Wednesday, May 13, 2020

தமிழிசையும் கலைஞரும்

தமிழிசையும் கலைஞரும்

  ——   விஜய் எஸ். ஏ

          தமிழ்நாட்டின் 20ஆம் நூற்றாண்டு அரசியல் சமூக வரலாற்றைப்  பார்த்தோமானால் அதில் இசை சார்ந்த ‘இசை அரசியல்’ என்பது அங்கு இங்கென பல்வேறு  இடங்களில் பரந்துபட்டு நிறைந்திருக்கிறது. இன்றைய தேதியில், தமிழிசை தான் கர்நாடக இசை என்கின்ற அடிப்படை உண்மையை யாரும் மறுக்கமுடியாதபடி  பலரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

          போன நூற்றாண்டில் பெரும் பிரச்சனையாக எழுந்து அடங்கிய “தமிழ்நாட்டில் வேற்றுமொழியில்  பாடுவது” என்கிற பிரச்சனை, இன்று ஓரளவேனும் குறைந்துவிட்டது. இன்று சஞ்சய் சுப்ரமணியம் போன்ற புகழ்பெற்ற செவ்வியல் இசைக்கலைஞர்கள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் சீசனில் தமிழிசை மன்றத்தில் முழுக்க தமிழில் பாடுகிறார்கள். ஆனால் இன்னமும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் வேறு விதங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், செவ்வியல் இசையை அல்லது பொதுவாக மண் சார்ந்த இசையை, தமிழிசை கோட்பாடுகள் கொண்டு அணுகாமல் இன்னும் கர்நாடக சங்கீதம் வகுத்த கோட்பாடுகள் தான் கோலோச்சுகின்றன.

          இன்னமும் தமிழர்களாகிய நாம், இதில் முழுதாக இறங்கிச்  சீர்திருத்தம் செய்யாமலிருக்கிறோம் என்பதும்  ஒரு முக்கிய காரணம். தமிழக அரசு இசைக்கல்லூரிக்கு முதல்வராக ஒரு தமிழர் புஷ்பவனம் குப்புசாமி ஆகமுடிவதில்லை, ஆனால் (சுதா ரகுநாதன்) சிபாரிசில் அவர்களுக்குத்  தோதான ஒருவர் முதல்வர் ஆக முடிகிறது. ஆனால் அதையும் தாண்டி இன்று செவ்வியல் இசைத்துறை கர்நாடக இசை என்ற பெயரிலும், மக்களிசையும் ஆங்காங்கு அதன் வடிவிலும், நவீனத்  தொழில்நுட்ப வளர்ச்சியால் விளைந்த சினிமா திரைப்பட இசை என்றும் பரந்துவிரிந்து தமிழிசை வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச்  சூழலில், தமிழ்  மண்ணை, மக்களை, இதன் வரலாற்றை, பண்பாட்டை, தொடர்ந்து மாறிக்கொண்டு வரும் பகுத்தறிவை, இறுதி மூச்சு உள்ள வரை கட்டிக்காத்தவரும் நேசித்தவருமான கலைஞர் கருணாநிதி, தமிழ் இசைக்குச் செய்த சேவைகள் குறித்து தனியே பதிவு செய்யவேண்டி இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

          கலைஞர் தமிழிசையின் பால் செய்த முதல் பதிவு என்று வரலாற்றை முடிந்தளவு பின்னோக்கிச்சென்றால் நமக்குக் கிடைப்பது, அவர் 1946 இல் குடிஅரசு இதழில்  எழுத்துப்பணி செய்தபோது அவர் எழுதிய “தீட்டாயிடுத்து!” என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரை! அந்த ஆண்டு, திருவையாறு தியாகராஜர் உற்சவ இசை  விழாவில், தண்டபாணி தேசிகர் “விநாயகனே வினை தீர்ப்பவனே” என்று தமிழில் பாடியதால், “நீச பாஷை தமிழில் பாடிட்டார், தீட்டாயிடுத்து” என்று  சொல்லி அங்கிருந்த பார்ப்பனர்கள், தண்டபாணி தேசிகர் பாடிய இடத்தை நீரால் கழுவினர் என்பது அங்கு நடந்த சம்பவம். அதை அவர் குடி அரசு இதழில் ஒரு சிறு கட்டுரையாக கலைஞர் எழுத,  பெரியார் அதைப் பாராட்டினாராம்! [1, 2]
 (குடி அரசு - கட்டுரையிலிருந்து: அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது. தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு.  ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது. தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை ஆரியக்குடி வர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும்.)

           இதற்கடுத்து, அவர் அரசியலில் நுழைந்து வளர்ந்து வென்று முதல்வரான பின், ஆரம்ப காலகட்டங்களில் அவரின் பங்களிப்பு குறித்து அதிகம் தகவல்கள் இல்லை. ஆனால் 2009இல் அவர் முதல்வராக இருந்தபோது செய்த முக்கிய சம்பவம்; ஆபிரகாம் பண்டிதர் எழுதிய “கருணாமிர்த சாகரம்” என்கிற அதிமுக்கியம் வாய்ந்த தமிழிசை நூலை நாட்டுடைமையாக்குகிறார் [3].   அதுமட்டுமின்றி, பண்டிதர் வம்சாவளியில் வந்த அமுதா பாண்டியன் எழுதிய “கருணாமிர்த சாகரம் – சுருக்கத்திறனாய்வு உரை” (Karunamirdha Sagaram – A Brief Critical Review) என்கிற நூலை வெளியிட ஆராய்ச்சித்தொகையை அரசு மூலம் வழங்குகிறார்.   இதற்கு முன்பு, 1997 இல், பிடிஆர்  பழனிவேல்ராஜனின் இளைய சகோதரர், பிடிஆர் கமலைத் தியாகராஜன் எழுதிய தமிழிசை வரலாறு/கோட்பாடுகள் பற்றிய நூலான “இசைத்தமிழின் உண்மை வரலாறு” என்கிற நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார் கலைஞர். அது உங்கள் பார்வைக்குக் கீழே…


          கலைஞர், தமிழிசை ஆய்வு நூலுக்கு அணிந்துரை அல்லது முன்னுரை எழுதும் அளவுக்குத் தான் இசை அறிஞர் அல்லன் என்கிறார்.  ஆனால், அவரறிவுக்குட்பட்டு இந்த நூலை நன்கு வாசித்திருக்கிறார் என்பது அவர் எழுதிய அற்புதமான உரையே நமக்குச்  சொல்கிறது. முக்கியமாக, தமிழகத்தில் இசையின் பொற்காலம் என்று கர்நாடக இசை மூவர்(தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்) வாழ்ந்த காலத்தை  என்று நூலாசிரியர் சொல்வதைக்  குறிப்பிட்டு, அவர்களுக்கு முன்னரே, அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய தமிழிசை மூவரைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் இசை வரலாற்றில் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட எண்ணற்ற தகவல்களுள் இந்த தமிழிசை மூவரும்  அடக்கம்.

           கலைஞர் இந்த தமிழிசை மூவர்களுக்காக, அவர்கள் நினைவைப்  போற்றும் விதமாக 2010 ஆம் ஆண்டு, இவர்களுக்கு ஒரு மணிமண்டபம் எழுப்பப்படும் என்று அறிவித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இதற்காக இடம் ஒதுக்கினார். பின்னர் அடுத்த அதிமுக ஆட்சியில் அது திறக்கப்பட்டது[4].          தமிழிசை குறித்த நூல்கள், பஞ்ச மரபு தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற சங்ககால நூல்களில் துவங்கி, நா.மம்மது உருவாக்கிய தமிழிசைப்  பேரகராதி வரை, கிட்டத்தட்ட 100 நூல்களுக்குள் தான் இருக்கும். ஆனால் இன்றைய தேதியில், தமிழிசையில் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல்கள் கூட கிடைப்பது பேரரிது என்கிற நிலை தான். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் நூலகங்களை  அனைவரும் எளிதில் பயன்படுத்த முடியாத நிலையில், வாங்க நினைத்தாலும் பல நூல்கள் இன்று அச்சில் இல்லாத நிலையில், கலைஞர் அமைத்த அண்ணா நூலகம் இன்று ஒரு மிக முக்கிய ஞானப்புதையலே தான்! அதன் தமிழிசைப்பிரிவில் பற்பல முக்கிய நூல்கள் இடம்பெற்றிருப்பது கலைஞர் அளித்த கொடை.

          சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2007இல் பத்மா சுப்ரமணியம் “பரதமுனி ட்ரஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடன ட்ரஸ்ட் தொடர்பான விழாவிற்காகக் கலைஞரிடம் அனுமதி கேட்க, அவர் கொதிப்படைந்திருக்கிறார். பின்னர் அந்த இடத்தை பரத-இளங்கோ ட்ரஸ்ட் என பத்மா பெயர்மாற்றி இருக்கிறார் [5].   அனேகமாக, இதற்கு ஒரு பதிலடியாகத்தான் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் திறக்கும் திட்டத்தைக் கலைஞர் செயல்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், பரதர் இயற்றிய நாட்டிய சாஸ்திரம் தான் ஒட்டுமொத்த இந்திய இசை மற்றும்  நடனத்திற்கான அடிப்படை என ஆரியர்கள்  பலகாலமாய்  திரிபு வாதம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் 4ஆம் நூற்றாண்டு நாட்டிய சாஸ்திரத்திற்கு முன்பே, கி.மு 2ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரமே தமிழர்களின் இசைக்கோட்பாடு மற்றும்  நடனத்திற்கான கருவூலமாகத் தமிழர்களால் கருதப்படுகிறது. சிலம்புக்கு முந்தைய பஞ்சமரபு (ஐந்து தொகை) உள்ளிட்ட நூல்களும் இசைக்கோட்பாடுகளுக்கு அடிப்படை தானெனினும் சிலம்பு பல்வேறு காரணங்களுக்காக ஒரு மிகமுக்கிய மய்யமான நூலாக விளங்குகின்றது.

          2008இல் கலைஞர் எழுதிய உளியின் ஓசை என்கிற திரைப்படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் “அகந்தையில் ஆடுவதா” என்கிற பாடலில், தமிழிசையின் தொன்மம், அதன் நூல்கள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புக்களைப் பாடல் வரிகளாக வடித்திருப்பார்! திருவாசகம், ஸ்வப்னம் போன்ற இசை ஆல்பங்கள், உளியின் ஓசை பாடல் உள்பட, திரைப்பாடல்களில் தமிழிசை பற்றிய குறிப்புக்களை இளையராஜா வைத்திருப்பார். குறிப்பாக, 'கோவில் புறா' என்ற படத்தில், “அமுதே தமிழே” என்ற பாடலில், “தேனூறும் தேவாரம்  இசைப்பாட்டின் ஆதாரம் தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே” என்று புலமைப்பித்தன் எழுதியிருப்பார். 

(மேற்சொன்ன 'அமுதே தமிழே' பாடல்வரிகளின்படி 7ஆம் நூற்றாண்டின் தேவாரம்தான் இசைப்பாட்டின் ஆதாரம் என்று சொன்னால்,  அதை மறுத்து,  அதற்கு முந்தைய இசைநூல்கள், இசைப்பாடல்கள், 5ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்ட பக்தி இலக்கியம் சார்ந்த பாடல்களைச் சிலர் குறிப்பிடலாம். ஆனால் அன்றைய தமிழகத்தில் 247க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவ தலங்கள் என்பன பெற்ற பாடல்கள் தேவாரம் தான் என்பதால் அந்த வரி நியாயமாகிறது. அதேபோல், தமிழிசை தான் தரணியிலேயே முதன்முதலாகத் தோன்றிய இசை என்பதும் கூட கேள்விக்குள்ளாக்கப்படலாம்.  அது மிகநீண்ட விவாதம். ஆனால் உலக வரலாற்றில், கிரேக்க இசைக்குக் கூட ஒரு துவக்கம் உண்டு.  ஆனால், தமிழிசைக்குத் துவக்கமே தெரியாத அளவு மிகப்பழைமையானது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பஞ்சமரபு ஆகிய நூல்களின் காலத்திலேயே தமிழிசை மிகவும் பண்பட்ட, கோட்பாடுகள் நன்கு வளர்ந்த நிலையில் செழிப்பான கலையாகத் திகழ்ந்தது என்கிற விதத்தில், ஐயமின்றி தமிழிசை தரணியில் முதலிசை தான்.)

          இவை மட்டுமின்றி, இளையராஜா, தன் திரைப்படங்களில் தமிழிசையின் முக்கிய இசைக்கருவிகளான பறை, நாகசுரம் உள்பட, நீண்டகாலமாக இந்த மண்ணின் பல்வேறு வகையான தாள/மேளக்கருவிகளை பயன்படுத்துவது அனைவரும் அறிந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற இசை, மக்களிசைக்கான பங்களிப்பு சாதனைகள் என்பது சொல்லித் தெரியவேண்டியதே அல்ல. அவ்வகையில், தமிழிசைக்குத் தொண்டாற்றும் இளையராஜாவைப் பெருமைப்படுத்த இளையராஜாவுக்கு 'இசைஞானி' பட்டத்தைக் கலைஞர் வழங்கியது கூட, தமிழிசைத் துறைக்குக் கலைஞர் செய்த ஒரு சேவை தான்.

          இவை அனைத்தும் நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! தமிழக அரசியல் தலைவர்களில், இன்றும் ஒரு சவலைப்பிள்ளையாக இருக்கும் தமிழிசையின் மீது அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டிருந்த, தமிழ் இசைக்குத் தொண்டாற்றிய ஒரே முதல்வர் கலைஞர் மட்டுமே! அவர் வாழ்நாட்களில் இன்னும் அதிக முறை ஆட்சியிலிருந்திருந்தால், இன்னும் கூடச் செய்திருப்பார். மேற்சொன்ன “இசைத்தமிழின் உண்மை வரலாறு” நூலில், “அக்காலத்தமிழன் இசையில் உயர்ந்திருந்ததை இக்காலத்தமிழன் உணரவில்லை” என்று கலைஞர் சுட்டிக்காட்டிய கருத்தை மனதில் கொண்டு, வருங்காலத்தில், தமிழ்ப்பண்பாட்டை முழுமையாக ஆரிய ஆதிக்க சக்திகளிடமிருந்து மீட்பதுபோல் தமிழ் இசையையும் முழுதாக மீட்டெடுப்போம் என தமிழர்கள் உறுதி பூணுவோம்.தொடர்பு:  இசை ஆய்வாளர் விஜய் எஸ். ஏ., சென்னை(@tekvijay)


மேற்கோளாகக்  கொடுக்கப்பட்டவை:
1)  http://namathu.blogspot.com/2018/01/blog-post_75.html
2)  https://youtu.be/8f1Jue57raY?t=1520
3)  https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Rs.1.65-crore-royalty-for-scholarsrsquo-heirs/article15227023.ece
4)  https://www.dinamani.com/tamilnadu/2013/feb/21/சீர்காழியில்-தமிழிசை-மூவர்-மணிமண்டபம்-திறப்பு-636581.html
5)  https://www.vikatan.com/news/coverstory/123613-bharathamuni-temple-opening-ceremony-in-mamallapuram.htmlநன்றி மழை - 2018 
No comments:

Post a Comment