Monday, June 26, 2017

சிலைகள் வடிக்கும் முறை


-- பழமைபேசி




மண்சிலைகளைச் செய்யும் போது கீழிருந்து மேல்நோக்கிச் செய்வதும், கல்லில் சிலைகள் வடிக்கும் போது மேலிருந்து கீழ்நோக்கிச் செய்வதும் தமிழர் மரபு. தமிழர் கலைகளைப் போற்றுவோம்! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!!













Friday, June 23, 2017

புத்தரும் சாம்பானும்

-- இராம.கி.

 


புத்தருக்குச் சாம்பான் என்ற விதப்புப்பெயரில்லை. எந்தநூலிலும் அப்பெயரைக் குறிப்பிட்டு நான் கண்டதில்லை. ஆனால் சாம்பான் என்பதற்கு கருப்பு, சாம்பல் நிறத்தான் என்ற பொருளுண்டு. (சம்பாதி/சாம்பாதி என்ற புகார் நகரப் பெயரும் கருப்பு என்ற பொருளிற் கிளைத்தது தான். நாகர் என்ற பெயர்ச் சொல்லும் கருப்பிற் கிளைத்தது தான். அதை வேறிடத்திற் பேசுவேன். பேசவேண்டும். அதன் தாக்கம் உலகந் தழுவியது.) ஒரு வேளை கருங்கல்லிற் செய்த சிலையின் நிறங்கருதி சாம்பான் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். அல்லது சாமண்/சமண்/சமன் என்பதும் சாம்பான் என்றாகி இருக்கலாம். சமணம் என்ற சொல்  வேதமறுப்பு நெறிகள் எல்லாவற்றிற்கும் முதலிற் பொதுப்பெயராகவே இருந்தது. அதில் அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் ஆகிய மூன்றுமேயுண்டு. பின்னால் அற்றுவிகமும் புத்தமும் தமிழகத்தில் அழிந்தபிறகு சமணம் என்ற சொல் செயினரையே குறித்தது.

சாதாரணம், சாமாண்யம்/சாமான்யம் என்று சொல்கிறோமே, அவை சாத்தாரன், சாமன்/சாமண்  என்ற சொற்களிற் கிளைத்தவை தான்.  இந்தக்காலத்தில் குப்பன்/சுப்பன் என்ற பெயரில்லாத பொதுமகனுக்கு இட்டுக்கட்டிப் பெயரிடுவது போல, ஒரு காலத்தில் நாவலந்தீவு எங்கணும் சாத்தன், சமணன் என்ற பெயர்கள் நிலவின. சாத்தன் என்ற சொல்லிற்கு அப்படியொரு பொதுப்பொருளை நீலகேசி சொல்லும்.

சாத்தன்>சாத்தாரன்>சாத்தாரனம்>சாத்தாரணம் = சாத்தன் தொடர்பான விதயம் = பொது விஷயம்
சமண்>சமணம்>சாமணம்>சாமாண்யம்.  = சமணன் தொடர்பான விதயம் = பொது விஷயம்

இவ்விரு சொற்களுமே இருபிறப்பிச் சொற்கள். னகரமும்  ணகரமும் ஒன்றிற்கொன்று போலியாய்ப் பயன்பட்டு மாறிமாறித் திரிவுகளை உண்டாக்கி யுள்ளன. கி.மு.650 தொடங்கி 1000/1500 ஆண்டுக்காலத்திற்கு வேதநெறியை மேல்தட்டுக் குடியினரே பெரிதும் போற்றினர். மற்றவர் வேதமறுப்பு நெறிகளையே பெரிதுஞ் சார்ந்திருந்தார். பொதுமக்கள் தேவாரக் காலந்தொட்டே சிறிது சிறிதாக வேதநெறிப்பட்ட சிவநெறி, விண்ணவநெறிக்கு மாறினர்.  பற்றி(பக்தி)யியக்கத்தின் விளைவு அது. புத்தர் சிலைகளும், அறிவர் சிலைகளும் தீர்த்தங்கரர் சிலைகளும் தூக்கியெறியப்பட்டன. ஒதுக்கப்பட்டன.  ஊருக்கு வெளியே தங்கிப் போன ஐயனாராகின. (ஐயனார் கோயில்கள் ஒருகாலத்தில் வேதமறுப்புக் கோயில்கள். அவற்றுள் புத்தர் சிலையோ,  ஆதிநாதர், நேமிநாதர், பார்சுவர், மகாவீரர் போன்ற தீர்த்தங்கரர் சிலையோ, மற்கலி கோசாளர் அல்லது  பூரணகாயவர் சிலையோ ஐயனார்/சாத்தனார் என்ற பெயரிலிருக்கும்.)  ஐயனார் கோயில்களின்  தாக்கம் பாண்டிநாட்டில் மட்டும் தங்கிப்போனது. சோழநாட்டிலும், தொண்டைநாட்டிலும் பெரிதும் அழிந்துபோனது.  இன்றும் பாண்டிநாட்டிலும் அதையொட்டிய சோழநாட்டுப் பகுதிகளிலும் (இன்னுந் தள்ளி நடுநாட்டுப் பகுதியிலும்) ஐயனார் கோயில்களுக்குக் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் சிவநெறியோடு  சமதானம் செய்துகொண்டு அங்கொரு இலிங்கத்தை பதியவைத்து வழிபாட்டைத் தொடர்ந்துகொண்டிருப்பார். இந்தச் சமதானமே இக்கோயில்களை விட்டுவைத்தது. ஆனால் ஐயனாரே கோயிலில் நடுநாயகமாய் இருப்பார்.  இச்சமயநிலைகள் இன்றும் முறையாக ஆயப்படாதிருக்கின்றன. (பெருங் கற்கட்டுமானங்கள் இல்லாத இக்கோயில்கள் களிமண்ணாலும்,   ஊரிற்கிடைக்கும் கற்களாலும்,  காரைகளாலும் கட்டப்பட்டிருக்கும். இவற்றைப் பேணிப் பாதுகாக்கப் பொதுமக்களை விட்டால் யாரிருக்கிறார்? சபரிமலை போல ஒன்றிரண்டு புறனடைகள் வேண்டுமானால் செல்வத்திற் புரளலாம்.) காலவோட்டத்தில் நினைவுகள்/மரபுகள் மங்கிப்போகலாம். 




__________________________________________________________________













இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com

__________________________________________________________________

Thursday, June 22, 2017

ஊறெண்ணெய்


ஆக்கம்: பழமைபேசி விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் வாழ்வில் இன்றியமையாத அளவுக்குப் பலவற்றுக்கும் உதவக்கூடியது. எனவேதான் அகத்தியர் சொல்லிய 'தாயில்லாதவருக்கு விளக்கெண்ணெயே தாய்' என்பதை தாயெண்ணெய் எனச் சொல்வதும், கண்களில் இருக்கும் மாசு நீங்கி நல்ல பார்வை கிட்டுமென்பதை, 'கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தீட்டு பாக்குறா பாரு' எனச் சொல்வதும் தமிழர் வழக்காறு.

உரிய பருவத்தில் பூப்பெய்தாத பெண்மகளை 'இருசி' எனச் சொல்வதும், அத்தகு பெண்மகளை இளக்குவதற்கு விளக்கெண்ணெய் பாவிப்பதும், விளக்குகளுக்கு ஆமணக்கெண்ணெய் பாவிப்பதும், செரிமானமற்று மெலிந்திருக்கும் குழந்தைகள் நன்கு ஊற, தாய்ப்பாலுடன் விளக்கெண்ணெய் கலந்து கொடுத்து வர குழந்தை நன்கு ஊறுமென்பதால், இவ்வழக்கத்திற்கு ஊறெண்ணெய் கொடுத்தலெனச் சொல்லி ஊறெண்ணெய் கொடுப்பதும் தமிழர் மரபு.

Wednesday, June 14, 2017

சிறீபெரும்புதூர் அருகே அமரம்பேட்டில் இருக்கும் வழிப்போக்கர் மண்டபக் கல்வெட்டு

-- யுவராஜ் அமிர்தபாண்டியன்





காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அமரம்பேடு என்ற ஊருக்கருகில் சாலையோரத்தில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட பழங்காலக் கற்றளி மண்டபம் காணப்படுகிறது. இடிந்து சிதைந்த நிலையில் கொடுங்கை, சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படும் இக்கட்டுமானத்தில்  பிற்கால நாயக்கர்கள்  காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது.  இதனிலிருந்து தெரிவது பழங்கால சாத்து, வணிகப்பாதைகள், சிறுபாதைகள் மற்றும் கோயில்களை இணைக்கும் பாதைகளைக் கொண்டே நவீன சாலைகளும் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதே...!



கல்வெட்டின் பாடம்:
1    சாலிவாகன
2    ன் பிறந்த ௲
3   ௬ ௱ ௪ ௰ ௩ ௵
4    த்தைக்கு செ
5    ல்லும் பலவ
6    வருஷம் அர்
7    ப்பசி மாசம்
8   ௨ ௰ ௯ ௳ சோ
9    மவாரம் யிப்
10   படி கொத்த
11   சுப தினத்தில்
12   சவள வேளா
13   ளரில் அமரம்
14   பேட்டு மூறத்திய
15   ப்ப முதலியார்
17   குமாரன் நயினி
18   யப்ப முதலியார் அ
19   வர் குமாரன்
20   ராசப்ப முதலியார் செ
21   ய்வித்த தற்மம்
22   மண்டபம் ௳

 சாலிவாகன  வருஷம் 1643 (௲ ௬ ௱ ௪ ௰ ௩ ௵) என்பது ஆங்கில ஆண்டு  1721. இவ்விரு ஆண்டுகளும்  "பிலவ" என்னும் தமிழ் ஆண்டோடு பொருந்துகிறது. 

ஐப்பசி = அர்ப்பசி (என எழுதப்பட்டுள்ளது). ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை  (௨ ௰ ௯ ௳ சோமவாரம் ), என்பது  ஆங்கில ஆண்டின்  பொது ஆண்டு  1721 - நவம்பர் - 10-ஆம் நாள்.

சவுளி விற்கும் வேளாளர் எடுத்த மண்டபம். சவளி (> ஜவுளி) தமிழ்ச்சொல் எனக் காட்டும் அரிய கல்வெட்டு. மூர்த்தியப்பன் என்ற பெயர் மூறத்தியப்ப என எழுதப்பட்டுள்ளது, ரகரம் றகரமாக எழுதுதல் உண்டு. புள்ளி (விராமம்) மெய்களின் மேல் உள்ள கல்வெட்டு.

கல்வெட்டு தரும் செய்தி:  சாலிவாகன சகாப்தம் 1643 பிலவ ஆண்டு ஐப்பசி 29 ஆம் நாள் திங்கட்கிழமை என்னும் சுபதினத்தில் சவள வேளாளர் குல அமரம்பேட்டு மூர்த்தியப்ப முதலியாரின் குமாரன் நயினியப்ப முதலியார் என்பவரது குமாரன் ராசப்ப முதலியார் செய்வித்த தர்ம மண்டபம்.

கல்வெட்டுப் படங்கள் கொடுத்தவர் சென்னை சேவாஸ் திரு.பாண்டியன், தகவல் தந்தவர்  திரு. யுவராஜ் அமிர்தபாண்டியன். கல்வெட்டு விளக்கங்கள் அளித்தவர்கள் திருவாளர்கள் து. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை;  மயிலை நூ.த.லோக சுந்தரம்; முனைவர் கணேசன் ஹூஸ்டன்.






---




Sunday, June 11, 2017

சுந்தரசோழபாண்டியனின் சேரமங்கலம் வட்டெழுத்துக் கல்வெட்டுகள்

-- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
திருவாங்கூர் தொல்லியல் வரிசை என்னும் கல்வெட்டியல்* நூலைப் படித்துக்கொண்டிருக்கையில், இரு வட்டெழுத்துக்கல்வெட்டுகள் கருத்தை ஈர்த்தன. திருவாங்கூர் அரசின்கீழ் பத்மநாபபுரம் கோட்டத்தில் அமையும் இரணியல் வட்டத்தில் அமைந்துள்ளது சேரமங்கலம் என்னும் சிற்றூர். அங்குள்ள விண்ணகரத்தில் கோயிலின் அதிட்டானப்பகுதியில் உள்ள இரு கல்வெட்டுகள் பற்றிய செய்திகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

I. சேரமங்கலம் விண்ணகரம்:

சேரமங்கலம் விண்ணகரக் கோயில் கருவறை அதிட்டானப் பகுதியில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டும் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியனின் ஆட்சிக்காலத்தவை.

சுந்தரசோழபாண்டியன்:
கங்கையும் கடாரமும் கொண்ட முதலாம் இராசேந்திரனுக்கு மூன்று ஆண்மக்கள்.  இராசாதிராசன், இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர். இராசேந்திரனின் மறைவுக்குப் பிறகு இம்மூவரும் ஒருவருக்குப் பின் ஒருவராகப் பட்டத்துக்குவந்து ஆட்சி செய்தார்கள். இராசேந்திரன் இறப்பதற்கு முன்னரே, பாண்டி மண்டலத்தைக் காக்கும் பொறுப்பை ஓர் இளவரசனுக்குக் கொடுத்திருந்தான். அவன், சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் என்னும் பெயரோடு மதுரையினின்றும் அரசு புரிந்துவந்தான். இந்தச் சுந்தரசோழன், மேலே குறிப்பிட்ட மக்களில் ஒருவனா அன்றி வேறானவனா என்பது விளங்கவில்லை என்று டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர்களேயன்றி இராசேந்திரனுக்கு வேறு ஆண்மக்களும் இருந்தனர் என அவர் கூறுவதிலிருந்து இந்த இளவரசர்களில் ஒருவனாகச் சுந்தரசோழபாண்டியன் இருக்கக்கூடும். ஆக, ஒரு சோழ இளவரசன், பாண்டிய நாட்டை ஆளும் பொறுப்பைப் பெற்றான் என்பது தெளிவு. அவன் இயற்பெயர் சுந்தரசோழனாயிருக்கக் கூடும். பாண்டிய நாட்டு மக்களுக்குத் தம் அரசன் ஒரு பாண்டியனாக இருக்கிறான் என்ற எண்ணத்தில் உள்ளத்தளவில் ஒரு பாதுகாப்பையும், அணுக்கத்தையும் அளிக்கவேண்டும் என்ற உளவியல் அடிப்படையில், அந்த இளவரசனுக்குப் “பாண்டியன்”  என்னும் அடைமொழியைத் தந்ததோடல்லாமல் பாண்டிய மன்னர்களில் பட்டப்பெயர்களில் ஒன்றான ”சடையவர்மன்” என்னும் பெயரையும் தந்து  சோழரின் மேலாண்மை தொடர்கிறது (ஜடாவர்மன், ஜடிலவர்மன் ஆகியன வடமொழி ஒலிப்பில் உள்ள பெயர்கள்). முதற் சோழபாண்டியன் இவனே.

முதல் கல்வெட்டு:
முதல் கல்வெட்டு, சடையவர்மன் சுந்தரசோழபாண்டியனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. நீண்ட வரிகள் மூன்று கொண்டது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு:

கல்வெட்டுப்பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மரான ஸ்ரீசுந்தரசோழபாண்டிய தேவர்க்கு   யாண்டு பத்தொன்பதாவது சோழமண்டலத்தில் அருமொழிதேவ  வள(நா)ட்டு புறங்

2 கரம்பை நாட்டு முக்கரையான மும்முடிசோழபுரத்து இருக்கு(ம்)   சங்கரபாடியான் கழனி (வெண்ணியேன்) றம்பி  திருவொற்றைச் சேவக மாயலட்டியேன் இராசராச தெ(ன்)னாட்டு சேரமங்கலத்து தேவர் தென்திருவரங்கமுடையார்(க்)குச்

3 சந்திராதித்தவல் நின்றெரிய வைச்ச தராவிளக்கு வெள்ளிக்கோலால் நிறை அறுபது இவ்விளக்கு திருவொற்றைச் சேவகன் என்பது சந்திராதித்தவல் நின்றெரியும்படித் திருவொற்றை சேவக மாயலட்டி வைச்ச திருநந்தாவிளக்கு

கல்வெட்டுச் செய்திகள்:
கொடையும் கொடையாளியும்
சேரமங்கலத்தில் இருக்கும் விண்ணகரக் கோயிலுக்கு, நிலையாக எரியும் நந்தாவிளக்கு கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி திருவொற்றைச் சேவக மாயலட்டி என்பவன். இவனுடைய இயற்பெயர் கொடுக்கப்படவில்லை. ஆனால், இவன் சோழமண்டலத்தைச் சேர்ந்த சங்கரபாடியான் கழனி வெண்ணி என்பவனின் தம்பியாவான். அண்ணனும் தம்பியும் எண்ணெய் வணிகச் செட்டிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கொடைப்பொருள் நின்றெரியும் நந்தாவிளக்கு. இவ்விளக்கு, தராவிளக்கு என்னும் வகையைச் சேர்ந்தது. தரா என்பது செம்பும் காரீயமும் சேர்ந்த உலோகக்கலவை. எனவே, தராவிளக்கு, இந்த உலோகக் கலவையில் செய்யப்பட்ட விளக்காகும்.

சோழப் பேரரசில் இருந்த நாட்டுப்பிரிவுகள்
கல்வெட்டில் இரண்டு நாட்டுப்பிரிவுகள் குறிப்பிடப்பெறுகின்றன. கொடையாளி சோழமண்டலத்து அருமொழிதேவ வளநாட்டில் புறங்கரம்பை நாட்டைச் சேர்ந்தவன். புறங்கரம்பை நாடு, தற்போதுள்ள மன்னார்குடிக்குத் தெற்கும், பட்டுக்கோட்டைக்குச் சற்று கிழக்கிலும் அமைந்த ஒரு பகுதி எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியின்கீழ் இருந்த மலைமண்டலத்துச் சேரமங்கலம் இராசராச தென்னாட்டைச் சேர்ந்திருந்தது.

சோழர் சமுதாயத்தில் தொழில் மற்றும் பணி
சோழர் ஆட்சியில் வணிகத்தில் ஈடுபட்ட செட்டிகள் இருந்துள்ளனர். இவர்கள், ஐந்நூற்றுவர் என்னும் வணிகக் கூட்டமைப்பின் உறுப்பினர் குழு ஆவர். சங்கரபாடி என்பது அக்காலத்தில் இருந்த எண்ணெய் வணிகக் குழுவினைக் குறிக்கும். மாயிலட்டி என்பது செட்டிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு பட்டப்பெயராகும். வணிகத்தில் சிறப்புப் பெயரைப் பெற்ற கொடையாளி, வணிகத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிகிறது. சோழப்படையில் பணியாற்றியவன் என்பதை “ஒற்றைச்சேவகன்”  என்னும் தொடர் சுட்டுகிறது. ”ஒற்றைச்சேவகர்” என்னும் இராணுவபெயர், பாண்டியர் கல்வெட்டுகளிலும் (மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகியோர் கல்வெட்டுகள்) காணப்படுகிறது. ஒற்றைச்சேவகர் என்னும் தொடர் ஒற்றாடல் பணியில் ஈடுபட்ட படைவீரர்களைக் குறிப்பதாகக் கொண்டால், கல்வெட்டில் அத்தொடர் ”ஒற்றச் சேவகன்”  என்றோ அல்லது “ஒற்றுச்சேவகன்” என்றோ குறிப்பிடப்படவேண்டும். ஆனால், கல்வெட்டில் “ஒற்றைச்சேவகன்” என்று இருப்பதால் ஒற்றாடலோடு தொடர்பு படுத்த இயலாது.

[கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  ஒற்றைச்சேவகர் பற்றிய ஒரு குறிப்பு, தொல்லியல் துறையின் 1909-ஆம் ஆண்டறிக்கையில் காணப்படுகிறது. அக்குறிப்பின்படி, [“எபிகிராஃபியா இண்டிகா”  தொகுதி 7-பக்கம் 141 ] முதலாம் பராந்தகனின் 33-ஆம் ஆட்சியாண்டில் “மலையாண ஒற்றைச்சேவகர்” என்னும் பெயரில் ஒரு சோழப்படைப் பிரிவு [REGIMENT] இருந்துள்ளதாகவும், அப்படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவன் முதலாம் பராந்தகனின் புதல்வர்களில் ஒருவனான “அரிகுல கேசரி” ஆவான் என்பதாகவும் செய்தி உள்ளது. எனவே, மேற்படி கல்வெட்டில் குறிப்பிடப்படும் கொடையாளி, முதலாம் பராந்தகன் காலம் முதல் சுந்தர சோழபாண்டியன் காலம் வரை இயங்கிவந்த “மலையாண ஒற்றைச்சேவகர்” படையைச் சேர்ந்தவன் என்று புலனாகிறது. முதலாம் பராந்தகனுக்கு உத்தம சீலி என்றொரு மகனும் உண்டு. உத்தமசீலி, அரிகுலகேசரி ஆகிய இரு இளவரசர்களும் தனித்தனியே அரசபதவியில் இருந்து ஆட்சி செய்யவில்லை என்பதும், அதன் காரணமாகவே திருவாலங்காட்டுச் செப்பேட்டில் சோழ அரசரின் குடி வழியில் [GENEALOGY] இருவர் பெயரும் விலக்கப்பட்டுள்ளன என்பதும் 1909-ஆம் ஆண்டறிக்கை தரும் கூடுதல் செய்தியாகும்.]

சுசீந்திரம் கோயில் கல்வெட்டுகளிலும் சேனாபதி, படைத்தலைவர், தண்டநாயகன் ஆகிய இராணுவப் பதவிப் பெயர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும், கொடையாளியின் தமையனான கழனி வெண்ணி என்பான் சுசீந்திரம் விண்ணகரக் கோயில் கல்வெட்டிலும் குறிக்கப்பெறுகிறான். அக்கல்வெட்டும் இதே சுந்தரசோழ பாண்டியனின் காலத்தது. மேற்படி கழனி வெண்ணி என்பான், அக்கல்வெட்டில், மதுராந்தகப் பேரரையன் என்னும் சிறப்புப் பெயரில் குறிக்கப்பெறுகிறான். சோழ அரசில் உயர் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பெறும் சிறப்புப் பெயர் “பேரரையன்”  என்பதாகும். குடித்தொழிலால் எண்ணெய் வணிகனாயினும் சோழ அரசில் கழனி வெண்ணி பெரும்பதவியிலிருந்தமை கருதத்தக்கது.

ஆள்கள் பெயரில் அரண்மனை, சிம்மாசனம், மண்டபம் மற்றும் கொடைப்பொருள்
அரண்மனை, மண்டபம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம். அதுபோலவே, நிவந்தங்களுக்கும், கொடைப்பொருட்களுக்கும் அரசன் மற்றும் கொடையாளிகளின் பெயர் சூட்டப்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக, அவிநாசி சிவன் கோயிலின் சந்தி வழிபாட்டுக்கு தண்ணாயக்கன் கோட்டை (இன்றைய வழக்கில் டணாயக்கன் கோட்டை)த் தண்டநாயக்கன் சிதகரகண்டன் என்பவன்  அளித்த  நிவந்தம் அவன் பெயரால் சிதகரகண்டன் சந்தி என்று வழங்கிற்று. அதே கோயிலில், வீரபாண்டியன் திருவோலக்க மண்டபம் என்றொரு மண்டபம் இருந்துள்ளது.  இங்கே, சேரமங்கலக் கல்வெட்டில், கொடைப்பொருளான நந்தாவிளக்குக்கும் ஒரு பெயர் இடப்படுகிறது. இப்பெயர் கொடையாளியின் பெயரைக்கொண்டு, ”திருவொற்றைச்சேவகன்”  எனக் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

சோழர் காலத்தில் வழங்கிய நிறுத்தல் அளவை
சோழர் காலத்தில் செப்புத்திருமேனிகள், விளக்குகள், கலன்கள் ஆகியவற்றின் எடை கல்வெட்டுகளில் குறிக்கப்படும்போது “பலம்”  என்னும் அளவு காணப்படுகிறது. இக்கல்வெட்டில், கொடைப்பொருளான விளக்கின்  எடை அறுபது பலம் என்று குறிக்கப்படுகிறது. வெள்ளிக்கோல் என்னும் ஒரு வகை நிறுக்கும் கோல் பயன்பாட்டில் இருந்ததை அறிகிறோம்.

இரண்டாம் கல்வெட்டு:
இக்கல்வெட்டு சுந்தரசோழபாண்டியனின் ஆறாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சில முதுகுடி செந்தில் ஆயிரவதேவன் என்பானுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அவன், அந்நிலங்களைக்கொண்டு  ஈட்டும் வருவாயில் கடமை என்னும் நிலவரியினைச் செலுத்தவேண்டும். இந்தப் பொறுப்பிலிருந்து அவன் விலகினால் அதற்குப் புணை ஏற்பவன் (SURETY) சேரமங்கலத்தைச் சேர்ந்த மன்றாடியான இறையான் ஆச்சன் என்பவன். தவறினால், அரசனுக்கு ஆறு கழஞ்சுப் பொன் தண்டமாகச் செலுத்தவேண்டும். இப்படி உடன்பட்டு இருவரும் கையெழுத்திட்டு ஒப்பந்த ஆவணத்தை ஊர்ச் சபையார்க்குக் கொடுக்கிறார்கள்.

கல்வெட்டின் பாடம் 
1 ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மரான ஸ்ரீசுந்தரசோழ பாண்டியதேவர்(க்)கு யாண்டு ஆறாவது தென் திருவரங்கமுடையார் கோவிலில் முதுகுடி செந்தில் ஆயிரவ

2 (தே)வன் மன்றுமாறி போகில் தன்கட(மை) ஆக இறை புணைபடுவேன் இவ்வூர் மன்றாடி

3 இறையான் ஆச்சன்னேன் இப்படி அன்றென்(எ)ல் அன்றாடு கோவினுக்கு அறுகழ(ஞ்)சு பொன் படுவொதாக

4 ஒட்டி தீட்டு செலுத்துவதாக ஒட்டி கைய்த்தீட்டுக் குடுத்தோம் இவ்விருவோம் சேரமங்கலத்து ஸபையார்க்கு

5 இப்படி அறிவேன்

இக்கல்வெட்டில் ”மன்றுமாறி போகில்”  என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. மன்று என்பது ஊர்ப்பொதுவிடம். வழக்குகள் முறையிடப்படும் இடமாகவும், தீர்க்கப்படும் இடமாகவும் இது அமையும். ”மன்றுமாறி போகில்” என்பது, ”மன்றில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக  நடந்துகொண்டால்” எனப் பொருள் தரும் எனலாம்.  தீட்டு என்பது ஒப்பந்த ஆவணத்தைக் குறிக்கும். கைய்த்தீட்டு என்பது கையெழுத்திடுவதைக் குறிக்கும். ஒட்டி என்பது உடன்படுவது என்னும் பொருள் கொண்டது. ”அன்றாடு கோ”  என்னும் தொடர், கல்வெட்டு சுட்டும் காலத்தில் ஆட்சி செய்கின்ற அரசன் என்று பொருள் தரும்.


II. தென் திருவரங்கமுடையார் கோயில்:

சேரமங்கலம் கல்வெட்டில், சேரமங்கலத்தில் உள்ள விண்ணகரக் கோயில் (பெருமாள் கோயில்), தென் திருவரங்கம் என்று குறிக்கப்படுகிறது. பக்திப் பெருக்கு நிறைந்த அடியார்களாக இருக்கும் மக்கள், பெருங்கோயில்களின் பெருமையின் தாக்கத்தால் தாம் வாழுகின்ற ஊரில் எழுப்பப்பட்டுள்ள கோயிலையும் பெருமைப் படுத்தும் உணர்வோடு, தம் ஊர்க்கோயிலை அப்பெருங்கோயிலின் ஈடாகவோ அன்றிச் சாயலாகவோ கருதி அதன் பெயரிலே வழங்குவர். எனவேதான், தென்னாட்டில் பல “தென்காசி”களும், தமிழகத்தில் பல ”தென் திருப்பதி”களும் காணப்படுகின்றன. திருவரங்கமும் இவற்றோடு சேர்ந்ததே. சேரமங்கலத்துக் கல்வெட்டில், அவ்வூர் விண்ணகரக்கோயில் “தென் திருவரங்கமுடையார் கோவில்”  எனக் குறிப்பிடப்படுவது இவ்வகை மரபில் அமைந்ததாக இருக்கவேண்டும்.

குறிப்பு :  நூலில் கல்வெட்டுப்படம் கிடைக்கவில்லை.
*TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES VOL PART I
    by A.S. RAMANATHA AYYAR
    Published 1924

    Page: 28 


___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

Tuesday, June 6, 2017

ஓலைத்துடிப்புகள்

- ருத்ரா இ பரமசிவன்


"கடவுள் வழங்கு கையறு கங்குல்"


மேலே கண்ட சொற்றொடர் கொண்டிருக்கும் பொருள் அகலமானது ஆழமானது.இயற்கையில் உள்ள மறைபொருள் அவ்வப்போது அந்தந்தக் காட்சிகளில் உணர்த்தும் இயல்புகள் மனித சிந்தனையில்  கடந்து உள் செல்லும்; நிற்கும்.கடவுள் என்ற சொல் தெய்வம் என்று பொருள் படுவதை விட இத்தகைய நுண்மை நோக்கிய இயற்கை உணர்வுகள் வெளிப்படுவதை சங்கச்செய்யுட்களில் நிறையவே காணலாம்.

இருப்பினும் "ஓதல் அந்தணர் வேதம் பாட"என்ற வரிகளோடு  பொறுத்திப்பார்க்கும்போது சங்கத்தமிழ்ப்புலவர்களின் மெய்யறிவும் இறை உள்ளுணர்வும் எத்துணை நுண்மாண் நுழைபுலம் கொண்டிருக்கிறது என்று புலப்படும்.

பிறமம் அதாவது முதல் பிறப்பும் அந்த முதல் அண்டப்பொருளும் என்ன? என்ற கேள்விகளில் தான் வேதாந்தம் இன்னும்  இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலாமலும் அல்லது வைக்காமலேயே அதைத்தேடிக்கொண்டிரு என்ற உட்குறிப்பில் அப்படியே சிந்தித்துக்கொண்டிரு என்றும் இருப்பதாக நாம் கொள்ளலாம்.எனவே ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாய் தூங்கிக்கிடக்கும் அந்த இரவு தான் கடவுள் நிலை என்பதும் தத்துவ வல்லுநர்கள் கூறும் அந்த "வெறுமை" நிலை தான் கடவுள் தன்மையைக்காட்டும்  நிலை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம்.கையறு நிலை என்பது மிக மிக ஆழமான அருமையான சொல்.கடவுள் திட உருவமாய் நம் முன் தோன்றி அருளும் வலிமையில்லாத ஒரு "நிழல் இருள்"தோற்றமே நம் ஆழ்துயில் நிலையில் இருப்பது.இதில் பலப்பல வண்ணங்கள் காட்டும் தோற்றமயக்கமே(ஹாலுசினேஷன்) கடவுள் எனும் கருத்தோட்டமாக இருக்கிறது.இதை வெளிப்படுத்திய ஓதல் ஆந்தையார் என்ற புலவரும் "ஓதல்" தொழில் செய்பவராக இருக்கலாம்.(ஆதனின் தந்தையார் அல்லது ஆதனை தந்தையாக கொண்டிருப்பவர் என்றும் நாம் கொள்ளலாம்) ஓதல் புரியும் ஆதனின் தந்தையே இப்புலவர் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.ஓதல் ஓதம்...இதுவே வேதம் ஆகியிருக்குமோ? தமிழ் நாட்டின் தற்போதைய ஓதுவார்கள் அந்த "ஓதல் ஆந்தையாரின்"சுவடு பற்றியவர்களாக இருக்கலாம்.


 
சரி. போகட்டும்.  இப்போது "தலைவி" தலைவனோடு களவு (காதல்) இழைந்ததில் ஊர்ப்பழியாகி அந்த சுடுசொற்கள் (அலர்) அவளை மிகவும் துயர் உறச்செய்து  பொறுக்க முடியாத நிலையில் நள்ளிரவில் வானத்தை உற்று நோக்குகிறாள்.வானம் ஒளியை அடையாது அல்லது மறைக்கப்பட்டு வலிமையற்ற(கையறு நிலையில்) ஒரு இருள் பிண்டமாக ஒரு "உருவெளி மயக்கப்பிழம்பாக" பார்க்கிறாள்.இதைக் கடவுள் என்பது ஒரு வழக்கம் என்கிறார்போல் இச்சொல் வழங்கப்படுகிறது.இந்தப்பின்னணியில் நம் சங்கதமிழ்ச்சுவடிகளில் அதிர்ந்து கிடக்கும் ஒரு வகைத்துடிப்புகளையே இப்போது இயற்றியிருக்கிறேன்.  பாடல் இதோ.




கடவுள் வழங்கு கையறு கங்குல்


வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.
செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.
கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
நையக்கொண்டு துவல்பட வீழும்.
தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
அன்ன அலரின் புண் படுத்தாங்கு
அவியும் வாழும் புல்லென செத்து.
"கடவள் வழங்கு கையறு கங்குல்"
ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க‌
பிணியா நின்று பிறள்தல் போலும்
என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.
திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
அலரி மூசும் அழல் வெங்காட்டின்
அலைபடு புள்ளென‌ அழியும் என்கவினே.
எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
குவவு மணற் குடுமி கோவை தோறும்
குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன‌
எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.

 


______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

Sunday, June 4, 2017

ராட்சஸம்

-- கவிக்கோ அப்துல்ரகுமான்

வெளியீடு: விகடன் (இதழ்: ஜூன் 2, 2017)


 
அப்துல் ரகுமான்


அப்துல் ரகுமான் எழுதிய நான்கு சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கின்றன. 'ராட்சஸம்' என்ற சிறுகதை 14.3.1993 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை....

ராட்சஸம்

 

தலைவர் ‘பார்ட்’ பார்ட்’டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என்று நான்கு பெரிய வர்ணத் துண்டுகள்.
சாரம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. துண்டுகளை ஒட்டுப் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி.
பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளை காலையில் கூட்டம். விடிவதற்குள் முடித்தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந்தன.
அப்துல் ரகுமான் கதை

பையன் டீ கொண்டுவந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார்.
பெருமாள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இப்படி ராட்சஸக் கட்-அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனத்தில் பிரமாண்டமாக நின்றார்கள். அவர்களுடைய உயரம் தூரிகையாலும் மரத்தாலும் ஆனதல்ல; அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை.
“ஐயா...” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன்.
“நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?”
“வேண்டாம் தம்பி... போதுமான ஆட்கள் இருக்காங்க...”
“கூலி ஒண்ணும் வேணாங்க, சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்-அவுட் வெக்கறதிலே நானும் சேந்துக்கணும்னு ஆசையா இருக்கு...”
“ஓம் பேரு என்ன?” - பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப்பும் கலந்திருந்தது.
“கபாலிங்க...”
“சரி.. போய்ச் செய்...”
கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால்களில் விழுந்து வணங்கினான். எழுந்து பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்..? அவனுக்குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது.
கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசியலும் அவனுக்குத் தெரியாது. காட்டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப்பொட்டலம், வேட்டி, சேலை கொடுப்பது... இதையெல்லாம் படங்களில் பார்த்து, ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது... இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட்கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப்பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை.
தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய்விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி, மெய்சிலிர்த்து, விசிலடித்து ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி, தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான்; சுவரில் எழுதுவான்; ஊர்வலம் போவான்; உரக்கக் கோஷம் போடுவான்; அவரை யாராவது குறைத்துப் பேசினால், சண்டைக்குப் போய்விடுவான். இதில் எத்தனையோ முறை அடி உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதையெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத்துக்கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட்டால், தானே ஜெயித்ததுபோல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராமனுக்குதான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்டதில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.
ஆட்கள், இடுப்புப் பகுதியைத் தூக்க வந்தார்கள். கபாலியும் அவர்களோடு சேர்ந்து கைகொடுத்தான். அந்தக் கனம் அவனுக்குச் சுமையாகப் படவில்லை. தலைவரைத் தூக்குகிறோம் என்ற பெருமையும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் பளிச்சிட்டன.
நேரம் ஆக ஆக, பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து, வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். அவர் பரபரப்பாக ஆட்களை வேகப்படுத்தினார். அது கட்சிக் கூட்டம்தான். ஆனாலும் மேடை பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டிருந்தன.
“இவங்களுக்கெல்லாம் பெரிசாக் காட்டணும். அதுவும் அவசரமா காட்ட ணும். ஜனநாயகம்கிறானுங்க... அமைச்சர்கள் ஜனங்களுடைய சேவகர்கள் என்கிறானுங்க... ஆனா, ஜனங்களைவிட, தான் ஒசத்தி... ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்.. தங்களை அற்பமா நெனச்சு கால்லே விழுந்து வணங்கணும்... கப்பம் கட்டணும்னு நெனக்கிறானுங்க... தெரியாத தேவதையைவிட தெரிந்த அரக்கன் மேல்ங்கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தை செயற்கையா அசிங்கமா பெரிசாக்கி, பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டுனா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? இது படங்களை நம்புற தேசம். அதனாலே எல்லாரும் படங்காட்ட றானுங்க.. தூத்தேறி...” - பெருமாள் காறித் துப்பினார்.
தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகி விட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வானளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம்கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக்கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை... யாருக்கு வரும் அந்தப் புன்னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெடுத்துக் கும்பிட்டான்.
“எவ்வளவு செலவாகியிருக்கும்?” - யாரோ ஒருவன் கேட்டான்.
“ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க...”
“ஐம்பதாயிரமா? அடப்பாவிங்களா... ஐம்பது குடும்பம் ஒரு மாசத்துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே... ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிக்கிட்டு நிக்கிறதைப் பாரு...”
கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டையுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான்.
கபாலி அவன்மேல் பாய்ந்தான். “எங்க தலைவரு தெய்வம்யா... அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான்.
எதிர்பாராத தாக்குதலில் முதலில் நிலைகுலைந்து திகைத்துப்போன அந்த ஆள், தன்னைச் சமாளித்துக்கொண்டு கபாலியை ஓங்கி எட்டி மிதித்தான். கபாலி குலைந்துபோய்க் கீழே விழுந்தான்.
“இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப்படி அசிங்கப் படுத்துறீங்க... உன்ன மாதிரி முட்டாப் பசங்களுக்குத்தான்டா இவன் தெய்வம்...  உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம்... எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாகமாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்... பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு... உனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்கமாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே... அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டுவந்து கப்பம் கட்டறவன்  ஓட்டல் கட்டறதுக்காக, ஒரு சேரியையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன்... அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்...” - அந்த ஆள் பொங்கி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தான்.
கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்துவிடக் கூடாதே என்று, அந்த ஆளைச் சமாதானம் பண்ணி காலில் விழாத குறையாகக் கெஞ்சி அவனை அனுப்பிவைத்தார். பிழைப்புக்குக் கேடு வரும் என்றால் எதனோடும் சமரசம் செய்துகொள்ளப் பழகிவிட்டவர் அவர். கபாலியையும் சமாதானப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார்.
கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை... இல்லை... இதெல்லாம் உண்மையா இருக்க முடியாது... இருக்கக் கூடாது. அவன் எதிர்க்கட்சிக்காரனா இருப்பான்... பொய் சொல்றான்... தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்...’ -ஆனால், அவன் இதயத்திலிருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது.
கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா? உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது.
காற்று ‘ஹோ.. ஹோ..’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது.
கபாலி எழுந்து ஓடினான். “இல்லை.. இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
ஆணைக்குக் காத்திருந்ததுபோல், காற்று சீறிச் சினந்து ஆவேசமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது.
கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள், அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட்டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது - ‘இது உண்மையா...? உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு.
காலையில் கூடும் கும்பலின் காலடிகள் பட்டு அதுவும் மறைந்துவிடும்.

 

 __________________________________________________

vikatan.com 
http://www.vikatan.com/news/tamilnadu/91141-abdul-rahman-special-article.html
  __________________________________________________

தெரிவு: தேமொழி  

Saturday, June 3, 2017

பற்று வரவு

-- கவிக்கோ அப்துல்ரகுமான்
 





இறக்கப்போகிறவனே! நில்
கணக்கை முடித்துவிட்டுப்போ!

வாழ்க்கையெல்லாம் பற்றெழுதியவனே!
உன்பங்குக்கு ஒரு வரவாவது
வைத்துவிட்டுப்போ!

இந்த பூமிக்கு 
ஒரு பிச்சைக்காரனாகவே வந்தாய்!
ஒரு கடனாளியாக
சாகப்போகிறாயா?

என்னுடையதென்று
நீ உரிமைகொண்டாடும் எதுவும்
உன்னுடையதல்ல!

உன் உடல்
உன் பெற்றோரிட்டபிச்சை!

உன் சுவாசம்
நீ காற்றிடம்வாங்கிய கடன்!

நீ சுவைத்த வாழ்க்கை
பல தேனீக்கள் திரட்டிவைத்த
தேனென்பதை அறிவாயா?

பசித்தபோதெல்லாம்
பூமியின்மார்பில்
பால்குடித்தாயே!

ஆயுள்முழுவதும்
ஐந்துபிச்சைப்பாத்திரங்களில்
வாங்கி உண்டாயே!

எதற்காவது விலைகொடுத்தாயா?
வாடகையாவது தந்ததுண்டா?
நன்றியாவதுசெலுத்தினாயா?

மேகத்தின் நீரையும்
சந்திரசூரியவிளக்குகளையும்
பயன்படுத்தினாயே!

கட்டணம்கட்டியதுண்டா?

அனுபவங்களின் திருமணங்களுக்குவந்து
விருந்துண்டாயே!

மொய்யெழுதினாயா?

சமூகம்கட்டிய
கூரைகளின் அடியில் குடியிருந்தவனே!

தீவிபத்துநடந்தபோது
உன்பங்குக்கு
ஒருவாளிநீராவது வீசினாயா?

உன் முன்னோரின்நதிகளிலிருந்து
உன்வயல்களுக்கு
நீர்பாய்ச்சிக்கொண்டவனே!

வெள்ளம் கரையுடைத்தபோது
ஒருதட்டாவது
மண்சுமந்தாயா?

அறிமுகமில்லாதகைகளால்
கண்ணீர்துடைக்கப்பட்டவனே!

சகமனிதனின்
ஒருதுளிக்கண்ணீரையாவது
நீ துடைத்திருக்கிறாயா?

யாரோ ஊற்றிய நீரால்
புன்னகைபூத்தவனே!

ஒரு காய்ந்த உதட்டிலாவது நீ
புன்னகையை மலர்த்தியிருக்கிறாயா?

என்ன உறவு உன் உறவு?

வாங்கலைமட்டும்செய்தாயே!
கொடுக்கலைச்செய்தாயா?

எந்தக்கையாலோ
சுடரேற்றப்பட்டவனே!

ஒருவிளக்கையாவது நீ
ஏற்றிவிட்டுப்போகவேண்டாமா?

மொத்தமாகச்செத்துப்போகிறாய்!

கொஞ்சம் சில்லறையாகவாவது
நீ இங்கே இருக்கவேண்டாமா?

மரணக்காற்றில்
ஒரு விளைக்கைப்போல்
அணைந்துபோகாதே!

ஓர் ஊதுவத்தியைப்போல்
கொஞ்சம் நறுமணமாவது
விட்டுவிட்டுப்போ!

உன் சாவில் சாம்பலையல்ல
நெருப்பைவிட்டுச்செல்!

மண்ணில் ஒரு காயத்தையல்ல
ஒரு மருந்தைவிட்டுச்செல்!

ஒருதடயமுமில்லாமல்
மறைவதற்கு வெட்கப்படு!
குற்றவாளிதான்
அப்படிச்செய்வான்.

-கவிக்கோ அப்துல்ரகுமான்