Sunday, March 10, 2019

தண்ணீர்ப்பந்தல்?—   முனைவர். ப.பாண்டியராஜா


          கோடைக்காலம் விரைவாக நெருங்கிவந்துகொண்டிருக்கிறது. பருவ மழை பொய்த்துப்போன நிலையில், தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற அச்சம் இப்போதே அனைவருக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

          மிகுதியான தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும் இடங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்குக் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யும். இவற்றைத் தண்ணீர்ப் பந்தல் என்று அழைப்பார்கள். இதுதவிர திருவிழாக் காலங்களில் கொடையுள்ளம் படைத்த சில செல்வர்கள் தெருவோரங்களில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திருப்பர்.

இந்த ஏற்பாட்டுக்குத் தண்ணீர்ப் பந்தல் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது?
          நிழலுக்காக ஒரு பந்தல் அமைத்து, அதன் கீழே நீருள்ள பாத்திரங்களை வைத்திருப்பதால் இது தண்ணீர்ப் பந்தல் என்று அழைக்கப்படுகிறதோ? அவ்வாறு பந்தல்கள் அமைக்காமல் வீட்டு முற்றங்களில் சிலர் இதுபோல் செய்வார்கள். அங்கு பந்தலே இல்லாவிட்டாலும், அதுவும் தண்ணீர்ப் பந்தல்தான். தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் முக்கியமா? பந்தல் முக்கியமா? தண்ணீர்தான்! எனவே இதனைப் பந்தல் தண்ணீர் என்று அழைப்பதுதானே சரியாகும்?

          தமிழ் இலக்கியங்களை ஆயும்போது, இந்தத் தண்ணீர்ப் பந்தல் பெயருக்கான உண்மைக் காரணம் புலப்படுகிறது.

          இந்தப் பாடலைப் பாருங்கள்.  மாடுகளை மேய்ப்பவர்கள் கோவலர்கள் எனப்படுவர். அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவில்லாதவராய் இருப்பர். மாடு மேய்க்கும்போது அவர்கள் கையில் எப்போதும் ஒரு கோலினை வைத்திருப்பார்கள். இவர்கள் மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு காட்டாறு தெரிகிறது. அண்மையில் மழை பெய்து மணல் சற்று ஈரமாகக் காணப்படுகிறது. இந்தக் கோவலர்கள் அங்குச் சென்று தம் கையிலுள்ள கோலால் மணலில் குழிபறிக்கிறார்கள். நிறைய மாடுகள் இருப்பதால் ஒரு பெரிய அகலமான குழியையே தோண்டுகிறார்கள். அண்மையில் மழை பெய்திருந்ததால் அங்கு மளமளவென்று நீர் ஊறுகிறது. மகிழ்ச்சியுடன் நிமிர்ந்துபார்த்த அவர்கள் திடுக்கிடுகிறார்கள். அவர்கள் எதிரே சற்றுத் தள்ளி ஒரு பெரிய யானை நின்றுகொண்டிருக்கிறது. பயந்துபோய் எழுந்து அவர்கள் ஓடிப்போய்த் திரும்பிப்பார்க்கிறார்கள். அந்த யானை சாவதானமாக அந்தக் குழியருகே வந்து ஊறியிருக்கிற நீரையெல்லாம் உறிஞ்சிக் குடித்துவிட்டுப் போகிறது.

இந்தக் காட்சியை வருணிக்க வந்த சங்கப் புலவர் கூறுகிறார்:
கல்லாக் கோவலர் கோலில் தொடுத்த
ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும் – ஐங்குறுநூறு 304/1,2

தொடுத்த என்றால் தோண்டிய. ஆன் என்பது பசுக்கள். வௌவும் என்பது கவர்ந்துகொள்ளும். இங்கு புலவர் அந்த நீருள்ள பள்ளத்தைக் குறிப்பிடும் சொல்லைப் பார்த்தீர்களா? நீர்ப் பத்தல் என்கிறார் அவர். பத்தல் என்பதற்குத் தொட்டி, பள்ளம், குழி என்று பொருள்.

இந்த ஓரிடத்தில் மட்டுமன்றி இன்னும் பல இடங்களில் இந்தப் பத்தல்/பத்தர் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன.

1.
வெயில் வெய்து உற்ற அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும் - நற் 240/6-9

2.
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் - பதிற் 22/13-15

3.
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி - அகம் 155/7-9

4.
வேட்ட சீறூர் அகன் கண் கேணி
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்
புன் தலை மட பிடி கன்றோடு ஆர - நற் 92/5-7

எனவே, இன்று நீருள்ள, வாயகன்ற ஒரு பெரிய பாத்திரத்தை அல்லது பள்ளத்தைச் சங்க வழக்கில் நீர்ப்பத்தல் என்றார்கள். இந்தப் பத்தல் பத்தர் என்றும் அழைக்கப்படும். இந்தப் பத்தல் என்ற சொல்லே, இப்போது பந்தல் என்று ஆகி, நீர்ப்பத்தல் என்பது தண்ணீர்ப் பந்தல் என்று மருவி வழங்குகிறது. எனவே தண்ணீர்ப் பந்தலில் உள்ள பந்தல் என்பது உண்மையில் பத்தல் என்ற சொல்லே. எனவே தண்ணீர்ப் பந்தல் என்பது தண்ணீருள்ள பாத்திரத்தைக் குறிக்கும்.நன்றி: தினமணி செய்தித்தாளின் - தமிழ்மணி (10/3/2019)___________________________________________________________
தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/


No comments:

Post a Comment