--கோ.செங்குட்டுவன்.
‘Prince of wales’ என்று அழைக்கப்படுபவர் இங்கிலாந்தின் இளவரசர் (ஏழாவது) எட்வர்டு ஆவார். 1906இல் இந்தியா வந்த இவரை ‘வருக செல்வ! வாழ்க மன்னீயே’ என சுதேசமித்திரனில் வரவேற்றார் மகாகவி பாரதி.
இங்கிலாந்து இளவரசரின் நினைவாக மெல்போர்ன் நகரில் ‘குயின் விக்டோரியா கார்டன்’ எனும் இடத்தில் சிலையும், லிஸ்பனில் ‘ப்ப்ளிக் பார்க்’கும் அமைக்கப் பட்டுள்ளன.
ஏழாவது எட்வர்டுக்கு விழுப்புரத்திலும் ஓர் நினைவுச் சின்னம் இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான்.
விழுப்புரம் ஜனசகாய பண்டில் (நிதி நிறுவனத்தில்) 1930களில், ‘ஏழாவது எட்வர்டு மெமோரியல் நிதி’ எனும் கணக்கு, விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்டிருந்தது. இதன் மூலம் சேர்க்கப்பட்ட ரூ.4ஆயிரத்து 145இல் இலவச ஆஸ்பத்திரி கட்டுவது பற்றி நகரமன்ற உறுப்பினர்கள் அபிப்ராயம் தெரிவிக்க வேண்டும் என்று மெமோரியல் கமிட்டி சார்பில் 14.02.1932இல் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இலவசஆஸ்பத்திரி எதுவும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் நகராட்சிப் பூங்காவுக்கு ‘ஏழாவது எட்வர்டு மெமோரியல் பார்க்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
17.05.1947 அன்று நடந்த விழாவில் அப்போதைய சென்னை மாகாண வேளாண்துறை அமைச்சர் மாதவமேனன், புதிய பூங்காவுக்கு மேற்கண்ட பெயர் சூட்டி அடிக்கல் நாட்டினார்.
11.03.1951இல் உள்ளுர் நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் சந்திர மௌலி பூங்காவை திறந்து வைத்தார்.
அப்போது இதன் பெயர் ‘முனிசிபல் பார்க்’ என்பதாக மாற்றப்பட்டிருந்தது.
________________________________________________________
கோ.செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
________________________________________________________