— தேமொழி
யானைக்கும் இந்து மதத்திற்கும் இருவகையில் தொடர்புள்ளது...
சிற்பங்களில் சிலவற்றிலும், ஓவியங்கள் சிலவற்றிலும் ஒன்பது பெண்கள் இணைந்து ஒரு யானை உருவம் காணப்பெறும். இராஜஸ்தான் ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ளதாகக் காட்டப்பெறும் ஒரு மரச்சிற்பமும், திருக்குரங்குடி கோயிலின் ஒன்பது பெண்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் யானைச் சிற்பமும் எடுத்துக்காட்டுகள் (மேலும் பல சிற்பங்களும், படங்களும் இணையத் தேடலில் கிடைக்கப் பெறுகின்றன).
ஆங்கிலேயர் காலத்தில் இஸ்லாம் கிறித்துவ சமயங்கள் அல்லாத பிற இந்திய மண்ணின் சமயங்கள் இந்து சமயம் என வகைப்படுத்தப் பட்ட பொழுது இவ்வாறு அதிகாரப்பூர்வமாக வேத அல்லது வைதீக மதத்தின் பற்பல உட்பிரிவுகள் இந்துமதம் எனப் பெயர் பெற்றது என்பது வரலாறு.
ஆங்கிலேயர் காலத்தில் இவ்வாறு பெயர் பெறும் முன்னரும் இந்திய மண்ணின் பற்பல வட்டார வழிபாடுகள், தெய்வங்கள் யாவும் ஒருங்கிணைக்கப்பட்டதும் வரலாறு. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இதன் துவக்கம் எனவும், ஆதி சங்கரர் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை வணக்கும் ஆறு உட்பிரிவினரை ஸ்மார்த்தம் என்பதன் கீழ் தொகுத்ததாகவும் வரலாறு கூறும்.
இச்சமயங்கள் யாவும் பிறப்பு இறப்பு, கடவுளின் தோற்றம், சமயத் தத்துவங்கள் என்று தனிப்பட்ட கருத்துகளைக் கொண்டவை. இருப்பினும் வேதம் கூறும் கடவுள்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட புராணக் கதைகளுடன் யாவும் ஒருங்கே வளர்ந்தன. இவற்றில் கொள்கை மாறுபாடு கொண்டவர்கள் சிலரும் சமணம் பௌத்தம் சீக்கியம் என ஒவ்வொரு காலகட்டத்தில் பிரிந்து போனதும் வரலாறு. இந்துமதக் குடையின் கீழ் இருக்கும் சைவம், வைணவம் என்றாலும் அவர்களுக்குள்ளும் கொள்கை அடிப்படையில் பிரிந்து போனவர்கள் உண்டு. இரண்டாம் குலோத்துங்கன் தில்லை கோவிந்தராஜரைக் கடலில் போட்டதும் வரலாறு. இன்றுவரை லிங்காயத்துகள் தாங்கள் தனி மதம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வழிபடுவது வேத மதக் கடவுள் என்றால் அவர்கள் இந்து மதத்தினர் என்றுதான் கூறவேண்டும் என்றும் சர்ச்சையில் இருப்பதுதான் இந்து சமய உலகம்.
இதில் புறச்சமயங்களுக்கு போட்டியாக மக்களை ஒருங்கிணைக்கும் திட்டங்களும் அவ்வப்பொழுது அரங்கேறின. தங்களை எண்ணிக்கையில் பலப்படுத்திக் கொள்ள வட்டார நாட்டார் வழிபாடு, மூதாதையர் வழிபாடு முறைகளும் உள்வாங்கப்பட்டு எல்லாவற்றையும் ஒரே கடவுள், அவர்களின் அவதாரங்கள், கடவுளரின் உறவினர்கள் என்ற பற்பலக் கதைகளுடன் ஒருங்கிணைப்பு நடந்து வந்துள்ளதும் உண்மை.
இதில் உச்சக் கட்டமாக இஸ்லாமியரையும் பௌத்தரையும் உள்ளிழுக்கும் முறையும் நிகழ்ந்தது. அதற்கு இஸ்லாமியரை எதிர்த்த விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகராகிய திருமால் தங்கை திருமணம் காண வருதல், வழியில் இஸ்லாமிய பெண் வீட்டில் தங்குதல் போன்ற கதைகளும் உண்டு. அதே போல திருவரங்கத்தில் இஸ்லாமிய தொடர்பு காட்டப்பெறும், பூரி ஜகந்நாதர் கோயிலும் அங்குள்ள வட்டார மக்களின் வழிபாடு முறையை உள்வாங்கிய நிலை ஆகியன இந்த இணைப்பு முயற்சிக்கு மேலும் சில சான்றுகள். புத்தரும் பத்து அவதாரங்களில் ஒன்றாகிப்போனார். இவர்கள் கடவுளருக்குள்ளும் யார்தான் பெரியவர் என்ற போட்டி.
வடநாட்டில் இருப்போருக்கும் தென்னாட்டில் இருப்போருக்கும் சடங்குகளில் வழிபாட்டு முறைகளில் எனப் பல வேறுபாடுகள் உண்டு.
இருப்பினும் அனைத்து உதிரி வழிபாட்டு பின்னணியினரும் ஒன்பது பெண்கள் யானை போல ஒன்றிணைந்து உள்ளார்கள்.
அதற்குத் தீவிர இந்துமத சமயத்தலைமையும் முழுமூச்சுடன் செயல்படுகிறது. இந்தியா எனில் இந்துமதம் என்ற கொள்கையை ஆணித்தரமாக நம்பும், நம்ப வைக்கும் நடவடிக்கை இது.
யார் துவங்கினார் என அறிய இயலாத வரலாற்றுத் தொடக்கத்தில் இந்துமதத்தின் தோற்றப்பெருமை பேசப்படுகிறது. என்றும் நிலைத்திருக்கும் வாழ்க்கைத் தத்துவம் என்ற முறையில் சனாதன தர்மம் என்று பெருமிதம் பேசப்படுகிறது.
இருப்பினும் வேதமதத்தின் உண்மையான உறுதியான கட்டமைப்பு வர்ணாசிரம தர்மம் என மக்களுக்குள் பிரிவினை பேசும் அடிப்படை மட்டுமே. அது இல்லாது அவர்களால் இந்தியாவில் மட்டுமல்ல அயல்நாட்டிலும் வாழ முடியவில்லை என்பதுதான் நடப்புலக நிலை. இதில் மக்களுக்குள் பேதம் கற்பிக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்பட்டு, பெண்ணுரிமை பறிக்கப்பட்டு, பல சமயங்களில் ஒடுக்கப்பட்டவர் உயிரும் வாழ்வும் பறிக்கப்படுவது வர்ணாசிரம தர்மம் என்ற கோட்பாடு கொடுத்த பரிசுகள். அது பரிணாம வளர்ச்சி பெற்று தொழில் அடிப்படையைப் பிறப்பு அடிப்படையில் உறுதி செய்த வாழ்க்கைமுறையின் தத்துவ வெளிப்பாடு.
இந்தப் பிரிவுகளை அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் விரிவாக விளக்கத் தேவையுமில்லை. அதன் அடிப்படை, படிநிலையில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என மக்களைப் பிரித்து வைத்திருந்த நிலை. இந்த அடுக்குமுறையில் யாரும் யாருக்கும் சமமல்ல. ஆனால் ஒவ்வொருவருக்கும் தான் யாருக்கோ உயர்ந்தவர் என்றும், தனக்குக் கீழாக யாரோ இருக்கிறார்கள் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லை. அதில்தான் வர்ணாசிரம தர்மத்தின் வெற்றியே அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்ட தொழில் மற்றும் வாழ்க்கைமுறை இன்றைய நாகரிக உலகில் அடிபட்டுப் போனாலும், சட்ட முறையில் மறுக்கப்பட்டாலும் புரையோடிப் போன இனபேதம் ஆணவக்கொலைகள், சாதிக்கொலைகள் வரை பக்கவிளைவுகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது...இருக்கும்.
கடவுள் மறுப்பு வேத மறுப்பு சொல்வோரையும் தன்னுள் இந்துமதம் ஏற்றுக் கொள்கிறது என்போர் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. அவ்வாறு பேசியவர்கள் இன்றுவரை மாற்றுக்கருத்து பேசியதால் கொல்லப்பட்டவர்களை மறப்பவர்கள் இவர்கள். 2010 இல் இருந்து மறுத்துப் பேசியவர் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது இவர்களுக்கு நினைவு வருவதில்லை*. உண்மை நிலையும் நடப்புலகமும் வேறு வேறு. கௌரி லங்கேஷ் யார்? தபோல்கர், பன்சாரே, கல்புர்கி உயிரிழந்த காரணம் என்ன ?
அனைவரிடமும் பேதம் காட்டவில்லை என்போர்கள் இந்திய குற்றவியல் தரவுகள் காட்டும் ஒடுக்கப்பட்டோர் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை குறித்து அலச விரும்பாதவர்கள். இன்றுவரை சபரிமலை என்று பெண்களின் வழிபாட்டுரிமை போராட்டமாக இருப்பதை வசதியாக மறந்து போனவர்கள். இவர்களுக்கு எங்கே ஒரு காலத்தில் கோவிலுக்குள் நுழைய ஒடுக்கப்பட்டவர் மறுக்கப்பட்டதும், தாய்மொழியில் வழிபாடு செய்யும் உரிமை மறுக்கப்படுவதும், சதி என்று கைம்பெண்ணை கணவனுடன் எரித்ததும், அவர்கள் கணவன் இறப்பிற்குப் பிறகு வெள்ளை கருப்பு ஆடைகளுடன் சீருடையில் வலம் வந்ததும் நினைவிருக்கும். இன்று விருந்தாவன் கைம்பெண் என்ற மனித உரிமை மீறலின் விளைவுதான் என்பதும் கூட நினைவு வராதே. மாய உலக மயக்கம். வண்ணக்கண்ணாடி வழியே வாழ்க்கையைப் பார்க்கும் மனப்பான்மை அல்லது மனப்பக்குவமின்மை.
கடந்த காலத்தில் ஒரு சிலருக்கு கல்வி மறுக்கப்பட்டது, சொத்து மறுக்கப்பட்டது, உணவில் உடையில் கட்டுப்படுத்தப்பட்டதும் நினைவு வராது. இன்றுவரை மாட்டுக் கொலை என்று மாட்டிறைச்சி சாப்பிடுபவரை மனிதக் கொலை செய்வது குறித்தும் கண்ணை மூடிக் கொள்பவர் பலர். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி தொடரமுடியாது தற்கொலை நிகழ்வுகள் எதன் பக்க விளைவு என்பது தெரியுமா? அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மதக்கோட்பாட்டின் பக்க விளைவா அது?
பிரிந்து போகிறேன் என்று போராட்டம் செய்பவர் ஒரு புறம் இருக்க, பிரிந்து போனவர் ஒருபுறமிருக்க, உள்ளிருப்பவரும் நான் எப்படி இந்தக் கும்பலில் சேர்க்கப்படுகிறேன் என்று குழம்பித் தவிக்கும் நிலையில் தங்களை இந்துமதத்தில் அடையாளம் காணமுடியாமல் இருக்கும் நிலையைக் கண்டால் இந்துமதம் என்பது மீண்டும் யானையைத்தான் நினைவு படுத்துகிறது.
மதம் என்ற வழியில் செல்வதால் மதம் பிடித்து ஓடி மசூதியை உடைப்பதால் அல்ல அது.
யானையைக் கண்ட குருடர் கதையை நினைவு படுத்துகிறது ஒவ்வொருவரும் தங்களின் கோணத்தில் இந்துமதம் என்பது என்னவென்றும், கொள்கைகள் என்னவென்றும், வாழ்க்கைமுறை என்னவென்றும் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள சமயம் இந்துமதம். குருடர்கள் யானையைத் தடவித் தடவிப் பார்த்து அவரவர் கோணத்தில் விளக்கம் சொல்லும் நிலைதான் இந்துமத யானையின் நிலை.
அதற்குச் சான்று அவர்களுக்கு என்று தலைமை, சமய நூல், சமயக்கட்டுப்பாட்டு தலைமை இல்லாத நிலை. இருக்கவும் முடியாது. ஏனெனில் அது உருவாக்கப்பட்ட நிலை அவ்வாறு. கிவ் அண்ட் டேக் பாலிசியில் அமைக்கப்பட்ட அரசியல் கூட்டணி போன்றது. பல வழிபாட்டுமுறைகளையும் ஒருங்கிணைத்த நிலையில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாத ஒரு நிலை. அவ்வாறு கட்டாயப்படுத்தினால் அவரவரும் பிய்த்துக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விடுவார்கள் என்பதுதான் உண்மைநிலை. ஐயமிருந்தால் லிங்காயத்துகளை நினைவு கூரவும்.
_________________________________________________________________________________
தொடர்பு: தேமொழி (jsthemozhi@gmail.com)
No comments:
Post a Comment