Wednesday, May 6, 2020

பெருமரம்

பெருமரம்

 —  பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்


            தாவரங்களை, இயல் தாவரங்கள், அயல் தாவரங்கள் என்று தாவரவியலாளர்கள் வகைப் படுத்துவர். இவற்றுள் இயல் தாவரமென்பது ஒரு நாடு அல்லது நாட்டின் பகுதிக்கு உரித்தானது. அயல் தாவரமென்பது அந்நாட்டிற்கு உரித்தானதல்ல. இயல் தாவரம், அயல் தாவரம் குறித்து பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி (2007:85) பின்வருமாறு விளக்கம் அளிப்பார்.

     ‘ஒரு நாட்டின் இயற்கைச் செல்வங்களாகக் கருதப்படும் தாவரங்களை இரண்டு தொகுதிகளில் வகைப்படுத்தலாம். ஒரு தொகுதி இயல் தாவரங்களையும் (Wild plants) மற்றொரு தொகுதி அயல் தாவரங்களையும் கொண்டவை. இயல் தாவரங்கள் அந்த நாட்டின் இயற்கைச் சூழல்களில் (Natural Environments) தன்னிச்சையாக, எந்தவித மனித முயற்சிகளுமின்றி இயல்பாக வாழக்கூடியவை; அவை அந்த நாடு/பகுதிக்கே உரித்தானவை. அயல் தாவரங்கள் ஒரு நாட்டிற்கு உரித்தானவையல்ல; வெளிநாடுகளிலிருந்து மனித முயற்சிகளால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, வேளாண்மைக்கோ, பூங்கா/ தோட்டத்திற்கோ, மருத்துவத்திற்கோ பயன் கருதிக் கொணரப்பட்டு இன்னொரு நாட்டில் காணப்படுபவை. இந்தச் செயலுக்குத் தாவர நுழைப்பு (Plant Introduce) என்று பெயர். அரசியல், வாணிபம், சுற்றுலா, படையெடுப்பு என்பவற்றின் விளைவால் தாவரங்களும், விலங்குகளும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்ந்து அங்கு நிலைபெறுகின்றன.

            இன்று நம் உணவுப்பொருளாகப் பயன்படும் பப்பாளி, கொய்யா, முந்திரி, மிளகாய், காபி, தேயிலை ஆகியன நம் நாட்டிற்குரியன அல்ல. கினிப்பன்றி, வான்கோழி என்பனவும் நம் மண்ணிற்குரியன அல்ல. அரேபியர்கள் வாயிலாகக் குதிரையும், டச்சுக்காரர் வாயிலாக வான்கோழியும் நம்மை வந்தடைந்துள்ளன.

            இது போன்று அரேபியர்களால் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மரம்தான் பெருமரம். இம்மரமானது ‘பேய் மரம், பப்பரபுளி, பேப்புளி, ஆனைப்புளி’ என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது. இப்பெயர்கள் இதன் உருவத்தின் அடிப்படையிலேயே இடப்பட்டுள்ளன. மற்றைய மரங்களில் இருந்து பெருமரத்தை வேறுபடுத்துவது அதன் சுற்றளவுதான். இம்மரம் வளரும்போது இதன் பட்டை கீழ்நோக்கி வளர்ந்துக் கொண்டே செல்வதால் இதன்சுற்றளவு பெருகிக்கொண்டே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே மேற்கூறியப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. இலங்கையில் ‘பெருக்கமரம்’ என்றழைக்கப்படுவது குறித்து ‘மரம் வரவர பெருக்கமடைந்து வருவதன் காரணமாகவே பெருக்கமரம் எனப் பெயரிட்டனர் போலும்’ என்று என்.எம். ஷாஜகான் என்ற ஈழத்தமிழறிஞர் ‘புத்தளம்’ (1992) என்ற தமது ஊர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

தாவரவியல் பெயர்:
            இம்மரத்தின் இலைகள் பெரியதாகவும் மென்மையாகவும் இருக்கும். மைக்கேல் ஆடன்சன் (Michel Adanson (1727–1806)) என்ற தாவரவியலாளரின் பெயராலும் விரல் போன்று (Digit) இதன் இலை இருப் பதன் அடிப்படையிலும் ஆடன்சோனியா டிஜிட்டா (Adansonia Digitata) என்ற தாவரவியல் பெயரை இம்மரம் பெற்றுள்ளது.

            பிஷப் கால்டுவெல், தாம் எழுதிய திருநெல்வேலி சரித்திரம் என்ற ஆங்கில நூலில் (1881:78) தூத்துக்குடி நகரில் உள்ள கிறித்தவ தேவாலயம் ஒன்றில் இம்மரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் அது தொடர்பாகப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார்:
தூத்துக்குடியில் உள்ள தொன்மையான பொருளாக ‘போவபாப் மரம்’ (Baobob) அங்குள்ள கோவானிய தேவாலயத்தின் அருகில் காணப்படுகிறது[1]. பண்டைய அரேபிய வணிகர்கள் சிலரால் இது நடப்பட்டிருக்க வேண்டும். இத்தேவாலயம் கட்டப்படுவதற்கு முன்பே இம்மரம் இங்குள்ளதாக பாரம்பரியச் செய்தி உள்ளது. இப் போவபாப் மரமானது ‘ஆடன்சோனியா டிஜிட்டா’ என்ற ஆப்பிரிக்க நாட்டு மரமாகும். மங்கி பிரட் மரம் (Monkey-Bread) என்று ஆப்பிரிக்கர்கள் இதை அழைக்கிறார்கள். உள்ளுர்வாசிகள் ‘பெயரில்லாமரம்’ என்று இம்மரத்தை அழைக்கிறார்கள்.

தற்போது காணப்படும் இடங்கள்:
            தூத்துக்குடி நகரில் மாவட்ட ஆட்சித் தலைவரது இல்லத்தின் பின்புறத்திலும், எஸ்.ஏ.வி.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்திலும் இம்மரம் காணப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் முத்தையாபுரம் என்ற ஊரின் மேற்கில் உள்ள பச்சைப் பெருமாள் அய்யனார் கோவில் வளாகத்தில் மிகவும் முதிர்ச்சி அடைந்த மரமாக இம்மரம் காட்சியளிக்கிறது. இதே நெடுஞ்சாலையில் உள்ள பழைய காயல் என்னும் கடற்கரைச் சிற்றூரில் இருந்த பழமையான மரம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய்விட்டது. திருச்செந்தூருக்குத் தெற்கில் உள்ள குலசேகரன்பட்டினம் ஊரில் இசக்கியம்மன் கோவிலில் இருந்த இம்மரமும் 2017- ஆம் ஆண்டில் விழுந்துவிட்டது.

            தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி ராமேஸ்வரம் சாலையில் உள்ள மேல்மாந்தை கிராமத்திலும், கோவில்பட்டி - சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள நாலுவாசன் கோட்டை ஊரில் இருந்து அழகு நாச்சியார்புரம் செல்லும் சாலையிலும் இம்மரம் காணப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து ஓட்டப் பிடாரம் செல்லும் சாலையில் இராசாவின் கோவில் ஊருக்கு அருகில், சாலைக்கு வடபுறத்தில் உள்ள கரிசல் நிலத்தில் இம்மரம் உள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள தெய்வச்சிலைபுரம் ஊரில் இருந்து புதுப்பட்டி என்ற கிராமத்திற்குச் செல்லும் சாலையின் கீழ்புறத்திலும் தூத்துக்குடி இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள மேல்மாந்தை கிராமத்திலும் இம்மரம் நிற்கிறது.

            மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இம்மரம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள வேதியரேந்தல் என்ற கிராமத்தில் உள்ள தருமமுனீஸ்வரர் கோவில் வளாகத்தில் 6000 சதுர அடி வரை படர்ந்து வளர்ந்துள்ள இரு பெருமரங்கள் இக்கோவிலின் தலமரம் போல் விளங்குவதை இதழாளர் ஆரோக்கியராஜ் ஜான் பாஸ்கோ, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் (மதுரைப்பதிப்பு, 9.11.2017) செய்திக் கட்டுரையாக எழுதியுள்ளார். அவரது கட்டுரையின் சாரம் வருமாறு:
இக்கோவில் வளாகத்தில் இரண்டு பெருமரங்கள் உள்ளன. 70 வயதான இக்கோவில் பூசாரி பொன்னையா, இவற்றின் வயது 500 ஆண்டுகள் என்றும் இக்கோவிலுக்கு வருபவர்கள் கடவுளை மட்டுமின்றி இம்மரத்தையும் வழிபடுவதாகவும் குறிப்பிடுகிறார். பெயரில்லா மரம் என்று இம்மரத்தை அழைக்கிறார்கள். சிவகங்கையில் உள்ள பொன்னான் குளம் கண்மாயில் இருந்த பெருமரம் அழிந்து போய்விட்டதாகவும், தருமமுனிஸ்வரர் கோவிலுடன் தொடர்புடையதாய் விளங்குவதால் இவ்விரு மரங்களும் அழிவில் இருந்து தப்பிவிட்டதாகவும் சுந்தரராஜு என்ற ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி குறிப்பிடுகிறார். இவ்வூர்களைத் தவிர தமிழ்நாட்டின் வேறு பகுதிகளிலும் இம்மரம் நிற்கும் வாய்ப்புள்ளது.

மரத்தின் தாயகமும் பயன்பாடும்:
            மடகாஸ்கர் என்ற தென்கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இம்மரம் வந்ததாக இந்தியத் தாவரவியலாளர்கள் குறிப்பிடுகிறார். 5000 ஆண்டுகள் வரை இம்மரத்தின் ஆயுள்காலம் ஆப்பிரிக்காவில் உள்ளதாகவும் ஆடன்சன் குறிப்பிடுகிறார். இலங்கையிலும் இம்மரம் காணப்படுகிறது. அங்கும் அயல் நாட்டு மரமாகவே இம்மரம் கூறப்படுகிறது. இலங்கையின் வடபகுதியில் அரேபியர் குடியிருப்புகளில் இம்மரத்தை நட்டு வளர்த்தாகவும், புத்தளம் திகழி போன்ற இஸ்லாமியர் வாழும் ஊர்களில் இம்மரம் இருந்த தாகவும் புத்தளம் ஊரின் வரலாறை எழுதிய ஷாஜகான் குறிப்பிடுகிறார். மேற்கூறிய இரு ஊர்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இம்மரங்கள் இருந்ததாகக் கூறும் இவர், இது தொடர்பாக ‘ஊருக்கலங்காரம் ஒசந்த பள்ளி பெருக்கமரம்’ என்ற நாட்டார் பாடல் வரிகளை மேற்கோளாகக் காட்டுகிறார். அத்துடன் இலங்கையைச் சேர்ந்த வரலாற்றறிஞர் சைமன் காசிச்செட்டி என்பவர் புத்தளம் என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் வளர்ந்திருந்த ‘பெருக்கமரம்’(பெருமரம்) குறித்து எழுதியுள்ள பின்வரும் பகுதியை மேற்கோளாகக் காட்டுகிறார். இம்மரத்தைத் தமிழில் ‘பப்பரப்புளி’, ‘இராட்சதப் புளி’ எனவும், ‘தொதி’ எனவும் ‘பெருக்கமரம்’ எனவும் அழைப்பர்.            மலைக்குன்றைப் போன்று கடுங்கருமை நிறத்துடன் நாற்பத்தைந்து அடி சுற்றளவுக்கு இம்மரம் தோற்றமளித்தது. நிலத்திலிருந்து எட்டரை அடி உயரத்தில் இம்மரத்தினடிப்பாகம் இரு கவராகப் பிரிந்து நேர் உயரமாக வளர்ந்திருந்த ஒரு கவரின் சுற்றளவு இருபத்தியிரண்டரை அடியாகவும், மற்ற கவரின் சுற்றளவு இருபத்தியாறேகால் அடியாகவும் இருந்தன. கிளைகள் மெலிந்த இலைகளுடையதாகக் காட்சியளித்தன. அதன் பெரிய உருவத்திற்கேற்ப உயரம் போதுமானதல்ல. எழுபது எண்பது அடி உயரமேயிருந்தது. இம்மரத்தின் இலைகளை உடம்பில் வரும் பருக்களுக்கும், கட்டிகளுக்கும் மருந்தாக உபயோகித்தனர். ஆடுகளின் உணவாகவும் பயன்பட்டது. அதன் பூக்கள் வெண்மையாகவும் அழகு மணம் இல்லாததாகவும் இருந்தன. இதன் பழம் நீண்டதாகவும் ஐந்தாறங்குலமுள்ளதாகவும் மிருதுவான மயிர் அடர்ந்ததாகவும் இருந்தது. இப்பழத்தின் உள்ளேயுள்ள சுளைகள் புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடையதாக இருந்தன. உள்ளுர்வாசிகள் இப்பழத்தை உண்கின்றனர்.
            இம்மரத்தின் பழமானது சுரைக்காய் வடிவத்தில் காட்சியளித்தது. இப்பழத்தினுள் கடற்பாசி போன்ற சதைப்பகுதியும் கெட்டியான நார்ப்பொருளால் சூழப்பட்ட குண்டிக்காய் வடிவிலான கருநிற விதைகளும் இடம்பெற்றுள்ளன. இப்பழத்தின் சதைப்பகுதி மாவு போன்று இருப்பதுடன் உண்μவதற்கும் உரியது. இப்பழத்தின் சதைப் பகுதியில் இருந்து உருவாக்கப்படும் பானம் வியர்வையை அதிகரிக்கச் செய்து காய்ச்சலை மட்டுப்படுத்துகிறது. ஷாஜகான் கூறிய செய்தியும், அவர் மேற்கோளாகக் காட்டிய சைமன் காசிச் செட்டியின் பதிவும் அரேபிய வணிகர்கள் வாயிலாக இம்மரம் இலங்கையில் பரவியுள்ளதாகக் கருத இடமளிக்கின்றன.

            அரேபிய வணிகர்கள் தாம் பயன்படுத்தும் வணிகப் பெருவழி சரியான வழிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இதை நட்டுவைத்தனர் என்ற வாய்மொழிச் செய்தியும் கடற்கரையை ஒட்டிய பழையகாயல், மேல்மாந்தை ஊர்ப்பகுதிகளில் உண்டு. தெற்கில் குலசேகரன்பட்டினம் தொடங்கி, பழையகாயல், முத்தையாபுரம், தூத்துக்குடி, மேல்மாந்தை என்பன, வடக்கில் உள்ள வேதாளை, கீழக்கரை, பட்டண்மருதூர் என்ற துறைமுகங்களுக்குச் செல்லும் இப்பாதையிலேயே இம்மரம் காணப்படுவது இவ்வாய்மொழிக் கூற்றுக்கு வலுவூட்டுகிறது. மேற்கூறிய ஊர்களில் குலசேகரன்பட்டினம், பழையகாயல், தூத்துக்குடி என்பன துறைமுகங்களைக் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

            தொடக்கத்தில் குறிப்பிட்ட, அழகுநாச்சியார்புரத்தில் இம்மரத்தின் இலையை அரைத்து கைக்குழந்தைகளுக்கு உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை தேய்ப்பர். அது உலர்ந்தவுடன் நீராட்டுவர். சிலர் இரவில் தேய்த்து காலையில் நீராட்டுவர். இப்படி செய்வதால் குழந்தை நோயின்றி நலமாக வளரும் என்பது நம்பிக்கை. இந்நம்பிக்கையின் அடிப்படையில் 'பிள்ளை வளர்த்தி' என்று இம்மரத்தை அழைக்கின்றனர் (பேராசிரியர் முத்துசாமி, வ.உ.சி. கல்லூரி).

            இம்மரத்தின் பழமானது இரத்தத்தின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதால் தொற்று நோய்க் காய்ச்சலின் போது முக்கிய காப்பு மருந்தாகப் பயன்படுவதாக பிரெஞ்சு நாட்டுத் தாவரவியலாளர் ஆடன்சன் கண்டறிந்துள்ளார். இந்திய அறிவியல் தொழில் ஆய்வு நிறுவனம் 1992-இல் வெளியிட்ட இந்தியாவின் பயன்மிகு தாவரங்கள் என்ற ஆங்கில நூலில் இம்மரத்தின் பல்வேறு பயன்பாடுகள் இடம் பெற்றுள்ளன. அவை வருமாறு:
•  உடல் எரிச்சல், சொறி, கரப்பான் வயிற்று நோய்கள் ஆகியனவற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் இம்மரத்தின் பழத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
•  குஜராத் மீனவர்கள் இம்மரத்தின் காய்ந்த பழங்களை மீன்பிடி வலைகளில் மிதவைகளாகப் பயன்படுத்துகின்றனர்.
•  துறவியர்கள் இம்மரத்தின் பழத்தை நன்றாகக் காய வைத்து தண்ணீர்க் குடுவையாகப் பயன்படுத்துகின்றனர்.
•  இளம் இலை சுவையூட்டும் பொருளாக மசாலாவில் சேர்க்கப்படுகிறது.
•  ஆஸ்துமா நோய் வராது தடுக்க கினிப் பன்றிகளுக்கு இதன் இலைகளைத் தூள் செய்து உண்ணக் கொடுக்கிறார்கள்.
•  பழத்திலுள்ள சதைப் பகுதி வியர்வையை உண்டாக்கும் தன்மையுடையது. பிராங்கைஸ்ட் ஆஸ்துமா, ஒவ்வாமையினால் ஏற்படும் தோல் அழற்சி ஆகியனவற்றிற்கு நிவாரணமளிக்கிறது.
•  இதன் விதைப் பருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
•  பட்டைகளில் இருந்து மென்மையான நார் கிடைக்கிறது.
•  காகிதம் செய்ய, தட்டுகள், சிறு படகுகள், மிதவைகள், மீன்பிடி வலைகள் செய்ய இம்மரம் பயன்படுகிறது.

            இதன் பட்டையில் இருந்து மிகவும் வலுவான கயிறு தயாரிக்கப்படுவதாகக் கூறுவதுடன், இம்மரம் வறட்சியைத் தாக்குப்பிடிப்பதற்குக் காரணம் தண்ணீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் கொண்டதாக இருப்பதுதான் என்கிறார்கள். இம்மரம் ஒன்றின் வேர்ப்பகுதியில் நூறு காலன் தண்ணீர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தாவரவியலாளர்கள் கூறுகின்றனர்.

பிண அடக்கத்தில்:
            முதிர்ந்த மரங்களின் உள்ளீடான வேர்ப்பகுதியில் ஆப்பிரிக்கர்கள், இறந்தவர்களைப் புதைப்பதாகவும், பாடம் செய்யும் முயற்சியெதுவுமின்றியே இப்பிணங்கள் உலர்ந்து காணப்படுகின்றன என்றும் இந்தியத் தாவரவியலாளர் கௌன் குறிப்பிட்டுள்ளார். இவ் வடக்க முறை குறித்து ஆர்தர்-சி.அயூஃபெட்ஸ் (பக்கம்:59) என்பவர் மத்திய ஆப்பிரிக்காவில் வாழும் சில பழங்குடி இனத்தவர் இம்மரத்தில் பெரிய பொந்துகளைக் குடைந்து இறந்தவரை அவற்றுள் அடக்கம் செய்கின்றனர். தன்னைச் சுற்றி உள்ள நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட இம்மரம் இறந்த உடல்களில் இருந்து நீரை உறிஞ்சிவிடுவதால், இவ்வுடல்கள் சுருங்கி ஆனால் கெட்டுப்போகாமல் எகிப்திய பிரமிடுகளில் பாதுகாக்கப்பட்ட மம்மிகளைப் போன்றே இருந்தன என்று விளக்கமாகக் கூறுகிறார்.

இம்மரத்தை வளர்த்தல்:
            இம்மரத்தின் வேகமான வளர்ச்சி, மதிப்பு மிக்க பழம் மற்றும் நார்ப்பொருளின் காரணமாக இதைப் பரந்த அளவில் பயிரிடுவது ஆதாயமிக்கதாக அமையும். ஆனால் இதுவரை வெற்றிக்கரமாக இது மேற்கொள்ளப்படவில்லை என்று இந்தியத் தாவரவியலாளர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இம்மரத்தின் விதைகள் இங்கு எளிதில் முளைப் பதில்லை என்று மதுரைக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் கே.எம்.ராஜசேகரன் குறிப்பிடுகிறார். இம்மரங்கள், கன்றுகளாகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார். (ஆரோக்கியராஜ், 2017) அதிகளவில் நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக் கொள்ளும் ஒரு தாவரத்தை, எச்சரிக்கை உணர்வுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காது எனில் இதை பரவலாக்க முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு:
[1] கால்டுவெல் குறிப்பிடும் கோவானிய தேவாலயம்" என்பது, தூத்துக்குடியில் போர்ச்சுக்கீசியர் ஆதிக்கம் நிலவியபோது அவர்களால் கட்டப்பட்ட கத்தோலிக்கத் தேவாலயம் ஆகும். கோவாவில் இருந்த போர்ச்சுகீசிய ஆயரின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் கோவானிய தேவாலயம் எனப்பட்டது. கி.பி.1658 - இல் டச் நாட்டினர் தூத்துக்குடி கிறித்தவ சபையின் (புரட்டாஸ்டண்ட் பிரிவு) தேவாலயமாக மாற்றி அமைத்தனர். டச் நாட்டினரிடமிருந்து தூத்துக்குடி நகரை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்னர் இத்தேவாலயம் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 'புனித திரித்துவத் தேவாலயம்' (Holy Trinity Church) என்ற பெயரிலான இத்தேவாலயம் சீர்திருத்தக் கிறித்தவ சபையின் பேராயரது கட்டுப்பாட்டிற்குள் இப்போதும் உள்ளது. ஆங்கில ஆட்சியின்போது இங்கு வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்காக, 'ஆங்கில மொழியிலேயே நடந்த வழிபாடு இன்றும் தொடர்கிறது. இதனால் 'இங்கிலிஷ் சர்ச்' என்றே பொதுமக்கள் அழைக்கின்றனர். தற்போது, இத்தேவாலயத்தில் பெருமரம் காணப்படவில்லை.

உதவிய நூல்கள்:
கிருட்டிணமூர்த்தி, கு.வி. (2007) தமிழரும் தாவரமும், ஷாஜகான், புத்தளம்
Arockiaraj Johnbosco, (2017) It's Faith that Nurtures Two African Baobabs in A Sivaganga Hamlet. The Times of India, (Madurai, November 9, 2017)
Caldwell (1881), AHistory of Tinnevelly
Umrao Singh and others, (1983) Dictionary of Economic Plants in India, Indian Council of Agricultural Research, New Delhi. (Arthur C. Ailfder, The Scientific Study of Mummies)

ஒளிப்படங்கள்:
சு.நாகராஜன், பொன்.தமிழன், ஏ.சண்முகானந்தம், விக்கிப்பீடியா

நன்றி:
உயிர் (2018| ஜூலை - ஆகஸ்ட்)
No comments:

Post a Comment