Thursday, May 9, 2019

நாளை மலரும் முல்லைகளே

— முனைவர் ச. கண்மணி கணேசன்


இளமையே வளமைக்கு வழிகாட்டி 


          "இளமையே வளமைக்கு வழிகாட்டி" இதைத்தான் விளையும் பயிர் முளையிலே" என்று முன்னோர் கூறினர். 

          முளைவிடும் பயிரின் வேகத்தையும், வீரியத்தையும் கண்டு போற்றிப் பாதுகாத்தால்; விளைச்சலின் அளவும் தரமும் மேம்படும். ஆரோக்கியமாக முளைவிடும் பயிருக்குத் தேவையான நீரும், காற்றும், சூரிய ஒளியும், மணிச்சத்தும், தழைச்சத்தும் கொடுத்தால் தான் அது தக்க பலனைக் கொடுக்கும். ஒரு போகம் முடிந்து அடுத்த போகத்திற்குத் தேவையான விதைகளும் கிடைக்கும். இதற்கிடையில் களைகள் நீக்கப்பட வேண்டும். இந்தப் பயிர்ப் பாதுகாப்பு நடைமுறை உண்மை மனித வாழ்க்கைக்கும் பொருந்தும். 

          இரண்டு வயது முதல் பன்னிரண்டு வயதிற்குள் முழு வளர்ச்சி அடையும் மூளையின் வேகத்திற்குள்; எத்தனை மொழிகளைக் கற்றுக் கொள்கிறோமோ அத்தனையளவு எதிர்காலத்தில் முன்னேறும் வழிவகைகள் மிகுதியாகும். 

          பிள்ளைப்பருவம் என்று சொல்லப்படுகின்ற இக்கால கட்டத்தின் உணவுமுறை ஒரு மனிதனின் தேக ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும்.  இளமையில் தாய் நமக்குப் பழக்கப்படுத்தும் நாக்குருசி; அதாவது உணவுமுறை வளமான வாழ்விற்கு பிள்ளையார் சுழி ஆகும்.   

          குழந்தைப் பருவத்தில் பின்பற்றும் ஒழுக்க முறைகளே வாலிபப் பருவத்தின் வாழ்க்கையை வடிவமைக்கும். அதனால்தான் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தனர் நம் முன்னோர். 

          இளமையில் பெற்றோர் வரையறுக்கும் பழக்க வழக்கங்களே பின்னாளில் போட்டி மிகுந்த உலகில் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகின்றன. 

          இளமையில் தாத்தாவும் பாட்டியும் கொடுக்கும் உலகாயத உண்மை அறிவே வளரிளம் பருவத்துப் பேதை மனதின் சலனங்களைச் சமாளித்து எதிர்கொள்ள ஏதுவாகும். 

          இளமையில் கிடைக்கும் நட்புவட்டாரம் தான் வயோதிகத்தை அர்த்தமுள்ளதாக்கி இன்பத்தை அசைபோட வைக்கும். 

          ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று கேள்வி கேட்டு இளமை வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள் நம் முன்னோர். 

          இளமை நடவடிக்கைகள்தாம் வளர்ந்தபின் நம் வெற்றிக்குரிய படிக்கட்டுகளாய் அமையும். 

இன்று குளத்தைத் தூர் வாரி வைத்தால் நாளை மழைவெள்ளத்தின் போது தேக்கிவைக்க உதவும்; நிலத்தடி நீர் பெருகும். 
இன்று தென்னை பயிரிட்டால் இறப்பிற்குள் தேங்காயும், இளநீரும் உண்ண வழியுண்டு. 
இன்று பனை வைத்தால் அடுத்த சந்ததிக்கு பலன் கிடைப்பதை உறுதி செய்து விடலாம். 
இன்று களை எடுத்தால் நாளை மகசூல் மிகுதியாகும்.
இன்று சுற்றுச்சூழலைப் பாதுகாத்தால் நாளை நம்வாழ்க்கை மட்டுமின்றி அடுத்தடுத்த தலைமுறையும் நன்மை அடையும். 
இன்று படித்தால் நாளை தேர்வைப் பயமின்றி எதிர்கொள்ளலாம். 
இன்று சோம்பேறித்தனத்தை விட்டால் நாளை நாம் மட்டுமின்றி நம் சமுதாயமே பயனடையும். 

"எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ; 
நீ எந்த எட்டில் இருக்கிறேனு புரிஞ்சுக்கோ 
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல; 
நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல"
என்ற திரையிசைப் பாட்டு ஒரு மனிதன் இளமையிலேயே தேகஆரோக்கியத்திற்கும், கல்விக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைச் சுட்டுகிறது.  

          ஒன்று செய்; நன்றே செய்; இன்றே செய் என்ற வழிகாட்டல் வளமைக்குரியது; இளமைக்குரியது   

          கட்டுமான உறுதிக்கு அடித்தளம் அடிப்படையாய் அமைவது போல; வளமான வாழ்விற்கு இளமை அடிப்படை ஆகிறது.



________________


காலம் அறிதல் 

விலைமதிக்க முடியாத பொருள்;
ஒருமுறை தொலைத்தால் திருப்பிக் கிடைக்காத பொருள்;
யாருக்காகவும் காத்து நிற்காத பொருள்;
அது தான் காலம். இதை உலகமக்கள் அனைவரும் ஒப்பவே உணர்ந்து இருக்கின்றனர்.

காலம் பொன் போன்றது; என்ற பழமொழி தமிழில் வழங்குவது. ஆங்கிலத்திலும் காலத்தின் மகிமை போற்றும் பழமொழி உண்டு.
Time And Tide Wait For No Man

உதவி செய்யும்போது கூட வள்ளுவர் காலமறிந்து தான் செய்ய வேண்டும் என்கிறார்.
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
என்ற குறள் காலம் செய்யும் மாயம் பற்றிப் பேசுகிறது. சிறிய உதவியை உலகைக் காட்டிலும் பெரிதாக்குவது தக்க  காலம்.   'காலமறிதல்' என்று ஒரு தனி அதிகாரமும்  வகுத்துள்ளார் வள்ளுவர். அவரது காலத்தில் தகுந்த காலம் பற்றிய அறிவுரை அரசர்களுக்குத் தேவைப்பட்டது. ஆம்; அவர் பொருட்பாலின் அரசியல் பற்றிய பகுதியில் தான் காலமறிதல் பற்றிப் பேசுகிறார்.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது"
என்கிறார். பகற்பொழுதாக இருந்தால் காக்கை கூகையை வென்றுவிடும் அது காக்கைக்கு உகந்த காலம். கூகைக்குக் காலையில் கண் தெரியாது. அதுபோல் பகைவெல்ல நினைக்கும்  மன்னன் காலமறிந்து செயல்பட வேண்டும் என்பது அவரது அறிவுரை.

‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை’ காத்திருக்கும் கொக்கு தகுந்த காலம் கருதியே காத்திருக்கும். அஃறிணை உயிர்களே தகுந்த காலத்திற்காகக் காத்திருக்கும் போது ஆறறிவு கொண்ட மனிதன் காலம்கருத வேண்டாமா என்ன?!

இன்றைய அவசர உலகில்;
ஒரு கிராமமாகி விட்ட உலகில்;
போட்டி நிறைந்த உலகில்;
காலமறிந்து கடமையாற்ற வேண்டியவர் அரசு அதிகாரத்தில் இருப்பவர் மட்டுமல்ல. சிறுவர் முதல் முதியோர் வரை சரியான நேரத்தைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
சரியான நேரத்திற்குள் பள்ளிப்பேருந்தைப் பிடிக்க வேண்டும்; இல்லையெனில் பிள்ளைக்கும் சிரமம்; பெற்றோர்க்கும் சிரமம்.
சரியான நேரத்திற்குள் சென்று அலுவலக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்; இல்லையேல் மேலாண்மையாளரின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
சரியான நேரத்திற்குள் சென்றால் தான் தனியார் பேருந்தில் அமர இடம் கிடைக்கும்; இல்லையேல் நின்று கொண்டே பயணிக்க வேண்டும்.
சரியான நேரத்திற்குள் சென்றால் தான் தொடர்வண்டியில் ஜன்னலோர இருக்கை கிடைக்கும்; இல்லையேல் பயணம் முழுமையும் பச்சைபூமியும், நீலவானமும் பார்த்து ரசிக்க இயலாது.   

            அதிகாலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை நமது அன்றாடச் செயல்களும் கூட உரிய காலத்தில் செய்ய வேண்டியவையே.

            எட்டு எட்டாக அடிவைத்து முன்னேறும் ஒவ்வொருவரும் எந்த எட்டில் என்ன செய்ய வேண்டுமோ; அதைக் காலம் கடத்தாமல் செய்து முடிக்க வேண்டும்.

சராசரி மனிதனும்;
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் சாமானியனும்;
தேடிச் சோறு நிதம் தின்று; பல சின்னஞ்சிறு கதைகள் பேசி; நரைகூடிக் கிழப்பருவம் எய்தினும்; ஓடி உயர நினைக்கும் மனிதக்கூட்டத்தின் கூறானவனும் காலம் கருதியே செயல்பட வேண்டும்.

உண்ணும் போதும்;
உடுத்தும் போதும்;
இயற்கையின் புதிர்களை அவிழ்க்கும் போதும்;
இன்பம் எங்கே எங்கே என்று தேடும் போதும்;
தேடிக் கிடைத்த இன்பத்தை அனுபவிக்கும் போதும் காலம் கருதியே செயலாற்றுவது அவசியம்.

            இன்று காலம் அறியாமல் வாழ்ந்தால் இளமை இனிமையாகத் தோன்றும்; ஆனால் முதுமை கசக்கும். எனவே

            காலமறிந்து செயல்படுவோம்; வெற்றியை நோக்கி முன்னேறுவோம்.


________________


எண்ணித் துணிக 

          "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
          எண்ணுவம் என்பது இழுக்கு"

ஆம். எண்ணியே துணிய வேண்டும்; எண்ணாது;
                    அதாவது சிந்திக்காது
                    ஆலோசிக்காது
                    திட்டமிடாது
                    யோசிக்காது
          செயல்படத் துணிந்தால்; செயலில் எப்படி வெற்றி கிட்டும்?
          வெற்றியின் முதல் படியே சிந்தனை தான் - எண்ணம் தான்.

          எந்தச் செயலையும் செய்யும் முன்; எப்படிச் செய்ய வேண்டும்?
          எம்முறையில் தொடங்க வேண்டும்?
          யாரை அணுக வேண்டும்?
          என்பவற்றையெல்லாம் திட்டமிட்டு; பின்பே அதைத் தொடங்க வேண்டும். அதுவே செயல் ஆற்றும் முறை.

          எண்ணித்துணிதல் என்பது பெரிய பெரிய அரசு அலுவல்களுக்கு மட்டும் தான் தேவை என்று எண்ண வேண்டாம். நமக்குத் தகுந்தாற்போல் நம் வீட்டுக் காரியங்களுக்கும், நம் வாழ்க்கைக் கடமைகளுக்கும், முடிக்க வேண்டிய கருமங்களுக்கும் எண்ணியே- திட்டமிட்டே செயல்பட வேண்டும்.

          மாணவப் பருவத்தை எடுத்துக் கொள்வோம்; தேர்வு முறையை நோக்குவோம். பாடங்களை எப்படிக் கூறுகளாக்கிக் கொள்ள வேண்டும்? எந்தெந்தக் கால அளவையில் எந்தெந்தக் கூறினை எந்த அளவிற்குக் கற்பிக்க வேண்டும்? என்று ஆசிரியப் பெருமக்கள் எண்ணித் துணிந்தே செயல்படுகின்றனர்.

          மாணவருலகம் திட்டமிட்டுப் படித்தால்; திட்டமிட்டுப் பயிற்சி செய்தால் போட்டித் தேர்வுகளை எல்லாம் கூட நடுங்காமல் எதிர்கொள்ள முடியும்.

          சமுதாயப் பிரச்சினைகளானாலும் எண்ணியே செயலாற்றத் துணிய வேண்டும். பாரத நாட்டின் விடுதலை வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்…படைபலமும், பணபலமும் கொண்ட வெள்ளையனை வெளியேற்ற அகிம்சையே சிறந்த ஆயுதம் என்று சொன்ன காந்தியடிகளின் கூற்று; அவரது எண்ணித் துணிந்த செயலுக்கு ஏற்ற எடுத்துக்காட்டு. வீணாக வன்முறையில் ஈடுபட்டு நாட்டுமக்களைப் பெருமளவில் உயிரிழக்க வைக்கக் கூடாது என்ற அவரது தீர்க்கமான சிந்தனையின் விளைவே நமது விடுதலை.

          சுதந்திர இந்தியா எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியுள்ளது?
          அத்திட்டங்களின் பயனாக எத்தனை அணைகளைக் கட்டியுள்ளோம்?
          எத்தனை தொழிற்சாலைகளை நிறுவியுள்ளோம்?
          பசுமைப்புரட்சியின் பலனுக்குரிய திட்டம் என்ன?
          வெண்மைப் புரட்சியில் வெளுத்து வாங்கினோமா?
          உணவுப் பிரச்சினையில் தன்னிறைவு பெற்றதாகக் கூறுகிறார்களே?
          காரணம் என்ன? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் அந்நடைமுறைக்குப் பின்னால் இருக்கும் ஆழமான சிந்தனையும், திட்டவரைவும் புலப்படும்.

          அரசு செயல்பாடுகளிலிருந்து, அன்றாட இல்லக் கடமைகள் வரை அனைத்து நிலைகளிலும் எண்ணித் துணிவதே இலக்கை அடைய வழி வகுக்கும். அவ்வாறன்றி எண்ணாது செயலில் இறங்கிவிட்டுப் பின் எவ்வாறு இதனை முடிப்பது? என்று திணறுவது செயல்திறன் குறைபாடு.

          ஆழத்தை அறியாது ஆற்றில் இறங்கிவிட்டுப் பின்பு எப்படிக் கடப்பது என்று நிதானிக்க முடியுமா? ஆற்றோடு போக வேண்டியது தான்.

          எண்ணித்துணிந்த பெற்றோரே இல்லறத்தில் வெற்றி அடைகின்றனர்.
          எண்ணித்துணிந்த மாணவனே தேர்வில் வெற்றி அடைகிறான்
          எண்ணித்துணிந்த அரசியல்வாதியே பொதுவாழ்வில் வெற்றி அடைகிறான்.

நாமும் எண்ணித்துணிந்து செயல்பட்டு எல்லாவற்றிலும் வெற்றி அடைவோம்.


________________


வாய்மையே வெல்லும்

          தலைப்பைக் கேட்டவுடன் என்றோ ரசித்த திரைப்படப் பாடலின் ஒலி மனதுக்குள் அலறுகிறது.
"வாய்மையே வெல்லுமடா- அதன்
வழியே நாமும் செல்வோமடா"...

இவ்வடிகள் உச்சத்தொனியில் உலகை அழைத்து ஒரு செய்தியைக் கூறுகின்றன. அது எந்த அளவுக்கு உண்மை என்பது மேலும் ஆய்தற்குரியது.

வாய்மை என்றால் என்ன?
          வள்ளுவரைக் கேட்டுப் பார்ப்போம். வரையாது கருத்துக்களை வாரி வழங்கும் வள்ளல் கூறுகிறார்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்"

எந்த  ஒரு தீமையும் விளைவிக்காத சொற்களைப் பேசுவது வாய்மை என்று பொருள் தொனிக்கிறது.

அப்படிப்பட்ட சொற்களை எப்படி இனம் காண்பது? அதற்கும் வள்ளுவரே வழிகாட்டுகிறார்.
“தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்”

வாய்மை இல்லாத சொற்களையும் செயல்களையும் முறையே - பேசினால்; செய்தால்- நம் நெஞ்சே நம்மைச் சுடும். எது வாய்மை? எது பொய்மை? என்பது அவரவர் நெஞ்சம் அறிந்து செய்யும் முடிவு.

          உலக வரலாற்றில் எத்தனை எத்தனையோ மனிதர்கள் வெற்றிப் படிகளில் ஏறி உலா வந்துள்ளனர். இந்த வெற்றிகளுக்கெல்லாம் அடிப்படையாய் அமைந்தது வாய்மை.

உதாரணமாக;
இருநூறு  ஆண்டுகளாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாரதம் சுதந்திரப் போரில் வெற்றி பெற்றதன் அடிப்படை என்ன?
"கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்"

என்று நாமக்கல்லார் பாடிய பாடலின் முதலடி அகிம்சை போர் பற்றிப் பேசுகிறது. இரண்டாமடி வாய்மை நிலைபெறும் என்று கருத்துரைக்கிறது.

அகிம்சையும் வாய்மையும் ஒன்றா? அல்லது உடன்பிறப்புக்களா?
          எப்படியிருப்பினும் பாரதத்தின் சுதந்திரப்போர் வெற்றியில் அகிம்சைக்குப் பங்குண்டு என்பது உறுதி. அகிம்சையை வலியுறுத்திய காந்தியடிகள் தன் சுயசரிதையை சத்தியசோதனை என்று தான் பெயரிட்டு அழைக்கிறார். இப்போது அகிம்சைக்கும் வாய்மைக்கும் இடையே ஒரு தொடர்பு இழையோடுவதாகத் தான் தெரிகிறது.

பாரதத்தின் பண்பாட்டுச் சின்னமாம் இராமாயணம் கூறுகிறது:
"அறம் வெல்லும்; பாவம் தோற்கும்"   என்று. அதுதான் பாவிகம், அக்காப்பியம் நமக்குக் கூறும் தலைமைக் கருத்து இது.
அறங்களுள் தலையாயது வாய்மை.
அறம் வெல்லும் = வாய்மை வெல்லும்

          அந்த வாய்மையின் சின்னமாக; அஹிம்சாமூர்த்தியாகக் காட்சி அளிக்கிறான் இராமன். காப்பிய முடிவில் இராமனின் வெற்றி- அறத்தின் வெற்றியை; வாய்மையின் வெற்றியையே பறைசாற்றுகிறது.

          மகாபாரதப் போரில் பொய்மையும் வாய்மையாகி வெற்றி பெறும் விந்தையைக் காண்கிறோம். துரோணரை வீழ்த்த தருமன் செய்யும் சூழ்ச்சி- "அஸ்வத்தாம ஹத குஞ்சர" என்ற தொடரின் சொற் பிரயோகத்தில் அவன் காட்டிய தொனி பேதம்- துரோணரைத் தன் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டான் என்று ஒரு பொய்யை நம்பவைத்தது. அவரது இறப்புக்கு வழி வகுத்தது. பாண்டவர்களின் பொறுமைக்கும், எளிமைக்கும், நற்பண்புக்கும், நல்லுணர்வுக்கும் வெற்றி கிட்ட ஏதுவாய் நின்ற கண்ணன் காட்டிய அறவழி இது.

புரை தீர்ந்த = குற்றமற்ற

குற்றமில்லாத நன்மை கிடைக்குமானால் பொய்யையும் மெய்யாக்கி மதிக்கலாம் என்று வழிகாட்டுகிறது மகாபாரதம்.

          வழிகாட்டிய கண்ணன் வஞ்சகனாக நம் கண்களுக்குக் காட்சி அளிக்கிறான். ஆனால் திருவள்ளுவர் நடப்பியல் அனுபவத்தோடு அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாரே.

"பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

என்று வாய்மைக்கு இலக்கணம் வகுத்துள்ளார். இதனால் தான் வாய்மை என்பது யாது    என்பதை நம் மனசாட்சியைக் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று பெரியோர் கூறுகின்றனர்.

மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்; வாய்மை வெல்லும் அல்லவா?!

          வாய்மையே வெல்லும்.



________________


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி 


          பிறவிகளுள் உயர்ந்தது மனிதப் பிறவி.

           'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்று பாடினார் ஔவைப்பிராட்டி. மனிதராய்ப் பிறந்த நாம் இப்பிறவியின் மேன்மையை அறிந்து புரிந்து வாழ்கின்றோமா? இல்லை. மனிதப் பண்புகளையும், மேன்மையையும் மறந்து வாழ்கின்றோம். இக்கேட்டிற்குத் துணையாகும் கருவிகளுள் ஒன்று சினம். 

          சினம் ஏற்படும் பொழுது மனிதனின் மென்மைப் பண்புகளும், மேன்மைப் பண்புகளும் அழிகின்றன. இதனால் தான் வள்ளுவர் 'தன்னையே கொல்லும் சினம்' என்கிறார். வள்ளுவர் நோக்கில் சினம் கொலைக்குப் பயன்படும் ஆயுதம் ஆகிறது. 

          விலங்குகளுக்குச் சினம் ஏற்பட்டால் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களும் அழிகின்றன. யானையின் சினம் அன்பு கொண்டோரையும் வாழ விடவில்லை. பாரதியார் ஒவ்வொரு நாளும் கோயில் யானைக்கு உண்ணக் கொடுத்தார். ஆனால் ஒரு நாள் மதம் பிடித்துச் சினம் கொண்ட யானை தனக்கு உணவளித்தவர் என்றும் பாராது அவரைத் துதிக்கையால் வளைத்துக் கீழே தள்ளியது. இச்சம்பவம் பாரதியாரின் இறப்புக்குக் காரணமாய் அமைந்தது.

           பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கள்வன் என்று எண்ணிய போது ' கொன்றச் சிலம்பு கொணர்க' என்று ஆராயாமல் கூறியதற்கு அடிப்படையானது சினம். தன் தேவியின் சிலம்பைத் திருடியவன் மேல் கொண்ட சினம்- தன் தேவி தன் மேல் கொண்ட சினத்தைத் தணிக்க மேற்கொண்ட அவசரம்- அனைத்தும் சேர்ந்து ஒரு பத்தினியைப் பதைத்து எழ வைத்தது; பாண்டியன் அழிவுக்குக் காரணம் ஆனது; அவன் மனைவி உயிருக்கும் உலை வைத்தது; ஒரு மாநகரின் அழிவுக்கு அடிப்படை ஆனது; மாறாத பழியைப் பாண்டியன் குலத்திற்கு ஏற்படுத்தியது.

           கம்பராமாயணத்தில் மாபெரும் வலிமை பெற்றவன் எனப் புகழ் பெற்றவன் இராவணன். தங்கை துர்ப்போதனையால் சீதையைக் கவர்ந்தான். தன்னை இடித்துரைத்தோர் அத்தனை பேரிடமும் சீற்றம் கொண்டான். தம்பியர் கூறிய அறிவுரையைச் சினத்துடன் மறுத்தான். விளைவு? இலங்கை அழிந்தது; அரக்கர் குலம் அழிந்தது; இராவணன் தானழிந்து; தன் சுற்றம் முழுவதும் அழியவும் காரணமாகி விட்டான். அதனால்தான் வள்ளுவர், 

"சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் 
ஏமப் புணையைச் சுடும்." என்று பாடியுள்ளார். 

          இன்றைய நாகரிக உலகில் குடும்பப் பிளவுகளுக்குக் காரணமாவது சினம். குடும்பத் தலைவனோ, அன்றித் தலைவியோ, அல்லது பிற பெரியோரோ; ஆழமாகச் சிந்திக்காமல் செயல்படுவதும்; சினத்தால் அழிவான செயல்பாடுகளை மேற்கொள்வதும்; குடும்பத்தை அழித்துத் தம்மையும் அழிக்கிறது. 

          சினம் பொறாமைக்குக் காரணமாய் அமைகிறது; பேராசையைப் பெருக்குகிறது; அறிவிழக்கச் செய்யும் அவசர புத்தியைக் கொடுக்கிறது. இவ்வாறு சினம் விளைவிக்கும் கேடுகளை எங்கு நோக்கினும் வரலாற்றிலும், இலக்கியங்களிலும், கதைகளிலும் காணலாம். 


________________


தன்னையே கொல்லும் சினம்


          சிந்திக்க வைக்கும் தலைப்பு; வள்ளுவரின் வாய்மொழியை எடுத்துக்காட்டி; அதுபற்றி ஆராய்வதும் ஒரு விறுவிறுப்பான, அறிவுப்பூர்வமான பொழுதுபோக்கு தான். 

"தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லும் சினம்"  

          ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் தனக்குச் சினம் ஏற்படாதவாறு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையேல் தன் சினத்தாலேயே அவன் அழிவான். 

          வள்ளுவர் கொள்கைக்குப் புராணக் கதைகளைத் துணைக்கு அழைத்துப் பார்ப்போம். 'ஆதியந்தம் இல்லா அருள்ஜோதி' என்று அழைக்கப்படும் சிவபெருமான் சினம் கொள்கிறார்; தக்கன் யாகத்தின் போது…….. விளைவு? தக்கன் அழிகிறான்; சந்திரன் தேய்கிறது; பிரம்மனின் தலை கிள்ளியெறியப் படுகிறது. சிவன் சினம் கொண்டதால் அழியவில்லையே! 

          இங்கே சிவன் முழுமுதற் பொருள் எனப்படுவதால் அவனைப் பற்றி மனிதன் கட்டிய கதையை விட்டு விடலாம். 

          கண்ணனாக அவதரித்தார் பெருமாள்; அகிம்சையை ஆதரித்தார். பொறாமையால் அசூயை கொண்ட சிசுபாலனின் ஏச்சும், பேச்சும் எல்லை மீறியபோது சினம் கொண்டார். அவரது சக்கரப்படை சிசுபாலனின் தலையைத் துண்டித்தது. கண்ணன் கொண்ட சினமும் கொண்டவனைக் கொல்லவில்லை. அகிம்சைக்கும் எல்லை உண்டு என்று காட்டுகிறது வைணவம். 

          அதர்மம் தலையெடுத்து ஓங்கி வளர்ந்துவிட தர்மத்தை நிலைநாட்ட முனையும் போதெல்லாம் அவதாரம் எடுக்கிறான் ஆண்டவன். நரசிம்மமாகி வந்து இரணியனின் குடலைக் குதறிக் குலைக்கும் போது சினத்தின் உச்சக்  கட்டத்தைப் பார்க்கிறோம். இங்கும் தன்னையே கொல்லும் சினம் என்ற வாக்கின் பெறுமதி புரியவில்லை. 

          சினம் என்றவுடன் நினைவுக்கு வருகிறார் துர்வாசமுனிவர். அவரது சினத்தால் வாழ்வில் சாபத்திற்குள்ளாகி அல்லல்படுபவள் சகுந்தலை தான். துர்வாசரை அவரது சினம் துன்புறுத்தியதாகக் கதைகள் இல்லை. அப்படியாயின் தன்னையே கொல்லும் சினம் என்ற வள்ளுவர் வாக்கு அர்த்தமற்றது தானா?

          எங்கு திரும்பினாலும் புராணங்கள் நம்மைக் கைவிட்டு விடுகின்றன. இலக்கியங்களுக்கு வருவோம். கண்ணகி சினம் கொள்கிறாள்; மதுரை தான் அழிகிறது. அவளை தேவலோகத்திலிருந்து புஷ்பக விமானம் வந்தல்லவா அழைத்துச் செல்கிறது. தமிழின் முதன்மைக் காப்பியமே நமது தலைப்புக்குப் பெரிய முட்டுக்கட்டை போடுகிறது.

அப்படியானால் வள்ளுவர் ஏன் அப்படிக் கூறினார்? 
தமிழகத்தின் ஒப்பற்ற நீதிநூலாசிரியர் கூற்று எப்படித் தவறாகும்? 

நாம் இதுவரை பார்த்த கதைகளில்;
சிவபெருமான் செருக்கை எதிர்த்துச் சினம் கொண்டார். 
திருமால் சிசுபாலனின் பொறாமையை எதிர்த்துச் சினம் கொண்டார். 
நரசிம்மம் அகந்தையை எதிர்த்துச் சினம் கொண்டது. 
துர்வாசர் கடமை தவறிய அலட்சியத்தை நோக்கிச் சினம் கொண்டார். 
கண்ணகி அநீதியை எதிர்த்துச் சினம் கொண்டாள். 
இவர்களில் யாருமே தம்மைக் காத்துக் கொள்வதற்காகச் சினம் கொண்டவர் இல்லை. வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் காணும் கோணத்தை மாற்றிப் பார்ப்போம். வான்புகழ் வள்ளுவர் குறளின் சரியான பொருள் எது?

          ‘தனக்கு ஆதாயம் வேண்டும் என்பதற்காக; தன்னலத்திற்காகச் சினம் கொள்பவன்; அச்சினத்தாலேயே அழிவான்; அவன் உய்ய வழியில்லை’. 

          தலைப்புக் குறளின் ஆழமான பொருள் இது தான். 

          ஆகையால் அவையோரே, சுயநலம் நோக்கிச் சினம் கொள்ளாதீர்கள்.


________________


அகநக நட்பது நட்பு


          நட்பு- இது அன்பின் பலமுகங்களில் ஒன்று. முகம் மட்டும் மலர்ந்தால் அது உண்மையில் நட்பன்று. மனதை மலரவைக்கும் நட்பே உண்மையான நட்பு.

தூயநட்பு துன்பக்காலத்தில் துணைக்கரம் நீட்டும்;
இழப்புக் காலத்தில் ஈடுகட்ட முற்படும்;
எதிர்பார்க்கும் காலத்தில் எண்ணியதை முடிக்க உதவும்.

இத்தகு பெருமைமிகு நட்புக்கு வரலாற்றில் சான்றுகள் உள்ளன.
இலக்கியங்களிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
வாழ்க்கையில் ஆங்காங்கே வளமார் உதாரணங்களும் உள்ளன.

"காவினம் கலனே சுருக்கினம் கலப்பை 
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே" 
என்று வீறாப்புப் பேசிய ஔவையார் அதியமானிடம் கொண்ட அன்பு நெருக்கமான நட்பாகவே மலர்ந்தது. அந்த நட்பை அரிதாகப் போற்றிய அதியமான் கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை ஔவைக்கே கொடுத்து மகிழ்ந்தான். ஔவை தன் பாணர் குழுவுடன் அதியனின் அரண்மனையிலேயே தங்கியிருந்தாள். அதியனின் மகன் பிறந்தபோது அந்த மகிழ்ச்சியில் திளைத்தாள். அதியனின் நாட்டைப் போர்மேகம் சூழ்ந்தபோது அவனுக்காகத் தூது சென்றாள். துன்பக் காலத்தில் துயர் துடைத்த இச்செய்கை அவர் கொண்ட நட்பின் அடையாளமாக அமைந்தது. அவன் இறந்தபோது அவள் கையற்று ஏங்கி அழுத கண்ணீர் இன்றும் அவளது பாடலை ஈரமாக்கி நனைத்துக் கொண்டு இருக்கிறது.

          தந்தை பாரியைப் பறிகொடுத்த பெண்மக்கள் நிலவைப் பார்த்து அழுதனர். மலையைப் பார்த்து மலைத்தனர். ஆதரவில்லாது தவித்த அவர்கட்கு பாரியின் நண்பர் கபிலர் தன் ‘புலனழுக்கற்ற அந்தணாள’த் தன்மையுடன் உற்ற துணையானார். ஒவ்வொரு மன்னனையும் நாடிச் சென்று அவர்கட்கு வரன் வேண்டி நின்றார். பெற்ற பெண்ணுக்குத் தந்தை மணமுடிப்பதே பேரிடரான விஷயம். உற்ற தோழன் உயிர் போன பின்னால்; அவன் பெற்ற மகளிர் இருவரும் கலங்குவது கண்டார்; தான் கலங்கினார்; மூவேந்தரின் பகையையும் பொருட்படுத்தவில்லை. துணிவுடைய செந்நாப்புலவரல்லவா? ஓயவில்லை. தயங்கிப் பின்வாங்கிய மன்னர்கள் ஒவ்வொருவரையும் தாண்டித் துணிவுடைய மணமகனைக் கண்டுபிடித்தார். தன் கடமையை முடித்தார். அவர் அகநகக் கொண்ட நட்பு; அந்நண்பனை இழந்த பின்னரும் அவனது சந்ததியின் துயர் துடைத்தது.   

          கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் இடையிலிருந்த நட்பு அன்றைய தமிழ்ச் சமுதாயத்தை வியப்பில் ஆழ்த்தியது. வயோதிகக் கோளாறோ? தலைமுறை இடைவெளியோ? தான் பெற்ற பிள்ளைகளுடன் மனமாறுபாடு அடைந்தான் கோப்பெருஞ்சோழன். அன்றைய சமுதாயத்தில் அவனுக்கு அது பெருத்த அவமானமாகத் தோன்றியது. (இன்றைய சமுதாயத்தில் தான் இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம். அன்றைய சமுதாயத்தில் அப்படி எதுவும் இல்லை.) அதனால் கோப்பெருஞ்சோழன் தன் உயிரை மாய்த்துக் கொள்ள வடக்கிருந்தான்; அதாவது உண்ணாநோன்பு இருந்து உயிரை விட்டான். தானமர்ந்த இடத்தினருகே தன் நண்பர்-  தனக்காக- தன்னைப்போல் வடக்கிருக்க வருவார் என்ற நம்பிக்கையுடன் இடம் ஒதுக்க வைத்தார். அவரது எதிர்பார்ப்பின் படியே பிசிராந்தையாரும் வந்தார்; வடக்கிருந்து உயிரை விட்டார். இது பண்டைத் தமிழகம் கண்ட அகநக நட்ட அன்பின் வரலாறு .

          இன்றைய சூழலில் மனிதர்க்கிடையில் ஏற்படும் நட்பைவிட நாடுகட்கு இடையே ஏற்படும் நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னொரு உலகமகா யுத்தத்தைத் தவிர்க்க நாடுகட்கு இடையிலான நட்புறவு மட்டுமே வழிகோலும். இந்த நட்பை வளர்க்கத்தான் விளையாட்டுப் போட்டிகளும், கலாச்சார விழாக்களும், நடைபெறுகின்றன. தூதுக்குழுக்கள் இயங்குகின்றன. இந்நட்பும் அகநக நட்பதாக இருந்தால் மட்டுமே அமைதி விளையும். 


________________


சிறு குடும்பம் 


          அளவான குடும்பத்தை தோட்டம் போன்றது எனலாம். தோட்டத்திலுள்ள மலர்கள், நிழல், மணம், குளிர்ச்சி முதலியவை இன்பம் பயக்கும். ஆனால் காட்டில் நிழலும் குளிர்ச்சியும் இருந்தாலும் உடன் விலங்குகள், இருள் முதலிய அச்சத்திற்குரிய ஏதுக்களும் இருக்கும். இதனாலேயே இன்பத்திற்குரிய ஆதாரமாகத் தோட்டத்தை அரசு குறிக்கிறது;  “சிறு  குடும்பம் சிங்காரத் தோட்டம்"  என்கிறது. குடும்பத்தின் அளவு பெரிதாகும் பொழுது அது காட்டைப்போல் சில துன்பங்களையும் கொண்டிருக்கும்.   

          அளவான குடும்பம் இன்பம் பயக்கும் என்ற எண்ணம் மனிதனின் மனதில் எப்போது தோன்றியது என்பதை இலக்கியங்களின் வாயிலாக நாம் அறிய முடியும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் சிறு குடும்பமே போற்றப்படுகிறது. பண்டைத் தமிழகத்தில் மனிதன் சிறுகுடும்பத்தைப் பற்றி அறிவுபூர்வமாகச் சிந்தித்து எழுதவில்லை. எனினும் உணர்வுபூர்வமாக சிறுகுடும்பத்தின் நன்மைகளை அவன் அறிந்து இருந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாகின்றன. 

          காதல்பாடல்கள் தலைவனுக்கோ தலைவிக்கோ இருந்த உடன்பிறப்புகள்  பற்றிப் பேசுவதே இல்லை. 

          திருமணம் முடிந்த தம்பதியர் வாழ்வில் ஒரு குழந்தையோடு மகிழ்ந்திருக்கும் காட்சியே சித்தரிக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் நடைமுறையில் காணப்பட்டாலும் கவிதையழகு, இன்பம், இனிமை கருதி கவிதையில் அது சுட்டப்படவில்லை. இதனால் இன்பத்திற்கும், இனிமைக்கும், அழகிற்கும் ஆதாரமாக அமைவது ஒரு குழந்தையே. அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்டுச் சென்றால் கவிதைக்களம் மறுதலையான பயனைத் தரும் என்பதை இலக்கியவாதிகள் உணர்ந்துள்ளனர். 

          நற்றிணையில் இடம் பெறும் குழந்தைக்காட்சி: தேன்கலந்த பால் சோற்றினை உண்ண மறுக்கும் பெண் குழந்தையைப் பூங்கொம்பு கொண்டு ஒறுத்து ஓச்சும் தாயின் செயலாக  அமைந்துள்ளது. இது பெருஞ்சித்திரனாரின் அளவுக்கதிகமான பெரிய குடும்பச் சூழலுடன் ஒப்பிட்டு நோக்கற்குரியது. பாலின்றித் தவிக்கும் கைக்குழந்தைக்கு நிலவு காட்டி ஏமாற்றும் தாய் ஒருபுறமிருக்க; வளர்ந்த குழந்தை கஞ்சிக் கலயத்தையும், கூழ் பானையையும் திறந்து பார்த்து முகம் வாடித் திரும்பும் காட்சி ஒருபுறம்; குப்பைக் கீரையை உப்பின்றி வேகவைத்து பிறர் காணாவண்ணம் கதவடைத்து உண்ணும் காட்சி முதலியவற்றை நெஞ்சைத் தொடும் வகையில் பாடியுள்ளார். பாடலில்  பெருஞ்சித்திரனாரின் துன்பம் இடம்பெறுங்கால் அளவுக்கு மீறிய பெருத்த சுற்றத்தினரும் காட்டப்படுகின்றனர்.

          இன்பத்தைச் சுட்டும் பொழுதெல்லாம் தமிழ்க் கவிதை சிறுகுடும்பத்தை; ஒரு குழந்தையைச் சித்தரிக்கிறது. துன்பத்தைச் சுட்டும் பொழுதெல்லாம் தமிழ்க் கவிதை பெருஞ் சுற்றத்தையே காட்டுகிறது. உடுக்க நல்ல உடையின்றி; உண்ண உணவின்றி வாடும் பாடினி, விறலி, சிறுபாணன், பெரும்பாணன், கூத்தர், பொருநர் அனைவரும்; வறுமை, துன்பம், பெருஞ் சுற்றம் முதலியவற்றுடன் சேர்த்தே விளக்கம் பெறுகின்றனர். 

          புராணங்கள் கூறும் குசேலர் வாழ்வில் மிகவும் துன்பம் அடைபவராக; மிகப்பெரிய சுற்றத்துடன்; பல குழந்தைகளுடன் காட்டப்படுகிறார். 

          நாட்டார் வழக்காறு கூறும் நல்லதங்காள் கதை அவளை ஏழு குழந்தைகளுடன் துன்புறுபவளாகக் காட்டுகிறது. அதிகமான குழந்தைகளுடன் புனைந்த கதைகள் அனைத்தும் துன்பத்தையே சித்தரிக்கின்றன. 

          மனிதன் தன் கற்பனையில் தோன்றிய உன்னதக் குடும்பத்தையே; அளவான குடும்பத்தையே இறைவனுக்கும் உரியதாகப் படைத்திருக்கிறான். சிவபெருமான் இரண்டு குழந்தைகள் உடையவராகவே போற்றப்படுகிறார். 

          இதிகாசம் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைக் கூட்டங்களுக்கிடையே போரும், பூசலும் மிகுதியாவதைக் காட்டுவது தான் மகாபாரதம். அர்ச்சுனன் பல மனைவியரை உடையவனாகக் காட்டப்பட்டாலும்; அபிமன்யு, பரிக்ஷித் என்ற இரண்டு மகன்களை உடையவனாகவே காட்டப்படுகிறான். 

          இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், நாட்டார் கதைகள் அனைத்தும் மனித மனத்தின் கண்ணாடிகள். சிறு குடும்பத்தின் சீர்மையைத் தொடர்ந்து குறிப்பாகப் புலப்படுத்தி உள்ளன.



________________


பெண்கள் நாட்டின் கண்கள்


                    "மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா 
                    பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ பாரில் அறங்கள் வளருமம்மா" 
என்று பெண் பிறவியின் மேன்மையைப் பாடியுள்ளார் கவிமணி. உலகில் அறம் நிலைக்க பெண்கள் துணை தேவை என்று இருக்கும் போது பெண்களை நாட்டின் கண்கள் என்று மட்டும் கூறுவானேன்?! அவர்கள் உலகின் கண்கள்.

          'தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை' என்பது தானே தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி. 

          சரித்திரத்தின் ஏடுகளைப் பின்னோக்கிப் புரட்டினால் அங்கே மறையாத புகழ்நிலைத்த பெண்கள் பலரது பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
                    புலமைப் பேற்றிற்கு ஒரு ஔவையார்; 
                    போர்க்களத்தில் வீரத்திற்கு ஒரு ஜான்ஸிராணி; 
                    விஞ்ஞானத் துறையில் மேதை க்யூரி அம்மையார்; 
                    தன்னிகரில்லாத் தாதி ஃப்ளாரென்ஸ் நைட்டிங்கேல்; 
                    விடுதலைப் போராட்டத்தில் வீராங்கனை சரோஜினி தேவியார்; 
                    சமுதாயத் தொண்டில் இணையற்ற தாய் தெரஸா; 
                    உலக அரங்கில் பெருமை பெற்ற அரசியல் தலைவி இந்திராகாந்தி; 
                    காவல்துறையில் களமிறங்கி மாவட்ட ஆளுநராகக் கலக்கும் கிரண்பேடி;  
என்று எத்துறை நோக்கினாலும் ஒரு வெற்றிப் பெண்மணியைப் பார்க்க இயலும்.

          குடும்பத்தைப் பொறுப்புடன் கட்டிக் காப்பவள் பெண். அந்தக் கடமையை நிறைவேற்ற சுயநலம் துறக்கத் தயங்காதவள் பெண். சூழ்நிலைகளால் ஏற்படும் சோர்விலும் கொண்ட கொள்கை மாறாத மனத்திட்பம் உடையவள் பெண்.  

          கல்விக் கூடங்கள், தொழில் நிறுவனங்கள், பணிமனைகள், அரசு அலுவலகங்கள்  ஆகியவற்றைத் திறம்பட நிர்வகிக்கிறாள் பெண். அரசு இயந்திரத்தையே இயக்கும் பெண்மணிகளைப் பாரதம் பார்த்து விட்டது; இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

          பொறுப்பற்ற கணவனின் குறைகளைப் பொருட்படுத்தாமல் மக்களைப் பேணுபவள் பெண். குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்தால் தானும் உழைத்து உயர்த்துபவள் பெண். தன்னையும் தன் குழந்தைகளையும் காத்து; சமயத்தில் கணவனையும் காக்க சளைக்காதவள் பெண். 

          எத்துறையாயினும் தம் கடமையை ஆற்றி; முத்திரை பதிக்கும் முதன்மைப் பெண்கள் பலர் உளர்.

                     “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்று கேட்ட சென்ற நூற்றாண்டின் மனப்போக்கு மண்ணோடு மடிந்து விட்டது. 
                    “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்” இன்று நடத்த வந்து விட்டனர் பெண்கள். அன்று மாட்டுவண்டியை ஓட்டிய நிலைமாறி; இன்று கனரக வாகனங்களையும் ஓட்டத் திறம் பெற்றுள்ளனர். பெண்ணின் பெருமையை உணர்த்த வள்ளுவர், 
                    "பெண்ணிற் பெருந்தக்க யாவுள?!" என்று வியப்போடு நம்மைக் கேள்வி கேட்கிறார். பெண்ணுக்குரிய இலக்கணத்தையும் வரையறுக்கிறார். 

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலா"தவளாகப் பெண் நிமிர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் ஆண்வர்க்கத்தின் மனக்கிடக்கைப்படி; பெண்கள்  உலகமுழுமைக்கும் கண்ணாக, மனித சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவும் மனத்திறன் கொண்டவராக இன்றும் இருக்கிறார்கள்; அன்றும் இருந்தார்கள்; என்றும் இருப்பார்கள்.



________________


அறிவுடையார் எல்லாம் உடையார் 


          பூமியில் உயிரினங்கள் கோடானுகோடி வகையினவாய் உள்ளன

அவற்றுள் ஆறாம் அறிவைப் பெற்றவன் மனிதன். 
இந்த அறிவால் நிலவை அடைந்தான்; 
செவ்வாய்க்கோளை ஆராய்கிறான்; 
ஆழ்கடலின் அதிசயங்களை வெளிக்கொணர்கிறான்; 
திசைகளை அளந்து திக்கெட்டும் பறக்கிறான். 
இத்தகு அறிவைப் பெற்றதால் மனிதன் எல்லாம் பெற்றவன் ஆகி விட்டானா? கொக்கி போட்டுப் பதிலை இழுத்துப் பார்ப்போம்.

என்னிடத்தில் இல்லாத பொருளே இல்லையென்று எண்ண இயல்பவன் எவனோ அவனே எல்லாம் உடையவன். 
தன் தேவைகள் அனைத்தும் நிறையப் பெற்று மனதில் திருப்தி கொள்பவனே எல்லாம் உடையவன். 
இல்லை என்ற ஏழ்மை எண்ணம் இல்லாத பெருமனம் எவனிடம் உள்ளதோ அவனே எல்லாம் உடையவன்.

சரித்திரப் பாடத்தின் சாரமெல்லாம் சத்தோடு புரிந்து கொள்வது அறிவு எனப்படுமா?
பூகோளத்தில் பூட்டிக் கிடக்கும் உண்மைகளைப் புதிது புதிதாக வெளிக்  கொணர்வது அறிவாகுமா? 
அறிவியல் பாடங்கள் அன்றாடம் அளிக்கும் ஆழ்ந்த உண்மைகள் தான் அறிவா?
இலக்கியம் பயின்று இன்பவுலகில் மிதந்து வாழ்க்கை உன்னதங்களை உன்னிப்பாகப் புரிந்து கொள்வது உண்மை அறிவா? 
கணிதச் சிக்கல்களைச் சீராக விடுவித்துக் காண்பவர் வியக்கும் வண்ணம் கணக்குப் போட்டு காசினியில் மேன்மை பெறுவதை    அறிவு என்று சொல்லலாமா?

          இத்தனை துறைகள் கலை உலகில் நாளுக்கு நாள் புற்றீசல் போல் பல்கிப் பெருகிப் புதுமைகள் படைக்கின்றனவே! இவற்றுள் எந்த அறிவு நம்மை ‘எல்லாம் உடையவராக’ மாற்றும் அறிவு?

பெயருக்குப் பின்னால் பல பட்டங்களை நீட்டிப் பெரியவன் என்று புகழ் படைத்தவுடன் மனதில் எல்லாம் இருக்கிறது என்ற திருப்தி ஏற்படுகிறதா? இல்லை. 
அணுவைத் துளைத்தாலும் மனதில் திருப்தி தோன்றுவதற்கு வேறொரு அறிவு வேண்டும். 
உயர உயரப் பறந்தாலும் உள்ளம் நிறைவடைய வேறொரு அறிவு வேண்டும். 

          மாளிகை வாசமும், மதி மயக்கும் இன்பமும் நிலையற்றவை என்ற மெய்யறிவு யாரிடம் உள்ளதோ அவரே போதுமென்ற பொன்மனம் உடையவராகிறார். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் வழிவகை அவருக்கே கைகூடுகிறது. 
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கிய நாயன்மார் போதும் என்ற பொன்மனம் பெற்றவர். மக்களும் அவரை எல்லாம் உடையவராக மதித்தனர்.
ஆகவே அறிவு என்பது கலையறிவோ; நூலறிவோ; அறிவியலறிவோ; இலக்கிய அறிவோ; பட்டறிவோ அன்று. அது இறையை உணரும் மெய்யறிவு ஆகும். மெய்யறிவுடையார் தாம் எல்லாம் உடையார். 


________________



தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)




No comments:

Post a Comment