Tuesday, February 23, 2021

நான் அனுப்புவது ... உள்ளம்

போதுமே போதையே! 

--- சொல்லாக்கியன்


சந்தனக் கட்டிலா பட்டின்  மெத்தையா?
நின்றொருக் கட்டில் பட்டாலே போதுமே!

கோரைப் பாயா இலவம் அணையா?
முன்னம் தானை முள்ளும் போதையே!

கம்பளிப் போர்வையா தோகைத் துகிலா?
சிலிர்மயிர்க் கால்கள் நீவ்விரல் தனலே!

வானின் இரவா நிலவின் பிறையா?
கூந்தல் கருமை நுதலே நிறையே!

சிமிட்டும் மீன்களா சீண்டிடும் தென்றலா?
சிரிக்கும் கண்களும் சுவாசமும் கன்னலே!

பவழச் சிப்பியா பவள முத்தமா?
குவளை இதழிடை மொத்த சொத்துமே!

பலவின் சுளையா குளவியின் அலைவா?
அமிழ்தின் சுவையே அதரமே நாவே!

கொய்யாக் கனியா கொஞ்சும் கிளியா?
நெய்யாய்ப் பொலியும் கெஞ்சும் கன்னமே!

குடவறைச் சிற்பமா கருவறைக் கற்பமா?
மௌனியாய்த் துடிக்கும் மோகனச் செவ்வியே!

மாவின் கனியா திராட்சைப் பழமா?
இரண்டும் இணைந்த அழகின் அணியே!

இனியும் சொல்லல் கவிதைக்கு அழகா?
தனியாய் அள்ளல் கொள்ளல் இனிதே!

---

அமைதிப்பெண் 

அடியும் முடியும் அறியா பயணமே
இடையில் நெஞ்சில் மூழ்கும் சலனமே.

நித்தியப் பிரணவமே சத்தியப் பிரமாணமே
நித்தில முகிழ்மனமே கத்தூரி புகழ்மணமே

சிந்தா மணியே நந்தா ஒளியே
தண்மைக் கதிரே தாரகைக் குதிரே

ஆன்மமே அண்டமாய் அகலும் அற்புதமே
அனைத்தும் தானாய் உணரும் கற்சிலையே

அன்பும் காதலும் அருளும் பொழிவதே
என்பும் ஆனந்த ஊற்றாய் வழிவதே

அசைவிலா இசையே நசையிலா பசையே
இமையிலா கண்ணே அமைதிப் பெண்ணே!

---

ஐந்திரம் 

நின்
விழி நோக்கு 
குறிஞ்சி இலக்கியம்

மென்
இமை சிமிழ்ப்பு
முல்லை இசைப்பண்

புல்
கண் நகைப்பு
மருத ஓவியம்

கொல்
கடைக் கூர்ப்பு
பாலைக் கூத்து

நில்
நேர்ப் பார்வை
நெய்தல் சிற்பம்

உன்
பெயர் என்ன தமிழியோ?
நிலை
உயிர் அன்ன தமிழமோ? 

---

மடல் 

தாழம் மடலதை விரித்து
நீவிடப் பன்னீர் தெளித்து
பீலியால் தடவி இறுத்து 

செஞ்சாதி மொக்கை எடுத்து
அகிற்கோல் பட்டுவளை தொடுத்து
சந்தனக் கத்தூரி தோய்த்து

தமிழக் காதல் வரையவா
அமிழ்தும் தேனும் உறையவா
இடமும் பொழுதும் மறையவா

உடலடங்க உயிர்துலங்க 
ஒளிவிளங்க களிசுரக்க 
வெளிமுயங்க தூங்கலாமே!

---




ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து 

-- புலவர் ஆ.காளியப்பன்  


உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்துத் தோன்றியது. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. 

(ஃ) – அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம்.  இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும்.  தமிழ் எழுத்துக்களை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.

ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது. 
 
“ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராய்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துக்களை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம். 
 


சைகையில்  கொஞ்சம் என்பதை   காட்டும்போது மூன்று விரல்கள் (பெருவிரல்,சுட்டுவிரல் நடுவிரல்) முன்னால் நீட்டி இருப்பதைப்போல ஃ என்னும் எழுத்தின் வடிவம் இருக்கும்.இதன்பொருள் கொஞ்சம் குறைவாக, நுணுக்கமாக என்பதையும் இந்தச்சைகையால் தான் காட்டுவோம். அந்த மூன்றுவிரல்கள் வடிவிலேயே ஆய்த எழுத்து உள்ளது.   
ஃ என்னும் எழுத்தின் தமிழ் சைகை - 

இரண்டு புள்ளிகள் கண்ணாகவும் மூன்றாவது புள்ளி நெற்றிக் கண்ணாகவும் உள்ளதாக  ஆசிவக  மதத்தார் கூறுவர்.  புள்ளி அண்டத்தைக் குறிக்கிறது என்றும் முட்டையைக் குறிக்கிறது என்றும் கூறுவர். எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் என எழுத்துகளுக்கெல்லாம் அகரத்தை முதலாகக் கூறுவர். அந்த அகரத்திற்கும் முதலாக இருப்பதே ஆய்தப்புள்ளியே. அதனால் முதலில் எழுதிப்பழகும் குழந்தைகளை முட்டை முட்டையாக எழுதச் சொல்லுகின்றனர். எல்லாக் குழந்தைகளும் இயல்பாக முதலில் முட்டையையே வரைகின்றன. எனவே ஆதியாய் உள்ளதும் ஆதியில் உள்ளதும் ஆய்த எழுத்தே. மூன்று புள்ளிகளையும் சூலத்தின் மூன்று முனைகளாகக்கருதலாம். இதுவே நாளடைவில் வேலாகவும் உருமாறியதாகக் கொள்ளலாம். சுழியத்தை சுழுமுனைக்கும் ஒப்பிட்டுக் கூறுவர்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி
ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே என்று ஆய்த எழுத்தின் பெயர்கள் உள்ளதை அறியலாம்.

ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.  அஃகான் என்றே தொல்காப்பியரும் கூறுவதோடு, எல்லா எழுத்துகளையும் விட ஆய்த எழுத்துப்பற்றியே அதிக நூற்பாக்களை எழுதி உள்ளார். 

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது. 




தமிழ் நெடுங்கணக்கு வரிசையில்  அ,ஆ----- ஔ என்று உயிர் எழுத்துகளைப் படுக்கை வரிசையாக வைத்து ஔ வின்முடிவில் ஃ என்ற ஆய்த எழுத்தை வைத்தனர். அதை அஃகன்னா என்று படிப்பர் உயிர் எழுத்துகளை வரிசையாக வைத்தவர். க் ,ங்,-------ன் மெய் எழுத்துகளை நெடுங்கிடையாக வைத்தனர். உயிர் எழுத்துகளை படுக்கை  வரிசையாக வைத்து ஆய்த எழுத்தை  நெடுங்கிடையாக உள்ள மெய் எழுத்துகளுக்கு இடையில் வைத்தனர். எனவே ஆய்த எழுத்தை படுக்கை வரிசையாக உள்ள உயிரெழுத்தாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நெடுங்கிடையாக உள்ள மெய்யெழுத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.   இதன்பொருள் ஆய்த எழுத்து உயிர் எழுத்தும் அன்று மெய்யெழுத்தும் அன்று எனினும் அவற்றின் வேறுமாகாது. என்பதை உணர்த்த அவற்றிற்குத் தனியாக வைத்துத் தனிநிலை என்ற பெயரும் வைத்தனர். அ வையும் க் ஐயும் சேர்த்து ஒலிப்பதுபோல் அஃ க்கன்னா என்ற ஒலிப்பையும் தந்தனர். 

தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே
 அளபெடை அல்லாக் காலை யான.

‘உயிருறுப் புயிர்மெய் தனிநிலை எனாஅக்
       --  ----- ----------- -------                                                           
அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென
     வசையறு புலவர் வகுத்துரைத் தனரே.’

     தனிநிலை ஒற்றிவை தாமலகு பெறூஉம்
     அளபெடை ஆகிய காலை யான.

என்பர்  காக்கைபாடினியாரும். 
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து , முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. 

ஆய்த எழுத்தைப் பெரும்பாலும் மெய்யெழுத்தாகவே எண்ணப்படுதலால் மெய்யெழுத்தின் பெயராகிய ஒற்று புள்ளி என்ற பெயர்களாலும் ஆய்தமும் அழைக்கப்படும். ஆய்தம் ஒற்று எழுத்தாகவே கருதப்படுவதை கீழ்வரும் நூற்பாக்களால் அறியலாம்.

'உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென்
றாயிரண் டென்ப அளபெடை தானே.’

ங ஞ ண ந ம ன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே.' (நன்னூல்92) நன்னூலும்

‘ஙஞண நமன வயலள ஆய்தம்
ஈரிடத் தளபெழும் ஒரோவழி யான.’என்னும்யாப்பருங்கலமும்  ஆய்த எழுத்தை ஒற்று எனக்குறித்ததை அறியலாம்.

'ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
வேறல கெய்தும் வியின வாகும் என்கிறார் காக்கைப்பாடினியார். 

‘ஆய்தம் ஒற்றெனப் பெற்றசை யாக்குமென்
றோதி னாருள ராகவும் ஒண்டமிழ் 
நாத ராயவர் நாநலி போசையிற்
கேது வென்றெடுத் தோதினர் என்பவே.’ என்ற பாடலும் இதே கருத்தை உணர்த்துகிறது. 

ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. 




போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். 

உணவு சமைத்தலுக்கு முக்கிய கருவியாகிய அடுப்புக்கல் முக்கூட்டுப் போல் உள்ள அந்த வடிவில் இருப்பதாலும் ஆய்த எழுத்து என்றனர். வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு. ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன (சங்கநூல் சொல்லடைவு 1967).   சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது பொருந்தாது.

வரிவடிவையும் ஒலிவடிவையும் குறிக்க ஆய்த எழுத்து அரிதாகத் தோன்றும் ஒலிக்குறிப்பை எழுத்தால் எழுதிக்காட்ட இயலாது.  அந்தமாதிரி இடங்களில் ஆய்தம்  எழுத்தைப் போட்டு எழுதுவோம்.  கன்னங்கரேல் என்பதை கஃறு  என ஆய்த எழுத்தைப் போட்டு எழுதிக்காட்டுவர்.  இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃப், புரூஃப் என்றெல்லாம் எழுதிவருகிறோம்.

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும் (தொல் எழுத் 39) 

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா                                                   
ஆய்தம் அஃகாக் காலை யான (தொல் எழுத். 40)

இதன்பொருள்,  
இஃது, அவ்வொருமொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம் உணர்த்துகிறது.

ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும்,   ஓசையின் கண்ணும்,   சிறுபான்மையாய்த் தோன்றும்  குறிப்பு மொழிகளெல்லாம்  ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டும் எழுத்துப்போல நடவா. (அஃது எக்காலத்துமோவெனின், அன்று)   அவ்வாய்தம் தன் அரைமாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ்வுருவம் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு)   

எ - டு: `கஃறென்றது' என்பது உருவு, `சுஃறென்றது' என்பது இசை.

சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்

இஃது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்-சிலவற்றைச் சார்ந்துவரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பின் பிறப்போடு சிவணி ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்- தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப்பிடத்தே பிறத்தலொடு பொருந்தி அவ்விடத்தே தமக்குரிய இயல்பில் நடக்கும்.

'ஒத்தகாட்சி' என்றதனான், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலை வளியாற் பிறத்தலின், உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்குமென்பது கொள்க. `தம்மியல்பியலும்' என்றதனான், அளபெடையும் உயிர்மெய்யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க. 

வடமொழியில் நுட்பமான ஒலி ஹ என்று கூறப்படுகிறது. அதைக் காட்டிலும் மிக நுட்பமான ஒலியைத் தமிழில் தரவல்லது ஆய்தம் என்று  டாக்டர் மு.வரதராசனார்   குறிப்பிடுகிறார். (மொழி நூல், ப. 55). 

தொல்காப்பியர் ஆய்தத்தைத் தனிமொழி, புணர்மொழி என்ற இருவகை மொழிகளில் வைத்து விளக்குகிறார். (தனிமொழி - ஒருசொல்; புணர்மொழி - இருசொல்.) 

தனிமொழி ஆய்தம்: 
ஆய்தம் ஒரு தனிக்குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் நடுவே வரும். (எ.டு) எஃகு, கஃசு, பஃது, அஃகு. 
(எஃகு - ஒரு வகை உலோகம் ; கஃசு - கால் பலம் கொண்ட எடையளவு ; பஃது - பத்து, அஃகு - சுருங்கு) 

இச்சொற்களில் தனிக்குறிலின் முன்னர் வரும் ஆய்தம், தனது நுண்ணிய ஒலியால் தன்னை அடுத்து வரும் வன்மையான ஓசையுடைய வல்லின எழுத்துகளை உரசொலிகளாக (Fricatives) மாற்றி விடுகின்றது என்று மொழிநூலார் கூறுகின்றனர். 

உரசொலி என்றால் என்ன என்பதைக் காண்போம்; 
கீழ்க்காணும் எடுத்துக் காட்டுகளில் ககரம் எவ்வாறு ஒலிக்கிறது எனப் பாருங்கள்.
கடல் ---Kஒலி,  தங்கம் ---g, அகம் ---h

இம்மூன்றில் இரு உயிர் ஒலிகளுக்கு நடுவே (அ+க்+அ+ம்) வரும் ககரம் நுண்மையாகி h ஒலியைப் பெறுகிறது. இதுவே உரசொலி எனப்படும். ஆய்தமும் இவ்வாறே தன்னை அடுத்து வரும் வல்லின மெய்யின் வன்மையை மாற்றி மென்மையாக்கி (உரசொலியாக்கி) விடுகிறது. ஆய்தம் இடம்பெறும் சொற்களை உச்சரித்துப் பார்த்து இந்த உண்மையை நீங்களே உணரலாம். 

புணர்மொழி ஆய்தம்:
தொல்காப்பியர் புணர்மொழி ஆய்தம் பற்றி இரு விதிகளைத் தந்துள்ளார்.
வகர மெய்யில் முடியும் அவ், இவ், உவ் என்ற மூன்று சுட்டுச் சொற்களின் முன்னர் வல்லினம் வரும் பொழுது, வகரமெய் ஆய்தமாகத் திரியும். (தொல். எழுத்து. 379) 
(எ.டு) அவ் + கடிய = அஃகடிய 

1.  தனிக்குறிலை அடுத்து ல், ள் என்று முடியும் சொற்களுக்கு முன்னர் வல்லின மெய்களை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால், ல் என்பது ற் என்றும், ள் என்பது ட் என்றும் திரியும். இவ்வாறு திரிவதோடன்றி, ல், ள் ஆகிய இரண்டும் ஆய்தமாகவும் திரியும். (தொல். எழுத்து. 369, 399) புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது)
2.  மொழியிடை ஆய்தம் - எஃகு, கஃசு (தொடி எடையில் நான்கில் ஒருபங்கு - நிறுத்தலளவைப் பெயர்)
3.  புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), மஃடீது (மண்+தீது)
4.  உருநோக்கு ஆய்தம் - மண் கஃறென்றது (மண் கல் போல் கெட்டியாயிற்று)
5.  இசைநாக்கு ஆய்தம் - அருவி கஃறென்றது (அருவி 'கல்' என ஒலித்தது)

அஃகல் - இது முற்றாய்தம் மேலும் தொல்காப்பியர் காலத் தமிழில், குறில் எழுத்தை அடுத்துக் கான் என்னும் எழுத்துச் சாரியை வரும்போது இடையே ஆய்தம் தோன்றி வழங்கியுள்ளது. இவ்வழக்கைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். 
ம + கான் = மஃகான். (தொல். எழுத்து. 28) 

ஆய்த எழுத்தை முற்றாய்தம்.ஆய்தக்குறுக்கம் என இருவகையாகக் கூறுவர்                                                                       
முற்றாய்தம்:
எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். 

ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது. இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது.                           
(எஃகு = வேல், கஃசு = தொடி, கஃசு என்பன நிறுத்தலளவைக் குறியீடுகள்,  கஃடு = கள், பஃது = பத்து,  பஃறி = கட்டுமரம்) வல்லினவகையா வரும் ஆய்தம் ஆறு. 

உயிரோடு புணரும்போது ஆய்த எழுத்து தோன்றுதல் உண்டு.  அவ்+கடிய= அஃகடிய. வ் ஆய்தமாறியது திரிதல் விகாரம்அ+கான்=அஃகான் ஆய்த எழுத்துத்தோன்றியது விரித்தல் விகாரம் ஆக முற்றாய்தம் எட்டு.

ஆய்தக்குறுக்கம்:
இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது. கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். 

கல்+தீது, முள்+தீது என்று நிலைமொழி ஈற்றில் லகர,ளகரங்கள் நிற்க வருமொழி முதலில் தகரம்(த்) வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள லகர,ளகரங்கள் ஆய்த(ஃ) எழுத்தாக மாறும்.   வருமொழியில் லகரத்தின் முன்வந்த தகரம் றகரமாகவும் ளகரத்தின் முன்வந்த தகரம் டகரமாகவும் மாறும்.  இவ்வாறு புணர்ச்சியால் வந்த ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். இதற்கு ஆய்தக்குறுக்கம் என்றுபெயர்.  ல ள ஈற்றுஇயைபின் ஆம் ஆய்தம் அஃகும் (நன்னூல்எழுத்97). 

ல ள ஈற்றியைபினாம் ஆய்தம் எஃகும் (நன்னூல்எழுத்97)

குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம்                                   
ஆகவும் பெறூஉ மல்வழி யானே (நன்னூல்எழுத்228)


திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்:
திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. 
இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை.   எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. 

எனவே அதனைத் தனியே குறிப்பிட்டு தெய்வப்புலவர் திருவள்ளுவர் எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.   இதை உணர்த்த வள்ளுவர் திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு  இரண்டு முறைகளிலும் திருக்குறளைப் படைத்துள்ளார் என்பதை எண்ணி பெருமகிழ்வு கொள்ளலாம்.

இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை.  எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. 
ஆனால் வள்ளுவர் நமக்கு ஆய்த எழுத்தின் இயல்பைத் தம் குறள்மூலம் உணர்த்துகிறார். 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் 
உயிர்க்கிறுதி ஆகி விடும் (476)

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை (1014)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம்.


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி (226)

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
யாண்டும் அஃதொப்ப தில் (363)                                                       

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) 
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுக்கொள்கிறோம்.


இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர். 

மாற்றுக் கருத்து முனைவர் தமிழப்பன் எழுதிய "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்" என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார்.  


ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார். 

எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம். 

எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது.

ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. 

ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்று கொள்வதும் தவறாகாது,  அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் ஆய்தம் மூன்றுபுள்ளியும் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றும் கொள்ளலாம்.    குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்பதும் இங்கு சுட்டத்தக்கது.  



புலவர் ஆ.காளியப்பன்  
தலைவர்,  தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 
amuthankaliappan@gmail.com; 9788552993 
www.tholkappiyam.org 


Sunday, February 21, 2021

தாய்மொழி என்ற தாய்ப்பால்

 தாய்மொழி என்ற தாய்ப்பால்


--ஆர். பாலகிருஷ்ணன். இ. ஆ. ப. 



"ஆட்சி மொழி"

அது
அரண்மனையின் மொழி.
ஆட்டிப் படைக்கும்
ஆதாயம் கொடுக்கும்.
தூக்கி விடும்.
சில நேரம்
தொலைந்தும் விடும்.
பாரசீகம் எங்கே?
---
"ஆலய மொழி"

பூசாரிகள்
சாமியிடம்
மறைவாகப் பேசும்
மறைமொழி.
தைரியம் கொடுக்கும்.
தட்சணை கேட்கும்.
"எந்த மாவட்டத்தில்
எல்லோரும் பேசினார்கள்?"
என்றால்
"சாமியே பேசினார்" என்று
சரிக்கட்டும்..
---
"வணிக மொழி"

ஏற்றுமதி இறக்குமதியைப்
பொறுத்தது
ஏற்ற இறக்கம்.
எடை போடும்.
அளந்து பேசும்.
மகசூலைப் பொறுத்தது
மவுசு.
விலை போனால் வெளிச்சம்.
உண்மையில்
வியாபாரிகள் தான்
பன்மொழியாளர்கள்.
பற்று வரவைப் பொறுத்தது
பற்று.
சிந்துவெளி மொழி எது?
---
"தாய் மொழி"

தாய் மொழி
என்பது
உண்மையில்
ஒரு
தனிமொழி அல்ல.
தாய்ப்பால் என்பது
தனியான
பால் வகையா?
ஆவின் கன்றுக்கு
ஆவின் பாலென்ன
'ஆவின்பாலா'?
அதன்
அன்னையின் பால்...
தாய் மொழி
என்பது
தாய்ப்பால் போலவே
குருதியின் கொடை.
அது நம்
குரல்வளை.
காதலர் தினம்
பார்த்தா
காதல் வரும்?
ஆனால்
தாய்மொழியே
ஆட்சி மொழியாகவும்
ஆலய மொழியாகவும்
வணிக மொழியாகவும்
வளர்ச்சி பெறும்போது தான்
நிறைவு வரும்!




அழகு தமிழே வாழியவே!

நற்றமிழ் நானிலத்தே
சுற்றமும் பெருக்குமே
அற்றமும் அழிக்குமே
உற்றமும் நீயே அருந்தமிழே

பெற்றவளே நீயே
பெருங்குற்றமும் நீக்குமே
கற்றதனால் ஆயபயன்
உற்றதனால் தமிழும்
குன்றாது நிறையுமே

பைந்தமிழ் காக்கும்
பாரதத்திலே அன்னையே
தீஞ்சுவை நீயே 
திகழ்பரதக்கண்டத்திலே

உண்மை வார்த்தையில்
உள்ளொன்றும் புறமொன்றும்
வேறில்லை தூய்மையே
தாய்மையே தமிழே
தூய தமிழ் ஒன்றே
பிறமொழி கலப்புமில்லை

பெருந்தவமே பெருமையே
அருந்தவமே தமிழே 
நீ வாழியவே
போற்றுகிறேன் வணங்குகிறேன்

புலம்பெயரா புலமையே
நீ தருவாய் அன்னையே 
தமிழே தாயே
அருகு போல் நீ வளர்ந்து
அழகு தமிழே வாழியவே!        

தாய் மொழி நாள் வாழ்த்துகள்!

--- பூங்கோதை கனகராஜன்.

Saturday, February 20, 2021

"கரிகாலக் கண்ணன்"

"கரிகாலக் கண்ணன்"

-- மா.மாரிராஜன் 


யார் இவர்?
ஆதித்தக் கரிகாலனின் மகன்.

என்னது?
ஆதித்தக் கரிகாலனுக்கு மகனா..?
அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா..?

பலருக்கும் இச் செய்தி அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது..
காரணம்...
பொன்னியின் செல்வன் தாக்கம் அப்படி..
பொன்னியின் செல்வனைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, வரலாற்றுத் தரவுகளை மட்டும் பார்ப்போம்.
அவசியம் நந்தினியையும்,  ஆதித்தக்கரிகாலனின் ஒருதலைக் காதலையும் ஒதுக்கிவிட்டு, நிஜ வரலாற்றுத் தரவுகளை அறிவோம்.

ஆதித்தக் கரிகாலன்... 
சுந்தரச் சோழனின் மூத்த மகன். இராஜராஜசோழனின் உடன் பிறந்த சகோதரர்.
தனது தந்தை சுந்தரச் சோழனின் காலத்திலேயே இளவரசராகப்  பரகேசரி பட்டம் பெற்று, 
பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்ற விருதுப்  பெயருடன் இணையரசராக இருந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் தனக்கான ஆட்சியாண்டுடன் சோழ தேசத்தின் இணையரசராக இருந்துள்ளார்.
இவரது ஆட்சிக்காலம் கி.பி 966 - 971.

இவர் திருமணம் ஆனவரா?
மரபுப் படியும், நியதிப்படியும், கிடைத்திருக்கும் தரவுகளைக் கொண்டும் இவர் திருமணம் ஆனவர்தான்.
அரச பதவியேற்பு  மரபுப்படி; ஒருவர் அரசனாகவோ அல்லது இணையரசனாகவோ பதவி ஏற்கவேண்டுமெனில் அவர் நிச்சயமாய் திருமணம் செய்திருக்க வேண்டும். 
அதாவது தனது மனைவியுடனேயே பதவி ஏற்பு சம்பிரதாயங்கள் நடைபெறும். ஆகவே, இணையரசனாய் இருந்த ஆதித்த கரிகாலன்  திருமணம் செய்தவராக இருக்க வேண்டும்.
ஆதித்த கரிகாலன் இறக்கும் போது அவருக்கு தோராயமாக வயது 27க்கு மேல் இருக்க வேண்டும். அவரது தம்பி இராஜராஜருக்கே திருமணம் ஆகியிருப்பதால், ஆதித்தருக்குத் திருமணம் ஆகியிருக்க வேண்டும்.

கிடைத்திருக்கும் தரவுகள்:
---
---

---





திருவண்ணாமலை -அண்ணாமலையார் கோவில் கருவறை தெற்குச்சுவற்றில் கோப்பரகேசரி வர்மனின் ஆறு சாசனங்கள் உள்ளன. 
அனைத்தும் மூன்று மற்றும் நான்காம் ஆட்சியாண்டுகள் (ஆதித்தரின் ஆட்சிக் காலத்திற்குள்) காலத்திற்குட்பட்டவை. 
இவற்றில் நான்கு சாசனங்கள் கோப்பரகேசரி என்றும், மூன்று சாசனங்கள் வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி என்றும் தொடங்குகின்றன  [1902.. no. 469 - 474]. 
இவற்றில்,  470,  471, 472 இம்மூன்றும் ஒரே எழுத்தமைதியில் ஒரே காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

முதல் சாசனம் ( 470)
கோப்பரகேசரியின் மூன்றாம் ஆண்டில் சேரமனார் தேவியார் ஒருவர் நிவந்தம் தருகிறார்.

இரண்டாம் சாசனம் ( 471)
வீரபாண்டிய தலைகொண்ட கோபரகேசரியின் மூன்றாம் ஆண்டு. வாணன் மணிகண்டன் என்பவர் நிவந்தம் தருகிறார்.

மூன்றாம் சாசனம் ( 472)
கோப்பரகேசரி சாசனம்.. பெருமானடிகள் தேவியார் நிவந்தம் தருகிறார்.

பெருமானடிகள் தேவியார் என்றால், கோப்பரகேசரியின் மனைவி.. அந்த கோப்பரகேசரி ஆதித்த கரிகாலனாகவே இருக்க வேண்டும். மூன்று சாசனங்களும் ஒரே எழுத்தமைதியில் இருப்பதாலும்,  இரண்டாம் சாசனம் ஆதித்தகரிகாலனுடையது என்பது உறுதி செய்யப்படுவதாலும், ஆதித்த கரிகாலனின் ஆட்சியாண்டிற்குள்ளே இவை இருப்பதாலும், இம்மூன்றும் ஆதித்த கரிகாலனின் சாசனங்களே எனக் கொண்டால் மூன்றாம் சாசனத்தில் வரும் பெருமானடிகள் தேவியார் என்பவர் ஆதித்தகரிகாலனின் மனைவிதான் என்பது உறுதியாகிறது.

இப்போது,  கரிகாலக்கண்ணன் யார்?
இராஜராஜனது ஆட்சிக்காலத்தில் சோழநாட்டின் ஊர் பகுதிகள் வளநாடுகளாகப்  பிரிக்கப்பட்டன. வளநாடு என்பது தற்போதைய மாவட்டம் போன்றது.  இந்த வளநாடுகளின் பெயர்கள்  அரசன் அல்லது இளவரசனின் பெயராலோ அல்லது அவர்களின் விருதுபெயராலோ அழைக்கப்பட்டது.  அருமொழி தேவ வளநாடு, இராஜராஜ வளநாடு, இராஜேந்திர சிம்ம வளநாடு இவ்வாறு பெயர்கள் இருக்கும்.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள இராஜராஜனின் கல்வெட்டில், "கரிகாலக் கண்ண வளநாடு " என்ற ஒரு வளநாடு இருக்கிறது. யார் இந்தக் கரிகாலக் கண்ணன். நிச்சயமாய் இவர் ஓர் அரசகுமாரன்தான். அப்படி இருந்தால்தான் அவர் பெயரை வளநாட்டிற்குச் சூட்டமுடியும்.

யார் இந்த அரசகுமாரன் கரிகாலக்கண்ணன்?
சோழர் வரலாற்றைத் தெளிவான சான்றுகளுடன் தொகுத்த திரு. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கரிகாலக் கண்ணன் என்பவர் ஆதித்தக்கரிகாலனின் மகன்தான் என்கிறார். தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் 2 ஐ பதிப்பித்த வெங்கையா போன்ற தொல்லியல் அறிஞர்களும்,  கரிகாலக் கண்ணன் என்பவர் இராஜராஜனின் மூத்த சகோதரனான ஆதித்தக் கரிகாலனின் மகனாக இருக்க வாய்ப்பு அதிகம் . இவர் இராஜராஜன் காலத்தில் வாழ்ந்தார் என்று எழுதியுள்ளார்கள்.

முடிவாக, ஆதித்தக் கரிகாலன் திருமணமானவர். அவருக்கு ஒரு மகன் உண்டு.  அவர் பெயர் கரிகாலக் கண்ணன்.
  


Refrences:
S.i.i.vol 2 page 460.
The cholas.pa..163
S.i.i. vol 8.
No 58,59,60.






Sunday, February 14, 2021

அசுணம் /அசுணமா என்றால் என்ன?


-- திருத்தம் பொன்.சரவணன்


முன்னுரை:
சங்க இலக்கியத்தில்  நாய், கழுதை, பூனை, கரடி, மான், குரங்கு, யானை, புலி, குதிரை, எருமை, பன்றி ஆகிய பதினொரு விலங்குகளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள விரிவான செய்திகள் படங்களுடன் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற நூலாக 2018 ஆம் ஆண்டில் அச்சில் வெளிவந்தது. அதனை அடுத்து, ஆடு மற்றும் கழுது என்ற விலங்குகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில், அசுணம் அல்லது அசுணமா என்று அழைக்கப்படுவதான விலங்கினைப் பற்றிய விரிவான ஆய்வினை இக் கட்டுரையில் காணலாம்.

அசுணம் பற்றி நிலவும் கருத்துக்கள்:
அசுணம் / அசுணமா பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லும்முன் அதைப்பற்றித் தற்போது நிலவிவருகின்ற கருத்துக்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1.   அசுணம் - ஒரு கற்பனை விலங்கு:
அசுணம் என்பது இசையை அறியக்கூடிய ஒரு விலங்கு என்றும் அப்படி ஒரு விலங்கு இவ் உலகில் வாழவே இல்லை என்றும் அது புலவர்களால் கற்பனையாகப் படைக்கப்பட்ட ஒரு விலங்கு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

2.   அசுணம் - ஒருவகைப் பறவை:
அசுணம் என்பது இசையை அறியக் கூடிய ஓர் உயிரி தான் என்றும் ஆனால் அது ஒரு விலங்கு அல்ல என்றும் அது ஒருவகைப் பறவை என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

3.   அசுணம் - ஒருவகைப் பாம்பு:
அசுணம் என்பது இசையை அறியக் கூடிய விலங்கு தான் என்றும் அது ஒருவகையான பாம்பினையே குறிக்கும் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

தற்போதைய கருத்துக்கள் சரியா?
ஆராய்ந்து பார்த்ததில், மேலே கண்ட மூன்று கருத்துக்களிலும் தவறு இருப்பதாகவே பட்டது. எனவே முதலில் இக் கருத்துக்கள் சரியா தவறா என்று கீழே காணலாம்.

அசுணம் என்பது ஒரு கற்பனை விலங்கு என்னும் கருத்திற்கு எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப் படவில்லை. “ இன்று உயிருடன் இல்லை “ என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த உயிரினம் பூமியில் வாழவே இல்லை என்று முடிவுசெய்வது அறிவியல் முறைப்படி தவறானது ஆகும். ஏனென்றால், எத்தனையோ வகையான உயிரினங்கள் காலந்தோறும் மண்ணில் வாழ்ந்து மடிந்து இருந்த தடம் தெரியாமல் போய் இருக்கின்றன. மேலும், அசுணம் ஒரு கற்பனை விலங்கு என்றால் அதைப்பற்றிக் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டுமே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறின்றி, பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் அசுணமாவைப் பற்றி இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து அசுணம் என்பது உண்மையிலேயே இவ் உலகில் வாழ்ந்து வரும் ஓர் உயிரினம் தான் என்றும் அதுவொரு கற்பனை விலங்கு அல்ல என்றும் முடிவு செய்யலாம்.

அடுத்ததாக, அசுணம் என்பது ஒரு பறவையைக் குறிக்கும் என்ற கூற்றைப் பார்க்கலாம். அசுணம் என்பது ஒரு பறவை என்பதற்குச் சான்றாக கூர்மபுராணத்தில் இருந்து கீழ்க்காணும் பாடல்வரி முன்வைக்கப் பட்டுள்ளது.
“ .... முரசொலி கேட்ட அசுண மென்புள் மூச்சவிந்து ..”
                    (இராமன் வனம் புகு படலம்)
மேற்காணும் பாடல்வரிக்குப் பொருள் கொள்கையில், அசுணம் + என் + புள் என்று பிரித்து அசுணம் என்னும் பறவை என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இது தவறான விளக்கமாகும். அசுணம் + என்பு + உள் என்பதே சரியான பிரிப்பாகும். இங்கே என்பு என்பது உடலைக் குறிக்கும். இதன் பொருளானது "முரசொலியைக் கேட்ட அசுணமானது உடலுக்குள் உயிர் அடங்கி" என்பதாகும். இப் பாடல்வரியில் பறவை என்ற பொருளே இல்லை என்பதால் இப்பாடல் வரியை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட “ அசுணம் ஒரு பறவை “ என்ற கருத்து பொருந்தாமல் போனது.

இறுதியாக, அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்ற கூற்றைப் பார்க்கலாம். .பொதுவாகப் பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை ஆகும். அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்றால் அசுணத்திற்கும் காதுகள் இல்லை என்றுதான் பொருள் கொள்ளப்படும். மாறாக, அசுணத்திற்கு நீண்ட காதுகள் இருந்தன என்று சூளாமணியின் கீழ்க்காணும் பாடல்வரி குறிப்பிடுகிறது.
“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)
மேற்காணும் பாடல்வரியில் வரும் உலவு என்பது காதைக் குறிப்பதாகும். இது உளவு என்பதன் போலியாகும். உளவு என்ற சொல் கேட்டு அறிதல் என்ற பொருளில் இன்றும் பயன்பட்டு வருவதாகும். கேட்டு அறியும் வினைக்கு உதவும் கருவியாக காதே விளங்குவதால் காதையும் உளவு என்ற சொல்லால் குறித்தார் எனலாம். அவ்வகையில், உலவு நீள் அசுணமா என்பது காது நீண்ட அசுணம் என்று பொருள் பெறுகிறது. அசுணத்திற்கு நீண்ட காதுகள் உண்டு என்று மேற்காணும் பாடல் கூறுவதால் அசுணம் என்பது பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

இலக்கியங்களில் அசுணம்:
அசுணம் என்பது கற்பனை விலங்கு அல்ல என்றும் பறவையும் அல்ல என்றும் பாம்பும் அல்ல என்றும் மேலே கண்டோம். என்றால், அசுணம் என்பது எதைத்தான் குறிக்கிறது என்ற கேள்வி முன் நிற்கிறது. இக் கேள்விக்கான விடையைக் காணும்முன் இலக்கியங்களில் அசுணமாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கீழே தொகுத்துக் காணலாம்.

அசுணமும் மெல்லிசையும்:
அசுணம் என்பது பறவையோ பாம்போ அல்ல என்னும் கருத்து உறுதியாகி விட்ட நிலையில் அது இசையை அறிந்து அனுபவிக்கின்ற ஒரு விலங்குதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அசுணமானது மென்மையான இனிமையான இசையைக் கேட்டு மகிழ்ந்த மற்றும் உறங்கிய செய்திகளைக் கூறும் பாடல்வரிகளைக் கீழே காணலாம்.

 மாதர் வண்டின் நயவரும் தீங்குரல்
மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் .... நற். 244

 கடாம் இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ்செத்து
இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

இன் அளி கேட்ட அசுணமா அன்னளாய் மகிழ்வு .. சிந்தா. 1402

மேற்பாடல் வரிகளில் இருந்து, வண்டுகள் இசைக்கும் யாழிசை போன்ற மெல்லிசையை அசுணங்கள் கேட்டு மகிழ்ந்தன என்ற செய்தி பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி, புல்லாங்குழலின் இனிமையான மெல்லோசையும் பெண்கள் பாடிய குறிஞ்சிப்பண்ணும் கூட அசுணத்திற்கு மிக விருப்பமானது என்று இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கழைகளின் துளைதொறும் கால்பரந்து இசைக்கின்ற ஏழிசைக்கு
உளமுருகி மெய் புளகெழ இரைகொளும் அசுணங்கள் ... வில்லி. 9/20

கொடிச்சியர் எடுத்த இன்குறிஞ்சி கனிந்த பாடல்கேட்டு
அசுணமா வருவன காணாய் ... கம்ப. அயோத். 10/24

அசுணமும் பறையோசையும்:
யாழோசை, புல்லாங்குழல் ஓசை, குறிஞ்சிப்பண் போன்ற மெல்லிசைகளை விரும்பிக் கேட்டு மகிழ்ந்த அசுணங்களைப் பறையோசை, முரசொலி போன்ற வலிய ஓசைகள் படுத்திய பாட்டினைக் கீழே பார்க்கலாம்.
முரசொலி கேட்ட அசுணம் என்புள் மூச்சவிந்து .. கூர்ம.இரா.வ.பு.படலம்

பறைபட வாழா அசுணமா... -. நான்மணி – 2

 சீறியாழ் இன்னிசை கேட்ட அசுண நல்மா அந்நிலைக் கண்ணே
பறையொலி கேட்டுத் தன்படி மறந்தது போல்.... பெருங். உஞ்சை. 47/242

 மேற்காணும் பாடல்களில் இருந்து, பறையோசை மற்றும் முரசொலியைக் கேட்ட அசுணங்கள் வெய்துயிர்த்துத் தன்னிலை மறந்தன என்ற செய்தியும் உடலில் மூச்சடங்கி இறந்தன என்ற செய்தியையும் அறிய முடிகிறது.

அசுணங்களின் வாழ்விடம்:
அசுணங்களின் வாழ்விடம் பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் ... – நற். 244
இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

மேற்காணும் பாடல்களில் இருந்து, அசுணங்கள் மலைகளில் காணப்பட்ட பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன என்பதை அறியலாம். அசுணமாக்கள் மலைகளில் மட்டுமின்றி மனிதர்களின் குடியிருப்புகளுக்கு  அருகிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் இசைத்த யாழோசை, புல்லாங்குழல் ஓசை, பறையோசை, முரசொலி முதலானவற்றைக் கேட்டிருக்க இயலும் அல்லவா?. 

அசுணமும் மனிதர்களும்:
அசுணங்கள் மனிதர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று மேலே கண்டோம். உண்மையில், அசுணங்களை மனிதர்கள் வீட்டு விலங்குகளாகவும் வளர்த்து இருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் பாடல்வழி அறிய முடிகிறது.

.... அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே ... – நற். 304

அசுணங்களை வளர்த்த மனிதர்கள் தமது கைகளாலேயே அவற்றைக் கொலை செய்வதைப் பற்றித்தான் மேற்பாடல் கூறுகிறது. காதலரின் மார்பு சேரும்போதும் பிரியும்போதும் தனக்குத் தரக்கூடிய இன்பமும் துன்பமும் எப்படிப்பட்டது என்றால் அசுணங்களுக்குத் தனது கைகளால் உணவளித்து அன்பு காட்டியவர்கள் திடீரென்று தனது கைகளாலேயே அவற்றைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்று மேற்பாடலில் கூறுகிறாள் காதலி. கோழி, ஆடு, மாடு, பன்றி, எருமை போன்ற விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு உணவுக்காகக் கொல்லப்படுவது கொடுஞ்செயலாகக் கூறப்படாத நிலையில், அசுணங்களைக் கொல்வது மட்டும் கொடிய செயலாகக் கருதப்பட்டது என்பதனை இப்பாடலின் வழியாக அறிய முடிகிறது, இதிலிருந்து, அசுணங்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் அன்பு காட்டப்படும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டன என்று அறியலாம்.

அசுணங்களின் உடலமைப்பு:
அசுணங்களின் உடலமைப்பு பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கனியிசை கள்ளினால் தூமமேனி
அசுணம் துயில்வுறும் ........ கம்ப. கிட்.. 13/14

அசுணத்தின் உடலானது தூமம் அதாவது புகையைப் போல வெண்ணிறத்தில் பொங்கிப் பொலிந்த நிலையில் காணப்பட்டது என்ற செய்தியை மேற்பாடல் கூறுகிறது. இதிலிருந்து, அதன் உடல் முழுவதும் வெண்ணிற மயிர் புசுபுசுவென்று பொலிந்து இருந்ததை அறியலாம். அசுணமாவிற்கு நீண்ட காதுகள் இருந்தன என்ற செய்தியைப் பற்றி ஏற்கெனவே மேலே கண்டோம்.

“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)

அசுணம் என்பது எதைக் குறிக்கிறது?
அசுணம் பற்றிப் பல்வேறு இலக்கியங்கள் கூறிய செய்திகளை மேலே கண்டோம். இனி அவற்றைக் கீழே தொகுத்துப் பார்க்கலாம்.

1.   அசுணங்கள் மலைப்பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன.
2.   அசுணங்களை மனிதர்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்த்தார்கள்.
3.   அசுணங்கள் மனிதர்கள் இசைத்த மெல்லிசையைக் கேட்டு மகிழ்ந்தன. வல்லிசையைக் கேட்டு மடிந்தன / துன்புற்றன.
4.   அசுணத்தின் உடலில் வெண்ணிற மயிர் புசுபுசு என்று இருக்கும். அதன் காதுகள் நீண்டு இருக்கும்.
மேற்கண்ட தகவல்களைத் தொகுத்துப் பார்த்ததில், அசுணம் / அசுணமா என்பது கீழ்க்காணும் விலங்காகத் தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

அசுணம் / அசுணமா = பூனை.

அசுணம் – பெயர் விளக்கம் என்ன?:
அசுணம் என்பது பூனை என்றால், பூனையைக் குறிக்கும் பூசை, பிள்ளை, வெருகு போன்ற சொற்களைக் கூறாமல் அசுணம் என்ற புதிய சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையினைக் கீழே காணலாம்.

அசை என்ற வினைச்சொல்லுக்குப் பாடுதல், இசைத்தல், ஒலித்தல் என்ற பொருட்களுண்டு. உண்ணு என்ற வினைச்சொல்லுக்கு அனுபவித்தல், உட்கொள்ளுதல் என்ற பொருட்களுண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து உருவானதே அசுணம் ஆகும்.

அசை (=பாடு, ஒலி, இசை) + உண் (=அனுபவி) + அம் = அசுணம் = இசையினை அனுபவிப்பது.

இசையை அனுபவிப்பது என்ற பொருளில் பூனையைக் குறிக்க உருவாக்கப்பட்டதே அசுணம் என்ற சொல்லாகும்.

மேலதிக சான்றுகள்:
இலக்கியங்கள் கூறியுள்ள செய்திகளில் இருந்து அசுணம் என்பது பூனையைக் குறிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், கீழ்க்காணும் மேலதிக சான்றுகள் மூலம் இக் கருத்துக்கு மேலும் வலுவூட்டலாம்.

மனிதர்கள் மற்றும் நாய்களைக் காட்டிலும் பூனைகளுக்கு அதிகக் கேட்புத் திறன் உள்ளதென்று அறிவியல் கூறுகிறது. பூனைகளால் சிறுசிறு ஒலிகளைக் கூடத் தெளிவாகக் கேட்டு இருட்டிலும் இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூனை தனது காதுமடல்களை 180 டிகிரி கோணத்தில் தனித்தனியாக திருப்பும் திறன் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதைப் போலவே, வீணை, கிடார், யாழ், புல்லாங்குழல் போன்ற கருவிகளில் இருந்து எழும் மெல்லிசைகளை மிகவும் விரும்பிக் கேட்பதாகவும் பறைகளை முழக்கும்போது பூனையின் கேட்புத்திறன் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளில் பெருத்த மாற்றம் உண்டாகுவதாகவும் பூனைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கூறுவதை இணையங்களில் பார்க்க முடிகிறது. திடீரென ஒலிக்கும் இடியோசையால் பூனைகள் சுருண்டு விழுந்த செய்திகளும் அதில் உள்ளன. மற்ற விலங்குகளைக் காட்டிலும் பூனைகள் ஒலியினால் அதிகம் பாதிப்பு அடைவதன் காரணம் அதன் செவியமைப்பு தான். சிறிய ஒலியைக் கூட பலமடங்காகப் பெருக்கித்தரும் ஒலிபெருக்கியாக அவற்றின் காதுகள் செயல்படுவதே இந்த மோசமான விளைவுகளுக்குக் காரணம் என்று விலங்கியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர் விலங்குகளுக்கு “அசிணோ” என்ற ஒட்டுச்சொல்லுடன் கூடியதாக, அசிணோனிக்சு, மிராசிணோனிக்சு போன்ற பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை:
இதுவரை கண்டவற்றில் இருந்து, அசுணம் அல்லது அசுணமா என்பது பூனையைக் குறித்தே இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

பூனைகளுக்கு வண்டோசை, யாழோசை, குழலோசை போன்ற மெல்லிசைகள் தான் பிடிக்கும் என்று இப்போதுதான் ஆய்வாளர்கள் கண்டு அறியும் நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இச் செய்திகளை இலக்கியங்களில் பதிவுசெய்து விட்டுச்சென்ற நம் முன்னோரின் அறிவுத் திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா?





யானே பெருந்தமிழன்; நல்லேன்; பெரிது!



-- சொ.வினைதீர்த்தான்


தமிழை பல அடைமொழிகள் இட்டு அழைக்கிறோம். செந்தமிழ்; பைந்தமிழ்; வண்தமிழ்; ஒண்தமிழ்; கன்னித்தமிழ் என்று சிறப்புச் சொற்களைச் சேர்த்துச் சொல்கிறோம். தமிழ் மூன்றாகப்பிரிந்து இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாயிற்று. முதலாழ்வார்களில் ஒருவராகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் தமிழுக்கு மேலும் சிறப்பான ஓர் அடைமொழியிட்டு அழைக்கிறார்.

ஆழ்வார் தந்த நன்முத்து “ஞானத் தமிழ்” என்ற அடைமொழி. தமிழை ஞானத்தமிழ் என்று சொல்லுவதோடு அவர் நின்றுவிடவில்லை. தமிழை ‘இருந்தமிழ்’ என்றும் தன்னைப் ‘பெருந்தமிழன்’ என்றும் சொல்லிக் கொண்டும்  பெருமையடைகிறார்.

தமிழ் அறிவூட்டும் ஆற்றல் உள்ளது. தமிழால் தான் கடைத்தேற முடியும். உய்தியளிக்க வல்லது. கற்றவரின் அறிவை நேர்மையான நெறியில் செலுத்தும் தன்மை தமிழுக்கு உண்டு. ஆதலால் ஞானத்தமிழ் என்கிறார். பூதத்தாழ்வார் பாடல்கள் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி என்ற பெயரில் அமைந்துள்ளன. அவ்வந்தாதியின் முதல் வெண்பாவிலேயே தமிழுக்கு அடைமொழி தந்துவிடுகிறார்.

அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக
இன்புஉருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

அன்பும், அது ஈனும் ஆர்வமுடைமையும், உருகும் சிந்தையையும் அளித்தது தமிழ். அதனால் நாரணற்கு ஞானஒளி விளக்கு என்னால் இயற்ற முடிந்தது என்கிறார் ஆழ்வார் பெருமான். தமிழ்மொழியை அறிந்திராவிட்டால், படித்திராவிட்டால் எனக்கு அறிவு வளர்ந்திருக்காது: ஞானச்சுடர் விளக்கை ஏற்றியிருக்க முடியாது என்பதே பூதத்தாழ்வாரின் உள்ளக்கருத்து.

இக்கருத்துக்கு எழுபத்து நாலாம் பாடலில் மேலும் அசைக்க முடியாத உறுதி சேர்க்கிறார் ஆழ்வார். “இருந்தமிழே உன்னால் இருந்தேன்” என்ற தமிழ்விடு தூது ஆசிரியருக்கு வழிகாட்டியாக “இருந்தமிழ்” என்ற சொல்லாட்சியும் “பெருந்தமிழன் யானே” என்ற மட்டிலாப்பெருமையையும் இப்பாடலில் காணக் கிடைக்கின்றன.

“யானேதவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானேதவம் உடையேன்; எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!”

”நானே சிறந்த தமிழன்; தமிழனாக இருப்பதனால் நல்லவன் ஆனேன்; முயன்ற தவத்தை என்றும் கைக்கொண்டுள்ளேன். சிறந்த, பெரிய தமிழிலே நல்ல பாமாலை உன் திருவடிகளிலே சூடத்தக்கதாகக் கூறினேன்” என்பதே இப்பாடலின் பொருள் அல்லவா!

திருமால் நெறியோடு இவ்விரு பாடல்கள் நமக்குத் தருகின்ற அறிவுரைகள், ”தமிழை விரும்பிப்படியுங்கள்: அறிவு பெறலாம்! தமிழர் பண்பாட்டினை மறவாதீர்கள்; சிறந்த தமிழராக வாழலாம்! நல்ல மனிதனாகவும் வாழலாம்!” என்பதே.

"யானே பெருந்தமிழன்; நல்லேன்" என்று ஆழவார் கூறும் பெருமிதம் நெஞ்சைக்கவர்கிறது. எல்லோரும் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியுமா? 

தமிழர் பண்பாட்டினை மறவாதவர்களே அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியும்!

---

Wednesday, February 10, 2021

செம்மொழியென்பது யாதெனில் ...

 செம்மொழியென்பது யாதெனில் ...

--  தேமொழி


பெரும்பாலும் மேலைநாட்டுப் பார்வையில் வரலாறுகள் உருவாயின, அதனால்  கிரேக்கமும் லத்தீனும் செம்மொழிகள் என்று கூறப்பட்டன. 

Greek and Latin languages and literatures are fundamental to Western Civilization.

டியுக்  பல்கலை தளத்தில் செம்மொழிக்கான விளக்கம் .. 
 The modern world prizes critical acumen, clarity, and precision in speech and writing. These were the qualities of language and thought most extolled by the Greeks and Romans.
என்று கூறுகிறது. 

இத்தளம் புகழ் பெற்ற பல்கலையின்  செம்மொழி கல்விக்கானது, அது இவ்வாறு ஒரு  வரையறை   கொடுப்பதால் இதை நான் ஏற்றுக் கொள்வேன். 

கிரேக்க லத்தீன் மொழிகள்  மேலை நாடுகளில் உலாவிய காலத்தில் உலகில் பல பகுதிகளிலும் மொழிகளும் அவற்றில் இலக்கியங்களும் இல்லாமல் இல்லை. 
எவ்வாறு மகா அலெக்சாண்டர்  என்று சொல்லிச் சொல்லி,  அதே போலச் சாதித்த ராஜேந்திர சோழனைப் பேரரசன் என்று நாம் குறிப்பிட மறுக்கிறோமோ அதே நிலைதான் பிறர் சொல்வதையே நாமும் சொல்வதால் நிகழும். 

உங்கள் மொழி ஓவியம் என்றால் அதை எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் என்று கட்டுடைத்துப் பார்த்து .. இந்த இந்த காரணங்களால் அவற்றை வகைப் படுத்துகிறீர்களா?
அது போன்ற வரையறைக்குள்  எந்த மொழிகள் வருகின்றன எனக் குறிப்பிடுவதும் மொழி  ஆய்வாளர்களின் வேலைதான். 
அதைப் பேரா. ஜார்ஜ் ஹார்ட்  செய்துள்ளார்.   இது மொழியியல்  ஆய்வில்  பரிணாம வளர்ச்சியால் வளர்வது. 

ஏன் ஆங்கிலேயர்களை எதிர்த்த போராளிகளின் பட்டியலில் தென்  இந்தியர்கள் மட்டும் இன்று  இடம்பெறவில்லை?
வேலு நாச்சியார், கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் எல்லோரும்  அதே வரையறையில் வருவார்கள்.  
ஆனால் "அரசியல்" காரணமாக வரலாற்று நூல்களில் அவர்கள்  ஒதுக்கப் படுகிறார்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோமோ,  அது போன்றதுதான் இந்த மொழி "அரசியலும்"

இலக்கணம் இன்றி எந்த மொழியும் இருக்க வாய்ப்பில்லை.  எழுத்து சொல்லுக்கு மட்டுமின்றி பொருளுக்கு  இலக்கணமும் கொண்டது தமிழ் மொழி. 
காலத்தில் முந்தியதாகக் கிடைக்கும் நூலே இலக்கண நூல்தான், அதற்கு அடிப்படையாக இலக்கியம் பல வாய்மொழியாகவாவது இருந்திருக்க வேண்டும். 

அதை ஆவணப்படுத்த  எழுத்து தோன்றியிருக்க வேண்டும்.  
இந்தியா அளவில் பார்த்தோம் என்றால் எந்த மொழிகளுக்கு  எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன?  எந்த அளவில் கிடைக்கின்றன? எந்தக் காலம் முதல் தொன்மையான எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன என்று கண்டறிவது எளிது. 

மொழி என்பதற்கு அந்தமொழிகளின்  சொல் ஒன்று இருக்க வேண்டும் என்ற விதியுடன்  எழுத்து என்பதையும்  சேர்த்துவிடலாம்.   

தொன்மையான, எழுத்துடன் கூடிய மூல மொழி, அந்த எழுத்து முறை வெகு சாதாரண மக்களின் வாழ்விலும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது, 
அத்துடன் இதற்குச் சான்றாக தொல்லியல் தடயங்களும் அந்தமொழியில் கல்வெட்டுக்களாகவும்  பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கிடைக்கின்றன என்றால் வேறென்ன வரையறை வேண்டும் அந்த  மொழியின் தொன்மையை, மொழியின் பரவலை, மொழியின் தாக்கத்தை உறுதிப்படுத்த?

Of the c. 100,000 inscriptions found by the Archaeological Survey of India, about 60,000 were in Tamil Nadu;[12] of these 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi; the rest were in Tamil. Over 25,000 Kannada inscriptions were unearthed in Karnataka, though an in depth study of many of these is yet to be conducted according to Hampi Kannada University Sociology department Head and Researcher Devara Kondareddy.[13]

ஒரு மொழிக்கான எழுத்து கிடைக்கும் காலம்.. அது காட்டும் அந்த மொழியின் தொன்மையை .  

 The modern world prizes critical acumen, clarity, and precision in speech and writing. These were the qualities of language and thought most extolled by the Greeks and Romans. 
என்ற இதன் அடிப்படையில் விதிகளை மீட்டுருவாக்கம் செய்யலாம், செய்துள்ளார்கள்.   ஜார்ஜ் ஹார்ட் பங்களிப்பும் அதில் ஒன்று. 

செம்மொழி வரையறை/விதி குறித்த மற்றொன்று இணைப்பில்: >>> http://www.tamilvu.org/library/kulothungan/pdf/Tamil_Among_the_Classical_Languages_of_the_World.pdf#page=54
semmozhi.JPG
source -http://www.tamilvu.org/library/kulothungan/pdf/Tamil_Among_the_Classical_Languages_of_the_World.pdf#page=54
____________________________________________________________________________

Monday, February 8, 2021

சூலக்கல்

-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



கோயில்களுக்கு அரசர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அதிகாரிகள் அளித்த கொடை நிலங்களின் எல்லைகளின் அளவை குறிப்பதற்காகவும், எல்லைகளை நிர்ணயிப்பதற்காகவும் முத்தலைச் சூலம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட எல்லைக்கல் ஒன்று நிலத்தில் ஊன்றப் பட்டிருக்கும். இதனைச் சூலக்கல் என்பர்.

இந்த சூலக்கற்களை இறை உருவங்களாகக் கருதப்பட்டு  அவ்வப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருவதையும் அவற்றுக்கான பூசை மற்றும் சடங்குகள் நடத்துவதையும் கள ஆய்வில் அறியமுடிகின்றது.

soolakkal.jpg

அந்த வகையில் தானப்ப முதலி தெருவில், தானப்ப முதலி, காணாம் பசுவைக் கொன்ற பாவம் என்ற தமிழ் எழுத்துக்களுடன் கூடிய சூலக்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூலக்கல்லின் பின்புறம் மற்றும் இடது பக்கவாட்டில் தமிழ்  எழுத்துக்கள் உள்ளன. இந்த சூலக்கல்லானது பத்தரகாளியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் இருக்கிறது. மேலும் இதே போன்று நான்கு சூலக்கற்கள் மதுரையின் சப்பாணி கோயில், தெற்கு கிருஷ்ணன் கோயில், தெற்கு வாசல் போன்ற இடங்களில் சாலையோரத்தில் முத்துமாரியம்மன், தர்ம முனீஸ்வரர், மாரியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.
devi.jpg
--------

Wednesday, February 3, 2021

அண்ணாவின் ‘திராவிடநாடு'



-- கல்பனாதாசன்


‘தேனூறும் தமிழகத்தில் தேன்போன்றது, இந்தத் 'திராவிட நாடு' என்றும் உயர்வானது' என்று கண்ணதாசனால் ஒரு திரைப்பாடலில் படம்பிடிக்கப்பட்டது அண்ணாவின் ‘திராவிடநாடு' இதழ். பேனா பிடித்தவர்கள் பலபேருக்கு அது அரிச்சுவடியாக இருந்த இயக்க இதழ் என்றும் கண்ணதாசன் அதே பாடலில் வர்ணித்திருக்கிறார். ‘தம்பிக்கு' என்னும் தலைப்பில் அண்ணா திராவிடநாடு இதழில் வரைந்த மடல்வடிவக்கட்டுரைகள் தமிழ் உரைநடை இலக்கியத்திற்கு அரிய வரவு. அதன் மூலம் அவருக்கு ஆயிரம் பல்லாயிரம் அரசியல் தம்பிகளும் இலக்கியத்தம்பிகளும் கிடைத்தார்கள்.  கே ஏ அப்பாஸின் கடைசிப்பக்கம் ‘பிளிட்ஸ்' பத்திரிகைக்கு எப்படியோ அப்படியே அண்ணாவின் ‘திராவிடநாட்'டுக்கு அவரது ‘தம்பிக்கு' கடிதங்கள்.

‘தம்பிக்கு' கடிதங்களுக்கு முதன்முதலில் 1963 இல் நூல்வடிவம் தந்த பெருமை பாரிநிலையத்தைச்சேரும். 10 தொகுதிகள் வெளியிட்டது பாரிநிலையம். அண்மையில் தமிழரசி பதிப்பகம் 2005 இல் ‘தம்பிக்கு கடிதங்க'ளை மீண்டும் வெளியிட்டுள்ளது. திராவிடநாட்டில் எழுதிய 171 கடிதங்களும் காஞ்சியில் எழுதிய 119 கடிதங்களும் சேர்ந்து மொத்தம் 290 கடிதங்கள் கொண்ட 10 தொகுதி அது.

தம்பிக்கு பதிப்புரையில் ம. நடராசன் சொல்கிறார்-. ‘வாழ்க வசவாளர்கள்', ‘இன்றைய பகைவர் நாளைய நண்பர்', ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு', ‘தம்பி உடையான் படைக்கஞ்சான்'  என்னும் அண்ணாவின் தலைப்புகள் தமிழர்களின் மனத்தைப்பண்படுத்தி நெறிப்படுத்துபவை. ‘தடைக்கற்கள் படிக்கற்கள் ஆகட்டும்', ‘துணிவு தெளிவு கனிவு', ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ‘எதையும் தாங்கும் இதயம்' என்னும் மடல்கள் அண்ணாவின் வாழ்வியல் நெறியின் வெளிப்பாடாக அமைந்தவை.

திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, எழுத்தாளர் இயக்குநர் ப. புகழேந்தி இருவரும்  திராவிட இயக்க இதழ்கள் 265க்கும் மேற்பட்டவை எனப்பட்டியல் இடுகின்றனர். நீதிக்கட்சிக்காலத்திலிருந்து நடத்தப்பட்ட இதழ்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்தப்புள்ளிவிவரம் தருகின்றனர். அவற்றில் தலையான ‘திராவிடன்', ‘குடியரசு', ‘விடுதலை' ஆகியவற்றுக்கடுத்து அண்ணாவின் ‘திராவிடநாடு' முக்கியத்துவம் வாய்ந்தது. குடியரசு, விடுதலை ஆகிய இதழ்களில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அண்ணா 1942 இல் 'திராவிடநாடு' தொடங்கினார். 3-2-1963 வரை இதழ் தொடர்ந்து வெளிவந்தது. பிறகு 'காஞ்சி' என்னும் பெயரில் அதை நடத்தினார். 'ஹோம்லண்ட்' என்னும் ஆங்கிலப்பத்திரிக்கையையும் அண்ணா கொஞ்சகாலம் நடத்தினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ப. நெடுமாறன் தலைமையில் அதற்கு நிதி திரட்டிக்கொடுத்ததுண்டு.

ஹோம்லண்ட் தொடங்கியபோது திராவிடநட்டில் அது குறித்து அண்ணா எழுதிய அறிமுகம் சுவையானது.- ‘தம்பி, ஆங்கில இதழ் முந்திரிப்பருப்பானால் திராவிடநாடு வெண்பொங்கல். அது கருவி. இது என் உள்ளம். அது பிறர் நெஞ்சைத்தொட, இது உன்னுடன் உறவாட. அது பிறருக்கு நம்மை விளக்க. இது நம்மை உருவாக்க. எனவே இதனை இழந்துவிட ஒருபோதும் சம்மதியேன்.'

திராவிடநாடு முதலிதழ் 8-3-1942 அன்று ஓரணா விலையில் ஞாயிறு தோறும் வெளிவரும் என்னும் அறிவிப்புடன் வந்தது. ஆசிரியர் சி. என். அண்ணாதுரை. ‘தமிழுண்டு தமிழ்மக்களுண்டு, இன்பத்தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்னும் பாரதிதாசன் வரிகள் முகப்பை அலங்கரித்தன. முதலில் காஞ்சிபுரம் தேரடித்தெருவிலிருந்தும் பின்னர் திருக்கச்சி நம்பி தெருவிலிருந்தும் வெளிவந்தது. திராவிடநாடு இதழின் பெரும்பாலான பக்கங்களை அண்ணாவே ஆட்கொண்டார். 'சொலல்வல்லன்' என்னும் குறள் வரிக்கு இலக்கணமான காரணத்தால் அண்ணாவுக்கு அது சாத்தியமாயிற்று.

திராவிடநாடு இதழில் பாரதிதாசன், நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், என். வி.  நடராசன், மு. கருணாநிதி, இரா. செழியன், அரங்கண்ணல், தில்லை வில்லாளன், ராதாமணாளன், ப. உ. சண்முகம், ம. கி. தசரதன், ப. வாணன், வாணிதாசன் ஆகியோர் எழுதினார்கள். அரங்கண்ணல், தில்லை வில்லாளன் இருவரும் துணையாசிரியர்களாக இருந்தார்கள். நெடுஞ்செழியன் 1949 வாக்கில் துணையாசிரியராக இருந்தார். ஈழத்து அடிகள் அண்ணாவுக்கு வலதுகரமாக இருந்து எழுத்தாளராக, நிர்வாகியாக, எழுத்தராக, காசாளராக, மேலாளராக இப்படி எண்ணிறந்த பணிகளைச்சுமந்து திராவிடநாட்டைச் செம்மை செய்தார். திராவிடநாட்டின் முகப்புப்பக்கத்தில் கவிதைகளை வெளியிடுவது அன்ணாவின் வழமை. அறிமுகமே இல்லாத இளம்கவிஞர்கள் பலருக்கு அண்ணா முகவரி உண்டாக்கித்தந்ததுண்டு.

அண்ணா 1949 வாக்கில் கட்சியின் பொதுச்செயலராக இருந்தபோது ‘நம்நாடு' பத்திரிகையையும்  ஆசிரியராக இருந்து பார்த்துக்கொண்டார். ராயபுரம் அறிவகத்தில் தங்கியிருந்த அண்ணா கடைசிநேரத்தில் (எப்போதும் அப்படித்தான்) எழுதித்தரும் கட்டுரையை எடுத்துக்கொண்டு ப. புகழேந்தி காஞ்சிபுரம் திராவிடநாடு இதழுக்குப் பயணம் போவார். அதற்கு ரூ. 5 அவருக்கு பேட்டா கொடுத்தார்கள். ரூ. 3 வண்டிச்சத்தம்போக ரூ. 2 சாப்பாடு சிற்றுண்டிக்குப் போதுமானதாக இருந்தது என்கிறார் புகழேந்தி.    

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் அண்ணாவின் திராவிடநாடு பற்றி கட்டுரை வாசித்த கு. விவேகாநந்தன் எழுதுகிறார்- அண்ணாவின் பிறபணிகளைக்காட்டிலும் இதழ்ப்பணி சிறந்துவிளங்குவதற்குக்காரணம் அவரது எல்லாத்திறங்களும் இதழ்களில் ஒருசேர நின்று நிலவியதேயாகும். திராவிடநாடு இதழில் அவர் கையாண்ட ஒவ்வொரு இதழின் இலக்கிய வடிவமும் சிறந்துவிளங்குகின்றது. அந்திக்கலம்பகம், ஊரார் உரையாடல், கேட்டீரா சேதி முதலானவை பின்னாளில் ஆனந்தவிகடன், குமுதம் இதழ்களில் வேறு வேறு பெயர்களில் எடுத்தாளப்பட்டன.

அவர் கனவுகண்ட அரசியல் திராவிடநாடு லட்சியம் கைகூடாவிட்டாலும் தமது இதழ்-இலக்கியமான திராவிடநாட்டில் அண்ணா செங்கோல் செலுத்தினார். பல்வேறு ஆசிரியர்கள் செய்யும் பணியை அவர் ஒருவரே தன்னந்தனியனாகச் செய்தார். அரசியல் விமர்சனம், பயணக்குறிப்புகள், கேலிச்சித்திரம், நாடகம், சிறுகதை, தொடர்கதை, புதினம் என்று எல்லாத்துறைகளையும் ஒரு கை பார்த்ததுடன் அவற்றில் தமது கைவண்ணம் சிந்தாமல் சிதையாமல் நாளுக்குநாள் மெருகேறும் வண்ணமும் பார்த்துக்கொண்டார்.

அண்ணாவின் பாணி அவருடைய பிறவிக்குணத்தின்பாற்பட்டது. நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் என்பார்கள். அவை அண்ணாவின் பண்புகள். உயர்குடிப்பண்புகள். தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் அவர் அறியாத கீழ்க்குணங்கள். இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு அவரது அடிப்படை இயல்பு. அத்தகைய பண்புகள் அவரது எழுத்துக்கும் உரமாகி ஊற்றாகி அவருடைய தமிழில் அற்புதம் புரிந்தன. எதையும் சுவையோடு அதுவும் நகைச்சுவையோடு கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழியும் தமிழ் அவரது தமிழ். அந்தத்தமிழ் அவரது திராவிடநாட்டில் பக்கத்துக்குப்பக்கம் பளிச்சிட்டது.

அண்ணாவின் பேச்சைக்கேட்க மைல்கணக்கில் நடந்த தம்பிகள் ஏராளம். அதேபோல் அவரது திராவிடநாடு இதழ் வெளிவரும் கிழமைதோறும் முன்னதாகவே கடைதேடி ஓடிப்போய் காத்திருக்கும் தம்பிகளுக்கும் குறைவில்லை. அண்ணா அன்பின் உருவகம். அவர் உருவாக்கிய குடும்ப பாசம் கட்சியையும் தம்பிகளையும் அப்படிக்கட்டிப்போட்டிருந்தது. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரும் தம்பிகள் அவருக்குக் கிடைத்தார்கள்.  அவர்களைக்கொண்டு அவர் 1949 இல் தொடங்கி 18 ஆண்டுகள் உழைத்து 1967 இல் ஆட்சிக்கட்டில் ஏறினார். ஆனால் தமிழ்நாட்டின் கெடுவாய்ப்பு  இரண்டே ஆண்டுகளில் அவரைக் காலம் காவு கொண்டுவிட்டது.  

திராவிடநாட்டில் அவர் எழுதிய நாடகங்களில் ‘சந்திரோதயம்' ‘சந்திரமோகன்', ‘நீதிதேவன் மயக்கம்' வரலாற்றுப்புகழ் வாய்ந்தவை. ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' (சந்திரமோகன்) நாடகத்தில் சிவாஜி வேடமேற்ற வி. சி. கணேசன்  பெரியாரால் பெயர்சூட்டப்பெற்று சிவாஜி கணேசன் என்றே புகழ்பெற்றார். நாடகத்தில் நடிப்பதற்குமுன் மாதக்கணக்கில் திராவிடநாடு அலுவலகத்தில் சிவாஜி தங்கியிருந்ததுண்டு. ‘தீ பரவட்டும்', ‘ஆரியமாயை', ‘கம்பரசம்' ஆகிய தொடர்கட்டுரைகள் புரட்சிகரமானவை.  அண்ணாவுக்கும் ரா. பி. சேதுப்பிள்ளைக்கும், அண்ணாவுக்கும் சோமசுந்தரபாரதிக்கும் நிகழ்ந்த சொற்போரின் தொகுப்பே ‘தீ பரவட்டும்' என்னும் பெயரில் நூல்வடிவம் பெற்றது. ‘ஆரியமாயை' எழுதியதற்காக அண்ணா சிறைவாசம் செய்ததுண்டு. 

பெரியாரிடமிருந்து பிரியவேண்டிய கட்டாயம் நேர்ந்தபோது எழுதிய ‘ராஜபார்ட் ரங்கதுரை', ‘இரும்பாரம்', ‘ரொட்டித்துண்டு';  சம்பத்தோடு பிணங்கவேண்டிய  அவசியம் வந்த தருணத்தில் படைத்த ‘எல்லோரும் இந்நாட்டுமன்னர்' அழகிய உருவகங்கள். அண்ணாவைப்பின்பற்றிக் கழகத்தில் எல்லோருமே பேசவும் எழுதவும் முனைவார்கள். ஒருசிலரைத்தவிர அவரது ஆளுமை பிறருக்குக்கைகூடவில்லை. அண்ணாவின் எழுத்திலும் சரி பேச்சிலும் சரி மெல்லிய நகைச்சுவை இழைந்துகொண்டே இருக்கும். நயமான மென்மையான சொல்வளம் அருவிபோல் வழிந்துகொண்டே இருக்கும். அண்ணாவைப் பின்பற்றியவர்களுக்கு இவை அறவே இல்லை என்பதால் அண்ணாவின் பாணியை அவர்கள் பின்பற்றியவிதம் சலிப்பூட்டுவதாகவே முடிந்தது.

ஒருமுறை திராவிடநாடு இதழின்மீது வகுப்புப்பகைமையை ஊட்டுவது என்னும் கோணத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  ஜாமீன் தொகை ரூ 3000 கட்டவேண்டும். அவ்வளவு பணத்திற்கு அண்ணா எங்கே போவார்? வாசகர்களிடம் கையேந்தினார். வேண்டியதொகை வசூலானதும் இனி போதும் என்று அறிவிப்பும் தந்துவிட்டார். பின்னர் திராவிடநாடு கட்டுரைகளுக்கு எதிரான அவ்வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

திராவிடநாடு தொடங்கியபோது எழுதினார்- இவன் எம். ஏ. படித்தால் போதுமா? ஓர் இதழ்நடத்த வல்லவனா? என்று ஏளனக்குரல் எழுப்பியோர் எவ்வளவு பேர்? தமிழ் இலக்கணம் இலக்கியம் அறிவானோ?  என்று எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியோர் எவ்வளவு பேர்? ஈராறு திங்கள் நடமாடி பிறகு ஈளைகட்டி இருமி இருக்குமிடம் தெரியாது போகும் என்று சாபமளித்தோரும் உண்டே? எதுகை மோனை போதுமா ? எண்ணத்தில் ஒரு புதுமை எழுத்திலே ஒரு தெளிவு இருக்கவேண்டாமா ? அது இவன் பெறுதல் ஆகுமோ என்று தலையசைத்துப்பேசியோர் தொகை மட்டும் சிறிதா?

திராவிடர் கழகம் தம்மையும் தமது தி. மு. க. வையும் கடுமையாக விமர்சித்த போது எழுதினார்- கரி தன் குட்டிக்கு வீரமும் தீரமும் வளர்வதற்காக துதிக்கையால் குட்டியை இழுத்தும் தள்ளியும் தட்டியும் பயிற்சி தரும். தி. மு.க. வுக்கு அத்தகைய பயிற்சியை தி.க. தந்திருக்கிறது. பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணக்கொண்டு மறுபடியும் பயிற்சி தர முன்வரக்கூடும். அதைத்தவறாகக்கருதவேண்டாம்.

இப்படி எதையும் நிதானத்துடனும் அமைதியுடனும் சிந்தித்து எழுதியும் பேசியும் நாகரிகம் காத்தவர் அண்ணா. அந்தப்பண்புதான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துநிற்கவைத்தது. அவருக்கு வெற்றிக்கனியை  எளிதில் ஈட்டித்தந்தது. நீக்குப் போக்கு நெளிவு சுளிவு எல்லாம் அவருக்கு இயற்கையிலேயே கைவந்தன. ஆலமரம்போல் நிற்காமல் நாணல்போல் வளைந்தார். சாதித்தார். 

பெரியாரின் துக்கநாள் அறிவிப்பு, பெரியார்- மணியம்மை திருமணம், தேர்தலில் பங்கேற்காமை என்னும் நிலைப்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் அவரைத்தரக்குறைவாக விமர்சிக்காமல் பிரிந்துசென்று தனிக்கட்சி கண்டு வளர்ந்தார். திராவிடநாடு பிரிவினையைச்சட்ட விரோதமாக்கிய போது சூட்சுமம் புரிகிறதா என்று கொள்கை நிலைப்பாடு ஒன்றை வழிமொழிந்து பிரிவினைக்கொள்கையை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்தார். ஓட்டு வழியா வேட்டு வழியா என்பதில் ஓட்டு வழியைத்தேர்ந்து முதல்வரானார். 

தலைசிறந்த பேச்சாளர், தலைசிறந்த எழுத்தாளர், தலைசிறந்த பத்திரிகையாளர், தலைசிறந்த மனிதநேயர் என உயர்ந்தார். நண்பர்கள், பகைவர்கள் எல்லோரையும் ஒருசேர தம்மை நேசிக்கும்படி அவர்களை அன்பால் கட்டிப்போட்டார். அவர்தாம் அண்ணா.


குறிப்பு: அண்ணாவின் ‘திராவிடநாடு' என்ற இக்கட்டுரை அண்ணாவைப் பற்றிய முழு மதிப்பீடு அன்று. அவரை இதழாளராகப் பார்க்கும் ஒரு சிறு முயற்சி.  15 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பார்வை இதழில் வெளியாகி காலச்சுவடு மூலம்  சில தீவிர இதழ்கள் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றது.  இரு நிறுவனத்தார்க்கும் நன்றி. 

----

Monday, February 1, 2021

விருந்தோம்பல்

விருந்தோம்பல் 


-- சொ.வினைதீர்த்தான்


இன்றைக்கு மானிட உறவு (Human relations) கற்பிப்பவர்களும், வாடிக்கையாளர் உறவுகள் (Customer Relations) பேசுபவர்களும் மேலை நாட்டு அறிஞர்கள் நூல்களையும் அதனைப் பார்த்து நம்மவர்களின் வான்கோழி ஆட்டத்தையும் வியந்து கூறுகிறோம்.

ஆனால், நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளாக நமக்குக் காலந்தோறும் தந்த இலக்கியச் செல்வத்தில் தேடினால் தேடாததும் கிடைக்கிறது. தெளிவில்லாததும் தெளிவாகிறது!

விருந்தினனாக ஒருவன் நம் இல்லத்திற்கு வரும்போது ஒன்பது செயல்களை நாம் கைக்கொள்ள வேண்டும் என்கிறது அதிவீரராமபாண்டியர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய காசிக்காண்டம் நூலின் "இல்லொழுக்கம்" பகுதி.

"விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
     வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல் 
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
     எழுதல் முன் மகிழ்வன செப்பல் 
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
     போமெனில் பின் செல்வதாதல் 
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான் 
     ஒழுக்கமும் வழிபடும் பண்பே"
    -- இல்லொழுக்கம் (பா எண் : 17)
காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியன்  

பொருள்:
விருந்தினராக ஒருவர் இல்லத்திற்கு வந்தால் அவர்களை.. .. .. 
1. வியந்து உரைத்தல், 
2. நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், 
3. முக மலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 
4. வீட்டிற்குள் வருக என வரவேற்றல், 
5. எதிரில் நிற்றல்,
6. மனம் மகிழும்படி பேசுதல், 
7. அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல், 
8. விடைபெறும்போது வாயில்வரை தொடர்ந்து செல்லுதல், 
9. நன்றி கூறி வழியனுப்புதல் 
ஆகிய இந்த ஒன்பதும்  விருந்தோம்பல் செய்யும் வழிகளாகும்.

இவை அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்தால் மனித உறவு செழிப்பதும், வாடிக்கையாளர் மகிழ்வதும் உறுதி!

---