Thursday, December 20, 2018

ஆணுக்குள் இருக்கும் பெண்! —  முனைவர் க.சுபாஷிணி

 தமிழகத்தில் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் தொண்டை மண்டலத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை தெருக்கூத்து, நால்வகைக் கூத்துக்கள், மேடை நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்த்துக் கலைகளாகும். இந்தக் கலைகளில் தேர்ச்சி பெற்ற பாரம்பரியக் கலைஞர்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் தொண்டை மண்டல கிராமங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரம் அவர்களுக்கு ஒருபோதும் கிடைப்பதில்லை. ஆனால், இந்த வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பற்றியோ, புறக்கணிப்பு போன்ற கேடுகளைப் பற்றியோ இந்தக் கலைஞர்கள் கவலைப்படுவதில்லை; அவர்கள் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை.


ஒருநாள் தொடங்கி நாள் முடிகின்ற வரையில் ஒவ்வொரு நொடியும் அவர்கள் அசலான கலைஞர்களாக தமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் டால்ஸ்டாய் சொல்வது போல, வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கலை அம்சங்கள் பொதிந்துள்ளன, வெளிப்படுகின்றன என்பதின் அசலான சான்றுகள் இந்தக் கலைஞர்கள். இவர்களது அன்றாட வாழ்க்கை பெரும் பொருளாதாரப் போராட்டத்துக்கு இடையிலேயும் உடல்நலக் கேடுகளுக்கு இடையிலேயும் சிக்கிக்கொண்டிருந்தாலும், இவர்கள் தமது கலை வாழ்க்கையை விடாப்பிடியாக பிடித்துப் பயணிக்கிறார்கள். கடினமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தாலும் அரிதாரத்தைப் பூசிக்கொண்ட அடுத்த நொடியில் தமது வாழ்வின் துன்பங்களை மறந்து கலைப் பணியில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் நிகழ்த்தப்படும் நாடகக் கலைகளின் கதைகளிலிருந்து நவீன நாடக உலகம் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த அடிப்படை அம்சத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் நாளந்தா கலை பண்பாட்டு இயக்கம். இதனைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியவர் டாக்டர் அமைதி அரசு. தமிழ் நவீன நாடக உலகில் மிக முன்னோடியான கலைஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கிவருபவர். இவர் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய முன்முயற்சியில் நாளந்தா கலை பண்பாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் நவீன நாடகக் கலையை வளர்த்தெடுக்கும் ஒரு நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.இந்த அமைப்பின் தலைமையகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை டாக்டர் அமைதி அரசு, டாக்டர் பழனி கூத்தன், எழுத்தாளர் கௌதம சன்னா, ஆசிரியர் புருஷோத்தமன், செல்வம், திருப்பதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்துத் தொடங்கியிருக்கின்றனர். கலைஞர்களைப் பற்றிய பேட்டிகள், நாடகப் பயிற்சிகள், ஆய்வுகள், பயிலரங்கங்கள் என ஏராளமான கலைச்சேவைகளை இக்குழு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்த்தியிருந்தாலும் இடையில் ஏற்பட்ட தொய்வுக்குப் பின்னர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தமது கலை சார்ந்த நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.

ஆரணியில் உள்ள நாளந்தா கலை பண்பாட்டு அமைப்பின் தலைமையகத்தை 10.11.2018 அன்று மாலை எழுத்தாளர் கௌதம சன்னா திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவுக்குப் பிறகு இந்த அமைப்பின் சார்பில் தெருக்கூத்துக் கலையில் பெண் பாத்திரம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. “தமிழ் நாடகத்தில் பெண் புனைவு - அழகியலும் உடல் அரசியலும்” என்ற பொருளில் அமைந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அமைதி அரசு. சிறப்பு வருகை புரிந்தவர் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.க. சுபாஷிணி மற்றும் பேராசிரியர் பிரியதர்ஷினி ஆகியோர். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் கௌதம சன்னா, திரைப்பட இயக்குநர் கோபி நயினார், அலெக்ஸாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நாடகக் கலைஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் தேர்வு செய்யப்பட்ட ஐந்து தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை சுபாஷிணி, கௌதம சன்னா, தமிழ்த்திரைப்பட இயக்குநர் கோபி நயினார் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்துரையாட வந்த தெருக்கூத்து பெண் பாத்திரம் ஏற்கும் கலைஞர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டு அவர்களிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன. அக்கேள்விகள் அனைத்தும் அவர்கள் பின்பு பெண் பாத்திரத்தை ஏற்கும்போது உருவாகின்ற உளவியல் மாற்றங்களை மையப்படுத்தி இருந்தன. இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் ஒப்பனை இன்றி பதில் சொல்ல வேண்டும் என்பது முன் நிபந்தனை. இதற்குப் பதில் சொல்லும்போது அவர்கள் மிகுந்த தடுமாற்றத்திற்கு ஆளானார்கள். சில கலைஞர்கள் பேச முடியாமல் இறுக்கமாக இருந்தார்கள். பேசியவர்களும் ஒரு சில வார்த்தைகளோடு முடித்துக்கொண்டார்கள். அவர்களின் கருத்துக்களைத் தொகுத்தும் பெண் புனைவு பற்றிய தமது ஆய்வுகள் பற்றிய செய்திகளை வழங்கியும் டாக்டர் அமைதி அரசு சுருக்கமான உரை நிகழ்த்தி அந்த அமர்வை நிறைவு செய்தார்.


பிறகு அரை மணி நேரம் நாடக கலைஞர்களுக்கு அரிதாரம் அல்லது ஒப்பனை செய்துகொள்வதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டது. அவகாசம் முடிந்த பிறகு முழுமையான பெண் ஒப்பனையோடு கலைஞர்கள் மேடையேறி கருத்தரங்கை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்கள். சாதாரண ஆண்களாகத் தோற்றம் அளித்தவர்கள் அரை மணி நேரத்தில் முழு பெண்களாக தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் மாறி மேடையில் வந்து அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு பேராளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

'ஒப்பனை செய்கின்றபொழுது எப்படி மனத்தைத் தயார் படுத்திக் கொள்கின்றீர்கள்? அதாவது ஆணாக இருந்து பெண்ணாக மாறுகின்ற அந்த இடைப்பட்ட நேரத்தை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று டாக்டர் சுபாஷிணி கேட்டார்.

ஒப்பனைக்கு முன்பு அமைதியாக இருந்த கலைஞர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் மடை திறந்த வெள்ளம் போல் சரளமாகப் பேசத் தொடங்கினர். ஒப்பனை செய்துகொண்டிருந்த அந்த நேரத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாகக் குறிப்பிட்டார்கள். பெண் தோற்றத்தில் கூடுதல் தைரியம் ஏற்படுவதாகவும், தாங்கள் மிக இயல்பாக தங்களை மக்கள் முன் வெளிப்படுத்துவதில் மகிழ்வதாகவும் தெரிவித்தனர்.

அன்றைய நிகழ்வைத் தமது கலை வாழ்க்கைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகக் கருதுவதாகவும் அவர்கள் கூறினார்கள். இதுகாறும் தம்மை யாரும் கவுரவிக்காத சூழலில் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மன மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் ஓரிருவர் தெரிவித்தனர். பொதுவாகவே ஒரு நாடக நிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் தங்களைப் பெண்களாகவே நினைத்து பெண்களிடம் நடந்து கொள்வதை போலவே தங்களிடம் நடந்து கொள்வது போன்ற பிரச்சினைகளை அனுபவித்திருப்பதையும் பதிவுசெய்தனர்.

தொடர்ந்து பேராசிரியர் அமைதி அரசு பேசுகையில், பெண் கலைஞர்கள் தமது ஒப்பனையில் பெண்களை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஒப்பனையை மேற்கொள்ள விரும்புகிறார்கள். பெரும்பாலான நேரத்தில் அவர்கள் அதில் வெற்றியும் பெறுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். அந்தக் கருத்தை மேடையிலிருந்த கலைஞர்கள் அத்தனை பேரும் உறுதி செய்தார்கள்.


ஒவ்வோர் ஆணுக்குள்ளும் பெண் உணர்வுகள் இருப்பதுபோல, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் உணர்வுகள் இருப்பதைப் போல, இந்தப் பெண் கலைஞர்கள் தங்களுக்குள் இருக்கின்ற பெண் உணர்வுகளை உடல்மொழியாகவும் வெளிப்படுத்துவதன் வழி நாடகத்தில் பெண் கதாபாத்திரம் ஏற்று நாடகம் நிகழ்த்தப்படுகிறது. இத்தகைய அனுபவம் இக்கலைஞர்களுக்குத் தனக்குள் இருக்கும் பெண் உணர்வுகளோடு இணைவதற்கு இந்த நிகழ்த்துக் கலையும் வாய்ப்பளிக்கிறது என்கின்ற நிலையினால் இவர்கள் முழுமையாக இந்தப் பெண் பாத்திரங்களில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் காண்கிறார்கள் என்றும் அமைதி அரசு விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலைஞர்களுக்கு சான்றிதழ்களும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன. அனைத்துக் கலைஞர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

நாளந்தா கலை பண்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழா தமிழகத்தில் புதுமையான ஒரு முயற்சி என்பதில் சந்தேகமில்லை. அரிதாரம் பூசுவதற்கு முன்பும் பின்பும், கலைஞர்களின் மனநிலையை அவர்களுடைய சொந்த சொற்களாலேயே மக்கள் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவியது.

இது ஒரு தொடக்க நிகழ்ச்சிதான். இன்னும் விரிவாக இந்த அம்சத்தில் ஆய்வதற்கு இது ஒரு தொடக்கப்புள்ளி என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர். இத்துறையிலான ஆய்வுகளும் தரவுகளும் விரிவடைய பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.


நன்றி: மின்னம்பலம் இணைய இதழ்

தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)

No comments:

Post a Comment