- ருத்ரா இ பரமசிவன்
"கடவுள் வழங்கு கையறு கங்குல்"
மேலே கண்ட சொற்றொடர் கொண்டிருக்கும் பொருள் அகலமானது ஆழமானது.இயற்கையில் உள்ள மறைபொருள் அவ்வப்போது அந்தந்தக் காட்சிகளில் உணர்த்தும் இயல்புகள் மனித சிந்தனையில் கடந்து உள் செல்லும்; நிற்கும்.கடவுள் என்ற சொல் தெய்வம் என்று பொருள் படுவதை விட இத்தகைய நுண்மை நோக்கிய இயற்கை உணர்வுகள் வெளிப்படுவதை சங்கச்செய்யுட்களில் நிறையவே காணலாம்.
இருப்பினும் "ஓதல் அந்தணர் வேதம் பாட"என்ற வரிகளோடு பொறுத்திப்பார்க்கும்போது சங்கத்தமிழ்ப்புலவர்களின் மெய்யறிவும் இறை உள்ளுணர்வும் எத்துணை நுண்மாண் நுழைபுலம் கொண்டிருக்கிறது என்று புலப்படும்.
பிறமம் அதாவது முதல் பிறப்பும் அந்த முதல் அண்டப்பொருளும் என்ன? என்ற கேள்விகளில் தான் வேதாந்தம் இன்னும் இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலாமலும் அல்லது வைக்காமலேயே அதைத்தேடிக்கொண்டிரு என்ற உட்குறிப்பில் அப்படியே சிந்தித்துக்கொண்டிரு என்றும் இருப்பதாக நாம் கொள்ளலாம்.எனவே ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாய் தூங்கிக்கிடக்கும் அந்த இரவு தான் கடவுள் நிலை என்பதும் தத்துவ வல்லுநர்கள் கூறும் அந்த "வெறுமை" நிலை தான் கடவுள் தன்மையைக்காட்டும் நிலை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம்.கையறு நிலை என்பது மிக மிக ஆழமான அருமையான சொல்.கடவுள் திட உருவமாய் நம் முன் தோன்றி அருளும் வலிமையில்லாத ஒரு "நிழல் இருள்"தோற்றமே நம் ஆழ்துயில் நிலையில் இருப்பது.இதில் பலப்பல வண்ணங்கள் காட்டும் தோற்றமயக்கமே(ஹாலுசினேஷன்) கடவுள் எனும் கருத்தோட்டமாக இருக்கிறது.இதை வெளிப்படுத்திய ஓதல் ஆந்தையார் என்ற புலவரும் "ஓதல்" தொழில் செய்பவராக இருக்கலாம்.(ஆதனின் தந்தையார் அல்லது ஆதனை தந்தையாக கொண்டிருப்பவர் என்றும் நாம் கொள்ளலாம்) ஓதல் புரியும் ஆதனின் தந்தையே இப்புலவர் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.ஓதல் ஓதம்...இதுவே வேதம் ஆகியிருக்குமோ? தமிழ் நாட்டின் தற்போதைய ஓதுவார்கள் அந்த "ஓதல் ஆந்தையாரின்"சுவடு பற்றியவர்களாக இருக்கலாம்.
சரி. போகட்டும். இப்போது "தலைவி" தலைவனோடு களவு (காதல்) இழைந்ததில் ஊர்ப்பழியாகி அந்த சுடுசொற்கள் (அலர்) அவளை மிகவும் துயர் உறச்செய்து பொறுக்க முடியாத நிலையில் நள்ளிரவில் வானத்தை உற்று நோக்குகிறாள்.வானம் ஒளியை அடையாது அல்லது மறைக்கப்பட்டு வலிமையற்ற(கையறு நிலையில்) ஒரு இருள் பிண்டமாக ஒரு "உருவெளி மயக்கப்பிழம்பாக" பார்க்கிறாள்.இதைக் கடவுள் என்பது ஒரு வழக்கம் என்கிறார்போல் இச்சொல் வழங்கப்படுகிறது.இந்தப்பின்னணியில் நம் சங்கதமிழ்ச்சுவடிகளில் அதிர்ந்து கிடக்கும் ஒரு வகைத்துடிப்புகளையே இப்போது இயற்றியிருக்கிறேன். பாடல் இதோ.
கடவுள் வழங்கு கையறு கங்குல்
வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.
செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.
கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
நையக்கொண்டு துவல்பட வீழும்.
தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
அன்ன அலரின் புண் படுத்தாங்கு
அவியும் வாழும் புல்லென செத்து.
"கடவள் வழங்கு கையறு கங்குல்"
ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க
பிணியா நின்று பிறள்தல் போலும்
என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.
திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
அலரி மூசும் அழல் வெங்காட்டின்
அலைபடு புள்ளென அழியும் என்கவினே.
எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
குவவு மணற் குடுமி கோவை தோறும்
குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன
எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.
வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.
செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.
கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
நையக்கொண்டு துவல்பட வீழும்.
தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
அன்ன அலரின் புண் படுத்தாங்கு
அவியும் வாழும் புல்லென செத்து.
"கடவள் வழங்கு கையறு கங்குல்"
ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க
பிணியா நின்று பிறள்தல் போலும்
என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.
திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
அலரி மூசும் அழல் வெங்காட்டின்
அலைபடு புள்ளென அழியும் என்கவினே.
எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
குவவு மணற் குடுமி கோவை தோறும்
குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன
எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.
______________________________________________________
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
No comments:
Post a Comment