Friday, August 7, 2015

திருநாதர் குன்று - நிசீதிகைக் கல்வெட்டும், சிற்பத் தொகுதியும்

--கோ.செங்குட்டுவன்,  து.சுந்தரம்

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக, செஞ்சிப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத் தடயங்கள் ஏராளமாக உள்ளன.

இன்று (06.08.15)கூட, அப்பம்பட்டுப் பகுதியில் சமணத் தடயமொன்று கண்டறியப் பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மகிழ்ச்சி. இந்த நேரத்தில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த திருநாதர்குன்று பற்றிய குறிப்பினை  நண்பர்களின் பார்வைக்குப் பதிவு செய்யலாம் எனக் கருதுகிறேன்.



இக்குன்று அமைந்துள்ளப் பகுதி சிறுகடம்பூர் என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும் செஞ்சி நகரின் ஒரு பகுதியாகும். இந்தக் குன்றின் மீதுள்ள பிரம்மாண்டப் பாறையில் சமண முனிவர்களான 24 தீர்த்தங்கரர்களும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இச்சிற்பத் தொகுதியின் காலம் கி.பி.9ஆம் நூற்றாண்டு. தமிழகத்தில் கழுகுமலைக்கு அடுத்து இங்குதான் 24 தீர்த்தங்கரர்களும் ஒரே சிற்பத் தொகுதியில் காணப்படுகின்றனர்.





இக்குன்றின் மேற்குப் பகுதியில் காணப்படும் நிசீதிகைக் (உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர்களின்) கல்வெட்டு ஒன்றில், “ஐம்பத் தேழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆ சிரிகரு நிசீதிகை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சந்திரநந்தி எனும் சமண ஆசிரியர் ஐம்பத்தேழு நாள் உண்ணா நோன்பிருந்து இங்கு உயிர்நீத்துள்ளார். இக்கல்வெட்டில்தான் முதன் முதலாக உயிர் எழுத்தில் ஒன்றான “ஐ“ இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.   மற்றொரு கல்வெட்டு இளையபத்ரர் என்பவர் 30நாள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்ததைத் தெரிவிக்கிறது.



இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-6ஆம் நூற்றாண்டுகளாகும். இந்த இடம் தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறது. வரலாற்றுக் குறிப்புகளைச் சொல்லும் தகவல் பலகைகள், வரலாற்றை நன்கு அறிந்தவர்களால் இதற்குமேல் யாருக்கும் வேண்டாம் என்று அகற்றப்பட்டுவிட்டன!

***** 


கல்வெட்டுப்படத்தின் பாடம் - செங்குட்டுவன் சாக்கட்டியால்
மூல எழுத்தின் மேல் விளம்பியபடி:

ஐம்பத்தேழன
சனந்நா
ரந்திரநந்திஆ
சிரிரரநிசீதிரை

இதில் பிழைபட விளம்பியுள்ளார். முதல் வரி சரியாக உள்ளது.
இரண்டாம் வரியில் ”சனந்’ என்பதுவரை சரி. அடுத்த எழுத்து
“நா” என எழுதியுள்ளார். சரியான எழுத்து “நோ” ஆகும். அதற்கு
அடுத்து இரு எழுத்துகளை செங்குட்டுவன் எழுதவில்லை.
அவை “ற்ற”  ஆகும். மூன்றாம் வரியில் முதல் எழுத்தைத் தவிர்த்து
மற்றவை சரி. முதல் எழுத்து “ச” ஆகும். நான்காம் வரியில்
”சிரி”, என்பதும் “நிசீதி” என்பவை சரி. “ரர” என்பது “கரு” எனவும்
“ரை” என்பது “கை” எனவும் இருக்கவேண்டும்.

சரியான பாடம் வருமாறு:
ஐம்பத்தேழன
சனந்நோற்ற
சந்திரநந்தி ஆ
சிரிகரு நிசீதிகை

சில விளக்கங்கள்:
1. ஐம்பத்தேழனசனந் என்பதை ஐம்பத்தேழு+ அனசநம் என்று பிரிக்க.
ஐம்பத்தேழு-ஐம்பத்தேழு நாள்கள்.
2. அனசநம் என்பதை அன்+அசனம்
எனப்பிரிக்க. அசனம்=உண்ணுதல்; அனசனம் = உண்ணாமை.
3. 57 நாள்கள் உண்ணாமல் நோன்பிருந்து இறந்தார். (நோற்ற என்னும் சொல்லை நோக்குக.)
4. சந்திரநந்தி என்னும் பெயருடைய ஆசிரியர் (ஆசிரிகரு=ஆசிரியர்;
ஆச்சாரியர்)
5. நிசீதிகை - இறந்த இடத்தில் எழுப்பிய நினைவுக்கல்.
கல்வெட்டின் பார்வைப்படியின் ஒளிப்படத்தைப்பார்க்க.






 ________________________________________________________ 

கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com


 
து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment