Saturday, August 8, 2015

அன்பின் வெற்றி


--செல்வன்.

ரவாண்டா...மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி தேசம். ஜனதொகை 1 கோடி மட்டுமே

இந்த குட்டி நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இனப்படுகொலைகளால் இந்த நாட்டை இன்று இந்த இனப்படுகொலை மூலமாகவே உலக மக்கள் அறியும் நிலை உள்ளது. இதன் பின்புலம் என்னவென பார்த்தால் வரலாற்றில் இருந்து மக்கள் எதையும் கற்றுகொள்வதில்லை என்பதை நிருபிக்கும் வகையிலான வந்தேறி/மண்ணின் மைந்தன் அரசியலும், வெள்ளை இனவாதமும், காலனிய மேலாதிக்கமுமே காரணிகளாக உள்ளன

ரவாண்டாவில் ஹுட்டு, டுட்ஸி என இரு இனங்கள் உண்டு. ஹூட்டு ஜனதொகையில் 84%, டுட்ஸி 15%. ஹூட்டு விவசாயம் செய்யும் மக்கள். டுட்ஸி  மக்கள் மேட்டுகுடியினர். வரலாற்று காலம் முழுக்க்க ஜனதொகையில் குறைவாக இருப்பினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ரவாண்டாவை டுட்ஸி மன்னர்களே ஆண்டுவந்தார்கள். தளபதிகள், அமைச்சர்கள் எல்லாருமே டுட்ஸிகள்.

மற்றபடி ஹுட்டு, டுட்ஸி என்பது ரவான்டாவில் காலனி ஆதிக்கம் ஏற்படுமுன் நெகிழ்ச்சிதன்மை கொண்ட பிரிவுகளாகவே இருந்து வந்தன. இனக்கலப்பும், திருமணங்களும் நடந்தன. டுட்ஸி என்பது இனமல்ல, ஒரு பட்டம், பசுக்களை அதிகமாக வைத்திருப்பவரை டுட்ஸி என கவுரவமாக அழைத்து வந்தார்களே ஒழிய டுட்ஸி என்பது இனமல்ல என்ற கருத்தும் உண்டு

ஆனால் ரவாண்டாவில் பெல்ஜியத்தின் காலனி ஆட்சி ஏற்பட்டவுடன் டுட்ஸிகள், ஹூட்டு என்ற இனபாகுபாட்டை பிரித்தாளும் கொள்கைக்கைப்படி வலுப்படுத்தினார்கள். ஆப்பிரிக்கர்கள் படிப்பறிவற்றவர்கள், முட்டாள்கள் என்ற மேற்கத்திய கண்ணோட்டத்தை பொய்ப்பிக்கும் விதமாக டுட்ஸிக்கள் நல்ல படிப்பறிவுடனும், வெள்ளையர்களுக்கு சளைக்காத அறிவுடனும் இருந்தார்கள். அதனால் அதிர்ச்சியடைந்த பெல்ஜியம் அவர்களை கட்டுக்குள் வைக்க அவர்களுக்கு அரசு வேலைகள், உயர்பதவிகளை கொடுத்தது. ஹூட்டுக்களை கட்டுக்குள் வைக்க டுட்ஸிகளின் நிலமும் கையகபடுத்தபட்டு ஹூட்டுக்களுக்கு மறுவினியோகம் செய்யபட்டது.

இப்படி ஒரு இனத்தை காட்டி இன்னொரு இனத்தை அடக்கி வைத்த காலனி ஆட்சி முடிவுக்கு வந்தது 1959ல். அதன்பின் ஆட்சியை மீண்டும் பிடித்த டுட்ஸிகள் தேர்தலை நடத்தாமல் காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய பாணியில் ஆட்சியை நடத்த முயன்றார்கள். ஆனால் ஹூட்டுக்கள் விழித்தெழுந்து போராட ஆரம்பிக்க முதல் முறையாக ஜனநாயக தேர்தல் நடந்து முதல் முதலாக ஹபைரிய்மானா எனும் ஹூட்டு அதிபராக தேர்ந்தெடுக்கபட்டார்.

ஆனால் அதிபர் 1994ல் விமானத்தில் பறக்கையில் சுட்டு வீழ்த்தபட்டு கொல்லபட்டார். அதன்பின் டூட்ஸிகளுக்கு எதிரான அந்த மிகப்பெரும் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடபட்டது.

இனப்படுகொலை நடந்தது தற்செயல் அல்ல. அதிபர் இறந்ததற்கு எதிர்வினையும் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி வைத்திருந்த டுட்ஸிகளை நிரந்தரமாக ஒருவர் விடாமல் அழிப்பதே ஹூட்டுக்களின் பிரச்சனைக்கு தீர்வு என்ற வாதத்தை ஹூட்டுக்களின் கட்சிகள் பல முன்வைத்து வந்தன "ஹூட்டு பவர்" எனும் சித்தாந்தம் முன்னெடுக்கபட்டு கட்சியாக மாறியது. 1990களில் இருந்தே ஹூட்டு மக்களுக்கு ராணுவம் கத்திகளை வழங்க துவங்கியது. ரவாண்டா ராணுவம் மிகப்பெரும் அளவில் கையெறி குன்டுகள், துப்பாக்கிகளை வாங்கியது. டுட்ஸிகள் மற்றும் டுட்ஸிகள் மேல் அனுதாபத்துடன் இருந்த ஹூட்டு மிதவாதிகள் பலரது பெயர் ஹூட்டு பவர் இயக்கத்தின் கொலைப்பட்டியலில் இருந்தது

வேடிக்கையிலும் வேடிக்கையாக விமான விபத்தில் இறந்த ஹூட்டு ஜனாதிபதியின் பெயரும் ஹூட்டு பவர் இயக்கத்தின் கொலைபட்டியலில் இருந்தது. அவர் மிதவாதி. ஆனால் அவர் பறக்கும் விமானத்தை யாரோ சுட்டு வீழ்த்தியதும் (சுட்டது யாரென்று இதுவரை தெரியாது) அப்பழியை டுட்ஸிக்கள் மேல் திருப்பிவிட்டு மிகப்பெரும் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடபட்டது

ஹூட்டு ராணுவம், போலிஸ், அரசியல் தலைவர்கள் எல்லாரும் களத்தில் இறங்கி "டூட்ஸி இனத்தில் சின்ன குழந்தைகளை கூட விடாமல்  கொல்லுங்கள்" என உத்தரவு பிறப்பித்தார்கள். தலைவர்கள் உத்தரவுக்கு கட்டுபட்டே பழகிய ஹூட்டுக்கள் கொலைகளில் இறங்கினார்கள். இரண்டு மாதங்களில் சுமார் எட்டு லட்சம்  டூட்ஸிகள் கொல்லபட்டார்கள். தெருக்களில் சோதனை சாவடிகளை நிறுவி அடையாள அட்டைகளில் உள்ல ஜாதியை பார்த்து டுட்ஸிக்களை கொன்றார்கள்.

டுட்ஸி பெண்கள் மேல் பலாத்காரம் கட்டவிழ்த்து விடபட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் அதிகம். மருத்துவமனைகளில் எய்ட்ஸ் வார்டுகளில் இருந்த நோயாளிகளை பிடித்து வந்து டுட்ஸி பெண்களை பலாத்காரம் செய்ய வைத்து அவர்களுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பினார்கள்.

இத்தனை கொலைகள் நடக்கையில் சர்வதேச சமூகம் அறிக்கைகள் விட்டுவிட்டு அமைதியாக இருந்ததே ஒழிய ஒருவரும் சுட்டுவிரலையும் அசைக்கவில்லை. மொத்தம் 15 லட்சம் டுட்ஸிகள் ரவாண்டாவில் இருந்தார்கள். அவர்களில் 12 லட்சம் பேர் கொல்லபட்டார்கள். 3 லட்சம் பேர் தப்பிபிழைத்து அண்டைநாடுகளுக்கு ஓடினார்கள். லட்சகணக்கில் டுட்ஸி பெண்கள் எய்ட்ஸ் நோயாளிகளாக இன்னமும் வாழ்கிறார்கள்.

அண்டைநாடுகளில் இருந்த டுட்ஸிக்கள் படை ஒன்றை திரட்டி வந்து ஹூட்டுக்களை தோற்கடித்து ஆட்சியை பிடிக்கும்வரை படுகொலைகள் தொடர்ந்தன. டுட்ஸிகளின் புரட்சிப்படையான ரவாண்டா தேசபக்தி படை படுகொலைகளை நிறுத்தி ஆட்சியை பிடித்தது. அதன் தலைவர் பால் ககாமே இந்த இனபடுகொலையை நிறுத்தியவராக டுட்ஸிக்களால் போற்ரபடுகிறார். அதன்பின் ரவாண்டாவின் ஒரு இஞ்சு நிலம் விடாமல் அனைத்தையும் புரட்சிப்படை பிடித்தது. பால் ககாமே அதிபராக பதவி ஏற்றார். இன்றும் ரவாண்டாவில் அவரது ஆட்சிதான்.



ஆனால் பழியுணர்வுடன் செயல்படாமல் நாட்டுக்கு புதிய அரசியல் சட்டத்தை ஏற்படுத்தி, ரவாண்டாவை அமைதிபாதைக்கு திருப்பினார். 1994 முதல் 2000 வரை ரவாண்டாவில் ராணுவ ஆட்சியே இருந்தது. இந்த காலகட்டத்தில் பழிக்கு பழி என நினைக்காது ஹூட்டுக்களுடன் சமாதானம் செய்துகொள்ள பால் ககாமே முன்வந்தார். நாட்டில் அமைதி திரும்பியது. அதன்பின் நடந்த தேர்தல்களில் ஹூட்டு, டுட்ஸி இரு தரப்பின் ஆதரவையும் பெற்று பெருவாரியாக வென்றார் ககாமே

அவ்விதத்தில் பால் ககாமே நெல்சன் மண்டேலாவுக்கு ஒப்பானவராக கருதபடுகிறார். மிகபெரும் இன ஒதுக்கல், சிறைதண்டனைக்கு பின்னர் ஆட்சியை பிடித்த மண்டேலா வெள்ளையரை பழிவாங்க முனையவில்லை. அரவணைத்தே ஆட்சியை நடத்தினார். பால் ககாமேயும் அதுபோலவே ஹூட்டுக்களை பழிவாங்காது அரவணைத்து சமாதானத்தை ஏற்படுத்தியதால் ரவாண்டாவில் ஓடிய ரத்த ஆறு ஓய்ந்து அமைதி திரும்பியுள்ளது




________________________________________________________

செல்வன் - holyape@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment