Thursday, December 20, 2018

கைத்தறிக்குக் கைக்கொடுப்போம் — முனைவர்  அரங்கமல்லிகா

நெசவுத் தொழில் 5,000 வருடங்கள் பழமை வாய்ந்தது.  சிந்து  சமவெளி நாகரிகச் சின்னங்களிலும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி,கொழு,நெல், உமி ஆகியவற்றுடன் பழைய இற்றுப்போன பஞ்சாடையும் கிடைத்துள்ளன.  தமிழகத்தில் இராஜராஜசோழன் காலத்தில் நெசவுத்தொழில் செழிப்புற்று வளர்ந்துள்ளது. உறையூரில் முன்காலத்தில் நெசவுத்தொழிலுக்குச் சாயமிடும்  தொட்டிக் காணப்பட்டதாகவும், உறையூரில் நெசவு செய்யப்பட்ட சேலைகள்  ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக்கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்தது எனவும் கூறுகின்றனர். சங்க இலக்கியத்தில், குறிப்பாகத் தொல்காப்பியம் ”உடைபெயர்த் துடுத்தல்” என்று கூறுகிறது. பண்டைக்காலத்தில் பெண்கள் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தியார் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆடை கலாச்சாரம் பன்மைத்துவமானது. இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் அந்நியர்கள் இயந்திர நூற்பாலைகளை வைத்துத் துணி நெய்தபோது அண்ணல் காந்தியடிகள் கதராடையை நூற்று  அதனை அரசியலாக்கினார். நெசவாளிகள், விவசாயிகள் தமிழகத்தின் ஜீவநாடிகள். இன்றைக்கு  விசைத்தறி கொண்டு குறைந்த நேரத்தில் குறைந்த முதலீட்டில் அதிகம் உற்பத்தி செய்வதால், நெசவாளிகள் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் இடம் பெயர்கின்றனர். நெசவாளிகள் குறைந்த விலைக்குத் தயாரிக்கமுடியாத சூழலும் நிலவுவதால் தொழிலில்   பின்தங்கியுள்ளதோடு 60% நெசவாளிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் எனவும் ஓர் அறிக்கைக் கூறுகிறது.

மைய அரசும்  இந்தியா  ஹேண்ட்லூம் முத்திரையோடு வேறுவேறு அடையாளத்துடன் துணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இடைத்தரகர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்ட கடையனிலும் கடையராய் மாறியுள்ளனர். இச்சூழலில் எத்திராஜ் மகளிர் கல்லூரி, மகளிர்  கல்வி  மையம்  பெண்ணியம் தொடர்பாகப் பெண்கள் தொழில் முனைவை ஊக்கப்படுத்த எண்ணி  ”கைத்தறிக்குக் கைக்கொடுப்போம்” என்ற தலைப்பில் ஜெர்மனி வாழ் முனைவர் க. சுபாஷிணி அவர்களின் தலைமையில் இயங்கும்  தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியை 25.10.18 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தியது.  நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் திரு.வி.எம்.முரளிதரன் அவர்கள் நெசவுத்தொழிலாளர் அடிப்படை வாழ்வாதாரம் பெற  அவர்களுக்கு உதவும் வகையில் பெண்கள் கல்லூரியில், கைத்தறி ஆடை உடுத்துவதை அங்கீகரித்து  கைத்தறிக்குக் கை கொடுக்க ஆதரவு அளித்தார்.

ஜெர்மனியிலிருந்து நிகழ்வுக்கு  வருகை தந்திருந்த  முனைவர் சுபாஷிணி, அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின்  ஃபெட்னா(FeTNA) விழாவில் நடந்த தமிழ் மாநாட்டில்  நெசவுத்தொழில் வளம் குறித்துப் பேசியதைச்சுட்டிக்காட்டினார். அந்நிகழ்வில் பெரும் ஆதரவோடு நாம் விரும்பியவாறு ஆடையின் வடிவம், டிசைன் மாற்றிக்கொள்ளலாம் என்பதைச் சொல்லி  தான் திருவள்ளுவர் உருவத்தைச் சேலை முந்தியில் அச்சிட்ட ஒரு சேலையை உடுத்திக்கொண்டதைப் பெருமையோடு சொல்லி மகிழ்ந்தார். மாணவிகளிடம் கதர் ஆடை உடுத்த  அவர் அனுமதி கேட்க, குழுத்தலைவர் ஒப்புதலையும்  வழங்கினார்.இந்நிகழ்வில் கைத்தறி ஆடை காட்சியில் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள்  மேடையை அழகுபடுத்தி தமிழகத்தின் பாரம்பரிய சேலை உடுத்தும் கலாச்சாரத்தை நினைவுபடுத்தி மாற்றம் நமக்குள் வரவேண்டும் எனச்சொல்லி அசத்தினர்.சேலத்திலிருந்து  வந்திருந்த கைத்தறி ஆடை நெய்யும் தொழிலாளி திருமதி அல்லி மன நெகிழ்வோடு நன்றி தெரிவித்தார். வையகத்தில் சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக் காரிகையார் தாரால் கலை செய்யும் என்பதை உறுதிப்படுத்த எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள் தாங்கள்  எழுப்பிய பெரும் ஆரவாரத்தில் கைத்தறி ஆடை பறக்கத்தொடங்கியது.

கிராமப்புறத் தற்சார்பு வாழ்வைப்  பெண்கள் அடைய, பொருளாதார அடிப்படையில் அவர்கள் மேன்மை பெற  பெண்களுக்குத் தொழில் முனைவு அவசியம் என்பதை உறுதிப்படுத்திப் பேசினார் பேராசிரியர் அரங்கமல்லிகா.

இந்நிகழ்வில்  மாணவிகள் கைத்தறி ஆடை வாங்க குறைந்தது 700 ரூபாய் என்றாலும் 6,000 மாணவிகள் படிக்கும்  கல்லூரியில் ரூ. 42,00,000/=  கிடைக்கும். இது ஒரு சிறு கணக்குதான். மாணவிகளும்  தமிழ்க்கலாச்சார உடையோடு உலாவருவதில் பெருமகிழ்வு அடைவர் . இதை, கல்லூரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நலிந்த நெசவாளிகள் வாழ்வாதாரம் பெறுவர்.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர்  பேராசிரியர் அரங்கமல்லிகா, இயக்குநர், மகளிர் கல்வி மையம், எத்திராஜ் மகளிர் கல்லூரி.

தொடர்பு: பேராசிரியர் அரங்கமல்லிகா (arangamallika@gmail.com)
No comments:

Post a Comment