-- திரு. துரை சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
முன்னுரை:
23-09-2017 அன்று, கோவை வாணவராயர் அறக்கட்டளை சார்பாக, ”விஜய நகரர் ஆட்சியில் கொங்கு நாடு” என்னும் தலைப்பில் முனைவர். ஜெ. சௌந்தரராஜன் அவர்கள் சொற்பொழிவாற்றினார். இவர் சென்னைப்பல்கலைப் பேராசிரியர். யு.ஜி.சி. நல்கையில் விஜய நகரர் கட்டடக் கலை பற்றி ஆய்வு மேற்கொண்டவர். அவருடைய உரைக் கருத்துகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
இந்தியக் கட்டடக்கலை – ஒரு முன்னோட்டம்:
இந்தியக் கட்டடக்கலை சிந்து சமவெளிப் பண்பாட்டில் தொடங்குகிறது. கி.மு. 2250 முதல் இந்தப் பண்பாடு தொடங்குகிறது. 1919-1922 காலகட்டத்தில் ஜான் மார்ஷல் அகழாய்வு செய்ததில் கட்டடங்களின் கூறுகள் வெளிப்பட்டன. ஆனால், அவை “CIVIL ARCHITECTURE” வகையைச் சேர்ந்தவை. கோயில் கட்டடக் கலைக்கான சான்றுகள் எவையும் கிட்டவில்லை. ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகியன பாக்கிஸ்தான் பகுதிகள். நேருவின் அறிவுரையால், 500 இடங்களில் மேற்பரப்பு ஆய்வுகள் நடந்தன. கட்டட அடித்தளத்தின் எச்சங்களும், தூண்களின் எச்சங்களும் கிடைத்தன. அடுத்து, அசோகர் காலத்தில் சைத்தியங்கள் (புத்தர் கோயில்கள்) கட்டப்பெற்றன. கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை கட்டுமானங்கள் நிறைய ஏற்பட்டன. சாரநாத், சாஞ்சி, கயா, நாளந்தா, அமராவதி, பூம்புகார் ஆகிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை. அசோகனின் மகனும், மகளும் இலங்கை செல்லும்போது புகாரில் விகாரையில் வழிபட்டுள்ளனர். ஜைனத்துக்கும் பல்வேறு இடங்களில் கோயில்கள். கி.பி. 4-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பக்தி இயக்கம் வளர்ச்சியுற்றபோது கோயில்கள் கட்டப்பெற்றன. கி.பி. 5-8 நூற்றாண்டுகளில் குகைத் தளக் கட்டுமானங்களும் (NATURAL CAVERNS) , குடைவரைக் கோயில் கட்டுமானங்களும் ஏற்பட்டன. இவ்வகைக் கட்டுமானங்கள் சாளுக்கியரால் தொடங்கப்பெற்றன.
தமிழகத்தில் கட்டடக் கலை:
பல்லவர்களும், முற்காலப் பாண்டியர்களும், சோழர்களும் தொடர்ந்தனர். கட்டடக் கலை மூன்று வகையினது. திராவிடம், வேசரம், நாகரம். திராவிடம் தென்னகத்துக்குரியவை. மற்ற இரண்டும் வடநாட்டுக்குரியவை. தென்னகத்தில், விஜயநகரப் பேரரசு உருவானபோது, அவர்களுடைய கட்டடக் கலைப்பாணி, பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோரின் மரபு அல்லது பாணியைச் சேர்த்து ஒரு புது வளர்ச்சியாக உருவெடுத்தது.
விஜய நகர் அரசு – உருவாதல்:
விஜய நகரம் (அரசு) கி.பி. 1334-இல் உருவானது. ஹரிஹரர், புக்கர் ஆகியோரால். சங்கமச் சகோதரர்கள். விஜய நகரம் பேரரசாக உருவெடுத்தது. கி.பி. 1358 முதல் கி.பி. 1667 வரை தென்னிந்தியா முழுதும் ஆளுகை. சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு ஆகிய நான்கு அரசர்குடிகள் இப்பேரரசை ஆட்சி செய்தனர்.
தில்லியிலும், தக்கணத்திலும் சுல்தான்களின் ஆட்சியில், இந்துப் பேரரசான விஜயநகர் மீது சுல்தான்களின் தாக்குதல் தொல்லைகள். அகமது நகர், கோல்கொண்டா, பிஜப்பூர், பிதார் ஆகிய நான்கு சுல்தான்கள், அனைத்துப் பக்கங்களிலிருந்தும் ஒருங்கே வன்மையாகத் தாக்கியதில் ஈடுகொடுக்கமுடியாமல் விஜய நகர் வீழ்ந்தது. இந்த நான்கு சுல்தான்களும் பாமினி சுல்தான்கள் என்னும் பொதுப்பெயர் கொண்டவர்கள். போர் நடைபெற்ற இடம் தலைக்கோட்டை. இராபர்ட் சிவெல், விஜய நகர் அரசு, சுல்தான்களால் அழிக்கப்படாதிருந்தால், ஒரு மிகப்பெரிய வலுவான, இந்திய நாடு முழுமையையும் ஆளத்தக்க அரசாக உருவெடுத்திருக்கவேண்டியது என்று குறிப்பிடுகிறார். விஜய நகர் அரசின் அழிவு பற்றி ROBERT SEWELL, “THE FORGOTTEN EMPIRE” என்னும் தம்முடைய நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
விஜய நகரக் கட்டடக் கலை:
விஜய நகரக் கட்டடக் கலை:
விஜய நகரக் கட்டடக் கலை, மூவகையில் முன்னர் இருந்தவற்றைவிட வளர்ச்சியுற்றது எனலாம். அவை CIVIL ARCHITECTURE, RELIGIOUS ARCHITECTURE, MILITARY ARCHITECTURE. கோயிற்கட்டடக் கலையில், விஜய நகரப் பாணியில் புதிய அமைப்பு மண்டபங்கள். 16 கால், 100 கால், 1000 கால் மண்டபங்கள் எனப் பல்வேறு மண்டபங்கள் கட்டப்பெற்றன. இவை, உற்சவ மண்டபங்கள், நாட்டிய மண்டபங்கள் எனப் பலவகையானவை. மொத்தம் 14 வகைகள் உள்ளன. கோயில்களில் முன்பில்லாத கட்டுமானங்களாகக் குளங்கள், கோபுரங்கள் ஆகியன எழுந்தன. ஹம்பியில் நிறையக் கோயில்கள் பெரிய அளவில் கட்டப்பட்டன.
ஹம்பி 26 கி.மீ. பரப்புடையது. இயற்கை அரண் கொண்டது. மூன்று பக்கங்களில் மலைக்குன்றுகள், நாலாவது பக்கம் துங்கபத்திரை ஆறு. MILITARY ARCHITECTURE - FORTIFICATIONS வகையில் கோட்டைகளும், மதில்களும், அகழிகளும் விஜய நகர் அரசு காலத்தில் கட்டப்பெற்றன.
ஹம்பி
மதுரை, தஞ்சை, செஞ்சி போன்று எட்டு நாயக்கர் அரசுகள் விஜய நகர் அரசின் கீழ் இயங்கியபோது இவ்வாறான கோட்டைகள் பெருகின. கோயில் தூண்களில் இசைத்தூண்கள், ஒரே கல்லில் வேலைப்பாடுகளோடு கூடிய தூண்கள், யாளித் தூண்கள் ஆகியன புதியதாகத் தோன்றின. அதிட்டானப் பகுதியில், யாளி வரிகள், யானை வரிகள் ஆகியவை நிறைய இருந்தன. இராமாயணக் கதைக் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டன. இதே காட்சிகள் கோயில் சுவர்களில் ஓவியங்களாகவும் வரையப்பட்டன. சிவபுராணம், விஷ்ணு புராணம் ஆகிய நூல்களிலிருந்து காட்சிகள் எடுத்தாளப்பட்டுத் தூண் சிற்பங்களாக வடிக்கப்பட்டன. கோபுரங்கள் 11, 13 நிலை மாடங்களைக்கொண்டு உயர்ந்து நின்றன. இவை இராய கோபுரங்கள் எனப்பெயர் பெற்றன.
ஹம்பியில் உள்ள அரசியர் குளிக்கும் குளம், தாமரை மகால் (LOTUS MAHAL) , ஆகியவை CIVIL ARCHITECTURE வகையைச் சார்ந்தவை. தாமரை மகால், GUEST HOUSE போன்றது.
அரசியர் குளிக்கும் குளம்
தாமரை மகால்
இக்கட்டடத்தில் தற்போதுள்ள குளிர் சாதன அமைப்பு, கட்டுமானத்திலேயே உள்ளடங்கியது. தூண்கள், சுவர் ஆகியவற்றின் பூச்சு, கண்டசர்க்கரை, முட்டை, சுண்ணாம்பு போன்ற பத்து வகைப் பொருள்கள் கொண்ட சாந்துக் கலவையால் ஆனது. எனவே, எப்போதும் குளிர்ச்சி நிலவும் அமைப்பு. ஹம்பியில் உள்ள யானைக் கூடங்கள்(யானைக்கொட்டடி), அரசு இயந்திரத்துக்கான நிருவாகக் கட்டிடங்களே என அறிஞர்கள் கருதுகின்றனர்.
யானைக் கூடங்கள்
கட்டிடங்கள் உயரமாகக் கட்டப்பட்டன. இந்த உயரம், காற்று, ஒளி, குளிர்ச்சி ஆகியவற்றுக்குக் காரணமாய் அமைகிறது. கோபுரங்களின்மீது கட்டப்படும் சுதைக் கட்டுமான வேலைப்பாடுகள் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும் தன்மையுடையவை. விஜயநகர் காலத்தில் வீரபத்திரர், காளி, துர்க்கை ஆகிய கடவுளர்களின் கோயில்கள் மற்றும் சிற்பங்கள் தனிச் சிறப்புள்ளவை. லேபாக்ஷி வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்க ஒன்று. சிருங்கேரியில் உள்ள கோயில், கட்டடக்கலைகள் பல இணைந்து கட்டப்பட்டது. கோயில்களில் தேர்கள் விஜயநகர் காலச் சிறப்பு அடையாளங்கள். அதுபோலவே, கோயில்களில் ஓவியங்களும். கோயிற்சுவர்கள், மேற்கூரைகள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டன. இராசி ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.
விஜய நகர் ஆட்சியில் நாயக்கர்களின் தனி ஆட்சி:
விஜய நகர் ஆட்சியின் பெரும்பரப்பின் நிர்வாகம், ஆங்காங்கே நாயக்கர்களை நியமித்து அவர்களைச் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்ததனால் சிறப்புற நடைபெற்றது எனலாம். இல்லையெனில், பெரியதொரு நிலப்பரப்பைச் செம்மையாக விஜய நகர் மையத்திலிருந்து அரசு ஆளுகை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. எட்டு நாயக்கர்களுக்குத் தனி உரிமைகள் தந்தனர். நாயக்கர்களின் வருவாயில் ஒரு பகுதி விஜய நகர் அரசுக்கு. விஜய நகர அரசு கேட்கும்போதெல்லாம் நாயக்கர்கள் படையுதவி அளிக்கக் கடமைப்பட்டவர்கள். கொங்கு நாடு, மதுரை நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது. மதுரை நாயக்கர் ஆட்சியின் காலம் கி.பி. 1529-1736 ஆகும். திருமலை நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. நாயக்கர் ஆட்சியில், கொங்குநாட்டில் பெரும் கோயில்கள் எழுந்தன; சீரமைக்கப்பட்டன. அவினாசி, பேரூர், பவானி, தாரமங்கலம் ஆகிய ஊர்க்கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. விஜய நகர் ஆட்சியின் தொடக்கத்தின்போது தெலுங்கு மொழியினர் தமிழகத்தில் குடியேறியதும், பின்னர் தொடர்ந்த நாயக்கர் ஆட்சியில் கன்னட மொழி மக்கள் கொங்கு நாட்டில் குடிபெயர்ந்ததும் நிகழ்ந்தன. நாயக்கர் ஆட்சிக்கு முன்பே, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் ஹொய்சளர் ஆட்சியில் கன்னட மக்கள் கொங்குப்பகுதியில் குடிபெயர்ந்த நிகழ்ச்சியும் உண்டு. கோவை, சத்தி, ஈரோடு, கோபி, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் கன்னட மக்கள் குடிபெயர்ந்தனர். கொங்குப்பகுதி பழங்காலந்தொட்டு பருத்தி விளைந்த இடமாதலால் அதைச் சார்ந்த ஆடைத்தொழில் (நெசவு) பெருமளவில் வளர்ந்தது. SILK ROAD என்று வணிகத்தில் குறிப்பிடுவார்கள். கோவையில் ROBERT STANES என்பவர் இத்தொழிலின் முன்னோடி எனலாம்.
விஜய நகரர் காலத்தில், தமிழ் அல்லாத மாற்று மொழியாளர்கள் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளனர். நாலாயிரப்பிரபந்தம் நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் மிகுதியும் பரவியது. நாயக்கர் காலச் சுவர் ஓவியங்களில், ஓவியங்களின் கீழ் தமிழ் எழுத்துகளால் சிறு குறிப்புகள் எழுதப்பட்டன. புராணக்கதை பற்றிய ஓவியங்களில் இவ்வாறு விளக்கக் குறிப்புகளைக் காணலாம்.

விஜய நகர அரசர்கள் இந்துக் கடவுளர்களை வணங்கும் பற்றாளர்களாக இருப்பினும், சமயப் பொறை கொண்டவர்கள். பிற சமயங்களைப் புறக்கணியாமல் அணைத்துச் செல்லும் இயல்பினராயிருந்தனர். பிஜப்பூரில், விஜயநகரர் தர்கா கட்டியுள்ளனர்.
விஜய நகர ஆட்சி-கொங்குப் பகுதி:
கொங்குநாட்டைப் பொறுத்தவரை, கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக மூன்று அரசர்கள் அறியப்படுகிறார்கள். வீரநஞ்சராயர், வீரசிக்கராயர், பிரதாப ஹரிஹரராயர் ஆகியோர். விஜய நகரர் ஆட்சிக்காலத்தில் கொங்குப்பகுதியில் கல்வி வளர்ச்சியுற்றது. இலக்கியங்கள், சமற்கிருதத்திலும் தெலுங்கிலும் இயற்றப்பட்டன. கொங்கு மண்ணின் – தமிழகத்தின் - தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது தெளிவு. கல்வெட்டுகளில், பிரசஸ்தி என்னும் மெய்க்கீர்த்திகள் தெலுங்கு மொழியிலேயே அமைந்தன.
படங்கள் உதவி: விக்கிப்பீடியா
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________