியான கட்டமைப்பு வர்ணாசிரம தர்மம் என மக்களுக்குள் பிரிவினை பேசும் அடிப்படை மட்டுமே.  அது இல்லாது அவர்களால் இந்தியாவில் மட்டுமல்ல அயல்நாட்டிலும் வாழ முடியவில்லை என்பதுதான் நடப்புலக நிலை.  இதில் மக்களுக்குள் பேதம் கற்பிக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு, பெண்ணுரிமை பறிக்கப்பட்டு, பல சமயங்களில் ஒடுக்கப்பட்டவர் உயிரும் வாழ்வும் பறிக்கப்படுவது வர்ணாசிரம தர்மம்  என்ற கோட்பாடு கொடுத்த பரிசுகள். அது பரிணாம வளர்ச்சி பெற்று தொழில் அடிப்படையைப் பிறப்பு அடிப்படையில் உறுதி செய்த வாழ்க்கைமுறையின் தத்துவ  வெளிப்பாடு.  

இந்தப்  பிரிவுகளை அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் விரிவாக  விளக்கத்  தேவையுமில்லை. அதன் அடிப்படை, படிநிலையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என மக்களைப் பிரித்து வைத்திருந்த நிலை.  இந்த அடுக்குமுறையில் யாரும் யாருக்கும் சமமல்ல.  ஆனால் ஒவ்வொருவருக்கும் தான் யாருக்கோ உயர்ந்தவர் என்றும், தனக்குக் கீழாக  யாரோ இருக்கிறார்கள் என்ற  எண்ணம் தரும் மகிழ்ச்சிக்கும்  குறைவில்லை.  அதில்தான் வர்ணாசிரம தர்மத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.  பிறப்பின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட தொழில் மற்றும் வாழ்க்கைமுறை இன்றைய நாகரிக உலகில் அடிபட்டுப் போனாலும், சட்ட முறையில் மறுக்கப்பட்டாலும் புரையோடிப் போன இனபேதம் ஆணவக்கொலைகள், சாதிக்கொலைகள் வரை பக்கவிளைவுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது...இருக்கும்.

கடவுள் மறுப்பு வேத மறுப்பு  சொல்வோரையும் தன்னுள் இந்துமதம் ஏற்றுக் கொள்கிறது என்போர் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு.  அவ்வாறு பேசியவர்கள் இன்றுவரை மாற்றுக்கருத்து பேசியதால் கொல்லப்பட்டவர்களை மறப்பவர்கள் இவர்கள். 2010 இல் இருந்து மறுத்துப் பேசியவர்  30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இவர்களுக்கு நினைவு வருவதில்லை*.  உண்மை நிலையும்  நடப்புலகமும் வேறு வேறு. கௌரி லங்கேஷ் யார்? தபோல்கர், பன்சாரே, கல்புர்கி உயிரிழந்த காரணம் என்ன ?

அனைவரிடமும் பேதம் காட்டவில்லை என்போர்கள் இந்திய  குற்றவியல் தரவுகள் காட்டும் ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை குறித்து அலச விரும்பாதவர்கள்.  இன்றுவரை சபரிமலை என்று பெண்களின் வழிபாட்டுரிமை போராட்டமாக இருப்பதை வசதியாக மறந்து போனவர்கள்.  இவர்களுக்கு எங்கே ஒரு காலத்தில் கோவிலுக்குள் நுழைய ஒடுக்கப்பட்டவர் மறுக்கப்பட்டதும், தாய்மொழியில் வழிபாடு  செய்யும் உரிமை மறுக்கப்படுவதும், சதி என்று கைம்பெண்ணை கணவனுடன் எரித்ததும், அவர்கள் கணவன் இறப்பிற்குப்  பிறகு வெள்ளை கருப்பு ஆடைகளுடன் சீருடையில் வலம் வந்ததும் நினைவிருக்கும். இன்று  விருந்தாவன் கைம்பெண் என்ற மனித உரிமை மீறலின் விளைவுதான் என்பதும் கூட   நினைவு வராதே. மாய உலக மயக்கம்.  வண்ணக்கண்ணாடி வழியே வாழ்க்கையைப் பார்க்கும் மனப்பான்மை அல்லது மனப்பக்குவமின்மை. 

கடந்த காலத்தில்  ஒரு சிலருக்கு கல்வி மறுக்கப்பட்டது, சொத்து மறுக்கப்பட்டது, உணவில் உடையில் கட்டுப்படுத்தப்பட்டதும்  நினைவு வராது. இன்றுவரை மாட்டுக் கொலை என்று மாட்டிறைச்சி சாப்பிடுபவரை  மனிதக் கொலை செய்வது குறித்தும்  கண்ணை  மூடிக் கொள்பவர் பலர்.  ஒடுக்கப்பட்ட மக்கள்  உயர்கல்வி தொடரமுடியாது தற்கொலை நிகழ்வுகள்  எதன் பக்க விளைவு என்பது தெரியுமா? அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மதக்கோட்பாட்டின் பக்க விளைவா அது?

பிரிந்து போகிறேன் என்று போராட்டம் செய்பவர் ஒரு புறம் இருக்க, பிரிந்து போனவர் ஒருபுறமிருக்க, உள்ளிருப்பவரும் நான் எப்படி இந்தக் கும்பலில் சேர்க்கப்படுகிறேன் என்று குழம்பித் தவிக்கும்  நிலையில் தங்களை  இந்துமதத்தில் அடையாளம் காணமுடியாமல் இருக்கும்  நிலையைக் கண்டால் இந்துமதம் என்பது மீண்டும் யானையைத்தான் நினைவு படுத்துகிறது.

மதம் என்ற வழியில் செல்வதால் மதம் பிடித்து ஓடி மசூதியை உடைப்பதால் அல்ல அது. 

யானையைக் கண்ட குருடர் கதையை நினைவு படுத்துகிறது ஒவ்வொருவரும் தங்களின்  கோணத்தில் இந்துமதம் என்பது என்னவென்றும், கொள்கைகள் என்னவென்றும்,  வாழ்க்கைமுறை என்னவென்றும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள சமயம் இந்துமதம்.  குருடர்கள் யானையைத்  தடவித் தடவிப்  பார்த்து அவரவர் கோணத்தில் விளக்கம் சொல்லும் நிலைதான்  இந்துமத யானையின்  நிலை.


அதற்குச் சான்று அவர்களுக்கு என்று தலைமை, சமய நூல், சமயக்கட்டுப்பாட்டு தலைமை இல்லாத நிலை. இருக்கவும் முடியாது. ஏனெனில் அது உருவாக்கப்பட்ட நிலை அவ்வாறு.  கிவ் அண்ட் டேக் பாலிசியில் அமைக்கப்பட்ட அரசியல் கூட்டணி போன்றது.  பல வழிபாட்டுமுறைகளையும் ஒருங்கிணைத்த நிலையில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாத ஒரு நிலை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் அவரவரும் பிய்த்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விடுவார்கள் என்பதுதான் உண்மைநிலை.  ஐயமிருந்தால் லிங்காயத்துகளை நினைவு கூரவும். 

 
 _________________________________________________________________________________




தொடர்பு: தேமொழி  (jsthemozhi@gmail.com







Wednesday, December 26, 2018

தேவாரத்தில் இராவணன்



—  விக்கி கண்ணன்



இராவணன் என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் இராமாயணக் கதைகள் ஞாபகத்துக்கு வரும். தேவார காலத்தில் இராவணன் என்று சொன்னால் சைவ அடியார்களுக்குக் கைலாயத்தை தூக்கிய காட்சி தான் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. அதன் தாக்கத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தனது பதிகங்களில் மாறி மாறி இராவணனைப் பற்றி பாடியுள்ளனர். 

அப்பரும் சம்பந்தரும் முறையே ஒவ்வொரு தலங்களிலும் பத்து பாடல்கள் பாடியுள்ளனர். அதில் அப்பர் தனது பத்தாவது பாட்டில் இராவணன் கைலாயத்தை தூக்கிய காட்சியை ஒவ்வொரு தலங்களிலும் விவரிக்கிறார். இதேபோன்று சம்பந்தரும் தனது எட்டாவது பாட்டில் இராவணன் கைலாயத்தை தூக்கிய காட்சியை விவரிக்கிறார். இருவரும் கிட்டத்தட்ட தாங்கள் பாடிய 90 சதவீத தலங்களில் இக்காட்சியை விவரிக்கின்றனர்.  இராவணன், கரிய அரக்கன், தென்னிலங்கையின் மன்னன் எனப் பலவாறு குறிப்பிடப்படுகிறான். 

அப்பர் தனது பாடலில், "சிவந்த கண்களுடன் கைலாயத்தைத் தூக்கும் அரக்கனின் செயலால் நிலைகுலைந்த பார்வதியின் நிலைகண்டு, தனது காலின் பெருவிரலை ஊன்றி அந்த நடுக்கத்தை போக்குகிறார். இதனால் இராவணனின் 10 தலையில் சில நொறுங்குகின்றன. அவ் வலியைப் போக்க இராவணன் வீணை மீட்டிப்  பாடுகிறான். அந்த இசையில் மயங்கிய சிவன் இராவணனை ஆட்கொள்கிறார்". 

சம்பந்தர் தனது பாடலில்," கர்வத்தால் கைலாய மலையைத் தூக்கிய அரக்கனின் செயலை கண்டு, அவன் ஆணவத்தை அடக்க சிவன் தன் பெருவிரலை ஊன்றுகிறார். இதனால் இராவணனின் தலைகள் சிதறுகின்றன. நிலைகுலைந்த இராவணன், தன் செயலை மன்னிக்குமாறு வீணை மீட்டிப்  பாடுகிறான். அந்த இசையில் மயங்கிய சிவன் இராவணனை ஆட்கொள்கிறார்." 

இருவருமே ஒரே கதையை வெவ்வேறு வடிவில் சித்தரிக்கின்றனர்.  இருவரின் பாடல்களுள் சில.. 




திருநாகை காரோணத்தில் அப்பர் பாடிய பாடல்; 
"கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ, டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே." 

கைலாயத்தில் அப்பர் பாடிய பாடல்; 
"கற்றனன் கயிலை தன்னை காண்டலும் அரக்கன் ஓடி
செற்றவன் எடுத்த வாறே சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம் உணர்வழி வகையால் விழுந்தான்
மற்றிறை ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே." 

திரு அனேகதங்காவதம் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல்; 
"ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே" 

திருநறையூர் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல்; 
"கரையார் கடல்சூழ் இலங்கை மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளா லெடுக்க முடிகள் நெரித்து மனமொன்றி
உரையார் கீதம் பாட நல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ நறையூர் சித்தீச் சரத்தாரே." 

இதேபோன்று பல பதிகங்களில் இந்தக் கதை பாடப்பட்டுள்ளது. வெறும் இலக்கியமாக மட்டும் இல்லாமல் பல்லவர் காலத்தில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து பூக்கடை சத்திரம் செல்லும் சாலையில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது "முக்தீஸ்வரர் கோவில்". கிபி 8 ஆம் நூற்றாண்டில், மூன்றாம் நந்திவர்மனின்  காலத்துக் கோவிலாக சொல்லப்படும் இக்கோவிலில் இராவணன் கயிலை மலையைத் தூக்கும் அழகிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சிவனும் பார்வதியும் மேலே அமர்ந்திருக்க, விரல் அழுத்தத்தால் நிலைகுலைந்த இராவணனின் நிலை காட்டப்பட்டுள்ளது.



தொடர்பு: விக்கி கண்ணன்  (vickysrinivasan8@gmail.com) 







சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - புத்தக விமர்சனம்


நூல் வாசிப்பு சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் 
நூலாசிரியர்:  ஆர் பாலகிருஷ்ணன் இஆப






தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இன்று பரவலாகத் தமிழ் மக்கள் சூழலில் எழுந்துள்ளது. இந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் தற்காலம் வரத்தொடங்கியுள்ளன. அத்தகைய முயற்சிகளில் சிந்துவெளி பண்பாடு, வரலாறுபற்றியன தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து வெளிவரும் நூல் முயற்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதற்கு மிக முக்கியக் காரணம்  சிந்துவெளி  ஆய்வுத் தளம் என்பது எளிதான ஒன்றல்ல. இத்துறையில் ஆய்வு செய்வதற்கு மிக ஆழமான ஆய்வின் பின்னணியிலும், கடந்த நூற்றாண்டில் சிந்துவெளி அகழ்வாய்வு பற்றிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த காலம் தொட்டு வெளிவந்துள்ள அறிக்கைகள், ஆய்வுகள், ஆய்வேடுகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய்ந்ததன் பின்னணியில் உருவாக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது மட்டுமன்றி சிந்துவெளிப் பண்பாடு குறித்த அகழ்வாய்வுச் சான்றுகளும்,  சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றிய விரிவான ஆய்வுத் தகவல்களும் அதிகமாக இல்லை என்பதும் ஒரு காரணமாகின்றது. எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பண்டைய கிரேக்க எழுத்துக்கள் கொண்ட ரொசெட்டா கல் (Rosetta Stone)  உதவியது போல சிந்து சமவெளி குறியீடுகளை நேரடியாகப் புரிந்து கொள்ள ஒரு சான்று கிட்டவில்லை. இப்படிப் பல பிரச்சனைகள் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் எதிர் நோக்குகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இந்தச் சூழலில், சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது திராவிட அடித்தளத்தின் அடிப்படையில் அமைந்தது என்ற கருத்தினை முன்வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் எனும் இந்நூல்.  இந்த நூல் வெளிவந்த காலம் தொடங்கிச் சிறந்த வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கின்றது.  முதல் பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பும் வெளிவந்துவிட்டது.   இந்த நூலில் நூலாசிரியர், முதற்பதிப்பின் முன்னுரையோடு இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரையையும் இணைத்திருக்கிறார். நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் சிந்துவெளி ஆய்வில் மிக முக்கியமாகக் கருதப்படும் மறைந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

இந்த நூலின் அமைப்பைப் பற்றி முதலில் காண்போம். இரண்டு பெரும் பகுதியாக இந்த நூல் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இடப்பெயர் ஆய்வு பற்றிய தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பகுதியில் சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு வடிவமைப்பு பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதி, மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு எனும் அடிப்படை நகர அமைப்பு,  திராவிட நகர அமைப்பின் அடித்தளத்தை வகுக்கும் தன்மை ஆகியன, விரிவாக அலசப்படுகின்றன.  நூலின் இறுதியில் பின்னிணைப்பாக சான்றாதார பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கான், தோலாவிரா, லோத்தல் ஆகிய நகரங்களின் அமைப்பினை காட்டும் வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வு நூல் என்பதற்கு அடிப்படை வகுக்கும் வகையில் நூலாசிரியர் தான் இந்த நூலை எழுத எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான உத்தி (methodology) பற்றி ஒரு விளக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.

நூலில் ஆசிரியர் வழங்கியிருக்கும் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையானது நூலின் நோக்கத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றது." கிழக்கு வெளுக்கிறது  கீழடியில்"  என்ற தலைப்பில் இப்பகுதி அமைகின்றது. சிந்துவெளி நாகரிகம் பண்டைய நகர்ப்புற கட்டுமானத்தைச் சான்று பகரும் விதத்தில் அமைந்துள்ளது போல, இன்றைய தமிழகத்தின் மதுரை கீழடி அகழ்வாய்வு,  தமிழ்நாட்டில் தொன்மையான நகரப் பண்பாடு இருந்தது என்பதற்கு தொல்லியல் சான்றாக அமைகின்றது.  சிந்துவெளியின் நாகரீக தொடர்ச்சியை ஏறக்குறைய ஈராயிரம் கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே இருக்கும் மதுரையில் காணமுடிகின்றது. சங்க இலக்கியங்கள் புகழ்ந்து பாடிய நகரங்களைப் பற்றிய செய்திகள் வெறும்கற்பனைகள் அல்ல,  அவை உண்மையே -  என்பதைப் பறைசாற்றும் சான்றுகளாகக் கீழடி அகழ்வாய்வு தகவல்கள் நமக்கு இன்று கிடைக்கின்றன. வைகை கரையோரம் முழுதும் குழிகள் தோண்டி அகழ்வாய்வுகள் தொடர்ந்தால்,  மறைந்துபோன சிந்துவெளியின் தொடர்ச்சி இங்கு வைகைக்கரை நாகரிகத்தின் அடித்தளத்தை அமைத்தது என்பதற்கு மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் நூலாசிரியர் தனது கருத்துக்களை இந்தப் பகுதியில் வழங்குகின்றார்.

இன்றைய பாகிஸ்தான் நிலப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் என்ற தொல் நாகரிகம் கண்டறியப்பட்ட செய்தியை உலகிற்குத் தனது கட்டுரையின் வழி ஜோன் மார்ஷல் 1924ம் ஆண்டு அறிவித்தார். அதன் பின்னர், இந்தத் தொல் நாகரீக பண்பாட்டிற்கும் திராவிடப் பண்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தொடர்ச்சியான ஆய்வுகள் நிகழ்ந்தாலும் இங்குப் பேசப்பட்ட மொழி எது, என்பது இன்றுவரை உறுதிசெய்யப்படாத சூழ்நிலையே நிலவுகிறது. ஆயினும் மிக உறுதியாகத் திராவிட பண்பாட்டுத் தொடர்ச்சியை சிந்து சமவெளி நாகரிகம் காட்டுவதையே பெரும்பாலான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துசமவெளி தொடர்பான ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பாதிரியார் ஹீராஸ், ஆய்வாளர் அஸ்கோ பர்போலா, ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் இஆப ஆகியோர் வரிசையில் இன்று ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்களும் இணைகின்றார். தொடர்ச்சியாக  இவர் நிகழ்த்திய இடப்பெயர் ஆய்வுகள் சிந்து சமவெளி நாகரிகப் பண்பாட்டினைப் புரிந்துகொள்ள முக்கிய தரவுகளாக அமைகின்றன.  இன்றைய இந்திய எல்லை என்பதை மட்டும் ஆய்வுக்களமாக இல்லாமல் இந்த எல்லைகளைக் கடந்து தனது இடப்பெயர் ஆய்வினை நிகழ்த்தி இவர் சேகரித்திருக்கும் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதோடு தனது ஆய்விற்குத் துணை சான்றாக நூலாசிரியர் முன்வைக்கும் கோழிச்சண்டை தொடர்பான தரவுகளும் சான்றுகளும் மிக முக்கியமானவை என்றே கருதுகிறேன்.  ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் எச்சங்களாக இன்றும் தமிழர் மரபில் இடம்பெறும் பண்பாட்டு  விழுமியங்களுள் ஒன்றாக கோழிச்சண்டை மரபைக் காண்கின்றோம்.  இப்பகுதிக்குச் சான்றாக ஆசிரியர் வழங்கியிருக்கும் ஊர்ப்பெயர் உதாரணங்கள்,கி.மு 1ம் நூற்றாண்டு சோழர் கால நாணயம் காட்டும் கோழி நகரம் (உறையூர்), கோயில் சிற்பங்களில் யானையுடன் சண்டையிடும் சேவலின் சிற்பம், சண்டைக்கோழிக்காகத் தமிழ்மக்கள் எடுத்த கல்வெட்டுடன் கூடிய கீழ்ச்சேரி, மேல்ச்சேரி  நடுகற்கள் போன்ற தகவல்கள் சிறப்பனவை.  சண்டைக்கோழிகளுக்குச் செல்லப்பெயர் வைத்து அவை வீரமரணம் எய்திய போது  சண்டைக்கோழிகளுக்காக   நடுகல் எழுப்பிச் சிறப்பு செய்த தமிழ் மக்களின் பண்பாட்டுடன் சிந்து சமவெளி கோழிச்சின்னங்களை பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.  சிந்து சமவெளி தொடங்கி, சங்க கால கோழிச்சண்டை சிறப்பின் வெளிப்பாடாக நாணயங்கள், சிற்பங்கள் பின் அதன் தொடர்ச்சியாக நடுகல்  எனத் தொடரும் மரபு இன்று பொதுமக்கள் பண்பாட்டில் திரைப்பட வடிவில் "ஆடுகளம்" என்ற தமிழ்த்திரைப்படத்தின் மையக் கருவாக அமைந்திருப்பதை ஒதுக்கிச் செல்ல முடியாது என்பதை நூலாசிரியர் மிக அழகாக விவரிக்கின்றார்.

நூலின் முதல் கட்டுரையில் மிக விரிவாகவும், ஆழமாகவும் சிந்து சமவெளி நகரங்களின் அமைப்பினைப் பற்றி விவரிக்கும் நூலாசிரியர்,  மேற்கு கிழக்கு என்ற பகுப்பின் தொடர்பினை அதிக கவனத்துடன் கையாண்டிருக்கிறார். மிகத் தெளிவாக இப்பகுதியை விளக்கியிருப்பது வாசிப்போருக்குச் சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர அமைப்பின் கட்டுமான வரையறையின் இலக்கணத்தை அறிந்து கொள்ள உதவுகின்றது. சிந்துவெளியை ஒட்டிய இன்றைய பலுச்சிஸ்தானிலும், வடகிழக்கு ஈரானிலும் பேசப்படும் பிராகுயி என்ற திராவிட மொழி   பற்றிய செய்தி வியப்பூட்டுகின்றது.  இன்றைய இந்திய எல்லையை மட்டும் வைத்து  திராவிடப்பண்பாட்டுத் தளத்தை ஆராய்வது உதவாது, திராவிடமொழிக்குடும்பத்தின் பரவலாக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த எல்லையைக் கடந்த வகையிலான ஆய்வுகளும், திராவிடப் பண்பாட்டின் கருத்தாக்க வேர்களின் தொடர்ச்சி பற்றி ஆராய வேண்டியதும் அவசியம் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.

மேல்-கீழ் என்ற கருதுகோள் எவ்வாறு திராவிட பாரம்பரியத்தில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் மக்களிடையே பண்பாட்டு ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நூலில் ஆசிரியர் அளித்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கும்போது ஒப்பிட்டு அறிந்து கொள்ள முடிகின்றது. கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய சங்க கால நகர் பெயர்கள் சிந்துவெளி நாகரிகத்திலும் வழக்கில் இருந்தன என்பதை இடப்பெயர் ஆய்வின் வழி நிறுவுகின்றார்.  தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வழக்கில் உள்ள 97 இடப்பெயர்கள் அப்படியே எந்த மாற்றமுமின்றி சிந்துவெளிப்பண்பாட்டுப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வியப்பூட்டுகின்றது. சிந்துவெளிப்பண்பாட்டில் மட்டுமன்றி பாகிஸ்தானில் 131 இடங்களிலும், ஆப்கானிஸ்தானில் 24 இடங்களிலும் அப்படியே வழக்கில் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.  இன்றைய இந்தியாவின் குஜராத். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும்  133 இடங்களில் இந்தத் தமிழக இடப்பெயர்கள் பயன்படுத்தப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்  தமிழகத்தின் வைகை கரையோரம் அடையாளம் காணப்பட்ட 200 சொற்களில் 122 ஊர்ப் பெயர்கள் சிந்து சமவெளி பெயர்களோடு தொடர்புடையனவாக  ஒத்துப் போவதையும் சுட்டிக் காட்டுகின்றார். 

இடப்பெயர், மேல்-மேற்கு கீழ்-கிழக்கு, கோழிச்சண்டை மரபு என பண்பாட்டுத் தொடர்ச்சிகளை மையப்படுத்தி சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடப் பண்பாட்டைக் கட்டமைக்க இந்த நூல் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஆய்வுலகில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆயினும், தொடரும் கேள்விகளும் அவற்றிற்கு விடைகாணும் முயற்சிகளும் அவசியம் என்பதையும் நூல் சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாகச் சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்ற கேள்வி, சிந்து வெளி பண்பாடு குறித்த ஆய்வில் சங்கத் தமிழ் இலக்கியம் காட்டும் தொடர்ச்சி, கீழடி போன்ற நகரநாகரிக அகழ்வாய்வுச் செய்திகள், தொடர வேண்டிய வைகைக்கரையோர அகழ்வாய்வுப் பணிகள், நீண்ட மரபின் தொடர்ச்சியாய் நாம் இன்றும் காணும் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்வது ஆகியன தொடர வேண்டும் என்பதை நூல் வலியுறுத்துகின்றது.

இந்த நூலில் ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு கருத்துக்களை இன்றைய வரலாற்று ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம் என்பதால் நூலில் இப்பகுதியைக் கீழே வழங்குகின்றேன்.

"...உணர்ச்சியால் உந்தப்பட்ட பேச்சுக்களும், அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத கருத்துக்களை முன்வைத்து நம்பகத்தன்மையை இழப்பதும்,  நிகழ்கால துதிபாடல்களில் நேரத்தைச் செலவிட்டதும் தமிழ்ச்சமூகம் தனக்குத்தானே இழைத்துக் கொண்ட அநீதிகளும், அதன் விளைவாக நேர்ந்த கூட்டுக்காயங்களும் ஆகும்.....
மக்களை மையத்தில் வைக்காத வரலாறு  மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும்.  அரண்மனைகளையும் அந்தப்புறங்களையும் மட்டுமே துருவித் துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும் நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதை அல்ல. இன்னும் சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையைக் கூட அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை மூச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை..."




-முனைவர்.க.சுபாஷிணி





தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com) 


Sunday, December 23, 2018

ஆரணி பட்டுச் சேலை


 —  முனைவர் க.சுபாஷிணி





தமிழகத்தின் தொண்டை மண்டல நகர்களில் ஒன்று ஆரணி. ஆரணிக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவ்வாண்டு சென்றிருந்தேன். ஆரணிக்குச் செல்வது இது எனக்கு இரண்டாவது முறை. சில ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமய புராதனச் சின்னங்களையும், சமணர் கோயில்களையும் தேடிப் பதிவு செய்யும் பொருட்டு திருவண்ணாமலை, ஆரணி, பூண்டி, வளத்தி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தேன். அப்போது ஆரணியின் சமண சமயம் சார்ந்த புராதனச் சின்னங்கள் மட்டுமே தேடித் திரிந்து பதிவாக்கியதில் ஆரணிக்குப் புகழ் சேர்க்கும் பட்டுச் சேலைகள் பற்றி நான் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை பயணத்தில் நிகழ்ச்சிக்கு உடன் வந்திருந்த நண்பர்கள் ஆரணிக்கு வந்தால் ஆரணி பட்டு ஒன்று எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் எனக் கூறி விட்டதால், ஆரணி பட்டு பற்றித் தெரிந்து கொள்வோமே என நண்பர்கள் அழைத்துச் சென்ற கடைக்குச் சென்றேன்.

இவ்வாண்டு கைத்தறி நெசவாளர்களைப் பெருமை படுத்தும் வகையில் இரண்டு நிகழ்ச்சிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்தியிருந்தோம். வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் கைத்தறி சேலைகள், கைத்தறி நெசவாளர்கள், தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இடம் வகிக்கும் கைத்தறி கலையும் தொழிலும் என்ற வகையில் ஜூலை மாதம் நடைபெற்ற அந்த நிகழ்வில் கைத்தறி பற்றிய முதல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து டிரடிஷனல் இந்தியா அமைப்புடன் இணைந்தவகையில் செயல்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மிகச் சிறப்பாக கைத்தறி விழிப்புணர்ச்சி நாள் விழாவும் அக்கல்லூரியின் பெண்ணியத்துறையுடன் இணைந்த வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தி மாணவர்கள் மத்தியில் கைத்தறி சேலை பற்றிய கருத்துக்களைக் கொண்டு சென்றோம். அது மட்டுமன்றி இவ்வாண்டு தொடக்கத்தில் சேலம், கொல்லிமலை, சிங்களாந்தபுரம் ஆகிய பகுதிகளில் கிராமங்களில் மக்கள் இல்லங்களில் தறி வைத்து கைத்தறி சேலைகள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதைப் பேட்டி கண்டு பதிவாக்கியிருந்தோம்.

ஆரணி பட்டுச் சேலைகள் சென்னையிலும் கிடைக்கின்றன என்றாலும் இச்சேலைகள் நெய்யப்படும் இடத்திலேயே அவற்றைப் பார்த்து வாங்குவது என்பது ஒரு தனி அனுபவமே. என்னை நண்பர்கள் அழைத்துச் சென்ற இடம் ஒரு சிறிய கடை. ஒரு நெசவாளர் மாத்திரம் அங்குக் கடையில் சில சேலைகளைத் தரையில் விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவருக்கு ஒரு உதவியாளர் இளைஞனும் வந்து சேர்ந்தார்.

நான் பார்க்கவேண்டும் என்பதற்காகப் பல சேலைகளை அந்த நெசவாளர் விரித்துக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். ஆரணி பட்டுச் சேலைகளில் சேலையின் உடல் முழுவதும் அதிகமான ஜரிகை வேலைகள் உள்ளன. பல சேலைகளில் பல வர்ணங்கள் கலந்து கலை வேலைப்பாட்டுடன் பூ வேலைகள் செய்யப்பட்ட வகையில் அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சேலைகளில் தங்க நிற ஜரிகையே சேலையின் முழுமைக்கும் நிறைத்திருக்கும் வகையில் சேலை உருவாக்கம் அமைந்திருந்தது. பொதுவாக அதிக ஜரிகை சேர்த்த சேலைகளை நான் அணிவதில்லை என்பதால் சற்று திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன்.

எனக்கு எவ்வகையான நிறம் பிடிக்கும், எவ்வகையான பூ வேலைகள் உள்ள வகையான சேலை அமைப்பு பிடிக்கும் என அந்த நெசவாளர் கேட்க எனது விருப்பத்தைக் கூறினேன். அப்படியான சில சேலைகளை எடுத்து வரச் சொல்லி தனது உதவியாளரை அனுப்பி வைத்தார். நான் ஒரு சேலையாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் சற்றே சரிகை வேலைப்பாடுகள் குறைந்த ஓரிரு சேலைகளை மட்டும் எடுத்து வைத்துப் பார்த்தேன். அதில் ஒன்று என் கவனத்தை ஈர்க்கவே அதனையே தரும்படி கேட்டுக் கொண்டேன்.

உடனே அவர் சேலையை மிகுந்த கவனத்துடன் திறந்து விரித்து வைத்தார். சேலையின் முந்தானை பகுதியில் நூல்களைப் பிரித்து அவற்றிற்குக் குஞ்சம் போடத் தொடங்கினார். அவர் உதவியாளரும் இணைந்து கொண்டார். இக்காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. 10 நிமிடங்களுக்குள் முழுமையாகச் சேலைக்கு குஞ்சம் அமைத்து முடித்து விட்டனர்.

இந்தக் கைத்தறி சேலையைச் செய்ய ஒரு நெசவாளருக்குக் குறைந்தது 10 லிருந்து 15 நாட்கள் வரை ஆகும் என்றும், இச்சேலைகள் தனது வீட்டிலேயே உள்ள தறியில் நெய்யப்பட்டது என்றும் விளக்கினார். பிறகு நான் கைத்தறி நூல்கள் பற்றி விசாரிக்கவே, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மேலும் சில கைத்தறி சேலைகளை எடுத்து எனக்குக் காட்டினார். தங்க ஜரிகை இழைக்கப்பட்ட சேலைகளும் அதில் அடக்கம். ஒரு வெள்ளி சரிகை இழைக்கப்பட்ட சேலையையும் எனக்குக் காட்டினார். இத்தகைய சேலைகளைக் கைத்தறியில் செய்து முடிக்க நாட்கள் தேவைப்படும் என்றாலும் அப்படி யோசித்துத் திட்டமிட்டு வடிவமைக்கும் சேலைகள் அவற்றை வாங்கி அணியும் பெண்களின் வாழ்க்கையில் என்றென்றும் மனதில் மகிழ்ச்சியை நிறைத்திருக்கும் என்பதனையும் கூறினார்.

அவர் கூறியதும் உண்மைதான். சில பட்டுச் சேலைகள் குடும்பத்தில் பல ஆண்டுகள் நம்முடனேயே வாழ்கின்றன. என் தாயார் திருமணத்தில் கட்டிய சேலைகூட இன்று எங்கள் தாயாரின் நினைவாக எங்களுடன் இருக்கின்றது என்பதும் அப்போது எனக்கு நினைவில் வந்து போனது.

சேலைக்குக் காசு கொடுத்தோம், வாங்கிக் கொண்டோம் என்றில்லாது சேலையை வாங்குபவரிடம் கொடுப்பதே ஒரு சடங்காகச் செய்தார் அந்த நெசவாளர். நான் வாங்கிய சேலையை அழகாக அட்டைப்பெட்டிக்குள் வைத்து அதனை மகாலட்சுமி உருவப் படத்திற்கு முன் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி அதில் சந்தனம் பூசி குங்குமப் பொட்டு வைத்தார். சாமியை வணங்கிக் கும்பிட்டு அந்தச் சேலையை எனக்கு கைகளில் வழங்கினார்.

பொதுவாக ஒரு புடவைக்கடையில் பத்தாயிரம் சேலைகளுக்கிடையே ஒரு சேலையை வாங்குவது என்பது ஒரு இயந்திரத்தன்மையான நிகழ்வு. ஒரு கைத்தறி நெசவாளரிடம் நேரடியாகச் சென்று அங்கே, அச்சேலையைப் பார்த்து பார்த்து நூலினைக் கோர்த்து இழைத்து வடிவமைத்துக் கொடுத்த அந்த நெசவாளரின் கைகளிலிருந்து வாங்குவது என்பது பெருஞ்சிறப்பு. அந்தச் சிறப்பான அனுபவம் பெற வேண்டுமென்றால் வாய்ப்பு கிடைக்கும் போது நேரடியாகத் தமிழகத்தின் நெசவுத் தொழில் வாழும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நமக்குத் தேவையான சேலைகளை நெசவாளர்களிடமிருந்து வாங்குவோம்.

கைத்தறி நெசவாளர்களை ஆதரிப்போம்.
கைத்தறி நெசவு தமிழர் மரபு!



தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)