Saturday, December 22, 2018

தோல்பாவை கூத்து

 —  முனைவர் க.சுபாஷிணி




தோல்பாவை கூத்து தமிழகத்தின் பாரம்பரியக் கூத்துக் கலைகளில் ஒன்று. இந்தியாவின் பல இடங்களில் இக்கலை வழக்கில் இருக்கின்றது. இந்தியா தவிர்த்து கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் கூத்துக் கலை இன்றும் மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் கலந்து போன முக்கிய கலையாகவும் பெரும்பாலான பண்பாட்டு விழாக்களில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளையும் காண்கின்றோம். இப்படி ஆசிய நாடுகளில் பல இடங்களில் வழக்கில் இருக்கும் தோல்பாவை கூத்து எனும் இக்கலை எவ்வாறு தமிழகக் கலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதை ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.  இக்கலையைப் பற்றிய நீண்ட கால ஆய்வுகளைச் செய்தவரும், தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வாளரும், அறிஞர் அண்ணா கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான முனைவர்.அ.கா.பெருமாள் அவர்களோடு உரையாடி தோல்பாவை தொடர்பான செய்திகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை பதிவிற்காக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் சென்றிருந்தேன். அச்சந்திப்பில் செய்யப்பட்ட பதிவுகள் விழியப் பதிவுகளாக டிசம்பர் மாத மண்ணின் குரல் வெளியீடுகளாக இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன.

பகுதி 1-  https://youtu.be/7RWy9M70B2g
முனைவர்.அ.கா.பெருமாள் அவர்களுடனான பேட்டி

பகுதி 2 - https://youtu.be/XmqcsZ9BiNo
ஒரு தோற்பாவைக்கூத்துக் கலைஞரின் வாழ்க்கை

தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வுகளில் தவிர்க்க முடியாத பெயர் முனைவர் அ.க.பெருமாள்.  75 நூல்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், விரிவான நீண்ட கால கள ஆய்வுப் பணி அனுபவங்கள் எனத் தொடர்ச்சியாக நாட்டார் வழக்காற்றியல் துறையில் இவரது பங்களிப்பு அமைந்திருக்கின்றது. இவரது களப்பணிகளின் பயனாக இவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்களும் கலைக்களஞ்சியங்களும் இத்துறையில் ஆய்வு செய்ய விரும்பும் ஒவ்வொரு ஆய்வு மாணவருக்கும் மிகப் பயனுள்ள  ஆவணமாக அமைகின்றன. அத்தகை நூல்களில் தோல்பாவை கூத்து தொடர்பான ஆய்வுகளை முன்னிறுத்தி தனது களப்பணி அனுபவங்களின் வழி திரட்டிய செய்திகளைத் தொகுத்து  தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து எனும் நூலினை இவர் எழுதியுள்ளார். காவ்யா பதிப்பகத்தின் வெளியீடாக இந்த நூல் வெளிவந்துள்ளது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இக்கலை இருந்துள்ளது என்பதை அறிகின்றோம். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தோல்பாவை கூத்து தஞ்சாவூர், நாகர் கோயில் ஆகிய பகுதிகளில் பெருவாரியாக மக்கள் கலையாக இருந்தது என்பதை அறிய முடிகின்றது. ஆனால்  இன்றோ தமிழகத்தில் மிக அருகிப்போய்க்கொண்டிருக்கும் கலைகளில் ஒன்றாக இக்கலை மாறி வருகின்றது.

தோல்பாவை கூத்தில் இடம்பெறும் உருவ பொம்மைகள் ஆட்டுத் தோலினால் உருவாக்கப்படுகின்றன. மாட்டுத்தோல் விளக்கின் ஒளி ஊடுருவிச் செல்ல உதவாது என்பதால் ஆட்டுத்தோல் பயன்பாடுதான் இவ்வுருவ பொம்மைகளைச் செய்ய ஏதுவானதாக அமைகின்றன. ஆரம்பக்காலத்தில் மான்தோலையும் இவ்வுருவ பொம்மைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இன்று   பதப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் கடைகளில் எளிதாகக் கிடைப்பதால் புதிய தோல்பாவை பொம்மைகளை உருவாக்குவது என்பது சற்று எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தோல்பாவைக்கூத்தில் முக்கிய கதைக்களமாக எடுத்தாளப்படும் கதைகள் இந்திய நாட்டில் பெருவாரியாக அறியப்பட்ட ராமாயண, மகாபாரதக் கதைகளே. இவற்றோடு இன்று சமூக சூழலை மையப்படுத்தி மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எடுத்துச் செல்லும் சாதனமாகவும் தோல்பாவைக் கூத்துக் கலையைக் காண்கின்றோம். இத்தகைய புதிய  கருத்தாக்கங்களை வழங்கி நாகர்கோயில் பகுதியில் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களை ஊக்குவித்து வரும் முனைவர் அ.க. பெருமாள் அவர்களின் பங்கு தமிழர் பண்பாட்டு ஆய்வுப் பாதையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தோல்பாவைக் கூத்துக் கலையைத் தமிழகத்தின் நாகர் கோயில் பகுதியில் தொழிலாகச் செய்து வரும் கலைஞர் ஒருவரையும் எனது அப்பயணத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

பரம்பரை பரம்பரையாக ஏழாவது தலைமுறையாக இந்தக் கலையைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றார் இக்கலைஞர். மராட்டிய பின்புலத்தைக் கொண்ட இவர்களது குடும்பத்தார், சரபோஜி மன்னர் காலத்தில் தமிழக நிலப்பகுதிக்கு வந்து வாழ்ந்து வரும் கணிகர் சமூகத்தில் உள்ள 12 பிரிவுகளில் ஒரு பிரிவினைச் சார்ந்தவர்கள்.

இவரது தோல்பாவை கூத்து பாணியில் ராமாயண கதைகளே முக்கியக் கதைக்களமாக அமைகின்றன. ராமாயணத்தில் உள்ள நகைச்சுவை கதைகளை எளியச் சொற்களில் பாடல்களாக்கி தங்கள் கூத்து நிகழ்ச்சிகளில் பாடுகின்றனர். இன்றைய காலச் சூழலில் மக்களின் இரசனைப்போக்கிற்கு ஏற்றவகையில்  திரைப்படத் துறைகளில் பிரபலமான சில பாடல்களையும் தமது பாடல்களில் இணைத்துக் கொள்கின்றனர்.

சமகால சமூக நலன் தொடர்பான கருத்தாக்கங்களை உட்புகுத்தி புதிய வடிவங்களில் தோல்பாவை கூத்து நடத்துவதும் இன்று வழக்கில் வந்துள்ளது.
“பா கூத்து” என்று அடிப்படையில் வழக்கில் இருந்து பின்னர் தோல் பொம்மைகள் உட்புகுத்தப்பட்ட பின்னர் “தோல்பாவை கூத்து” எனப் பரிமாணம் பெறுகின்றது இக்கலை.

ஆய்வாளர் முனைவர்.அ.க.பெருமாள் அவர்களின் வழிகாட்டுதலில் புதுமையான முயற்சிகளையும் உட்புகுத்தி புதிய கதை வடிவங்களை தமது தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகளில் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இன்று தோல்பாவை கூத்துக் கலை தொடர்கின்றது.

இக்கலைஞர்களில் பெரும்பாலோர் பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்திற்குள் வாழும் நிலையே தொடர்கின்றது. கால ஓட்டத்தில் தோல்பாவை கூத்துக் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.  எட்டாவது தலைமுறையான இக்கலைஞரின் மகனது காலத்திலேயே இக்கலையைத் தொழிலாக ஏற்கும் வழக்கம் இல்லாது போய்விட்ட நிலை தான் கண்கூடு.

குடும்பக் கலையாக இத்தகைய கலைகள் தொடர்வது என்பது இக்காலச் சூழலில் பொருந்தாது. குலக்கல்வி என்பது ஒரு சாரரை தனித்து ஒதுக்கி சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மக்களைப் பின்தங்கச்செய்யும் அபாயம் இருக்கின்றது என்பதை உணரவேண்டியதும் அவசியமாகின்றது.  தோல்பாவை கூத்து போன்ற மக்கள் கலைகள் மீட்கப்பட வேண்டுமென்றால் அவற்றிற்குத் தகுந்த சமூக அங்கீகாரம் என்பது கிடைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும், கலைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இக்கலை ஒரு பாடமாக அமைக்கப்பட வேண்டும். மக்கள் மனதிலிருந்து படிப்படியாக மறையும் இவ்வகைக் கலைகளை மீட்டெடுக்க இதுவே ஆக்கப்பூர்வமான ஒரு வழியாக அமையும்.





தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)  










Thursday, December 20, 2018

கோவிலிலே குதிர் — ஆதித்திருவரங்கம்



  —   திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்

தென்பெண்ணையாற்றின் தென் கரையில் போய்க் கொண்டிருந்தோம், ஆதித்திருவரங்கம் நோக்கி. சாலையில் வாகனங்கள் அதிகமில்லை என்றாலும், வளைவுகள் அதிகம். வண்டி மெதுவாகவே பயணித்தது.   பச்சைப் பட்டாடை  விரித்தது போல் பறந்து கிடந்த வயல் வெளியில் மாலை சூரியனின் மஞ்சள் கிரணங்கள் மாயாஜாலம் செய்து கொண்டிருந்தன. கஜாப் புயலின் கோரக் காட்சிகளால் புண்ணாகிப் போயிருந்த கண்கள் புத்துணர்வு பெற்றன.  ஊரைத் தாண்டி வலது பக்கம் திரும்ப, பிச்சைக்காரர்களின் பின்னணியில் கோவில். பார்த்தாலே தெரிந்தது, பழமையான கோவில் என்று. சனிக் கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் இருந்தது. விறகடுப்பில் குழிப் பணியாரம் செய்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கிராமத்துப் பெண்மணி.

மிகவும் பெரிய கோவில் என்று சொல்ல முடியாது, ஆனால் சிறிய கோவிலும் இல்லை. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. தூய்மையாகவே இருக்கிறது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும்,   ராஜகோபுரம் தெரிந்தது.  வலதுபுறம், வட்டவடிவமான உருளைகள்  இரண்டை ஒன்றின் மேல் ஒன்று நிற்க வைத்து அதன் மேலே ஒரு கூம்பினை வைத்தது போல் செங்கல்லால் ஆன  ஒரு வித்தியாசமான கட்டிடம்.  பராமரிப்பு இன்றி புதர்களும் செடிகளும் வளர்ந்திருந்தன. பக்கத்தில் பெயர்ப் பலகை ஒன்றுமில்லை. அங்கிருந்து வந்த இளைஞரிடம், “ இது என்ன” என்று கேட்டதற்கு, “ ஏதோ, தியானமண்டபம்ன்னு சொல்றாங்க, பாத்துப் போங்க, பாழடஞ்சி கெடக்கு” என்றார். பார்த்து பார்த்து மெதுவாக உள்ளே சென்றோம். புல்லும் பூண்டும் மண்டிக் கிடந்தன. கற்களும் கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. ம்ஹூம், இது தியான மண்டபமாக இருக்க வாய்ப்பே இல்லை என எண்ணிக் கொண்டேன்.



இல்லம் திரும்பி இணையத்தில் பார்த்தபோது அந்தக் கட்டிடம், தானியங்களைச் சேமித்துவைக்கும் குதிர் என்று தெரிந்தது. .மேலே நான்கு புறமும் தானியங்களைக் கொட்ட வாயில்கள், கீழே தானியங்களை அள்ள ஒரு வழி, ...இருக்கும்..... இருக்கும் இது குதிராகத்தான் இருக்கும்.

வளமான தென்பெண்ணைக் கரையில், இந்தத் திருக் கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் இருந்தது, இப்போது அது  100 ஏக்கராகக் குறைந்து விட்டது., அறுவடை செய்து வரும் நெல், கம்பு போன்ற தானியங்களில் ஆறில் ஒரு பங்கினை கோவிலுக்குக் கொடுத்துவிடுவார்கள். அவற்றைச் செமித்து வைக்கவே இந்தக் குதிர்கள் பயன்பட்டன, இந்தக் குதிரில் சுமார் 2,500 மூட்டை, அதாவது 5,000 கலம் நெல் சேமிக்க முடியும் என்றெல்லாம் பலப் பல செய்திகள்  இணையத்தில் கிடைத்தன. ஆனால், இன்று பாழ்பட்டுக் கிடக்கும் இதனைப் புனரமைக்கவோ, காப்பாற்றவோ நாதியில்லை என நினைக்கும் போது உள்ளம் கசிகிறது.


கோவில்களில் உள்ள குதிர்கள் பற்றி இணையத்தில் கிடைத்த பிற தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  ஆதித் திருவரங்கத்தில் உள்ளது போன்றே, திருவரங்கத்திலும் குதிர்கள் உள்ளன என்பதை அறிந்த போது வியப்பாக இருந்தது. இங்கேயும், பராமரிப்பின்றி, குதிர்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன என்பது. வேதனைத் தரும் செய்தி.

மாறாக, குடந்தைக்கும் தஞ்சைக்கும் இடையே பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைவனம் திருக்கோவிலில் உள்ள குதிர் முறையாகப்  பாதுகாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தக் குதிர் 17ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில், அச்சுத நாயக்கரின் அமைச்சர் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டதென்றும்,  சுமார் 35 அடி உயரமும்  80 அடி விட்டமும் கொண்ட இந்தக் குதிரில் 3,000 கலம் நெல் சேமிக்க முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

செஞ்சிக் கோட்டையில் குதிர் / நெற்களஞ்சியம் ஒன்று இருப்பதைக் கல்லூரிக் காலத்தில் பார்த்திருக்கிறேன். ஆதித்திருவரங்கம் ஆலயத்தில் உள்ள குதிர், செஞ்சி நாயக்கர்களால் கட்டப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு யூகம் தான். தொல்லியல் / இந்து அறநிலையத் துறைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு  மிக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க இந்த நிதி பயன்படுத்தப் படவேண்டும்.


தொடர்பு: திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)

கைப்பேசியும் களவுபோன நாட்களும்..



  —   வித்யாசாகர்



நாட்களைக் கைப்பேசிக்குள் தொலைக்குமொரு
ஆபத்தான கணப்பொழுது,
எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும்
இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும்
வலிநிறைந்த மனசெனக்கு,

மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர்
பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம்
மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும்
திரிந்து கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து
பின்னறையை நோக்கி நடக்கிறேன்,

இரத்த சகதியில்
கசங்கிய மலர்போன்றோரு மகனை
ஊர் பேர் தெரியாத சிலர் தூக்கிவந்து
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்,

ஒரு வரலாறு எழுதுமளவு கேள்விகள் பல
கேட்டுமுடிய
பெரிய மருத்துவர் ஒருவர் ஓடிவந்து
இன்சூரன்ஸ் பற்றியும்,
அவன் வேலைப்பார்க்கும் நிறுவனம், சம்பளம்
பற்றியெல்லாமும் கேட்டுக்கொண்டு
அவசர சிகிச்சை அறைக்குள் அவனைக்
கொண்டுசெல்ல ஆணையிடுகிறார்.,

திடுமென அவருடைய கைப்பேசி கத்த
அதை எடுத்துக்கொண்டு
செவிலிப்பெண்ணொருத்தி ஓடிவருகிறாள்..

கைப்பேசியில் அலறிக்கொண்டிருந்த மனைவி
மருத்துவரிடம் என்னங்க நம்ம பையன்
போன்பேசிட்டேப் போய் லாரியில் மோதிட்டானாம்
என்கிறாள்,

மருத்துவருக்கு ஏதோ சட்டையின்
நிறம் பார்த்த நினைவு சடாரென வந்து
கவனத்தில் அறைய
பதறியடித்துக் கொண்டு
அவசரசிகிச்சை அறைக்குள் ஓடுகிறார்..

அவருக்கு
மூடியிருந்த வெள்ளைத்துணியை யகற்றி
யாரென்று முகம் திருப்பிப் பார்ப்பதற்குள்
கை காலெல்லாம் படபடவென நடுங்கிற்று
தடதடவென உடம்பு ஆடியது
மூச்சு முட்டி மயக்கம் வருவது போலிருந்தது

கைப்பேசிக்குள் மனைவி கதறும்
சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது..



தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)


புதுச்சேரியில் வசதியாகத்தான் வாழ்ந்தார் பாரதி



  —   கோ. செங்குட்டுவன்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாடு, இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் புதுச்சேரியில் நடந்தது. அப்போது மாநாட்டு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அந்த மலரினைப் புரட்டிப் பார்த்தபோது, 'புதுச்சேரியில் பாரதியார் புதிய செய்திகள்'  எனும், வில்லியனூர்  பழனி அவர்களின் கட்டுரை என்னை ஈர்த்தது.

மனைவியுடன் பாரதி 

'நம்மிடையே பாரதி வரலாறு தொடர்பாக ஒப்புக்கொள்ளப்பட்டனவாக உள்ள இரண்டு தகவல்கள் கட்டுக்கதைகளே என அடையாளம் காட்ட முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கம்' எனத் தொடக்கத்திலேயே தெளிவாக அறிவித்து விடுகிறார் கட்டுரையாளர்.

புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்

பாரதியின் புதுச்சேரி வருகை மற்றும் புதுச்சேரி வாழ்க்கை குறித்த கீழ்க்காணும் தகவல்களைத் தருகின்றது இக்கட்டுரை:

  • கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி பாரதியார் அடைக்கலம் தேடி புதுச்சேரி வரவில்லை. இந்தியா பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தீட்டப்பட்ட ஒரு நீண்ட கால செயல் திட்டத்தின் ஒரு பகுதிதான் பாரதியின் புதுச்சேரி வருகை.
  • வியப்பும் பெருமிதமும் கொண்டு நாம் போற்றி எழுத வேண்டிய உன்னதமான வாழ்க்கையைத் தான் பாரதி புதுச்சேரியில் வாழ்ந்திருக்கிறார். 
  • புதுச்சேரியில் இருந்த செல்வச் சீமான்களைப் போலத்தான் அவரும் பெரியதொரு வீட்டில் வாழ்ந்திருக்கிறார்.
  • புதுச்சேரியில் அவர் எழுதி குவித்தவை ஏராளம். தென் ஆப்ரிக்காவில் கூட 1917இல் அவரது நூல் ஒன்று வெளிவந்தது. டர்பனில் இருந்து ஆயிரம் ரூபாய் பணம் அவருக்கு வந்து சேர்ந்ததாகவும் தகவல் உண்டு.
  • ஏராளமான உதவிகள் பல திசைகளில் இருந்தும் அவருக்கு வரத்தான் செய்தன.
  • உலகம் அவரை ஏற்றுப் போற்றிக் கொண்டாடவே செய்தது. அதனால் தான் 'எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்று அவர் பாடி மகிழ்ந்தார்.


என்றெல்லாம் விவரிக்கும் இக்கட்டுரையில், 'பாரதி' திரைப்படக் குழுவினரின் ஒப்பாரி குறித்தும் இடித்துரைக்கப்பட்டுள்ளது. இறுதியில், ‘பாரதியார் பட்ட துயரங்களை மட்டுமே முன்னிறுத்திப் பட்டியல் போடுவதை இனி அனைவரும் விட்டுவிட வேண்டும்' எனும் கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

உண்மையில், மேற்காணும் கட்டுரை, பாரதியின் புதுச்சேரி வாழ்க்கைக் குறித்த பிம்பங்களைத் தகர்ப்பதாகத்தான் இருக்கிறது!



தொடர்பு: கோ. செங்குட்டுவன் (ko.senguttuvan@gmail.com)

படம் உதவி: விக்கிபீடியா 

குடிசைத் தொழில்: முந்திரிப் பருப்பு தயாரிப்பு



  —   முனைவர் கி. காளைராசன்


புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் பெருங்களூர் - ஆதனக்கோட்டை அருகே சாலை யோரம் முந்திரிக்கொட்டை யிலிருந்து பருப்பு எடுத்து விற்கின்றனர். சுமார் 45 செ.மீ. விட்டமுடைய அலுமினியச் சட்டியின் அடிப்பாகத்தில் சிறுசிறு துவாரங்கள் (ஓட்டைகள்) இட்டுள்ளனர். இந்தச் சட்டியில் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு அடுப்பில் வைத்து சூடாக வறுக்கின்றனர். தீயும் இந்தச் சட்டியில் உள்ள துவாரங்கள் வழியாக சட்டிக்கு உள்ளேயே வருகிறது. இதனால் சட்டியின் உள்ளேயும் நெருப்பு எரிகிறது. இவ்வாறு நெருப்பில் முந்திரிக் கொட்டை எரியும் போது அதன் மேலோடு எரிந்து அதிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் கசிந்து வருகிறது. இந்த எண்ணையுடன் சேர்ந்து நெருப்பு நன்றாகச் சுடர்விட்டு எரிகிறது.

சட்டியில் உள்ள துவாரங்கள் வழியாக இந்த எண்ணெய் அடுப்பிற்குள் விழுகிறது. இதன் காரணமாக அடுப்பும் எரிகிறது. முந்திரிக் கொட்டையின் மேல் உள்ள ஓடுதான் அடுப்பிற்கான எரிபொருள் ஆகப் பயன்படுகிறது. விறகு அல்லது வேறு எந்தவொரு எரிபொருளும் பயன்படுத்தப்படுவதில்லை. கையில் வைத்துள்ள நீண்ட இருப்புக் கம்பியின் முனையைச் சற்று வளைத்து வைத்துள்ளனர். இந்தக் கம்பிக் கொண்டு சட்டியில் உள்ள முந்திரிப் பருப்பு முழுமையாக எரிந்துவிடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உடைத்து எடுக்கக்கூடிய பக்குவத்திற்கு வந்தவுடன் சட்டியில் இருக்கும் வறுத்த கொட்டைகளைத் தனியாகக் கொட்டி வைக்கின்றனர். புதிய கொட்டைகளை எடுத்து வறுக்கத் துவங்கிவிடுகின்றனர். 



வறுத்தெடுக்கப்பட்ட முந்திரிக் கொட்டைகளை எடுத்து சிறிய கல்லில் வைத்து உடைத்து முந்திரிப் பருப்பைப் பிரித்து எடுக்கின்றனர். முந்திரிக் கொட்டையின்கூடு எரிபொருளாகப் பயன்படுகிறது.
பிரித்து எடுக்கப்பெற்ற முந்திரிப் பருப்பைக் காயவைக்கின்றனர். அந்த முந்திரிப் பருப்பின் மேல் மெல்லியதான ஒரு தோல்போன்ற பகுதி மூடியுள்ளது. அதை ஒரு கல்லில் வைத்துத் தேய்த்து உரித்து எடுக்கின்றனர். இவ்வாறு தோல் உரிக்கப்பட்டவுடன் வெள்ளை நிறத்தில் முந்திரிப்பருப்பு விற்பனைக்கு வருகிறது. விலை - கால் கிலோ ரூ.220/-

குடிசைத்தொழில். 15-20 குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகின்றனர். குறைந்தவிலையில் சுத்தமாக சுவையாகக் கிடைக்கிறது.  புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் ஆதனக்கோட்டை  (Adhanakkottai, Tamil Nadu 614902) அருகே சாலையோரம் தயாரிக்கப்படும் இந்த முந்திரிப்பருப்பை வாங்கிப் பயனடையலாம்.



தொடர்பு:  முனைவர் கி. காளைராசன் (kalairajan26@gmail.com)

ஆணுக்குள் இருக்கும் பெண்!



 —  முனைவர் க.சுபாஷிணி

 தமிழகத்தில் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் தொண்டை மண்டலத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுபவை தெருக்கூத்து, நால்வகைக் கூத்துக்கள், மேடை நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்த்துக் கலைகளாகும். இந்தக் கலைகளில் தேர்ச்சி பெற்ற பாரம்பரியக் கலைஞர்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் தொண்டை மண்டல கிராமங்களில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரம் அவர்களுக்கு ஒருபோதும் கிடைப்பதில்லை. ஆனால், இந்த வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரத்தைப் பற்றியோ, புறக்கணிப்பு போன்ற கேடுகளைப் பற்றியோ இந்தக் கலைஞர்கள் கவலைப்படுவதில்லை; அவர்கள் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை.


ஒருநாள் தொடங்கி நாள் முடிகின்ற வரையில் ஒவ்வொரு நொடியும் அவர்கள் அசலான கலைஞர்களாக தமது வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் டால்ஸ்டாய் சொல்வது போல, வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கலை அம்சங்கள் பொதிந்துள்ளன, வெளிப்படுகின்றன என்பதின் அசலான சான்றுகள் இந்தக் கலைஞர்கள். இவர்களது அன்றாட வாழ்க்கை பெரும் பொருளாதாரப் போராட்டத்துக்கு இடையிலேயும் உடல்நலக் கேடுகளுக்கு இடையிலேயும் சிக்கிக்கொண்டிருந்தாலும், இவர்கள் தமது கலை வாழ்க்கையை விடாப்பிடியாக பிடித்துப் பயணிக்கிறார்கள். கடினமான சூழ்நிலையில் அவர்கள் இருந்தாலும் அரிதாரத்தைப் பூசிக்கொண்ட அடுத்த நொடியில் தமது வாழ்வின் துன்பங்களை மறந்து கலைப் பணியில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள்.

தமிழகத்தின் தொண்டை மண்டலத்தில் நிகழ்த்தப்படும் நாடகக் கலைகளின் கதைகளிலிருந்து நவீன நாடக உலகம் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த அடிப்படை அம்சத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்புதான் நாளந்தா கலை பண்பாட்டு இயக்கம். இதனைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியவர் டாக்டர் அமைதி அரசு. தமிழ் நவீன நாடக உலகில் மிக முன்னோடியான கலைஞராகவும் நாடக ஆசிரியராகவும் விளங்கிவருபவர். இவர் தற்போது கோவையில் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய முன்முயற்சியில் நாளந்தா கலை பண்பாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் நவீன நாடகக் கலையை வளர்த்தெடுக்கும் ஒரு நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.



இந்த அமைப்பின் தலைமையகம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பை டாக்டர் அமைதி அரசு, டாக்டர் பழனி கூத்தன், எழுத்தாளர் கௌதம சன்னா, ஆசிரியர் புருஷோத்தமன், செல்வம், திருப்பதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்துத் தொடங்கியிருக்கின்றனர். கலைஞர்களைப் பற்றிய பேட்டிகள், நாடகப் பயிற்சிகள், ஆய்வுகள், பயிலரங்கங்கள் என ஏராளமான கலைச்சேவைகளை இக்குழு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகுந்த ஆர்வத்துடன் நிகழ்த்தியிருந்தாலும் இடையில் ஏற்பட்ட தொய்வுக்குப் பின்னர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தமது கலை சார்ந்த நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறது.

ஆரணியில் உள்ள நாளந்தா கலை பண்பாட்டு அமைப்பின் தலைமையகத்தை 10.11.2018 அன்று மாலை எழுத்தாளர் கௌதம சன்னா திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவுக்குப் பிறகு இந்த அமைப்பின் சார்பில் தெருக்கூத்துக் கலையில் பெண் பாத்திரம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. “தமிழ் நாடகத்தில் பெண் புனைவு - அழகியலும் உடல் அரசியலும்” என்ற பொருளில் அமைந்த இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றவர் டாக்டர் அமைதி அரசு. சிறப்பு வருகை புரிந்தவர் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர்.க. சுபாஷிணி மற்றும் பேராசிரியர் பிரியதர்ஷினி ஆகியோர். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் கௌதம சன்னா, திரைப்பட இயக்குநர் கோபி நயினார், அலெக்ஸாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நாடகக் கலைஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் தேர்வு செய்யப்பட்ட ஐந்து தெருக்கூத்துக் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை சுபாஷிணி, கௌதம சன்னா, தமிழ்த்திரைப்பட இயக்குநர் கோபி நயினார் ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்துரையாட வந்த தெருக்கூத்து பெண் பாத்திரம் ஏற்கும் கலைஞர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டு அவர்களிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன. அக்கேள்விகள் அனைத்தும் அவர்கள் பின்பு பெண் பாத்திரத்தை ஏற்கும்போது உருவாகின்ற உளவியல் மாற்றங்களை மையப்படுத்தி இருந்தன. இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் ஒப்பனை இன்றி பதில் சொல்ல வேண்டும் என்பது முன் நிபந்தனை. இதற்குப் பதில் சொல்லும்போது அவர்கள் மிகுந்த தடுமாற்றத்திற்கு ஆளானார்கள். சில கலைஞர்கள் பேச முடியாமல் இறுக்கமாக இருந்தார்கள். பேசியவர்களும் ஒரு சில வார்த்தைகளோடு முடித்துக்கொண்டார்கள். அவர்களின் கருத்துக்களைத் தொகுத்தும் பெண் புனைவு பற்றிய தமது ஆய்வுகள் பற்றிய செய்திகளை வழங்கியும் டாக்டர் அமைதி அரசு சுருக்கமான உரை நிகழ்த்தி அந்த அமர்வை நிறைவு செய்தார்.


பிறகு அரை மணி நேரம் நாடக கலைஞர்களுக்கு அரிதாரம் அல்லது ஒப்பனை செய்துகொள்வதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டது. அவகாசம் முடிந்த பிறகு முழுமையான பெண் ஒப்பனையோடு கலைஞர்கள் மேடையேறி கருத்தரங்கை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார்கள். சாதாரண ஆண்களாகத் தோற்றம் அளித்தவர்கள் அரை மணி நேரத்தில் முழு பெண்களாக தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் மாறி மேடையில் வந்து அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு பேராளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

'ஒப்பனை செய்கின்றபொழுது எப்படி மனத்தைத் தயார் படுத்திக் கொள்கின்றீர்கள்? அதாவது ஆணாக இருந்து பெண்ணாக மாறுகின்ற அந்த இடைப்பட்ட நேரத்தை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று டாக்டர் சுபாஷிணி கேட்டார்.

ஒப்பனைக்கு முன்பு அமைதியாக இருந்த கலைஞர்கள் இப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் மடை திறந்த வெள்ளம் போல் சரளமாகப் பேசத் தொடங்கினர். ஒப்பனை செய்துகொண்டிருந்த அந்த நேரத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாகக் குறிப்பிட்டார்கள். பெண் தோற்றத்தில் கூடுதல் தைரியம் ஏற்படுவதாகவும், தாங்கள் மிக இயல்பாக தங்களை மக்கள் முன் வெளிப்படுத்துவதில் மகிழ்வதாகவும் தெரிவித்தனர்.

அன்றைய நிகழ்வைத் தமது கலை வாழ்க்கைக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகக் கருதுவதாகவும் அவர்கள் கூறினார்கள். இதுகாறும் தம்மை யாரும் கவுரவிக்காத சூழலில் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மன மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் ஓரிருவர் தெரிவித்தனர். பொதுவாகவே ஒரு நாடக நிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் தங்களைப் பெண்களாகவே நினைத்து பெண்களிடம் நடந்து கொள்வதை போலவே தங்களிடம் நடந்து கொள்வது போன்ற பிரச்சினைகளை அனுபவித்திருப்பதையும் பதிவுசெய்தனர்.

தொடர்ந்து பேராசிரியர் அமைதி அரசு பேசுகையில், பெண் கலைஞர்கள் தமது ஒப்பனையில் பெண்களை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஒப்பனையை மேற்கொள்ள விரும்புகிறார்கள். பெரும்பாலான நேரத்தில் அவர்கள் அதில் வெற்றியும் பெறுகிறார்கள் எனக் குறிப்பிட்டார். அந்தக் கருத்தை மேடையிலிருந்த கலைஞர்கள் அத்தனை பேரும் உறுதி செய்தார்கள்.


ஒவ்வோர் ஆணுக்குள்ளும் பெண் உணர்வுகள் இருப்பதுபோல, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் உணர்வுகள் இருப்பதைப் போல, இந்தப் பெண் கலைஞர்கள் தங்களுக்குள் இருக்கின்ற பெண் உணர்வுகளை உடல்மொழியாகவும் வெளிப்படுத்துவதன் வழி நாடகத்தில் பெண் கதாபாத்திரம் ஏற்று நாடகம் நிகழ்த்தப்படுகிறது. இத்தகைய அனுபவம் இக்கலைஞர்களுக்குத் தனக்குள் இருக்கும் பெண் உணர்வுகளோடு இணைவதற்கு இந்த நிகழ்த்துக் கலையும் வாய்ப்பளிக்கிறது என்கின்ற நிலையினால் இவர்கள் முழுமையாக இந்தப் பெண் பாத்திரங்களில் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் காண்கிறார்கள் என்றும் அமைதி அரசு விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலைஞர்களுக்கு சான்றிதழ்களும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன. அனைத்துக் கலைஞர்களும் பார்வையாளர்களும் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.

நாளந்தா கலை பண்பாட்டு நிறுவனம் மற்றும் சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த விழா தமிழகத்தில் புதுமையான ஒரு முயற்சி என்பதில் சந்தேகமில்லை. அரிதாரம் பூசுவதற்கு முன்பும் பின்பும், கலைஞர்களின் மனநிலையை அவர்களுடைய சொந்த சொற்களாலேயே மக்கள் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி உதவியது.

இது ஒரு தொடக்க நிகழ்ச்சிதான். இன்னும் விரிவாக இந்த அம்சத்தில் ஆய்வதற்கு இது ஒரு தொடக்கப்புள்ளி என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர். இத்துறையிலான ஆய்வுகளும் தரவுகளும் விரிவடைய பல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.


நன்றி: மின்னம்பலம் இணைய இதழ்

தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)

கைத்தறிக்குக் கைக்கொடுப்போம்



 — முனைவர்  அரங்கமல்லிகா

நெசவுத் தொழில் 5,000 வருடங்கள் பழமை வாய்ந்தது.  சிந்து  சமவெளி நாகரிகச் சின்னங்களிலும், ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி,கொழு,நெல், உமி ஆகியவற்றுடன் பழைய இற்றுப்போன பஞ்சாடையும் கிடைத்துள்ளன.  தமிழகத்தில் இராஜராஜசோழன் காலத்தில் நெசவுத்தொழில் செழிப்புற்று வளர்ந்துள்ளது. உறையூரில் முன்காலத்தில் நெசவுத்தொழிலுக்குச் சாயமிடும்  தொட்டிக் காணப்பட்டதாகவும், உறையூரில் நெசவு செய்யப்பட்ட சேலைகள்  ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக்கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்தது எனவும் கூறுகின்றனர். சங்க இலக்கியத்தில், குறிப்பாகத் தொல்காப்பியம் ”உடைபெயர்த் துடுத்தல்” என்று கூறுகிறது. பண்டைக்காலத்தில் பெண்கள் நூல் நூற்றமையை நக்கீரர், கபிலர், பவணந்தியார் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆடை கலாச்சாரம் பன்மைத்துவமானது. இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் அந்நியர்கள் இயந்திர நூற்பாலைகளை வைத்துத் துணி நெய்தபோது அண்ணல் காந்தியடிகள் கதராடையை நூற்று  அதனை அரசியலாக்கினார். நெசவாளிகள், விவசாயிகள் தமிழகத்தின் ஜீவநாடிகள். இன்றைக்கு  விசைத்தறி கொண்டு குறைந்த நேரத்தில் குறைந்த முதலீட்டில் அதிகம் உற்பத்தி செய்வதால், நெசவாளிகள் அன்றாட உணவுக்கே வழியில்லாமல் இடம் பெயர்கின்றனர். நெசவாளிகள் குறைந்த விலைக்குத் தயாரிக்கமுடியாத சூழலும் நிலவுவதால் தொழிலில்   பின்தங்கியுள்ளதோடு 60% நெசவாளிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் எனவும் ஓர் அறிக்கைக் கூறுகிறது.

மைய அரசும்  இந்தியா  ஹேண்ட்லூம் முத்திரையோடு வேறுவேறு அடையாளத்துடன் துணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இடைத்தரகர்களும் அவர்களின் உழைப்பைச் சுரண்ட கடையனிலும் கடையராய் மாறியுள்ளனர். இச்சூழலில் எத்திராஜ் மகளிர் கல்லூரி, மகளிர்  கல்வி  மையம்  பெண்ணியம் தொடர்பாகப் பெண்கள் தொழில் முனைவை ஊக்கப்படுத்த எண்ணி  ”கைத்தறிக்குக் கைக்கொடுப்போம்” என்ற தலைப்பில் ஜெர்மனி வாழ் முனைவர் க. சுபாஷிணி அவர்களின் தலைமையில் இயங்கும்  தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியை 25.10.18 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தியது.  நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி நிர்வாகக் குழுத்தலைவர் திரு.வி.எம்.முரளிதரன் அவர்கள் நெசவுத்தொழிலாளர் அடிப்படை வாழ்வாதாரம் பெற  அவர்களுக்கு உதவும் வகையில் பெண்கள் கல்லூரியில், கைத்தறி ஆடை உடுத்துவதை அங்கீகரித்து  கைத்தறிக்குக் கை கொடுக்க ஆதரவு அளித்தார்.

ஜெர்மனியிலிருந்து நிகழ்வுக்கு  வருகை தந்திருந்த  முனைவர் சுபாஷிணி, அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின்  ஃபெட்னா(FeTNA) விழாவில் நடந்த தமிழ் மாநாட்டில்  நெசவுத்தொழில் வளம் குறித்துப் பேசியதைச்சுட்டிக்காட்டினார். அந்நிகழ்வில் பெரும் ஆதரவோடு நாம் விரும்பியவாறு ஆடையின் வடிவம், டிசைன் மாற்றிக்கொள்ளலாம் என்பதைச் சொல்லி  தான் திருவள்ளுவர் உருவத்தைச் சேலை முந்தியில் அச்சிட்ட ஒரு சேலையை உடுத்திக்கொண்டதைப் பெருமையோடு சொல்லி மகிழ்ந்தார். மாணவிகளிடம் கதர் ஆடை உடுத்த  அவர் அனுமதி கேட்க, குழுத்தலைவர் ஒப்புதலையும்  வழங்கினார்.



இந்நிகழ்வில் கைத்தறி ஆடை காட்சியில் எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள்  மேடையை அழகுபடுத்தி தமிழகத்தின் பாரம்பரிய சேலை உடுத்தும் கலாச்சாரத்தை நினைவுபடுத்தி மாற்றம் நமக்குள் வரவேண்டும் எனச்சொல்லி அசத்தினர்.சேலத்திலிருந்து  வந்திருந்த கைத்தறி ஆடை நெய்யும் தொழிலாளி திருமதி அல்லி மன நெகிழ்வோடு நன்றி தெரிவித்தார். வையகத்தில் சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக் காரிகையார் தாரால் கலை செய்யும் என்பதை உறுதிப்படுத்த எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகள் தாங்கள்  எழுப்பிய பெரும் ஆரவாரத்தில் கைத்தறி ஆடை பறக்கத்தொடங்கியது.

கிராமப்புறத் தற்சார்பு வாழ்வைப்  பெண்கள் அடைய, பொருளாதார அடிப்படையில் அவர்கள் மேன்மை பெற  பெண்களுக்குத் தொழில் முனைவு அவசியம் என்பதை உறுதிப்படுத்திப் பேசினார் பேராசிரியர் அரங்கமல்லிகா.

இந்நிகழ்வில்  மாணவிகள் கைத்தறி ஆடை வாங்க குறைந்தது 700 ரூபாய் என்றாலும் 6,000 மாணவிகள் படிக்கும்  கல்லூரியில் ரூ. 42,00,000/=  கிடைக்கும். இது ஒரு சிறு கணக்குதான். மாணவிகளும்  தமிழ்க்கலாச்சார உடையோடு உலாவருவதில் பெருமகிழ்வு அடைவர் . இதை, கல்லூரிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நலிந்த நெசவாளிகள் வாழ்வாதாரம் பெறுவர்.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர்  பேராசிரியர் அரங்கமல்லிகா, இயக்குநர், மகளிர் கல்வி மையம், எத்திராஜ் மகளிர் கல்லூரி.

தொடர்பு: பேராசிரியர் அரங்கமல்லிகா (arangamallika@gmail.com)