Thursday, January 14, 2021

எல் உமிழ் இரும்பொறை அம்பொறி கனல

 
-- ருத்ரா இ.பரமசிவன்

            எல் உமிழ்  இரும்பொறை  அம்பொறி கனல
            கடுங்கண் காட்டும் முள்படர் இலவ‌ம்
            அவிழ் இலை செறிந்த அழற்பெருங்கானம்
            எரியூர் தோற்றியும் ஓவா நடையின்
            மீமிசை ஊக்கி செல்வம் நசைஇ
            ஆறு படுத்த நெடும்பணைத்தோள!
            இவண் ஓர் இறைநெகிழ்ந்த வளையள் ஆங்கு
            கொல் அலரி படுத்த கொடுநோய் வீழ்ந்த
            நிலைகண்டு அன்னை எவன் ஆங்கு
            "ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை"
            ஓரை ஆடி ஒள் மணல் தெள்ளினை
            எனவாங்கு
            பொய்ச்சொல் பெண்டிர் முருகு வெறியாடல்
            நின் நோய் ஆற்றும் கண்டிசின் தெளினே
            என்று ஊக்கிய அன்னைக்கு சொல்லும்:
            அவன் மின்னல் அகலம் யான் தோயும் காலை
            முருகன் என்னை அவன் அய்யன் என்னை
            நத்தம் இல்லா அத்தமும் ஏகுவன்
            அவனை ஓர்ந்து யான் சேரும் மாட்டே.

__

தலைவன் பொருள் தேடி கொடிய பாலையின் காட்டுவழியில் செல்ல தலைவியோ பிரிவுத்துயரில் மிகவும் வாடுகிறாள்.  இதைக்கண்ட அன்னை அவளுக்கு முருகன் வெறியாடல் என்னும் "சாமியாட்டம்" ஏற்பாடு செய்ய தலைவியோ முருகன் வந்தாலும் சரி அவன் அப்பனே வந்தாலும் சரி நான் என் தலைவன் வழி தான் ஏகுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதை தோழி தலைவனுக்குச் சொல்வது போல் அமைந்துள்ளது இப்பாடல்.

அகநானூற்றுப் பாடல் (எண் 60) குடவாயிற்கீரத்தனார் எனும் புகழ்மிக்க புலவரால் பாடப்பட்டது.
"ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை" என்ற வரியை அப்பாடலில் எழுதியுள்ளார்.ஆழம் செறிந்த சொல்லழகு மிக்கது இவ்வரி. கடற்கரையை அடுத்த நீர்ப்பரப்பில் எழும் வாடைக்காற்று வேகமாக வீசி கரையில் மணல் மேடுகளை உருவாக்குகிறது என்று இங்கே பொருள்படும். இதில் ஓரை என்பது கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாய் பெண்கள் வண்டல் மண்ணில் பாவை செய்து விளையாடுவதைக்குறிக்கும். தலைவி இப்படியெல்லம் விளையாடியதால் தான் இந்த நோய் வந்ததோ என்று அந்த வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள் அன்னை .தலைவியோ காதலனின் முன் எந்தக்கடவுளும் பொருட்டு இல்லை என்பதாய் காதல் பற்றி உறுதியாக இருக்கிறாள்.

இந்த சங்கத்தமிழ்க்காட்சியையே நான் சங்கத்தமிழ் நடைச்செய்யுட் கவிதை ஆக்கி இங்கு எழுதியுள்ளேன்.

Wednesday, January 13, 2021

அதுவொரு காலம்! பொங்கும் பொங்கல் நினைவுகள்

 -- இரா.நாறும்பூநாதன்


மேல பஜார் தெய்வு அண்ணன் கடையில் தான் விதவிதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் கிடைக்கும். ஆனால் கடையில் நின்று கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்கு பழியாய்க்கோபம் வரும்.

"இங்கன பாரு..சும்மால்லாம் வேடிக்கை பாக்கதுக்கா அடுக்கி வச்சுருக்கோம்..வாங்க வர்றவங்களை மறிச்சுக்கிட்டு நின்னா எப்படிடே..ஒரு ஓரமா நின்னு பாருங்கன்னு சொல்லியாச்சு..கேப்பனான்கியோ.."  

தெய்வு அண்ணன் வார்த்தைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப் போச்சு. டிசம்பர் மாசம் கிருஸ்துமஸ் தொடங்கும் முன்பே வாழ்த்து அட்டைகள் வாங்கி கடையைச் சற்றே முன்பக்கம் நீட்டி விட்டு, பார்க்கும் வசத்தில் அடுக்கி வைத்திருப்பார்.

ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் படுத்திருப்பது..மூன்று ஸ்டார்கள்..மரியம்மை, வெறும் சிலுவை..ஏசுநாதர் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல..
இவை ஒருபக்கம் இருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்டைகள் இன்னொரு பக்கம்..
தகதகக்கும் சூரியன் ..நேதாஜி,நேரு படங்கள் தாங்கிய அட்டைகள்..
பொங்கல் வாழ்த்து அட்டைகள் தாம் நிறைய. பொங்கப்பானை, கரும்பு,ஜோடி காளை மாடுகள்..மஞ்சள் குலை..
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையர்கள்..கோலம் போடும் அம்மாக்கள்..
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி பொங்கல் வாழ்த்து சொல்லும் படங்களும் உண்டு. சிவாஜி, பத்மினி படங்கள்...

பக்கத்துக்கு வீட்டு ஹிந்தி பண்டிட் சார் வந்தால் அஞ்சு நிமிசத்தில் பத்து போஸ்ட் கார்டுகளை மாத்திரம் வாங்கி விட்டுப் போய் விடுவார். ஒரு கார்டு பத்து பைசா மேனிக்கு ஒரு ரூபாயில் வேலையை முடித்துக் கொண்டு செல்வார். அந்தப் பத்து கார்டுகளைக்கூட கடைக்காரரையே தேர்வு செய்யச் சொல்வார். தெய்வு அண்ணன் ஒரே மாதிரி கார்டுகளை எடுத்துத் தருவார். " பத்தும் பத்து வெவ்வேறு ஆட்களுக்குத்தானே போகுது..அதனாலே என்ன.." என்பார்.

நான் எம்.ஜி.ஆர்.படங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பேன். விலை எல்லாம் கூட கேட்டு விடுவேன். மறுநாள் வந்து பார்த்தால், அவை இருக்காது. " குடியிருந்த கோவில்", " தனிப்பிறவி" படங்கள் அதிகமாக இருக்கும்.

வீட்டில் அண்ணன்மார்கள் எல்லோரும் போஸ்ட் கார்டுகளில் இந்தியன் இங்க் கருப்பு மையால் அழகாய் பொங்கல் பானை,கரும்பு வரைந்து பெரியப்பா பையன்கள்,மாமா பையன்கள் எல்லோருக்கும் அனுப்பி விடுவார்கள். ஆறு பைசா கார்டு விலையோடு முடிந்து விடும். சுய படைப்பு வேற...ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தான், அதே மாதிரி படம் வரைஞ்சு அனுப்புற பழக்கம் எனக்கு வந்தது.

ஒரு பக்கம் படமாய் இல்லாமல், விரித்துப் பார்த்தால், உள்ளே 9 எம்.ஜி.ஆர்.சிரித்தபடி வெளியே வரும் படியாய் ஒரு வாழ்த்து அட்டை உண்டு. அதில் படகோட்டி எம்.ஜி.ஆர்.நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர்.விவசாயி எம்.ஜி.ஆர். என பல்வேறு படங்களின் தோற்றங்கள் பலவண்ணத்தில் இருக்கும். அதெல்லாம் பயங்கர விலை அப்போது..(ஒரு ரூபாய் பத்து பைசா ).

பள்ளி ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் சார் வந்தால் மாத்திரம், பார்த்துப் பார்த்து வாங்குவார். பெரும்பாலும் ஓவியர் மாதவன் வரைந்த படங்களாக இருக்கும்.(மாதவன் என்ற பெயரை அவரே முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ) அவற்றில் இருக்கும் நுட்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பார்.

5.jpeg

2.jpeg

1.jpeg

3.jpeg

6.jpeg

4.jpeg

7.jpeg

வாழ்த்து அட்டைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்ததினால், அதில் உள்ள ஜிகினா தூள்கள் கைகளில் ஒட்டிக் கொள்ளும். பொங்கலையொட்டி சைக்கிளில் வரும் போஸ்ட்மேனிடம் " எங்களுக்கு பொங்கல் வாழ்த்து இருக்கா..?"  என்று கேட்டபடி பின்னாலேயே செல்வதுண்டு. 

கோவையிலிருந்து சிவானந்தம் அண்ணன் அனுப்புவார். வாகைக்குளத்தில் இருந்து திருமலை அத்தான் சமயங்களில். திருவெண்காட்டில் இருந்து திருநாவுக்கரசு அண்ணன்..நெய்யூரில் இருந்து போஸ் அத்தான்..அப்பாவின் நண்பர்கள் சிலர். இப்படியாய் வாழ்த்து அட்டைகள் நமக்கு மகிழ்ச்சியைச் சுமந்து வரும்.

greetings.jpeg

குறுஞ்செய்தி,வாட்ஸ்அப் வாழ்த்துக்கள் வந்து விட்டன இப்போது.
இப்போதும் வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம்..யார் வேண்டாம் என்று சொன்னது ?


வீட்டிற்கு வெள்ளையடிக்க எப்போதும் முருகேசன் அண்ணாச்சி தான் வருவார். அவருக்கு வயசு அம்பதுக்கு மேல் என்றாலும் எங்களுக்கு அண்ணாச்சி தான். வீட்டில் உள்ள சாமான்களை அவரே ஒதுங்க வச்சு வெள்ளை அடிச்ச்சபிறகு அவரே அதது இருந்த இடத்தில வச்சு விடுவார். நாம கூடமாட ஒத்தாசைக்கு இருந்தால் போதும். 

வீடு வெள்ளை அடிக்கும்போது,  சுவரில் மாட்டி இருக்கும்  பிரேம் போட்ட படங்களை எல்லாம் கழட்டி தூசி துடைச்சு ஈரத்துணியால் இன்னொரு முறை அழுத்தி துடைத்து மாட்ட வேண்டியது என்னுடைய வேலை. வெள்ளை அடிக்கும்போது தான் ஆறு மாசத்திற்கு முன்னால தொலைச்ச பொருட்கள் எல்லாம் கிடைக்கும். 

வீட்டில் இருக்கும் எல்லா சேலைத்துணிகளையும் அம்மை மூட்டை கட்டி வைத்து விடுவாள். அதுவே அம்பாரி மாதிரி குமிஞ்சு கிடக்கும். அதிலே ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு படங்களை துடைப்பதுண்டு.  தொலைஞ்ச தீப்பெட்டி படங்கள், கோலிக்குண்டுகள், கலர் குச்சிகள், என சிலவற்றை தேடி எடுத்துத் தருவாள் அக்கா. ஒரு புதையல் கிடைத்த சந்தோசத்தோடு அவற்றை தடவிப் பார்க்க சொல்லும். 

" ராசா..கொஞ்சம் நகந்துக்கிறீகளா.." என்று முருகேசன் அண்ணாச்சி பட்டாசாலை வந்து சத்தம் கொடுப்பார். சுண்ணாம்பு கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்தால், " உனக்கு அங்கன என்ன வேல..கையில பட்டு பொத்துப் போகப்போகுது.."  என்று அப்பா வாசலில் நின்று குரல் கொடுப்பார். 

பொங்கலுக்கு முதல் நாள் காவிப் பட்டை அடிக்க, முருகேசன் அண்ணாச்சியிடம்  இருப்பதில் பரவாயில்லாமல் இருக்கும் மட்டையை வாங்கி வைப்பேன். காவிப்பவுடரை தண்ணியில் கரைச்சு வெள்ளையடித்திருக்கும் படிச்சுவர்களில் முதல் நாள் இரவு கோலாகலமாக அடிக்கும் கொண்டாட்டங்கள். பிசிறின்றி அடிப்பது பெரிய கலை தான். சொட்டுப் போடாமலும் இருக்க வேண்டும். ரொம்பத் தண்ணியாய் கரைசல் இருந்தாலும் காவிப்பட்டை பளிச்சென்று இருக்காது. 

white washed wall.jpeg

மார்கழிக்குப்போடும் கோலத்திற்கு சற்றும் குறைவின்றி,  பொங்கல் திருநாளுக்கு பெரிய கோலமாய் போடும் முயற்சியில் அம்மை ஈடுபட்டிருப்பாள். அப்போது ரங்கோலி எல்லாம் கிடையாது. கோலப்பொடி கோலம் தான்.   சிறுவீட்டுப் பொங்கல் இடுவதற்கு வீட்டின் கிழக்கு முனையில், களிமண் வைத்து சின்னதாக வீடு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சமையலறை, பட்டாசாலை, தார்சா, படுக்கையறை எல்லாம் இருக்கும். அதில் சிறுபருப்பு பாயாசம் வைத்துக் கும்பிடுவோம். 

வெள்ளையடித்து முடித்தவுடன், வீட்டு உரிமையாளர் திருமேனி செட்டியாரின் மருமகன் வந்து வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு " முருகேசன் ஒழுங்காதான் அடிச்சுருக்கான்..வீட்டை உங்க வீடு மாதிரி பாத்துக்கோங்க.." என்று சொல்லி விட்டுப் போவார்.  எதிர்வீட்டின் வாசலில் குத்த வைத்திருக்கும் முருகேசன் அண்ணாச்சி அவசர அவசரமாய் தனது சொக்கலால் பீடியை அணைத்தபடி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லுவதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.



Saturday, January 9, 2021

திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும்

திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும் 


-- முனைவர்.  ஒளவை அருள்



இன்றோடு 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டர் ஜி யு போப் பெருமகனார் வெளியிட்டார். திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த மக்கள் அனைவரும் தலை மேல் வைத்துப் பாராட்டினார்கள் .

ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருவாசகத்துக்கும் - திருக்குறளுக்கும் - நாலடியாருக்கும் - புறப்பொருள் வெண்பாமாலையில் 59 பாடல்களும் 71 புறநாநூற்றுப் பாடல்களையும் மொழிபெயர்த்து தமிழின் இனிமையில் திளைத்தார்.  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற தொடர் பணி டாக்டர் ஜி யு போப் அடிகளாரின் மொழிபெயர்ப்பாகும்.  அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளிலும் அதுவே குறிக்கோள் மொழியாக  எங்கும் பரவியது.  

" திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் "  என்ற முதுமொழிக்கு இலக்கணமாக ஜி யு போப் அவர்கள் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் திருவாசகத்தை என் இதழ்கள் முணுமுணுத்ததால் சிந்திய கண்ணீரால் எழுத்துக்கள் சிதைந்துள்ளன.  கண்ணீரால் புனிதம் பெற்ற அந்த எழுத்துக்களை அப்படியே விட்டுவிட்டேன்.  "துளும்பு கண்ணீரில் மூழ்கி அழுது அடியடைந்த அன்பர் "  என்றே மணிவாசகரைக் குறிப்பிடுவார்கள்.

திருவாசக மொழியாக்கத்துக்கு எல்லோரும் போற்றிய நிலையில் மொழிபெயர்ப்பில் சமய மரபிலிருந்து பல இடங்களில் டாக்டர் ஜி யு போப் பிறழ்ந்து பொருள் கொண்டார்.   தாமே சில கருத்துக்களை வலிந்தும் குறிப்பிட்டுள்ளார்.  மார்கழியில் போற்றிப்பாடும் திருவெம்பாவையில் சில பாடல்கள் மணிவாசகர் நடையில் இல்லை என்பது போன்ற கருத்தையும் எழுதினார்.   1958 ஆம் ஆண்டில் திருவாசகமணி கே எம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மொழிபெயர்ப்பு வெளிவந்தது.  ஆங்கிலத்திலும் தமிழிலும் ஈடு செய்ய முடியாத புலமை பெற்ற திருவாசகமணியின் நடையை " வெள்ளிநாப் புலவர் " என்று உலகோரால் பாராட்டப்பெற்ற சீனிவாச சாஸ்திரியார் பாராட்டிய ஆங்கில நடை அது .

திருவாசகமணி தன் முன்னுரையில் போப் அடிகளாரிடத்தில் கொண்ட பணிவையும் பொருந்தாத இடத்தில்  கொண்டு மறுக்கும் துணிவையும் பெற்றுள்ளார்.   மார்கழித் திங்களில் திருவாசகமணியின் முன்னுரையில் மொழிபெயர்க்க முயன்ற சிறு பகுதியே இக் கட்டுரையாயிற்று. "ஒரு பதிற்றாண்டுகளுக்கு முன்னர், 1948 ஆம் ஆண்டில், பாசத்திற்குரிய என் மாமனார் டாக்டர். எஸ். குமாரசாமி எனக்குப் பெருந்தகை டாக்டர்.ஜி .யு . போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசக நூலையும் எய்லருடைய தொழுகை பற்றிய நூல் ஒன்றையும் பரிசளித்த அந்த நன்னாள் எனது எளிய வாழ்வில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாள் ஆகும்.

டாக்டர் ஜி.யு. போப் பற்றி மற்றொரு மருத்துவ டாக்டரால் தற்செயலாக அறிமுகம் ஏற்படாமல் போயிருக்குமானால், திருவாசகத்தின் மொழிபெயர்ப்பாளராக நான்  மாறியிருக்கக் கூடிய இந்நிகழ்வு இயலக்கூடிய ஒன்றா என்று பெருமதிப்புடன் அயர்ந்து வியக்கிறேன். ஆகவே, இத்தகைய உயரிய விளைவினை நல்கிய வித்தாக அமைந்த அந்தப் பெறலரும் பரிசினை வழங்கியமைக்காக மிகச்சிறந்ததும் மாட்சிமை மிக்கதுமான உள்ளொளி கொண்ட டாக்டர். எஸ். கே. அவர்களுக்கு மிகுந்த நன்றியுணர்வினை முதலில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

குறிப்பாக, ஆன்மிகத் தொடர்பற்ற எனது தொடக்கக் கால அரசியல் பயணங்களுக்கு இடையே, எனது மூதாதையர் காத்துவந்த மரபுப் பண்பு காரணமாகவோ, முன்வினைப் பயனாகவோ, திருவாசகத்துடன் என்றென்றைக்கும் இமைப்பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காத உறவாகப் பிணைக்கப்பட்டு விட்டேன்.   தமிழ்மொழியின் ஆன்மீக கருவூலமாகத் திகழும் அரும்பெரும் நூலுக்கு எனது எளிய ஆன்மாவை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டமையை மேலும் புனிதப்படுத்தும் வகையில் 1948 ஆம் ஆண்டிலேயே அந்நூலில் அடங்கப் பெற்ற ஐம்பத்தொரு பதிகங்களையும் முற்றாக மனதில் எழுத்து மாறாமல் மனத்தில் நிறுத்துகின்ற கடப்பாட்டினை மேற்கொண்டேன். 

நாயன்மார்களுள் ஒருவரான மாணிக்கவாசகரின்பால்  எனக்கு ஏற்பட்ட அளவிடற்கரிய பக்திமைப் பெருக்கு முதலில் மாணிக்கவாசக மாலை என்ற தமிழ்ப் பாமாலையாக முகிழ்த்தது; மணிவாசகரையும் திருவாசக அருள்மொழிகளையும் போற்றிப் பரவுகின்ற நூறு பாடல்களின் தொகுப்பு.  நினைவில் என்றென்றும் நிற்பவரும் தமிழினத்தின் அருள்நெறித் தலைவருமான திரு. வி. கலியாணசுந்தரனார் எளிய எனது நூலுக்கு அணிந்துரை வழங்கிய போக்கில் என்னை முதன்முதலாகத் திருவாசகம் பாலசுப்பிரமணியம் என்று அழைத்தார்.  இந்தப் புதிய அடைமொழி நண்பர்கள் நடுவே நின்று நிலவியது. 

அதன் பின்னர், 1949 ஆம் ஆண்டில்,வைத்தீசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கின் போது அப்போதைய தருமபுர ஆதீனத்தின் திருப்பெரும் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிஞர் மணவாள இராமானுசர் முன்னிலையில் திருவாசகமணி என்ற பட்டத்தையும் அடைமொழி பொறித்த ஆடகப் பதக்கத்தையும் வழங்கினார்.  

தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, என் ஆன்மாவின் இத்தகைய உளவியல் கனிவு உருவான நிலையில், டாக்டர். போப்பினுடைய திருவாசக மொழிபெயர்ப்பு நூலைத் தற்செயலாக எதிர்கொண்டேன்.  புதியதும் ஆர்வமிகுதியை ஊட்டியதுமான அந்நூல் ஆன்மாவை ஆரப் பற்றி அதன் முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை எழுத்தெண்ணித் துருவி ஆய்கின்ற இனிமையான பணியில் முழுமையாக ஆழ்த்தியது என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. அந்நூலைப் படித்து முடித்த போது எல்லையில்லாப் பேரின்பத்தில் ஆழ்ந்ததுடன் மிகுந்த துயரம் மீதூர்ந்ததுமான கலவை உணர்வுகளுடன் அதனைக் கீழே வைத்தோம். 

ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னரேயே, கி.பி.1900 - ஆம் ஆண்டிலேயே நாம் கண்டு பொறாமைப்படத் தக்க வகையில் ஓர் அரும்பெரும் பணியினை ஆங்கிலேயச் சமயத்துறவி ஆற்றியுள்ளார் என்பதால் என் உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ஊற்றெடுத்து கண்கள் கசிந்து கண்ணீர் பெருகச் செய்தது. ஆனால், அதே அளவில் வேதனையும் துயரமும் நெஞ்சைப் பிசைந்தன. மொழிபெயர்ப்பாளர் சைவ சமய குரவரின் பால் மிகுந்த பற்றுணர்வும் அளவிடற்கரிய உயர் மதிப்பும் கொண்டிருந்த போதிலும் தனது குறிப்புரைகளில் விரும்பத்தகாத செய்திகள் பலவற்றைத் தருவித்திருந்தார்.  உடனே, அதற்கான திருத்தங்களைப் பதிவிட்டாக வேண்டும் என்ற பேராவலும் தவிப்பும் என்னை ஆட்கொண்டன. 

பதிவிடப்பட்ட கறைகளை அழித்தொழித்து, உரிய விளக்கமளித்து, நமது சமய  குரவர் பற்றிய இறுதி முடிவானது என்பதை நிலைநிறுத்தும் வரை நம் வழிபாடே மனம் அமைதியடையாது. அப்படியொரு உறுதிப்பாடு தான் அந்நூலைப் படித்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்ட விளைவாக அமைந்தது.  அத்துடன் முடிந்தபாடில்லை. திருவாசகத்தை ஆங்கில மொழியாக்கம் செய்கின்ற புனிதமானதும் இடர்ப்பாடுகள் மிக்கதுமான அரும்பணியில் ஆங்கிலேயக் கிறித்தவப் பாதிரியார் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மொழியிலேயே கூடத் திருவாசகத்திற்குத் தக்க முறையிலான உரை இருந்ததில்லை. அவருக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு பழைய நூல்; அதுவும் அவர் குறிப்பிட்டுள்ளதைப் போல, பொருட்பாடான பயனை அளிக்கவில்லை. எவ்வித உதவியுமின்றி, எவருடைய ஆற்றுப்படுத்தலுமின்றி, தமிழ் மறையாம் திருவாசகத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் அந்நியமான புறச்சூழமைவில் போப்பெருந்தகை அப்பணியில் உழன்றுள்ளார். 

ஆகவே, என்னதான் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஈடிணையற்றதும் மதிப்பிடற் கொண்ணாததுமான தொண்டினை ஆற்றியிருந்த போதிலும், தனது மொழிபெயர்ப்பில் பல இடங்களில் தடுமாறியுள்ளார்; தடுக்கி விழுந்துள்ளார்; சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும், மறைபொருளான சுட்டுகளுக்கும் தெளிவற்ற பொருள் கொண்டு தவறான பொருள்விளக்கம் கண்டுள்ளார்.  இந்நிலை எனது தனிப்பட்ட மொழிபெயர்ப்பில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாட்டை  எய்தியமைக்கு மற்றுமொரு நோக்கமாக அமைந்தது. இதன் வாயிலாகத் தனது வாழ்க்கையில் பெரும் பகுதியைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே நீண்ட காலம் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஒப்புயர்வற்ற கிறித்தவ முனிவரின் அரும்பணியை நன்றியுணர்வின்றிக் குறைத்து மதிப்பிட்டதாக என்றும் கருதிவிடலாகாது. அது மட்டுமன்றி, அப்படியொரு அளவுகடந்த உரிமையை கைக்கொள்ளக் கூடுமானால், அவருடைய ஆன்மாவுடன் நம்முடையதை அடையாளம் காணும் உயிர்க்கலப்புக் கொள்ளும் அளவிற்கு அவரைப் போற்றவும் மதிக்கவும் செய்கிறோம். 

எனது நூலான மாணிக்கவாசக மாலையில் மாண்பிற்குரிய அருட்தொண்டர்கள் பட்டியலில் இடம்பெற்ற அருளாளர்களுடன் டாக்டர் போப் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற உண்மையும் அவ்வெளிய நூல் பாசத்துடனும், பெருமதிப்புடனும், நன்றியுணர்வுடனும் டாக்டர் போப் அவர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது என்பதும் அவர் தெய்வீகச் சான்றோர் என்பதைக் காட்டிலும் சான்றோருள் தெய்வீகத் தன்மை வாய்க்கப் பெற்றவர் என்று நான் அவரைக் கருதுவதற்கான சான்றுகள். ஆயினும், டாக்டர் போப் என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் எனினும் பேருண்மை என்பது அவரினும் பெரிதும் போற்றிக் காக்கப்பட வேண்டியது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே, திருவாசகம் பற்றிய எண்ணற்ற விரிவுரைகளும் விளக்கவுரைகளும் அடங்கிய பல்வேறு வகைப்பட்ட நூல்களையும் பெரிதும் உறுதுணையாக நிற்கின்ற புறச்சூழல்களையும் கொண்டும், அனைத்திற்கும் மேலாக, இறையாற்றலின் தெளிவானதும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதுமான மாற்றமிலா அருளாசிகளாலும் திருவாசகத்தின் எனது ஆங்கில மொழியாக்கத்தை வெளிக் கொணர்ந்துள்ளேன் .

 இந்த மொழியாக்க நூல்  முழுநிறைவானது எனக் கருதுவது எனது நோக்கமல்ல. புனித போப் அவர்களுடைய முந்தைய ஆக்கத்தைக் காட்டிலும் ஓரளவேனும் செம்மைப் படுத்தப்பட்டது, மேம்படுத்தப்பட்டது என்று மட்டிலுமே சொல்லக்கூடும் !


முனைவர்.  ஒளவை அருள்
மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர் 
தமிழ்நாடு அரசு 
நன்றி: தினமணி





Thursday, January 7, 2021

கௌதம சன்னாவின் இட ஒதுக்கீட்டின் மூலவரலாறு



கௌதம சன்னாவின் இட ஒதுக்கீட்டின் மூலவரலாறு

-- ஆ.சிவசுப்பிரமணியன்

வருணப் பாகுபாடும் அதிலிருந்து கிளைத்த சாதியமும் கோலோச்சிக் கொண்டிருந்த இந்தியச்சமூகத்தின் ஆட்சியாளராக, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதும், தங்கள் நாட்டின் நிர்வாக அமைப்பை இங்கு அறிமுகம் செய்தனர். இப்புதிய நிர்வாக அமைப்பில் சாதியப் படிநிலையில் மேலேயுள்ள சாதியினரே பணியாளர்களாக விளங்கி ஆதிக்கம் செலுத்தலாயினர். மன்னராட்சியில் இடம் மறுக்கப்பட்டோர் காலனியாட்சியிலும் அதே நிலைக்கு ஆளாயினர். இராணுவத்தைப் பொறுத்த அளவில் சற்று வேறுபாடான முறை நிலவியது. சில குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே கொண்ட படைப்பிரிவுகளை ஆங்கிலேயர் உருவாக்கினர். இவை அச்சமூகத்தினரின் பெயராலேயே அழைக்கப்பட்டன. ஜாட் ரெஜிமெண்ட், சீக்கிய ரெஜிமெண்ட், மகர் ரெஜிமெண்ட், பறையர் ரெஜிமெண்ட் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட ரெஜிமெண்ட்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். மராத்திய மாநிலத்தில் தீண்டத்தகாத சாதியினராக ஒதுக்கிவைக்கப்பட்ட மஹர்கள் படைவீரர்களாக ஆங்கிலேயர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதானது அவர்களுக்கு சமூக  உயர்நிலையை வழங்கியதாக அம்பேத்கர் கருதியுள்ளார். 

கிராமப்புறங்களில் குற்றேவல் செய்பவர்களாக இருந்த, தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டிருந்த மஹர்களும் சம்பர்களும் இராணுவப் பணியினால் பிற சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தும் சமூகங்களாக மாறிவிட்டன என்று அவர் அவதானித்தார். 1927 மார்ச் 19 ஆவது நாளன்று மஹத் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரையில், இராணுவப் பணியின் விளைவாக இவ்விரு சாதியினரின் சமூக வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்களாக அவர் குறிப்பிட்ட செய்திகளின் சுருக்கம் வருமாறு:

மராத்தியச் சிப்பாய்களும் பிற சாதியினரும் மஹர்களையும் சம்பர்களையும் தீண்டத்தகாதவர்கள் என்று கிராமப்புறங்களில் கருதினர். தமக்குக் கீழ்ப் படியாவிடில் தம்மை அவமதிப்பதாகக் கருதினர். இதே ஆதிக்க சாதியினர் இராணுவப் பணியில் சேர்ந்தவுடன் மஹர், சம்பர் வகுப்பைச் சேர்ந்த சுபேதார்களுக்கு, சல்யூட் அடித்தனர். தீண்டத்தகாத சாதியினரான மேலதிகாரிகள் தம்மைப் புண்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பினாலும் தம் தலையை உயர்த்திப் பார்ப்பதில்லை. இதற்குமுன் இத்தகைய தகுதி இவர்களுக்குக் கிடையாது. இவர்களில் 90% மக்கள் எழுத்தறிவு பெற்றுவிட்டனர். இதில் 50% மக்கள் உயர்கல்வி பெற்றவர்கள். இம்முன்னேற்றம் பெரும்பாலும் இராணுவப் பணியால் ஏற்பட்டது.

வருண எல்லைக்குள் வரவிடாமல் வருணம் அற்றவர்கள் என்ற பொருளில் அவர்ணர்கள் என்றழைக்கப்பட்ட மக்கள் பிரிவினரை இராணுவத்தில் சேர்த்துக்கொண்டதன் வாயிலாக வருணப்படி நிலையில் இரண்டாவதாக இடம் பெறும் ஷத்திரியராக ஆங்கிலேயர்கள் மாற்றிவிட்டனர்.

இது போன்ற முன்னேற்றம் ஏற்பட; வருவாய்த்துறை, காவல் துறை, நீதித்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை ஆகிய துறைகள் இடைநிலை சாதியினருக்கும் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த சாதியினருக்கும் குறிப்பிடத்தக்க அளவில் தொடக்கத்தில் துணை நிற்கவில்லை. இதற்குக் காரணம் இத்துறைகளில் இவர்கள் உரிய அளவில் இடம் பெறாமல் போனதுதான். இதுவே இட ஒதுக்கீடு என்பதன் அவசியத்தை, சிந்திக்கத் தூண்டியது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு என்பது நீதிக்கட்சி என்ற கட்சியுடன். தொடர்புடையதாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையை ஆராய்வதே "இட ஒதுக்கீட்டின் மூல வரலாறு' என்ற இந்நூலின் அடிப்படை நோக்கமாகும். இடஒதுக்கீடு என்ற கொள்கை நீதிக்கட்சி உருவாக்கியதா? அல்லது பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கினாரா? என்ற விவாதத்தை இந்நூலில் தோழர் கௌதம சன்னா தொடங்கி வைத்து அதற்கு விடையும் கண்டுள்ளார். இம்முயற்சியில் யார் முதலில் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆராய்ச்சியை அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவுக்குரிய இட ஒதுக்கீட்டையே ஆய்வுப்பொருளாகக் கொண்டுள்ளார். இது இந்நூலின் சிறப்பாகும் .




இந்நூலின் உள்ளடக்கத்தை இரண்டு பகுதிகளாகப் பகுத்துக் கொள்ளலாம். முதற்பகுதி ஆங்கிலக் காலனியாட்சியில் இட ஒதுக்கீட்டின் தேவை குறித்தது. ஒன்றிற்கொன்று வேறுபாடான மொழி பேசுவோரும் பண்பாடு கொண்டோரும். வாழ்ந்த இந்திய உபகண்டத்தை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா என்ற பெயரில் ஒரே நாடாக உருவாக்கியது மிகப் பெரிய வரலாற்று நிகழ்வாகும். இதன் பின்னர் ஒரே ஆட்சியாளர்களாகத் தம்மை ஆங்கிலேயர்கள் நிலை நிறுத்திக்கொண்டனர். 1857 சிப்பாய் எழுச்சிக்குப்பின் இங்கிலாந்தின் ஓர் உறுப்பாக, அதற்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்கும் நாடாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது. 1885இல் இந்தியத் தேசிய காங்கிரஸ் உருவான பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றோரும், பெருநிலக்கிழார்களும், அரசில் உயர்பதவி வகித்தோரும் ஆங்கில அரசிடம் தம் முன்னேற்றத்திற்காக மனுக்கொடுப்போராயினர். இது குறித்து இந்நூலாசிரியர், 'சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளும் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற நோக்கமின்றி அரசினை அண்டி அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதே நல்லது என்பதை உணர்ந்து கொண்டன' என்கிறார். அத்துடன் இது ஏற்படுத்திய விளைவுகள் குறித்தும் 'கல்விகற்ற பார்ப்பன வியாபார வேளாண் உயர்குடிகளிடையே 
கடுமையான போட்டியும் இக்கட்டத்தில் தொடங்கியது என்பது இயற்கையானதே. இந்த வரலாற்றுச் சூழலில் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டிருந்த மக்கள் கேட்பாரற்று இருந்தனர்' என்று சரியாகவே அவதானித்துள்ளார்.

இரண்டாவது பகுதி இட ஒதுக்கீட்டிற்கான அயோத்திதாசரின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவரது எழுத்துச் சான்றுகளின் துணையுடன் வெளிப்படுத்துகின்றது. இதுவே இந்நூலின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. அத்துடன் அவரது தொலைநோக்கான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது.

'அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு தொடர்பான வேண்டுகோளை 1891 ஆவது ஆண்டில் அயோத்தியதாசர் முன்வைத்துள்ளார். ஆனால் இட ஒதுக்கீடு என்ற கருத்தை சட்ட வடிவில் அன்றி ஆலோசனை வடிவில் 1888இல் முதலில் வழங்கியவர் டஃபிரின் பிரபு என்ற ஆங்கிலேயர்தான். படித்த பணம் படைத்த, உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடும் முன்னுரிமையும் வழங்கவேண்டும் என்பதே அவரது ஆலோசனையாக இருந்தது. இது நடைமுறைப்படுத்தப் பட்டதன் விளைவை, அரசு நிர்வாகத்தில் முதன்முறை இட ஒதுக்கீடு பெற்ற சமூகமாகப் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதியினரே இருந்தனர். அரசுப்பணிகளில் மடமடவென அவர்கள் நிறைந்தார்கள். தவிர்க்கமுடியாத சக்தியாக அவர்கள் அதில் தம்மை நிரப்பிக் கொண்டார்கள்' என்று வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி இது. இத்தகைய சூழலில்தான் 1890இல் சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை அயோத்திதாசர் உருவாக்கியிருந்தார். இவ்வமைப்பின் முதல் மாநாடு 1891 பிப்ரவரி முதல் நாளன்று நீலகிரியில் நடந்தது. இம்மாநாட்டில் பத்து கோரிக்கைகளை அயோத்திதாசர் முன்வைத்தார். இவற்றுள் ஆறு கோரிக்கைகள் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மக்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டவை. இம்மக்கள் பிரிவினருக்கென்று பள்ளிகள் நிறுவுதல், கல்வி பயில்வோருக்கு உதவித்தொகை வழங்குதல், கற்றோருக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்குதல், உள்ளாட்சி அமைப்பில் பிரதிநிதித்துவம் என்பன இவற்றில் இடம் பெற்றிருந்தன. சாதியப் படிநிலையில் மேலேயுள்ளோருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை கீழேயுள்ளோருக்கு வழங்க வேண்டும் என்ற இக்கோரிக்கையானது ஆங்கில உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைத் தலைகீழாக்கியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். நில உரிமையற்றிருந்த இம்மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்ற பொருளாதாரம் சார்ந்த கோரிக்கையை அயோத்திதாசர் முன்வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய தொழில் நிதியக் கூட்டமைப்பு என்ற அமைப்பிற்கு 1908 இல் அவர் எழுதிய கடிதத்தை நம் பார்வைக்கு ஆசிரியர் கொண்டு வந்துள்ளார். இக்கடிதத்தில், விகிதாச்சார அடிப்படையிலான இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, கல்வித் தகுதிக்கேற்ற வேலை வழங்கல், என்ற மூன்றையும் அவர் வலியுறுத்தியுள்ளார். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தை மையமாகக் கொண்டு 1909 இல் நடந்த விவாதங்கள் நம் கல்விப்புல வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. இந்துக்கள், இஸ்லாமியர் இரு சமயம் சார்ந்தோருக்கும் இடையிலான முரண்பாடாகவே இவை வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அயோத்திதாசரை முன் நிறுத்தி இந்துக்கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குப் பின்னால் உள்ள நுண் அரசியலை இந்நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய இந்திய அரசியலுக்கும் இது பொருந்தும். மார்லி முன்வைத்த சீர்திருத்தங்கள் பிராமண சமூகத்தின் நலனை ' இந்துக்கள்' என்ற பெயரில் பாதுகாப்பதாக அமைந்தமையால் காங்கிரஸ் அதை ஆதரித்தது.

தீண்டாமைக் கொடுமைக்குப் பெரும்பான்மையான மக்கள் பிரிவை ஆட்படுத்தியதுடன் பின்னர் அதையே காரணமாகக் காட்டி அவர்களை இந்துக் கோயில்களுக்குள் அனுமதிக்க மறுத்தது இந்து மதம். ஆங்கில ஆட்சியிலும் இது தொடர்ந்தது. சமய அடிப்படையிலான எண்ணிக்கை உயர்வு தேவை என்ற போது இந்து என்ற அடையாளத்திற்குள் இம்மக்கள் பிரிவை உட்படுத்தினர். இது இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு உதவியது. இது ஓர் எதிர்மறையான அடையாள அரசியல். இதன் வேறுவடிவம்தான் இன்றைய இந்து அரசியல். இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்தே இந்து அடையாள அரசியல் தொடங்கிவிட்டது. (கூடவே இஸ்லாமிய அடையாள அரசியலும்). பிராமணர் அல்லாதோர் இயக்கம் இதற்கு எதிராகத் தொடங்கப்பட்டாலும் அடிப்படையில் அது இவ்வியக்கத்தின் வேரைத் தொடவில்லை. பிராமணர் அல்லாதார் இயக்கம் என்ற பொத்தாம் பொதுவான அடையாளத்தை அது கொண்டிருந்தது.

இது குறித்த சில மதிப்பீடுகளை 1909 செப்டம்பர் 15இல் அயோத்திதாசர் தமது ஒரு பைசா தமிழன் இதழில் முன்வைத்துள்ளார். சைவம் வைணவம் வேதாந்தமென்பனவற்றை ஏற்றுக்கொண்ட பிராமணர் அல்லாதோர் பிராமணச் சார்புடையோரே என்பதை அவர் கருத்தாக வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் பிராமணர் அல்லாதாராக யார் விளங்க முடியும் என்பதற்கு, சில வரையறைகளையும் வகுத்துள்ளார். அதன்படி:

பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆதாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு (நான்-பிராமின்ஸ்) என்று கூறுவது வீணேயாகும். காரணம் சாதியாசாரக்கிரியைகளிலும் பிராமணர்களென்போர் வர வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலின் இவ்விரண்டிற்குஞ் சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் நான்-பிராமின் ஆகார்கள்.

இக்கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி அவர் இது தொடர்பாக மேலும் கூறியவற்றை நூலாசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார் (பக்கம்:75-83). இதன் தொடர்ச்சியாக, நீதிக்கட்சியும் பார்ப்பனர்களை எதிர்த்ததே தவிரப் பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை. சாதி மத ஆசாரங்களைக் கடுமையாகக் கடைப்பிடித்த தலைவர்கள்தான் அதில் நிறைந்திருந்தார்கள் என்ற கருத்தை நூலாசிரியர் முன்வைத்துள்ளார். (தமிழ்நாட்டில் இன்று பரவலாகக் காணப்படும் அய்யப்பசாமி வழிபாட்டை, தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து பரப்பியவர், நீதிக்கட்சியின் தூண்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் சர்.பி.டி.ராசன் தான்).

பிராமணர் அல்லாதார் இயக்கத்தை நோக்கி அவர் எழுப்பிய அய்ந்து கேள்விகளும் ஆழமானவை. சாதி இந்துக்கள் என்று சிலரால் வகைப்படுத்தப்படும் இந்துக்களைக் குறிக்க "சாதிபேதமுள்ள இந்துக்கள் என்ற சொல்லாட்சியை அயோத்திதாசர் பயன்படுத்தியுள்ளார். இது பொருள் பொதிந்த ஒன்று.

இவ்வரலாற்றுச் செய்திகளின் பின்புலத்தில் 'இடஒதுக்கீடு என்ற கொள்கையின் மூலவேர்' எது? என்பதை ஆராயும் இந்நூலாசிரியர் இக் கொள்கை முன்வைக்கப்பட்ட காலத்தை,

முதற்கட்ட ம் (1890-1900) 
இரண்டாவது கட்டம் (1905-1914)

என இரண்டாகப் பகுத்துக் கொண்டுள்ளார். இப்பகுப்பில் முதற்கட்டம் அயோத்திதாசரை மையமாகக் கொண்டது. இரண்டாவது கட்டம் பிராமணர் அல்லாதார் இயக்கம், நீதிக்கட்சி என்ற இரு இயக்கங்களை மையமாகக்கொண்டது. முதற்கட்டத்தில் இட ஒதுக்கீடு அயோத்திதாசரின் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டது. இது யாசகம் சார்ந்ததல்ல. தன் சமூகத்திற்குரிய பங்கினை வெளிப்படுத்தும் தன்மையது. இரண்டாவது கட்டத்தில் இட ஒதுக்கீடு ஒர் இயக்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டது. இடஒதுக்கீடு இன்மையால் பிராமணர் பெற்றிருந்த ஏற்றம் இருகட்டங்களிலும் முன்வைக்கப்பட்டது. இது ஒருவகையில் ஒற்றுமைக்கூறாக அமைந்துள்ளது. வரலாற்றடிப்படையில், பிராமணிய எதிர்ப்பென்பது தமிழகத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிப்போனதின் விளைவாக இதைக் கொள்ளலாமோ? பிராமணர் அல்லாத பெரு நிலக்கிழார்கள், (பெரும்பாலும் வேளாளர்கள்), வணிகர்கள், தொழில் முனைவோர், உயர் அதிகார வர்க்கத்தினர், வழக்கறிஞர், மருத்துவர் என பிராமணர் அல்லாத மக்கள் பிரிவினரிடமிருந்து உருவானோர் இரண்டாவது கட்டத்தில் உருவான இட ஒதுக்கீடு இயக்கத்தில் இணைந்து கொண்டனர். பிராமணர், பிராமணர் அல்லாதார் என்ற இரட்டை எதிர்மறையை ("Binary oppostion") இவ்வியக்கம் முன்வைத்தது.

சூத்திரர் என்ற பொது அடையாளம் பிராமணர் அல்லாதாருக்கு வழங்கப்பட்டதால் பிராமணர் சூத்திரர் முரண்பாடாக மட்டுமே பார்க்கப்பட்டது. இதன் விளைவாகத் தீண்டத்தகாதவர்கள் என்போர் இட ஒதுக்கீட்டுக்கான இவ்வியக்கத்தின் வேண்டு கோள்களில் "மற்றமை" (the other) ஆகிப்போனார்கள். இவ்உண்மையை அயோத்திதாசர் வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுப்பிய அய்ந்து வினாக்களும் ஆழமானவை, முக்கியமானவை.

'நீதிக்கட்சியின் விகிதாச்சார நடைமுறையை முழுமையாக ஆராய்வது நமது நோக்கமல்ல. மாறாக விகிதாச்சார உரிமை என்னும் கோட்பாடு அதனுடைய கொடையல்ல' என்ற தம் கருத்தை, தக்க சான்றுகளுடன் இந்நூலின் ஆசிரியரான தோழர் கௌதம சன்னா நிறுவியுள்ளார். 

தோழருக்கு வாழ்த்துகள். 

(வெளிவர உள்ள 'இட ஒதுக்கீட்டின் மூலவரலாறு' எனும் நூலுக்கான முன்னுரை)

நன்றி - 
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்
- ஜனவரி 2021





Tuesday, January 5, 2021

தமிழக நிலவியல்

அரியலூரின் தொல்லுயிர் எச்சங்கங்களும் டைனோசார் முட்டைகளும் 

 -- திரு. சபாரத்தினம் 


அண்மையில் அரியலூரில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல, ஆனால் இந்த முட்டை போன்ற உருண்டைகள் கடல்வாழ் உயிரினங்களின் படிமப் பாறைகள்.  முற்காலத்தில் கடலில் வாழ்ந்து பிறகு அழிந்துவிட்ட அம்மோனைட் உயிரினங்களின் மீதும் மற்றும்  மேலும் பல்வேறு வகையான தொல் உயிர் எச்சங்களின் மீதும் ஏற்படும் சுண்ணாம்புப் படிமங்களால் பெரிய உருண்டைகளாகியுள்ளது என்று புவியியலாளர் திரு. சபாரத்தினம் விளக்கம் அளிக்கிறார்.


ammonite sediments.JPG

  IMG1.jpg

IMG2.jpg

மேலும் அரியலூர்  அருங்காட்சியகத்தில் இருக்கும் உண்மையான டைனோசர் முட்டையின்  படத்தையும்  பகிர்ந்து கொண்டார்.  அந்த முட்டை குறித்து ஆய்வு செய்த ஜெர்மானிய புவியியலாளர்கள் எழுதிய  ஒரு  ஆய்வுக் கட்டுரையானது ஆய்விதழில் வெளியானது என்றும் குறிப்பிட்டார். 



________________________________



Lambtons peak.jpeg

லேம்ப்டன் சிகரம் (Lambtons peak)

கோவை நகரத்தின் மேற்கு அரணாகச் செல்லும் நீண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கவனித்திருக்கிறீர்களா!?. அதில் ஒரு சிகரம் கட்டைவிரலை வளைத்து தம்ஸ்அப்  காட்டுவது போலிருக்கும். அதுதான் லேம்ப்டன் பீக். இது எங்கிருக்கிறது? வெள்ளக்கிணர், துடியலூர் பகுதிகளிலிருந்து சில  கிமீ தொலைவில் இதை அடையலாம். இதே மலைப் பகுதியில்தான் குருடி மலை(குரு_ரிஷி ?) உள்ளது.

யார் இந்த லேம்ப்டன்?
இவர் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல்.
Great meridional arc என்ற , நில அளவைக்கான அடிப்படைக் கோட்டை வரையத் துவங்கியவர்(1802). அதை ஆங்கிலத்தில் trigonometrical survey என்பர். நிலங்களைப் பல முக்கோணங்களாகப் பிரித்து அளவை செய்வர். இந்த நில அளவைகளுக்கு அடிப்படையான கோடுதான் Great meridional arc. முசோரியில் இருந்து கன்னியாகுமரி வரை வரையப்பட்டது. இந்தப் பெருமுயற்சியின் இடையில் லேம்ப்டன் காலமாகிவிட ஜார்ஜ் எவெரெஸ்ட் பொறுப்பு ஏற்றார். உலகின் உயர்ந்த சிகரமான எவெரெஸ்ட் இந்த சர்வே யின் விளைவாகவே கண்டுபிடிக்கப்பட்டது. ஜியார்ஜ் எவெரெஸ்ட் நினைவாக அந்த சிகரத்துக்குப் பெயர் வைக்கப்பட்டது போல், இந்த மாபெரும் பணியின் முன்னோடி லேம்ப்டன் இந்த பகுதியில் பணியாற்றியதால்(1806 வாக்கில்) இந்த சிகரத்துக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது

இந்த மாபெரும் பணியில் ஈடுபட்டபோது(ஏன் உயிரிழப்புக்கள் கூட) நடந்த சம்பவங்களையும், சிரமங்களையும் திரு ரமணன் அவர்கள் தனது "கடைசிக்கோடு" என்னும் நூலில் சுவை படக்கூறியிருப்பார். அவருக்கு எனது நன்றிகள்.

புகைப்பட உதவி: திரு. சுபாஷ் சுந்தரம்

________________________________



நீலகிரி (Blue mountain)

தமிழ் நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும், நீலகிரியோடு இணைகின்றன. இந்த மலை  சார்னோகைட் (Charnockite) எனும் பாறைகளால் ஆனது. இது ஒரு வகை கருங்கல் (Granite) ஆகும். ஹைப்பர்ஸ்தீன் கிரானைட் (Hypersthene Granite) என்று அழைக்கப்படும். ஹைப்பர்ஸ்தீன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கனிமம், அந்த வகை கிரானைட் பாறைகளின் ஒரு அங்கமாகக் காணப்படும். தூரத்திலிருந்து பார்க்கும்போது இந்த சார்னோகைட் மலைகள் நீல நிறமாகத் தெரியும். எனவே நீலகிரி என்று அழைக்கப் படுகிறது.

முதன் முதலாக இந்த வகைப் பாறையைக் கண்டு பிடித்தவர் ஜேம்ஸ் ஹாலண்ட் (James Holland) என்னும் புவியியலாளர். கல்கத்தா நகரைக் கட்டமைத்து உருவாக்கிய ஜாப் சார்னோக் (Job Charnock) எனும் ஆங்கிலேயரின் கல்லறையில் (tomb stone) இந்த பாறை முதன் முதலில் காணப்பட்டதால், இப் பாறைக்கு சார்னோகைட் என்று பெயரிடப்பட்டது. சென்னை பல்லாவரம் பகுதிகளில் காணப்படுவதும் இவ்வகைப் பாறைகளே.

சில  தாவரவியலாளர்கள் 12 ஆண்டுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ காரணம் கொண்டு, நீலகிரி என்று அழைக்கப் படுவதாகக் கூறுவதும் உண்டு.

________________________________


#Geologist Sabarathinam

வரலாற்று பேராசான் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

வரலாற்று பேராசான் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்


 - மா.மாரிராஜன்


ஜனவரி - 2 தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின்  நினைவு தினம். கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 68 ஆவது வயதில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். ஆரம்பக்காலத்தில் தமிழாசிரியராகத் தன் பணியைத் துவங்கினார். அதன் பிறகு மிகச்சிறந்த கல்வெட்டு அறிஞராக அவதாரமெடுத்தார்.

அது ஒரு காலம். தல புராணங்களும், செவிவழிச் செய்திகளுமே வரலாறாக வலம் வந்த காலம். இருக்கின்ற ஒரு சில ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில்தான் இருந்தன. இந்த சூழ்நிலையில்தான் பண்டாரத்தார் நேரடியான கல்வெட்டுச் சான்றுகள் மூலம் வரலாற்றை வெளியிட்டார்.. கால்நடையாகவும், மாட்டுவண்டியிலும், பல கி.மீ. தூரம் சென்று கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை நேரடியாக ஆய்வு செய்து வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார்.

செந்தமிழ், தமிழ்ப்பொழில், போன்ற இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. இன்றைய ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி குன்றுப்பகுதியில் உள்ள இராஜேந்திரச்சோழனின் கல்வெட்டை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்பொழில் நூலில் வெளியிட்டார் (தமிழ்ப்பொழில்  இதழ் 33..பக் 131).


வெளிமாநிலங்களில் இருக்கும் கல்வெட்டையும் தனது ஆய்வுக்கு எடுத்தார்.
1930 ஆம் ஆண்டு இவரது முதல் நூலாக குலோத்துங்கச் சோழன் என்னும் நூல் வெளிவந்தது.
1940 ஆம் ஆண்டு இவர் எழுதிய பாண்டியர் வரலாறு என்னும் நூல் வெளிவந்தது.
1949 ஆம் ஆண்டு இவர் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூல் வரலாற்று உலகில் பெரும் ஆவணமாகப் பதிவானது.
இன்றளவும் இந்நூல்தான் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஆரம்பக் கல்வியாக அமைகிறது.

தமிழக வரலாற்று உலகில் தனி முத்திரை பதித்த கல்வெட்டியல் அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் நினைவுகளைப் போற்றுவோம்.


நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
தமிழ் வழி இணையக்கல்விக் கழகம் - https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0000459_முதற்_குலோத்துங்கசோழன்.pdf

Sunday, January 3, 2021

சங்கச் சுரங்கத்தில் பண்பாட்டுப் புதையல் – ஆர்.பாலகிருஷ்ணன் இஆப

 சங்கச் சுரங்கத்தில் பண்பாட்டுப் புதையல் – ஆர்.பாலகிருஷ்ணன் இஆப


— அ. குமரேசன்


திரு ஆர்.பாலகிருஷ்ணன் இஆப: ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகப்  பணியாற்றியவர். ஓய்விற்குப் பிறகு தற்போது அம்மாநிலத்தின் சிறப்புத் திட்டங்களுக்கான தலைமை ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். திராவிடவியல் அறிஞரான இவருக்கு சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வுகளுக்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவரது “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருது பெற்றது.

திராவிட மொழியியலையும் சிந்துவெளிப் புவியியலையும் பிணைத்து இவர் முன்வைத்துள்ள புதிய கருதுகோள்கள் ஒரு நூற்றாண்டுக் காலமாகத் தொடர்கின்ற “திராவிடக் கருதுகோள்” என்னும் புதிரின் மீது பாய்ச்சிய மின்னல் வெளிச்சங்கள் எனலாம். “இடப்பெயர்ச் சான்றுகளும், சங்க இலக்கியம் மீள் நினைவுகளைப் பேசுகிறது என்கிற முன்வைப்பும்” ஆகிய இவ்விரண்டும் இவர் நம் அறிவுலகுக்கு அளித்துள்ள இரு பெரும் கொடைகள். “சங்கச் சுரங்கம்” என்கிற தலைப்பில் இவர் ஆற்றிவரும் தொடர் உரைகள் ஒளிக்கீற்றுகள்.

இந்தியப் பண்பாட்டின் பன்மியத்தை “மழைக்காடு” என்று புதிய கண்ணோட்டத்தில் உருவகப்படுத்துகிற இந்த ஆய்வாளர், பண்பாட்டுத் திருவிழாவாகிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி செம்மலர் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். 
| செம்மலர், ஜனவரி – 2021 இதழுக்காக  நேர்காணல்: அ.குமரேசன் | 


பண்பாடு, பண்பாட்டுத்தளம் இவற்றை நீங்கள் என்ன பொருளில் எடுத்துக்கொள்கிறீர்கள்?
பண்பாடு மானுடவியலின் மையப்புள்ளி. மனிதர்களுக்கென்று உலகளாவிய சில பொதுவியல்புகள் உள்ளன. அதே நேரத்தில் மனித சமூகங்களுக்குள் சிறிதும் பெரிதுமான கால நில வரையறைகளுக்குள் கற்றுத்தரப்பட்ட கற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு பழக்கவழக்கங்களும் இயல்புகளும் தனித்துவமான  உணவு உடை, கலை, என்று பல்வேறு வகைகளிலும் வெளிப்படுகின்றன. ஒருவகையில் பண்பாடு ஒரு சமூகம் தனது இருப்பை வெளிப்படுத்த நிலைநிறுத்தும் குறியீடுகளின் கூட்டுவடிவம்  போலவே தோன்றுகிறது. அது இயங்கும் சூழலும் நோக்கமும் பயனுமான காரணிகளும் களங்களுமே பண்பாட்டுத்தளமாகும். “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்ற சங்க இலக்கியம் ஒரு சிறந்த புரிதல். ஒரு தொடர் இயக்கமான பண்பாடு காலம், இடம், புறச்சூழல், அகச்சூழல்களால் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது.

பண்பாடும், நாகரிகமும் மாறுபட்டவையா? பண்பாடு என்றால் குடும்ப, சமூக வாழ்க்கை முறைகள் என்றும், நாகரிகம் என்றால் அந்தந்தக் காலத்து நவீனங்களோடு கலந்த நடைமுறைகள் என்றும் பொதுவான புரிதல் இருக்கிறதல்லவா?
இரு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆனால் ஒன்றல்ல என்ற ஒரு கருத்து உண்டு. திருந்திய ஒழுக்கம் பண்பாடு, திருந்திய வாழ்க்கை நாகரிகம் என்று பாவாணர் கூறியதாக நினைவு. ஆனால் சிந்துவெளிப் பண்பாடு என்கிறபோது நான் அதை பண்பாடு/ நாகரிகம் என்ற இருநிலைகளையும் உள்ளடக்கிய சொல்லாகவே பயன்படுத்துகிறேன். அதைப் போலவே தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம் என்ற இரண்டையும் ஒரு தளத்தில் வைத்தே நான் பேசிவருகிறேன்.

கல்ச்சர், சிவிலைசேசன் என்ற இரு ஆங்கிலச் சொற்களுக்கும் இடையிலான வேறுபாட்டுக்குப் பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பண்பாடு என்று சொல்லும்போது ஒரு இனம், மொழி, நிலப்பகுதி என்ற வரையறைக்குள் நின்று பேசுவதாகவும் நாகரிகம் என்று சொல்லும்போது மேலும் உயர்ந்த, பண்பட்ட, விரிவான, தொழில்நுட்பங்கள், சட்டதிட்ட நெறிமுறைகள் கூடிய பன்முகமான ஒரு பரந்த பொருண்மையைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது. ஆனால் “பண்பாடு”- பண்பிலாமை, நாகரிகமானவர்- நாகரிகமற்றவர் என்ற ஒப்பீட்டு இருமைகளால் இச்சொற்கள் மதிப்பீடு செய்யப்படுவதையும் கருத்தில்கொண்டு இரண்டிற்கும் நான் பொதுவாகப் பண்பாடு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகிறேன்.

“நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்” என்ற நற்றிணையை (355) அடியொற்றிய ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்”  என்ற திருக்குறளும் நினைவிற்கு வந்தாலும் நான் பண்பாடு என்ற சொல்லையே விரும்பிப் பயன்படுத்துகிறேன். சங்க இலக்கியத்தில் பண்பு என்ற சொல் 45 முறை பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட பண்பின், பண்பு, பண்பே போன்ற சொல்லாக்கங்களுக்கும் பஞ்சமில்லை. எனவே பண்பாடு என்ற பதத்திற்கே எனது வாக்கு. சூழலைக் குறித்து அது தனிமனிதர் பற்றியதா, ஒரு குழுவைப்பற்றியதா, மொழி பேசுவோர் பற்றியதா அல்லது பரந்து விரிந்த நாடு அல்லது அதற்கும் பெரிதான அடையாளங்கள் பற்றியதா என்று புரிந்துகொள்வதில் அப்படி ஒன்றும் பெரிதாக சிரமம் இருப்பதாகத் தோன்றவில்லை.

சமூக வளர்ச்சியில் பண்பாட்டுத்தளம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அல்லது, சமூக வளர்ச்சி பண்பாட்டுத்தளத்தில் தாக்கம் செலுத்துகிறதா?
இந்தக் கேள்வியைச் சற்று மாற்றிக்கொண்டு சமூகப் பொருளாதாரம்- பண்பாடு என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இதை விவாதிப்பதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் மீது அம்மக்கள் வாழும் புறச்சூழல் குறிப்பாக புவிச்சூழல் செலுத்தும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒருவகையில் நிலத்தையும் காலநிலை என்ற பொழுதையும், அதாவது பெரும்பொழுதாகிய காலத்தையும் சிறுபொழுதாகிய நேரத்தையும் முதல் பொருள் என்றும், அந்த நிலத்திற்குரிய உணவு, மரம், விலங்குகள், பறவைகள், தொழில், இசைக்கருவி என்று பல்வேறு கூறுகளைக் கருப்பொருள் என்றும், ஒரு குறிப்பிட்ட மனித உணர்வை அல்லது வாழ்வியல் சூழலை உரிப்பொருளாகவும் கட்டமைக்கிற பழந்தமிழ் திணைக்கோட்பாடு உணர்த்தும் கருத்தாக்கத்தை நாம் உள்வாங்கவேண்டும். பண்பாட்டை புவிச்சூழல் தீர்மானிக்கிறது என்ற புவிநியதி வாதம், தீர்மான வாதம் என்று கூறுகிறார்கள். இதை நான் ஒரு சார்ந்தியங்கியல் என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.

ஆனால் பண்பாடு, சமூகவியல், அரசியல் பொருளாதாரம் என்ற கூட்டசைவில் எது என்ன விகிதம் என்று துல்லியமாக எடைபோடுதல் சாத்தியம் இல்லை. பண்டமாற்று முறையிலேயே புவிச்சூழலையும் மீறிய புதிய கூறுகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பரவத் தொடங்கிவிட்டன. பண்டமாற்றுதான் பண்பாட்டு மாற்றத்தின் தொடக்கப்புள்ளி. வேளாண்மை ஒரு தொழிலாக உருவெடுத்தபோது புன்செய் மேட்டுநிலம், நீர்வளம் மிக்க மருதநிலம் அவற்றின் உற்பத்தித் திறன், அவற்றின் மதிப்பு, சந்தை ஆகியவற்றால் மதிப்பிடப்பட்டபோது மலைப் பெருமிதத்தைப் பின்னுக்குத் தள்ளி, காடுகொன்று நாடாக்கப்பட்ட புதிய விளைநிலம் முன்னுக்கு வருகிறது. பிறகு தொலைதூர வணிகம் சமூகப் பண்பாட்டு முன்னுரிமைகளைத் தலைகீழாக்கிவிடுகிறது. மக்களின் உணவு மாறும்போது கடவுள்களின் படையல்களின் நிறமும் குணமும் கூட மாறிவிடுகிறது. நெல்லும் கரும்பும் பெருமிதமாகும் சூழலில் வரகு வாழ்ந்துகெட்ட பயிராகிறது. கேழ்வரகைக் கேட்பாரில்லை. திணறுகிறது தினை.

இவ்வாறு அரசியல், போர்கள், மேட்டுக்குடிகளின் ஆதிக்கம், வணிகப் பொருளியல், தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பல காரணிகளால் பண்பாடு பல்வேறு தாக்கங்களை எதிர்கொள்கிறது. மேற்கத்திய காலனியாதிக்கம் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவில் இவ்வளவு ஆங்கிலம் இருக்காது. இந்த மேற்கத்தியத் தொடர்பு பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை. இவற்றில் எவை  நேர்மறை விளைவுகள், எவை எதிர்மறை விளைவுகள் என்பது பார்வையைப் பொறுத்து. அத்தகைய மதிப்பீடுகளைத் தாண்டி தாக்கம் நிகழ்ந்தது என்பதுதான் பொது உண்மை. மொகலாய அரசுகள் இந்தியாவின் பண்பாட்டிலும் சமூகத்திலும் செலுத்திய தாக்கங்களின் தடயங்களை அப்படியெல்லாம் போகிற போக்கில் புறந்தள்ளிவிட முடியுமா? உணவுப் பழக்கங்களிலும் கட்டடக் கலையிலும் அக்காலகட்டம் ஏற்படுத்திய தாக்கங்களை மறுக்கவோ மறைக்கவோ முடியுமா?  சமூக வளர்ச்சி, பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு ஒரு தொடர் இயக்கமாக இருக்கிறதோ அதைப் போலவே பண்பாட்டு மாற்றங்களும். எந்த குறிஞ்சி நிலப்பெண் எப்போது உடன்கட்டை ஏறினாள்? அத்தகைய கருத்தாக்கம் எப்போது நுழைந்தது? எப்போது எதனால் மறைந்தது? இவை மட்டுமல்ல பொங்கல் வாழ்த்து அட்டை எப்போது தோன்றியது எப்போது குறைந்தது என்பது கூட இந்தக் கேள்வியோடு தொடர்புடையதுதான்.

ஆனால் சில பண்பாட்டு மரபுகள் நீண்ட நெடுங்காலமாக, எத்தனையோ சமூகப் பொருளாதார வளர்ச்சிகளையும் வீழ்ச்சிகளையும் கடந்து தொடர்கின்றன. தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் இடையிலான குறியீடுதான் ஜல்லிக்கட்டு போன்ற சமூகப் பண்பாட்டு நிகழ்வுகள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒருவகையில் சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பண்பாடு மற்றும் அது சாந்த பண்பாட்டு அரசியல் ஆகியவற்றிற்கு இடையில் ஊடாடும் தொடர்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

தனிமனிதர் வாழ்வு, லட்சியம், கொள்கை, அணுகுமுறை இவற்றில் பண்பாட்டுத்தளத்தின் பங்கு என்ன?
தனிமனிதர் வாழ்வு லட்சியம், கொள்கை, அணுகுமுறை ஆகியவற்றில் அவர் தன்னைச் சுற்றிக் கண்ணுறுகிற, பங்கேற்கிற பண்பாட்டுச் சூழலின் தாக்கம் இருக்கிறது என்பதில் ஐயமே இல்லை. ஆனால் அது எல்லா தனிமனிதர்களையும் ஒரே மாதிரியாக வழிநடத்துகிறதா என்ற கேள்வியும் உடன் எழுகிறது. அடிப்படையில் ஒருவரின் லட்சியம் கொள்கை அணுகுமுறையில் “சொந்த விருப்பம்” என்பதும் இருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் ஒரே நிகழ்விற்கு பல்வேறு நிலப்பகுதியினரும் மொழியினரும் வெவ்வேறு வகையில் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதில் கூட இதற்கான விடை இருக்கிறது. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதலெனில் அந்தப் பக்குவத்தைப் பண்பாட்டுச் சூழல் கற்றுத்தரும். வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் முற்பிறவியின் பாவ புண்ணியங்கள் காரணம் என்பதை மக்களின் பொதுப்புத்தி ஏற்றுக்கொண்டால் கண்முன் நடக்கும் அவலங்கள் எல்லாம் மனசை உறுத்தாது. தத்துவம் பேசிக் கடந்து செல்லும் மனநிலை தோன்றும். அதே நேரத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும் என்பது போன்ற சிந்தனைகள் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பண்பாட்டுச் சூழலில் அதன் தாக்கம் இருக்கவே செய்யும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்திருக்கும் நான் இதுபற்றி நடைமுறை வாழ்வியல் நோக்கில் யோசித்திருக்கிறேன். ரயில் பயணத்தில் முன்பதிவு செய்த இருக்கைகள் என்பதையே மதிக்காமல் உள்ளே புகுந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஒரு தவறாகவே கருதப்படாத பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் பிற பகுதிகளில் அவ்வாறு நிகழ்வதில்லை. தனிமனிதர்களின் அணுகுமுறைகளில் பண்பாட்டுச் சூழல் தாக்கம் புரிவதாகவே தோன்றும். “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்ற ஔவையாரின் பாடல் மிகவும் யோசிக்க வேண்டிய கருத்து.

பண்பாட்டு முன்மாதிரிகள் என்று எதைக் கொண்டாடுகிறோமோ, யாரைக் கொண்டாடுகிறோமோ அதன் தாக்கம் தனிமனிதர்களின் அணுகுமுறையில் இருக்கும். அரசுகளையும் ஆட்சியதிகாரங்களையும் நோக்கி வினா எழுப்பும் தொன்மரபுக்கதைகள் நிலவும் பண்பாட்டிற்கும், பெண்கள் உடன்கட்டை ஏறுவதைக் கொண்டாடும் மரபிற்கும் வேறுபாடு இருக்கவே செய்யும். மொத்தத்தில் பண்பாட்டுத்தளத்தில் முன்னுரிமையளித்து முன்னிறுத்தப்படுகிற கருத்தாக்கங்கள் தனிமனிதர்களின் மீது தாக்கம் புரிகிறது என்றே நான் நம்புகிறேன். ஆனால் அந்தத் தாக்கம் அனைவரின் மீதும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை; அங்கே சுயபுத்தி முக்கியமாகிறது.

பண்பாட்டுத்தளத்தில் அரசியலின் இடம் என்ன?
அரசியலும் பண்பாடும் ஒருவகையில் ஒன்றின் மீது பிறிதொன்று தொடர்ந்து தாக்கம் செய்கிற சகபயணிகள் தான். இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் பண்பாட்டுத் தளம் என்ற மேடையில் நின்று தான் பல அரசியல் சித்தாத்தங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இனம், மொழி, பண்பாட்டு மேன்மை போன்ற ஆயுதங்களைக் கொண்டுதான் உலகில் பல போர்கள் நடந்துள்ளன. தங்களது மொழியைப் பேசுபவர்களை “வேற்றவர்கள்”, “காட்டுமிராண்டிகள்” என்று வெறுப்பை உமிழ்வதிலிருந்து பண்பாட்டு அரசியல் தோன்றுகிறது. “நல்லது இது; கெட்டது இது” என்று ஒருசார்பாக வகுத்துக் கொடுத்த பண்பாட்டுத் தளத்தில் தனிமனிதர்களின் சுயசிந்தனைக்கு மதிப்பில்லாமல் போகிறது. அதுவே அரசியலை வழிநடத்தும் உத்தியாகும்போது அரசியல் ஆபத்து நிறைந்ததாகிறது.

அத்தகைய சூழல்களில் முள்ளை முள்ளால் எடுப்பது போல நமது பண்பாட்டு அசைவுகளின் ஊடான ஆக்கபூர்வமான முன்னுதாரணங்களை முன்னிறுத்த வேண்டும். மாறிவரும் காலச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப பண்பாட்டு முன்மாதிரிகள் மாற வேண்டும். ”சதிக்கல்கள்” இன்றைய நவீனகாலத்திற்கு வழிகாட்ட முடியாது.  இன்னொரு எடுத்துக்காட்டைச் சொல்லலாம். மகாபாரதத்தில் வரும் துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலைக் காவு வாங்கியது அந்தக் காலகட்டத்தில் நியாயப்படுத்தி ஏற்கப்பட்டிருக்கலாம்; எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் தற்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பயிற்சியாளர் விருதை துரோணர் பெயரில் வழங்குவது நிகழ்காலத்திற்கான சிறந்த முன்மாதிரி அல்ல. திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தி ஒலிம்பிக் பதக்கங்களைப் பெறுவதே நோக்கமெனில் இத்தகைய முன்மாதிரிகளைக் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதும் பண்பாட்டு அரசியல்தான். பண்பாட்டு அரசியல் நல்லதா கெட்டதா என்பதை விட அது தவிர்க்கமுடியாத நடைமுறை எதார்த்தம் என்பதே உண்மை.

இந்தியச் சூழலில் சாதியம், மதம், இனம், மொழி ஆகியவை பண்பாட்டுத்தளத்தில் எவ்வாறு வினைபுரிகின்றன?
இந்தியச் சமூகத்தில் இவை பண்பாட்டுத்தளத்தில் மிகத் தீவிரமாக, நெடுங்காலமாக வினை புரிந்து வந்துள்ளன. இனக்குழுச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், தொழிற்புரட்சி சமுதாயம் என்று எந்தச் சூழலில் நின்று பார்த்தாலும் இத்தகைய காரணிகள் தொடர்ந்து இயங்குவதை இலக்கியத் தரவுகள், வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு உணர முடியும். இதற்குத் தற்கால மக்களாட்சி சூழல் கூட விதிவிலக்கல்ல. இந்தியத் துணைக்கண்டப் பண்பாடு பன்முகத் தன்மைகளால் கட்டமைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பழங்குடிகள், அவர்களின் மொழிகள், தனித்துவமான உணவு, உடை பழக்கவழக்கங்கள் என்று அது ஒரு மழைக்காடாகவே தோன்றுகிறது.

பல நாடுகளில் வெளிப் பண்பாடுகளின் குடியேற்றங்கள் பூர்வகுடிகளின் அடையாள அழிப்பில் முடிந்தன. அது கொடுமையான ஒரு ஆக்கிரமிப்பு மனப்பான்மையால் நேர்ந்த மாபெரும் தவறாகும். ஆனால் இந்தியா அப்படிப்பட்ட ஒரு நாடு அல்ல. மொழி, மதம், சாதியம் சார்ந்த ஆணவங்களும் அதிகாரம் செலுத்தும் முனைப்பும் இந்தியத் துணைக்கண்ட அரசியலின் போக்குகளைக் காலந்தோறும் பாதித்தே வந்துள்ளன. இது ஒரு தொடர் நிகழ்வு போலவே தோன்றுகிறது. இவற்றையெல்லாம் மீறி இந்தியாவின் பன்மியம் ஒரு மழைக்காட்டின் வீரியத்தோடு தொடர்ந்து இயங்குவதற்குக் காரணம், பன்முகத்தன்மை என்பது இந்தியா என்ற மழைக்காட்டின் விழுதுகள் அல்ல; கிளைகள் அல்ல; வேர்கள் என்பதால்தான்.

முன்னேறிய பண்பாட்டிற்கான அடையாளமாக எதையெல்லாம் சொல்லலாம்?
முன்னேறிய பண்பாட்டிற்கான எனது அளவுகோல்களாகக் கல்விப் பரவலாக்கம், பாலின சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றை முன்வைப்பேன். அவற்றோடு விநியோக அறத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பேன். இது உற்பத்தி பற்றியதோ, கிட்டங்கிகள் பற்றியதோ அல்ல – வினியோக அறம் பற்றியது. வெறுப்புணர்வு இல்லாத பொறுப்புணர்வால் கட்டமைக்கப்பட்ட இணக்கமான வாழ்வியல்தான் முன்னேற்றத்தின் சிறந்த அளவீடாகும். மக்கள்தொகையில் மிகக் குறைவான சிலர் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெறுவதால் எந்த நாடும் பெருமிதம் கொள்ள முடியாது. சராசரி மனிதர்களின் வாழ்வியல்தான் ஒரு நாட்டின் உண்மை முகம்.

இந்தியப் பண்பாட்டை மழைக்காடு என்றீர்கள். எந்த அடிப்படையில் அவ்வாறு அடையாளப்படுத்துகிறீர்கள்?
மழைக்காட்டில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. ஆனால் அவை ஒன்றை ஒன்று அழித்தொழிப்பது இல்லை. அவை சேர்ந்தே சுவாசிக்கின்றன. ஒரே தரையில் வேரூன்றி வெவ்வேறு உயரங்களில் வெவ்வேறு அடுக்குகளில் உயிர்ப்புடன் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உருக்குப் பானை – மெல்ட்டிங் பாட், காய்-கனித் துண்டுகளின் கிண்ணம் – சாலட் பௌல் என்று உருவகப்படுத்துவார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெருமிதத்தைக் கொண்டாட “உருக்குப் பானை” உருவகம் போதுமானதல்ல; உருக்குப் பானையில் பல்வேறு தனித்துவங்கள் உருக்கி உருக்குலைக்கப்பட்டுதான் புதிய கலவை உருவாகிறது. உருக்குப்பானை தனித்துவங்களின் சிதை. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? இதைப் போலவே “சாலட் கிண்ணம்” உருவகத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. சாலட் கிண்ணத்தில் பல வண்ணங்களில் காய்கறி, கனி வகைகள் சம இடம் பெற்றாலும் எல்லாக் காய்கறிகளும் கனிகளும் கிண்ணத்தை அடைவதில்லை. சாலட் கிண்ணம் இயற்கையானது அல்ல; செயற்கையானது; தேர்ந்தெடுக்கப்படுவது. ஆகவே நான் இந்தியப் பண்பாடு தனித்துவங்கள் உருக்குலைக்கப்படாத, இயற்கையான ஒரு “மழைக்காடு” என்ற உருவகத்தை முன்வைக்கிறேன்.

தமிழின் சங்க இலக்கியத்தை வாழ்வியல், அழகியல், உணர்ச்சி ஆகியவற்றைத் தாண்டி ஒரு புதிய இடத்தில் வைக்கிறீர்களா? அதன் அறிவியல்பூர்வ கண்ணோட்டம் குறித்து…
சங்க இலக்கியத்தை மனித சமூகத்தின் ஒரு களஞ்சியமாக, குறிப்பாக தொல்தமிழ் முன்னோடிகளின் தொடர் பட்டறிவின் ஊடாக விளைந்த பட்டறிவின் ஆவணப்பதிவாகவே நினைக்கிறேன். அதில் சமகாலத்திற்கான ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அதனால்தான் சங்க இலக்கியத்தைச் சமகாலத்தின் தேவைகள் சார்ந்து மீள்வாசிப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மிகச்சிறந்த வாழ்வியல், அழகியல் இலக்கியம் சங்க இலக்கியம். ஆனால் அதன் இலக்கிய நயத்தின் பெருமைகளைக் கொண்டாடுவது மட்டும் போதுமானதல்ல. சங்க இலக்கியம் பல முக்கியமான புரிதல்களை நமக்குத் தருகிறது, நமது சமகாலப் பிரச்சனைகள் பலவற்றைக் கையாளுவதற்கு, சங்க இலக்கியத்தின் கூட்டு அனுபவம் உதவும் என்று நான் நம்புகிறேன். அதனால் அந்தக் கோணத்தில் அந்த எதிர்பார்ப்புடன் சங்க இலக்கியத்தை நான் மீள்வாசிக்கிறேன். எனது புரிதலைப் பகிர்ந்துகொள்கிறேன். அறிவியல் கண்ணோட்டத்தோடு புதிய அறிவுப்புலங்கள் சார்ந்த ஆய்வுமுறைகள் கலைச்சொற்கள் விளக்கும் முறை ஆகியவற்றைப் பயன்படுத்தி நமது உரையாடல்களைக் கட்டமைத்தால்தான் நாம் என்ன பேசுகிறோம் என்பது குறித்த நம்பகத்தன்மை ஏற்படும்.

உலகக் களத்திலும், உள்நாட்டிலும் பண்பாட்டுத்தளத்தின் இன்றைய நிலை, போக்கு எவ்வாறு இருப்பதாகக் கருதுகிறீர்கள்? நம்பிக்கை அளிக்கிறதா அல்லது மருட்சியை ஏற்படுத்துகிறதா?
இரண்டும் கலந்த ஒரு கலவையான மனநிலைதான் தோன்றுகிறது. உலகம்/ இந்தியா/தமிழ்நாடு என்ற எந்த வரையறைக்குள் இருந்து யோசித்தாலும் மருட்சி அடையவும், அதே நேரத்தில் நம்பிக்கை இழந்துவிடாமல் எதிர்காலத்தை அணுகவும் காரணங்களும் அறிகுறிகளும் இருக்கவே செய்கின்றன. கடந்தகாலங்கள் பற்றிய தகவல்கள், புரிதல்கள் இல்லாமல் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பவர்களுக்குப் பயமாக இருக்கும். ஆனால் கடந்த காலங்களில் உலகமும் இந்தியாவும் தமிழ் மண்ணும் கடந்து வந்த பாதைகளைக் கவனித்தவர்களுக்கு  புதிய அபாயங்களாகத் தோன்றும் பலவும் நாம் பழகிய பாதைதான் என்பது புரியும். கடந்த காலங்கள்தான் மீண்டும் கடந்து செல்கின்றன. நான் எப்போதும் நம்பிக்கை இழப்பதில்லை. இதிலும் அப்படித்தான். இன்னும் சொல்லப்போனால் புதிய தொழில்நுட்பங்கள் புதிய சாத்தியங்களைத் தருகின்றன. “சென்று சேர்தல்” என்ற பெரும் சாத்தியப் பெருவெளியில் பேச வேண்டிய செய்திகளைப் பேசவும் வாய்ப்பிருக்கிறதே.

சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்று சொல்வீர்கள். சிந்து சமவெளி நாகரிகத்தையும் வைகைக்கரை நாகரிகத்தையும் இணைக்கிற உங்கள் ஆய்வு குறித்து செம்மலர் வாசகர்களுக்கு…
சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே  என்பது எதுகை மோனை முழக்கம் அல்ல. எது எது என்பது குறித்த திறந்தவெளித் தேடலின் விழைவான புரிதல் அது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டங்கள் குறித்த மீள்கட்டமைப்பில் இரண்டு புதிர்கள். சிந்துவெளி பண்பாட்டின் மொழி எது, அம்மக்கள் யார் என்பது ஒரு புதிர்.  இன்னொரு புதிர் தமிழ்த் தொன்மங்களின் தோற்றம் பற்றியது. இந்த இரு புதிர்களும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.  ஒருவகையில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான். சங்க இலக்கியம் அவ்விலக்கியம் படைக்கப்பட்ட காலத்து நிகழ்வுகளின் பதிவுகள் மட்டும் அல்ல. அதற்கு முந்தைய மீள் நினைவுகளை உள்ளடக்கிய பல் அடுக்கு இலக்கியம் என்ற புரிதலோடு சங்க இலக்கியத்தை அணுகினால் உண்மை புரியும்.  சிந்துவெளி அகழ்வாய்வுத் தடயங்கள் வன்பொருள் என்றால் அதன் மென்பொருள் சங்க இலக்கியம்தான். வேறெதுவும் இல்லை. இது வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை. பல்துறை ஆய்வுத் தரவுகள் இந்தக் கருத்தாக்கத்தை மேலும் மேலும் உறுதி செய்கின்றன. இந்தத் தொடர்ச்சியைத் தமிழ்நாட்டு அகழ்வாய்வுகளும், மரபணு சார்ந்த புதிய ஆய்வுகளும் மேலும் தெளிவாக்குகின்றன. பயணங்களால் பட்டை தீட்டப்பட்ட மக்களின் அனுபவக் களஞ்சியம் சங்க இலக்கியம். அதைக் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் பற்றிய புரிதல்கள் புதைந்திருக்கும் புதையலாகவே நான் பார்க்கிறேன். சங்கச் சுரங்கத்தைத் தொடர்ந்து தோண்ட வேண்டும். கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்ற நூற்றுக்கணக்கான இடங்களைச் சளைக்காமல் தோண்ட வேண்டும்.
தோண்டுவோம்.