Saturday, May 25, 2019

என்னைக் கவர்ந்த பாரதியின் கவிதை

— முனைவர் ச. கண்மணி கணேசன்


          பாரதியார்- பெயரைச் சொன்னாலே உள்ளத்தில் உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும். எளிய சொல், எளிய நடை, எளிய சந்தம் இவற்றுக்கெல்லாம் மேல் புதிய உத்தி, புதிய செய்தி அடங்கிய சோதி மிக்க நவகவிதை தந்தவர் பாரதியார். அவரது படைப்புகள்- 

                    தூங்கிக் கிடக்கும் மனங்களைத் துடிப்போடு துள்ளி எழ வைக்கும். 
                    சோர்ந்து கிடக்கும் மனங்களைச் சுறுசுறுப்பாக்கித் துயர் கெடுக்கும். 
                    வாடிக் கிடக்கும் மனங்களை வலிவாக்கி ஒளி கொடுக்கும். 

          தேடிப் பார்க்கத் தேவை இல்லை; ஒரு சான்று சொல்கிறேன்; கேட்டுப் பாருங்கள். 

                    "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
                    சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் 
                    வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே 
                    சொல்லடி சிவசக்தி நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"

          இறைவன் மனிதனைப் படைக்கிறான். எப்படிப் படைக்கிறான்? 

                    அழகிய வீணையெனப் படைக்கிறான். 
                    வீணையினின்று எழுவது இனிய நாதம்; இன்ப வெள்ளம்!
                    ஆனால் உலகில் நடப்பதென்ன?

          மனிதனாகிய இனிய வீணை நலங்கெடப் புழுதியில் எறியப்படுவதைப் பார்க்கின்றோம். காவியம் படித்து, நல்ஓவியம் தீட்டி, அறிவுநூல் பல கற்று விளக்கம் பெற வேண்டியவன்; சோர்வினால் சோம்பிக் கிடந்தான் சுதந்திரப் போராட்ட காலத்தில்…

                    நாட்டின் நலத்தில் நாட்டமில்லை; 
                    அதன் ஏற்றத்தில் எண்ணமில்லை; 
                    சுயநலச் சேற்றிலே சுழல்கிறான்; 
                    இலஞ்சப் புழுதியில் புரள்கிறான். 
                    அதனால் தான் வினவுகிறார்- 
'நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என…

          இந்நிலை மாறவேண்டும். அதைத்தான் சிவசக்தியிடம் வேண்டுகிறார்… என்னவென்று?
                    'வல்லமை தாராயோ இம்மாநிலம் பயனுற வாழ்வதற்கே' என்று..
                    இங்கே தன்னலம் பேசவில்லை; பாரதியின் தாயுள்ளம் பேசுகிறது.

          'சொல்லடி சிவசக்தி' என்று பராசக்தியை அவர் கேட்கும் தொனியைப் பாருங்கள். அந்தக் கேள்வியில் ஒரு உரிமை; 

                    ஆதிசக்தியையே தன் கவிதையால் கட்டிப்போடும் நெருக்கம்; 
                    தன் அறிவில் தான் கொண்ட நம்பிக்கை.
                    அந்த அறிவும் சாதாரண அறிவு அல்ல; சுடர்மிகும் அறிவு. 

ஆம்; 

                    அச்சமெனும் இருளகற்றி மக்கட்சமுதாயத்திற்கே வழிகாட்டும் அறிவு. 
                    மூடநம்பிக்கை எனும் இருளகற்றி மனிதகுலத்திற்கே வழிகாட்டும் அறிவு. 
                    சாதி வேறுபாடெனும் இருளகற்றி மானுடக் கூட்டத்திற்கே வழிகாட்டும் அறிவு.  
                    பெண்ணடிமைப் பேரிருளை அகற்றி பேதையரை மேதையராக்கும் அறிவு. 
                    'சொல்லடி சிவசக்தி' என்று உலகநாயகியையே ஆணையிடும் அறிவு.  
                    அவள் தந்த அறிவை அவளுக்கே மீண்டும் நினைவூட்டும் அறிவு

இத்தகைய அறிவுணர்வும், நம்பிக்கையும் பெருகினால் நாடாளும் பிரதமர் முதல் நாட்கூலி வாங்கும் சாமானியன் வரை அனைவரும் மாநிலம் பயனுற வாழலாம். அதனால் அறியாமை அகலும்;

                    அச்சம் விலகும்;  இல்லாமை நீங்கும்;
                    இன்பம் பெருகும்; உலகம் ஒளிபெறும்;
                    உத்தமர் பெருகுவர்; எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். 

சுடர்மிகும் அறிவுடன் சக்தியை வேண்டிய பாரதியார்;

                    செருக்கினால் நிலைதிரியவில்லை. 
                    ஆணவத்தால் அறிவு பிறழவில்லை. 
                    அச்சத்தால் பின்வாங்கவும் இல்லை.

'நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ' என்று கெஞ்சும் தொனியைக் கேளுங்கள். அந்தக் கெஞ்சலில் ஒரு உருக்கம்; 

                    உன்னுள் நான் அடக்கம்;  
                    உன் விருப்பமே; எண்ணமே; என்செயல் என்ற அடக்கம்;
                    உன்னருள் இன்றேல் உன்மத்தன் ஆவேன் என்ற அடக்கம்;
                    பூமிக்குப் பாரமாய்ப் பொழுதைப் போக்க விடாதே என்ற ஏக்கம். 

          என்ன அற்புதமான கலவை!

                    சுடர் மிகும் அறிவு;
                    அதை மாநிலத்தின் பயனுக்கு அர்ப்பணிக்கும் அறவுணர்வு;
                    ஆனால் அகங்காரத்தில் மூழ்கிவிடாத தெளிவு;
                    தன்னால் முடியுமென்ற நம்பிக்கை;

          நல்லதோர் வீணையாய் மாநிலத்து உயிர்களெல்லாம் பயன்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு- இப்படி இரத்தினச் சுருக்கமாக அத்தனையும் பிழிந்து தரும் படைப்பு.

                    "நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ 
                    சொல்லடி சிவசக்தி என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய் 
                    வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே 
                    சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ"

          இந்த நூற்றாண்டின் மனித இனம் முழுமைக்கும் எடுத்துக் கூறும் தகுதி பெற்ற ஏற்றம் மிகுந்த பாட்டு இது தான். பாரதியின் கவிதை என்றால் களிப்படையா உள்ளமேது? கள்வெறி கொள்ளாத மனமேது?





தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)





1 comment: