Wednesday, November 4, 2015

பள்ளிக்கட்டிட நிதிக்காக நடைபெற்ற பரத நாட்டியம் (6.12.1953)

- கோ.செங்குட்டுவன்.

1953 நவம்பர் மாத கல்கி இதழில் “விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலை” எனும் தலைப்பில் கீழ்க்காணும் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது:

“அபூர்வமான அடக்கத்துடன் அற்புதமான கல்வித் தொண்டு நடத்திவரும் விழுப்புரம் ஸ்ரீலட்சுமண சாமியைப் பற்றியும், அவருடைய மகாத்மா காந்தி பாடசாலையைப் பற்றியும் கல்கியில் வெளியான விவரங்கள் நேயர்களுக்கு நினைவிருக்கும்.

சுமார் 750 சிறுவர் சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு அறை போதாது தானே? மேலும் தொடர்ந்து கட்டிடப் பணியைச் செய்யும் பொருட்டு, வரும் டிசம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை மாலை, வெள்ளித் திரையிலும் பரதநாட்டியத் துறையிலும் புகழ்பெற்ற குமாரி கமலாவின் உதவி நாட்டியக் கச்சேரி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அன்று பிற்பகல் விழுப்புரத்தில் நடக்க இருக்கும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் மாநாட்டுக்காக விஜயம் செய்யும் மந்திரிகள் ஸ்ரீசி.சுப்பிரமணியம் அவர்களும், ஸ்ரீமாணிக்கவேல் அவர்களும் இக்கச்சேரியிலும் பிரசந்நமாயிருக்க இசைந்திருக்கிறார்கள் என்று அறிகிறோம்.

உட்கார்ந்து நிம்மதியாகப் படிக்க இடமின்றித் திண்டாடிக் கொண்டிருக்கும் சுமார் 750 குழந்தைகளின் நிலையினை விழுப்புரத்திலும் சுற்றுப்புறங்களிலும் உள்ளவர்கள் மனதிற் கொண்டு மேற்படி உதவிக் கச்சேரிக்குப் பெருந்திரளாக விஜயம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.”

இதனைத் தொடர்ந்து “விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலை கட்டிட உதவிக்காக நாட்டிய கலாகேசரி வழுவூர் ஸ்ரீராமையாப் பிள்ளையின் சிஷ்யை குமாரி கமலாவின் பரதநாட்டியக் கச்சேரி 6-12-53 மாலை 6-30 மணிக்கு விழுப்புரம் ஜோதி தியேட்டரில் நடைபெறும். கட்டணம் ரூ.25, 10, 5, 2, 1”  என விளம்பரம் செய்யப்பட்டது.




இதன்படி குறிப்பிட்டத் தேதியில் குமாரி கமலாவின் பரதநாட்டியக் கச்சேரி சிறப்பாகவும் நடந்தேறியது.



தகவல்(ம)புகைப்பட உதவி: திரு.இல.இரவீந்திரன், நிர்வாகி, மகாத்மா காந்தி பாடசாலை, விழுப்புரம்.       





 
 
கோ.செங்குட்டுவன் 

ko.senguttuvan@gmail.com
 
 
 
 
 
 

No comments:

Post a Comment