Wednesday, December 26, 2018

தேவாரத்தில் இராவணன்



—  விக்கி கண்ணன்



இராவணன் என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் இராமாயணக் கதைகள் ஞாபகத்துக்கு வரும். தேவார காலத்தில் இராவணன் என்று சொன்னால் சைவ அடியார்களுக்குக் கைலாயத்தை தூக்கிய காட்சி தான் ஞாபகத்துக்கு வந்திருக்கிறது. அதன் தாக்கத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தனது பதிகங்களில் மாறி மாறி இராவணனைப் பற்றி பாடியுள்ளனர். 

அப்பரும் சம்பந்தரும் முறையே ஒவ்வொரு தலங்களிலும் பத்து பாடல்கள் பாடியுள்ளனர். அதில் அப்பர் தனது பத்தாவது பாட்டில் இராவணன் கைலாயத்தை தூக்கிய காட்சியை ஒவ்வொரு தலங்களிலும் விவரிக்கிறார். இதேபோன்று சம்பந்தரும் தனது எட்டாவது பாட்டில் இராவணன் கைலாயத்தை தூக்கிய காட்சியை விவரிக்கிறார். இருவரும் கிட்டத்தட்ட தாங்கள் பாடிய 90 சதவீத தலங்களில் இக்காட்சியை விவரிக்கின்றனர்.  இராவணன், கரிய அரக்கன், தென்னிலங்கையின் மன்னன் எனப் பலவாறு குறிப்பிடப்படுகிறான். 

அப்பர் தனது பாடலில், "சிவந்த கண்களுடன் கைலாயத்தைத் தூக்கும் அரக்கனின் செயலால் நிலைகுலைந்த பார்வதியின் நிலைகண்டு, தனது காலின் பெருவிரலை ஊன்றி அந்த நடுக்கத்தை போக்குகிறார். இதனால் இராவணனின் 10 தலையில் சில நொறுங்குகின்றன. அவ் வலியைப் போக்க இராவணன் வீணை மீட்டிப்  பாடுகிறான். அந்த இசையில் மயங்கிய சிவன் இராவணனை ஆட்கொள்கிறார்". 

சம்பந்தர் தனது பாடலில்," கர்வத்தால் கைலாய மலையைத் தூக்கிய அரக்கனின் செயலை கண்டு, அவன் ஆணவத்தை அடக்க சிவன் தன் பெருவிரலை ஊன்றுகிறார். இதனால் இராவணனின் தலைகள் சிதறுகின்றன. நிலைகுலைந்த இராவணன், தன் செயலை மன்னிக்குமாறு வீணை மீட்டிப்  பாடுகிறான். அந்த இசையில் மயங்கிய சிவன் இராவணனை ஆட்கொள்கிறார்." 

இருவருமே ஒரே கதையை வெவ்வேறு வடிவில் சித்தரிக்கின்றனர்.  இருவரின் பாடல்களுள் சில.. 




திருநாகை காரோணத்தில் அப்பர் பாடிய பாடல்; 
"கருமலி கடல்சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ, டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத் திண்ணம்நாம் உய்ந்த வாறே." 

கைலாயத்தில் அப்பர் பாடிய பாடல்; 
"கற்றனன் கயிலை தன்னை காண்டலும் அரக்கன் ஓடி
செற்றவன் எடுத்த வாறே சேயிழை அஞ்ச ஈசன்
உற்றிறை ஊன்றா முன்னம் உணர்வழி வகையால் விழுந்தான்
மற்றிறை ஊன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே." 

திரு அனேகதங்காவதம் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல்; 
"ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்ப தணிவான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே" 

திருநறையூர் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல்; 
"கரையார் கடல்சூழ் இலங்கை மன்னன் கயிலை மலைதன்னை
வரையார் தோளா லெடுக்க முடிகள் நெரித்து மனமொன்றி
உரையார் கீதம் பாட நல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார் புனல்சூழ் செல்வ நறையூர் சித்தீச் சரத்தாரே." 

இதேபோன்று பல பதிகங்களில் இந்தக் கதை பாடப்பட்டுள்ளது. வெறும் இலக்கியமாக மட்டும் இல்லாமல் பல்லவர் காலத்தில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து பூக்கடை சத்திரம் செல்லும் சாலையில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது "முக்தீஸ்வரர் கோவில்". கிபி 8 ஆம் நூற்றாண்டில், மூன்றாம் நந்திவர்மனின்  காலத்துக் கோவிலாக சொல்லப்படும் இக்கோவிலில் இராவணன் கயிலை மலையைத் தூக்கும் அழகிய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சிவனும் பார்வதியும் மேலே அமர்ந்திருக்க, விரல் அழுத்தத்தால் நிலைகுலைந்த இராவணனின் நிலை காட்டப்பட்டுள்ளது.



தொடர்பு: விக்கி கண்ணன்  (vickysrinivasan8@gmail.com) 







No comments:

Post a Comment