Thursday, November 26, 2015

எல்லீஸ் சத்திரம் அணை

--கோ.செங்குட்டுவன். 

எல்லீஸ் சத்திரம்...

விழுப்புரத்தின் மேற்கே இருக்கக் கூடிய ஒரு பகுதியின் பெயர். விழுப்புரத்தில் இருந்து இந்தப் பகுதிக்குப் போகும் சாலைக்கும், எல்லீஸ் சத்திரம் சாலை என்றே பெயர். இதன் பெயருக்கும் புகழுக்கும் காரணமாக அமைந்திருப்பது இங்குள்ள அணைக்கட்டு.

தமிழ் நாட்டில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 6ஆவது அணைக் கட்டு, எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டாகும். முதல் 5 அனியாளம், கிருஷ்ணகிரி, நடுங்கல், சாத்தனூர், திருக்கோவலூர் ஆகியவை யாகும். 7ஆவதாக அமைந்துள்ளது, புதுவை மாநிலம் அருகே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு.



எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு 1949இல் தொடங்கப்பட்டு 1950இல் கட்டி முடிக்கப் பெற்றது. 1967இல் விரிவாக்கம் செய்யப்பட்டது. வினாடிக்கு 2இலட்சத்து 28ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றும் வகையில் இந்த அணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 12ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும். எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மேல் 22ஆவது கி.மீ.இல் திருக்கோவலூர் அணைக்கட்டும், கீழே 31ஆவது கி.மீ.இல் சொர்ணாவூர் அணைக்கட்டும் அமைந்துள் ளது குறிப்பிடத்தக்கது.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள எரளூர் வாய்க்கால் மூலம் பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம்தவிழ்ந்த புத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும்,

இடது புறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும், கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம் பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் சென்றடைகிறது.

எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகருக்குத் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.

1968இல் இதற்கு அடிகோலிட்டவர், அப்போதைய விழுப்புரம் நகரமன்றத் தலைவராக இருந்த டாக்டர் தியாகராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணையாற்றின் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள் என்று, இன்றும் எங்களால் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடிகிறது. எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு, விழுப்புரம் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களுக்கு, சின்னச் சுற்றலாத்தலமாக விளங்குகிறது. குறிப்பாக காதலர்க்கு!

கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த தொடர் மழை, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிகிறது எல்லீஸ் சத்திரம் அணை.

நீங்கள் அருகிலிருப்பவர் என்றால் ஒரு நடை போய்விட்டு வரலாம், குடும்பத்தோடு..!





 
 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com


No comments:

Post a Comment