Sunday, August 16, 2015

இஞ்சி செடி நட்டு வளர்ப்பது எப்படி?
முன்னர் உங்களிடம் மஞ்சள் பற்றி கேட்டிருந்தேன். இஞ்சியை எப்படி நட்டீர்கள். செடி பிரத்தியேகமாக வாங்க வேண்டுமா அல்லது கடையில் நாம் வாங்கும் இஞ்சியை அப்படியே மண்ணுக்குள் வைத்து நீரூற்றினால் செடி வளருமா? சொன்னால் அடுத்தகோடை விவசாயத்திற்கு இப்போதே யோசிக்கத் தொடங்கி விடுவேன். ​
 
​:-)​

​சுபா​

அப்ப்ப்பா! சுபாவாவது என் தொட்டித்தோட்டத்து விவசாயத்தில் அக்கறை காட்டுகிறார்களே! மகிழ்ச்சி!

///செடி பிரத்தியேகமாக வாங்க வேண்டுமா அல்லது கடையில் நாம் வாங்கும் இஞ்சியை அப்படியே மண்ணுக்குள் வைத்து நீரூற்றினால் செடி வளருமா? ///

செடி பிரத்தியேகமாகக் கிடைக்காது, சுபா. நாம்தான் இஞ்சியை மண்ணுக்குள் வைத்து வளர்க்கணும்.


///சொன்னால் அடுத்தகோடை விவசாயத்திற்கு இப்போதே யோசிக்கத் தொடங்கி விடுவேன். ​///

காத்திருக்கவேண்டாம்! இப்போதே தொடங்கிவிடவும்.


++++++++++

இங்கே மண்ணுக்குக் கீழே விளையும் எதையும் செடிகளாக விற்பதில்லை, சுபா. முளைவிட்ட கிழங்குகளாகச் சில இடங்களில் விற்கிறார்கள். வசந்த வெங்காயம் (spring onion) என்ற பெயரில் வெங்காயம் இளந்தண்டோடு கிடைக்கும். அவ்வளவே.

வெங்காயம், இஞ்சி, மஞ்சள், பூண்டு ... இதெல்லாவற்றையும் வளர்க்க எனக்குக் கைகொடுத்த முறை இங்கே:

1. தொடக்கத்தில் நிறைய சோம்பேறித்தனம் வேண்டும்!! கொஞ்சம் முண்டும் முடிச்சுமாக (with bumps/sprouts) உள்ள கிழங்குகளை எடுத்துக்கொள்ளவும். அந்தக் கிழங்குகளை ரொம்பக் கொஞ்சமாக நீர்ப்பசையுள்ள (moisture) ஒரு சின்னப் பையில் (paper/plastic) போட்டு, வண்டி நிறுத்தும் இடத்தில் (garage) அல்லது குளிர்பதனப்பெட்டியில் ஒரு மூலையில் போட்டுவிட்டு மறந்துவிடவும். வாரத்துக்கு ஒருமுறை அது என்ன ஆச்சு என்று பார்த்தால் போதும். நீர்ப்பசை தேவை.

2. கிழங்கு கொஞ்சம் கொஞ்சமாக முளைத்து வரும்.

3. இதற்கு இடையில், ஒரு நல்ல பயிரிடத்தைத் தேர்ந்தெடுக்கொள்ளவும். எங்கள் வளாகத்தில் நிலமகள் களிமண் + பாறை. ஆகவே, எனக்குத் தொட்டிகள். பொல பொல என்ற நல்ல மண் தேவை. அதாவது மண்ணில் நீர்ப்பசை தேங்கக்கூடாது.

4. முளைகட்டிவந்த கிழங்கை (இஞ்சி, மஞ்சள்) அந்தத்தொட்டிகளில் நட்டுவைக்கவும்.

5. வெயிலின் போக்குக்கேற்பத் தொட்டிகளை இடம் மாற்றி ... ஒருநாளில் கொஞ்சமாவது நேரடியாகக் கதிரவனின் பார்வை கிடைக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும்.

6. மிக மிக முக்கியமானது: முளைத்துவரும் இளந்தளிர்களைக் கொறிக்கும் பிறவிகளிடமிருந்து காக்கும் முறைகளை மேற்கொள்ளவும். தொட்டிகளைச் சுற்றி வலை போடலாம்.

++++++++++

போன ஆண்டில் ... இஞ்சி, மஞ்சள், பசலைக்கீரை ... ஆகியவற்றைச் செவ்வனே தழைபருவத்துக்குக் கொண்டுவந்தேன். வீட்டுக்குள்ளேயே தழைத்த பசலைக்கீரையை மிகவும் பெருமிதத்தோடு வெளியே கொண்டாந்து வச்சேன். மறுநாள் காலையில் அந்தத் தளிர்களைக் காணோம் காணோம். ரொம்ப நொந்துபோய் ஓராண்டு எதையும் பயிரிட விருப்பமில்லாமல் தொய்ந்துபோனேன். என்ன வியப்பு -- இந்த வசந்தத்தில் அதே செடி தளிர்த்திருக்கிறது!!! சிறு தொட்டி. பெயர்த்து எடுத்து வேறு நல்லிடம் கொடுக்கவேண்டும். இப்போதைக்குப் பாதுகாப்புக்காக ... கோழிவலைத் துண்டுகளைப் (chicken wire) போட்டுவைத்திருக்கிறேன். மஞ்சள் செடியின் கதையும் இதுவே.

இன்னும் சில நாட்களில் ஒரு மஞ்சள் செடியையும் ஒரு வெங்காயச் செடியையும் அறுவடை செய்ய நினைக்கிறேன்.

என் வீட்டுக் கறிவேப்பிலைச் செடிகளும் பாவம். தொட்டியில்தான் அவுங்களுக்கு வாழ்வு. இன்றைக்குத் திருக்குறள் 550 பார்முலா கடைப்பிடித்து ... தொட்டி முழுக்கக் கிளைத்திருந்த களைகளைக் "கட்டேன்." வள்ளுவர் என்னை மன்னிப்பாராக!

ஒவ்வொரு வீட்டிலும் பயிரிடுங்கள். அழகுக்காகப் பயிரிடப்படும் பயிர்களிலும் சத்து உண்டு, அதைத் தெரிந்துகொள்ளவும்.

டாக்டர்.ராஜம்

1 comment:

  1. என்ன இது கிழங்கை ந்டு என்றால் போதுமா இடைவெளி பயிரின் காலம் உரமேதும் தேவையா இதெல்லாம் சொல்லவேண்டாமா?

    ReplyDelete