Wednesday, May 20, 2020

தமிழகத்தில் அருங்காட்சியகத் தேவைகள்


தமிழகத்தில் அருங்காட்சியகத் தேவைகள்


-- முனைவர். வீ.செல்வகுமார்

(குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இணைய வழி நடந்த   பன்னாட்டு அருங்காட்சியக நாள் சொற்பொழிவு, 19-05-2020)

            அனைவருக்கும் மாலை வணக்கம்! உங்கள் அனைவருக்கும் எனது பன்னாட்டு அருங்காட்சியக நாள் வாழ்த்துக்கள்!
           தமிழக அரசின் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.க. பாண்டியராஜன் அவர்களுக்கும்; அருங்காட்சியத்துறை ஆணையர் திரு. எம்.எஸ். சண்முகம்  இ.ஆ.ப. அவர்களுக்கும்; முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் திரு. த. உதயசந்திரன்  இ.ஆ.ப அவர்களுக்கும்; இன்றையக் கருத்தரங்கில் தலைமை தாங்கி உரையாற்றவிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர்.க.சுபாஷிணி அவர்களுக்கும்; வரவேற்புரை வழங்கிய தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொருளாளர் முனைவர் இனிய நேரு அவர்களுக்கும்; நிகழ்ச்சியில் நன்றியுரை வழங்க உள்ள திரு. க்ரிஷ் அவர்களுக்கும்; நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் திரு. விவேகானந்தனுக்கும்; இந்த நிகழ்வை இன்று உலகம் முழுவதும் கண்டுகொண்டிருக்கின்ற உலகத் தமிழ்த் தோழர்களுக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
           ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் நாள் கொண்டாடப்படும் பன்னாட்டு அருங்காட்சியக நாளையொட்டி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ICOM - International council of Museum, எனப்படும் பன்னாட்டு அருங்காட்சியகக் குழு உலகமெங்கும் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது. அது ஒவ்வொரு வருடமும் ஓர் அருங்காட்சியகவியல் சார்ந்த பொருண்மையை மையப்படுத்துகின்றது.
           இந்த வருடத்திற்கான (2020) பன்னாட்டு அருங்காட்சியக நாளின் பொருண்மை “சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள்: பன்முகத்தன்மையும், அகப்படுத்துதலும்” என்பதாகும். அதாவது Museums for Equality: Diversity and Inclusion.
           அருங்காட்சியகங்கள் சமத்துவத்தை முன்னிறுத்தவேண்டும். பின்நவீனத்துவத்தின் (Post-modernism) அடிப்படையில் பன்முகத்தன்மைக்கு (diversity) இடமளிக்கும் வகையிலும் அருங்காட்சியகங்கள் மாறவேண்டும் என்றும், அகப்படுத்துதலுக்கும் (inclusion) வழிவகுக்க வேண்டுமென்றும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. பல நேரங்களில் அருங்காட்சியகங்கள் ஒற்றைப் பொருண்மையுடன் அமைந்து விடுவதுண்டு.  யதார்த்தத்தில் நாம்   நம்மைப் பற்றியே சிந்தித்து, அடுத்தவர்களின் தேவைகளை நினைக்காமல் இருப்பதுண்டு. அதனால்தானோ என்னவோ நம் முன்னோர்கள் “பக்கத்து இலைக்குப் பாயசம்” என்று  நுட்பமான ஒரு வழக்காற்றை உருவாக்கியுள்ளனர். இதை நாம் இன்று சுயநலமாகப் பார்க்கிறோம். மேற்கூறப்பட்ட ஒற்றைப் பொருண்மை நமது பொதுவான பார்வைக் குறைபாடு எனக் கூறலாம். எனவே அனைத்து விதமான கருத்துக்களையும், பார்வைகளையும் அருங்காட்சியகங்கள் உள்ளடக்கவேண்டும் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படும் மையமான கருத்து.
           அடுத்ததாக, அருங்காட்சியகங்களின் தோற்றம் குறித்த சில கருத்துக்களைக் காண்போம். அருங்காட்சியகம் ஆங்கிலத்தில் “Museum” என்று அழைக்கப்படுகின்றது. இது கிரேக்கச் சொல்லான Mouseion என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. Mouseion  என்பதற்கு ‘மியூசஸ் என்ற கடவுளின் கோயில்’ என்று பொருள் கிரேக்கத்தில். மியூசஸ் எனப்படும் ஒன்பது பெண் கடவுளர்கள் சீயஸ் மற்றும் நிமோசைன் என்ற கிரேக்கக் கடவுள்களின் மகள்களாகக் கருதப்படுகின்றனர். இவர்களில்  கிளியோ, வரலாற்றுக்கும் (Clio-History); யுடெர்ப், இசைப்பாடலுக்கும் (Euterpe- Lyric poetry), தலியா, நகைச்சுவைக்கும் (Thalia-comedy); மெல்பொமென், சோகத்திற்கும் (Melpomene-tragedy); டெர்பிசோர், நடனத்திற்கும் (Terpichor-Dance); எரோட்டோ, காதல் பாடலுக்கும் (Eroto-Love poetry); பாலிம்னியா, பக்திப் பாடல்களுக்கும் (Polymnia- divine poetry); அவுரானியா, வானியலுக்கும் (Ourania-astronomy); கலியோப், வீரப் பாடலுக்கும் (Calliope- Heroic poetry) கடவுள்களாகக் கருதப்படுகின்றனர். இக் கடவுள்களைத் தமிழிலக்கியங்களின் ஐந்திணைக் கடவுளர்கள் போலக் கருதலாம். எனினும், கிரேக்கர்களின் இந்தக் கலைசார் கடவுளர் வகைப்பாடு சிறந்த அறிவுசார் கட்டமைப்புடையது எனலாம். மேலும், இக்கலைகளின் தாய்த் தெய்வங்களாகப் பெண்களைக் கருதியிருப்பதும் வளமை, படைப்பாற்றல் சார்ந்த ஒரு வழக்கம் என ஊகிக்கலாம்.

தொல்பழங்காலக் குகை ஓவியங்கள் – கலைக்கூடங்களாக:
           மனிதனின் அறிவுசார் சிந்தனைகள் தொல்பழங்காலத்தில் மொழி உருவாக்கத்திலும், ஓவியங்களின், குறியீடுகளின் பயன்பாட்டிலும் வெளிப்பட்டுள்ளன. இவையே மனிதர்களின் படைப்பாற்றலுக்கு வித்திட்டன.
           தொல்பழங்கால ஓவியங்கள் உள்ள குகைகளை நாம் உலகின் மிகப் பழைமையான அருங்காட்சியகக் கலைக்கூடங்களாகக் கருதலாம், ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியங்கள் உள்ள அல்டாமிரா (Altamira, ஸ்பெயின் படம் 1), லாஸ்கா (Lascaux, பிரான்ஸ் படம் 2) போன்ற குகைகளை இங்கு நாம் சுட்டலாம். இந்தியாவின் பிம்பேத்கா (மத்தியப் பிரதேசம், படம் 3) உள்ளிட்ட பல இடங்களில் காணப்படும் ஓவியங்கள் உள்ள குகைகளும் ஒரு விதத்தில் அருங்காட்சியகங்களே. தமிழகத்தில் வெள்ளரிக்கோம்பை, கீழ்வாலை, செத்தவரை, நீலகிரி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகைகளில் பல அரிய வகை ஓவியங்கள் காணப்படுகின்றன.  இவை அக்கால வரலாற்று நிகழ்வுகள், வீரச் செயல்கள்,  நம்பிக்கைகள், சடங்குகள், ஆகியவற்றை நினைவு கூறவும், இளைய தலைமுறையினருக்கு வேட்டையாடுதல், உணவு சேகரித்தல்,  நம்பிக்கைகள்  உட்படப் பலவிதமான பண்பாட்டுச் செயற்பாடுகள், விழுமியங்களைக் கற்பிக்கவும், எடுத்துக்கூறவும் பயன்பட்டிருக்கவேண்டும். இக்குகை ஓவியங்களும் ஒருவித வரலாற்றுப் பதிவுகள்தான்; ஆவணங்கள்தான். எனவே அருங்காட்சியகங்களின் கல்விப்பணி பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது எனலாம். ஓர் ஓவியக் கருத்தை ஒரு குழந்தை சிறு வயதிலேயே மீண்டும் மீண்டும் பார்க்கும்போது அதன் சிந்தனையில், கருத்தில் அது பதிந்து பல புதிய கருத்துக்கள் உருவாக வழிவகுக்கின்றது; அவை அதன் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. இதையே பழங்காலக் கல்வியின் ஓர் அணுகுமுறை எனலாம்

நடுகற் காட்சிக்கூடங்கள்:
           தமிழகத்தின் சாலை ஓரத்தில் அமைந்த வீரர்களின் எழுத்துடை நடுகற்களும் ஒரு விதத்தில் வரலாற்றுக் காட்சியகங்களே (படம் 4). இவை சில இடங்களில் வழிச் செல்வோர் காணும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன.
           “நல் வழிக் கொடுத்த நாணுடை மறவர்
           செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட
           கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே”
என்று பாணரை, வழிச் செல்பவரை வழிபடுமாறு கூறுகின்றது மலைபடுகடாம் பாடல். எனவே நடுகற்கள் ஒரு வரலாற்று நிகழ்வைக்கூறி மக்களுக்கு வீரம், தியாகத்தின் கல்வியைப் புகட்டின. எனவே இவையும் பழங்கால அருங்காட்சியக வகையில்படும். இவற்றை  நவீன அருங்காட்சியகங்களின் முன்னோடிகள் என்பதில் தவறில்லை.

உலக அருங்காட்சியகங்கள் :
           உலகின் மிகப் பழமையான அருங்காட்சியகம் மெசபடோமியாவில் பொ.ஆ.மு ஆறாம் நூற்றாண்டில்  நபோனிடஸ் என்ற புதிய பாபிலோனிய அரசனின் மகள் என்னிகால்டி நானா என்பவரால் உருவாக்கப்பட்டது, இந்த அருங்காட்சியகத்தில் பொ.ஆ.மு 20-21 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தொல்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெண்ணால் உருவாக்கப்பட்டது என்ற சிறப்பை இந்த அருங்காட்சியகம் பெற்றுள்ளது.படம் எண். 1. அல்டாமிராவின் அழகோவியக் கலைக்கூடம், நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Thomas Quine சுமார் 40,000 ஆண்டுகள்

படம் எண். 2. லாஸ்கா  நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Alonso de Mendoza (talk | contribs)
படம் எண். 3. பிம்பேத்கா மத்தியப்பிரதேசம் – கலையரங்க குகை – Auditorium Rockshelter
நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Raveesh Vyas

படம் எண் 4. நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் Thamizhpparithi Maari
           எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவில் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டில் டாலமி என்ற கிரேக்க அரசரால் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருந்தது.
           ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பின்னர்தான் தொல்லியல் ஒரு பாடப்பிரிவாக உருவெடுத்து இன்று ஓர் அறிவியலாக உருப்பெற்று வளர்ந்துள்ளது. அது போல அருங்காட்சியகங்களும் காலம் காலமாக வளர்ந்துவந்துள்ளன. ஐரோப்பாவில் வீட்டுக் காட்சியகங்கள் தோன்றின. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683-ல் உருவாக்கப்பட்டது. இது நவீனக் காலத்தின் பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

இந்திய அருங்காட்சியகங்கள்:
பழங்கால இந்தியாவில்  நவீனக் காலத்தைப் போன்ற அருங்காட்சியகங்கள் இல்லை எனினும், சித்திரசாலை, சரஸ்வதி பண்டாரம் போன்ற அமைப்புகள் இருந்தன, பௌத்த விகாரைகள், சைத்தியங்கள், ஸ்தூபங்கள் ஆகியவையும், கோயில்களும் சிற்பம், ஓவியம் (எ.கா. தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள்) வழி கதைமரபுகளை எளிதாக எடுத்துரைத்தன.  காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் வைகுண்டப்பெருமாள் கோயிலில் காணப்படும் பல்லவர் வரலாற்றுச் சிற்பத் தொகுதிகளும், மாமல்லபுரக் கோயில்களும், சிற்பத் தொகுதிகளும் . அருமையான காட்சியக மாதிரிகள்தான். சோழர் காலத்தின் தாராசுரம் கோவிலில் காணப்படும் பெரியபுராணக் கதைச் சிற்பங்களும் ஒரு தலைசிறந்த காட்சிப்படுத்தல் எனலாம். அதுபோல இராமாயணக் கதைச் சித்திரங்கள் பல கோயில்களில் காணப்படுகின்றன. இவை அருங்காட்சியக முன்னோடிகளாகும்.
நவீனக் கால இந்தியாவில் தொல்லியலுக்கும், அருங்காட்சியகவியலுக்குமான அடித்தளம் மேலை  நாட்டினரால் இடப்பட்டது. பொ.ஆ. 1784 ல் வங்காள ஆசியவியல் கழகம் வில்லியம் ஜோன்ஸ் (படம் 5) என்ற வில்லியம் கோட்டையிலிருந்த உச்ச நீதிமன்ற நீதியரசரால்  கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியவியல் ஆய்விற்குச் சிறந்த பங்காற்றியது, சென்னை மாகாணத்திலும், காலின் மெக்கன்சி, லக்ஷ்மணையா, போரையா உள்ளிட்ட பலரின் பங்கும், சென்னைக் கோட்டையிலிருந்த கல்லூரியின் பணியும் குறிப்பிடத்தக்கது (காண்க மெட்ராஸ் ஸ்கூல் ஆப் ஓரியண்டலிசம், தாமஸ் டிராட்மேன்). ஆனால் இவையனைத்தும் காலனியாதிக்கப் பார்வையின் ஒரு பங்கு என்பதை மறுக்கமுடியாது. எட்வர்டு சைத் அவர்களின் ஓரியண்டலிசம் என்ற நூல் இங்கு நினைவு கூறத்தக்கது.


 படம் எண். 5 வில்லியம் ஜோன்ஸ் நன்றி: விக்கிமீடியா காமன்ஸ் William Jones, by William Hogarth (died 1764).

இந்த வங்காள ஆசியவியல் கழகத்தின் தொல்பொருள்கள் கொல்கத்தாவில் உள்ள  இந்திய அருங்காட்சியகமாக 1814 ஆம் ஆண்டு எழுந்தது. சென்னை அரசு அருங்காட்சியகம் 1851 தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்திலும் இந்தியாவிலும் பல அருங்காட்சியகங்கள் அரசாலும், தனியாராலும் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன.

உரை நோக்கம்:
இன்று எனது உரையில் தமிழகத்தில் அருங்காட்சியகத் தேவைகள் குறித்தும், குறிப்பாகச் சோழமண்டலக் கடற்கரைத் துறைமுகங்கள் குறித்தும், தமிழகத்தில் தொல்லியல், மரபியல், அருங்காட்சியகப் புலங்களில் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் உரையாற்றவிருக்கின்றேன்.

தமிழகத்தின் கடற்கரைப் பகுதியிலும் உள்நாட்டிலும்  நகரமயமாக்கம் :
தமிழகத்தில் நகரமயமாக்கம் பொது ஆண்டிற்கு முந்தைய சில நூற்றாண்டுகளில் தோன்றியது எனக் கூறலாம். அதாவது சிறு குடி, மூதூர், என்று பெயர்பெற்ற இரும்புக்கால ஊர்கள் சில நகரங்களாக வளரத் தொடங்கின. இக்காலத் தமிழகத்தில் துறைமுகங்கள் தோன்றி அவை ஆப்பிரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளுடன் வணிக, பண்பாட்டுத் தொடர்புகள் கொண்டிருந்தன. தமிழகத்தின் உள்நாட்டிலும் கீழடி, உறையூர், மதுரை, கரூர், காஞ்சிபுரம் போன்ற பல நகரங்கள் உருவாயின.
தமிழகம் இந்தியப் பெருங்கடற்பகுதியில் தேனடை போன்று விளங்கும் இந்தியாவின் தென்பகுதியில் அமைந்து  நடுநாயகமாக விளங்குகின்றது.  நிலவியல் சிறப்புப் பெற்ற இதன் அமைவிடம் காரணமாக மேலைநாடுகளிலிருந்து கீழை நாடுகளுக்குச் சென்ற கப்பல்களும் தமிழகத்திற்கு வந்துசெல்ல வேண்டியிருந்தது.
பழவேற்காடு, மயிலாப்பூர், சதுரங்கபட்டினம், மாமல்லபுரம், அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், அழகன்குளம்,பெரியபட்டினம், கொற்கை எனப் பல துறைமுகங்கள் தமிழகத்திலிருந்து வந்துள்ளன. தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் பல தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன.
தமிழகத்தின் நகரங்கள் அனைத்துமே சந்தைகளாகவும், சிறந்த பொருளுற்பத்தி மையங்களாகவும் இருந்துள்ளன. இவற்றில் இரும்பு, பொன், செம்பு, உயர்வகைக் கல் மணிகள், கண்ணாடி மணிகள், துணி வகைகள் போன்ற பலவிதமான பொருள்கள் செய்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இப்பொருள்கள் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் பரிமாற்றம் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் - தேவைகள்:
அருங்காட்சியகங்கள் என்ற உடனேயே சிலரிடையே அவை மேம்படுத்தப்படவேண்டும் என்ற கருத்து வெளிப்படுகின்றது. இது என்னுடைய கருத்து என்பதைவிட நான் பேசி விவாதித்த பலரிடமிருந்து வெளிப்பட்டுள்ள கருத்தாகும். சில அருங்காட்சியகங்கள் கால ஒட்டத்தில் உறைந்து காணப்படுகின்றன. அவை புதுமையைப் புகுத்தவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக இந்தியர்களும், தமிழர்களும் பல வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டின் அருங்காட்சியகங்களையும், நிறுவனங்களையும் பார்த்து நம் நாட்டில் ஏன் அத்தகைய அருங்காட்சியகங்கள் இல்லை என்று வினா எழுப்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவது அவசியமாகும்.
தமிழகத்தின் தொல்லியல், அருங்காட்சியகப் புலங்களில் தொலைநோக்குத் திட்டங்கள் மிக அவசியம். தமிழக அரசு சில பெரிய அளவிலான அருங்காட்சியகங்களை  தற்போது உருவாக்கி வருகின்றது என அறிகிறேன்.  குறிப்பாகக் கீழடி அகழாய்வு தமிழக தொல்லியல், அருங்காட்சியக வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். சமூக ஊடகங்களின் தாக்கம், விழிப்புணர்வு காரணமாகத் தொல்லியலில் அதிக ஈடுபாடும், ஆர்வமும் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளன. மேலும் அறிவுசார் விவாதங்களும் நடைபெறுகின்றன.
தொல்லியலிலும், அருங்காட்சியகவியலிலும் காலனியாதிக்கப் பார்வையை நாம் தவிர்க்கவேண்டும். காலனியாதிக்கத்தின் விளைவாகத் தோன்றிய மானிடவியல் ‘இனம்,’ ‘பழங்குடி’ என்று பேசி சில குழுக்களை வெறும் காட்சிப் பொருளாக மாற்றிவிட்டது. காலனியாதிக்கத்தின் கைக்குழந்தையாக இருந்த மானிடவியலின் இன்றைய போக்கும் மாறி, சமூக வளர்ச்சியின் பக்கம் சென்றுவிட்டது, எனவே, அனைத்து வகைப் பண்பாடுகளும், விளிம்பு நிலை மக்களின் வரலாறும் அருங்காட்சியகத்தில் இடம் பெறவேண்டும்.
தொல்லியல் புதைந்து கிடக்கும் வாழ்விடங்களை ஆராய்கின்றது. தொல்லியலின் வாயிலாகச் சமூக வளர்ச்சியையும், கல்வியையும் மேம்படுத்த இயலும். இந்திய அளவில் சிந்துவெளி நாகரிக இடங்களின் அகழாய்விற்கே இது வரை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அண்மையில் இந்தப் போக்கு சற்று மாறத் தொடங்கியுள்ளது.

தொல்லியல் சான்றுகளை வளமாகக் கருதும் பார்வை:
தொல்லியலை ஒரு சமூக-பண்பாட்டு, சுற்றுச் சூழல் வளமாகப்  (Resource)பார்க்க வேண்டும். அதை சமூக வளர்ச்சிக்கான, கல்விக்கான ஒரு வளமாகக் காணவேண்டும். தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் குறித்து பொதுவெளியில் அதிகமான அறிவுப்பூர்வமான விவாதங்கள் மிகவும் அவசியம். அப்போதுதான் நாம் பல தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க இயலும்.

தமிழக அரசு தொல்லியல் துறையின் முயற்சிகள்:
தமிழக அரசின் தொல்லியல் துறை பல புதிய முயற்சிகளை எடுத்துவருகின்றது. மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தலைமையிலும் திரு த. உதயசந்திரன் இ.ஆ.ப அவர்களின் வழிகாட்டலிலும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பெரிய அளவில் செய்யப்பட்டு வரும் கீழடி அகழாய்வும், அங்கு அமைக்கப்படவிருக்கும் அருங்காட்சியகம் இதற்குச் சான்றாகும்.  தமிழகத்தில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. அழகன்குளம்,  கொற்கை போன்ற துறைமுகங்கள் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. தொல்லியல் துறை சில அருங்காட்சியகங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது ஒரு நல்ல தகவல் ஆகும். மேலும் தூத்துக்குடி துறைமுக அமைப்பும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது இங்கு சுட்டத்தக்கது.

தமிழக அரசு அருங்காட்சியகத் துறையின் முயற்சிகள்:
தமிழகத்திலும், சென்னை அருங்காட்சியகத்திலும் அண்மைக்காலமாகப் பல புதுமையான காட்சிக்கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் திரு. எம்.எஸ். சண்முகம் இ.ஆ.ப அவர்கள் விளக்கியது போலப் பல செயற்திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை பாராட்டுக்குரியவை ஆகும்.

மாமல்லபுரத்தில் பல்லவர் வரலாற்றிற்கான முழுமையான அருங்காட்சியகம்:
மாமல்லபுரம் சங்க இலக்கியத்தில் வரும் நீர்ப்பெயற்று என்ற துறைமுகமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அகழாய்வுகள் அதிகம் நடைபெறவில்லை. பல்லவர்கள் தமிழக வரலாற்றில் கட்டடக்கலை, நீர்ப்பாசனத்திற்கு முக்கியமான பங்களித்துள்ளனர். அவர்களின் முழுமையான வரலாறு நூல்களில்தான் உள்ளன. ஒரு சாதாரண மனிதனும், குழந்தைகளும் வாசித்து அவர்களுடைய வரலாற்றைப் புரிந்துகொள்வது கடினம். எனவே, மாமல்லபுரத்தில் சிறந்த காட்சிக் கூடங்களை உள்ளடக்கிய, நவீனமயமான பல்லவர் கால வரலாற்று அருங்காட்சியகம் அமைவது மிகவும் சிறப்பானதாக அமையும்.

அரிக்கமேட்டில் தொல்லியல் இட அருங்காட்சியகம்:
தமிழகத்தின் சங்ககாலத்தில் அரிக்கமேடு ரோமானிய, கிழக்காசிய வணிகத் தொடர்புள்ள ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு ரோமானிய வணிகத்திற்கான ஆம்போரா, அரிட்டைன் எனப்படும் மட்கலச் சான்றுகள் கிடைத்துள்ளன. துணி உற்பத்திக்கானவை எனக் கருதப்படும் சாயத்தொட்டிகளும், செங்கற் கட்டுமானங்களும் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்தில் வரும் வீரை முன்துறை என்ற துறைமுகமாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சங்ககாலத் தொழில் உற்பத்திக்கூடமாகவும், சந்தையாகவும் இருந்துள்ளது. இங்கு தொல்லியல் இட அருங்காட்சியகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது நிறைவுறவில்லை. ஆனால் புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஓர் அருங்காட்சியகத்தை அரியாங்குப்பம் பகுதியில் பிரான்சின் கீழ்த்திசை ஆய்வு நிறுவனத்தின் பங்கேற்புடன் உருவாக்கி வருகின்றது. இங்கு கைவினைப் பொருள்கள் உற்பத்தி மையமும் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இங்கு இந்திய அரசு தொல்லியல் துறை ஓர் அருங்காட்சியகம் உருவாக்குவது சிறப்பானதாக அமையும்.

காவிரிப்பூம்பட்டினம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி  அருங்காட்சியகம்:
காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்ற சங்ககாலத் துறைமுகமாகவும், நாகப்பட்டினம் சோழர் காலத்தில் புகழ்பெற்ற வணிக மையமாகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளது. ஸ்ரீவிஜய அரசன் கட்டிய பௌத்த விகாரை இங்கு இருந்தது. சீனத் தொடர்புகளுக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. பெரிய, சிறிய லெய்டன் செப்பேடுகள் எனப்படும் ஆனைமங்கலச் செப்பேடுகள் இங்கு இருந்த பௌத்தப் பள்ளிகள் குறித்துப்  பேசுகின்றன. காவிரிப்பூம்பட்டினம்- நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்கள் மிக அருகாமையில் அமைந்துள்ளன. இங்கு நாகூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு வரும் புனிதப் பயணிகளைக் கவரும் வகையில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கலாம். அது சுற்றுலா வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும்.

கடல்சார் தொடர்புகள்-புலம் பெயர் தமிழர்கள் அருங்காட்சியகம்:
இந்தியக் கடல்சார் வரலாற்றில் தமிழகம் சிறப்பான பங்கு வகித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையையும், நெய்தல் நில வாழ்வியல் முறைகளையும், தமிழர்களின் கடல்கடந்த தொடர்புகளையும் விரிவாக விளக்கிக் காட்டும் ஓர் அருங்காட்சியகம் தமிழகத்திற்கு அவசியம்.

பெருங்கற்படை  நினைவுச் சின்ன திறந்தவெளிப் பூங்கா:
பல தொல்லியல் இடங்கள்  நவீனக் கால நகரமயமாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 1970 முதல் இன்று வரை பல பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருப்பது வெகு சில மட்டுமே. தமிழகத்தில் சில இடங்களில் பெருங்கற்காலப் பூங்கா என்ற வகையில் திறந்தவெளி காட்சியகங்கள் அமைப்பது அவசியமாகும். கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, கோவைப் பகுதிகளில் இத்தகைய திறந்தவெளிப் பூங்காக்களை அமைக்கலாம். இவை பழைய தொல்லியல் இடங்களைப்  பாதுகாக்க உதவுவதுடன், மக்கள் பயன்பாட்டிற்கும் கல்விக்கும் உதவும்.

அறிவியல் தொழில் நுட்ப அருங்காட்சியகம்:
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை ஊக்கிவிக்கவும், அறிவியல்சார் புரிதலை ஏற்படுத்தவும் அறிவியல் கல்விக்காகவும் பெரிய அளவிலான அறிவியல் தொழில் நுட்ப அருங்காட்சியகம் அவசியம். பெங்களூருக்கு அருகில் பெரிய அளவில் உருவாக்கப்படும் அறிவியல் காட்சியகம் இங்கு நினைவுகூரத்தக்கது. இவற்றில் தமிழர்களின் மரபுசார் அறிவு, தொழில் நுட்பம், சித்த மருத்துவம் ஆகியவற்றையும் காட்சிப்படுத்த வேண்டும். பெங்களூருக்கு அருகில் (ஹோசூர், கௌரிபிட்டனூர்) உருவாகிவரும்  ஹெச்.  நரசிம்மையா அறிவியல் நகரம் ஒரு நல்ல மாதிரியாகும் (படங்கள் 6,7,8) (www.hnsc.org; https://www.facebook.com/pg/drhnsc/posts/).

படம் எண். 6. முனைவர் நரசிம்மையா அறிவியல் நகர மையம் நன்றி: www.hnsc.org

படம் எண். 7. முனைவர் ஹெச். நரசிம்மையா அறிவியல் நகர மையம், அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் மாதிரிகள் நன்றி: www.hnsc.org
படம் எண்.8. முனைவர் ஹெச். நரசிம்மையா அறிவியல் நகர மையம்: உருவாக்கப்படவிருக்கும் வானூர்தி பொறியியல் மையத்தின் மாதிரிப்படம் (Aeronautics Laboratory) நன்றி: www.hnsc.org

சுற்றுலா இடங்களில் அருங்காட்சியகங்கள்:
தமிழகத்தின் பல சுற்றுலா இடங்களில் சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அருங்காட்சியகங்களை உருவாக்கலாம். குறிப்பாகக் கன்னியாகுமரி, இராமேஸ்வரம், வைகை அணை, மேட்டூர் அணை, கல்லணை போன்ற இடங்களில் அருங்காட்சியகங்களை அமைக்கலாம். இதன் வழியாக ஒரே இடத்தில் பல சுற்றுலாக் காட்சியிடங்கள் (attractions) உருவாகும்.  

சோழ மண்டல வரலாற்று அருங்காட்சியகம்:
பல்லவர் கால வரலாற்றைக் குறித்து நாம் முன்னர் கூறியது போலச் சோழர் கால வரலாற்றை முழுமையாக விளக்கும் அருங்காட்சியகம் இன்று வரை உருவாகவில்லை. பல புலங்களில் சோழர் கால வரலாற்று வளர்ச்சி சிறப்பானதாகும். எனவே சோழ மண்டலப் பகுதியில் உள்ள கங்கைகொண்டசோழபுரத்தில் சோழர் வரலாற்று அருங்காட்சியகம் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பல்கலைக்கழகமும் STRIDE  எனப்படும் நடுவணரசின் திட்டத்தின் வாயிலாக கங்கைகொண்டசோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுவருகின்றது. தஞ்சாவூரில் உள்ள அருங்காட்சியகங்கள் வலுப்படுத்தப்பட்டு பெரியதாக்கப்படவேண்டும். இவை சுற்றுலா வளர்ச்சிக்கும் கல்விக்கும் உதவும்.  இந்த அருங்காட்சியகங்கள் இராசராசன், இராசேந்திரன் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை உருவாக்கிய பெருங்கோயில்கள் போல அமைய வேண்டும். இங்கு அரசர்களின் வரலாறு மட்டுமல்லாமல் மக்களின் வரலாறும் இடம் பெறவேண்டும்.

பாண்டிய மண்டல வரலாற்று அருங்காட்சியகம்:
பாண்டியர் கால வரலாற்றைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தைத் தென் தமிழகத்தில் அமைக்கலாம். பாண்டியர் வரலாற்றில் ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. எனவே ஒரு முழுமையான அருங்காட்சியகம் இக்குறையை ஓரளவிற்குப் போக்கும். இங்கு மன்னர் முதல் மக்கள் வரை அனைவரின் வரலாறும் இடம் பெறவேண்டும்.

சேர-கொங்கு மண்டல வரலாற்று அருங்காட்சியகம்:
கொங்கு மண்டலம் எனப்படும் கோயம்புத்தூர் பகுதியில் சேரர்களின் வரலாற்றைக் காட்சிப்படுத்துவது அவசியம். இங்கு கேரளப் பகுதியின் வரலாற்றையும் உள்ளடக்கலாம்.

நாட்டார் வழக்காற்றியல்-மானிடவியல்-இனவரைவியல் அருங்காட்சியகம்:
நாட்டார் வழக்காறுகள், வரலாற்றிற்கான முக்கியமான சான்றுகளில் அடங்கும். தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல், இனவரைவியல் குறித்துப் பல ஆய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன.  தமிழகத்தில் நாட்டார் வழக்காற்றியல், மானிடவியல், இனவரைவியல் சார்ந்த பொருண்மையுள்ள அருங்காட்சியகங்களைச் சில இடங்களில் அமைக்கலாம். கிராமப்புறச் சுற்றுலா வளர்ச்சிக்கும், உள்ளூர் மக்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் இது மிகுந்த உதவியாக இருக்கும்.

நவீன மின்னணு தொழில் நுட்பத்தில் அருங்காட்சியகங்கள்:
அருங்காட்சியகங்கள் பெரிய அளவில், உலகத்தரத்தில் உருவாக்கப்பட வேண்டும். மின்னணுத் தொழில் நுட்பங்கள் அவற்றை மிகவும் புதுமையாகவும் சமகாலத் தன்மையுடையனவாகவும் ஆக்க இயலும். இங்கு  மிகை யதார்த்த (augmented reality), மெய் நிகர் உண்மை (virtual reality) ஆகிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம் என்ற கருத்து முனைவர் கண்ணன்  நாராயணன் அவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உள்ளூர் வரலாறு தொடர்பான காட்சிக்கூடம்:
உள்ளூர் வரலாறு தொடர்பான காட்சிக்கூடங்கள் அனைத்து அருங்காட்சியகங்களிலும் இடம்பெறலாம். சென்னை அருங்காட்சியகத்தில் சென்னையின் வரலாற்றைக் குறித்த காட்சியகங்கள், தற்காலிகமான கண்காட்சிகளை உருவாக்கலாம். இங்கு மக்கள் தங்கள் வசம் உள்ள அரிய தொல்பொருள்கள்,  நிழற்படங்கள், ஆவணங்களைச் சில காலத்திற்கு அருங்காட்சியகத்திற்குக் கடனாக அளித்து, அவர்கள் பின்னர் மீளப்பெற்றுச் செல்லாம். பயனாளர்கள், மக்கள் பங்குபெறும் வகையில் இது அமையும்.

அருங்காட்சியகமும் கல்வி நிலையங்களும்:
ஒவ்வொரு அருங்காட்சியகமும், உள்ளூர் பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவது மிகவும் அவசியமாகும்.   அருங்காட்சியகங்கள் பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து செயல்படலாம். ஒன்பதாம் வகுப்புப் பாடத்தின் அடிப்படையில்கூட சில காட்சிக்கூடங்களை உருவாக்கலாம். மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றை  நடத்தலாம். பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை ஆகியவை இங்கு இணைந்து செயல்பட்டால் அது சிறப்பாக இருக்கும். அருங்காட்சியகங்கள் அனைத்து பள்ளிக்கூடங்களுடனும், கல்லூரிகளுடனும் பன்முக வலைப்பின்னல்  (networking) தொடர்பை ஏற்படுத்தும் போது அருங்காட்சியகத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை கூடும். மாணவர்களின் கல்வித்தேவைக்கு ஏற்ப அருங்காட்சியகங்கள் மாறவேண்டும். அருங்காட்சியகத்திற்குக் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காகத் தனியான அலுவலர்கள் அவசியம். அருங்காட்சியகங்கள் மாணவர்கள், மக்களைக் கவரப் பல  வகையான செயல்திட்டங்கள், விழாக்களை நடத்தலாம்; கோடைக்கால வகுப்புகளை நடத்தலாம்.

காலத் தேவை, சமூகத் தேவைகளுக்கான அருங்காட்சியகங்கள்:
மேலும் அருங்காட்சியகங்கள் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். தற்போதைய காலத்தில் கரோனா, தூய்மை, சுற்றுச்சூழல், உடல்நலம், யோகா, குறித்த தகவல்களை மக்களுக்கு தனித்தனிக் காட்சிக்கூடங்கள் வழியாக அவை அளிக்கலாம்.

கைவினை மையங்களாக அருங்காட்சியகங்கள்:
அருங்காட்சியகங்களில் கைவினை மையங்களையும் அருங்காட்சியக அங்காடிகளையும் ஏற்படுத்தி, அவற்றின் வழியாக மட்பானைத் தொழிலாளர்கள், இரும்பு, பித்தளைப் பொருள்கள், துணி போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தில் உதவலாம். இங்கு அருங்காட்சியகங்கள் காலனிவாதப் போக்கைக் கைவிட்டு, சமகாலச் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்க இயலும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.அருங்காட்சியகங்களின் அமைவிடம்: பண்பாட்டு-மரபியல் வளாகங்கள்:
மாவட்டத் தலைநகர்களில் சில சூழல்களில் தனித்துச் செயல்படும் தொல்லியல் அகழ் வைப்பகங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், கைவினை மையங்கள் இணைந்து ஒரே இடங்களில் செயல்படலாம். சில இடங்களில் மாதிரியாக ஒருங்கிணைந்த பண்பாட்டு, மரபியல் அறிவுசார் வளாகங்களை உருவாக்கலாம். இந்நடவடிக்கை மக்கள் எளிதில் இவற்றைக் கண்டு பயன்பெற உதவும்.

இணையவழிக் காட்சித்திட்டங்கள்:
கரோனாவால் தாக்குண்டுள்ள இக்காலத்தில் இணையவழிக் காட்சித்திட்டங்களை உருவாக்குவதும் மிக அவசியம். இணைய வழிச் சொற்பொழிவுகளையும்  நடத்தலாம். தொலைநோக்குடன் குறும்படங்கள், ஒரு தொல்பொருளின் வரலாறு, காப்பியின் வரலாறு போன்ற குறுங் காணொளிப்படங்கள் அருங்காட்சியகங்களை மக்களிடையே எடுத்துச்செல்ல உதவும். அண்மைக்காலமாக இணையத்தில் வலம் வரும் காசி, இராமேஸ்வரப் பயணத்திற்கான பித்தளைப் பாத்திரத் தொகுப்பின் காணொளி சிறப்பானது.

அருங்காட்சியக நிருவாகிகளும், நுண்தலைமைத்தன்மை (Micro Leadership):
அருங்காட்சியக நிருவாகிகள் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்விசார் செயல்பாடுகளையும் திட்டங்களையும், கைத்தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களையும் வகுப்பது அவசியம். மேல்நிலையில் திறமையான தலைமைப்  பண்புடன் செயல்பட்டாலும், வட்டார நிலைகளில் நுண்தலைமைப் பண்பு அவசியம். அப்போதுதான் மேல் நிலையில் உருவான பல கருத்துக்களை அடித்தளத்தில்  விதைத்துச் சிறப்பாகச் செயல்படுத்த இயலும்.

மனிதவள மேம்பாட்டுப்பயிற்சி:
அருங்காட்சியக ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிப்பதும், புதிய உத்திகள், செயல்திட்டங்களைச் செயல்படுத்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதும் அவசியம். அருங்காட்சியக ஊழியர்கள் பண்பாட்டுத் தூதர்கள் போல. அவர்கள் சிறப்பாக இயங்கினால்தான் அருங்காட்சியகம் இயங்கும். எனவே அருங்காட்சியக அலுவலர்கள் ஆய்வாளர்களாக, புதுமை புகுத்துவார்களாக இருக்கவேண்டும். இங்கு அவர்கள் சிறப்பாகச் செயல்படும் சென்னையில் அமைந்துள்ள சர்மா மரபியல் கல்வி நிறுவனத்தின் மரபுக் கல்வி முயற்சிகளை அவர்கள் பின்பற்றலாம்.சிறப்புக் கண்காட்சிகள்:
நிகழ்வுகள், செயல்திட்டங்கள் இல்லாத, காட்சிப்பொருள்களை மட்டுமே வைத்துச் செயல்படுகின்ற அருங்காட்சியகங்கள் தொல்லுயிர் படிவங்கள் போலாகும். எனவே, அருங்காட்சியகங்கள் சிறப்புக் கண்காட்சிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். மே தினம், உலக மரபு  நாள்,  விடுதலை நாள், உலகப் போர் நாள்கள் எனப் பலவிதமான சூழல்களில் சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம். மே தினத்தில் உழைப்பாளர்களின் வரலாற்றைக் கண்காட்சியாக வைக்கலாம்.

எளிதில் அணுகும் தன்மையை (accessiblilty) உருவாக்குதல்:
அருங்காட்சியகங்களில் எளிதில் அணுகும் தன்மையை உருவாக்குவது மிகமுக்கியமானதாகும். குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் கட்டணமில்லா அனுமதியை அல்லது சலுகைக் கட்டணத்தை அளிக்கலாம். அல்லது சில நாள்களில் சில மணி நேரங்களில் இந்த அனுமதியைக் கொடுக்கலாம். இதன் வழி ஏழை எளியவரும் அருங்காட்சியகங்களின் பயனை அடைய இயலும்

தொல்லியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்:
தமிழகத்தில் தொல்லியல் முதுகலைப் பாடம் வரலாற்றுக்கு இணையல்ல என்ற ஒரு நிலை உள்ளது. இதன் காரணமாகத் தொல்லியல், தமிழகக் கல்லூரிகளில் வெகுவாக இடம்பெறவில்லை. இந்நிலை மாறி, தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாட்சி அருங்காட்சியவியல் போன்ற பாடங்கள் கல்லூரிகளில் இடம்பெறுவது முக்கியமானதாகும்

நிதிப்  பற்றாக்குறையைச் சமாளித்தல்:
மேற்கூறிய அளவில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்தல் எளிதல்ல. தற்போதைய கரோனா நெருக்கடி நிலையில் இது ஒரு பெரிய சிக்கலாகும். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தனியார், கைவினைஞர்கள், பொது  மக்கள்,  மாநகர, நகரசபைகள்  உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியோரை இணைத்து அருங்காட்சியகப் புலத்தில் திட்டங்களைச் செயல்படுத்தலாம். பெருநிறுவன சமூகப் பொறுப்பின் (Corporate Social Responsibility) வழியாகவும் சில திட்டங்களை உருவாக்கலாம். மேலே கூறப்பட்ட திட்டங்களைத் தொலை நோக்குத் திட்டங்களின் வழி செயல்படுத்தலாம். புதுமையான நிதிவளத்தை உருவாக்குதல் பல்துறைகள் இணைந்து செயல்படுதல் வாயிலாக இவற்றைச் செயல்படுத்தலாம்.


முடிவுரை:
எனது கருத்துக்களைக் கேட்ட உங்கள் அனைவருக்கும், வாய்ப்பளித்த தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.காணொளி உரைகளுக்கான இணைப்புகள்:
https://youtu.be/0yvJMeBp0R8
https://youtu.be/3hcVsiPCDeM
https://youtu.be/WehmUBr8ILo
https://youtu.be/JRB4fv5tTlA
https://youtu.be/IOhbqCLw1_4

இந்திய அரசு தொல்லியல் துறை- சென்னை வட்டத்திற்காக நிகழ்த்திய உரை:
https://m.facebook.com/story.php?story_fbid=269718547745799&id=100041229670717


தொடர்பு:
முனைவர். வீ.செல்வகுமார்,
கடல்சார் வரலாறு & கடல்சார் தொல்லியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 
மின்னஞ்சல்: selvakumarodi@gmail.com

No comments:

Post a Comment