Tuesday, May 7, 2019

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 4

*பகுதி 4 - தொடர்கின்றது.*
சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா
பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

-முனைவர் க.சுபாஷிணி 
          சேனன் இலங்கை மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருந்த போது, சோழ மன்னன் வல்லபன் இலங்கையின் நாக தீபத்திற்கு, அதாவது வட பகுதியில் உத்தர தேசம் என்ற பெயர் கொண்ட ஒரு பகுதி, அதனை அவன்  போரிட்டுக் கைப்பற்றிக்கொண்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனன் மீண்டும் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து சோழன் வல்லபன் மீண்டும் போர் செய்து வாகை சூடியதாகவும், பின் மீண்டும் நடந்த போரில் தோல்வி கண்டு வல்லபன் நட்புறவுக்கு வந்ததாகவும், இதனால் இலங்கை மன்னனின் புகழ் இந்தியாவிலும் பரவியது என்றும் மேலும் குறிப்பிடுகிறது. சூளவம்சம் குறிப்பிடும் சோழன் வல்லபன் யார் என்பது ஆய்விற்குரியது.

          இதற்கு அடுத்த 16 வருடங்கள் சேனன் மன்னனாக ஆட்சியைத் தொடர்ந்தான். அதற்குப்பின் மகிந்தன். அவனுக்குப் பின்னர் அவனது கலிங்க ராணியின் மகன் சேனன் கி.பி 972 லிருந்து 982 வரை ஆட்சி செய்து கொண்டிருந்தான். இந்தக் காலகட்டத்தில் இலங்கையில் சிற்றரசர்களிடையே குழப்பம் அதிகரித்து விட்டது. இந்தச் சூழலில் இளம் வயது மன்னனான சேனன் தனது சேனாதிபதியாக சேனன் என்ற இன்னொருவனை அழைத்து பதவியை ஒப்படைத்துவிட்டு பொலநருவ நகருக்குச் சென்று தங்கிவிட்டதாக சூளவம்சம் குறிப்பிடுகிறது. சேனாதிபதி முறையாக ஆட்சியைப் பாதுகாக்காமையினால் தமிழர்கள் பெரும் பலம் கொண்டு செயல்பட்டதாகவும், ராட்சதர்கள் போல நாட்டை நாசமாக்கினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் சேனனின் மரணம் நிகழ்கின்றது. அவனது இளைய சகோதரன் மஹிந்தன் கிபி 982லிருந்து அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்தக் காலகட்டத்தில் அரசாட்சி சரியாக அமையாமல் உள்ளூரில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வந்தன.

          அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் குதிரைகள் விற்க வந்த ஒரு வியாபாரி, இலங்கையில் உள்ள நிலையற்ற ஆட்சித்தன்மை பற்றி அப்போதைய சோழ மன்னன் ராஜராஜனுக்குக் குறிப்பிடவே, மாமன்னன் ராஜராஜ சோழன் (கி.பி 985 முதல் கி.பி 1014) இலங்கையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியதாகவும், சோழர் படைகள் இலங்கை வந்து அங்குப் பல கிராமங்களைத் தாக்கி இலங்கையின் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும்,. இலங்கை மகாராணி மற்றும் அவளது அனைத்து தங்க ஆபரணங்கள், மகுடம், விலை மதிப்பில்லா வைரங்கள், முறியாத வாள், பதக்கங்கள் ஆகிய அனைத்தையும் சோழப் படைகள் கவர்ந்து இந்தியாவிற்குக் கொண்டு வந்தன என்றும், இலங்கையின் பௌத்த சின்னமாகிய தந்ததாது இருந்த கோயிலையும் சோழர் படைகள் அழித்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. விகாரைகளில் இருந்த தங்க வைர ஆபரணங்களையும் சூறையாடி அனுராதபுரத்துச் செல்வங்களையும் கொள்ளையிட்டு அங்கிருந்த விலைமதிப்பில்லா பொருட்களைத் தமிழகம் கொண்டு வந்ததாக சூளவம்சம் மேலும் குறிப்பிடுகிறது. இலங்கையின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக்கொண்ட ராஜராஜனின் படைகள் அனுராதபுரத்தை விட்டு பொலநருவ நகரைத் தனது தலைநகராக்கிக் கொண்டன. அந்த வேளை இளவரசனாக இருந்த இலங்கை மன்னனின் மகன் காசியப்பன், சோழ மன்னன் ராஜராஜனின் படைகளின் கண்களில் படாமல் மறைந்திருந்தான். அவன் விக்கிரமபாகு என்ற சிம்மாசனப் பெயரோடு ஒரு பகுதியில் முடி சூடிக் கொண்டு தனியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். இடைக்கிடையே விக்கிரமபாகுவின் படைகளை வெல்வதற்குத் தமிழர்கள் படை முயற்சி செய்து கொண்டே இருந்தது. அதற்குப் பின்னர் மற்றொரு விக்கிரமபாகு என்பவன் ஆட்சியைத் தொடர்ந்ததாகவும், அதற்குப் பின்னர் லோகேஸ்வரன் என்ற சிங்கள ராணுவத் தலைவன் சோழர்களை எதிர்க்கும் பொருட்டு ஒரு படையை ஏற்பாடு செய்ததாகவும், கதிர்காமத்தில் தனது தலைமையகத்தை நிறுவியதாகவும் அறிகிறோம். ஆனாலும் சோழர் படைகளை அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இலங்கையின் பெரும்பகுதியைச் சோழர் படை ஆட்சி செய்ய, ஒரு சில பகுதிகளை இலங்கை மன்னர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டு வந்தனர். அந்த வரிசையில் மகிந்தன் அவனுக்குப் பின்னர் புத்த ராஜா பின்னர் காசியப்பன் என்ற இலங்கை மன்னர்களின் பெயர்களைக் காண்கின்றோம்.

          சோழ மன்னன் ராஜேந்திர சோழனைப் பற்றி இந்த சூளவம்சம் ஏதும் குறிப்பிடவில்லை. ராஜராஜனின் பெயருக்குப் பின்னர் அடுத்து வருவது வீரராஜேந்திரனின் பெயர். இந்தியாவில் சோழநாட்டில் வீரராஜேந்திரன் பதவியேற்ற பின்னர் அக்காலகட்டத்தில் மீண்டும் இலங்கையில் இலங்கை மன்னர்களின் ஆட்சி மீண்டது என்பதை சூளவம்சம் வழி அறியமுடிகின்றது. ஆக, ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திர சோழனின் கலாத்தில் இலங்கை முழுமையும் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தமையும் அதன் பின்னர் இலங்கை சிற்றரசர்கள் படிப்படியாக பலம் பெற்றார்கள் என்பதையும் அறிய முடிகிறது. சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் எழுப்பப்பட்ட கோயில்களின் சிதைந்த பகுதிகளை இன்றும் பொலநருவ நகரத்தில் காணலாம். சோழநாட்டில் வீரராஜேந்திரனின் ஆட்சிக் காலத்தில் விஜயபாகு என்ற மன்னன் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை எடுக்கிறான்.

          இலங்கையிலிருந்த சோழர் படையைத் தோற்கடித்து இலங்கை மன்னனாக முடி சூட்டிக் கொள்கின்றான் இந்த விஜயபாகு. இவன் ஸ்ரீ சங்கபோதி என்ற அரச பெயரை ஏற்றுக்கொண்டான். முன்னர் போரில் சோழ மன்னனால் சிறைப்படுத்தப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னன் ஜெகதீசனின் மனைவியான பட்டமகிஷியின் மகள் லீலாவதி சோழ நாட்டிலிருந்து தப்பி இலங்கை வந்து வீரபாகுவுக்குத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். வீரபாகு லீலாவதியை தன் பட்டத்து ராணியாக ஏற்றுக் கொண்டான்.

          விஜயபாகுவிற்கு மித்ரா என்ற ஒரு இளைய சகோதரி இருந்ததாகவும், அப்போதைய சோழ மன்னன் அதாவது வீரராஜேந்திரன் அவளை மணந்து கொள்ள விழைந்த போது விஜயபாகு அதனை மறுத்து விட்டு பாண்டிய வம்சத்தில் வந்த இளவரசன் ஒருவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          இலங்கை மன்னன் விஜயபாகு பல சமூகப் பணிகளைச் செய்ததாகவும், பல பௌத்த விகாரைகளைச் சீரமைத்ததாகவும், தடைகளை மிக நேர்த்தியாக விரிவாக்கி நாட்டினைத் திறம்பட ஆட்சி செய்ததாகவும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. வீரபாகு 55 ஆண்டுகள் இலங்கை மன்னனாக ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பின்னர் அரச வம்சத்தைச் சேர்ந்த சிலர் தொடர்ச்சியாக ஆட்சி செய்து வந்தனர்.

          அந்தக் காலகட்டத்தில் மானவர்மன் என்ற மன்னன் ஆட்சியிலிருந்ததாகவும் அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்த இளவரசனே இலங்கையின் புகழ்மிக்க மன்னன் பராக்கிரமபாகு என்பதையும் சூளவம்சம் குறிப்பிடுகிறது.


-  முனைவர் க. சுபாஷிணி


No comments:

Post a Comment