Wednesday, December 9, 2015

சேவலும் ஒரு துறவியும்


-செல்வன்.

பெர்னான்டோ லோபஸ்: உலகின் முதல் ராபின்சன் க்ருசோ
இந்த வரலாறு இந்தியாவில் துவங்குகிறது.
கிபி 1512ம் ஆண்டு. போர்ச்சுகீசியர் இந்தியாவில் நுழைந்து கொச்சியை தம் கட்டுபாட்டில் கொண்டு வந்திருந்தாலும் ஒரே துறைமுகத்தை நம்பியிருக்க முடியாது என சொல்லி மராட்டிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிஜபூர் சுல்தான் ஆதிக்கத்தில் இருந்த கோவா எனும் ஊரை பிடித்தார்கள்.
இதனால் கோபம் அடைந்த சுல்தான் அதில்ஷா பவுலூத் கான் எனும் தளபதி தலைமையில் ஒரு படையை அனுப்பினார். பவுலூத் கானும் கோவா தலைநகர் பனாஜி அருகே உள்ள பனஸ்டாரிம் எனும் சிற்றூரை பிடித்து கோட்டையை கட்டினார். அதன்பின் "இத்தனை கஷ்டபட்டு கோட்டையை கட்டிவிட்டு போர் எதுக்கு? நாம் இந்த ஊருக்கு ராஜாவாகிடலாம்" என சொல்லி அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.
இதனால் மேலும் கோபமடைந்த சுல்தான் அதில்ஷா ரசூல்கான் எனும் தளபதி தலைமையில் இன்னொரு படையை அனுப்பினார். ரசூல்கான் "துரோகியை விட எதிரியே மேல்" என சொல்லி போர்ச்சுகிசிரியரிடம் "எங்களுக்கு பனஸ்டாரிமை பிடிக்க உதவுங்கள். உங்களுக்கு கோவாவை வைத்துகொள்ள அனுமதிக்கிறோம்" என பேரம் பேசி போர்ச்சுகீசியர் உதவியுடன் பவுலூத்கானை அடித்துவிரட்டி பனஸ்டாரிமை பிடித்தார்.
அதன்பின் உதவிக்கு வந்த போர்ச்சுகிசிய தளபதி பெர்னார்ன்டோ லூபாஸ் தலைமையிலான படை பனஸ்டாரிமில் தங்கியது. எதிர்பாராவிதமாக பெர்னார்டோ லூபாஸ் இஸ்லாமை தழுவ அதன்பின் போர்ச்சுகிசிய படை முழுக்க ரசூல்கான் தலைமையில் சேர்ந்து உள்ளூர் முஸ்லிம் பெண்களை மணந்து அதில் பலர் மதம் மாறியும் விட்டார்கள். இதன்பின் பெர்னார்டோ லூபஸ் உதவியுடன் ரசூல்கான் கோவா மேல் படை எடுத்தார். கோவாவில் படைகளே சுத்தமாக இல்லை எனும் நிலையில், கோவா கோட்டை தடுமாறிக்கொண்டிருந்தது. உணவு சப்ளை துண்டிக்கபட்டு கோட்டை கடும் முற்றுகைக்கு ஆளானது.
இந்த சூழலில் கொச்சினில் இருந்த போர்ச்சுகிசிய தளபதி அல்பான்சோ ஆல்பர்கிகிக்கு தகவல் பறக்க அவர் கப்பலேறி கோவா வந்தார். அவரிடம் 30 காலாட்படை வீரர்களே இருந்தார்கள். ஆனால் ஏதோ மிகப்பெரும் படை வருகிறது என அஞ்சி ரசூல்கான் முற்றுகையை கைவிட்டுவிட்டு பனஸ்டாரிம் கோட்டைக்கு ஓடினார். மீதமிருந்த கோவா படைகளை அழைத்துகொண்டு பனஸ்டாரிம் கோட்டையை முற்றுகை இட்டார் அல்பான்சோ. ஆனால் கோட்டையை கைப்பற்றும் அளவு அவரிடம் படைபலம் இல்லை. "சரி நாளை காலை கோவாவுக்கு போய்விடலாம்" என அவர்கள் முடிவெடுக்கையில் வெள்ளைக்கொடியை ஏந்தி சரணடைய தூதனுப்பினார் ரசூல்கான். அவரிடம் மங்களூரில் இருந்து மிகப்பெரும் போர்ச்சுகிசிய படை வருவதாக தவறான தகவல் போயிருந்தது. சுல்தான் அதில்ஷாவிடன் உதவி கேட்டு அனுப்பியிருந்தபோதும் அது குறித்து எத்தகவலும் இல்லை. அதனால் சரண்டைய முடிவெடுத்தார் ரசூல்கான்.
"கோட்டையை ஒப்படைத்துவிட்டு, உங்களுக்கு உதவிய போர்ச்சுகிசிய துரோகிகளை ஒப்படைத்தால் ரசூல்கான் மற்றும் படைகளை எதுவும் செய்வதில்லை" என்றார் அல்பான்சோ
"அவர்கள் எங்களை நம்பி வந்தவர்கள். அவர்களை கொல்லமாட்டோம் என ஆணையிடுங்கள்" என்றார் ரசூல்கான்
"சரி" என வாக்குறுதி கொடுத்தார் அல்பான்சோ
கோட்டை, ஆயுதம், பீரங்கிகளை எல்லாம் ஒப்படைத்துவிட்டு ரசூல்கான் வெளியேறி பீஜாபூர் நோக்கி போகையில் வழியே சுல்தான் அதில்ஷா அனுப்பிய மிகப்பெரும் படை வந்தது. ஆனால் இனி என்ன பலன்? சரணடைந்த செய்தியை அறிந்து கோபம் கொன்ட பீஜாபூர் படை ரசூல்கானை பிடித்து பிஜாபூருக்கு இழுத்து சென்றது
அதன்பின் கோட்டையில் துரோகம் செய்த பெர்னார்டோ லூபஸையும் பிற போர்ச்சுகிசியரையும் பிடித்து வந்து விசாரணை செய்தார்கள். கொல்லதானே மாட்டோம்?சித்தரவதை செய்யலாம் அல்லவா என சொல்லி மிக, மிக கடுமையான சித்ரவதைகள் அவர்களுக்கு நிகழ்த்தாப்ட்டது. பெர்னார்டோ லோபஸை கட்டி வைத்து மூக்கு, காது, ஒரு விரலை விட்டு இன்னொரு விரல் என வெட்டினார்கள். தலைமுடி மற்றும் தாடியை கடல் சிப்பிகளை வைத்து உரித்து எடுத்தார்கள். சித்ரவதை தாங்கமுடியாத போர்ச்சுகிசியர் பலரும் "எங்களை கொல்லுங்கள்" என கேட்டு உயிரை விட்டார்கள்.
ஆனால் பெர்னார்டோ லோபஸ் எப்படியோ சிதரவதைக்கு பின்னரும் உயிருடன் இருந்தார். வாக்குறுதிக்கு ஏற்ப அவர் கொல்லபடவில்லை. இதன்பின் போர்ச்சுகிசிய கப்பல் ஒன்றில் ஏறி போர்ச்சுக்கல் நோக்கி சென்றார் லோபஸ்.
நடுவே அட்லாண்டிக் கடலில் ஆப்பிரிக்காவுக்கு மேற்கே  உள்ள செயின்ட் ஹெலெனா (300 ஆண்டுகள் கழித்து நெப்போலியன் கைதியாக வைக்கபட்டு இருந்த இடம்) எனும் தீவில் கப்பல் நின்றது. அப்போது அந்த தீவில் யாருமே இருக்கவில்லை. 1502ம் ஆண்டுதான் அந்த தீவு கண்டுபிடிக்கபட்டு இருந்தது.
போர்ச்சுக்கல் போக விரும்பாத பெர்னார்டோ லோபஸ் செயின்ட் ஹெலெனா தீவில் இறங்கி வாழத் துவங்கினார். அத்தீவில் அவர் மட்டுமே 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராபின்சன் க்ருசோ போல வாழ்ந்தார். ஊனமுற்ற கைகளை வைத்து எப்படி வேட்டையாடினார், வீடு கட்டினார் என்பதே பெரும் வியப்புகுரிய விஷயம். அவருக்கு துணையாக அந்த 10 ஆண்டுகளும் கப்பலில் இருந்து அவருடன் வந்த ஒரு சேவல் மட்டுமே இருந்தது.


இதனிடையே தீவில் அடிக்கடி வந்து போன கப்பல்களில் இருந்தவர்கள் பெர்னார்டோ லோபஸை ஒரு சாமியார் எனக் கருதினார்கள். இத்தனை துன்பத்துக்கு ஆளாகியும் ஒரு மனிதன் போராடி வாழமுடியும் என்பதற்கு அவர் உதாரணமாக கருதபட்டார். வயது ஆக, ஆக பெர்னார்டோ லோபஸுக்கு இப்போது போப்பிடம் மதம் மாறியதற்கு பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கடைசி ஆசை மட்டுமே மீதமிருந்தது. அக்காலத்தில் மதம் மாறுவது பெரும்பாவமாக கருதபட்டு அதை மன்னிக்கும் அதிகாரம் போப்பிடம் மட்டுமே இருந்தது. போப்பும் அப்பாவத்தை ஈஸ்டர் திருநாள் அன்றுமட்டுமே மன்னிப்பார்.
அதனால் பயணிகள் சிலர் லோபஸை ரோமுக்கு அழைத்து சென்றார்கள். அவரது கதையை கேட்டு மனம் இறங்கிய போப் ஈஸ்டர் திருநாள் அன்று பொது இடத்தில் வைத்து பகிரங்கமாக அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என அறிவித்தார். அதன்பின் போர்ச்சுக்கல் மன்னருக்கு அத்தகவலை சொல்லி அனுப்பி அவரை தேசதுரோக குற்றத்துக்கு தண்டிக்கவேண்டாம் எனவும் லோபஸின் கடைசி ஆசைப்படி அவரை செயிண்ட் ஹெலெனா தீவில் வாழ அனுமதிக்கும்படியும் கடிதம் அனுப்பினார் போப்.
அதன்பின் செயிண்ட் ஹெலெனா சென்ற லோபஸ் அங்கே தனியாக 20 ஆண்டுகள் வசித்து உயிர்துறந்தார். அவர் இப்போது அத்தீவின் புனித துறவியாக கருதப்படுகிறார். அவர் நினைவிடம் சுற்றுலாதளமாகியுள்ளது.
படம்: சேவலுடன் செயின் ஹெலெனா தீவில் மூக்கு, கைவிரல்கள் இல்லாத
 பெர்னார்டோ லோபஸ்...... தபால் தலை



 

   
செல்வன்

 
holyape@gmail.com





 

 

No comments:

Post a Comment