-- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
முன்னுரை:
திருவாங்கூர் தொல்லியல் வரிசை என்னும் கல்வெட்டியல்* நூலைப் படித்துக்கொண்டிருக்கையில், இரு வட்டெழுத்துக்கல்வெட்டுகள் கருத்தை ஈர்த்தன. திருவாங்கூர் அரசின்கீழ் பத்மநாபபுரம் கோட்டத்தில் அமையும் இரணியல் வட்டத்தில் அமைந்துள்ளது சேரமங்கலம் என்னும் சிற்றூர். அங்குள்ள விண்ணகரத்தில் கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள இரு கல்வெட்டுகள் பற்றிய செய்திகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
I. சேரமங்கலம் விண்ணகரம்:
சேரமங்கலம் விண்ணகரக் கோயில் கருவறை அதிட்டானப் பகுதியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டும் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் ஆட்சிக்காலத்தவை.
சுந்தரசோழபாண்டியன்:
கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் இராசேந்திரனுக்கு மூன்று ஆண்மக்கள். இராசாதிராசன், இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர். இராசேந்திரனின் மறைவுக்குப் பிறகு இம்மூவரும் ஒருவருக்குப் பின் ஒருவராகப் பட்டத்துக்குவந்து ஆட்சி செய்தார்கள். இராசேந்திரன் இறப்பதற்கு முன்னரே, பாண்டி மண்டலத்தைக் காக்கும் பொறுப்பை ஓர் இளவரசனுக்குக் கொடுத்திருந்தான். அவன், சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் என்னும் பெயரோடு மதுரையினின்றும் அரசு புரிந்துவந்தான். இந்தச் சுந்தரசோழன், மேலே குறிப்பிட்ட மக்களில் ஒருவனா அன்றி வேறானவனா என்பது விளங்கவில்லை என்று டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர்களேயன்றி இராசேந்திரனுக்கு வேறு ஆண்மக்களும் இருந்தனர் என அவர் கூறுவதிலிருந்து இந்த இளவரசர்களில் ஒருவனாகச் சுந்தரசோழபாண்டியன் இருக்கக்கூடும். ஆக, ஒரு சோழ இளவரசன், பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பைப் பெற்றான் என்பது தெளிவு. அவன் இயற்பெயர் சுந்தரசோழனாயிருக்கக் கூடும். பாண்டிய நாட்டு மக்களுக்குத் தம் அரசன் ஒரு பாண்டியனாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் உள்ளத்தளவில் ஒரு பாதுகாப்பையும், அணுக்கத்தையும் அளிக்கவேண்டும் என்ற உளவியல் அடிப்படையில், அந்த இளவரசனுக்குப் “பாண்டியன்” என்னும் அடைமொழியைத் தந்ததோடல்லாமல் பாண்டிய மன்னர்களில் பட்டப்பெயர்களில் ஒன்றான ”சடையவர்மன்” என்னும் பெயரையும் தந்து சோழரின் மேலாண்மை தொடர்கிறது (ஜடாவர்மன், ஜடிலவர்மன் ஆகியன வடமொழி ஒலிப்பில் உள்ள பெயர்கள்). முதற் சோழபாண்டியன் இவனே.
முதல் கல்வெட்டு:
முதல் கல்வெட்டு, சடையவர்மன் சுந்தரசோழபாண்டியனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. நீண்ட வரிகள் மூன்று கொண்டது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:
கல்வெட்டுப்பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மரான ஸ்ரீசுந்தரசோழபாண்டிய தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது சோழமண்டலத்தில் அருமொழிதேவ வள(நா)ட்டு புறங்
2 கரம்பை நாட்டு முக்கரையான மும்முடிசோழபுரத்து இருக்கு(ம்) சங்கரபாடியான் கழனி (வெண்ணியேன்) றம்பி திருவொற்றைச் சேவக மாயலட்டியேன் இராசராச தெ(ன்)னாட்டு சேரமங்கலத்து தேவர் தென்திருவரங்கமுடையார்(க்)குச்
3 சந்திராதித்தவல் நின்றெரிய வைச்ச தராவிளக்கு வெள்ளிக்கோலால் நிறை அறுபது இவ்விளக்கு திருவொற்றைச் சேவகன் என்பது சந்திராதித்தவல் நின்றெரியும்படித் திருவொற்றை சேவக மாயலட்டி வைச்ச திருநந்தாவிளக்கு
கல்வெட்டுச் செய்திகள்:
கொடையும் கொடையாளியும்
சேரமங்கலத்தில் இருக்கும் விண்ணகரக் கோயிலுக்கு, நிலையாக எரியும் நந்தாவிளக்கு கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி திருவொற்றைச் சேவக மாயலட்டி என்பவன். இவனுடைய இயற்பெயர் கொடுக்கப்படவில்லை. ஆனால், இவன் சோழமண்டலத்தைச் சேர்ந்த சங்கரபாடியான் கழனி வெண்ணி என்பவனின் தம்பியாவான். அண்ணனும் தம்பியும் எண்ணெய் வணிகச் செட்டிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கொடைப்பொருள் நின்றெரியும் நந்தாவிளக்கு. இவ்விளக்கு, தராவிளக்கு என்னும் வகையைச் சேர்ந்தது. தரா என்பது செம்பும் காரீயமும் சேர்ந்த உலோகக்கலவை. எனவே, தராவிளக்கு, இந்த உலோகக் கலவையில் செய்யப்பட்ட விளக்காகும்.
சோழப் பேரரசில் இருந்த நாட்டுப்பிரிவுகள்
கல்வெட்டில் இரண்டு நாட்டுப்பிரிவுகள் குறிப்பிடப்பெறுகின்றன. கொடையாளி சோழமண்டலத்து அருமொழிதேவ வளநாட்டில் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்தவன். புறங்கரம்பை நாடு, தற்போதுள்ள மன்னார்குடிக்குத் தெற்கும், பட்டுக்கோட்டைக்குச் சற்று கிழக்கிலும் அமைந்த ஒரு பகுதி எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியின்கீழ் இருந்த மலைமண்டலத்துச் சேரமங்கலம் இராசராச தென்னாட்டைச் சேர்ந்திருந்தது.
சோழர் சமுதாயத்தில் தொழில் மற்றும் பணி
சோழர் ஆட்சியில் வணிகத்தில் ஈடுபட்ட செட்டிகள் இருந்துள்ளனர். இவர்கள், ஐந்நூற்றுவர் என்னும் வணிகக் கூட்டமைப்பின் உறுப்பினர் குழு ஆவர். சங்கரபாடி என்பது அக்காலத்தில் இருந்த எண்ணெய் வணிகக் குழுவினைக் குறிக்கும். மாயிலட்டி என்பது செட்டிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு பட்டப்பெயராகும். வணிகத்தில் சிறப்புப் பெயரைப் பெற்ற கொடையாளி, வணிகத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. சோழப்படையில் பணியாற்றியவன் என்பதை “ஒற்றைச்சேவகன்” என்னும் தொடர் சுட்டுகிறது. ”ஒற்றைச்சேவகர்” என்னும் இராணுவபெயர், பாண்டியர் கல்வெட்டுகளிலும் (மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகியோர் கல்வெட்டுகள்) காணப்படுகிறது. ஒற்றைச்சேவகர் என்னும் தொடர் ஒற்றாடல் பணியில் ஈடுபட்ட படைவீரர்களைக் குறிப்பதாகக் கொண்டால், கல்வெட்டில் அத்தொடர் ”ஒற்றச் சேவகன்” என்றோ அல்லது “ஒற்றுச்சேவகன்” என்றோ குறிப்பிடப்படவேண்டும். ஆனால், கல்வெட்டில் “ஒற்றைச்சேவகன்” என்று இருப்பதால் ஒற்றாடலோடு தொடர்பு படுத்த இயலாது.
[கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ஒற்றைச்சேவகர் பற்றிய ஒரு குறிப்பு, தொல்லியல் துறையின் 1909-ஆம் ஆண்டறிக்கையில் காணப்படுகிறது. அக்குறிப்பின்படி, [“எபிகிராஃபியா இண்டிகா” தொகுதி 7-பக்கம் 141 ] முதலாம் பராந்தகனின் 33-ஆம் ஆட்சியாண்டில் “மலையாண ஒற்றைச்சேவகர்” என்னும் பெயரில் ஒரு சோழப்படைப் பிரிவு [REGIMENT] இருந்துள்ளதாகவும், அப்படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவன் முதலாம் பராந்தகனின் புதல்வர்களில் ஒருவனான “அரிகுல கேசரி” ஆவான் என்பதாகவும் செய்தி உள்ளது. எனவே, மேற்படி கல்வெட்டில் குறிப்பிடப்படும் கொடையாளி, முதலாம் பராந்தகன் காலம் முதல் சுந்தர சோழபாண்டியன் காலம் வரை இயங்கிவந்த “மலையாண ஒற்றைச்சேவகர்” படையைச் சேர்ந்தவன் என்று புலனாகிறது. முதலாம் பராந்தகனுக்கு உத்தம சீலி என்றொரு மகனும் உண்டு. உத்தமசீலி, அரிகுலகேசரி ஆகிய இரு இளவரசர்களும் தனித்தனியே அரசபதவியில் இருந்து ஆட்சி செய்யவில்லை என்பதும், அதன் காரணமாகவே திருவாலங்காட்டுச் செப்பேட்டில் சோழ அரசரின் குடி வழியில் [GENEALOGY] இருவர் பெயரும் விலக்கப்பட்டுள்ளன என்பதும் 1909-ஆம் ஆண்டறிக்கை தரும் கூடுதல் செய்தியாகும்.]
சுசீந்திரம் கோயில் கல்வெட்டுகளிலும் சேனாபதி, படைத்தலைவர், தண்டநாயகன் ஆகிய இராணுவப் பதவிப் பெயர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும், கொடையாளியின் தமையனான கழனி வெண்ணி என்பான் சுசீந்திரம் விண்ணகரக் கோயில் கல்வெட்டிலும் குறிக்கப்பெறுகிறான். அக்கல்வெட்டும் இதே சுந்தரசோழ பாண்டியனின் காலத்தது. மேற்படி கழனி வெண்ணி என்பான், அக்கல்வெட்டில், மதுராந்தகப் பேரரையன் என்னும் சிறப்புப் பெயரில் குறிக்கப்பெறுகிறான். சோழ அரசில் உயர் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பெறும் சிறப்புப் பெயர் “பேரரையன்” என்பதாகும். குடித்தொழிலால் எண்ணெய் வணிகனாயினும் சோழ அரசில் கழனி வெண்ணி பெரும்பதவியிலிருந்தமை கருதத்தக்கது.
ஆள்கள் பெயரில் அரண்மனை, சிம்மாசனம், மண்டபம் மற்றும் கொடைப்பொருள்
அரண்மனை, மண்டபம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். அதுபோலவே, நிவந்தங்களுக்கும், கொடைப்பொருட்களுக்கும் அரசன் மற்றும் கொடையாளிகளின் பெயர் சூட்டப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, அவிநாசி சிவன் கோயிலின் சந்தி வழிபாட்டுக்கு தண்ணாயக்கன் கோட்டை (இன்றைய வழக்கில் டணாயக்கன் கோட்டை)த் தண்டநாயக்கன் சிதகரகண்டன் என்பவன் அளித்த நிவந்தம் அவன் பெயரால் சிதகரகண்டன் சந்தி என்று வழங்கிற்று. அதே கோயிலில், வீரபாண்டியன் திருவோலக்க மண்டபம் என்றொரு மண்டபம் இருந்துள்ளது. இங்கே, சேரமங்கலக் கல்வெட்டில், கொடைப்பொருளான நந்தாவிளக்குக்கும் ஒரு பெயர் இடப்படுகிறது. இப்பெயர் கொடையாளியின் பெயரைக்கொண்டு, ”திருவொற்றைச்சேவகன்” எனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.
சோழர் காலத்தில் வழங்கிய நிறுத்தல் அளவை
சோழர் காலத்தில் செப்புத்திருமேனிகள், விளக்குகள், கலன்கள் ஆகியவற்றின் எடை கல்வெட்டுகளில் குறிக்கப்படும்போது “பலம்” என்னும் அளவு காணப்படுகிறது. இக்கல்வெட்டில், கொடைப்பொருளான விளக்கின் எடை அறுபது பலம் என்று குறிக்கப்படுகிறது. வெள்ளிக்கோல் என்னும் ஒரு வகை நிறுக்கும் கோல் பயன்பாட்டில் இருந்ததை அறிகிறோம்.
இரண்டாம் கல்வெட்டு:
இக்கல்வெட்டு சுந்தரசோழபாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சில முதுகுடி செந்தில் ஆயிரவதேவன் என்பானுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவன், அந்நிலங்களைக்கொண்டு ஈட்டும் வருவாயில் கடமை என்னும் நிலவரியினைச் செலுத்தவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அவன் விலகினால் அதற்குப் புணை ஏற்பவன் (SURETY) சேரமங்கலத்தைச் சேர்ந்த மன்றாடியான இறையான் ஆச்சன் என்பவன். தவறினால், அரசனுக்கு ஆறு கழஞ்சுப் பொன் தண்டமாகச் செலுத்தவேண்டும். இப்படி உடன்பட்டு இருவரும் கையெழுத்திட்டு ஒப்பந்த ஆவணத்தை ஊர்ச் சபையார்க்குக் கொடுக்கிறார்கள்.
கல்வெட்டின் பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மரான ஸ்ரீசுந்தரசோழ பாண்டியதேவர்(க்)கு யாண்டு ஆறாவது தென் திருவரங்கமுடையார் கோவிலில் முதுகுடி செந்தில் ஆயிரவ
2 (தே)வன் மன்றுமாறி போகில் தன்கட(மை) ஆக இறை புணைபடுவேன் இவ்வூர் மன்றாடி
3 இறையான் ஆச்சன்னேன் இப்படி அன்றென்(எ)ல் அன்றாடு கோவினுக்கு அறுகழ(ஞ்)சு பொன் படுவொதாக
4 ஒட்டி தீட்டு செலுத்துவதாக ஒட்டி கைய்த்தீட்டுக் குடுத்தோம் இவ்விருவோம் சேரமங்கலத்து ஸபையார்க்கு
5 இப்படி அறிவேன்
இக்கல்வெட்டில் ”மன்றுமாறி போகில்” என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. மன்று என்பது ஊர்ப்பொதுவிடம். வழக்குகள் முறையிடப்படும் இடமாகவும், தீர்க்கப்படும் இடமாகவும் இது அமையும். ”மன்றுமாறி போகில்” என்பது, ”மன்றில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக நடந்துகொண்டால்” எனப் பொருள் தரும் எனலாம். தீட்டு என்பது ஒப்பந்த ஆவணத்தைக் குறிக்கும். கைய்த்தீட்டு என்பது கையெழுத்திடுவதைக் குறிக்கும். ஒட்டி என்பது உடன்படுவது என்னும் பொருள் கொண்டது. ”அன்றாடு கோ” என்னும் தொடர், கல்வெட்டு சுட்டும் காலத்தில் ஆட்சி செய்கின்ற அரசன் என்று பொருள் தரும்.
II. தென் திருவரங்கமுடையார் கோயில்:
சேரமங்கலம் கல்வெட்டில், சேரமங்கலத்தில் உள்ள விண்ணகரக் கோயில் (பெருமாள் கோயில்), தென் திருவரங்கம் என்று குறிக்கப்படுகிறது. பக்திப் பெருக்கு நிறைந்த அடியார்களாக இருக்கும் மக்கள், பெருங்கோயில்களின் பெருமையின் தாக்கத்தால் தாம் வாழுகின்ற ஊரில் எழுப்பப்பட்டுள்ள கோயிலையும் பெருமைப் படுத்தும் உணர்வோடு, தம் ஊர்க்கோயிலை அப்பெருங்கோயிலின் ஈடாகவோ அன்றிச் சாயலாகவோ கருதி அதன் பெயரிலே வழங்குவர். எனவேதான், தென்னாட்டில் பல “தென்காசி”களும், தமிழகத்தில் பல ”தென் திருப்பதி”களும் காணப்படுகின்றன. திருவரங்கமும் இவற்றோடு சேர்ந்ததே. சேரமங்கலத்துக் கல்வெட்டில், அவ்வூர் விண்ணகரக்கோயில் “தென் திருவரங்கமுடையார் கோவில்” எனக் குறிப்பிடப்படுவது இவ்வகை மரபில் அமைந்ததாக இருக்கவேண்டும்.
குறிப்பு : நூலில் கல்வெட்டுப்படம் கிடைக்கவில்லை.
*TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES VOL PART I
by A.S. RAMANATHA AYYAR
Published 1924
Page: 28
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156

___________________________________________________________

No comments:
Post a Comment