Sunday, May 31, 2020

நெல்லும் தமிழரும் தென்கிழக்கு ஆசியாவும்

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும்

-- இராம.கி.

            ”Paddy என்பது நெல்லை குறிக்க ஆங்கிலம் பயன்படுத்தும் சொல். இதன் மூலச்சொல் Pady என்கிற மலாய் மொழி சொல் என அறியாமல் ஆங்கிலம் உளறும். நெல்லை படியால் அளக்கும் செயலால் நெல்லை படி என்றே அழைத்தனர்.  சாப்பாட்டிற்கு அவங்கதான் படியளக்கிறாங்க என்றால் உணவுக்கு அவர்கள்தான் நெல் அளந்து கொடுக்கிறார்கள் என்றேபொருள். ஆகவே தமிழ் அளத்தல் அளவான படி என்பதே ஆங்கிலத்தில் படி. ப்பேடி என்ற உச்சரிப்பில் வழங்கப்படுகிறது” என்ற சிற்றிடுகையைத் ”தமிழரின் தொன்மை, பண்பாடு, வரலாறு தொடர்பான பதிவுகள் குறித்த ஆய்வுதள (STARCH)” எனும் முகநூற் குழுவில் ஒருமுறை கண்டு வியந்துபோனேன். ஒருவேளை சொற்பிறப்பியல் என்பது சிலருக்குக் குடிசைத் தொழில் ஆகிவிட்டதோ? என்ன ஆயிற்று இவருக்கு? சான்றின்றி இப்படிக் கற்பனையிற் சொல்ல முடியுமா?
            இவர் காட்டும் எழுத்துப் பெயர்ப்பு சரியா? Paddy யில் 2 d உண்டே? ஆங்கிலம் உளறுகிறதா? இன்னொரு மொழியை இப்படிச் சொல்லலாமா? “தமிழ் உளறுகிறதெ”ன வேற்றார் சொன்னால் நாம் வாளாய் இருப்போமா? தவிரப் ”படி” எப்படி நெற்பெயராகும்? சான்றென்ன? அளக்கப்படும் பொருளுக்குப் பகரியாய், வேறெதிலும் அளவையலகு பெயராகியது உண்டோ? குறிப்பிட்ட மலாய்ச்சொல் Padyயா Padiயா? எப்படி அப்பெயர் அங்கு வந்தது? Padi, அரிசி/நெல்லைச் சேர்ந்து குறிக்காதா? (மலாயில் nasi=சோறு.) நெல்வேளாண்மை அங்கெப்படி ஏற்பட்டது? இந்நண்பர் மட்டுமன்றி, பன்னூறு தமிழரும் ”நெல் நம்மூரில் தோன்றிய கூலம்” என்றே ஆதாரமின்றி எண்ணிக் கொள்கிறார், பேசவுஞ் செய்கிறார். நம்மூரிற் புழங்குபவற்றை நாமே கண்டுபிடித்தோம் என்பது சரியா? இங்கிருந்து அரிசி மேற்கே போனது சரியாகலாம். ஆனால், மேற்குலகே முழுவுலகு ஆகிவிடுமா? தவிரத் தானாய் நெல் வளர்ந்தது ஒருகாலம் எனில் பயிரிடத் தொடங்கியது வேறு காலமன்றோ?
            இயற்கையரிசி 8500-13500 ஆண்டுகள்முன் சீன யாங்க்ட்சி ஆற்றங்கரையில் தோன்றியிருக்கலாமென ஒருசிலரும், (பர்மா, தாய்லாந்து, கம்போடியா, லாவோசு, வியத்நாம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு) சேர்ந்த பழஞ் சுந்தாலாந்துக் கண்டத்தில் எழுந்திருக்கலாமென வேறு சிலரும் ஆதாரத்தோடு சொல்வார். மேலும் 5000 ஆண்டுகள்முன் கொரியா, சப்பான், கங்கைச் சமவெளிகளில் நெல் வளர்ந்ததற்கும் ஈனியல் (genetics), தொல்லியல் (archeology) சான்றுகளுண்டு. தவிர, புதுக்கற்காலத்தில் (பொ.உ.மு.9000-8000) அலகாபாத் மாவட்டம் கோல்திவாவில் கான் நெல்லும் (Oryza rufipogon) பயிர் நெல்லும் (Oruyza sativa) விளைந்ததாய்ச் (Indian archeology A. review 1974-75, 80 Indian Archeology A review 1976076, 88 Sharma et al;, Beginnings of Agriculture, Allahabad, Abinash Prakashan, 1980, 184) சொல்வர். இவையெலாம் பயிரியல் (agronomy), பழம் புதலியல் (Paleobotany) ஆதாரங்களோடு வருங் குறிப்புகள். இவற்றையெலாம் "“ப்பூ” என்று உதறித் தள்ள முடியாது.
            அண்மையில் Antiquity இதழிலும் Journal of Archaeological Science இதழிலும் ஆக்சுபோர்டு, பனாரசு இந்து பல்கலைக்கழகங்கள் இணைந்துநடத்திய ஆய்வறிக்கையில், அரியானாவிலுள்ள Rakhigargh பகுதியில் 2430-2140 BC அளவில் கான்நெல், பயிர்நெல் சார்ந்த வேளாண்மைக்குச் சான்று பகர்வார். இத்தோடு ஒன்றை மறக்கக்கூடாது. அரிசி, சிந்து சமவெளியில் தோன்றிய பயிரல்ல. அது கங்கைக் கரையிலிருந்து சிந்து சமவெளிக்குப் பெயர்ந்தது என்றே அறிவியல் சொல்லும். வடபுலத்தில் நெல்வந்த திசை கிழக்கிருந்தே தொடங்கும். கங்கைக் கரைக்கு அது எப்போது வந்தது? தெரியாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இயற்கையிலோ, மாந்தமுயற்சியிலோ நெல்தாவரம் எழுந்து/வளர்ந்து, பின் வணிகம், மாந்தநகர்ச்சி போன்றவற்றால் வேறிடம் நகர்ந்தது. அவற்றிற்சில வேறிடங்களில் பயிரிடவும் படலாம். நம்மூரில் பயிரிடப் படுவதாலே நம்பெயர் உலகெங்கும் உள்ளதென ஒருபோதுங் கூறமுடியாது. இதுவரையறிந்த அறிவியற் செய்திகளின் படி நெல் பெரும்பாலும் சீனத்தின் யாங்ட்சி ஆற்றங்கரை, யுன்னான் மாநிலம், அல்லது தென்கிழக்காசியா பகுதி என ஏதோவொன்றில் தோன்றி நம்மூருக்குப் பரவியிருக்கலாம் என்பதே பழம்புதலியலாரின் கணிப்பு. கீழே விரிவாய்ப் பார்ப்போம்.
            ”தமிழரே மூத்தார், மலேசியர் இளையரெ”னும் அண்ணன்கார முடிவு அடிப்படையில் சரியானதல்ல. ”சிலவற்றில் அவர்முந்தி சிலவற்றில் நாம் முந்தி.” இன்று நாம்காணும் இரட்டை விலாவரிக் கலத்தின் (double outrigger canoe) கட்டுமானத்தை தென்கிழக்காசியரிடமிருந்தே நாம் கற்றோம். அதன் பின்னரே கலங்களின் கவிழாக் கட்டுமானத்தேவை நமக்குப்புரிந்தது. தவிர, இற்றை மடகாசுகர் மொழியான மலகாசி, மலேசிய/இந்தோனேசிய மொழிகளோடு தொடர்புற்றதென்பர். இவ்விரு நாட்டவர்க்கும், மலகாசி இனத்தார்க்கும் ஈனியல் தொடர்புண்டு. (Human settlement of Madagascar occurred between 350 BC and 550 AD by Austronesian peoples, arriving on outrigger canoes from Borneo.) இவையெலாம் நெடுங்காலம் கடற்பயணப் பழக்கம் தென்கிழக்கு ஆசியருக்கு இருந்தால்தான் முடியும். ”யாம் மூத்தவர், நீரிளையர்” எனும் சங்கத நடை முறையை ஏற்காது சாடுகிறோமே? அதேபாதையிற் நாம் பயணித்து நம்மிலுங் கீழே மலேசியரை இறக்குவது சரியா? அது முன்னுக்குப் பின் முரண் இல்லையா?
            மாற்றோர் செய்தால் தவறு, நாம் செய்தால் சரியா? தமிழ், தமிழென்பதில் கவனம் வேண்டாமா? வெகு எளிதில் நாம் பொதுக்கையர் ஆகும் (facist) இயலுமை உங்களுக்குப் புரிகிறதோ? இணையமெங்கும் அவ் வியலுமையை நான் காண்கிறேன். கரணம் தப்பினால் மரணம். நண்பரின் இடுகை போல் சொல்வது முறையற்றது. சற்று கிடுக்கிப் பாருங்கள். புரியும். குமுக மிடையங்களில் (social media) ஒருவர் இடுகையை மற்றோர் விழைவதும், முதுகில் தட்டிக்கொடுப்பதும், அவைநாகரிகத்தால் ஒன்றுஞ்சொலாது நகர்வதும், ”எழுதுவதெலாஞ் சரி”யென எண்ணுவதும், ஒருவர் எழுத்தை மற்றோர் முன்வரிப்பதும் முகநூலாருக்கு வேண்டின் நலம்பயக்கும். தமிழை வளர்க்குமா? சற்று ஓர்ந்துபாருங்கள். இதுபோற் போலிச்செய்திகள் பெரிதாய் உலவுங்காலத்தில். நம் அறிவியற் பார்வையைக் கூட்டிக் கொள்ளலாமே?
            ஏற்கனவே ”குமரிக்கண்டம், தமிழே முதன்மொழி, உலகில் உள்ளதெலாம் தமிழன் தந்ததே, நுல்லிய (million) ஆண்டுகள் முன் தமிழனிருந்தான்”.போன்ற உள்ளீடற்ற கூற்றுக்களை நம்ப, உலகிற் பலரும் அணியமாய் இல்லை. ”ஆப்பிரிக்கா விட்டு ஓமோசேப்பியன் வெளியானதே 70000 ஆண்டுகளென” ஒரு சிலரும். ”1.5/3.5 இலக்கம் ஆண்டென” வேறு சிலரும் தரவுகளோடு வாதாடுகையில், அதனூடே புகுந்து தமிழனின் நுல்லிய கால வாழ்வுக்கு நாம் தரும் தரவுகளென்ன? தொல்லியலா? மாந்தவியலா? ஈனியலா? குமரிக் கண்டம் என்பதற்கும் அடிப்படை வேண்டாமா? தவறாய்ப் புரிந்துகொண்ட இலக்கிய ஆதாரம் மட்டுமே போதுமா? வரலாற்றிற்கு முந்தைக் காலத்தில் இலக்கியம் உண்டோ? நாம் முந்தையர் என்று சொல்ல எத்தனை புலங்களில் ஆய்வு செய்தோம்? வெறும் வாய்ப் பந்தல் போடுவதே நம்மைக் கொண்டு செல்லுமா?
            சொற்பிறப்பியல் வழி தமிழுயர்த்த நினைப்போர், குமுக மிடையத்தில் அரசியற் பார்வை கொள்ளாது, பாவாணர் புகழை மட்டும் பாடாது, அருள் கூர்ந்து பாவாணர், ப.அருளி, கு.அரசேந்திரன் போன்றோரின் கட்டுரைகளை ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் புலமை கொள்ளுங்கள். ”முந்தையோர் எந்த அளவிற்குச் சலித்துப் பார்த்துக் கவனத்தோடு பொருள் சொன்னார்? சொற்பிறப்பியல் என்பது எப்படி நகர்கிறது? எவ்வொலி எப்படித் திரியும்?, எது முறை, எது முறையற்றது? நாம் சொல்வதன் ஏரணமென்ன?, மக்கள் பயன்பாடென்ன? முற்படுத்தும் கருத்துகளுக்கு இலக்கிய, கல்வெட்டு, பிறமொழி, பிறபுல ஆதாரங்களுண்டா?” எனப் பாருங்கள். தோன்றியபடி 4 எழுத்துகளைத் திருத்திப் போட்டு, அதன்வழி உன்னித்து Folk etymology காட்டுவது, முறையற்றது. (நான்சொல்லும் சொற்பிறப்பியலைக் கூட ஏற்கமறுப்போர் இணையத்திலுண்டு. அதுகண்டு நான் சினமுற முடியுமோ?). இதுபோற் கூற்றை எல்லா மொழியியலாரும் சட்டென ஏற்கார். சொற்பிறப்பியல் என்பது நம்முன் நடக்கும் ”அந்தர சால” மாகை (magic) அல்ல. மீறிச் செய்ய நாம் அடம்பிடித்தால், people would not take us seriously. ”Non-sensical arguments” என்று கூறி நகர்வர்.
            இத்தொடரில் நான் நெல்லை மட்டும் பேசவில்லை. மாழை, வணிகம், கடற் பயணம், நகர்ச்சியெனத் தமிழருக்கும், தென்கிழக்காசியருக்கும் பொதுவான பல்வேறு செய்திகளைப் பற்றியும் பேசுகிறேன். ”நெல்லும், தமிழரும் தென் கிழக்காசியாவும்” என்பது சரியாக ஆயப்படாத ஒரு புலம். இதில் மனத்தடையே மிகுதி. நான் சொல்வதிற் சிலவற்றை நீங்கள் ஏற்கலாம், சிலவற்றை ஏற்காதும் போகலாம். ”கிழக்கைப் பார்” என்பது ஒருவகை அரசியல் சூளுரையல்ல. மேலை நாடுகளைக் கண்டு ஏங்கும் பலதமிழருக்கு அது தொலைநோக்கை கற்றுத் தரும் முயற்சி. ”எல்லாமே தமிழெ”னும் “ஏகாந்தப் பார்வையிலிருந்து” சற்றிறங்கி வருவோம் நண்பர்களே! கிழக்கிலும் மேற்கிலும் கடல்வழி நாம் நகர்ந்துகொண்டே இருந்தோம். நம் பழம் நாகரிகம் அதன் விளைவாலும் ஏற்பட்டதே. ஈதலும் சரியில்லை. கொடுத்தலும் சரியில்லை. தருதலே மெய்க்கு நெருங்கியிருக்கும் (ஈ,தா, கொடு பற்றித் தொல்காப்பியம் படியுங்கள்.) 

            இனிப் Paddyக்கு வருவோம். ”Oryzus Sativa வின் விதப்புகளான Indica, Japanica” ஆகிய இரண்டுமே 8000/9000 ஆண்டுகள் முன் இந்தியாவுள் நுழைந்து கலந்ததாய்ப் பழம்புதலியல் (Paleobotany) சொல்லும். கங்கைக்கரையில் 8000 ஆண்டுகள்முன் நெல்பயிரிட்டாரோ என்றுகூடச் சிலர் ஐயுறுவார். மேற் சொன்னபடி இராக்கிகார்கில் பொ.உ.மு. 2430-2140 இல் கான்நெல்/ பயிர்நெல் சேர்ந்த Oryzus Sativa Indica நெல்லிருந்ததற்குச் சான்றுண்டு. கங்கைக்கரைக் கட்டுரைகளைப்பற்றி அறிய, Ancient India - New Research ed. Upinder Singh, Nayanjot Lahiri Oxford University Press, 2009 என்ற நூலிலுள்ள Human- Plant Interactions in the Middle Gangetic Plains: An Archeobotaical Perspective (From the Mesolithic upto Third Century BC) by Shibani Bose pp 71-123 என்ற கட்டுரையைப் படியுங்கள். ”இதுபோன்ற ஓர் அருமையான கட்டுரை, காவிரி, வைகை, தண்பொருநைச் சமவெளி பற்றி வெளிவராதா?” என்றும் ஏங்குகிறேன். கண்டேனில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.
            தமிழ்கூறும் நல்லுலகில் இதுபோல் புதலியல், தொல்லியல், தமிழியல் சேர்த்து ஆய்வுகள் நடப்பது மிகக்குறைவு. காட்டாகச் சொல்கிறேன். ஆயிரம் ஆண்டுப் பழமைகொண்ட வீராணம் ஏரியில் நாலைந்து ஆழ்துளைப் புரை இட்டு மண்கூறு (solil sample) எடுத்தாலே கடந்த 1000 ஆண்டு வெதணம் (climate), மழை நிலவரம், புதலியற் செய்திகள், பயிரிட்ட வகைகள், வெவ்வேறு நெல் வகைகள் எனப் பல உருப்படியான செய்திகளைக் கண்டுபிடிக்கலாம். அவற்றை இலக்கியத்தோடு பொருத்தியுங் காட்டலாம். அப்போதுதான் நம் இலக்கியத்தைப் பிறர் நம்புவர். அதையெல்லாம் செய்வதற்கு நாமோ, நம் அறிஞரோ, அரசுகளோ, கல்வி நிலையங்களோ என்றும் முயன்றதேயில்லை. நம் போகூழால், நம் பின்புலம் பற்றி நாமென்றும் ஆய்ந்ததில்லை. ஆனால் “எட்டுத்தொகை, பத்துப்பாட்டென” இலக்கியக் குறிப்புக்களை மேடை நிறையப் பேசுவோம். மீள மீளச் சொன்னதையே கூறின், சலிப்பு வராதோ? நம்பகத் தன்மை கூடுமோ? பேச்சொரு பக்கம். ஆய்வு இன்னொரு பக்கம் அல்லவா? இரண்டும் நமக்கு வேண்டுமே? இக்குறையை வெவ்வேறு அரங்குகளில் நான் சொல்வதாலேயே என்னை ஒதுக்கும் தமிழார்வலரும் தமிழறிஞரும் மிகுதி. நான் “தமில் வால்க” ஆளல்லன்.
            நெல்லெப்போது தமிழகம் போந்தது? எனக்குத் தெரியாது. நமக்குக் கிட்டிய சான்றுகளின் படி பொ.உ.மு. 490 இல் பயிர்நெல் பொருந்தலில் இருந்தது. இதற்குமுன் குறைந்தது பொ.உ.மு. 2250 இல் நெல் தமிழகத்தில் இருந்திருக்கலாம். (ஆனால் ஊகம் போதுமோ?) கரும்பை நம்மூர்க்குக் கொணர்ந்தது அதியமானின் முன்னோரெனச் சங்கவிலக்கியம் சொல்லும். நன்செய்ப் பயிர்களான நெல்லும் கரும்பும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வந்ததாகவே இற்றைப் புதலியலுஞ் (Botany) சொல்கிறது. நெல் கரும்பிற்கு முன் வந்திருக்கலாம். அது கங்கை வழியா? கடல் வழியா?- என்பதில் இன்னும் தெளிவில்லை. பொதுவாய்க் கங்கைக்கும் காவிரிக்கும் அக் காலகட்டத்தில் உறவிருந்ததா? தெரியாது. ஆனால் தமிழர் கடற்பயணம் 4230 ஆண்டுகள் முன் நடந்ததற்குச் சான்றுண்டு. ஈனியலின் படி ஆத்திரேலியப் பழங்குடிகளில் 11% பேருக்குத் தமிழரோடு தொடர்புண்டாம். (இதுபோக ஆத்திரேலியப் பழங் குடிகளுக்கும், நம்மூர்ப் பிரான்மலைக் கள்ளருக்கும் 65000 ஆண்டுத் தொடர்பு உண்டு.) 4500 ஆண்டுகள் முன் தமிழர் கடலிற் பயணித்திருக்கலாமென ஆதிச்சநல்லூர் அகழாய்வும் உணர்த்தும்.
(https://www.eurekalert.org/pub_releases/2013-01/m-gf011413.php?fbclid=IwAR2yBnP69hgoxretM2_1WVMkPtcG0OLKSb4RO1H5p9bfyY5UYqTdkyjl5fU.)
(https://www.bbc.com/news/science-environment-21016700?fbclid=IwAR2l6H5VI-uI1VI9EzKrpP3TcBS6fsAwAqpxl020Nma010oCfqZA2Kmqos)
            இன்னொருவகையில் தென்கிழக்காசியரும் தமிழகம் வந்திருக்கலாம். (வியப்பாகிறதோ?) ஏனெனில் 7500 ஆண்டுகள்முன் சுந்தாலாந்தின் மிச்சப்பகுதி கடலுளமிழ்ந்து ஒரு தீவக்குறையும், சில தீவுகளும் மட்டுமே எஞ்சின. கடற் கோளில் அவர் கண்டமிழந்தார்; நாமோ ஆதாரமின்றிக் கண்டம் இழந்ததாய்ச் சொல்லிக் கொள்கிறோம். நாம் பாராட்டும் நெல்லும், கரும்பும், தென்னையும், வாழையும், வெளியிலிருந்து வந்தவையே. (பலா பற்றிச் சொல்ல முடிவதில்லை.) இதுகேட்கும் பலர்க்கும் அதிர்ச்சியாகலாம். கடற்பயணவழி நம் பொருள்/சொற்கள் தென்கிழக்காசியா போகலாமெனில், அவர்சரக்கும் நமக்கு வரலாமே? அதேபோது, அரிசிப்பொருளும் சொல்லும் தமிழகவழி மேலையர்க்குப் போயிருக்கலாம். பிற்காலத்தில் நம்மிடமிருந்து ”Paddy” மலேசியா/இந்தொனீசியா போயிருக்கலாம் நாமும் கடல்வழி அங்கு போய் வந்தோமே? சரி, மெனக்கெட்டு, தமிழர் ஏன் கடற்பயணம் போனார்? தன்னேர்ச்சியாய் (accidental) தென்கிழக்காசியாவைக் கண்டபின் அதன் பயன்கருதி வணிகம் நடந்ததோ? அன்றி அக்கரைச்சீமை போகும்வழியை அவரிடமிருந்து தான் கற்றோமோ? இப்போது ஏதுஞ் சொல்லமுடியவில்லை.
            ஒருவேளை தென்கிழக்காசியாவிற்குப் போனது மணிகள்/மாழைகளைக் கருதியோ?- என்றுகூட எண்ணிப்பார்க்கலாம். ஏனெனில் பண்டமாற்றிற்கு, பொருளியல் வளர்ச்சிக்கு, இவை முகன்மையானவை. வெண்கலத்திற்குப் பெயர்போன தமிழகத்தில் வெள்ளீயக் (தகரக்) கனிமம் கிடையாது என்பது உங்களுக்குத், தெரியுமோ? ஆனால், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. செம்பை, அதன் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் ஆலையும் வெண்கலஞ் செய்யும் வார்ப்பாலையுங்கூட தண்பொருநைக்கு (தாம்பிரபருணிக்கு) அருகிருந்தன. இது தவிரக் கடந்த 1500 ஆண்டுகளில், தொடர்ந்து chozha bronze இற்குத் தமிழகம் பெயர் பெற்றது. அது எப்படி? வியப்பாக இல்லையா? சோழியன்குடுமி சும்மா ஆடிவிடுமா, என்ன? வெண்கலத்திற்குத் தேவையான வெள்ளீயம், என்பது நெடுங்காலமாய் அக்கரைச் சீமையிலிருந்தே நமக்குக் கிட்டியது. அந்தக் கதையையும் கீழே பார்ப்போம்..
            அக்கரைச்சீமை என்பது முதலில் மலேயா, தென்தாய்லாந்தைச் சேர்ந்த அக்காலக் காழகத்தைக் குறிக்கும். (பின்னால் பொருள் விரிந்தது.) கரு மண்ணைக் காழென்று சொல்லாய்வறிஞர் கு.அரசேந்திரன் குறிப்பார். பட்டினப்பாலையில் வரும் ”காழகத்து ஆக்கம்” நினைவுக்கு வருகிறதா? (பெரும்பாலும் அது தகரமாகலாம். நாம் தென்கிழக்காசியா போனதும் அதற்காகவே ஆகலாம். விரிவாகவே கீழே பார்ப்போம்) காழகம்>கழாகம்> கடாகமெனத் தமிழ்த்திரிவு தொடங்கும். பின் இது Kataha எனச் சங்கதம் போகும். Kadaram, Kidaram, Kidara என்று மேலுந்திரியும். சங்கத்தமிழ் புரியாக் காலத்தில் ஊற்றுத் தெரியாமல் கடாரத்தைக் கடன்வாங்குவார். Chieh-Cha எனச் சீனத்தின் I-Tsing தன் பயணநூலில் இந்நாடுபற்றிப் பதிவார். Kalah என அரபியிலும், Quedah என மேல்நாடுகளிலும் சொல்வர்.
            [காழெனில் வேறு செய்திகளும் நினைவு வரும் பொதுவாய்க் கருப்பு நம்மை விடாது தொடரும். குமரிக்கண்டக் கருத்தொதுக்கி மொழிவழி நோக்கின், நம்முறவுகள் புரியும். யா>யாமம்= கருப்பு. யாம்> ஸ்யாம்>அசோம்>அஹோம்= அசாம் குடிகள். அசோம்>அசாம்; யாம>ஸ்யாம்>சாம்>சான்= பர்மாப் பழங் குடிகள். ஸ்யாம்= தாய்லந்து. ஸ்யாம்>சாம்= தாய்லாந்தின் பழங்குடிகள்; கம்போடியாவிலும் உண்டு. சாம்>சம்>சம்பா= வியத்நாம் குடிகள். வியத்நாமிற்கே ’சம்பா’ என்ற பழம்பெயருண்டு. யா>யாவம்>யாவகம்> ஜாவகம்= இந்தோனேசியாவின் முகனத்தீவு (மற்ற தீவுகளைப் பற்றி வேறு இடத்திற் சொல்வேன்); யாகம்>ஞாகம்>நாகம்> நாகர்= கருப்பர். யாகர்>யக்கர்> யக்‌ஷர்= ஈழப் பழங்குடிகள். இவரை இயக்கர், நாகரென்றும் அழைப்பர். நாகர்>negro, உலகெங்கும் பரவிய இப்பெயரின் சொற்பிறப்பு ஒருகால் நம்மூர் ஆகலாம். (வியப்பாகிறதா?) ”க்க”, “க்ர” ஆவது இந்தையிரோப்பியப் பழக்கம். நாகர்/நக்கவர் = கருப்பர். (அம்மணப் பொருள் வேறுவகையில் எழுந்தது.) நக்கவர்>நக்கவரம். இதை நாகதீவம் என்று அரபிகளும் குறிப்பிட்டார். அசாமிற்குப் பக்கம் இருப்பது நாகாலாந்து. பர்மாவில் உள்ள சான் குடிகளோடு நாகாலாந்து மக்கள் தொடர்புற்றவர்.
            இனிக் கருமுதல்>கம்முதல்= ஒளிகுன்றல்; கம்மம்>கம்மை= தமிழிலும், கெமேரிலும் கருப்பு. கமர்>கெமர்= கம்போடியர். அந்துவன்>அந்துமன்> அந்தமான் என்பதும் கருப்பே. (அந்துவன் சேரலென முதற் சேரனைச் சொல்கிறோமே? அவனுங் கருப்போ? குட்டி அந்துவன் தீவுப் பழங்குடிகளின் பெயர் ஓங்கு (Onge/aung). இதன்பொருளை அம்மொழியில் இன்னுந் தேடுகிறேன். தெற்கு/நடு அந்துவனின் ஜாரவா மக்களுக்கு அவர்மொழியில் ஓங்கென்றே பெயர். (ஜாரவா=- இந்திக்காரர் வைத்த பெயர்) ஜாரவா மொழிக்கும் தமிழுக்குமுள்ள உறவுச்சொற்களை வேறுதொடரில் சொல்வேன். மேலேபோனால் அக்கால அங்கம் (இக்கால வங்கம்) கூட ஓங்கின் திரிவாகலாம். வங்காளிகளுக்கும், ஓங்குகளுக்கும், தமிழருக்கும் ஈனியல் தொடர்புண்டு. ஆப்பிரிக்காவில் தொடங்கிய பழம்மாந்தர் நம்மூர் வந்து, கடற்கரை வழி தென்கிழக்காசியா போய், முடிவில் ஆத்திரேலியா சேர்ந்தாரே, அவருங் கருப்பே. நாமும் கருப்பு. நம்மில் ஊடிவரும் சிவப்பும் வெளுப்பும், பழுப்பும் பின்னால் ஏற்பட்டவை புகாரைத் தலைநகராக்கிய நாகநாடு, சோழநாட்டுப் பகுதி. நாகபட்டினம், நாகர்கோயில், சம்பாபதி (புகார்) இவையெலாம் இத்தொடர்பு காட்டும். வடதமிழகத்தின் ஒரு முகன்மைக் குமுகரை சாம்பவர் என்பார். சாமளம் நம்மை விடாது].
            வெண்கலம் மட்டுமின்றிப் பித்தளையும் கூட நம்முடன் தொடர்புள்ளதே. துத்தநாகம், காரீயம், வெள்ளீயம், செம்பு, வெண்கலம், பித்தளை போன்ற மாழைகளும், அட்டிழைகளிலும் [alloy (v.) c. 1400, "mix (a metal) with a baser metal," from Old French aloiier, aliier "assemble, join," from Latin alligare "bind to, tie to," from ad "to" (see ad-) + ligare "to bind, bind one thing to another, tie" (from PIE root *leig- "to tie, bind"). சங்கதம் இதை “மிஸ்ரலோக”மாக்கும்.] தமிழரின் பங்கு கணிசமானது. பழந்தமிழக எஃகு/இரும்பைப் பேசும் தொல்லியலார், அட்டிழைகளையும் பார்க்க வேண்டும். இரும்புக் காலத்தின் முன் தமிழருக்குச் செம்புக்காலம் கிடையாது என்பது, ஆதிச்சநல்லூர் பார்க்கின், அவக்கர முடிவாகும். செம்பு எங்கு கிடைத்தது? நாகம் (Zinc), காரீயம் (Lead), வெள்ளீயம் (Tin) போன்றவை எங்கு கிடைத்தன? இனக்குழு வரலாற்றில் எப்படியவை எழுந்தன? இவற்றை நாடி தமிழன் எங்கு சென்றான்? போனவிடங்களில் கொசுறாகச் சிலவற்றை அள்ளிக் கொணர்ந்தானா? உள்ளூர் வாழ்வை இக்கொசுறுகள் மாற்றினவா? தமிழகத் தென்பகுதியை நாமின்னும் சரியாய் ஆயவில்லையோ?- என்ற கேள்விகளும் எழுகின்றன.
            இன்னொன்றையும் எண்ணிப்பாருங்கள். முல்லைநில வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்றவற்றை விளைவித்துத் துய்த்த தென்பாண்டித் தமிழன் எப்படி வெளியூர் நெல்லுக்கு மாறினான்? நீர்ப்பாசனம் இங்கெப்படி முகன்றது? ஒருவேளை நெல்லை வைத்தே மருதம் நம்மில் முகிழ்த்துக் கிளர்ந்ததோ? ”அரிசிச்” சொல் எங்கிருந்து நமக்கு எப்படிக் கிடைத்தது? வ்ரிஹி என்று சங்கதத்தைத் தூக்கிவந்து, ”அரிசிக்குச்” சிலர் அணைகொடுப்பதை நானேற்பதில்லை. பார்லி, கோதுமை சாப்பிட்டவர் அரிசிக்குச் சொல்தந்தாரென்பது சிறிதும் நம்பமுடியாதது. (அரிசியை வேற்றுமொழிச் சொல்லென நான் சொன்னவுடன் என்மேல் சீறிப்பாயுந் தமிழர் நிறையவே இருக்கலாம்.) தமிழர்க்கும் தென்கிழக்காசியருக்குமான தொடர்புகளென்ன? இப்படி அடுத்தடுத்துப் பார்க்கப் போகிறோம்.

            செம்பு 7 பங்கும் வெள்ளீயம் (=தகரம்) 1 பங்கும் கொண்ட வெண்கலத்தில் தான் தமிழர் தென்கிழக்காசியா போன கதையின் சுவையாரம் தொடங்குகிறது {Bronze is an alloy consisting primarily of  copper, commonly with about 12-12.5% tin and often with the addition of other metals [such as aluminium (அலுமினியம்), manganese (காந்தயம்), nickel (நவையம்) or zinc (துத்தநாகம்)] and sometimes non-metals or metalloids [such as arsenic (நஞ்சகம்), phosphorus (ஒளியகம்) or silicon (மண்ணகம்)]}. [1968/69 இல் கோவை நுட்பியற் கல்லூரியின் முத்தமிழ் மன்றம் வெளியிட்ட ”தொழில் நுட்பம்” மலரில், “தனிமங்களின் முறைப்பட்டியல்” என்ற கட்டுரையை வெளியிட்டேன். அதை இற்றைப் படுத்தி என் வலைப்பக்கத்தில் வெளியிட முயல்கிறேன். அதைக் கொண்டு அங்கமில் (inorganic) வேதியல் முழுதையும் நல்ல தமிழில் பெரும்பாலும் சொல்லிவிடலாம். இப்போதைக்குப் பொறுத்து இருங்கள்.] இப்பகுதியில் தொடர்புள்ள மாழைச் செய்திகளைப் பார்ப்போம்.
            அதுவென்னவோ, தெரியவில்லை. ”சிந்து நாகரிகம் தமிழரது” என்று சொல்வதிலும் கேட்பதிலும் புல்லரித்துப் போகும் நம்மிற் பலரும் பொ.உ.மு. 2500-1750 ஐச் சேர்ந்த ஆதிச்சநல்லூரைக் கொஞ்சமும் கண்டு கொள்வதில்லை. (2004 இற்கு அப்புறம் தொல்லாய்வு அங்கு நடைபெறவேயில்லை. நம்மூர்ப் போராளிகளுக்கும் வேறு வேலை வந்துவிட்டது. அரசியல் கட்சிகளுக்கும் அக்கறையில்லை. ”சிந்து சமவெளி” என்பதிலே நம்மூரார் குளிர்ந்து போகிறார். வேறு வழியின்றி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டுக் கேட்கவேண்டி உள்ளது. வெறும் பேச்சில் முழம்போட்டே நம் பொழுதுகள் கழிகின்றன. இன்னொரு பரப்புரையும் நடக்கிறது. சிந்து மாந்தர் திராவிட இனமென ஈனியல் சொல்கிறதாம். எனவே தமிழர் வடமேற்கிருந்தே வந்தாராம். இது சொல்லி நம்மை 3000 BC ஈரான் எலாமைட்டிற்குக் கொண்டு செல்வார். கொஞ்சம் பொறுங்கள் ஐயா! ஆதிச்சநல்லூரில் எவ்வளவு பரப்பு அகழாய்ந்தீர்? 0.1% தேறுமா? அதுவே, தமிழரின் பழமை, 3750 ஆண்டுகள் இருக்குமெனக் காட்டுகிறதே?
            அப்புறமென்ன 3000 BC ஈரான்? ஆதிச்சநல்லூர்க் காலவரங்கைத் (range of time) துல்லியமாய் நிறுவ, இன்னும் எவ்வளவு தொல்லாய்வு வேண்டும்? செய்தோமோ? [ஆதிச்சநல்லூர் தாழிகள் மூன்று அடுக்கில் உள்ளது என்பார். முன் ஆய்ந்த பிரெஞ்சுக்காரர் மூன்றாம் அடுக்கின் காலத்தை பொ.உ.மு. 2000 என்பார். இப்போது நீதிமன்றத்தில் பொ.உ.மு.905 என இறக்குகிறார். அண்மையில் காலங் கண்ட தாழி மேலா, நடுவா, கீழா? தெரியாது. திரு இராம மூர்த்தியின் அறிக்கைக்குக் காத்து நிற்போம். ”என்னமோ நடக்குது, மர்மமாய் இருக்குது.” என்றுமட்டும் சொல்லத் தோன்றுகிறது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டுமென்பார் வள்ளலார். இப்போதைக்கு வாய்மூடிக் கொள்கிறேன்.) கீழடிக்குக் கொடிபிடிப்போர் ஆதிச்சநல்லூர்க்கு அறைகூவுக! அதற்குள் தமிழன் வந்தேறி எனவுரைக்கப் பலரும் முயல்கிறார். அத்தனை மகிழ்வா? கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவர் வானமேகி வைகுன்றம் போனாராம். சரி வெண்கலத்திற்கு வருவோம்.
            ஆதிச்சநல்லூரிலிருந்து கிழக்கே ஆற்றுவழி 25 கி.மீ ஏகின், கொற்கை வந்து விடும். தொல்லாய்வின்படி இதுவே தமிழகத்தின் பழந்துறைமுகம். (அற்றைக் கடல் இற்றைவிட 8 கி.மீ உள்தள்ளியது. ஈனியல் சொல்வதுபோல் பொ.உ.மு. 2350 இல் தமிழர் கடல்வழியே ஆத்திரேலியா போனது மெய்யெனில், கொற்கை/ ஆதிச்சநல்லூரின் பழமை பொ.உ.மு.1750 இற்கும்முன் சிந்துவெளி அளவிற்குப் போவதும் உறுதியே. என் புரிதலில் 2 நாகரிகங்களும் பெரும்பாலும் சமகாலத்தவை. சிந்துநாகரிகம் போல் இங்கும் வெண்கலப் பொருள்கள் கிட்டியுள்ளன. ஆதிச்சநல்லூர் வெண்கலத்தில் 23% வரைக்குங் கூடத் தகரஞ் சேர்த்தாராம். (பொதுவாய் வெண்கலத்துள் 14% க்குள் தான் தகரமிருக்கும். கணக்கதிகாரமோ 20% வரைக்குங் கூடச் சொல்லும்) சிக்கலான இச் சேர்க்கையை எப்படிச் செய்தாரென இற்றை மாழையியலார் வியப்பார். தவிரச் செம்பு 8 பங்கும், தகரம் 1 பங்கும் காரீயம் 4 பங்கும் கலந்த, தளவு> தரவு>தரா (heavy leaded bronze) வெண்கலமும் கூட நம் புழக்கத்திலிருந்ததாம். காரீயமுஞ் செம்புங் கொண்ட இந்த அட்டிழையை இக்காலத்தில் கவண் மாழை (gun metal), செம் பித்தளை (red brass) என்றழைப்பர்.
            இனி, வெண்கலஞ் செய்யச் செம்புவேண்டுமே? தாம்பர பொருநை, தாம்பர அம்பலம், தேரிக்காடுகள் போன்றவை செம்பின் தமிழக இயலுமையை உணர்த்தினும், செம்புக் கனிமம் நெல்லையிற் பேரளவு கிட்டியதற்குச் சான்று இல்லை. (இக்கால விழுப்புரம் மாவட்டத்தில் கொஞ்சம் செம்புக் கனிமம் உண்டு.) ஆதிச்சநல்லூரிற் செம்பு சிறிது பிரிக்கப்பட்டதாயும், அதேபொழுது கணிசமான செம்பு, வெண்கலப் பொருள்கள் கிட்டியதாயும் தொல்லாய்வு சொல்லும். கடலுக்கப்பால் ஈழத்திலும் தாம்பரம், மணிகள் (குறிப்பாய் மரகதம்) கிடைத்ததாம். பழந்தமிழகத்திலிருந்து ஈழம் வேறு பட்டதல்ல. முகன நிலத்திலிருந்து 3000/4000 ஆண்டுகளுக்கு முன் அது தீவாய்ப் பிரியுமுன், நம்மைத் தொட்டுந் தொடாதும் இருந்தது. இல்>ஈல்> ஈழ்>ஈழம். ஈல்>ஈர், இல்>இலு>இரு>இரள்> இரண்டு; இல்> இலு>இலங்கை போன்ற சொற்கள் நிலம்பிரிந்த செய்தியைக் குறிக்கும். இலங்கை என்றசொல் சிங்களமல்ல. அதுவுந் தமிழே. எல்லாவற்றையும் ”டக்”கென இன்னொரு மொழியாய்ச் சொல்லிச் சொல்லி நாமிழந்தது மிக அதிகம்.
            இந்தியாவிற் செம்பு அதிகங் கிட்டியது வடக்கே தான். அதே பொழுது அச் செம்பு அங்கிருந்து நமக்குக் கிட்டாதும் இல்லை. வணிகம் எதற்கு இருந்தது? துணைக் கண்ட வணிகத்திற்கு உதவுவதாய் அக்காலத்தில் உத்தர, தக்கணப் பாதைகள் இருந்தன. பொ.உ.மு. 600-200களில், நந்த-மோரியர், இப் பாதைகளைக் காவந்து செய்தார். (விரிவாக என் “சிலம்பின் காலம்” நூலிற் கண்டு கொள்க!) இப் பாதைகள் எப்போது ஏற்பட்டன என்பது இன்னும் ஆயாத ஒன்று. கோதாவரி ஆற்றங்கரையில் நூற்றுவர் கன்னரின் படித்தானத்திலிருந்து (Paithan closer to Aurangabad, Maharashtra) அசந்தா, எல்லோரா வழி வடக்கே நகர்ந்து, தபதி, நருமதை ஆறுகளைக் கடந்து, மகேசர் வந்து, பின் கிழக்கே திரும்பி, குன்றுப் பகுதியில் (Gond country) கோனாதா வந்து, உஞ்சைக்குப் (Ujjain) போய், பில்சா (Bhilsa அல்லது விதிசா Vidisha) வந்து, நேர் வடக்கே திரும்பி, தொழுனை (= யமுனை) ஆற்றங்கரையின் கோசாம்பி (kosam) வந்து, அயோத்தி/ சாகேதம் (Fyzaabaad) வந்து, முடிவில் சாவத்தி சேருவதையே தக்கணப் பாதை என்பர். தெற்கே தகடூரில் தொடங்கி கருநாடக ஐம்பொழில் (Aihole) வழி படித்தானம் போன பாதை தக்கணப் பாதையின் நீட்சியாகும்.
            பழங்காலத் தமிழரை இந்திய வடபகுதிகளோடு இணைத்தது தக்கணப் பாதையும் அதன் நீட்சியுமே. நூற்றுவர் கன்னர் நாணயங்கள் தமிழ், பாகதம் எனும் 2 மொழிப் பயன்பாட்டைக் காட்டின. சங்ககாலப் பாலைப் பாக்கள் சொல்லும் வணிகம் இவ்வழி நடந்தது. இந்தியாவின் பழஞ் செப்புச் சுரங்கங்கள் தக்கணப் பாதையோடு தொடர்புற்றன. இராசத்தானம் கேத்ரியில் இருந்து 660 கி.மீ. தள்ளி உஞ்சை வரத் துணைப் பாதையும் இருந்தது. இதே போல் மத்தியப் பிரதேசம் மலஞ்சுகண்டிலிருந்து தக்கணப் பாதையின் விதிசா (மகதத் துணைத் தலைநகரம். அசோகன் பட்டத்திற்கு வருமுன் இங்கே ஆளுநன்.) வர 420 கி.மீ ஆகும். இது போக சார்க்கண்டு சிங்க்பூமிலும் செம்பு கணிசமாய்க் கிட்டியது. பல்வேறு சாத்துகளின் வழி பெரு வண்டிகளில் செம்புக் கனிமத்தைத் தக்கணப் பாதையால் தெற்கே கொணர்வதில் அன்று எந்தச் சரவலுமில்லை. இது போல் பொ.உ.மு. 2600 களில் சிந்து வெளியிலும் இராசத்தானச் செம்பு (ஓமான் செம்பும்) கிடைத்தது. எனவே செம்பு கிடைப்பில் நாம் சிந்து வெளியாரிடம் வேறுபட்டவர் இல்லை.
            [சிந்து வெளியார் என்போர் தமிழர் ஆகலாம். அது முற்றிலும் வேறு ஆய்வு ஆகும். அதை வைத்துச் சிந்து வெளியிலிருந்தே தமிழர், தமிழகம் வந்தார் என்பது ஓர் ஊகம் அவ்வளவு தான். அதற்கான ஆதாரம் இதுவரை வெளி வந்ததைப் படித்தால் ஏற்கும் படியில்லை. ஓய்வுற்ற திரு,. பாலகிருட்டினன், இ.ஆ.ப, வின் முயற்சியால், ஐராவதம் மகாதேவனைப் பின்பற்றி, ”பானைப் பாதை” என்ற வாதமும் இப்போது கிளம்பியுள்ளது. பல்வேறு தமிழரும் இதை அப்படியே நம்புகிறார். இதுவே உண்மையென்றும் சொல்லித் தமிழறிஞர் இடையே இப்போது பரப்புரையும் குழப்பலும் நடக்கிறது. நான் புரிந்துகொண்ட வரை புறம் 201 ஆம் பாடலைக் கொண்டு தமிழர் துவாரகையிலிருந்து தெற்கே வந்தார் என்று சொல்ல முற்படுவது குறைப் புரிதலாகும். அது வேளிரின் நகர்ச்சி பற்றிப் பேசுகிற பாடல். வேளிர் மட்டுமே, தமிழரா, என்ன? வேறு யாருமே இல்லையா? வேளிர் தமிழகத்திற்கு வந்து சேரும் போது மற்ற தமிழர் இங்கு இருந்திருக்கலாமே? இல்லையென்று சொல்ல ஆதாரங்கள் உண்டா?)
            ஒருகாலத்தில் இருக்கு வேதத்தின் காலத்தைக் கூட்டிக் கொண்டிருந்தார். இப்போது பெரும்பாலும் அது பொ.உ.மு. 1500-1200 என்ற முடிவிற்குப் பலரும் வந்தாகி விட்டது. அப்புறம் ஆரியர் இங்கேயிருந்து தான் இரோப்பா போனார் என்றார். ஆரியர் பெரும்பாலும் இந்தியாவினுள் வந்து குடியேறியவர் என்பது இப்போது, அரியானாவின் Rakhigarhi இல் நடந்த தொல்லாய்வின் வழி பொடிப் பொடி ஆகிவிட்டது. சிந்து நாகரிகம் என்பது திராவிட/தமிழிய நாகரிகம் என்று ஆகிவிட்டது. ஆனால் சிந்துவிலிருந்து தான்.தமிழர் தமிழகம் வந்தாரென்பது ஒரு புதுவிதத் திரிப்பு. இதற்குதவும் வகையாய் ஆதிச்சநல்லூரில் 2004இல் கிடைத்த எச்சங்களின் காலத்தைப் பொ.உ.மு.905, 791 என்றது வாய்ப்பாகப் போய்விட்டது. என்னைப் பொறுத்தவரை 2004 ஆம் ஆண்டு ஆய்வு குறைப்பட்ட ஆய்வு. இன்னும் ஒருமுடிவிற்கு வந்துசேர முடியாத நிலையிலேயே நாம் உள்ளோம். அண்மையில் இன்னொரு புதுப்பூதங் கிளம்பியுள்ளது. சிந்தவெளி நாகரிகம் பொ.உ.மு, 9000 ஆண்டுகள் முந்தையதாம்! இதையெப்படி எதிர் கொள்ளப் போகிறோம்? தொல்லியலில் நடக்கும் அரசியல்/குழப்பம் முடியவே முடியாது போலிருக்கிறது. “எப்படியாவது தமிழரின் பழமையைக் குறை” என்பதே நோக்கம் போலும்.]

            சரி செம்பின் ஊற்றையும் அது வரும் வழியையும் பார்த்தோம். வெண்கலஞ் செய்ய ஈயம் வேண்டுமே? ஈயத்தில் காரீயம், வெள்ளீயமென 2 வகை சொல்வார். காரீயம் அதிக அணுவெடையும் (207.2), குறை உருகு வெம்மையுங் (melting temperature 327.5 பாகை செல்சியசு) கொண்டது. வெள்ளீயமோ குறை அணுவெடையும் (118.71) இன்னுங் குறை உருகு வெம்மையும் (231.9 பா.செ.) கொண்டது. வேறிரு மாழைகளின் உருகு வெம்மையை (செம்பு 1085 பா.செ., இரும்பு 1538 பா.செ) இவற்றோடு ஒப்பிட்டால் நான் சொல்வது புரியும். 2 ஈயங்களும் குறைவெம்மையில் எளிதிலுருகி நீர்மமாகிவிடக் கூடிய மாழைகளே. இதுபோல் இயலும் மாழைகள் மிக அரிது. [அறை வெம்மையில் நீர்மமாய் இருப்பது இதள்(Mercury) மட்டுமே]
            நீர்மங்கள் (நீர் போன்றது நீர்மம்) தமக்கென வடிவங்கொள்ளா. ஓர் ஏனத்தில் ஊற்றுகையில், ஏனவுருக் கொள்ளும். இன்னொரு ஏனத்திற்கு மாற்றின் இவை இழியும் (= சாரையாக வடியும்) இதனால், ஆங்கில liquid ஓடு இணை காட்டி நீர்மத்தை இழிதையென்றுஞ் சொல்லலாம்.
(வழக்கம்போல்  ஆங்கிலச் சொல்லிற்கு நான் இணைகாட்டுவதை பலரும் மறுப்பார். இந்தை யிரோப்பியத்தோடு தமிழை இணைக்கலாமா? ”என்னவொரு அவச்சாரம்?” என்றுஞ் சிலர் எண்ணுவர். மற்றுஞ் சிலரோ வில்லியம் சோன்சு, மாக்சு முல்லர், எல்லிசு, கால்டுவெல் சொன்னவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு அப்புறம் பாவாணர்வழி ஒப்புமைகளைப் புறந்தள்ளி தமிழியம், இந்தையிரோப்பியனிடை கடன்வாங்கல் தவிர்த்து உறவே இல்லென்பார். எனினும் ஆழ்ந்துநோக்கின் 1000, 2000 சொற்களுக்குமேல் உறவுள்ளன, ஆய்வு செய்யத்தான் ஆளில்லை. என்னைத் திட்டுவதிலும், அவதூறு பேசுவதிலும் நேரஞ்செலவழிப்போர் நான் சொல்வதை உள்வாங்கிக் கொஞ்சமேனும் ஆய்வில் ஈடுபட்டால் நல்லது)
            பொதுப்பெயராய் மட்டுமின்றி ”இழியம்” என்பது விதப்புப் பொருளுங் காட்டும். குறை வெம்மையில் உருகி இழியும் 2  மாழைகளையும் இழியம்>ஈயம் என்போம். (வட தமிழகத்தில் வாழைப்பழம்> வாயப்பயம் ஆவதில்லையா? இழியம்>ஈயம் என்றாவதும் இதுபோற் பழக்கத்தால் தான். கருப்பீயம் காரீயமாயும், வெளிறிய ஈயம் வெள்ளீயமாயும் ஆனது. காரீயத்தை ஆங்கிலத்தில் இழிதை (Lead) என்பார். சொல்லூற்றுத் தெரியாத வேதிப் பெயராய் plumbum என்பதும் புழங்கும். தொடக்கத்தில் காரீயத்தால் குழாய் செய்ததால் (plumbing), plumbum குழாயைக் குறிக்குமோ என ஐயுறுவார். ”புழல், புழம்பிற்குத்” தமிழில் குழாயென்றே பொருள். தமிழ் அடிப்படை இல்லாது, Lead, plumbum போன்ற சொற்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. (இதைப் போல் சொல்வதால் தான் சிலருக்கு நான் பொல்லாப்பு ஆவேன். அதெப்படி Lead, plumbum- இற்குத் தமிழ்மூலங் காட்டலாம்? பலராலும் இவற்றை நம்ப முடிவதில்லை.) இழியம்>ஈயத்தோடு இன்னொரு சொல்லும் தமிழிலுண்டு. வழிங்கம்> வயிங்கம்>வங்கம். இதுவும் உருகியிழியும் மாழைகளான காரீயம், வெள்ளீயம், துத்தநாகம் போன்றவற்றைக் குறிக்கும். இனி வெள்ளீயத்திற்கு வருவோம். இதற்கும் உருகி இழியும் இயல்புண்டு.
            வெள்ளீயத்தின் நிறம் என்பது முற்றிலும் வெள்ளையல்ல. வெளிறிய கருமை. தகதகவெனும் ஒளிக்குறிப்பில் தகளம்>தவளம் ஆனது, தகளம்>தகடம்>தகரம் என்பது வேறு வகையில் வெள்ளீயத்திற்கான சொல் வளர்ச்சி. தவிர, வெள்ளீயத்தை மிகவெளிதில் அடித்துத் தட்டித் தகடாக்கலாம். தள்>தட்டு> தட்கு>தக்கு>தகு.. இதனாலும் தகு>தகள்>தகடு>.தகடம்>தகரம் ஆகும். ஆங்கிலத்தில் வரும் stannum, tin போன்றவையும் இவற்றோடு தொடர்பு உடையவை தாம். இன்று நுட்பியல் வளர்ந்துவிட்டது. எல்லா மாழைகளையும் சூடாக்கித் தகடாக்கி விடலாம். தகரக் கனிமம் (cassiterite SnO2 associated with lepidolite bearing pegmatites) சட்டிசுக்கர் தண்டேவாரா மாவட்டத்தில் இன்றுங் கிடைக்கிறது. ஆந்திரக் காக்கிநாடாவிலிருந்து வடக்கே 330 கி.மீ தொலைவில் இச்சுரங்கம் அக்கால அடர்காடுகள், மலைகளுக்கு நடுவிலிருந்தது. யாருக்கேனும் அந்தக் காலத்தில் இதனிருப்புத் தெரிந்ததற்கு இதுவரை சான்றில்லை.
            (நம்மூரில் உள்ள தகடூர், தகளம்>தகடம் பயனுற்ற ஊரா? அல்லது கிட்டிய ஊரா? ஒருவேளை பின்னால் இரும்பு கிடைத்துத் தகடாக்கினாரா? தெரியாது) வெண்கலச் சிறப்புற்ற தமிழர்க்கு வெள்ளீயம் எப்படிக் கிடைத்தது? அங்கு தான் தமிழரின் கடற்பயண முகன்மை புரிகிறது. பர்மா, தாய்லாந்து, மலேசியா, இந்தொனீசியா ஆகியவற்றை நம் தமிழர் அக்கரைச்சீமை என்பார். கம்போடியா, சம்பா (வியட்நாம்), பிலிப்பைன்சு கூடத் தமிழர் அறிந்தவையே. மொலுக்காத் தீவுகளின் மணப்பொருள் தேடியும் தமிழர் போனார். பெருத்த ஆமையோட்டுப் பரிசல்களும் கடற்பயண வழியில் தேடப்பட்டன. [https://www.ancient-origins.net/news-history-archaeology/2000-year-old-lost-city-rhapta-may-have-been-found-tanzania-006234] பல்வேறு மணிகள் தேடியும் தமிழர் கடல் தாண்டி நகர்ந்தார்.
            கடல் தாண்டுவதில் ஈழஞ் சேர்க்காதது நமக்கு ஏற்கனவே அது தெரிந்தது என்பதாற்றான். ஈல்>ஈழ்>ஈழம் என்பது முகனை நிலத்தில் பிரிந்த நிலம் எனும் ஓர்மையால் ஏற்பட்டது. இற்றைக்கு 18000 ஆண்டு தொடங்கி 2500 ஆண்டு வரை சிச்சிறிதாய் இப்பிரிவு ஏற்பட்டது. பொ.உ.மு. 1000-500 அளவில் கோடிக்கரை, யாழ்ப்பாணம், தலைமன்னார், தனுக்கோடி, ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட கடலடி நிலமும், குமரியின் தெற்கில் 250 கி.மீ. நீள நிலப்பரப்பும் முற்றிலும் அழிந்தன. (நான் குமரிக்கண்டத்தை நம்புவதில்லை. ஆனால் தமிழ்நாட்டோடு ஒட்டிய குமரிநிலம் அழிந்ததை நம்புகிறேன்.) இவ்வழிவிற்கு அப்புறம் சோழரிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் இற்றைப் புதுக்கோட்டை மாவட்டம்), சேரரிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் (பெரும்பாலும் கேரளத் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டம்) பாண்டியர் பறித்துக்கொண்டார். (இலக்கியத்தில் இது பதிவாகியது.)
            65000 ஆண்டுகள் முன் ஆப்பிரிக்காவிலிருந்து நெய்தல் மாந்தர் (costal people) தமிழகம் வந்தபோது ஈழம் தமிழகத்தோடு சேர்ந்திருந்தது. இருப்பினும் அவ்வெச்சங்கள் தமிழகத்தில் கிட்டவில்லை. ஓர் ஈழக் குகையில் 30000-40000 ஆண்டுகளுக்கு முந்தைய சான்று கிட்டியது. விழுப்புரம் மாவட்டத்தில் 10000.15000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு குழந்தையின் மண்டையோடு கிளர்ப் படிவமாய்க் (glazed fossil) கிடைத்தது. (நம்மில் பலரும் இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய அத்திரம்பாக்க ஓமோ எரக்டசு மாந்தரோடு நெய்தல் மாந்தரைக் குழப்பிக் கொள்கிறோம். அத்திரம்பாக்க ஆய்வு இன்றும் பலரை ஓர்ந்துபார்க்க வைக்கிறது தான். ஆனால், நம்மை எந்தப் பாதைக்கு அது இட்டுச்செல்லும்? தெரியாது.) மணிமேகலையின் படி ஈழத்திற்கு இரத்தினத் தீவெனும் பெயருமுண்டு. ஈழமென்ற சொல் கூட ஈலன்>ஐலண்ட் (island) ஈல் (isle) எனும் இந்தையிரோப்பியச் சொற்களைத் தூண்டியிருக்கலாம். ஆங்கிலச் சொற்பிறப்பியலில் island, isle ஆகியவற்றின் ஊற்றுவாய் தமக்குத் தெரியாது என்பார். ஈழமெனும் குறிப்பிட்ட விதுமைச் சொல் உலகெங்கும் தீவுகளைக் குறிக்கப் பொதுமைப்பட்டிருக்கலாம் என்பது என் முன்னீடு.
            மணிபல்லவம் என்றபெயர் பெரும்பாலும் மணிமேகலா தெய்வத்திற்கும் புத்த நெறிக்கும் தொடர்புடையது ஆகலாம். யாழ்ப்பாணத்திற்கு அருகிய நாகனார் (>நாயினார்>நயினார்) தீவே மணிபல்லவம் என்று சிலர் சொல்வர். ஒரு வேளை முழு ஈழத்தீவிற்கும் இது இன்னொரு பெயரோ எனவும் தோன்றுகிறது. இதையெப்படி நிறுவுவது? இச்சொல் மணி, பல்லவமெனும் இருசொற் புணர்ச்சியால் ஆனது. ’மணிபல்லவத்தைக்’ கவனித்தால்,’ப’ வலி மிகாதிருப்பது புலப்படும். “புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்” என்றநூலில் மலேசிய அறிஞர் செ. சீனிநைனா முகம்மது (இலக்கணந் தவறாது தமிழ் ஆவணம் எழுத விழைவோர் இந்நூலைப் படியுங்கள். அடையாளம் வெளியீடு. 1205/2 கருப்பூர்சாலை, புத்தநத்தம் 621310, தொலைபேசி 04332 273444) ஒரு விதி சொல்வார். நிலைமொழி  இ,ஐ,வு,ய்,ர்,ழ்,ம்- என முடியும் பெயர்ச்சொல் ஆகவும், வருமொழி ககர, சகர, தகர, பகரத்தில் தொடங்கும் பெயர்ச் சொல் ஆகவும் இருந்தால், வலி மிகாதென்பார். இதன் காட்டுகளாய் காய்கறி, பசி பட்டினி, ஈவுசோவு, இலைதழை, கூழ்கஞ்சி, குலங்கோத்திரம் போன்றவற்றை சொல்வார். இக்கூட்டுச் சொற்களின் இருவேறு பகுதிகள் ஒரே பொருளையும் இருவேறு தோற்றங்களையுங் காட்டுவதைக் கவனிக்கலாம்.
            கறி =  உணவிற்காகக் கடிப்பது. கறிக்காகும் காயும், கறிக்காகாத காயும் உலகில் உண்டு. அதேபோல் பசி தானாயும் எழலாம். பட்டினி கிடந்தும் எழலாம். பட்டினியாலெழும் பசி விதப்பான சேர்க்கை. சோர்வால் வரும் ஈ(ர்)வு (=பிரிப்பு) ஈவுசோ(ர்)வு என்பது இன்னொரு இரட்டைக் கிளவி. தாழ்ந்து கிடப்பது இலைதழை. உயர் இலையிலிருந்து வேறுபட்டது. இலைதழையும் இரட்டைக் கிளவியே. கூழாகிய கஞ்சி, கூழல்லாக் கஞ்சியினின்று வேறுபட்டது. குலம்= பெருங்குழுப்பெயர். கூட்டம்>கோத்திரம் என்பது தந்தைவழி உறவுகொண்டது இவ்விளக்கப் பார்வையில் மணிபல்லவத்தைப் புரிந்து கொள்ளலாம் மணி என்பது பொதுமைப்பொருள் கொண்டது. பல்லவம், அம்மணிக்கு விதப்புத் தோற்றம் கொடுக்கிறது. முதலில் மணியைப் பார்ப்போம்.
            மணிக்கு jewel, bead என 2 பொருள் சொல்வர். சிவநெறி, புத்தநெறியில் அக்க மணிக்குப் பெருஞ்சிறப்புண்டு. "ஓம் நமச்சிவாய", "ஓம் மணிபத்மே ஹூம்" போன்ற மந்திரங்களை 108 முறை விடாது சொல்லும்போது எண்ணிக்கைக்கு ஆக சமய நெறியாளர் அக்கமணி மாலை பயன்படுத்துவர். அக்கமணி, கடவுள் மணி, கண்டம்/கண்டி/கண்டிகை, கள்மணி, முள்மணி, உலங்காரை போன்றன அக்கமணியின் மறுபெயர்கள். சங்கதத்திலிதை உருத்திர அக்கம்>ருத்ராக்கம்> ருத்ராக்ஷம் என்பார். அக்கமணி, ஒரு குறிப்பிட்ட காய்/பழத்தின் உள்ளிருக்கும் செந்நிறக்கொட்டை. ஆனால், பழத்தின் தோலோ கருநீலம் ஆயிருக்கும். (சிவனின் தொண்டை நீலமாவது புரிகிறதா?) அதனால் கருநீலப்பழக் கொட்டை (blueberry beads) என்றும் ஆங்கிலத்தில் பெயருண்டு. கருநீலத்தைக் குறிக்கும் மணிப்பெயர் தமிழில் மட்டுமே உண்டு. தோலைத் தவிர்த்து கொட்டையையே முதலில் அறிந்த வடமேற்கு ஆரியர் அதை ருத்ர அக்ஷம் என்றே சொல்வார்.
            இப்பழக் கொட்டைகளில் பல முட்களும், பொதுவாய் 5 முகங்களுமுண்டு. சிலவிதக் கொட்டைகளுக்கு 5 இலுங் குறைந்தும், சிலவற்றிற்கு 5 ற்கு மேல் 21 வரைக்குங் முகங்களுண்டு..கொட்டைகளைக் காயவைத்து அவற்றூடே துளையிட்டு மாலையாக்குவதும் தானஞ் (>த்யானம்) செய்கையில், எண்ணிக்கைக்காக, அக்கமாலையை உதவிக்குக் கொள்வதும் சிவ, புத்த சமய நெறியாரின் வழக்கம். அக்க மணி, தானத்திற்கு (>த்யானத்திற்கு) ஓர் தளவாடம் (tool). விதப்பான இக்கொட்டை தரும் மரத்தை ஆங்கிலத்தில் Elaeocarpus ganitrus roxb என்பர். இது 60-80 அடிவரை கூட வளரும். இமயமலை அடிச்சாரலிலிருந்து கங்கைச்சமவெளியிலும் மேற்குத்தொடர்ச்சி மலையிலும், நேபாளம், தென்கிழக்காசியாவிலும், பாப்புவா நியுகினியிலும், ஆத்திரேலியாவிலும், குவாம், ஹவாய், சீனம், தைவான், போன்ற விடங்களிலும் இது வளர்கிறது. இந்தொனீசியா, மலேசியா, ஈழத்திலும் (கண்டி, நுவெரெலியா) கூட இதுவுண்டு. மணிமேகலை காலத்தில் இம்மரம் ஈழத்தில் அதிகமாய் இருந்ததோ, என்னவோ?
            உல்>ஒல்>அல் என்பது கூர்மையைக்குறிக்கும் வேர்ச்சொல். அல்லுதல்= கூர்த்தல். குற்றல். முடிதல். காலங்காட்டும் இடைநிலைகள் சேர்த்து 3 தொழிற்பெயர்களை இதன் வழி அடையாளங் காட்டலாம். அல்ந்தல்> அன்றல்*>அந்தல்= முடிதல்; அல்கல்= கூர்தல், குற்றல், குறைதல், இது அல்கல்>அஃகல்>அக்கல் என்றுமாகும். அல்வல் = கூர்வுதல் குற்றல், குறைதல் இது அல்வல்>அவ்வல்>அவல் என்றும் ஆகும். அஃகம்>அக்கம் என்பது மேலே சொன்ன கொட்டைக்கு இன்னொரு பெயர். அவமும் அதே பொருளே. அக்கம் புரிந்தால் பல்லவப் பெயரும் புரிந்து போகும். பல்லவம், மரத்திற்கும், மரம் வளரிடத்திற்கும் ஆன பெயர். மரச்சிறப்பால் நாகனார் தீவிற்கும் ஈழத்திற்குமே மணிபல்லவப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

            ஈழம் தவிர்த்தால், தமிழகக் கிழக்குக் கரையிலிருந்து வணிகங்கருதி தென்கிழக்காசியாவிற்கே தமிழர் முதலில் சென்றிருக்கமுடியும். இந்திய உள்நாட்டுவணிகம் உணர்த்தும் பாலைப்பாட்டுகள் மட்டுமின்றி கடல் வாணிகம் உணர்த்தும் நெய்தற்பாட்டுகளும் முகன்மையே. தென்கிழக்கு ஆசியப் பார்வையில் வெளிவரும் கடல்வாணிகச் செய்திகளை நம்மிற் பலரும் கூர்ந்து கவனிக்கமாட்டோம் என்கிறோம். மேலைவாணிகம் ஈர்க்கும் அளவிற்குக் கீழைவாணிகம் நம்மிற் சிலருக்கு முகன்மையாய்த் தெரிய வில்லை. சேரர் தொண்டியின் (இற்றைக் கோழிக்கோடு) கப்பல்கட்டுந் திறன் பொ.உ.1421 வரை சிறந்ததால் சீனக்கடலோடி செங்கே தன் கப்பற் கட்டுமானம் முடிந்தபின் கலங்களைத் தொண்டிக்கனுப்பி அவற்றின் உள்ளக நேர்த்தியை (internal efficacy) ஓராண்டு தங்கிச் சீர்செய்து போனானாம். ஆகக் கால காலமாய்த் தமிழரின் கடலோடுந் திறனுக்குக் கொஞ்சமுங் குறைச்சலில்லை. அது சரி, அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழரெப்படி அறிந்தார்?
            அக்கரைச் சீமையின் இருப்பை அறிந்ததில் நண்பர் ஒரிசா பாலு சொல்லும் ஆமை மிதப்புக் கடல்நீரோட்ட வழியை நானேற்கத் தயங்குவேன். அலை பரந்தெழும் நாட்களில் படகு/கப்பல் ஓட்டுவோர் நுட்பக் கருவிகளின்றி வெறும் பார்வையாலேயே, ஆமைகளைத் தொடர்ந்து செல்லமுடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு. [ஆமைகளைப் பின்பற்றாது நார்வேயின் தோர் ஐயர்தால் (Thor Heyardahl) பல்வேறு பழங் கடற்பயணங்களை மீள நிறுவிக் காட்டினாரே?] வெறுமே நீரோட்டம், உடுக்கள், காற்று- இவற்றைக் கொண்டே ஒரு கடலோடி கடலுக்குள் நகர முடியாதா?- என்ற கேள்வி எனக்குண்டு. தவிரச் சிந்து வெளியில் தமிழ்ப் பெயர்கள் உள்ளதாய்க் கூறும் திரு. பாலகிருட்டிணன் இ.ஆ.ப. வைப் பின்பற்றி, உலகெங்கும் 19000 தமிழ்ப் பெயர்கள் உள்ளனவெனப் பாலு கூறுவதையும் நான் ஏற்கத் தயங்குவேன். திரு. பாலுவின் கடலாய்வு இன்னும் ஆழமாய், அறிவியலோடு பொருந்தி வருமெனில், கட்டாயம் நான் கவனிப்பேன்.
(தமிழ்ப் பெயர் என்று நாம் சொல்பவற்றை அவ்வந் நாட்டுமொழிகளில் எப்படியழைத்தார்? எப்படிப் புரிந்துகொள்ளப்பட்டன?- என்று பார்க்க வேண்டாமா? நம் பார்வையே சரியென ஒருபக்கச் சார்பாய் எப்படிச் சொல்ல முடியும்? இப்படித்தான் ஒரு நண்பர் தென் அமெரிக்காவின் தித்திகாக்கா ஏரியை எந்த ஆதாரமும் இன்றித் தித்திக்கும் ஏரி என்றார். ஆப்பிரிக்காவின் தங்கனிக்காவை தேங்கனிக்காடு என்றார். இதுபோன்ற கூற்றுக்கள் தமிழிணையத்தில் இப்போது பெருகிவிட்டன. யாருமே கேள்வி கேட்காததால் இதுபோலும் கூற்றுக்கள் அடுத்தடுத்து எழுகின்றன. என்னைக் கேட்டால் இந்தப் போக்கு சரியில்லை மஞ்சள் கண்ணாடி போட்டுப்பார்த்தால் உலகம் மஞ்சளாய்த் தான் தெரியும். அது உண்மையாகிவிடாது. Let us show some sense of balance.)
            இப்போதைக்கு இன்னோர் இயலுமை மட்டுமே எனக்குத் தென்படுகிறது. 7500 ஆண்டுகள் முன் சுந்தாலாந்துக் கண்டம் முற்றிலுமழிந்து தீவுகளும் தீவக்குறையுமாய் எஞ்சியபோது இரட்டை விலாவரிக் கலங்களில் (double outrigger canoe) அக்கரைச்சீமையார் மேற்கே தமிழகத்திற்கு ஏன் வந்திருக்கக் கூடாது? அதாவது பொது உகத்தில் (coomon era), மலகாசித் தீவிற் சென்று குடியேறும் முன்னரே நம்மூருக்கு அவர் வந்திருக்கலாமே? அப்படிக் குடியேறியவரை நம்மூரில் நாகரெனக் குறித்தாரோ? அவர் குடியேறிய இடங்கள்தாம் சம்பாதிப் பட்டினம் (புகார்), நாகப்பட்டினம் போன்றவையோ? நாகர் தீவுகளிலிருந்து வந்தவர் குடியேறிய நிலம் நம்மூரிலும் நாகநாடு ஆனதோ?
            பழஞ் சோழநாட்டில் நாகநாடு, வளநாடு என 2 பகுதிகளுண்டு. (சிலப்பதிகார வாழ்த்துப் பாடலைக் கூர்ந்து படியுங்கள். ”நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகநீள் புகழ்மன்னும் புகர்நகர் அது தன்னில்” என்பது பாதாள உலகமா? எத்தனை நாள் உரையாசிரியர் கூற்றிற்குச் செவி சாய்ப்பீர்?) நாக நாட்டிற்குப் புகார் தலைநகர், வளநாட்டிற்கு உறையூர் தலைநகர். இருவேறு சோழரும் பங்காளிகள் ஆகவும் இருந்தார். முரண்பட்டும் இருந்தார். அவர் இடையே ஒற்றுமைக் குறைவு. நாகர் எழுதிய பாடல்களெனச் சங்க இலக்கியத்தில் பலவுமுண்டு. அவரை நாகரெனத் தனியே அழைத்ததின் பொருள் என்ன? எல்லோரும் போல் அவரும் தமிழரெனில் அவருக்கேன் தனிப்பெயர்? ஒருவேளை நாகர் தமிழர்க்கு நெருங்கி வந்தவரும் அதேபோது இன்னொருவகை வேறுபட்டவரும் ஆனவரோ? சிந்தனை குறுகுறுக்கிறது. இப்போதைக்கு நமக்கேதுந் தெரியவில்லை. ஆயினும் இயலுமைகளைப் பேசாதிருக்க முடியவில்லை. நாகப்பட்டினம், புகார், காரைக்கால் போன்ற இடங்களில் ஈனியலாய்வு செய்யலாம்.
            அக்கரைச் சீமை போகத் தமிழர்க்கு வாகானது 10 பாகையில் அமையும் கிடைநீரோட்டமாகும். இது குட்டியந்துவன் தீவிற்கும், (9.17 N 92.41 E) பேரந்துவன் தீவிற்கும் (11.62 N 92.73 E. அந்தமான். தமிழ்ப்பெயரை அடையாளங் காணாது நாம்நிற்பதால் ஹண்டுமான், ஹனுமானென மாற்றார் ஏதேதோ சொல்கிறார். நாமும் மயங்கி நின்றுவிடுகிறோம்.) இடையே செல்லும் பாதையாகும். நக்கவரம் தீவு (9.16 N 92.76 E), குட்டியந்துவன் தீவிற்கும் தெற்கிலுள்ளது.
            அக்காலத் துறைமுகங்களான கடல்மல்லை 12.63 N 80.19 E, புதுக்கை 11.90 N 79.82 E, புகார் 11.15 N 79.84 E; நாகப்பட்டினம் 10.77 N 79.84 E கோடிக்கரை 10.28 N 79.28 E; மருங்கூர்ப் பட்டினம் 9.84 N 79.08 E, அழகன்குளம் 9.36 N 78.97 E ஆகிய வற்றில் புறப்பட்டால் இலங்கையைச் சுற்றவேண்டாம். மாறாகக் கொற்கை 8.63 N 78.86 E, முசிறி 10.15 N 76.20 E, சேரர் தொண்டி (இற்றைக் கோழிக்கோடு) 11.26 N 75.78 E என்று புறப்பட்டால் இலங்கையைச் சுற்றித் திரிகோணமலை 8.59 N 81.28 E வந்து 10 பாகை நீரோட்டத்தைப் பிடிக்கவேண்டும். (கடல் நீரோட்டத்தை உதவியாய்க் கொள்ள, தமிழகக் கிழக்குக் கடற்கரையிலிருந்து புறப்பட்ட கலங்கள் மணிபல்லவம், திரிகோணமலை போய்ச் செல்வது இயல்பே.கொற்கை வழித் தொலைவு கூடினும் திரிகோண மலையில் 9.16 N 92.76 E தங்கி உணவு, நீரைச் சேகரித்துச் செல்லலாம்.)
            ஆகப் பழந்தமிழகத்தின் எத்துறையிலிருந்து கிழக்கு நோக்கி கடல்வழி புறப்பட்டாலும், அந்துவன் தீவுகள் / நக்கவரத் தீவுகளின் வழி செல்வதைத் தவிர்க்க முடியாது. அதற்குங் கிழக்கில் செல்ல முயன்றால் 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லாந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம். நெல்லும் தகரமும் நாடிப் போகையில் கிரா ஈற்றுமம் நமக்கு முகன்மை யானதே. அதை விரிவாகப் பேச உள்ளேன். அதற்கு மாறாய் நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்றால் சுமத்திராத் தீவின் அக்க முனையை (இதையும் அக்கமுனை>அக்கயமுனை>அக்ஷயமுனை என்று சங்கதப் படுத்தி நம்மைப் பலருங் குழப்புவார்) அடையலாம். இன்றைக்கிதை ”பண்டார் அச்சே” என மலாய்மொழியில் அழைப்பார்.
[அக்கரைச்சீமைச் செய்திகளுக்குமுன் ஓர் இடைவிலகல். தமிழிலக்கியத்தில் முதன்முதல் அக்கரைச்சீமை நம் இலக்கியங்களில் குறிக்கப்படுவது மணிமேகலையிற்றான். மணிபல்லவம் வந்த மணிமேகலை புத்த பீடிகையால் தன் பழம்பிறப்பு உணர்ந்து, மணிமேகலா தெய்வத்தால் 2 மந்திரம் பெற்று, தீவுதிலகையின் அறிவுறுத்தலால் அஃகயப் பாத்திரம் பெற்று, புகாருக்குத் திரும்பி, அறவண அடிகளிடம் ஆபுத்திரன் திறமும் பாத்திரமரபும் அறிந்து, ஆதிரைவழி பிச்சை பெற்று, உலக அறவியில் பசிப்பிணி ஆற்றி, சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கி, உதயகுமாரன் கொலையுற்றதால், சிறைப்பிடிக்கப் பட்டு, பின்னால் அரசனும் அரசியும் உண்மையை அறிந்து, இவளைச் சிறையிலிருந்து விடுவிக்க, ஆபுத்திரன் நாடான சாவகத்திற்கு ஏகுவாள்.]
            இற்றை இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியத்நாம் நாடுகளில் சிற்சில வேறுபாடுகளோடு பரவிக்கிடக்கும் ஒரு கதை, மணிமேகலை 14 ஆம் காதையிலும், பெரும்பாணாற்றுப் படையில், ”திரைதரு மரபின் உரவோன் உம்பல்” என்ற 31 ஆம் அடிக்கு அதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கொடுக்கும் விளக்கத்திலும் வரும் (இருவேறு தோற்றமுள்ள) ஒரு கதையும் ஒன்றிற்கொன்று உறவுகாட்டும். தென்கிழக்காசியத் தொடர்பு காட்டும் இக்கதையின் முகன்மை, ஆழத்தை, நம்மிற் பலரும் உணர்ந்தோமில்லை. கீழே மணிமேகலை கதையைச் சொல்கிறேன். நச்சினார்க்கினியர் சொல்வதை இத்தொடரின் வேறிடத்தில் பார்ப்போம். (நாகநாடென்று தமிழகத்திற்கு வெளியே மணிமேகலையில் குறிக்கப்படுவது தென்கிழக்காசியா முழுமையும் குறித்திருக்கலாம். இது சோழரின் நாகநாட்டிலும் வேறுபட்டது. முந்தையதை வெளியக நாகநாடென்றும், பிந்தையதைச் சோழ நாகநாடு என்றுங் குறிப்போம்.).
            புகார்ச் சோழனாகிய நெடுமுடிக்கிள்ளி கடற்கரை சார்ந்த புன்னைச் சோலையில் ஒரு வெளியக நாகநாட்டு மங்கையைக் கண்டு காதலித்து ஒரு  திங்களளவும் அவளோடு உறைந்தான். ஒருமாதங் கழிந்த பின் அவனிடஞ் சொல்லாது அவள் அகல, எங்கு ஒளிந்தாள் என அரசன் தேட, அரிய ஆற்றல் உடைய சாரணன் ஒருவன் அங்கு வரக் கண்டு, அவனிடம் அரசன் மங்கை பற்றி உசாவ, ”மங்கையைக் கண்டிலேன் ஆயினும் முற்செய்தி அறிவேன். வெளி நாகநாட்டு அரசனாகிய வளைவணனின் தேவி வாசமயிலையின் மகள் அவள். பெயர் பீலிவளை, அவள் பிறந்தபோது ’பரிதி குலச் செல்வன் ஒருவனைக் கூடி இவள் கருவுற்று வருவாள்’ என நிமித்திகர் சொன்னார். நீ கூறியவள் அவளாகலாம். அவள் வயிற்றுத் தோன்றிய நும்மகனே இனி உன்நாடு வருவான். அவள் வாராள். இன்னுமொரு செய்தி. மணிமேகலா தெய்வத்தின் கடுஞ்சொல்லால் உன்நகரைக் கடல் கொள்ளும். இந்திரசாபம் இருத்தலால் அது தப்பாது. இதை உண்மையெனக் கொண்டு இந்நகரைக் கடல் கொள்ளாதபடி, ஆண்டு தோறும் இந்திரவிழவை மறவாது செய்து வருக” என்று அச்சாரணன் சொன்னானாம்.
            மணிமேகலையின் பாட்டி சித்திராபதி சோழ அரசிக்கு இக் கதையைச் சொல்லி, ”அந்நாள் தொடங்கி நகர மக்கள் நடுங்கிப் போனார். இடைவிடாது இந்திர விழாவும் நடந்து வருகிறது. இப்போது மணிமேகலை சிறையுற்ற செய்தியை அறிந்து மணிமேகலா தெய்வம் சினமுற்று வரலாம்” என்றுஞ் சொல்வாள். அறவண அடிகளின் அறிவுரையால் சோழ அரசன் மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவிக்க, அவள் அங்கிருந்து புறப்பட்டு ஆபுத்திரன்நாடு ஏகி அவனைப்பார்த்து அவனுடைய முற்பிறப்பைச் சொல்லி மணிபல்லவத்திற்குக் கூட்டிவருவாள். [இதுவரை சொன்ன பீலிவளை கதையோடு தென்கிழக்கு ஆசியக் கதை சற்று வேறுபடும். பெரும்பாணாற்றுப் படையின் உரையாசிரியரான நச்சர் மாற்றுக்கதை சொல்வார். அத்திரிவை கம்போடியா பற்றிப் பேசும் போது பார்ப்போம்.)
            நாம் இங்குப் பேசவிழைந்தது அக்கரைச்சீமையின் இருப்பைத் தமிழர் அறிந்தது பற்றியதாகும். மணிமேகலையையும், பெரும்பாணாற்றுப் படைக்கான நச்சர் உரையையும் பார்க்கும் போது, மணிமேகலை காலத்திற்கு (பொ.உ.400களில்) முன்னேயே, சங்ககாலத்திலேயே (பொ.உ.மு.550-பொ.உ.250), தமிழர்க்குச் சாவக நாட்டின் இருப்புத் தெரிந்திருக்கிறது என்பதாகும் இதற்குமுன் எப்போது இவ்விருப்புத் தெரிந்தது? - என்பதை ஆத்திரேலியப் பழங்குடிகளின் ஈனியல் ஆய்வு வழி அறியலாம். ஏறத்தாழ 11% ஆத்திரேலியப் பழங்குடியினருக்குத் தமிழ்க் கலப்பிருப்பதும், இக்கலப்பு பொ.உமு. 2350 இல் ஏற்பட்டிருக்கலாம் என்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது. எனவே தென்கிழக்கு ஆசியாவைத் தமிழர் ஓரளவாவது அறிந்தது இற்றைக்கு 4350 ஆண்டுகள் முன்னராகும்..அது மிக நீண்ட காலம் தான். தாய்லாந்து/ மலேசியாவின் இலங்காசோகம், தக்கோலம், தாம்பலிங்கம் ஆகியவற்றைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

            முன் சொன்னதுபோல், புகாரிலிருந்து சாவகம் புறப்படும் கப்பல்கள் அந்துவன்/நக்கவரம் தீவுகளுக்குப் போய்ப் பின் அங்கிருந்து 8.84 N 98.9 E இலுள்ள இற்றைத் தாய்லாந்தின் கிரா ஈற்றுமம் (Isthmus of Kra) அடையலாம், அல்லது நக்கவரந் தீவுகளுக்குத் தென்கிழக்கிற் சென்று சுமத்திராத் தீவின் அக்க முனையை அடையலாம். இதை வலஞ்செய்து மலாக்கா நீரிணை வழியே சுமத்திராவின் மலையூர், சம்பி, பலெம்பாங் போன்ற நகர்களை அடையலாம். இன்னும் கீழே போனால் சாவகத்திலும் அடையலாம். [மலாக்கா நீரிணை வழியை தமிழர் முதலில் அறிந்ததுபோல் தெரியவில்லை. அது காழகத்தில் சிலகாலம் இருந்தபின் கண்டுபிடித்த வழி.] முதலில் கிரா ஈற்றுமத்தைப் பார்ப்போம். அங்குள்ள ’தக்கோலம்’ எனும் நகரம் அக்காலத்தில் பெரிதும் முகன்மையானது.
[கூகுள் முகப்பைக் கொண்டு நான் சொல்லும் இடங்களைக் கூர்ந்து கவனித்து அறியுங்கள். நாம் துழாவிக் கொண்டிருப்பது வரலாற்றிற்கு முந்தைய காலம். வரலாறு என்பது எழுத்து எழுந்ததற்குப் பின் உள்ள காலம். வரலாற்றிற்கு முந்தையது என்பது pre history. தொடக்க வரலாறு என்பது proto history. தமிழி எழுத்து என்பது இற்றை நிலையில் பொ.உ.மு.800 இல் தொடங்கியது. (ஆகப் பழமையான பானைச்சில்லு.கொற்கையில் கிடைத்தது.) அதற்கு முன்னிருந்த சான்றுகள் எவையும் இன்னும் கிட்டவில்லை. சிந்து சமவெளி எழுத்துகளைப் போன்ற பானைக் கீற்றுகள் தமிழகத்திலும் கிட்டியுள்ளன அவற்றின் காலம் மீவுயர்ந்து பார்த்தால் பொ.உ.மு. 2600. நாம் இங்கே பொ.உ.மு. 2600க்கும் முந்தைய நிலையைத் தேடுகிறோம். நெல் இதற்கு முன் இங்கிருந்ததா?].
            பழந்தமிழக மேற்குக் கரையிலிருந்து புறப்படுங் கலங்களுக்கு செங்கடற் கரை பெருனிக்கெ (Bernike) என்பது எவ்வளவு முகன்மையோ, அதேயளவு முகன்மையானது இத் தக்கோலம். பெருனிக்கே பெயரைக் குறித்த கிரேக்க ஆசிரியர் தாலமி, தக்கோலத் துறை பற்றியும் தம் பூகோளநூலில் சொல்லியிருப்பார். சயாமியமொழியில் தக்கோலத்தைத் தக்குவா பா என்பார். தமிழர் தொடர்ந்து தக்கோல நகருக்குப் போய்வந்து கொண்டிருந்தார். பொ.உ 800/900 அளவிலிருந்த பல்லவர்காலத் தமிழடையாளங்களும், அவனிநாரணனான 3 ஆம் நந்திவருமன் பெயரால் பெருமாள் கோயில்/சிலைகள், குளம், கல்வெட்டுகளும் இங்கு தொல்லாய்வில் கிட்டின. குறைத்துநடந்த இவ்வாய்வுகளைக் காண்கையில், அவ்வூர் வெகுகாலத்திற்கு முன்பேயே ஒருவேளை உருவாகி இருக்கலாமென்று தோன்றுகிறது.
            பல்வேறு தமிழ்வணிகக் கூட்டத்தார் இங்கு வந்து போயுள்ளார். தவிர, பொ.உ. 3, 4 ஆம் நூற்றாண்டின், ”பெரும்பத்தன் கல்” [பட்டன்>பத்தன்= தங்கம், வெள்ளி ஆசாரி”] எனும் தமிழி வாசகத்தோடு, (பொன்தேய்த்து) மாற்றுரைக்குங் கல்லும், பல்வேறு மணிகளும் அருகிலுள்ள குவான்லுக் பட்டில் (Khuan Luk Pat) கிட்டின. முதன்முதலாய்த் தமிழர் எப்போது தக்கோலம் போனார்? தெரியாது. தாய்லாந்தின் தொடைபோல் கீழிறங்கும் இப்பகுதியை ”கலங்கா வல்வினை இலங்காசோகம்” என இராசேந்திரன் மெய்கீர்த்தி சொல்லும். யாரோ ஒருவர் இலங்காசோகத்தை இலங்கா அசோகமெனப் பிழைபடப் பிரிக்க, அதுவே எல்லாவிடத்தும் பரவி. அசோகரோடு அதையொட்டி விதவிதமாய்க் கதைத்து அடையாளங் காணமுடியாது செய்தார். நமக்குத்தான் வடவருக்குத் தாசர் ஆகும் மனப்பாங்கு அதிகமாயிற்றே? (Interpretation through Sanskrit has diverted many research in S E Asia.).  தமிழ்வழி அறிந்தால் இலங்காசோகத்தின் சொற்பிறப்பு சட்டென விளங்கும்.
            இல்தல்>ஈல்தல்>ஈழ்தல் வினை தமிழில் பிரித்தலை உணர்த்தும் முகனை நிலத்திலிருந்து ஈழ்ந்தது ஈழம். இல்தலை இலங்குதலென்றுஞ் சொல்வர். அதற்கும் பிரித்தல் பொருளுண்டு. இலங்கையும் ஈழம் போலவே தமிழ்ச் சொல் தான். [அது சிங்களமில்லை. இந்தையிரோப்பியனில் isle/ஈல், island/ஈலண்ட் என்று பொதுப்படச் சொல்கிறோமே அதுகூட ஈழம் என்ற விதப்புப் பெயரின் பொதுமையாக்கல் ஆகலாம்.] இலங்குதலின் எதிர்ச்சொல் இலங்காதிருத்தல். சுள்>(சொள்)>சொள்கு>சொகு>சோகு>சோகம் என்பது திரண்ட தொடையைக் குறிக்கும். [ஊருவும் கவானும் சோகமும் குறங்கே” திவாகரம் 351] திகுதிகுவெனத் திரண்டதாலேயே thigh எனும் இந்தை யிரோப்பியச்சொல் பிறந்தது. இலங்காசோகம்= பிரியாத்தொடை. இற்றை வடமலேசியாவின் இப்பழம்பெயர். எத்தனை பேருக்குத் தெரியும்? ஜோகூர் வரை தொடை நீண்டுகிடக்கிறது. பொ.உ.2 ஆம் நூற்றாண்டில் காழக(கடார) அரசு இலங்காசோகத்தில் தொடங்கியிருக்கலாம் என்பார். இதுவே தென்கிழக்காசியாவின் முதலரசுத் தொடக்கமாம்.
            தக்கோலத் துறையிற் கீழிறங்கி நிலம்வழி கிழக்கே 290 கி.மீ பயணித்தால், பசிபிக் பக்கமுள்ள தாம்பரலிங்கம் வரும் [இராசேந்திர சோழனின் மெய்கீர்த்தியில் வரும் மா (பெரிய) தாமலிங்கம் இதுவே.]  இதன் முகன்மையும் பெரிதே. இதன் இற்றைச் சயாம்பெயர் நகோன் சி தம்மராட் 8.43 N 99.56 E. ஒருகாலத்தில் இது காழகஅரசைச் சேர்ந்தது. (காழகஅரசு பின்னாளில் சுமத்ராவின் பலெம்பாங்ஙைத் தலைநகராய்க் கொண்ட சிறீவிசயத்தின் சிற்றரசானது.) தாம்பரலிங்கத்தில் சிறீவிசய அரசன் கட்டிய புத்தர் கோயிலும், அதுசேர்ந்த தமிழ்க் கல்வெட்டும் கிட்டியது. இத்துறைமுகம் சிலகாலம் கம்போடியர் கட்டுப்பாட்டிலிருந்தது. தாமலிங்கத்திலிருந்து பசிபிக்கில் நகர்ந்தால், எளிதாய்க் கம்போடியா போகலாம். (மலாக்கா நீரிணைவழி போகவேண்டியதில்லை.) கம்போடியா பற்றிக் கீழே பார்ப்போம்.
                        கலைத்தக் கோர்புகழ்த் தலைத் தக்கோலமும்
                        தீதமர் வல்வினை மா தாம லிங்கமும்
            என்று இருவேறு இலங்காசோக நகர்களை இராசேந்திர சோழன் மெய்கீர்த்தி பேசும். தக்கோலத்தின் தெற்கே, இக்கால வுக்கெட்டுச் (Phuket) சுற்றுலாத் தீவும் (இது இன்று பெயர்பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க தக்கோலம் பெயர் பெறவில்லை.). அதன் கிழக்கே கிரா ஈற்றுமக் கிராபிப் (Grabi) பகுதியும் தெரியும். அதன் தெற்கே இலங்காவியை (6.37N 99.78E) அடையலாம். இதன் நேர்கிழக்கில் பசுபிக்கடற் பக்கம், ”பட்டினம்” என்ற ஊருமுண்டு. (மலாயில் பட்டனி. இதன்பொருள் துறைமுகம். அதேபொழுது, வரலாற்றாய்வர் சொற்பிறப்பு அறியாது ”சங்கதம், அது, இது” எனக் குழம்புவதுமுண்டு. தென்கிழக்காசியா எங்கணும் இப்படி நடப்பது மிகச் சாத்தாரம். தமிழ்வழி செல்லவேண்டிய பாதையைச் சங்கதக் கல் தடைப்படுத்தும் தமிழ்வழி பார்க்காவிடின் பல இடங்களில் தடுமாறுவோம். இவ்வாறு சங்கதம் தமிழை நிறையவே படுத்தியுள்ளது. இலங்காசோகமும், மலேசியாவின் பெருலீசு, கெடா, பினாங்கு மாநிலங்கள் சேர்ந்ததே அற்றைக் காழகம். காழகநிலமே தமிழர் முதலிற்கான நிலமுமாகும்.
            காழகத்திற்குச் சுங்கைப்பட்டென்றும் பெயருண்டு. (Sungai Batu ஆற்றுப்பட்டு. நம்மூர் செங்கழுநீர்ப்பட்டு, நீர்பெயற்று போல் இதைப் புரிந்து கொள்ளுங்கள்.) பட்டு, தமிழில் குடியிருப்பைக் குறிக்கும். சுங்கை= ஆறு., பெருநை, ஓடை. அந்தக் காலச் சுங்கைப் பட்டினம் இன்று சுங்கைப்பட்டாணி என்று பெயர் திரிந்து தமிழூற்றை மறைத்து நிற்கும். இலங்காவிக்கும் தெற்கில் மலேசிய மேலைக்கடல் துறையாக இற்றைப் பினாங்கு உள்ளது. சரி, தமிழர் தக்கோலம் போன காரணமென்ன? வெண்கலத்திற்குத் தேவையான தகரம் முதலில் தக்கோலத்தில் கிட்டியிருக்கலாம்.
            பர்மா தொடங்கி, தாய்லாந்து/ மலேசியத் தீவக்குறை வழி, இந்தோனேசியத் தகரத் தீவுகள் வரை வடக்கு-தெற்கில் 2800 கி.மீ நீளம் 400 கி.மீ அகலம் தென்கிழக்காசியத் தகர வளைபட்டை (Tin Belt) உள்ளதால், தக்கோல வடக்கிலும் தெற்கிலும் தகரச் சுரங்கங்கள் உருவாகின. இற்றையுலகின் 54% தகரத்தேவையை (9.9 நுல்லியன் தொன்கள் million tonnes) இவ்வளைப்பட்டை நிறைவுசெய்கிறது. அவ்வளவாய்க் காடும் மலையுமின்றி, சிறுசிறு குன்றுகளும், எளிதில் கனிமஞ் சேகரிக்கும் நிலப்பாங்கும் கொண்டதால் தகரக் கனிமம் எளிதிலிங்கு வாரப்பட்டது. இதனாலேயே தகரமென இவ்வூர்க்குப் பெயரிட்டாரோ, என்னவோ? பேச்சில் ரகரம் லகரமாவது சிலமொழிகளின் பழக்கம். தகரம்>தக்கலம்>தக்கொலம்>தக்கோலம் என்பது இயல்பான திரிவு. சயாமிய மொழியில் இன்றும் ”தக்குவா” என்ற சொல் தகரத்தைக் குறிக்கும். இற்றைப் பெயரான ”தக்குவா பா” அதன் வழி உருவானதே.
            செம்போடு தகரஞ்சேர்த்துக் கடின வெண்கலமாக்கி, கூர்ங்கருவி, படைக்கலன் செய்யப் பயன்படுத்தினார் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் நடந்த வெண்கலக் காலப் (Bronze Age) பயன்பாடே மென்மேலும் தகரச் சுரங்கங்களைக் கண்டுபிடிக்க ஏதுவானது. தகரத்தின் முதற்கிடைப்பு பொ.உ.மு. 3500 இல் துருக்கியிலும், பின் இங்கிலாந்திலும் இருந்தது. எகிப்து, சுமெரியா, பாபிலோனிய, அக்கேடிய நாடுகளில் வெண்கல வாணிகம் செய்தோர், தகரச்சுரங்கங்கள் இருந்த இடங்களின் அடையாளங்களை, குறிப்பாக இங்கிலாந்தின் இருப்பை, மூடி மறைத்தார். ஏறத்தாழ பொ.உ.மு. 310 இல் தான் இம்மறைப்பு கிரேக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் தகரச்சுரங்கங்களைத் தம்பக்கம் கைக்கொள்ளவே உரோமானியர் இங்கிலாந்தை அடிமைகொண்டார்.
            [தகரத்தை ஆங்கிலத்தில் [tin Old English tin, from Proto-Germanic *tinom (source also of Middle Dutch and Dutch tin, Old High German zin, German Zinn, Old Norse tin), of unknown origin, not found outside Germanic. Other Indo-European languages often have separate words for "tin" as a raw metal and "tin plate;" such as French étain, fer-blanc. Pliny refers to tin as plumbum album "white lead," and for centuries it was regarded as a form of silver debased by lead; hence its figurative use for "mean, petty, worthless."] என்றும், stannum [stannic (adj.) "containing tin," 1790, from Late Latin stannum "tin" (earlier "alloy of silver and lead"), a scribal alteration of Latin stagnum, probably from a Celtic source (compare Irish stan "tin," Cornish and Breton sten, Welsh ystaen). The Latin word is the source of Italian stagno, French étain, Spanish estaño "tin." The chemical symbol Sn is from Late Latin stannum] என்றும் சொல்வர்.] இதேபோக, தகரம் சீனத்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் பயன்பட்டதற்குச் சான்றுண்டு.           
            பொ.உ.மு. 2300-2000 அளவில் வடகிழக்குத் தாய்லந்தின் கோரட் சமவெளியில் வெண்கலஞ் செய்ததற்கும், பொ.உ.மு.1600 இல் வியத்நாமில் செய்ததற்கும் சான்றுண்டு. இதனூடேதான் தகரம் தமிழர்க்குத் தெரியவந்திருக்கவேண்டும்.

குறிப்பு: மே 25, 2020 அன்று தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சியில் வழங்கிய உரை

தொடர்பு:
இராம.கி.
Iraamaki <iraamaki@bsnl.in>






Wednesday, May 20, 2020

தமிழகத்தில் அருங்காட்சியகத் தேவைகள்


தமிழகத்தில் அருங்காட்சியகத் தேவைகள்


-- முனைவர். வீ.செல்வகுமார்

(குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இணைய வழி நடந்த   பன்னாட்டு அருங்காட்சியக நாள் சொற்பொழிவு, 19-05-2020)

            அனைவருக்கும் மாலை வணக்கம்! உங்கள் அனைவருக்கும் எனது பன்னாட்டு அருங்காட்சியக நாள் வாழ்த்துக்கள்!
           தமிழக அரசின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.க. பாண்டியராஜன் அவர்களுக்கும்; அருங்காட்சியத்துறை ஆணையர் திரு. எம்.எஸ். சண்முகம்  இ.ஆ.ப. அவர்களுக்கும்; முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் திரு. த. உதயசந்திரன்  இ.ஆ.ப அவர்களுக்கும்; இன்றையக் கருத்தரங்கில் தலைமை தாங்கி உரையாற்றவிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர்.க.சுபாஷிணி அவர்களுக்கும்; வரவேற்புரை வழங்கிய தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொருளாளர் முனைவர் இனிய நேரு அவர்களுக்கும்; நிகழ்ச்சியில் நன்றியுரை வழங்க உள்ள திரு. க்ரிஷ் அவர்களுக்கும்; நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் திரு. விவேகானந்தனுக்கும்; இந்த நிகழ்வை இன்று உலகம் முழுவதும் கண்டுகொண்டிருக்கின்ற உலகத் தமிழ்த் தோழர்களுக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
           ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் பன்னாட்டு அருங்காட்சியக நாளையொட்டி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ICOM - International council of Museum, எனப்படும் பன்னாட்டு அருங்காட்சியகக் குழு உலகமெங்கும் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது. அது ஒவ்வொரு வருடமும் ஓர் அருங்காட்சியகவியல் சார்ந்த பொருண்மையை மையப்படுத்துகின்றது.
           இந்த வருடத்திற்கான (2020) பன்னாட்டு அருங்காட்சியக நாளின் பொருண்மை “சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள்: பன்முகத்தன்மையும், அகப்படுத்துதலும்” என்பதாகும். அதாவது Museums for Equality: Diversity and Inclusion.
           அருங்காட்சியகங்கள் சமத்துவத்தை முன்னிறுத்தவேண்டும். பின்நவீனத்துவத்தின் (Post-modernism) அடிப்படையில் பன்முகத்தன்மைக்கு (diversity) இடமளிக்கும் வகையிலும் அருங்காட்சியகங்கள் மாறவேண்டும் என்றும், அகப்படுத்துதலுக்கும் (inclusion) வழிவகுக்க வேண்டுமென்றும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. பல நேரங்களில் அருங்காட்சியகங்கள் ஒற்றைப் பொருண்மையுடன் அமைந்து விடுவதுண்டு.  யதார்த்தத்தில் நாம்   நம்மைப் பற்றியே சிந்தித்து, அடுத்தவர்களின் தேவைகளை நினைக்காமல் இருப்பதுண்டு. அதனால்தானோ என்னவோ நம் முன்னோர்கள் “பக்கத்து இலைக்குப் பாயசம்” என்று  நுட்பமான ஒரு வழக்காற்றை உருவாக்கியுள்ளனர். இதை நாம் இன்று சுயநலமாகப் பார்க்கிறோம். மேற்கூறப்பட்ட ஒற்றைப் பொருண்மை நமது பொதுவான பார்வைக் குறைபாடு எனக் கூறலாம். எனவே அனைத்து விதமான கருத்துக்களையும், பார்வைகளையும் அருங்காட்சியகங்கள் உள்ளடக்கவேண்டும் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படும் மையமான கருத்து.
           அடுத்ததாக, அருங்காட்சியகங்களின் தோற்றம் குறித்த சில கருத்துக்களைக் காண்போம். அருங்காட்சியகம் ஆங்கிலத்தில் “Museum” என்று அழைக்கப்படுகின்றது. இது கிரேக்கச் சொல்லான Mouseion என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. Mouseion  என்பதற்கு ‘மியூசஸ் என்ற கடவுளின் கோயில்’ என்று பொருள் கிரேக்கத்தில். மியூசஸ் எனப்படும் ஒன்பது பெண் கடவுளர்கள் சீயஸ் மற்றும் நிமோசைன் என்ற கிரேக்கக் கடவுள்களின் மகள்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களில்  கிளியோ, வரலாற்றுக்கும் (Clio-History); யுடெர்ப், இசைப்பாடலுக்கும் (Euterpe- Lyric poetry), தலியா, நகைச்சுவைக்கும் (Thalia-comedy); மெல்பொமென், சோகத்திற்கும் (Melpomene-tragedy); டெர்பிசோர், நடனத்திற்கும் (Terpichor-Dance); எரோட்டோ, காதல் பாடலுக்கும் (Eroto-Love poetry); பாலிம்னியா, பக்திப் பாடல்களுக்கும் (Polymnia- divine poetry); அவுரானியா, வானியலுக்கும் (Ourania-astronomy); கலியோப், வீரப் பாடலுக்கும் (Calliope- Heroic poetry) கடவுள்களாகக் கருதப்படுகின்றனர். இக் கடவுள்களைத் தமிழிலக்கியங்களின் ஐந்திணைக் கடவுளர்கள் போலக் கருதலாம். எனினும், கிரேக்கர்களின் இந்தக் கலைசார் கடவுளர் வகைப்பாடு சிறந்த அறிவுசார் கட்டமைப்புடையது எனலாம். மேலும், இக்கலைகளின் தாய்த் தெய்வங்களாகப் பெண்களைக் கருதியிருப்பதும் வளமை, படைப்பாற்றல் சார்ந்த ஒரு வழக்கம் என ஊகிக்கலாம்.

தொல்பழங்காலக் குகை ஓவியங்கள் – கலைக்கூடங்களாக:
           மனிதனின் அறிவுசார் சிந்தனைகள் தொல்பழங்காலத்தில் மொழி உருவாக்கத்திலும், ஓவியங்களின், குறியீடுகளின் பயன்பாட்டிலும் வெளிப்பட்டுள்ளன. இவையே மனிதர்களின் படைப்பாற்றலுக்கு வித்திட்டன.
           தொல்பழங்கால ஓவியங்கள் உள்ள குகைகளை நாம் உலகின் மிகப் பழைமையான அருங்காட்சியகக் கலைக்கூடங்களாகக் கருதலாம், ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியங்கள் உள்ள அல்டாமிரா (Altamira, ஸ்பெயின் படம் 1), லாஸ்கா (Lascaux, பிரான்ஸ் படம் 2) போன்ற குகைகளை இங்கு நாம் சுட்டலாம். இந்தியாவின் பிம்பேத்கா (மத்தியப் பிரதேசம், படம் 3) உள்ளிட்ட பல இடங்களில் காணப்படும் ஓவியங்கள் உள்ள குகைகளும் ஒரு விதத்தில் அருங்காட்சியகங்களே. தமிழகத்தில் வெள்ளரிக்கோம்பை, கீழ்வாலை, செத்தவரை, நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகைகளில் பல அரிய வகை ஓவியங்கள் காணப்படுகின்றன.  இவை அக்கால வரலாற்று நிகழ்வுகள், வீரச் செயல்கள்,  நம்பிக்கைகள், சடங்குகள், ஆகியவற்றை நினைவு கூறவும், இளைய தலைமுறையினருக்கு வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்,  நம்பிக்கைகள்  உட்படப் பலவிதமான பண்பாட்டுச் செயற்பாடுகள், விழுமியங்களைக் கற்பிக்கவும், எடுத்துக்கூறவும் பயன்பட்டிருக்கவேண்டும். இக்குகை ஓவியங்களும் ஒருவித வரலாற்றுப் பதிவுகள்தான்; ஆவணங்கள்தான். எனவே அருங்காட்சியகங்களின் கல்விப்பணி பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். ஓர் ஓவியக் கருத்தை ஒரு குழந்தை சிறு வயதிலேயே மீண்டும் மீண்டும் பார்க்கும்போது அதன் சிந்தனையில், கருத்தில் அது பதிந்து பல புதிய கருத்துக்கள் உருவாக வழிவகுக்கின்றது; அவை அதன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. இதையே பழங்காலக் கல்வியின் ஓர் அணுகுமுறை எனலாம்

நடுகற் காட்சிக்கூடங்கள்:
           தமிழகத்தின் சாலை ஓரத்தில் அமைந்த வீரர்களின் எழுத்துடை நடுகற்களும் ஒரு விதத்தில் வரலாற்றுக் காட்சியகங்களே (படம் 4). இவை சில இடங்களில் வழிச் செல்வோர் காணும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.
           “நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
           செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
           கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே”
என்று பாணரை, வழிச் செல்பவரை வழிபடுமாறு கூறுகின்றது மலைபடுகடாம் பாடல். எனவே நடுகற்கள் ஒரு வரலாற்று நிகழ்வைக்கூறி மக்களுக்கு வீரம், தியாகத்தின் கல்வியைப் புகட்டின. எனவே இவையும் பழங்கால அருங்காட்சியக வகையில்படும். இவற்றை  நவீன அருங்காட்சியகங்களின் முன்னோடிகள் என்பதில் தவறில்லை.

உலக அருங்காட்சியகங்கள் :
           உலகின் மிகப் பழமையான அருங்காட்சியகம் மெசபடோமியாவில் பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டில்  நபோனிடஸ் என்ற புதிய பாபிலோனிய அரசனின் மகள் என்னிகால்டி நானா என்பவரால் உருவாக்கப்பட்டது, இந்த அருங்காட்சியகத்தில் பொ.ஆ.மு 20-21 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெண்ணால் உருவாக்கப்பட்டது என்ற சிறப்பை இந்த அருங்காட்சியகம் பெற்றுள்ளது.



படம் எண். 1. அல்டாமிராவின் அழகோவியக் கலைக்கூடம், நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Thomas Quine சுமார் 40,000 ஆண்டுகள்

படம் எண். 2. லாஸ்கா  நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Alonso de Mendoza (talk | contribs)
படம் எண். 3. பிம்பேத்கா மத்தியப்பிரதேசம் – கலையரங்க குகை – Auditorium Rockshelter
நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Raveesh Vyas

படம் எண் 4. நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Thamizhpparithi Maari
           எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவில் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டில் டாலமி என்ற கிரேக்க அரசரால் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருந்தது.
           ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின்னர்தான் தொல்லியல் ஒரு பாடப்பிரிவாக உருவெடுத்து இன்று ஓர் அறிவியலாக உருப்பெற்று வளர்ந்துள்ளது. அது போல அருங்காட்சியகங்களும் காலம் காலமாக வளர்ந்துவந்துள்ளன. ஐரோப்பாவில் வீட்டுக் காட்சியகங்கள் தோன்றின. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683-ல் உருவாக்கப்பட்டது. இது நவீனக் காலத்தின் பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

இந்திய அருங்காட்சியகங்கள்:
பழங்கால இந்தியாவில்  நவீனக் காலத்தைப் போன்ற அருங்காட்சியகங்கள் இல்லை எனினும், சித்திரசாலை, சரஸ்வதி பண்டாரம் போன்ற அமைப்புகள் இருந்தன, பௌத்த விகாரைகள், சைத்தியங்கள், ஸ்தூபங்கள் ஆகியவையும், கோயில்களும் சிற்பம், ஓவியம் (எ.கா. தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள்) வழி கதைமரபுகளை எளிதாக எடுத்துரைத்தன.  காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணப்படும் பல்லவர் வரலாற்றுச் சிற்பத் தொகுதிகளும், மாமல்லபுரக் கோயில்களும், சிற்பத் தொகுதிகளும் . அருமையான காட்சியக மாதிரிகள்தான். சோழர் காலத்தின் தாராசுரம் கோவிலில் காணப்படும் பெரியபுராணக் கதைச் சிற்பங்களும் ஒரு தலைசிறந்த காட்சிப்படுத்தல் எனலாம். அதுபோல இராமாயணக் கதைச் சித்திரங்கள் பல கோயில்களில் காணப்படுகின்றன. இவை அருங்காட்சியக முன்னோடிகளாகும்.
நவீனக் கால இந்தியாவில் தொல்லியலுக்கும், அருங்காட்சியகவியலுக்குமான அடித்தளம் மேலை  நாட்டினரால் இடப்பட்டது. பொ.ஆ. 1784 ல் வங்காள ஆசியவியல் கழகம் வில்லியம் ஜோன்ஸ் (படம் 5) என்ற வில்லியம் கோட்டையிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசரால்  கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியவியல் ஆய்விற்குச் சிறந்த பங்காற்றியது, சென்னை மாகாணத்திலும், காலின் மெக்கன்சி, லக்ஷ்மணையா, போரையா உள்ளிட்ட பலரின் பங்கும், சென்னைக் கோட்டையிலிருந்த கல்லூரியின் பணியும் குறிப்பிடத்தக்கது (காண்க மெட்ராஸ் ஸ்கூல் ஆப் ஓரியண்டலிசம், தாமஸ் டிராட்மேன்). ஆனால் இவையனைத்தும் காலனியாதிக்கப் பார்வையின் ஒரு பங்கு என்பதை மறுக்கமுடியாது. எட்வர்டு சைத் அவர்களின் ஓரியண்டலிசம் என்ற நூல் இங்கு நினைவு கூறத்தக்கது.


 படம் எண். 5 வில்லியம் ஜோன்ஸ் நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் William Jones, by William Hogarth (died 1764).

இந்த வங்காள ஆசியவியல் கழகத்தின் தொல்பொருள்கள் கொல்கத்தாவில் உள்ள  இந்திய அருங்காட்சியகமாக 1814 ஆம் ஆண்டு எழுந்தது. சென்னை அரசு அருங்காட்சியகம் 1851 தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்திலும் இந்தியாவிலும் பல அருங்காட்சியகங்கள் அரசாலும், தனியாராலும் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

உரை நோக்கம்:
இன்று எனது உரையில் தமிழகத்தில் அருங்காட்சியகத் தேவைகள் குறித்தும், குறிப்பாகச் சோழமண்டலக் கடற்கரைத் துறைமுகங்கள் குறித்தும், தமிழகத்தில் தொல்லியல், மரபியல், அருங்காட்சியகப் புலங்களில் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் உரையாற்றவிருக்கின்றேன்.

தமிழகத்தின் கடற்கரைப் பகுதியிலும் உள்நாட்டிலும்  நகரமயமாக்கம் :
தமிழகத்தில் நகரமயமாக்கம் பொது ஆண்டிற்கு முந்தைய சில நூற்றாண்டுகளில் தோன்றியது எனக் கூறலாம். அதாவது சிறு குடி, மூதூர், என்று பெயர்பெற்ற இரும்புக்கால ஊர்கள் சில நகரங்களாக வளரத் தொடங்கின. இக்காலத் தமிழகத்தில் துறைமுகங்கள் தோன்றி அவை ஆப்பிரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளுடன் வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் கொண்டிருந்தன. தமிழகத்தின் உள்நாட்டிலும் கீழடி, உறையூர், மதுரை, கரூர், காஞ்சிபுரம் போன்ற பல நகரங்கள் உருவாயின.
தமிழகம் இந்தியப் பெருங்கடற்பகுதியில் தேனடை போன்று விளங்கும் இந்தியாவின் தென்பகுதியில் அமைந்து  நடுநாயகமாக விளங்குகின்றது.  நிலவியல் சிறப்புப் பெற்ற இதன் அமைவிடம் காரணமாக மேலைநாடுகளிலிருந்து கீழை நாடுகளுக்குச் சென்ற கப்பல்களும் தமிழகத்திற்கு வந்துசெல்ல வேண்டியிருந்தது.
பழவேற்காடு, மயிலாப்பூர், சதுரங்கபட்டினம், மாமல்லபுரம், அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், அழகன்குளம்,பெரியபட்டினம், கொற்கை எனப் பல துறைமுகங்கள் தமிழகத்திலிருந்து வந்துள்ளன. தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் பல தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன.
தமிழகத்தின் நகரங்கள் அனைத்துமே சந்தைகளாகவும், சிறந்த பொருளுற்பத்தி மையங்களாகவும் இருந்துள்ளன. இவற்றில் இரும்பு, பொன், செம்பு, உயர்வகைக் கல் மணிகள், கண்ணாடி மணிகள், துணி வகைகள் போன்ற பலவிதமான பொருள்கள் செய்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இப்பொருள்கள் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் பரிமாற்றம் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் - தேவைகள்:
அருங்காட்சியகங்கள் என்ற உடனேயே சிலரிடையே அவை மேம்படுத்தப்படவேண்டும் என்ற கருத்து வெளிப்படுகின்றது. இது என்னுடைய கருத்து என்பதைவிட நான் பேசி விவாதித்த பலரிடமிருந்து வெளிப்பட்டுள்ள கருத்தாகும். சில அருங்காட்சியகங்கள் கால ஒட்டத்தில் உறைந்து காணப்படுகின்றன. அவை புதுமையைப் புகுத்தவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக இந்தியர்களும், தமிழர்களும் பல வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் அருங்காட்சியகங்களையும், நிறுவனங்களையும் பார்த்து நம் நாட்டில் ஏன் அத்தகைய அருங்காட்சியகங்கள் இல்லை என்று வினா எழுப்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவது அவசியமாகும்.
தமிழகத்தின் தொல்லியல், அருங்காட்சியகப் புலங்களில் தொலைநோக்குத் திட்டங்கள் மிக அவசியம். தமிழக அரசு சில பெரிய அளவிலான அருங்காட்சியகங்களை  தற்போது உருவாக்கி வருகின்றது என அறிகிறேன்.  குறிப்பாகக் கீழடி அகழாய்வு தமிழக தொல்லியல், அருங்காட்சியக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். சமூக ஊடகங்களின் தாக்கம், விழிப்புணர்வு காரணமாகத் தொல்லியலில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளன. மேலும் அறிவுசார் விவாதங்களும் நடைபெறுகின்றன.
தொல்லியலிலும், அருங்காட்சியகவியலிலும் காலனியாதிக்கப் பார்வையை நாம் தவிர்க்கவேண்டும். காலனியாதிக்கத்தின் விளைவாகத் தோன்றிய மானிடவியல் ‘இனம்,’ ‘பழங்குடி’ என்று பேசி சில குழுக்களை வெறும் காட்சிப் பொருளாக மாற்றிவிட்டது. காலனியாதிக்கத்தின் கைக்குழந்தையாக இருந்த மானிடவியலின் இன்றைய போக்கும் மாறி, சமூக வளர்ச்சியின் பக்கம் சென்றுவிட்டது, எனவே, அனைத்து வகைப் பண்பாடுகளும், விளிம்பு நிலை மக்களின் வரலாறும் அருங்காட்சியகத்தில் இடம் பெறவேண்டும்.
தொல்லியல் புதைந்து கிடக்கும் வாழ்விடங்களை ஆராய்கின்றது. தொல்லியலின் வாயிலாகச் சமூக வளர்ச்சியையும், கல்வியையும் மேம்படுத்த இயலும். இந்திய அளவில் சிந்துவெளி நாகரிக இடங்களின் அகழாய்விற்கே இது வரை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அண்மையில் இந்தப் போக்கு சற்று மாறத் தொடங்கியுள்ளது.

தொல்லியல் சான்றுகளை வளமாகக் கருதும் பார்வை:
தொல்லியலை ஒரு சமூக-பண்பாட்டு, சுற்றுச் சூழல் வளமாகப்  (Resource)பார்க்க வேண்டும். அதை சமூக வளர்ச்சிக்கான, கல்விக்கான ஒரு வளமாகக் காணவேண்டும். தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் குறித்து பொதுவெளியில் அதிகமான அறிவுப்பூர்வமான விவாதங்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் நாம் பல தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க இயலும்.

தமிழக அரசு தொல்லியல் துறையின் முயற்சிகள்:
தமிழக அரசின் தொல்லியல் துறை பல புதிய முயற்சிகளை எடுத்துவருகின்றது. மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தலைமையிலும் திரு த. உதயசந்திரன் இ.ஆ.ப அவர்களின் வழிகாட்டலிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பெரிய அளவில் செய்யப்பட்டு வரும் கீழடி அகழாய்வும், அங்கு அமைக்கப்படவிருக்கும் அருங்காட்சியகம் இதற்குச் சான்றாகும்.  தமிழகத்தில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. அழகன்குளம்,  கொற்கை போன்ற துறைமுகங்கள் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. தொல்லியல் துறை சில அருங்காட்சியகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது ஒரு நல்ல தகவல் ஆகும். மேலும் தூத்துக்குடி துறைமுக அமைப்பும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது இங்கு சுட்டத்தக்கது.

தமிழக அரசு அருங்காட்சியகத் துறையின் முயற்சிகள்:
தமிழகத்திலும், சென்னை அருங்காட்சியகத்திலும் அண்மைக்காலமாகப் பல புதுமையான காட்சிக்கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் திரு. எம்.எஸ். சண்முகம் இ.ஆ.ப அவர்கள் விளக்கியது போலப் பல செயற்திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பாராட்டுக்குரியவை ஆகும்.

மாமல்லபுரத்தில் பல்லவர் வரலாற்றிற்கான முழுமையான அருங்காட்சியகம்:
மாமல்லபுரம் சங்க இலக்கியத்தில் வரும் நீர்ப்பெயற்று என்ற துறைமுகமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அகழாய்வுகள் அதிகம் நடைபெறவில்லை. பல்லவர்கள் தமிழக வரலாற்றில் கட்டடக்கலை, நீர்ப்பாசனத்திற்கு முக்கியமான பங்களித்துள்ளனர். அவர்களின் முழுமையான வரலாறு நூல்களில்தான் உள்ளன. ஒரு சாதாரண மனிதனும், குழந்தைகளும் வாசித்து அவர்களுடைய வரலாற்றைப் புரிந்துகொள்வது கடினம். எனவே, மாமல்லபுரத்தில் சிறந்த காட்சிக் கூடங்களை உள்ளடக்கிய, நவீனமயமான பல்லவர் கால வரலாற்று அருங்காட்சியகம் அமைவது மிகவும் சிறப்பானதாக அமையும்.

அரிக்கமேட்டில் தொல்லியல் இட அருங்காட்சியகம்:
தமிழகத்தின் சங்ககாலத்தில் அரிக்கமேடு ரோமானிய, கிழக்காசிய வணிகத் தொடர்புள்ள ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு ரோமானிய வணிகத்திற்கான ஆம்போரா, அரிட்டைன் எனப்படும் மட்கலச் சான்றுகள் கிடைத்துள்ளன. துணி உற்பத்திக்கானவை எனக் கருதப்படும் சாயத்தொட்டிகளும், செங்கற் கட்டுமானங்களும் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்தில் வரும் வீரை முன்துறை என்ற துறைமுகமாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சங்ககாலத் தொழில் உற்பத்திக்கூடமாகவும், சந்தையாகவும் இருந்துள்ளது. இங்கு தொல்லியல் இட அருங்காட்சியகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது நிறைவுறவில்லை. ஆனால் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஓர் அருங்காட்சியகத்தை அரியாங்குப்பம் பகுதியில் பிரான்சின் கீழ்த்திசை ஆய்வு நிறுவனத்தின் பங்கேற்புடன் உருவாக்கி வருகின்றது. இங்கு கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையமும் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இங்கு இந்திய அரசு தொல்லியல் துறை ஓர் அருங்காட்சியகம் உருவாக்குவது சிறப்பானதாக அமையும்.

காவிரிப்பூம்பட்டினம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி  அருங்காட்சியகம்:
காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்ற சங்ககாலத் துறைமுகமாகவும், நாகப்பட்டினம் சோழர் காலத்தில் புகழ்பெற்ற வணிக மையமாகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளது. ஸ்ரீவிஜய அரசன் கட்டிய பௌத்த விகாரை இங்கு இருந்தது. சீனத் தொடர்புகளுக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. பெரிய, சிறிய லெய்டன் செப்பேடுகள் எனப்படும் ஆனைமங்கலச் செப்பேடுகள் இங்கு இருந்த பௌத்தப் பள்ளிகள் குறித்துப்  பேசுகின்றன. காவிரிப்பூம்பட்டினம்- நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்கள் மிக அருகாமையில் அமைந்துள்ளன. இங்கு நாகூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு வரும் புனிதப் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கலாம். அது சுற்றுலா வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.

கடல்சார் தொடர்புகள்-புலம் பெயர் தமிழர்கள் அருங்காட்சியகம்:
இந்தியக் கடல்சார் வரலாற்றில் தமிழகம் சிறப்பான பங்கு வகித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையையும், நெய்தல் நில வாழ்வியல் முறைகளையும், தமிழர்களின் கடல்கடந்த தொடர்புகளையும் விரிவாக விளக்கிக் காட்டும் ஓர் அருங்காட்சியகம் தமிழகத்திற்கு அவசியம்.

பெருங்கற்படை  நினைவுச் சின்ன திறந்தவெளிப் பூங்கா:
பல தொல்லியல் இடங்கள்  நவீனக் கால நகரமயமாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 1970 முதல் இன்று வரை பல பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வெகு சில மட்டுமே. தமிழகத்தில் சில இடங்களில் பெருங்கற்காலப் பூங்கா என்ற வகையில் திறந்தவெளி காட்சியகங்கள் அமைப்பது அவசியமாகும். கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, கோவைப் பகுதிகளில் இத்தகைய திறந்தவெளிப் பூங்காக்களை அமைக்கலாம். இவை பழைய தொல்லியல் இடங்களைப்  பாதுகாக்க உதவுவதுடன், மக்கள் பயன்பாட்டிற்கும் கல்விக்கும் உதவும்.

அறிவியல் தொழில் நுட்ப அருங்காட்சியகம்:
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை ஊக்கிவிக்கவும், அறிவியல்சார் புரிதலை ஏற்படுத்தவும் அறிவியல் கல்விக்காகவும் பெரிய அளவிலான அறிவியல் தொழில் நுட்ப அருங்காட்சியகம் அவசியம். பெங்களூருக்கு அருகில் பெரிய அளவில் உருவாக்கப்படும் அறிவியல் காட்சியகம் இங்கு நினைவுகூரத்தக்கது. இவற்றில் தமிழர்களின் மரபுசார் அறிவு, தொழில் நுட்பம், சித்த மருத்துவம் ஆகியவற்றையும் காட்சிப்படுத்த வேண்டும். பெங்களூருக்கு அருகில் (ஹோசூர், கௌரிபிட்டனூர்) உருவாகிவரும்  ஹெச்.  நரசிம்மையா அறிவியல் நகரம் ஒரு நல்ல மாதிரியாகும் (படங்கள் 6,7,8) (www.hnsc.org; https://www.facebook.com/pg/drhnsc/posts/).

படம் எண். 6. முனைவர் நரசிம்மையா அறிவியல் நகர மையம் நன்றி: www.hnsc.org

படம் எண். 7. முனைவர் ஹெச். நரசிம்மையா அறிவியல் நகர மையம், அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் மாதிரிகள் நன்றி: www.hnsc.org
படம் எண்.8. முனைவர் ஹெச். நரசிம்மையா அறிவியல் நகர மையம்: உருவாக்கப்படவிருக்கும் வானூர்தி பொறியியல் மையத்தின் மாதிரிப்படம் (Aeronautics Laboratory) நன்றி: www.hnsc.org

சுற்றுலா இடங்களில் அருங்காட்சியகங்கள்:
தமிழகத்தின் பல சுற்றுலா இடங்களில் சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அருங்காட்சியகங்களை உருவாக்கலாம். குறிப்பாகக் கன்னியாகுமரி, இராமேஸ்வரம், வைகை அணை, மேட்டூர் அணை, கல்லணை போன்ற இடங்களில் அருங்காட்சியகங்களை அமைக்கலாம். இதன் வழியாக ஒரே இடத்தில் பல சுற்றுலாக் காட்சியிடங்கள் (attractions) உருவாகும்.  

சோழ மண்டல வரலாற்று அருங்காட்சியகம்:
பல்லவர் கால வரலாற்றைக் குறித்து நாம் முன்னர் கூறியது போலச் சோழர் கால வரலாற்றை முழுமையாக விளக்கும் அருங்காட்சியகம் இன்று வரை உருவாகவில்லை. பல புலங்களில் சோழர் கால வரலாற்று வளர்ச்சி சிறப்பானதாகும். எனவே சோழ மண்டலப் பகுதியில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் சோழர் வரலாற்று அருங்காட்சியகம் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பல்கலைக்கழகமும் STRIDE  எனப்படும் நடுவணரசின் திட்டத்தின் வாயிலாக கங்கைகொண்டசோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுவருகின்றது. தஞ்சாவூரில் உள்ள அருங்காட்சியகங்கள் வலுப்படுத்தப்பட்டு பெரியதாக்கப்படவேண்டும். இவை சுற்றுலா வளர்ச்சிக்கும் கல்விக்கும் உதவும்.  இந்த அருங்காட்சியகங்கள் இராசராசன், இராசேந்திரன் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை உருவாக்கிய பெருங்கோயில்கள் போல அமைய வேண்டும். இங்கு அரசர்களின் வரலாறு மட்டுமல்லாமல் மக்களின் வரலாறும் இடம் பெறவேண்டும்.

பாண்டிய மண்டல வரலாற்று அருங்காட்சியகம்:
பாண்டியர் கால வரலாற்றைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைத் தென் தமிழகத்தில் அமைக்கலாம். பாண்டியர் வரலாற்றில் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. எனவே ஒரு முழுமையான அருங்காட்சியகம் இக்குறையை ஓரளவிற்குப் போக்கும். இங்கு மன்னர் முதல் மக்கள் வரை அனைவரின் வரலாறும் இடம் பெறவேண்டும்.

சேர-கொங்கு மண்டல வரலாற்று அருங்காட்சியகம்:
கொங்கு மண்டலம் எனப்படும் கோயம்புத்தூர் பகுதியில் சேரர்களின் வரலாற்றைக் காட்சிப்படுத்துவது அவசியம். இங்கு கேரளப் பகுதியின் வரலாற்றையும் உள்ளடக்கலாம்.

நாட்டார் வழக்காற்றியல்-மானிடவியல்-இனவரைவியல் அருங்காட்சியகம்:
நாட்டார் வழக்காறுகள், வரலாற்றிற்கான முக்கியமான சான்றுகளில் அடங்கும். தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல், இனவரைவியல் குறித்துப் பல ஆய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன.  தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், இனவரைவியல் சார்ந்த பொருண்மையுள்ள அருங்காட்சியகங்களைச் சில இடங்களில் அமைக்கலாம். கிராமப்புறச் சுற்றுலா வளர்ச்சிக்கும், உள்ளூர் மக்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் இது மிகுந்த உதவியாக இருக்கும்.

நவீன மின்னணு தொழில் நுட்பத்தில் அருங்காட்சியகங்கள்:
அருங்காட்சியகங்கள் பெரிய அளவில், உலகத்தரத்தில் உருவாக்கப்பட வேண்டும். மின்னணுத் தொழில் நுட்பங்கள் அவற்றை மிகவும் புதுமையாகவும் சமகாலத் தன்மையுடையனவாகவும் ஆக்க இயலும். இங்கு  மிகை யதார்த்த (augmented reality), மெய் நிகர் உண்மை (virtual reality) ஆகிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற கருத்து முனைவர் கண்ணன்  நாராயணன் அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளூர் வரலாறு தொடர்பான காட்சிக்கூடம்:
உள்ளூர் வரலாறு தொடர்பான காட்சிக்கூடங்கள் அனைத்து அருங்காட்சியகங்களிலும் இடம்பெறலாம். சென்னை அருங்காட்சியகத்தில் சென்னையின் வரலாற்றைக் குறித்த காட்சியகங்கள், தற்காலிகமான கண்காட்சிகளை உருவாக்கலாம். இங்கு மக்கள் தங்கள் வசம் உள்ள அரிய தொல்பொருள்கள்,  நிழற்படங்கள், ஆவணங்களைச் சில காலத்திற்கு அருங்காட்சியகத்திற்குக் கடனாக அளித்து, அவர்கள் பின்னர் மீளப்பெற்றுச் செல்லாம். பயனாளர்கள், மக்கள் பங்குபெறும் வகையில் இது அமையும்.

அருங்காட்சியகமும் கல்வி நிலையங்களும்:
ஒவ்வொரு அருங்காட்சியகமும், உள்ளூர் பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியமாகும்.   அருங்காட்சியகங்கள் பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து செயல்படலாம். ஒன்பதாம் வகுப்புப் பாடத்தின் அடிப்படையில்கூட சில காட்சிக்கூடங்களை உருவாக்கலாம். மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றை  நடத்தலாம். பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை ஆகியவை இங்கு இணைந்து செயல்பட்டால் அது சிறப்பாக இருக்கும். அருங்காட்சியகங்கள் அனைத்து பள்ளிக்கூடங்களுடனும், கல்லூரிகளுடனும் பன்முக வலைப்பின்னல்  (networking) தொடர்பை ஏற்படுத்தும் போது அருங்காட்சியகத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை கூடும். மாணவர்களின் கல்வித்தேவைக்கு ஏற்ப அருங்காட்சியகங்கள் மாறவேண்டும். அருங்காட்சியகத்திற்குக் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காகத் தனியான அலுவலர்கள் அவசியம். அருங்காட்சியகங்கள் மாணவர்கள், மக்களைக் கவரப் பல  வகையான செயல்திட்டங்கள், விழாக்களை நடத்தலாம்; கோடைக்கால வகுப்புகளை நடத்தலாம்.

காலத் தேவை, சமூகத் தேவைகளுக்கான அருங்காட்சியகங்கள்:
மேலும் அருங்காட்சியகங்கள் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். தற்போதைய காலத்தில் கரோனா, தூய்மை, சுற்றுச்சூழல், உடல்நலம், யோகா, குறித்த தகவல்களை மக்களுக்கு தனித்தனிக் காட்சிக்கூடங்கள் வழியாக அவை அளிக்கலாம்.

கைவினை மையங்களாக அருங்காட்சியகங்கள்:
அருங்காட்சியகங்களில் கைவினை மையங்களையும் அருங்காட்சியக அங்காடிகளையும் ஏற்படுத்தி, அவற்றின் வழியாக மட்பானைத் தொழிலாளர்கள், இரும்பு, பித்தளைப் பொருள்கள், துணி போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தில் உதவலாம். இங்கு அருங்காட்சியகங்கள் காலனிவாதப் போக்கைக் கைவிட்டு, சமகாலச் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்க இயலும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.



அருங்காட்சியகங்களின் அமைவிடம்: பண்பாட்டு-மரபியல் வளாகங்கள்:
மாவட்டத் தலைநகர்களில் சில சூழல்களில் தனித்துச் செயல்படும் தொல்லியல் அகழ் வைப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், கைவினை மையங்கள் இணைந்து ஒரே இடங்களில் செயல்படலாம். சில இடங்களில் மாதிரியாக ஒருங்கிணைந்த பண்பாட்டு, மரபியல் அறிவுசார் வளாகங்களை உருவாக்கலாம். இந்நடவடிக்கை மக்கள் எளிதில் இவற்றைக் கண்டு பயன்பெற உதவும்.

இணையவழிக் காட்சித்திட்டங்கள்:
கரோனாவால் தாக்குண்டுள்ள இக்காலத்தில் இணையவழிக் காட்சித்திட்டங்களை உருவாக்குவதும் மிக அவசியம். இணைய வழிச் சொற்பொழிவுகளையும்  நடத்தலாம். தொலைநோக்குடன் குறும்படங்கள், ஒரு தொல்பொருளின் வரலாறு, காப்பியின் வரலாறு போன்ற குறுங் காணொளிப்படங்கள் அருங்காட்சியகங்களை மக்களிடையே எடுத்துச்செல்ல உதவும். அண்மைக்காலமாக இணையத்தில் வலம் வரும் காசி, இராமேஸ்வரப் பயணத்திற்கான பித்தளைப் பாத்திரத் தொகுப்பின் காணொளி சிறப்பானது.

அருங்காட்சியக நிருவாகிகளும், நுண்தலைமைத்தன்மை (Micro Leadership):
அருங்காட்சியக நிருவாகிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்விசார் செயல்பாடுகளையும் திட்டங்களையும், கைத்தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களையும் வகுப்பது அவசியம். மேல்நிலையில் திறமையான தலைமைப்  பண்புடன் செயல்பட்டாலும், வட்டார நிலைகளில் நுண்தலைமைப் பண்பு அவசியம். அப்போதுதான் மேல் நிலையில் உருவான பல கருத்துக்களை அடித்தளத்தில்  விதைத்துச் சிறப்பாகச் செயல்படுத்த இயலும்.

மனிதவள மேம்பாட்டுப்பயிற்சி:
அருங்காட்சியக ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிப்பதும், புதிய உத்திகள், செயல்திட்டங்களைச் செயல்படுத்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதும் அவசியம். அருங்காட்சியக ஊழியர்கள் பண்பாட்டுத் தூதர்கள் போல. அவர்கள் சிறப்பாக இயங்கினால்தான் அருங்காட்சியகம் இயங்கும். எனவே அருங்காட்சியக அலுவலர்கள் ஆய்வாளர்களாக, புதுமை புகுத்துவார்களாக இருக்கவேண்டும். இங்கு அவர்கள் சிறப்பாகச் செயல்படும் சென்னையில் அமைந்துள்ள சர்மா மரபியல் கல்வி நிறுவனத்தின் மரபுக் கல்வி முயற்சிகளை அவர்கள் பின்பற்றலாம்.



சிறப்புக் கண்காட்சிகள்:
நிகழ்வுகள், செயல்திட்டங்கள் இல்லாத, காட்சிப்பொருள்களை மட்டுமே வைத்துச் செயல்படுகின்ற அருங்காட்சியகங்கள் தொல்லுயிர் படிவங்கள் போலாகும். எனவே, அருங்காட்சியகங்கள் சிறப்புக் கண்காட்சிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். மே தினம், உலக மரபு  நாள்,  விடுதலை நாள், உலகப் போர் நாள்கள் எனப் பலவிதமான சூழல்களில் சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம். மே தினத்தில் உழைப்பாளர்களின் வரலாற்றைக் கண்காட்சியாக வைக்கலாம்.

எளிதில் அணுகும் தன்மையை (accessiblilty) உருவாக்குதல்:
அருங்காட்சியகங்களில் எளிதில் அணுகும் தன்மையை உருவாக்குவது மிகமுக்கியமானதாகும். குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கட்டணமில்லா அனுமதியை அல்லது சலுகைக் கட்டணத்தை அளிக்கலாம். அல்லது சில நாள்களில் சில மணி நேரங்களில் இந்த அனுமதியைக் கொடுக்கலாம். இதன் வழி ஏழை எளியவரும் அருங்காட்சியகங்களின் பயனை அடைய இயலும்

தொல்லியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்:
தமிழகத்தில் தொல்லியல் முதுகலைப் பாடம் வரலாற்றுக்கு இணையல்ல என்ற ஒரு நிலை உள்ளது. இதன் காரணமாகத் தொல்லியல், தமிழகக் கல்லூரிகளில் வெகுவாக இடம்பெறவில்லை. இந்நிலை மாறி, தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாட்சி அருங்காட்சியவியல் போன்ற பாடங்கள் கல்லூரிகளில் இடம்பெறுவது முக்கியமானதாகும்

நிதிப்  பற்றாக்குறையைச் சமாளித்தல்:
மேற்கூறிய அளவில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்தல் எளிதல்ல. தற்போதைய கரோனா நெருக்கடி நிலையில் இது ஒரு பெரிய சிக்கலாகும். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தனியார், கைவினைஞர்கள், பொது  மக்கள்,  மாநகர, நகரசபைகள்  உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியோரை இணைத்து அருங்காட்சியகப் புலத்தில் திட்டங்களைச் செயல்படுத்தலாம். பெருநிறுவன சமூகப் பொறுப்பின் (Corporate Social Responsibility) வழியாகவும் சில திட்டங்களை உருவாக்கலாம். மேலே கூறப்பட்ட திட்டங்களைத் தொலை நோக்குத் திட்டங்களின் வழி செயல்படுத்தலாம். புதுமையான நிதிவளத்தை உருவாக்குதல் பல்துறைகள் இணைந்து செயல்படுதல் வாயிலாக இவற்றைச் செயல்படுத்தலாம்.


முடிவுரை:
எனது கருத்துக்களைக் கேட்ட உங்கள் அனைவருக்கும், வாய்ப்பளித்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.



காணொளி உரைகளுக்கான இணைப்புகள்:
https://youtu.be/0yvJMeBp0R8
https://youtu.be/3hcVsiPCDeM
https://youtu.be/WehmUBr8ILo
https://youtu.be/JRB4fv5tTlA
https://youtu.be/IOhbqCLw1_4

இந்திய அரசு தொல்லியல் துறை- சென்னை வட்டத்திற்காக நிகழ்த்திய உரை:
https://m.facebook.com/story.php?story_fbid=269718547745799&id=100041229670717


தொடர்பு:
முனைவர். வீ.செல்வகுமார்,
கடல்சார் வரலாறு & கடல்சார் தொல்லியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 
மின்னஞ்சல்: selvakumarodi@gmail.com