Tuesday, July 31, 2018

பெண்மை வாழ்கவென்று...

——    வித்யாசாகர்




பல்லிடுக்கி பனிக்குடம் உடைந்து
எலும்புகள் அகல உயிர்நிலை கிழிந்து
பாலூட்டி பச்சைமார்பு வெடித்து
பத்தியம் சகித்து பகலிரவு வெறுத்து
எனக்காய் மறுஜென்மம் பெற்றவளே..
எனதுயிர் அம்மாவே!!

தாயாகி மகளுமாகி முதலுமாகி
கடைவரைக் காப்பவளாகி,
கண்ணுக்குள்ளே தீயூட்டி கற்பினுள்ளே
காமம் பிசைந்து;
களங்கமில்லா வாழ்க்கை வாழ
இரண்டாம் வரம் தந்தவளே..
மணம் கொண்டவளே.. என் துணையாளே!!

எனை முழுதாய் விழுங்கி நானாய் தெரிந்தவள்
நானாய் வாழ நல்அப்பனைச் செய்தவள்
பெயரை கடமைக்குச் சேர்க்காமல்
உயிருக்குள் போட்டவள்,
உரிமையைக் கூட யாருக்கோ கொடுப்பதை
எனக்காய் ஏற்றவளே, என் மகளே!!

முத்தத்தால் எனை வளர்த்து முழுமூச்சு
நீ நினைத்து, பித்தென ஆகி என்னால்
பிசைந்த சோற்றோடு பண்புகளூட்டி,
பெற்றவளே தான்போல உன்
பன்மாத தூரத்திலும்
எனைவிட்டகலாத என்னக்காளே, உயிரானவளே!!

அண்ணாவின் அர்த்தத்தில் அப்பாவைச் சேர்த்தவளே
அன்பு அன்பென்று ஈந்து பிறவிப்பிணிக் கொன்றவளே
பொன்னும் பொருளும் கேட்போர் மத்தியில்
அண்ணனை மட்டும் கேட்டவளே,
தாய்மையை முன்பே போதித்தும், என்
தங்கையாய் யானவளே.. பேரன்புத் தங்கையே!!

சுட்டதும் கைவிட்ட இனிப்பல்ல நீ
உயிர் விட்டாலும் மாறாத அறத்தின்
அன்பு நீ,
கண்டதும் கேட்டதும் பார்த்ததுமல்ல;
உடன் வாழ்ந்த உயிர்பூச்சு நீ, உள்ளக்
கோயில் நீ தோழி; உள்ளே சாமியும் நீ தோழி!!

பட்டப்பகலை இருட்டாக்கி
இருட்டின் அழகை உனக்காக்கி, உன்போல்
காணா குருடென்று, இப்பவும்கூட எனையாளும்
எந்தாய் நிலம் போல் என்னுள்
நீக்கமற நிறைந்தவளே
கண்ணுக்குள் காதல் வரைந்தவளே, என்னவளே காதலியே!!

தெய்வம் யார் நீதானென்பேன்
தாயைக் கேட்டால் நீயே என்பேன்
தமக்கை தோழிக்கும் நீயே முதலென்பேன்
ஏற்கவேண்டியதை கற்கப் பணித்தவளே
'அ' எனில் அம்மா என்றவளே
யென் ஆசிரியப் பெரும்பேறே.. குருவே!!

பெண்ணே மொத்தத்தில் உனை
வணங்குதலன்றி வேறென்னச் செய்வேன் ?
“பெண்மை வாழ்கவென்று” புகழாது
பணியென்னக் கேட்பேன்??
தமிழுக்குள் உனையன்றி சிறக்க
சொல்லெங்கே கொய்வேன்? பெண்ணே;

நீயின்றி யில்லை உலகு, நீயே யெம் ஆதி மரபு!!


________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)




Monday, July 30, 2018

தமிழில் எதிர்மறை வினை – கால்டுவெல்

—  முனைவர் க.பசும்பொன்.




‘திராவிட மொழி நூலின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் இராபர்ட் கால்டுவெல். தனது சமயப் பணியை நிறைவேற்ற தமிழ்மொழி அறிவு அவசியம் என்பதை உணர்ந்த கால்டுவெல் தமிழை முறைப்படி கற்றவர். 

இந்திய நாட்டில் வழங்கும் மொழிகள் அனைத்தும் ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்று ஐரோப்பிய மொழி நூலறிஞர் நெடுங்காலமாக எண்ணியிருந்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நேபாள நாட்டில் பெரும்புகழ் பெற்று விளங்கிய ஹாட்சன் என்னும் அறிஞர் நடு இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கப்படும் மொழிகளில் அமைந்த சொற்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்ந்து செய்தித்தாள்களில் வெளியிட்டார். அச்சொற்களைக் கற்றுத் தெளிந்த ஐரோப்பிய அறிஞர் அக்கருத்தினின்று வேறுபட்டு ஆரிய இனத்தைச் சேராத மொழிகளும் இந்தியாவில் வழங்கி வருகின்றன எனக் கருதினார்கள். 

மும்பை நகரத்தில் பல ஆண்டுகள் நீதிமன்றத் தலைவராக விளங்கிய ‘பேறி’ என்பவர் வட இமயம் முதல் தென் குமரி வரை வழங்கப்படும் மொழிகளின் பரப்பையும் சிறப்பையும் ஆராய்ந்து தாம் கண்ட உண்மைகளைக் கட்டுரைகளின் வழியே வெளிப்படுத்தினார். வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவை என்றும் தென்நாட்டில் வழங்கப்படும் மொழிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்தவை என்றும் அவர் அறிந்து உணர்த்திய கொள்கை ஐரோப்பிய நல்லறிஞர் கருத்தைக் கவர்ந்தது.

இந்நிலையில் மலையாள மொழியினைக் ‘குந்தார்த்தர்’ (Dr.Gundert) என்னும் ஜெர்மானியப் புலவரும் கன்னட மொழியினைக் ‘கிட்டல்’ என்பவரும் தெலுங்கு மொழியினைப் ‘பிரௌன்’ என்பவரும் கற்றுத் தேர்ந்தனர். நீலகிரியில் வாழும் தோடர் மொழிச் சொற்களைப் போப்பையர் திரட்டித் தந்தார். இங்ஙனம் ஒவ்வொரு தென்னிந்திய மொழியினையும் ஒவ்வொருவர் ஆராய்ந்து தங்கள் முடிவுகளைக் கட்டுரை வழியே வெளிப்படுத்திக் கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கால்டுவெல் அறிஞர் தென்னாட்டிற்கு வந்தார். தமிழ்மொழியிலுள்ள நூல்களைக் கற்றறிந்தார். 

பழந்தமிழ்ச் சொற்களைக் கன்னடச் சொற்களோடும் ஆந்திரச் சொற்களோடும் ஒப்பிட்டுப் பார்த்த  கால்டுவெல் நூற்றுக்கணக்கான இயற்சொற்களின் தாதுக்கள் மும்மொழிகளிலும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார். மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட தெள்ளிய ஆராய்ச்சி முறைகளை அடிப்படையாகக் கொண்டு தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். பதினைந்து ஆண்டுகள் அயராது உழைத்து கி.பி.1856இல் கால்டுவெல் ‘A Comparative Grammer of the Dravidian or South Indian family of languages’ என்னும் நூலினை வெளியிட்டார்.

இந்நூலில் தென்னிந்திய மொழிகளைத் ‘திராவிடம்’ என்ற பெயரில் குறிப்பிட்டார். இவை ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தோ ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையன அல்ல என்றும் நிறுவினார். திராவிட மொழிகள் சில பண்பட்ட மொழிகளைக் கொண்டவை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பன பண்பட்ட திராவிட மொழிகள். தோடா, கோடா, கோண்டு, கூய் என்பன பண்படாத திராவிட மொழிகள் என்று கருதினார். 

1875இல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் திருந்திய பதிப்பை வெளியிட்டார். அதில் கொடகு மொழி திருந்திய திராவிட மொழி என்று குறிப்பிட்டார். ராஜ்மகால், ஒரோவோன் ஆகியன திருந்தாத திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டார். திராவிட மொழிகளுக்கும் சித்திய மொழிகளுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என நினைத்தார். 

திராவிட மொழிகளுக்கே சிறப்பாக உரிய பல கூறுகளைக் கால்டுவெல் அறிஞர் ஒப்பிலக்கணத்தில் விளக்கிக் காட்டியுள்ளார்.  

திராவிட மொழிகளில் அவர் செய்த ஆய்விற்கு முனைவர் பட்டம் பெற்றார். “கால்டுவெல்லின் ஆய்வு தென் திராவிட மொழிகளைப் பற்றியது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொது நிலையில் சுட்டுவதை விடத் தென் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைப்பது பொருத்தமானது” என்பார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். திராவிட மொழிகள் என்று ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை இனம் கண்டு பதிவு செய்த பணி கால்டுவெல்லின் முக்கிய பணியாகும்.

அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும் தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களைப் (தொல்காப்பியம் உட்பட) பயின்றார். 

இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குக் கல்வி கற்றிடவும் அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்தார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமற்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது. அதுவரை, இந்திய மொழிகள் எல்லாம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும் அம்மொழியின் இலக்கணமே ஏற்கப்பட்டன என்றும் தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமற்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.

ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்து கொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமற்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச்  சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செவ்வியல் என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது.

  அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்து கொண்டிருந்த 200 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா.வாலும் அச்சு வாகனம் ஏறின.

தமிழில் எதிர்மறை வினை:
எதிர்மறை வினை, வினை வடிவ வேறுபாடேயல்லாது தனியே உருவான ஒரு தனி வினையன்று, வினை மூலங்கள் அனைத்தும் உடன்பாட்டுப் பொருள் உணர்த்துவனவே அவற்றின் எதிர்மறைப் பொருள், அம்மூலங்களோடு சில சொல்லுருபுகள் சேர்வதாலும் அம்மூலங்கள் ஒருசிறிதே வேறுபடுவதாலுமே பெறப்படும். 

எதிர்மறைப் பொருள் உணர்த்த மொழிதோறும் வெவ்வேறு சொல்லுருபுகள் நுழைக்கப்படுகின்றன என்பது உண்மை. ஆனால், அச்சொல் உருபுகள் நுழைக்கப்பெறும் முறை மட்டும் அனைத்து மொழிகளிலும் ஒன்றே.

பொதுவாக, திராவிட எதிர்மறை வினைக்குக் காலம் ஒன்றே உள்ளது. அதாவது காலம் கடந்தது. அது முக்காலத்தையும் உணர்த்தும். காலத்தை, இடமும் சூழ்நிலையுமே உறுதி செய்யும். திராவிட இனத்தின் பிறமொழிகளில், ஒரே நிலையான எதிர்மறையே உள்ளது. எச்சவினை எதிர்மறையும் ஏவல் வினை எதிர்மறையும் இருக்குமாயின் அவை இலக்கிய நடையில் மட்டுமே இருக்கும் என்கிறார் கால்டுவெல். எதிர்மறை வினையெச்சங்களின் பின்னர், எச்சவினைகளையும் ஏவல் வினைகளையும் துணைச் சொற்களாக இணைப்பதினாலேயே எதிர்மறையெச்சமும் எதிர்மறை ஏவலும் உருபாகும்.

தமிழ் எதிர்மறை வினை, காலம் உணர்த்தும் சொல்லுருபினை அறவே பெறாததாகும். இது இறந்தகால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகளை மட்டுமேயல்லாமல், முக்காலத்திற்கும் பொதுவான, அதாவது காலம் கடந்த நிலையினை உணர்த்தும் இடைநிலையையும் பெறுவதில்லை என்கிறார் கால்டுவெல். தமிழ் வினைமுற்று விகுதி மூலத்தோடு நேரே இணைக்கப்பெறும் ஆக, ‘வாழ்’ என்ற வினை மூலத்தின் இறந்தகால, நிகழ்கால உடன்பாட்டு வினைமுற்றுகள், முறையே ‘வாழ்ந்தேன்’, ‘வாழ்கிறேன்’, ‘வாழ்வேன்’ என்பனவாக அவ்வினை மூலத்தின் எதிர்மறை ‘வாழேன்’ என்பதாகும். இம்முற்றில் வினை மூலமும் வினைமுற்று விகுதியும் மட்டுமே இடம்பெறுகிறது. காலம் உணர்த்தும் இடைநிலை எதுவும் அவற்றிற்கிடையே இல்லை என்கிறார் பேராயர்.

இவ்வெதிர்மறையின் தோற்றக் காரணம் காலம் உணர்த்தும் இடைநிலைகளைப் பெறாமையே, எதிர்மறைப் பொருளை உணர்த்தத் துணைபுரிவதாகத் தோன்றுகிறது. உடன்பாட்டுப் பொருளை அது விலக்குகிறது எனக் கூறல், ஓரளவு பொருந்தும். காலம் உணர்த்தும் இடைநிலைகள் இல்லாமையின் விளைவால், அவ்வினை உணர்த்தும் பொருள், நிகழ்கால, எதிர்கால, இறந்தகால நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டு பொதுத்தன்மை பெறுகிறது. வினையாலணையும் ‘அ’கரம் இன்றியமையாச் சிறப்போடு கூடிய இறவாநிலைப் பெற்றுள்ளது என்றாலும் தெளிவான அவ்‘அ’கரத்தை எதிர்மறை சொல்லுருபாகக் கொள்ளும் கருத்திற்கு அரண் அளிக்க முன்வருதல் கூடாது என்கிறார் கால்டுவெல்.

தமிழ் எதிர்மறை வினையெச்சம் ‘அது’ அல்லது ‘ஆமல்’ என்ற சொல்லுருபை இணைப்பதால் உருவாகும். (எ.கா) செய்யாது; செய்யாலமல். இலக்கிய நடையிலும் மக்கள் வழக்கிலும் ‘மல்’ வீறுக்குப் பதிலாக ‘மை’ யீறு வழங்கப்பெறும். (எ.கா.) வழுவாமை. ‘மை’ பொதுவாகப் பண்புப்பெயர் விகுதியாம். அது வினைகளின் திருந்தா மூலம், அதன் பெயரெச்ச வடிவம் ஆகிய இரண்டன் பின்னரும் இணைக்கப்பெறும். (எ.கா.) ‘தாழ்மை’, ‘இருக்கின்றமை’. எதிர்மறைத் தொழிற்பெயர்களின் மையீறு பண்புப் பெயர்களின் மையீற்றோடு ஒருமைப்பாடுடையதாகும் இரண்டும் ஒன்றே. எதிர்மறை வினையெச்ச விகுதியாக வரும் ‘மல்’, ‘மை’ உருபிற்கு ஒப்பாகும். ஈற்றில் ஒரு ‘ல’கரத்தைக் கொண்டு வந்து இணைப்பதைக் காட்டிலும், ஈற்றில் உள்ள ஒரு ‘ல’கரத்தை ஒழித்து விடுவது மொழிநூல் இயல்பாம் என்கிறார் கால்டுவெல். 

ஒழித்து என்கிற அக்கால அச்சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளமையை அறியமுடிகிறது. (எ.கா.) ‘செய்யாதே’ இவ்வாட்சிமுறை ‘து’ அல்லது ‘தெ’ என முடியும் எதிர்மறைவினையெச்சம், உண்மையில் அஃறிணைப் பண்புப்பெயரே என்பதற்கான நல்ல சான்றாகும். எதிர்மறைப் பெயரெச்சங்கள், ‘த’கர ‘உ’கரமாக முடியும் வினையெச்சங்களின் ஈற்று ஒலித்துணை உகரத்தை ஒழித்து விட்டு பெயரெச்சச் சொல்லுருபாகிய ‘அக’கரத்தை இணைப்பதால் உருவாக்கப் பெறுகின்றன. (எ.கா) செய்யாதே. தமிழில் எதிர்மறை ஏவல்களும் எதிர்மறை எச்சங்களும் தோன்றுகின்றது.

தமிழ் இலக்கியங்களில், மறைச் சொல்லுருபோடு நெருங்கிய ஒருமைப்பாடு கொண்டிருக்கும் ஓர் எதிர்மறைச் சொல்லுருபு உளது. அது ‘அற்க’ என்பதாகும். (எ.கா.) ‘செய்யற்க’, ஒருமை, பன்மை ஆகிய இரு எண்களிலும் ஆண்பால் முதலாம் அனைத்துப் பால்களிலும் அது ஆட்சி பெறும் சொல் செய்யற்க ஆகும்.

திராவிட மொழிகளில் மொழி முதல் எதிர்மறை ‘அ’கரம் என எதுவும் இல்லை. வினைகளின் முன்னிணையாக வந்து எதிர்மறை உணர்த்தும் சொல்லுருபு உண்மைக்கான அடிச்சுவடும் அம்மொழிகளில் இல்லை. அவை அனைத்தும் எதிர்மறைப் பொருள் ‘இல்’ அல்லது ‘அல்’ என்பதிலிருந்து பிறக்கும் பெயரெச்சம் அல்லது தொழிற்பெயர்களைப் பின்னே இணைப்பதால் இட்டு நிரப்பப்பெறுகிறது. (எ.கா) நேரின்மை (நேர் + இல் + மை) 

திராவிட எதிர்மறை வினைகளில், எதிர்மறை பொருள் உணர்த்தி நிற்கும் ‘அ’கரம் தனித்து நிற்கும் சொல்லுருபாகிய ‘அல்’ அல்லது ‘இல்’ என்பதற்கு நிகராகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தமிழ் இலக்கியங்களில் எதிர்மறைச் சொல்லாக்க நிலையில், ‘அ’கரத்திற்குப் பதில் இத்தனிநிலைச் சொல்லாக்க உருபுகள் ஆளப்பெறுவதும் ஒரே வழி நிகழும். (எ.கா.) ‘அறியீர்’ என்பதற்குப் பதிலாக, ‘அறிகிலீர்’ என்பது வழங்கப்பெறுவது. ‘நினையலா’, ‘செய்கலாதார்’ என்பன போலும் எதிர்மறை ஆட்சிகளும் உண்டு. இவ்வெடுத்துக்காட்டுகள் அனைத்திலும் எதிர்மறைப் பொருள் உணர்த்தி நிற்பது, ‘அல்’ தனிச்சொல் உருபேயாதலால் அறிக ‘அலன்’ அல்லது ‘இலன்’ என்பதிலிருந்து தோன்றி, வினை மூலங்களோடு இணைந்து நிற்கும் ‘அல்’ எவ்வித ஐயப்பாடும் இல்லை என்க. ‘பேசுலேம்’ (= நாங்கள் பேசவில்லை); ‘உண்டிலை’ (= நீ உண்ண வில்லை) ‘மாற்று + அல் + என்’ என்பனவற்றின் புணர்ப்பாகிய மாற்றலன் (= மாற்ற முடியாதவன்; அதாவது பகைவன்) என்ற சொல்லையும் மாற்றான் என்ற எதிர்மறைச் சொல்லில் எதிர்மறைப் பொருள் (‘ஆ’ என்பதால் உணர்த்தப்படுவது உண்மை. ஆனால், ‘மாற்றலன்’ என்பதில் எதிர்மறைப் பொருள் உணர்த்துவது ‘அல்லே’ என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை என்கிறார் கால்டுவெல்.

தமிழ்ச் செய்யுள் வழக்கில் எதிர்மறை ஏவல் சொல்லாக்கங்களில் ‘அல்’லே முறையாக மேற்கொள்ளப் பெறுகிறது. அந்நிலையில் அது திரியாமல் வழங்கப்படுவதும் உண்டு. (எ.கா) ‘செய்யற்க’, ‘செய்யன்மின்’ (‘அற்’, ‘அன்’, இரண்டும் அல் என்பதன் திரிபுகளே) இன்றைய பேச்சுநடைத் தமிழில், வினையெச்ச வடிவங்களோடு ‘இல்லை’ என்ற எதிர்மறை இயல்பாக இணைந்து, காலம் உணர்த்தா எதிர்மறை வடிவை உருவாக்குகிறது. (எ.கா.) வர+வ்+இல்லை = வரவில்லை.

திராவிட எதிர்மறை வினைகளில் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் ‘அ’கரமும் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் தனிநிலைச் சொல்லுருபாகிய ‘அல்’லும் அடிப்படையில் ஒன்றே என்பது உண்மை. தமிழ் இலக்கியங்களில் வினைச் சொல்லாக்க நிலையில், ‘அ’கரத்திற்குப் பதிலாக ‘அல்’ ஆளப்பெறுவது ஒன்றே, இதற்குப் போதிய சான்றாகும். என்றாலும் இவ்விரண்டினுள் பழமை வாய்ந்தது எது என்பது இன்னமும் நிலைநாட்டப் பெற்றிலது. ‘அல்’ அகரமாக குறைந்து திரிந்திருக்குமா? அல்லது, ‘அல்’லே பிற்பட்டதாகுமா? ஈற்று லகரம் மறைந்து போவதற்கான எடுத்துக்காட்டுகள் பல உள. ‘தல்’ என்ற தமிழ்த் தொழிற்பெயர் விகுதியாகும் என்கிறார் கால்டுவெல்.

சுட்டுப்பெயர் வடிவங்களாகிய ‘அம்’, ‘அத்’, ‘அல்’ என்பனவற்றிற்கு நிகரான முழுவளர்ச்சி பெற்ற எதிர்மறைச் சொல்லுருபாம் என்றும் காண்கிறேன் என்கிறார் கால்டுவெல். எதிர்மறை மூலங்களுக்கும் இடையில் நிலவும் உருவ ஒருமைப்பாடு ஒன்றே கருதி ஈண்டு ஒப்பிடப்பட்டுள்ளது என்கிறார். ஆனால், பேராசிரியர் குண்டர்ட் அவர்களைப் பின்பற்றி மேலும் ஒருபடி முன்னே சென்று எதிர்மறைப் பொருளை முதற்கண் வினாவிலிருந்தும் முடிவாகச் சுட்டிலிருந்தும் பெற முதற்படுத்துதலும் கூடும். ‘அ’கரம் ஒரு வகையில் வினாப் பொருள் உடையதாகும். அவ்வினாப் பொருளிலிருந்தே எதிர்மறைப் பொருள் எழுகிறது. அது வருமா? என்ற வினா, ‘அது வராது’ எனும் எதிர்மறைப் பொருள் ஓரளவு வினா நிலையால் உணர்த்தப்படுவதும் உண்டு. அந்நிலையில், அது இலக்கிய வழக்காகவும் மக்கள் வழக்காகவும் மாறிவிடும்.

மேலே கூறிய கருத்தின் வன்மை மென்மை எதுவேயாயினும், ‘அல்’ தன்னளவிலேயே எதிர்மறைப் பொருள் உடையதாகாது. ‘அல்ல’ என்பது போல் ‘அ’கர எதிர்மறையால் தொடரப்பட்ட நிலையிலேயே அது எதிர்மறைச் சொல்லுருபாம் தன்மை பெறும்” என்று கூறும் குண்டர்ட் அவர்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிலேன். ‘அல்’ சுட்டுப்பொருள் தன்மையைத் தொடக்க நிலையில் பெற்றிருந்ததோ, இல்லையோ? எங்ஙனமாயினும் அது எதிர்மறைச் சொல்லுருபாக ஆளப்பெறும் இடங்களில் அது தன்னளவிலேயே பிற எதன் துணையையும் வேண்டாமலே எதிர்மறைப் பொருள் உணர்த்துகிறது.

அதைத் தொடர்ந்து வரும் ‘அ’கரம் உண்மையில் ஒலித்துணை கருதிய மிகையே என்று நான் கருதுகிறேன் என்கிறார் கால்டுவெல். இக்கருத்து ‘அல்’லுக்கு நிகரான, ‘இல்’ என்ற எதிர்மறைக்கும் பொருந்தும். கீழ்வரும் தமிழ்ச் சொற்கள் ‘அல்’லும், ‘இல்’லும் தம்மளவிலேயே எதிர்மறைப் பொருள், உணர்த்தவல்லவாம் என்பதை நிலைநாட்டவல்லவாகும். ‘அல்’, ‘அன்மை’, ‘அன்று’, ‘அல்கு’ (=குறைதல்) ‘அல்’ (=இருட்டு), ‘அல்வழி’, ‘இல்’, ‘இன்று’ (=இல்லை) இன்மை, ‘இல்’ (=இல்லாதவன்) இல் பொருள்.     

‘அல்’அகரத்திலிருந்து பிறந்ததாம் என்பது குறித்து, நாம் எவ்வித கருத்துக் கொள்வதாயினும் எதிர்மறைப் பொருளில் பரவிய வழக்காறுடையவாய ‘அல்’, ‘ஆல்’, ‘ஏல்’ போன்றவற்றையும் ஒப்புநோக்கல் வேண்டும் என்கிறார் கால்டுவெல்.

முடிவுரை
•   ஒரு சில சொற்களால் காலம் உணர்த்தும் இடைநிலை இல்லை. எடுத்துக்காட்டு: ‘வாழேன்’
•   அது, ஆமல் என்கிற சொல்லுருபை இணைப்பதால் எதிர்மறைப்பொருள் உருவாகும் என்கிறது.
     எடுத்துக்காட்டு: செய்யாது, செய்யாலமல் (இப்பழைய சொல்லாட்சியை நாம் அறிய முடிகிறது).
•   எதிர்மறைச் சொல்லுருபு ‘அற்க’ என்பது குறித்தும்    கால்டுவெல் பேசுகிறார்.  
•   ‘ஆ’ என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டு: ‘மாற்றான்’.
•   எதிர்மறைப் பொருள் உணர்த்தும் ‘அ’கரமும் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் தனிநிலைச் சொல்லுருபுவாகிய ‘அல்லும்’ அடிப்படையில் ஒன்றே என்கிறார் கால்டுவெல்.

கால்டுவெல்லின் நோக்கம் நான்கு திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஒப்பிட்டு நோக்கிய ஆய்வும் பிற மொழிக் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதையும் தன்னுடைய தலையாய நோக்கமாகும் என்பதனால் ‘எதிர்மறையில்’ சில ஆய்வுகள் விடுபட்டுள்ளன. இருப்பினும் பெரும்பான்மையான ஆய்வு முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 



___________________________________________________________
தொடர்பு:
முனைவர் க.பசும்பொன்.
தனி அலுவலர்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை

Sunday, July 29, 2018

பெண்ணியப் பார்வையில் பதிற்றுப்பத்து - காக்கைப்பாடினியாரின் நோக்கும் பெண்மொழியும்

——    முனைவர் ச.கண்மணி கணேசன்.


முன்னுரை:
சங்ககால அரசியல்நிலையையும், சமூக வரலாற்றையும் அறிந்து கொள்ளத் துணை செய்வன சங்க இலக்கியங்களே. அவற்றுள்ளும்  பதிற்றுப்பத்து  சேர நாட்டிற்கும்,சேரர்  ஆட்சிக்கும் மட்டுமே சிறப்பிடம் கொடுத்துப் பாடப்பட்டது.  அந்நூலில் பெண்மை போற்றப்பட்ட முறையைக் காண்பது கட்டுரையின் நோக்கமாகும். புலவர் எண்மரில் காக்கைப்பாடினியார் மட்டுமே பெண்பாற் புலவராதலால் அவரது பாடுபொருளில் இருக்கும்  தனித்தன்மை சிறப்பாக நோக்கப்படுகின்றது. "தங்களை ஆண்களின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாகக் கருதும் மரபுத் தளையிலிருந்து விலகி வந்தால் மட்டுமே பெண்ணியத்தைப் பெண்களாலும் சரிவர புரிந்து கொள்ள இயலும்" என்று கூறுகிறார் முனைவர் இரா.பிரேமா (பெண்ணியம் -முன்னுரை). இந்த இலக்கணத்துக்கு ஏற்ற இலக்கியமாக காக்கைப்பாடினியாரும் அவரது பாடல்களும் அமைந்திருக்கும் பாங்கினைக் காண்போம்.  

'பெண் எழுத்துக்கள் ' என்ற தலைப்பில் எழுதும் முனைவர் எம் .ஏ .சுசீலா ஆய்வுப்பின்புலம் :    
சேர மன்னர்களின் மனைவியரும், பாரியின் மனைவியும்  பதிற்றுப்பத்துப் பாடல்களில் போற்றப்படுகின்றனர். அப்பாடற்பகுதிகளில் அக்காலப்  பெண்ணியக் கொள்கை பிரதிபலிக்கிறது. ஒரு ஆணின் நோக்கிலும், மொழியிலும் சித்தரிக்கப்படும் பெண்மை; ஒரு பெண்ணின் நோக்கிலும், மொழியிலும் சித்தரிக்கப்படும் பெண்மை இரண்டிற்கும் வேறுபாடு காணப்படுகிறது. பதிற்றுப்பத்துச் செய்திகள் முதன்மை ஆதாரம் ஆக அமைய புறநானூற்றுச் செய்திகள் துணை ஆதாரங்களாக அமைகின்றன. 20ம் நூற்றாண்டு ஆய்வாளர்களின் கருத்துக்கள் மூன்றாம் நிலைத் தரவுகளாக அமைகின்றன.பெண்ணிடமிருந்து உற்பவித்துத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் பதிவாகியுள்ள எழுத்துக்கள்; என்ற பொருளை வரையறுத்து புனைகதை இலக்கியத்தை மட்டுமே தன் கட்டுரையில் ஆய்வுப்பொருள் ஆக்கியுள்ளார் (தமிழ் இலக்கியத்தில் பெண்ணியமும் தலித்தியமும் -ப.-1-11) வெள்ளிவீதியாரின் கவிதைகளில் பெண்மொழி பற்றி சு.மலர்விழி கட்டுரை வரைந்துள்ளார்(காவ்யா தமிழிதழ் -ப.29-32). ஒளவையார், வெள்ளிவீதியார் பாடல்களில் இடம்பெறும் பெண்ணியக்கோட்பாடுகளை அரங்க மல்லிகா தொட்டுக் காட்டியுள்ளார் (பெண்ணின் வெளியும் இருப்பும் -'சங்க இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்'-ப.-8-18).
    
ஆய்வு முறை:
மன்னன் வாழ்வில் அவனது உரிமை மனைவி பெற்ற இடம், அவளது பெருமையின் காரணம் முதலியன, ஆண் வர்க்கத்தின் பார்வையிலும் பெண்வர்க்கத்தின் பார்வையிலும் எவ்வாறு வேறுபடுகின்றன என்று பெண்ணியநோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது.  

மன்னனை அழைக்கும் முறை:
ஒவ்வொரு மன்னனையும் அழைக்கும் முறையில் அவனது உரிமை மனைவிக்குக் கொடுக்கப்படும் சிறப்பிடம் புலப்படுகிறது. மன்னனால் அவன் மனைவிக்கு அடையாளம் கிடைப்பதை விட மனைவியால் மன்னனுக்கு அடையாளம் கொடுக்கப்படுவதையே பதிற்றுப்பத்தில் காண முடிகிறது.
"ஒடுங்கீரோதிக் கொடுங்குழை கணவ"-(பா-14) - குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடியது .
"நன்னுதல் கணவ " -(பா-42)- பரணர் கடல் பிறக்கோட்டிய குட்டுவனைப் பாடியது .
"ஆன்றோள் கணவ " -(பா-55)- காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்  ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பாடியது.
"பாவை அன்ன நல்லோள் கணவன் "-(பா-61)- கபிலர் பாரியைச் சுட்டியது.
"சேணாறு நறுநுதற் சேயிழை கணவ"-(பா-65) மற்றும்
"கமழும் சுடர் நுதற் புரையோள் கணவ"-(பா-70)-   கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதனைப்  பாடியது.
"சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" -(பா-88) மற்றும்
"வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ" -(பா- 90)- பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடியது.   
இம்மேற்கோள் பகுதிகளில்  மனைவியால்  மன்னனுக்கு அடையாளம் தரப்பட்டுள்ளது.
புறநானூறிலும் இவ்வண்ணமே; 
"செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ"- (பா-3) என்று பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் விளிக்கிறார் .
"அறம் பாடிற்றே ஆயிழை கணவ"- (பா- 34) என்று கிள்ளி வளவனை ஆலத்தூர் கிழார் அழைக்கிறார்.
"ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்"-(பா-138) என்று நாஞ்சில் வள்ளுவனை மருதன் இளநாகனார் குறிக்கிறார்.
மன்னன் மனைவியை அடையாளப்படுத்தும் முறையில் காக்கைப்பாடினியார் கையாளும் பொருள்  மட்டும் வேறுபட்டுக் காணப்படுகிறது .   பெண்ணின் ஆளுமையை முன்னிலைப்படுத்தி மன்னன் மனைவியை 'ஆன்றோள்' என்கிறார். பிற புலவர்கள் எல்லாம் ஐம்புலன்களால் அறியக்கூடிய இன்பங்களோடும், கற்போடும் தொடர்புபடுத்தியே அரச மகளிரைக் குறிக்கின்றனர். அதாவது அப்பெண்களின் கூந்தல், நெற்றி, அழகு, மணம், அணிகலன், கற்பு, கற்பினால் உண்டான புகழ் முதலியவையே ஆண் புலவர்கள் மகளிர்க்குக் கொடுக்கும் அடையாளச் சொற்கள். ஆனால் காக்கைப்  பாடினியாரின்  பெண்மொழி புலனின்பத்திற்கும், காட்சிக்கும்  அப்பாற்பட்டு மனதாலும், அன்றாட வாழ்வியல் அனுபவத்தாலும் அறியக்கூடிய சிறப்பும், அறிவும்  பொருந்திய ஆன்றோளின்  கணவனாக ஆடுகோட்பாட்டுச்சேரலாத- னைச்   சிறப்பிக்கிறது. 
                        
புறத் தோற்றம்:
அரச மகளிரின் புறத்தோற்றமும், அவர்களது ஒப்பனையும்  பதிற்றுப்பத்தில் ஆங்காங்கு இடம் பெறுகின்றன.

விண்ணுலக மங்கையர் சேரன் மனைவிக்கு நிகராதல் வேண்டித் தம்முள் மாறுபட்டு இகலும் அளவிற்கு இமயவரம்பன் மனைவி  மெய்நலம் உடையவள். தலை ஆபரணங்களால் மறைப்புண்டை வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள். மண்ணி நெய்ப்புற்ற கூந்தல் ஒடுங்கிய செவியில்  வளைந்த குழைகளை அணிந்திருந்தாள் என்று இமயவரம்பனின் மனைவி வருணிக்கப் படுகிறாள்- (பா-14).    
பல்யானைச்செல்கெழு குட்டுவனின் மனைவி மயிர்ச்சாந்து பூசாமலே மணம் மிகுந்த கூந்தலுடையவள்; மழைக்காலத்தில் முல்லை மணம் கமழும் நீண்ட அடர்ந்த கூந்தலுடன், காம்பினின்றும் நீக்கப்பட்ட நீர்ப்பூ போல முகத்தில் சுழலும் கருமையான கண்களுடன், காந்தள் போன்ற கைகளுடன், மூங்கிலை ஒத்த பெரிய தோள்களையும்  உடையவள் ஆவாள்-(பா- 21). 
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி வண்டு மொய்க்கத் தழைத்த கூந்தலையும், காதில் அணிந்த குழைகட்கு விளக்கம் தரும் ஒளி பொருந்திய நெற்றியையும், தான் அணிந்த பொன்னாலான அணிகட்கு விளக்கம் தரும் மேனியையும், அழகிய வளைந்த உந்தியையும் உடையவள்-(பா- 31மற்றும்38). 
ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த மனையில் பாவை போன்ற அழகுடையவளாக பாரியின் மனைவி இருந்தாள்-(பா- 61).  
செல்வக்கடுங்கோ வாழியாதனின் மனைவி- வேளாவிக்கோமான் பதுமன் தேவி இழை அணிந்து எழில் பெற்ற இளமுலையும், மாட்சிமைப்பட்ட வரிகளை உடைய அல்குலையும், அகன்ற கண்களையும், மூங்கிலை ஒத்த  அழகிய தொடியணிந்த பருத்த தோளையும், சேய்மையிலும் மணம் பரப்பும் நறு நுதலையும் கொண்டு; செவ்விய அணிகளையும்  அணிந்திருந்தாள்-(பா- 65மற்றும்70).
அந்துவன் செள்ளை திருமகளைப் போன்றவள். பிறப்பால் மட்டுமே அவளுடன் மாறுபட்டவள்-(பா- 74). ஒளி பொருந்திய நெற்றியை உடைய அவள் நுண்ணிய கருமணலை ஒத்த அடர்ந்த நீளமான கூந்தலை உடையவள். பெருஞ்சேரல் இரும்பொறை வேள்வி செய்த போது புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து அதனை வட்டமாக அறுத்து சுற்றிலும் முத்துக்களையும், அரிய கலன்களையும் கட்டி நடுவே மாணிக்க மணிகளைத் தைத்துத் தோளில் அணிந்திருந்தாள். கூந்தலைச் சுருட்டி முடித்திருந்தாள்-(பா-74).    இளஞ்சேரல் இரும்பொறை மனைவி நீண்ட கண்களை உடையவள். அவளது  ஒளி வீசும்  நெற்றியில் சுருண்ட கூந்தல் விழுந்து அழகூட்டியது. வண்டுகள் மொய்க்கும் கருமையான கூந்தல் மறையும் படியாகத் தலையணியும், வளைந்த குழைகளும்  அணிந்திருந்தாள் (பா-81). தகர நீவிய துவராக் கூந்தல் உடையவள்-(பா-89).
ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் மனைவி  அசைகின்ற மாலையும், பரந்த தேமலையும் உடையவள் என்கிறார் காக்கைப்பாடினியார். புறநானூறில் ஆவூர்மூலங்கிழார் வாய்மொழியாக இடம்பெறும் கௌணியன் விண்ணந்தாயனின் மனைவியர் சிறு நுதலும், பேரல்குலும் கொண்டு சில சொல்லிற் பல கூந்தலினை உடையவர் என்று வருணிக்கப்படுகின்றனர்(பா-166).
வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பாடலில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் மனைவி - 'அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமோடு பொலிந்த மார்பினை உடையவளாய்க்'  குறிக்கப்படுகிறாள்(பா-198).     
பதிற்றுப்பத்தின் பிற புலவோர் அரச மகளிரை வருணிப்பதற்கும், காக்கைப்பாடினியார் வருணிப்பதற்கும் இடையிலுள்ள வேறுபாடு நோக்கத்தக்கது. மாலையும்  தேமலும் தவிர  வேறெந்தப்  புறத்தோற்ற வருணனையும் காக்கைப்பாடினியார் பாடல்களில் இல்லை-(பா-52). அறிவும் திறமையும் மட்டுமே அவளைப் பற்றிப் பாடத்தக்க பொருட்களாக அவருக்குத் தோன்றியுள்ளது. மேனியின் வெளிப்புற அழகும், ஆபரணங்களும்  ஒரு பொருட்டாக அவருக்குத் தோன்றவில்லை எனலாம். மேனியழகும் அணிகளும் ஒரு பெண்ணின் ஆளுமைக்கு தேவையற்றவையாக ஒதுக்கப்பட்டு விட்டதைக் காணமுடிகிறது.          
பாரிமனைவியைக் குறிப்பிடும் கபிலர் சுருக்கமாக அவள் பாவை போன்றவள் என்று வருணிப்பதன் காரணம் -பாரி சேர மன்னன் அல்லன் . அவன் இறந்தபின் உன்னையே நாடி வந்தேன் என்று பாடும் இடத்தில் பாரிமனைவிக்கு சிறப்பிடம் இல்லை .அதனால் அவளைப்  பற்றிய வருணனை சுருக்கமாகவே அமைகிறது. இதே கபிலர் செல்வக்கடுங்கோவின் மனைவியை வருணிக்கும் போது அவளது அணிகலன், இளமுலை, அல்குல், கண், தோள், நுதல் என மிக விரிவாகப்  பாடியுள்ளார். இவ்வாறு அரச மகளிரின் புறத்தோற்ற வருணனையிலும் காக்கைப்பாடினியாரின் பெண்மொழி தனித்துவத்துடன் காணப்படுகிறது.

அரச மகளிரின் பெருமையாகச் சொல்லப்படுபவை:
கற்பு:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மனைவி 'ஆறிய கற்பி'னை உடையவள் (பா-16). சீறுதற்குரிய காரணம் இருப்பினும் சீற்றமுறாது தணிந்தொழுகும் தன்மையுடையவள்; ஆதலால் ஆறிய கற்புடையவளாம்.
 கற்பு அருந்ததி என்னும் செம்மீனுடன் தொடர்புபடுத்தி பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. 

"விசும்புவழங்கு மகளி ருள்ளும் சிறந்த 
செம்மீன் அனையள்நின் தொன்னகர்ச் செல்வி" (பா-31)
என்று களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் மனைவி புகழப்படுகிறாள் .

"காமர் கடவுளும்  ஆளும் கற்பிற் .......சேயிழை "- (பா- 65) என்னும் புகழ்ச்சி  செல்வக்கடுங்கோ வாழியாதன் மனைவிக்குரியது .  வடமீன் எனப்படும் அருந்ததியை ஒத்தவள் என்பதே  பொருள் . 
“பெண்மை சான்று பெருமடன் நிலைஇக் கற்பு இறை கொண்ட "-(பா- 70) மேன்மையுடையவள் என்று பாராட்டுப் பெறுகிறாள் செல்வக்கடுங்கோ வாழியாதனின்  மனைவி. 
"மீனொடு புரையும் கற்பின் வாணுதல் அரிவை "- (பா-89) என்று  இளஞ்சேரல்இரும்பொறையின்  மனைவியைப் பாடும் போதும் அதே ஒப்புமையையும் பொருளையும் காண்கிறோம்.
 
புறநானூற்றிலும், 
"வடமீன் புரையும் கற்பின் மடமொழி 
அரிவை ....................................." - (பா- 122) என காரியின் மனைவி வடமீனொடு ஒப்புமைப் படுத்தப் படுகிறாள்.
"கடவுள் சான்ற கற்பிற் சேயிழை 
மடவோள் ........................" - (பா- 198) என  பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவியும் போற்றப்படுகிறாள்.

அடக்கம் ,இன்சோல், சிரித்த முகம், சுடர்நுதல் மற்றும் அமர்த்த கண்:
"ஆறிய கற்பின் அடங்கிய சாயல் 
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்து பொதி துவர்வாய் அமர்த்த நோக்கிற் 
சுடர் நுதல் அசைநடை ......... " -(பா-16) எனும் அடிகளில்  அடக்கம் பொருந்திய மென்மையும் , ஊடல் காலத்திலும் கூட இன்மொழியே கூறி இனிய முறுவல் காட்டும் பெருமையும் உடையவள் என இமயவரம்பன் மனைவி புகழப் பெறுகிறாள்.அத்துடன் அவளது துவர்வாயின் வாலெயிறூறிய நீர் அமிழ்து போல் மகிழ் செய்வது என்று கூடல்காலத்து இன்பத்தைக் கோடிட்டுக் காட்டியவுடன் அவளது பார்வை எப்படிப்பட்டது என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவளது கண்கள்  உள்ளத்து வேட்கையை ஒளிப்பு இன்றிக் காட்டுவன என்னும் பொருள்படவே 'அமர்த்த நோக்கு' என்ற தொடர் அமைகிறது. அதாவது தன் வேட்கையை வெளிப்படையாகக் காட்ட மாட்டாள் என்பதாம். அழிவில் கூட்டத்து அயரா இன்பம் செறித்தலால் 'சுடர்நுதல்' உடையவள் என்பதாகவும் பழைய உரை கூறுகிறது. கற்புடைப் பெண்ணுக்குரிய இவ்வைந்து பண்புகள் - பெண்ணோடு கூடி இன்புறும்  ஆண் சமூகத்தின்;- மனைவியோடு கூடி இன்புறும் கணவனின்  எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. 
இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவியும்   "பெருந்தகைக் கமர்ந்த மென்சொல் "(பா-81)உடையவளாக போற்றப்படுகிறாள். பெருமை பொருந்திய பண்பிற்கேற்ற மென்மையான சொற்களைப் பேசுபவள் என்பதே பொருள். முற்சுட்டிய இன்சொல்லே இங்கு மென்சொல் என்று குறிக்கப்படுகிறது. அவன்பால் சென்று ஒடுங்கிய அன்பால்; புலத்தற்குரிய காரணங்கள் இருப்பினும் வன்சொல் பேசாதவள் (பா-89). 

நாணமும் மடமும்:
"பெண்மை சான்று பெருமடன் நிலை இக் 
கற்பு இறை கொண்ட ................" - (பா- 70) செல்வக்கடுங்கோவின்  மனைவி பெண்மைக்குரிய நாணமும், மடமும்  பொருந்தியதால் கற்பிற் சிறந்தாள் என்கிறார்  புலவர். இங்கு பெண்மை என்று சுட்டப்படுவது நாணம்; ஏனெனில் தொடர்ந்து இடம் பெறுவது நாற்பண்புகளில் மூன்றாவதாகிய மடம். அறிந்தும் அறியாதது போன்றிருக்க வேண்டியது - ஆண் வர்க்கத்தின் எதிர்பார்ப்பு.

புறநானூறில் வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவியை "மடவோள் "(பா-198) என்றே அழைக்கிறார். 

பிரிவில் உடல் மெலிதலும், கனவில் இன்புறலும்:
கணவன் வினைமேற் சென்று பிரிந்திருக்கும் காலத்தில் இமயவரம்பன் மனைவி பகலில் பிரிவை ஆற்றியிருந்து இரவில் அரிதாகப் பெற்ற உறக்கத்தில் கனவில் பெற்ற சிறு மகிழ்ச்சி காரணமாக உயிர் தாங்கி இருக்கும்  பெருஞ்சால்பு உடையவளாம் (பா- 19). இதனால் உடல்சுருங்கி; பார்ப்பவரெல்லாம் வருந்திப் பேச அதற்கு நாணம் கொண்டாள் என்றும் புகழப்படுகிறாள். இங்கு கணவன் பிரிந்த காலத்தில் மனைவி உடல் மெலிவது பெருமைக்குரிய செய்தி என்பது நோக்கற்குரியது.
இளஞ்சேரல் இரும்பொறையின் மனைவி தன் கனவிலும் அவனை விட்டுப் பிரியாது இன்பப் பயனைப்  பெற்றாள்-(பா-89)     

புதல்வர்ப் பெறல்:
மையூர் கிழான் வேண்மாள் அந்துவன் செள்ளை தன் கருவில் , 
"எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்ற "  மையால் விதந்து போற்றப் படுகிறாள்-(பா- 74)
பெருஞ்சேரல் இரும்பொறையின் குடிவழி நீடு வாழ்வதன் பொருட்டு; எண்ணப்படுகின்ற பத்து மாதமும் நிறைவடைய, இருவகை (இயற்கை மற்றும்செயற்கை ) அறிவும் அமைந்து; சால்பும், நடுவுநிலைமையும் உளப்பட பிற நற்பண்புகளாகிய அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலியன நிறைந்து; நாடு காத்தற்கு உரிய அரசியலறிவும் பொருந்திய புதல்வனைப் பெற்றாள் என்பர் பழைய உரைகாரர்.   
புறநானூறும் மகப்பேறைக் கற்புடைப் பெண்ணின் பெருமைகளில் ஒன்றாக வரிசைப்படுத்துவதைக் காணலாம்.இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் மனைவி "மணிமருள் அவ்வாய்க் கிண்கிணிப் புதல்வர்ப்"-(198) பயந்தவளாகப் பெருமைப் படுத்தப் படுகிறாள்.  

மேற்கூறிய விளக்கங்களால்  கற்புடைப் பெண்ணுக்குரிய பண்புகள் இன்னின்ன என்று பதிற்றுப்பத்துப் புலவர்கள் நோக்கில் நம்மால் தொகுக்க முடிகிறது. இங்கே பெண்ணுக்குக் கிடைத்துள்ள அடையாளங்கள் ஆணின் ஆதிக்க மொழியின் புனைவுகள் என்கிறார் முனைவர் க.பஞ்சாங்கம் (பெண்- மொழி -புனைவு -ப.-70) அவையாவன :
1) அடக்கம்
2) இன்சோல்
3) சிரித்த முகம்
4) கணவன் மேல் கொண்ட காதல்வேட்கையை வெளிக்காட்டாமை
5) கணவனோடு அழியாக் கூட்டத்திலும் அயராமை 
6) நாணம்
7) மடமை
8) கணவனைப் பிரியின்  உடல் மெலிதல்
9) பிரிவுக் காலத்தில் கனவில் கணவனோடு மகிழ்தல்
10) ஏற்ற வாரிசாக புதல்வரைப் பெறல்  முதலியனவாம்.

காக்கைப்பாடினியாரின் பெண்மொழி :
பெண்டிருக்குரிய பத்து பண்புகளாக ஏழு புலவர்கள் பாடுவதினின்று மாறுபட்டு காக்கைப்பாடினியாரின் பாடற்பொருள் அமைகிறது. அவர்  ஆண்களின் மதிப்பீடுகளைத் தலைகீழாக மாற்றுகிறார்(பெண்ணெனும் படைப்பு -ப.118). இவரது பாடலில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் விறலிக்குத் தலைக்கை கொடுத்து துணங்கை ஆடியது கண்டு அவன்  மனைவி ஊடல் கொள்கிறாள்.  அவள் பேரியல் அரிவை; அதனால் அவளது பார்வையில் குளிர்ச்சியும் இருந்தது. ஆனாலும் சினத்தால் அவள் விரைந்து நடக்கிறாள். காலில் அணிந்திருந்த கிண்கிணி அச்சினத்தை வெளிப்படுத்தி ஒலித்தது. கரையை அலைக்கும் நீர்ப் பெருக்கால் அசையும் தளிர் போல அவளது உடல் கோபமிகுதியால் நடுங்கியது. தன் கையிலிருந்த சிறுசெங்குவளை மலரை அவன் மீது எறிய ஓங்கினாள். அவன் ' ஈ ' என்று இரந்து நின்றான். அவள் சினம் தணியாமல் 'நீ என்பால் அன்புடையை அல்லை' என்று சொல்லி அகன்றாள். பல எதிரி வேந்தர்களின் வெண்கொற்றக் குடையையும், எயிலையும் தன் கையகப்படுத்திய அவனால் தன் மனைவியின் கையிலிருந்த குவளை மலரைக் கையகப்படுத்த இயலவில்லை(பா-52).
இவர் பெண்பாற் புலவர்; ஆதலின்,  இவரது பாடல்மொழியில் ஆண்களின் எதிர்பார்ப்பு இல்லை. ஊடலில் பெண்கட்கு இயல்பாக எழும் வெகுளியையும், படபடப்பையும் தயக்கமின்றிச் சித்தரிக்கிறார். ஊடும்போது மகளிர் தம் சினத்தை வெளிப்படுத்துவதால் அவர்களது நற்பண்பிற்கு இழுக்கு ஆகாது என்று கூறுவதற்கு ஏற்ப காட்சிப்படுத்துகிறார். இங்கே இன்சொல் இல்லை; இனிய முறுவல் இல்லை;  ஊடலை மறைக்கும் அடக்கம் இல்லை;  நாணம் இல்லை; மடமை இல்லை. குமட்டூர் கண்ணனார் இமயவரம்பன் மனைவியிடம் இருந்ததாகப் பாடும் 'ஆறிய கற்பு' ஆண்களின் எதிர்பார்ப்பே அன்றி இயற்கை அன்று என்பதை காக்கைப்பாடினியாரின் பெண்மொழி நிறுவுகிறது.   

மதிப்பீடு :
இது காறும் கண்டவற்றான் பதிற்றுப்பத்தைப் பாடியுள்ள ஏழு ஆண்பாற் புலவர்கள் அரச மகளிரைப் போற்றும் போக்கிற்கும்;  பெண்பாற் புலவரான காக்கைப்பாடினியார் போற்றும் போக்கிற்கும் அடிப்படையில் அமைந்துள்ள வேறுபாடு புலப்படுகிறது. பெண்ணை ஐம்புலன் இன்பத்திற்கு  உரிய பொருளாகப் பார்க்காமல் நற்பண்புகளையும்,பிற பெருமைகளையும் முன்னிலைப்படுத்துவது பெண்மொழியாக அமைகிறது. மேனியெழிலைப் பாடுதற்கும்; அலங்காரத்திற்கு சிறப்பிடம் அளிப்பதற்கும்; அதாவது தோற்றச் சிறப்பிற்கும்  பெண்மொழி மிகச் சிறிதளவே இடம் கொடுத்துள்ளது. கற்பிற்குரிய பண்புக்கூறுகளாக ஆண்கள் கூறும்  நாணம், மடமை, அடக்கம், இன்சொல், இனிய முறுவல் ஆகியவற்றை பெண்மொழி ஒதுக்கியுள்ளது. மரபு வழிவந்த இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ள பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைத்தெறிவதே பெண்ணியத் திறனாய்வு என்பார் முனைவர் இரா.பிரேமா(மேலது -ப.-87) இக்கட்டுரையில் காக்கைப்பாடினியார் எவ்வாறு பெண் பற்றிய போலியான கருத்தாக்கங்களை உடைக்கிறார் என்று கண்டோம். 

முடிவுரை:
பெண்மை, கற்பு முதலிய கொள்கைகள் ஆண்பாலினரின் எதிர்பார்ப்புக்கேற்ப உருவாக்கப்பட்டவை. நடைமுறை வாழ்க்கையில் அவற்றால் பெண்பாலாருக்கு மிகுந்த சோதனைகள் உண்டாகின்றன. இயற்கையான ஆசைகளையும், உணர்வுகளையும் ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட வேண்டிய சூழலை அக்கோட்பாடுகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பற்றிப் பாடும்போது அக்கொள்கைகள் காலாவதியாகி நீர்த்துப் போவதை காக்கைப்பாடினியாரின் பாடல்கள் உணர்த்தியுள்ளன. 1975ம் ஆண்டு ஆனிட் கொலொட்னியன் வெளியிட்ட Critical Inquiry என்ற கட்டுரை பெண் படைப்பாளர்களின் நோக்கையும் ,போக்கையும் இனம்காட்டுதல்; அவர்களது படைப்புகள்  ஆண் படைப்புகளிலிருந்து வேறுபடும் பாங்கை இனம்காட்டுதல் என்ற திறனாய்வுக் கோட்பாடுகளை எடுத்துரைக்கிறது(இரா.பிரேமா -மேலது-ப.-91).  சங்க இலக்கியத்திலுள்ள ஒவ்வொரு பெண்பாற்புலவரின் பாடல்களையும் இத்தகைய ஆய்விற்கு உட்படுத்தும் போது; பெண்கள் அன்று தொட்டுப் போராடுவது புலப்படும்.                                                                                                                            



துணைநூற்பட்டியல்:
இலக்கியங்கள்:- 
1)பதிற்றுப்பத்து - கழக வெளியீட்டு எண் - 523 - முதல் பதிப்பின் மறு அச்சு -2007
2)புறநானூறு - கழக வெளியீட்டு எண் - 438 - முதற் பதிப்பின் மறு அச்சு - 2007
3)புறநானூறு -கழக வெளியீட்டு எண் - 598 - முதற் பதிப்பின் மறு அச்சு - 2007
ஆய்வு நூல்கள்:
4)அரங்க மல்லிகா -பெண்ணின் வெளியும் இருப்பும் -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை .-முதற்பதிப்பு -2008
5)பஞ்சாங்கம்,க.-(மொ.பெ.ஆ.)-பெண்ணெனும் படைப்பு -செல்வன் பதிப்பகம் ,சென்னை.-1994
6)பஞ்சாங்கம் ,க.-'பெண்-மொழி-புனைவு'- காவ்யா பதிப்பகம்,சென்னை .-1999
7)பிரேமா,இரா.-பெண்ணியம்- உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை.-முதற்பதிப்பு -1994
8)தமிழிலக்கியத்தில் பெண்ணியமும் தலித்தியமும் -ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்,மதுரை.-முதற்பதிப்பு -2000

இதழ்:-
9)காவ்யா -தமிழிதழ் -ஏப்ரல் -ஜூன் 2018-சு.சண்முகசுந்தரம் ,சென்னை.




________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)



Saturday, July 28, 2018

கவிதையில் பயின்றுவரும் பாவகை

——    வலங்கைமான் இராம.வேல்முருகன்


முன்னுரை:
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த மொழியான நமதன்னைத் தமிழ்மொழியில் ஆதிகாலந்தொட்டே கவிதைகளில் பாவகைகள் எவ்வாறு அமைந்துவந்தன என்பதையும் தற்போது அவற்றின் நிலை என்ன என்பது பற்றியும் சற்றே ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகக் கொண்டு சங்க காலம் முதல் தற்போதைய காலம் வரை ஒருசில கவிதை நூல்களில் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்த பாவகைகளை மட்டும் சற்றே விளக்கமாகக் காண்போம்.

சங்ககாலப் பாடல்களில் பாவகைகள்: 
பெரும்பாலான சங்ககால பாடல்களில் ஆசிரியப்பா வகைகளே பயன்படுத்துப்பட்டுள்ளன.  ஆசிரியப்பா அந்தக் காலகட்டத்திலும் தற்பொழுதும் கூட மிக எளிமையாக எழுதக் கைவரும் என்பதாலும் சந்தம் இசை போன்றவை இதற்குத் தேவையில்லை என்பதாலும் இப்பாவகைப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. அகநானூறு புறநானூறு பாடல்களில் காதலானாலும் வீரமானாலும் இப்பா வகைதான் துணைசெய்துள்ளது.  ஆசிரியப்பாவின் அனைத்து வகைகளும், நிலைமண்டில, அறிமண்டில, நேரிசை ஆசிரியப்பா வகைகளே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன.  ஈரசைச் சீர்களை வைத்து எழுதுவது எளிதாக கைவரப் பெற்றதால் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்.

எட்டுத் தொகை நூல்களில் அகப்பொருள் பாடிய ஐந்து நூல்களில் 13 அடி முதல் 31 அடி வரை உள்ள நானூறு பாடல்களின் தொகுப்பு அகநானூறு எனவும் 9 அடி முதல் 12 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் நற்றிணை எனவும் 4 முதல் 8 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் குறுந்தொகை எனவும் 3 முதல் 5 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் ஐங்குறுநூறு எனவும் தொகுக்கப்பட்டன.  சேரநாட்டரசர் பதின்மரைப் பற்றி பதிற்றுப்பத்தும் சங்க கால மன்னர்கள் சிற்றரசர்களைப் பற்றியும் அவர்களது வீரம் பற்றியும் பாடப்பட்ட நானூறு பாடல்கள் புறநானூறு எனவும் தொகுக்கப்பட்டன.  இவையாவும் ஆசிரியப்பா வகையானாலும் பரிபாடல் கலித்தொகை இரண்டும் இனிய ஓசை நயம் மிகுந்த செய்யுட்களால் ஆக்கப்பட்டவையாகும்.

திருக்குறள்- நாலடியார்:
திருக்குறளில் குறள்வெண்பா பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது உலகறிந்த உண்மை. இரண்டு அடிகளில் உலகை அளந்த ஒப்பற்ற நூலாகத் திருக்குறள் சிறப்பதற்கும் வியப்பதற்கும் குறள் வெண்பாவில் அந்நூல் அமைந்ததும் ஒரு காரணமாகும்.  குறள்வெண்பாவில் சிறந்த ஒரு நூலாகவும் ஈடு இணையற்ற நூலாகவும் திகழும் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் யாதொரு குறள்வெண்பாவில் எழுதப்பட்ட நூலும் இல்லை என்றே சொல்லலாம். வெண்பாவில் எழுதப்பட்ட நாலடியார் போன்ற நூல்களும் சிறப்புற்ற நூல்களே.

சிலப்பதிகாரம்:
இளங்கோவடிகளே செய்யுள் வகைகளில் புதுமை செய்தவர் எனச் சொல்லலாம். அவருக்கு முற்பட்ட புலவர்கள் அகவலையும் வெண்பாவையுமே பெரும்பாலும் கையாண்டு வந்தனர்.அதன்பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் என்ற நிலையில் பெரும்பாலான பாடல்கள் அமைந்திருந்தாலும் அவை ஆவணப்படுத்தப்படவில்லை.  ஆனால் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் புதிய பலவகைச் செய்யுள் வடிவங்களைக் கையாண்டுள்ளார்.  கடற்கரையில் பாடும் இசைப்பாடல்களைக் கொண்ட கானல்வரியிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவற்றிலும் அந்தந்தப் பகுதியில் வழங்கிய நாட்டுப் பாடலிலிருந்தே புதிய செய்யுள் வடிவங்களைத் தந்தார். ஆனால் இதனுடன் இரட்டைக் காப்பியமாகச் சிறப்பிக்கப்படும் மணிமேகலையில் அகவல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பக்திஇலக்கியங்களில் பாவகை:
பிற்காலத்தில் வந்த பக்தி இலக்கியங்களில் இசைப்பாடல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.  திருக்கோயில்களில் இறைவனைப் பாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.  ஒரே மாதிரியான நடையில் அமைந்த மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம் அதற்குப் பின்வந்த பக்தி இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது.  ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைப் பாடல்களாகவே அனைவரும் பாடும் வகையில் பாடல்களைப் பதிகங்களாகவும் பாசுரங்களாகவும் எழுதிவந்தனர்.  புதிய இலக்கிய வகைகள் இடைக்காலத்தில் தோன்றின.அவற்றில் பலவகையான செய்யுள்களும் பயன்படுத்தப்பட்டன.  கலம்பகங்களில் வெவ்வேறு வகையான செய்யுள்வகைகள் நிறைந்த நூறு பாடல்கள் இடம்பெற்றன.  அந்தாதி வகையிலும் செய்யுள்கள் யாக்கப்பட்டன.  யமகம் எனும் சொல்லணிகளை அமைத்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.  பின்னர் பரணி எனப்படும் நூல்வகையில் இரண்டிரண்டு அடிகளாலான தாழிசை எனும் செய்யுள்வகைப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

விருத்தம்:
சீவக சிந்தாமணியில் விருத்தம் என்ற பாவகை பயன்படுத்தப்பட்டது என்றாலும் கம்பராமாயணத்தில் தான் விருத்தம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.  சூளாமணியும் வளையாபதியும் விருத்தப்பாவால் அமையப்பெற்றவையே;  பின்னர் நாயன்மார்களின் வரலாற்றைப் பாடிப்புகழ் பெற்ற சேக்கிழாரும் விருத்தப் பாவகையைத்தான் பின்பற்றியுள்ளார்.  வில்லிப்புத்தூரார் எழுதிய பாரதமும் விருத்தப்பாக்களினால் ஆனதேயாம்.  பின்னர் சந்தப்பாடல்கள் எழுதப்பட்டன.  அருணகிரிநாதர் சந்தப்பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்கினார்.  16 ஆம் நூற்றாண்டில் புகழேந்தி என்பவர் வெண்பாவைப் பயன்படுத்தி நளவெண்பாவைப் படைத்துள்ளார்.  காளமேகப்புலவர் பழைய இலக்கிய மரபை ஒட்டி நூல்கள் எழுதியுள்ளார்.  சிலேடையிற் சிறந்த காளமேகம் வெண்பாவையே பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்.  பிற்காலத்தில் வந்த தாயுமானவர் இரண்டு அடிப்பாடல்களான கண்ணிப்பாடல்களைப் பாடியுள்ளார்  389 கண்ணிகள் கொண்ட பராபரக்கண்ணி இவர் பாடியதே.

இராமலிங்க அடிகளார்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அனைத்துவகைச் செய்யுள்களுமே கையாளப்பட்டுள்ளன.  இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களில் அகவற்பாக்கள் விருத்தங்களோடில்லாமல் இசைப்பாடல்களின் வடிவங்களான கும்மி, சிந்து, கண்ணி மற்றும் கீர்த்தனைகளும் காணப்படுகின்றன.  பின்பு  வந்த பெரும்பாலான கவிஞர்கள் இசைப்பாடல்கள் கீர்த்தனைகளையே பாடியுள்ளனர்.

பாரதியார்:
பாரதியார் வந்தபிறகுதான் பாடல்களில் புரட்சியும் வந்தது.  சந்தப்பாடல்களுக்கு முன்னோடி என்றே பாரதியைச் சொல்லலாம்  அருணகிரிநாதர் சந்தப்பாடல்களைப் பாடினாலும் சாதாரணப் பாமரமக்களைச் சென்றடைந்தவை பாரதியின் பாடல்களே.  விருத்தப்பாடல்கள் சந்தப்பாடல்கள் இசைப்பாடல்கள் நொண்டிச்சிந்து என எல்லா வகைப் பாடல்களையும் எழுதிச் சிறந்தவர் பாரதியாரே.  இவருக்குப் பின் வந்தவர்களும் பெரும்பாலும் இவரைப் பின்பற்றியே எழுதிவந்துள்ளனர்.  அறுசீர் எழுசீர் மற்றும் எண்சீர் விருத்தப்பாடல்களையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முடிவுரை:
எந்தவகைப் பாவகையாக இருப்பினும் சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதுவதே சிறந்தது. எனினும் ஒரு கவிஞன் என்பவன் அனைத்து வகைப் பாவகைகளையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே தமிழ் மரபை என்றும் காக்கும் வழிகளில் ஒன்றாகும்.




வலங்கைமான் இராம. வேல்முருகன்

Friday, July 20, 2018

கரூர் அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு

—  துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
அண்மையில், அரவக்குறிச்சியைச் சேர்ந்த சுகுமார் பூமாலை என்னும் வரலாற்று ஆர்வலர் தம்முடைய ஊர்ப்பகுதியில் சமணர் குகைத்தளம், சமணச் சிற்பம் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். செய்தியைக் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் அவர்களுக்குத் தெரிவித்தார். சுகுமார் பூமாலையோடு சேர்ந்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை. சுந்தரம் ஆய்வு செய்ததில் அறியப்பட்ட செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.

சமணக்குன்றும் முருகன் கோயிலும்:
அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. இவ்வூரில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே  மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. நடுவில் ஆணும், பக்கங்களில் இரு பெண்களும் காணப்படுவதால், சமண வரலாறு அறியாத கிராமத்து மக்கள், இந்தச் சிற்பத் தொகுதியை முருகன், வள்ளி, தேவயானை ஆகிய கடவுள்களாகக் கருதி முருகன் கோயில் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்

சமணச் சிற்பங்கள்:
சிற்பங்களை ஆய்வு செய்ததில், இச்சிற்பங்கள் சமணச் சிற்பங்கள் என்பது புலப்பட்டது. நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சிற்பங்களில் இருப்போர் யார்?
1) பாகுபலியும் அவரின் சகோதரிகள் இருவரும்:
சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தில் இரு பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குக் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை   வேண்டிக்கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இராஜஸ்தானில் ஜோத்பூர், கருநாடகத்தில் அய்ஹொளெ, எலோராக் குடைவரை, பாதாமிக் குடைவரை, தமிழகக் கழுகுமலை ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.

மேற்குறித்த சமணச் சிற்பங்களின் தோற்ற அமைப்பை ஒப்புநோக்கிப் பார்க்கையில், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச்சிற்பத்தின் நடுவில் இருப்பவர் பாகுபலி என்னும் சமணத்துறவி என்பதாகவும், அவருக்கு இரு பக்கங்களிலும் நிற்கும் பெண் சிற்பங்கள் பாகுபலியின் சகோதரிகளான பிராமி, சுந்தரி ஆகியோர் என்பதாகவும் கருத நேர்கிறது.

சிற்பங்களில் இருப்போர் யார்?
2) ரிஷபதேவரும் அவரின் மகள்கள் இருவரும்:
ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர், சமணத்தில் முதலாம் தீர்த்தங்கரர் எனப்பார்த்தோம். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும். பாகுபலி தம் தந்தையாகிய ரிஷபதேவரைப் பின்பற்றித் துறவறம் பூண்டு தனிப்பெரும் சிறப்பைச் சமணத்தில் பெற்றிருப்பதால் அவருக்கு ஒரு குடை காட்டப்படுவதுண்டு. ஆனால், அவர் தீர்த்தங்கரர் அல்லர் என்னும் காரணத்தால் அவருக்கு முக்குடை இராது. பாகுபலியின் நீண்ட தவம் காரணமாக அவர் உடலைச் சுற்றிக் கொடிகள் படர்ந்தமையால், பாகுபலியின் சிற்ப உருவங்களில் ஆடையற்ற அவரது உடலைச் சுற்றிக் கொடிகள் தோன்றுமாறு சிற்ப வேலைப்பாடு  காணப்படும். இந்த அமைப்பு, மாறா அமைப்பு. எனவே, அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம், முக்குடையோடு இருப்பதாலும், சிற்பத்தின் உடலில் சுற்றிய கொடிகள் இன்மையாலும் தீர்த்தங்கரரான ரிஷபதேவரே என்று கருத நேர்கிறது. மேலும், ரிஷபதேவர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய கல்வியைப் புகட்டியவர் என்று ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்பெறுகிறது. பெண் கல்வி என்பது சமணர் போற்றும் ஒரு கருத்து. பெண் கல்வியின் மேன்மையையும், அருமையையும் தமிழ்ச் சமணர் போற்றியதன் குறியீடாகவே சமணரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டியுள்ள கவுந்தியடிகளைக் கொள்ளலாம். ரிஷபதேவர், தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.

ஸ்ரீபுராணத்திலிருந்து சில வரிகள்
” பகவான் ....................   ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி அவருள்  பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், ........... அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. ”

தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டன; எழுதப்படுகின்றன. தமிழில் எண்கள் வலமிருந்து இடமாகச் சுட்டப்பட்டன. இன்றும் எண்களின் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய பகுப்புகளில், வலப்புறம் முதலிடத்தில் ஒன்று, அடுத்து, வலப்புறத்திலிருந்து இடப்புறமாகப் பத்து, நூறு, ஆயிரம் என எண்கள் எழுதப்படுவது ஆராயத்தக்கது. தொல்காப்பியத்திலும், எழுத்து இடமிருந்து வலப்புறமாகவும், எண்கள் வலமிருந்து இடப்புறமாகவும் படிக்கப்படுதலைப் பற்றிய குறிப்பு உள்ளது. அரவக்குறிச்சியின் சமணச் சிற்பத்தில், தீர்த்தங்கரருக்கு வலப்புறம் நிற்கும் (ஒளிப்படத்தைப் பார்க்கும் நம் பார்வையில் அல்ல) பிராமி தன் வலக்கையை எழுதும் பாணியில் உயர்த்தி வைத்துள்ளதையும், இடக்கையை, எழுதப்படுகின்ற ஏட்டினை ஏந்தும் பாணியில் தாழ்த்தி வைத்துள்ளதையும் காணலாம். இதைப் பிராமி என்பவள் எழுத்தைக் கற்றதைக் குறிப்பால் உணர்த்தும் குறியீடாகக் கொள்ளலாம். தீர்த்தங்கரருக்கு இடப்புறம் நிற்கும் சுந்தரியின் சிற்பத்தில், சுந்தரி தன் இடக்கையை உயர்த்தியும், வலக்கையைத் தாழ்த்தியும் வைத்துள்ளதைக் காணலாம்.

பழஞ்சிற்பம்-திருத்துவதற்கு முன்னர் - தோற்றம் 

சிற்பத்தொகுதியில் நடுவில் இருப்பவர் ரிஷபதேவரா? அல்லது பாகுபலியா?
கீழ்க்காணும் தரவுகள் ஆய்வுக்குரியன.
1) ஆண் சிற்பத்தில் முக்குடை காணப்படுகிறது.
2) ஆண் சிற்பத்தில் உடலில் கொடிகள் காணப்படவில்லை.
3) பெண்கள் இருவரின் கைப்பாணி அல்லது முத்திரை, ஆதிநாதர்  எண்ணும் எழுத்தும் கற்பித்த மகள்களாகச் சுந்தரி, பிராமி இருவரைக் குறிப்பதாக உள்ளது.
மேற்காணும் தரவுகள், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம் ஆதிநாதருடையது என்னும் முடிவை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இரு வேறு கருதுகோள்களையும் ஆய்வறிஞர்கள் சிலர் இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிந்து போவதல்ல. மீளாய்வுகள் தொடரும் நிலையில், நாம் எட்டிய (அல்லது நாம் எட்டியதாக எண்ணிய ) முடிவுகள் மாறக்கூடும். தமிழகத்தில், ஆதிநாதர், மகள்களான பிராமி, சுந்தரி ஆகியோர்  இணைந்த அரிய சிற்பம் இது ஒன்றே எனக் கருதலாம். இவ்வரிய சமணச் சிற்பம் கொங்குப்பகுதியில் அமைந்துள்ளது என்பது கொங்கு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

சமணக்குன்று -  சமணச் சிற்பம் - திருத்தியபின்னர்



சமணச் சிற்பத்தின் காலம்:
சமணம், தமிழகத்தில், குறிப்பாகப் பாண்டிநாட்டிலும் கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்துள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம். இதன் அடிப்படையில், இச் சமணச் சிற்பத்தின் காலத்தைக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகக் கொண்டு செல்லலாம். சிற்பத்தின் பழமையான ஒளிப்படம் ஒன்று, மிகுதியான சிதைவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டு மொத்தச் சிற்ப அமைதியையும் சமணத்தின் மறுமலர்ச்சிக் காலத்தையும் கருத்தில்கொண்டால், சிற்பத்தின் காலம் கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டு எனக் கருதக் கூடுதல் வாய்ப்புள்ளது. 

முடிவுரை:
தமிழகத் தொல்லியல் துறையினர் இச் சிற்பத்தை மீளாய்வு செய்து மேலும் புதிய செய்திகளை வெளிக்கொணர ஆவன செய்யவேண்டும்.

 


நன்றி -துணை நின்றவர்கள் :
1) "மின்தமிழ்"  இணையக்குழுவினர்
2) திரு. பானுகுமார், சமண அறிஞர், சென்னை.
3) திரு நா.கணேசன், தமிழறிஞர், ஹூஸ்டன்.
4) திரு. கனக அஜித தாஸ், பேராசிரியர், சென்னை.
5) திரு. இராமச்சந்திரன், தொல்லியல் துறை (பணி நிறைவு), சென்னை.

நன்றி - தொல்லியல் தேடலுக்கு மூலமாய் நின்றவர்:  திரு. சுகுமார் பூமாலை.
 



___________________________________________________________
தொடர்பு: 
துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.