Sunday, June 4, 2017

ராட்சஸம்

-- கவிக்கோ அப்துல்ரகுமான்

வெளியீடு: விகடன் (இதழ்: ஜூன் 2, 2017)


 
அப்துல் ரகுமான்


அப்துல் ரகுமான் எழுதிய நான்கு சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கின்றன. 'ராட்சஸம்' என்ற சிறுகதை 14.3.1993 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை....

ராட்சஸம்

 

தலைவர் ‘பார்ட்’ பார்ட்’டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என்று நான்கு பெரிய வர்ணத் துண்டுகள்.
சாரம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. துண்டுகளை ஒட்டுப் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி.
பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளை காலையில் கூட்டம். விடிவதற்குள் முடித்தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந்தன.
அப்துல் ரகுமான் கதை

பையன் டீ கொண்டுவந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார்.
பெருமாள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இப்படி ராட்சஸக் கட்-அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனத்தில் பிரமாண்டமாக நின்றார்கள். அவர்களுடைய உயரம் தூரிகையாலும் மரத்தாலும் ஆனதல்ல; அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை.
“ஐயா...” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன்.
“நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?”
“வேண்டாம் தம்பி... போதுமான ஆட்கள் இருக்காங்க...”
“கூலி ஒண்ணும் வேணாங்க, சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்-அவுட் வெக்கறதிலே நானும் சேந்துக்கணும்னு ஆசையா இருக்கு...”
“ஓம் பேரு என்ன?” - பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப்பும் கலந்திருந்தது.
“கபாலிங்க...”
“சரி.. போய்ச் செய்...”
கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால்களில் விழுந்து வணங்கினான். எழுந்து பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்..? அவனுக்குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது.
கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசியலும் அவனுக்குத் தெரியாது. காட்டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப்பொட்டலம், வேட்டி, சேலை கொடுப்பது... இதையெல்லாம் படங்களில் பார்த்து, ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது... இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட்கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப்பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை.
தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய்விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி, மெய்சிலிர்த்து, விசிலடித்து ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி, தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான்; சுவரில் எழுதுவான்; ஊர்வலம் போவான்; உரக்கக் கோஷம் போடுவான்; அவரை யாராவது குறைத்துப் பேசினால், சண்டைக்குப் போய்விடுவான். இதில் எத்தனையோ முறை அடி உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதையெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத்துக்கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட்டால், தானே ஜெயித்ததுபோல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராமனுக்குதான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்டதில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.
ஆட்கள், இடுப்புப் பகுதியைத் தூக்க வந்தார்கள். கபாலியும் அவர்களோடு சேர்ந்து கைகொடுத்தான். அந்தக் கனம் அவனுக்குச் சுமையாகப் படவில்லை. தலைவரைத் தூக்குகிறோம் என்ற பெருமையும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் பளிச்சிட்டன.
நேரம் ஆக ஆக, பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து, வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். அவர் பரபரப்பாக ஆட்களை வேகப்படுத்தினார். அது கட்சிக் கூட்டம்தான். ஆனாலும் மேடை பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டிருந்தன.
“இவங்களுக்கெல்லாம் பெரிசாக் காட்டணும். அதுவும் அவசரமா காட்ட ணும். ஜனநாயகம்கிறானுங்க... அமைச்சர்கள் ஜனங்களுடைய சேவகர்கள் என்கிறானுங்க... ஆனா, ஜனங்களைவிட, தான் ஒசத்தி... ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்.. தங்களை அற்பமா நெனச்சு கால்லே விழுந்து வணங்கணும்... கப்பம் கட்டணும்னு நெனக்கிறானுங்க... தெரியாத தேவதையைவிட தெரிந்த அரக்கன் மேல்ங்கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தை செயற்கையா அசிங்கமா பெரிசாக்கி, பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டுனா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? இது படங்களை நம்புற தேசம். அதனாலே எல்லாரும் படங்காட்ட றானுங்க.. தூத்தேறி...” - பெருமாள் காறித் துப்பினார்.
தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகி விட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வானளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம்கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக்கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை... யாருக்கு வரும் அந்தப் புன்னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெடுத்துக் கும்பிட்டான்.
“எவ்வளவு செலவாகியிருக்கும்?” - யாரோ ஒருவன் கேட்டான்.
“ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க...”
“ஐம்பதாயிரமா? அடப்பாவிங்களா... ஐம்பது குடும்பம் ஒரு மாசத்துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே... ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிக்கிட்டு நிக்கிறதைப் பாரு...”
கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டையுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான்.
கபாலி அவன்மேல் பாய்ந்தான். “எங்க தலைவரு தெய்வம்யா... அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான்.
எதிர்பாராத தாக்குதலில் முதலில் நிலைகுலைந்து திகைத்துப்போன அந்த ஆள், தன்னைச் சமாளித்துக்கொண்டு கபாலியை ஓங்கி எட்டி மிதித்தான். கபாலி குலைந்துபோய்க் கீழே விழுந்தான்.
“இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப்படி அசிங்கப் படுத்துறீங்க... உன்ன மாதிரி முட்டாப் பசங்களுக்குத்தான்டா இவன் தெய்வம்...  உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம்... எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாகமாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்... பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு... உனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்கமாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே... அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டுவந்து கப்பம் கட்டறவன்  ஓட்டல் கட்டறதுக்காக, ஒரு சேரியையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன்... அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்...” - அந்த ஆள் பொங்கி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தான்.
கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்துவிடக் கூடாதே என்று, அந்த ஆளைச் சமாதானம் பண்ணி காலில் விழாத குறையாகக் கெஞ்சி அவனை அனுப்பிவைத்தார். பிழைப்புக்குக் கேடு வரும் என்றால் எதனோடும் சமரசம் செய்துகொள்ளப் பழகிவிட்டவர் அவர். கபாலியையும் சமாதானப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார்.
கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை... இல்லை... இதெல்லாம் உண்மையா இருக்க முடியாது... இருக்கக் கூடாது. அவன் எதிர்க்கட்சிக்காரனா இருப்பான்... பொய் சொல்றான்... தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்...’ -ஆனால், அவன் இதயத்திலிருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது.
கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா? உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது.
காற்று ‘ஹோ.. ஹோ..’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது.
கபாலி எழுந்து ஓடினான். “இல்லை.. இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
ஆணைக்குக் காத்திருந்ததுபோல், காற்று சீறிச் சினந்து ஆவேசமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது.
கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள், அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட்டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது - ‘இது உண்மையா...? உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு.
காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.

 

 __________________________________________________

vikatan.com 
http://www.vikatan.com/news/tamilnadu/91141-abdul-rahman-special-article.html
  __________________________________________________

தெரிவு: தேமொழி  

No comments:

Post a Comment