Tuesday, May 7, 2019

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 1

நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

(பகுதி 1)




          இலங்கை வரலாற்றைக் கூறும் முக்கிய நூல்களுள் 'மகாவம்சம்' சிறப்பிடம் பெறுகின்றது. மகாவம்சம் என்ற நூலுடன் 'சூளவம்சம்' என்ற நூலும் வரலாற்றுச் செய்திகளை வழங்கும் முக்கிய நூலாகக் கருதப்படுகின்றது. அடிப்படையில் 'தீபவம்சம்' என்ற நூலின் திருத்தப்பட்ட வடிவமே மகாவம்சம் என்ற நூலாகும். இதனை எழுதிய ஆசிரியராக மகாநாமதேரர் என்பவர்.

          தீபவம்சம் என்னும் இந்த நூல் சொல்லும் செய்திகள் 100 பகுதிகளாக அமைந்தவை.  தீபவம்சம் என்ற மூல நூலில் குறிப்பிடப்படும் 37 அத்தியாயங்கள் மகாவம்சத்தில் அடங்கியுள்ளன. தீபவம்சம்  முழுமையாகப் பாளி மொழியில் எழுதப்பட்டதாகும். தீபவம்சம் என்ற இந்தப் பாளி மொழியில் அமைந்த நூலை மொழி பெயர்த்தவர்  வில்லியம் கெய்கர். முதல் 37 பகுதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நூலாக மகாவம்சம் என்ற பெயருடன் முதற்பகுதி விளங்குகின்றது.  எஞ்சிய பகுதிகள் அதாவது,  38 ஆம் பகுதி தொடங்கி 100 ஆவது அத்தியாயம் வரையான தொகுப்பு சூளவம்சம் என்று பெயருடன் விளங்குகின்றது.  இது தவிர ஜோர்ஜ் ரேனர் என்பவர் தீபவம்சம் நூலில் உள்ள நூறு அதிகாரங்களையும் மகாவம்சம் என்ற பெயருடன் மொழிபெயர்த்தார் என்பதும் நூல் வழங்கும் செய்தி.

          வில்லியம்  கெய்கர்  பாளி மொழியில் அமைந்த தீபவம்சம் நூலை ஜெர்மானிய மொழிக்கு  மொழி பெயர்ப்பு  செய்தார்.  பின்னர் அது ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்   ஜோர்ஜ் ரேனர்   பாளியிலிருந்து நேரடியாக ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்துள்ளார்.

          வில்லியம் கெய்கர் மொழிபெயர்த்து வழங்கிய முதல் 37 பகுதிகளைக் கொண்ட மகாவம்சம், கௌதம புத்தரின் இலங்கைக்கான பயணத்தை  முதலாவது அத்தியாயமாகக் கொண்டு தொடங்குகின்றது. அதாவது கி.மு. 483லிருந்து கி.பி. 362 ஆம் ஆண்டு வரை அமைந்த வரலாற்றுச் செய்திகளை விவரிப்பதாக இந்த முதல் 37 பகுதிகளில் அமைகின்றது. மகாவம்சத்தின் அடிப்படையில் விஜயன் முதலாவது மன்னனாக அறியப்படுகின்றான். மகாவம்சம் நூலின் 58ஆவது மன்னனாக மகாசேனன் என்பவன் குறிப்பிடப்படுகின்றான். இதன் தொடர்ச்சியாக, அதாவது 37ஆவது அத்தியாயம் தொடங்கி 100வது அத்தியாயம் வரை அமைகின்ற சூளவம்சம் நூல், மகாசேனனின் மகன் மேகவண்ணன் ஆட்சி காலம் முதல் தொடங்குகின்றது. அவனது ஆட்சி ஆண்டு கி.மு 362 முதல் இறுதி மன்னனான ஸ்ரீ விக்கிரமசிங்கனின் ஆட்சிக் காலமான கி.பி.1815 வரையிலான மன்னர்களைப் பற்றி சூளவம்சம் சொல்கின்றது.

          மகாவம்சம் நூலில் முக்கியத்துவம் வழங்கப்படும் மாமன்னனாக மாமன்னன் துட்டகாமினி குறிப்பிடப்படுகின்றான். சூளவம்சம் நூலில்  முக்கியத்துவம் பெறுகின்ற மன்னனாக பராக்கிரமபாகு குறிப்பிடப்படுகின்றான்.

          மகாவம்சம் நூலைத் தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்த முனைவர் கா. குணராசா அவர்களே சூளவம்சம் கூறுகின்ற வரலாற்றுச் செய்தியையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார். அவற்றுள் பராக்கிரமபாகு தொடர்பான செய்திகள் நான்கு அத்தியாயங்களில் அமைகின்றன.

          சூளவம்சம் நூலை முழுதும் வாசிக்கும்போது இலங்கை மன்னர்கள் ஆட்சியில் தொடர்ச்சியான மன்னர் பாரம்பரியம் என்ற நிலைக்கே வாய்ப்பில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. தொடர்ச்சியான போர், நிலையற்ற அரசு, சகோதரர்களுக்குள் பிரிவு, சகோதரர்களுக்குள் துரோகம், தந்தையைக் கொல்லும் மகன், மன்னரை வீழ்த்திவிட்டு பதவியைக் கைப்பற்றும் சேனாதிபதி, சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வந்து ஆட்சியைக் கைப்பற்றும் வாரிசுகள்,  கொடூரமான தண்டனைகள், பெண்கள் அரசியல் ரீதியாக நட்புறவை நாடுவதற்காகத் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுச் செய்திகள், பௌத்தத்தின் எழுச்சி, 3 வகை பௌத்த நெறிகள்,  தமிழகத்தை ஆண்ட  மன்னர்கள் ஏற்படுத்திய தாக்கம், பாண்டிய மன்னர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இருந்த நெருக்கமான தொடர்பு, சோழமன்னர்கள் ஏற்படுத்திய போர், அதனால் விளைந்த விளைவு, போர்த்துகீசிய மற்றும் டச்சுக்காரர்கள் வணிகத்திற்காக வந்து பின்னர் படிப்படியாக இலங்கைத் தீவு முழுமையும் அந்நியர்களின் கைக்கு மாறிய வரலாறு என்று சூளவம்சம் வரலாற்றுச்செய்திகளைப் பதிந்து தருகின்றது, பெரும்பாலான செய்திகள் வரலாற்றுக் குறிப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, ஆங்காங்கே கற்பனைக் கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்பதையும் காணமுடிகின்றது.

          சூளவம்சம் பற்றிய இந்த அறிமுகத்தோடு தொடர்ச்சியாக சூளவம்சம் நூல் சொல்லும் வரலாற்றைச் சிறு பகுதிகளாகத் தொடர்ந்து வழங்குகிறேன்.


-  முனைவர் க. சுபாஷிணி







No comments:

Post a Comment