Monday, August 17, 2015

கபிலர் குன்று

--கோ.செங்குட்டுவன்.
2013ஆம் ஆண்டின் இறுதியில் ஓருநாள், சுட்டெரிக்கும் மத்தியான வெய்யில் நேரம். அரகண்டநல்லூர் அதுல்ய நாதேசுவரர்க் கோயிலுக்குச் சென்ற நான், அந்தக் குன்றில் இருந்துப் பார்த்தேன்.

அதோ மேற்கே, தென்பெண்ணையாற்றில் அழகுறக் காட்சியளிக்கிறது கபிலர் குன்று.


அதுல்ய நாதேசுவரர்க் கோயிலின் பின்பக்கமாக ஆற்றில் இறங்கிவிட்டேன். இந்த ஆற்றில் புனல் எல்லாம் ஓடி, ஆண்டுக் கணக்கில் ஆகிறது. மணல்தான். அதுவும் சுரண்டப்பட்டு வருவதைத்தான் அண்மையில் பார்த்தோமே!

அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். அப்போதுதான் தெரிந்தது நான் எடுத்த முடிவு மிகவும் தவறானது என்று. ஏனெனில் அங்கிருந்து கபிலர் குன்று தொலைவுதான்.

ஆற்று மணலில் நடப்பது... கால்கள் பின்னியது. ஆனாலும் முன் வைத்தக் காலை பின்வாங்க மனம் ஒப்பவில்லை. நடக்கத் தொடங்கினேன் புதையலைத் தேடுபவன் போல. ஆம், வரலாற்றுப் புதையலைத் தேடி.

சங்கப் புலவரான கபிலருக்கும் மலையமானாட்டின் தலைநகராக விளங்கிய திருக்கோவலூருக்கும் நெருங்கியத் தொடர்பு இருக்கிறது.

பாரியின் நெருங்கிய நண்பராக விளங்கிய கபிலர், திருக்கோவலூர் மன்னன் மலையமானையும் புகழ்ந்திருக்கிறார். பாரியின் மறைவுக்குப் பின் அவரது இருமகள்களை அழைத்துக் கொண்டு திருக்கோவலூர் வந்த கபிலர், அப்பெண்களை மலையமானிடம் அடைக்கலப்படுத்திவிட்டுப் பெண்ணையாற்றங் கரையில் நோன்பிருந்து (வடக்கிருந்து) உயிர்நீத்தார்.

திருக்கோவலூர் வீரட்டநாதர் கோயில் கருவறைச் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராஜராஜனின் அவையில் அறங்களை எடுத்துக்கூறும் உயர்நிலை அலுவலனாக இருந்த கம்பன் வீதிவிடங்கன் (கி.பி.985)  என்பவனால் பொறிக்கப்பட்டக் கல்வெட்டுச் சாசனம் கீழ்க்காணும் தகவலைத் தெரிவிக்கிறது:

வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய் வைத்தியலு முத்தமிழ் நான்மைத்
தெய்வக் கவிதை செஞ்சொற் கபிலன்
மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்
பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை
அலைபுன லழுவத் தந்தரி ஷஞ்செல
மினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணிக்
கனல்புகுங் கபிலக் கல்லது.


கபிலர் புராணத்தை விளக்கும் வகையிலான 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் திருக்கோவலூர் வீரட்டநாதர் கோயிலில் தீட்டப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றிருந்தது. இப்போது இல்லை. அதன்மீது வெள்ளையடிக்கப்பட்டுவிட்டது.

வீரட்டநாதர்க் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்படும் கபிலக் கல் – கபிலர் குன்று – திருக்கோவலூர் நகரத்திற்கு முன்னதாகவே, தென்பெண்ணையாற்றின் தென்கரையில் (கீழையூர் தரைப் பாலத்தின் மேற்கில்) தனித்தப் பாறையாகக் காணப்படுகின்றது. இந்தப் பாறைமீது செங்கல்லால் கட்டப்பட்டக் கோயிலும், அதனுள் இலிங்கமும் இடம்பெற்றுள்ளது.

“இதில் உள்ள இலிங்கத் திருமேனியின் பெயர் கபிலேசுவரர் என்பதாகும். இது சோழர் காலத்தில் சங்கத் தமிழப் புலவன் கபிலனுக்காக எடுக்கப்பெற்ற பள்ளிப்படை  கோயிலாக இருந்திருக்க வேண்டும்” என்பார் குடவாயில் பாலசுப்பிரமணியன் (நூல்: கபிலக் கல்)

ஆனாலும், இது கி.பி.14ஆம் நூற்றாண்டு கட்டடப் பாணி என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள்.

எப்படியோ, தட்டுத் தடுமாறி கபிலர் குன்றினை அடைந்துவிட்டேன். பாறைக்கு மேலே செல்ல நல்ல முறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறிய ‘கேட்’ திறந்திருந்ததால் சுலபமாகச் செல்ல முடிந்தது. இந்த இடம் தமிழகஅரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகிழ்ச்சிதான்.

ஆற்றங்கரை என்பதால், திறந்த வெளியில் நடக்கும் சகலவிதமானக் காரியங்களும், கபிலர் குன்றைச் சுற்றிலும் நடந்து வருகின்றன.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தக் கபிலர் குன்றினைக் காண விரும்புவோர் இந்த அவலங்களையும் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது...!   

Coordinates:
Kabilar Kundru, State Highway 7, Tamil Nadu 605753, India
Then Pennai River
11.972793, 79.211080
Google Map: https://goo.gl/maps/gBeos

________________________________________________________
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________No comments:

Post a Comment