Friday, June 23, 2017

புத்தரும் சாம்பானும்

-- இராம.கி.

 


புத்தருக்குச் சாம்பான் என்ற விதப்புப்பெயரில்லை. எந்தநூலிலும் அப்பெயரைக் குறிப்பிட்டு நான் கண்டதில்லை. ஆனால் சாம்பான் என்பதற்கு கருப்பு, சாம்பல் நிறத்தான் என்ற பொருளுண்டு. (சம்பாதி/சாம்பாதி என்ற புகார் நகரப் பெயரும் கருப்பு என்ற பொருளிற் கிளைத்தது தான். நாகர் என்ற பெயர்ச் சொல்லும் கருப்பிற் கிளைத்தது தான். அதை வேறிடத்திற் பேசுவேன். பேசவேண்டும். அதன் தாக்கம் உலகந் தழுவியது.) ஒரு வேளை கருங்கல்லிற் செய்த சிலையின் நிறங்கருதி சாம்பான் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அல்லது சாமண்/சமண்/சமன் என்பதும் சாம்பான் என்றாகி இருக்கலாம். சமணம் என்ற சொல்  வேதமறுப்பு நெறிகள் எல்லாவற்றிற்கும் முதலிற் பொதுப்பெயராகவே இருந்தது. அதில் அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் ஆகிய மூன்றுமேயுண்டு. பின்னால் அற்றுவிகமும் புத்தமும் தமிழகத்தில் அழிந்தபிறகு சமணம் என்ற சொல் செயினரையே குறித்தது.

சாதாரணம், சாமாண்யம்/சாமான்யம் என்று சொல்கிறோமே, அவை சாத்தாரன், சாமன்/சாமண்  என்ற சொற்களிற் கிளைத்தவை தான்.  இந்தக்காலத்தில் குப்பன்/சுப்பன் என்ற பெயரில்லாத பொதுமகனுக்கு இட்டுக்கட்டிப் பெயரிடுவது போல, ஒரு காலத்தில் நாவலந்தீவு எங்கணும் சாத்தன், சமணன் என்ற பெயர்கள் நிலவின. சாத்தன் என்ற சொல்லிற்கு அப்படியொரு பொதுப்பொருளை நீலகேசி சொல்லும்.

சாத்தன்>சாத்தாரன்>சாத்தாரனம்>சாத்தாரணம் = சாத்தன் தொடர்பான விதயம் = பொது விஷயம்
சமண்>சமணம்>சாமணம்>சாமாண்யம்.  = சமணன் தொடர்பான விதயம் = பொது விஷயம்

இவ்விரு சொற்களுமே இருபிறப்பிச் சொற்கள். னகரமும்  ணகரமும் ஒன்றிற்கொன்று போலியாய்ப் பயன்பட்டு மாறிமாறித் திரிவுகளை உண்டாக்கி யுள்ளன. கி.மு.650 தொடங்கி 1000/1500 ஆண்டுக்காலத்திற்கு வேதநெறியை மேல்தட்டுக் குடியினரே பெரிதும் போற்றினர். மற்றவர் வேதமறுப்பு நெறிகளையே பெரிதுஞ் சார்ந்திருந்தார். பொதுமக்கள் தேவாரக் காலந்தொட்டே சிறிது சிறிதாக வேதநெறிப்பட்ட சிவநெறி, விண்ணவநெறிக்கு மாறினர்.  பற்றி(பக்தி)யியக்கத்தின் விளைவு அது. புத்தர் சிலைகளும், அறிவர் சிலைகளும் தீர்த்தங்கரர் சிலைகளும் தூக்கியெறியப்பட்டன. ஒதுக்கப்பட்டன.  ஊருக்கு வெளியே தங்கிப் போன ஐயனாராகின. (ஐயனார் கோயில்கள் ஒருகாலத்தில் வேதமறுப்புக் கோயில்கள். அவற்றுள் புத்தர் சிலையோ,  ஆதிநாதர், நேமிநாதர், பார்சுவர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர் சிலையோ, மற்கலி கோசாளர் அல்லது  பூரணகாயவர் சிலையோ ஐயனார்/சாத்தனார் என்ற பெயரிலிருக்கும்.)  ஐயனார் கோயில்களின்  தாக்கம் பாண்டிநாட்டில் மட்டும் தங்கிப்போனது. சோழநாட்டிலும், தொண்டைநாட்டிலும் பெரிதும் அழிந்துபோனது.  இன்றும் பாண்டிநாட்டிலும் அதையொட்டிய சோழநாட்டுப் பகுதிகளிலும் (இன்னுந் தள்ளி நடுநாட்டுப் பகுதியிலும்) ஐயனார் கோயில்களுக்குக் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் சிவநெறியோடு  சமதானம் செய்துகொண்டு அங்கொரு இலிங்கத்தை பதியவைத்து வழிபாட்டைத் தொடர்ந்துகொண்டிருப்பார். இந்தச் சமதானமே இக்கோயில்களை விட்டுவைத்தது. ஆனால் ஐயனாரே கோயிலில் நடுநாயகமாய் இருப்பார்.  இச்சமயநிலைகள் இன்றும் முறையாக ஆயப்படாதிருக்கின்றன. (பெருங் கற்கட்டுமானங்கள் இல்லாத இக்கோயில்கள் களிமண்ணாலும்,   ஊரிற்கிடைக்கும் கற்களாலும்,  காரைகளாலும் கட்டப்பட்டிருக்கும். இவற்றைப் பேணிப் பாதுகாக்கப் பொதுமக்களை விட்டால் யாரிருக்கிறார்? சபரிமலை போல ஒன்றிரண்டு புறனடைகள் வேண்டுமானால் செல்வத்திற் புரளலாம்.) காலவோட்டத்தில் நினைவுகள்/மரபுகள் மங்கிப்போகலாம். 
__________________________________________________________________

இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com

__________________________________________________________________

No comments:

Post a Comment