Tuesday, March 12, 2019

‘நந்தனார்’ - 18-19-ஆம் நூற்றாண்டுக்கால சமூகப் பதிவு

——     ஆறு.அன்புஅரசன்          ‘செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்திநாயனாரின் ‘திருத் தொண்டத் தொகையில்’ கூறப்பட்டுள்ளதை ஆதார மாகக் கொண்டும், நம்பியாண்டார் நம்பி நல்கிய திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலினை முதல் நூலாகக் கொண்டும் வழிநூலாகச் சேக்கிழார் பெரிய புராணம் இயற்றினார் என்பதே ஆய்வாளர்கள் கருத்து.

          மேற்கண்ட இரண்டிலும் நந்தனார் பற்றிய கதை இடம்பெறவில்லை. சுந்தரமூர்த்தி நாயனார், நம்பியாண்டார்நம்பி இருவரும் நந்தனார் பற்றிய குறிப்பு மட்டும் கொடுத்தார்களே அன்றி வாழ்க்கை வரலாற்றைக் கொடுக்கவில்லை. சேக்கிழார் நந்தனாரின் பெயரை மட்டுமே கொண்டு கதை புனைந்துள்ளார். எனவே, இது ஒரு கற்பனைக் கதை என்று சிலர் வாதிடுவர்.

          சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்கு முன்பிருந்தே நந்தனார் கதை தமிழகத்தில் நிலவி வந்துள்ளது என்பதை யாவரும் மறுப்பதற்கில்லை. உபமன்னிய முனிவர் எழுதிய பக்த விலாசத்திலும் நந்தனார் கதை பேசப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். எனவே முற்றிலும் கற்பனையான கதை தொடர்ந்து மக்களால் தாங்கி வந்திருக்க வாய்ப் பில்லை. எனவே, இக்கதையில் ஒரு சிறிதேனும் உண்மை இருந்திருக்க வேண்டும்.

          சுந்தரமூர்த்தி நாயனார் காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலம். நம்பியாண்டார் நம்பி சுமார் 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. இருவருக்கும் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான கால இடைவெளி நிலவுகின்றது. இந்தக் கால இடைவெளியில் ஒரு கதையின் செய்திகள் பல்வேறு மாற்றங்களை அடையக்கூடியது என்பதை எளிதாக உணர முடியும். இவர்கள் காலத்திற்குப் பின்னால் வந்த சேக்கிழார் காலமோ கி.பி.1162 என்பர்.

          ஏழாம் நூற்றாண்டிற்கும் முன்னிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரையிலான கால இடைவெளியில் மக்களின் பேச்சு வழக்கில் பயணித்த கதை ஒன்றின் போக்கில் எத்தனையோ மாற்றங்கள், இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயம் எதுவுமிருக்க வாய்ப்பில்லை.

          “பகவத்கீதை, பாரதப் போருக்குச் சற்று முன்பாக பகவான் கிருஷ்ணனால் உபதேசிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆயின் அந்தப் பகவானே பாரதக் கதைக்குப் புதியவர். அப்போர் நடந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும் அந்தப் பகவானின் உயர்ந்த தெய்வீகத் தலைமை ஏற்றுக்கொள்ளப் படவில்லை. அதில் வழங்கும் சமஸ்கிருத மொழி நடை கிட்டத்தட்ட கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற் குரியது. ஆனால் அவ்வாறு கிருஷ்ணன், பகவான் அந்தஸ்தைப் பெறுவதற்கு நீண்ட காலம் முன் பாகவே, மகாபாரதத்தின் முக்கிய சம்பவங்கள், ஒருமைப்பாடுடைய பிராமண காவியமாக முதல் நிலைத்திருத்தம் பெற்று, மகாபாரதக் கதை அமைப்பின் மூலம் நிகழ்ந்துவிட்டது என்னும் டி.டி.கோசாம்பி கூற்று நினைக்கத் தக்கது. அளவுக்கு மீறி விரிவாக்கப்பட்ட மகாபாரதக் கதையைப் பல பிராமண ஆசிரியர்கள் தங்கள் வம்சங்களை மரி யாதைக் குரியதாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். இதே போக்கில் தான் நந்தனார் சரித்திரமும் கோபாலகிருஷ்ண பாரதியாரால் அமைக்கப்பட்டுள்ளது.


          பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் புராணம் சேக்கிழாரால் இரு குறிப்புகளைக் கொண்டு விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் கீர்த்தனையைப்பற்றித் தமிழ்த் தாத்தா உ.வே.சா. கூறுகையில் “நந்தனார் சரித்திரம் கோபால கிருஷ்ண பாரதியாருடைய பேராற்றலையும் கற்பனை மிகுதி யையும் நன்கு விளக்குகிறது. பெரியபுராணத்தில் உள்ள சுருக்கமான வரலாற்றை அதில் விரித்து இவர் அமைத்திருக்கிறார். வேதியரைப் பற்றிய செய்தி யேனும் நந்தனாரை அவர் துன்புறுத்திய விஷய மேனும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை. நந்தனார், பழைய கால வழக்கப்படி தம் குலத்திற் கேற்ப ஒரு பண்ணையாளாகத்தான் இருந்திருக்க வேண்டுமென ஊகித்து அவருக்கு ஓர் எஜமானனை இவர் உண்டாக்கிக் கொண்டார். நந்தனாருடைய சிவபக்தியும் துறவு நிலையும் சாந்த உள்ளமும் நிறைந்த குணங்களும் பிரகாசிக்க வேண்டும் என நினைந்து அவருடைய இயல்புகளுக்கு மாறாக உள்ளவைகளை அவ்வாண்டைக்குப் பொருந்தினார்” என்று உ.வே.சா. அவர்கள் பெரிய புராணத்தில் உள்ள சுருக்கமான வரலாற்றைக் கோபால கிருஷ்ண பாரதியார் விரித்துக் கற்பனை கலந்து கீர்த்தனை யாகப் படைத்துள்ளார் என்று கூறுகின்றார். இந்நூலைப் படிக்கும்போது மனதிற்குப் பல வேதனைகளையே தருகிறது என்று புலவர் ச.சீனிவாசன் கூறுவார்.

          ஒவ்வொரு படைப்பாளனும் தன் படைப்பில் தன் காலச்சூழலைப் பதிவு செய்திருப்பான். பாரதி யாரும் அதையே செய்திருக்கின்றார். பெரிய புராணத்தில் சொல்லப்படாத பலவற்றைக் கற்பனை யாகப் பாரதியார் படைக்கக் காரணம் அவர் காலத்திய சாதியப் பிரிவினைகள் அழுத்தமாக நிலவிய காலம், பாரதியாருக்கும் தன் சாதியான பார்ப்பனர்களே மிக உயர்ந்த சாதியினர் என்ற சாதி மேலாதிக்க உணர்வு மேலோங்கி இருந்திருக்க வேண்டும்.

          கோபாலகிருஷ்ண பாரதியார் 1788-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள நரி மணம் என்னும் ஊரில் பார்ப்பனகுலத்தில் வடமர் என்னும் வகுப்பில் பிறந்தவர். நல்ல இசைப் பயிற்சியும் சிவபக்தியும் உடையவர். தில்லை நடராசர் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர், நாகப்பட்டினத்தில், கந்தப்ப செட்டியார், செல்லப்பச்சந்திரசெட்டியார் ஆகிய இரு சகோதரர்களின் வேண்டுகோளுக் கிணங்க நந்தனார் சரித்திரத்தைக் கீர்த்தனையாகச் செய்தார். இதனை, சீசய்யாதுரை என்னும் பிரான்சு நாட்டவர் காரைக்காலில் இருந்து அச்சுப் பிரதி யாக்கினார்.

          சாதியின் பெயரால் சுமத்தப்பட்ட இழிவுகள் நந்தனார் கீர்த்தனையில் யதார்த்தம் என்ற பெயரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

“பறையா நீ சிதம்பரம் என்று சொல்லப்
படுமோடா போகப்படுமோடா-அடா”

“மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளோ
ஆடு தின்னும் புலையா உனக்கு ஆனித்தரிசனமோ”

“உலகினில் கடைச்சாதி யெந்தனுக்கு வமையாருமில்லையே”
என இன்னும் நிரம்ப இடங்களில் சாதி துவேஷத்தை பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது.

“தில்லையம்பலத் தானைக் கோவிந்தராஜனைத்
தெரிசித்துக் கொண்டேனே”
என்று சேக்கிழாரின் பெரிய புராணச் செய்திக்கு முற்றிலும் பொருந்தாத அதில் இடம் பெறாத செய்தியைச் சொல்லியிருப்பது, சைவ, வைணவ இணைப்புடன் கூடிய பார்ப்பனிய நிலையாக்கத் திற்கு அரண் சேர்ப்பதாக இருக்கின்றதைக் காண முடிகிறது. சங்கரருக்குப் பின்னாலான வைதீக மதத்தில் ஒரு பிராமணன் பெற்றிருக்கும் உரிமை களையும், சலுகைகளையும், ஒரு சத்திரியன் பெற முடியாது. ஒரு வைசியன் கொண்டிருக்கும் உரிமை களையும், சலுகைகளையும் விடக்கூடுதலாக பிராமணன் கொண்டிருக்கின்றான். வைசியன் ஒரு சூத்திரனைவிட அதிகமான உரிமைகளையும், சலுகை களையும் பெற்றிருக்கின்றான். ஆனால், அவன் ஒரு சத்திரியன் பெற்றிருக்கின்ற உரிமைகளையும், சலுகை களையும் கோர முடியாது. சூத்திரன் எந்த உரிமைக்கும் உரியவனல்ல, சலுகையைப் பற்றிய பேச்சே இல்லை. அவனுடைய சலுகையெல்லாம் மூன்று உயர் வகுப்பாரையும் வருத்தாமல் உயிர் வாழலாம் என்பதே என்று சுட்டிக்காட்டுவார் அம்பேத்கர்.

          இந்த வருணாசிரமப் பேதமும் படிநிலை ஏற்றத் தாழ்வும் அடுக்குமுறை அடிமைத்தனமும் சூத்திரர் களுக்கு உரியது என்றால் இந்த அடுக்குமுறைக்கு வெளியே பெரும்பான்மையான மக்கட் சமூகத்தை வைதீக மதம் புறந்தள்ளி வைத்திருக்கின்றது. அவர்கள் கீழ்மையானவர்களாக உரிமையற்றவர்களாக மனித சமூகத்திற்குரிய மதிப்பில்லாதவர்களாகக் கருதியது. அத்துடன் சூழ்நிலையை அம்மக்கள் அடைய வேண்டும் என்பதற்காகப் பலப்பல புனைவுகளையும் பொய்மையையும் வலிமைப்படுத்தி நிலை பெறவும் செய்தது. இதன் தொடர்ச்சிதான் ஆண்டை கதைப் பாத்திரத்தின் வெளிப்பாடாக அமைந்தது.

“புண்ணியமா முனிவடிவமாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்”
என்று சேக்கிழாரும் நந்தனாரைப் புலைய உடல் நீங்கிப் புது உடல் எடுக்கச் செய்வித்தமையும் அமைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

          ஆனால், சேக்கிழாரின் பெரிய புராணத்திலே கூறுவதற்கு மாறாகவும் கோபாலகிருஷ்ண பாரதி யாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைக்கு எதிரான கருத்தை முன்வைக்கும் அயோத்திதாசப் பண்டிதர் நந்தனாரை வரலாற்று மாந்தனாக முன்நிறுத்து கின்றார்.

          “புன்னாட்டுக்குக் கிழக்கே வாதவூரென்னும் தேசத்தை நந்தன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் பௌத்த சமயத்தவன்”

          “வஞ்சகத்தால் நந்த அரசனைக் கொன்றுவிட வேண்டுமென்று தங்களுக்குள் இரகசியமாக முடிவு செய்து கொண்டு அதற்காக ஒரு திட்டமும் தீட்டிக் கொண்டார்கள். அதன்படி நந்தன் அரண் மனைக்கு மேற்கே அரைக்காத தூரத்திலுள்ள ஒரு காட்டில் இருந்த மண் மேட்டைத் தகர்த்து அதன் மத்தியில் சிதம்பச் சூத்திரம் நாட்டினார்கள்.

          பிறகு அரசனைப் பொய் சொல்லி அழைத்துச் சென்று சூத்திரப் பாவையில் கால்களை வைக்கச் செய்தனர். நந்தன் தலைகீழாகவும், கால்கள் மேலாகவும் நசியச் சிதம்பித்துக்குக் கொல்லப்பட்டான்.

          உடனே வஞ்ச மிலேச்சர்களாகிய ஆரியர்கள் ஊருக்குள் சென்று குடிமக்களெல்லாரையும் அழைத்து நந்தன் பக்தியுடையவனாக இருந்ததால் சுவாமி விருப்பங்கொண்டு விழுங்கி விட்டார். பாதங்கள் மட்டும் மேலே தெரிகின்றது பாருங்கள் என்று காட்டினார்கள்.

          நந்தனை சிதம்பித்துக் கொன்ற இடம் சிதம்பரம் என்றானது என்பது அயோத்திதாசர் கருத்தாகும்.

          பாரதியாரோ, “பறையா நீ சிதம்பரம் என்று சொல்லப்படுமோடா, போகப்படுமோடா-அடா? என்ற நந்தனாரின் முதலாளி திட்டுவதாக அமைத் துள்ளார். சிதம்பரம் என்பதில், சிதம்பர் என்றால் இழிந்தோர், கீழோர், தாழ்ந்தார் என்ற பொருளைக் கழக அகராதி தருகிறது என்பதைக் கருத வேண்டும்.

          பெரிய புராணம் பௌத்தர்கள் மீதுற்ற வெறுப் பினால் எழுதப்பெற்ற நூல் என்பது பெரியாரின் வாதம். மேலும் நந்தனார் கதை பொய்யான கற்பனைக் கதை என்பதும் அவர் முன்னுரைப்பதாகும்.

          அயோத்திதாசரோ நந்தன் பௌத்த அரசன். அவன் ஆரிய சூழ்ச்சியால் கொல்லப்பட்டான் என்றுரைப்பார், உபமன்யு, சுந்தரமூர்த்தி சுவாமிகள், நம்பியாண்டார்நம்பி, சேக்கிழார், கோபால கிருஷ்ண பாரதியார் இவர்கள் புராணக் கதையான நந்தனை அணுகிய போது, அயோத்திதாசர் மட்டும் நந்தனை வரலாற்று மனிதனாக முன்னிறுத்துகின்றார். இவரின் இம்முயற்சிக்குக் காரணம் இருக்கின்றது.

          பாரதியாருடைய கீர்த்தனைக்கு அவர் காலத்தி லேயே ஒரு எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

“நந்தன் சரித்திரத்தைக் கேளாதே - நாளும்
வந்த தரித்திருந்தான் மாளாதே
தந்தனமாகக் கொள்வான் தடிப்பிரமசாரி
தையலர் மேற்பெருங்காமவிகாரி
பெரிய புராணத்தில் இருப்பதை விட்டுப்
பேய்த்தனமாக இவன் சொன்னதைத் தொட்டு
அரிய புலவருக்கு வந்ததே சொட்டு
ஐயையோ அத்தனையும் கதை கட்டு”
என்று எழுந்த எதிர்ப்பை யார் எழுதியது என்று குறிப்பிடாமல் உ.வே.சா அவர்கள் தம் நூலில் பதிவு செய்துள்ளார். இதுபோன்றதொரு எதிர்ப்பு சமய வாதிகளால் எடுத்துரைக்கப்பட்டாலும், அயோத்தி தாசருக்கான அவசியம் அவ்வாறானது இல்லை. காரணம் அவர் இயல்பில் பௌத்தர் மட்டும் அல்லாது அம்பேத்கருக்கும் முன்னாலேயே ஆதி திராவிடர்களுக்கான உரிமைக்குக் குரல் கொடுத்த சமூகத்தலைவர். ஒரு பைசா தமிழன் என்ற செய்திப் பத்திரிகை மூலம் தன் புரட்சிக்கருத்துக்களை வெளிப்படுத்திய போராளி. எனவே, அவருக்குத் தன் சமூகத்தின் மீதான இழிவுகளைக் களைய வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே தான் நந்தனை வரலாற்றி லிருந்து பெயர்த்துச் சிதம்பரத்தோடு சிற்றரசாகப் பொருத்துகின்றார். பண்டிதர் தரும் நந்தனார் பற்றிய செய்திகள் தனி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. நந்தனார் வரலாற்று மனிதர் என்பதனைக் கட்டுரையாளர் தனிக்கட்டுரையாகச் செய்திருக்கிறார்.

          கோபால கிருஷ்ண பாரதியாரின் காலம் 1788 முதல் 1881 வரை என்றால் அயோத்திதாசப் பண்டிதரின் காலம் 1848 முதல் 1914 வரை ஆகும். சுமார் 33 ஆண்டுகள் இருவரும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள்.

          பாரதியாரின் கீர்த்தனைகள் சாதி இந்துக்கள் மத்தியில் பெருமளவில் பரவியதால் நந்தனாரை பண்டிதர் வேறு வடிவத்தில் கொண்டு செல்ல விரும்பினார். காரணம், கீர்த்தனையில் பார்ப் பனர்களே மிக உயர்ந்த சாதியினர், மற்றையோர் யாவரும் கீழ்ச்சாதியினர், அதிலும் பறையர், புலையர் முதலியோர் மிகவும் கீழ்ப்பட்ட சாதியினர்- என்பது மிக அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளதை பண்டிதர் ஏற்க வில்லை. ஆனால், பறையர் என்பார் ஆதி தமிழர்கள், பறை என்பது சொல் என்பதால் சொல் மொழியைக் குறிக்கும், இம்மொழிக்குரியவர்கள் பறையர்கள், புலையர்கள் என்பதும் புலம் என்பதில் லகரம் ஐகாரம் பெற்றுப் புலை எனக் கீழ்மைக்கு உரியவராய் பின்னர் திரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

          பறையர்களையும், புலையர்களையும் ஆதி திராவிடர் என்று அழைக்க வேண்டும் என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்தவர் பண்டிதர் என்பதை உணர வேண்டும்.

          பாரதியாரின் கீர்த்தனைகள் பண்ணைக்காரன் கதைப்பாத்திரம் மூலமாக, சாதி மேலாதிக்கச் சிந்தனை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை இறைஞ்சிதான் பெற வேண்டும். அவர்களின் வாழ்க்கை மேல் சாதிக் காரர்கள் விருப்பப்படியே இருக்க வேண்டும். அப்படியே ஒடுக்கப்பட்டவர்கள் எங்கேனும் அடக்கு முறைக்கு எதிராகக் கலகம் செய்தால் அந்தக் கலகத்தால் கிடைக்கும் நியாயமான உரிமையைக் கூட மேல் சாதிக்காரர்கள் அவர்களாகவே முன்வந்து பெருந் தன்மையோடு கொடுத்ததாக இருக்க வேண்டுமே தவிர அது போராட்டத்தால் கிடைத்த வெற்றியாக இருக்கக் கூடாது என மனநிலை மேலிட்டதாக கீர்த்தனை அமைந்திருப்பதாக பண்டிதர் கருதியிருக்க வேண்டும். எனவே கீர்த்தனைகளுக்கு எதிரான கருத்துகளை பண்டிதர் முன்மொழிவு செய்திருக் கின்றார்.

          பண்டித சாதி தீண்டாமைக்கு எதிராகப் பெரு மளவில் முயன்று தன் கருத்துக்களை முன்மொழிந் திருந்தாலும் பாரதியாரின் கீர்த்தனைகள் தமிழ்ச் சமூகத்திடம் சென்று சேர்ந்த அளவிற்கு பண்டிதரின் கருத்துக்கள் சென்றடையவில்லை.

          சமூக உளவியல் என்பது இந்தியாவில் பார்ப் பனிய மேலாதிக்க உணர்வோடு கலந்திருக்கின்றது. பார்ப்பனியம் தன்னை மிக வலுவாகக் கட்டமைத்துக் கொண்டதாக விளங்குகின்றது. அதிகார வர்க்கத் தோடும் ஆதிக்க வர்க்கத்தோடும் பின்னிப் பிணைந் துள்ளது. “ஏழையின் சொல் அம்பலம் ஏறாது” என்பது போல பௌத்த பறையரான பண்டிதரின் வாதம் தமிழகம் முழுவதும் பரவாமல் போனது. புறக்கணிக்கப்பட்டதாகவும் இருக்கின்றது.குறிப்புதவி நூல்கள்:
1.            திருநாளைப்போவாரென்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை- கோபாலகிருஷ்ண பாரதியார்.
2.            பண்டைய இந்தியா-டி.டி.கோசாம்பி
3.            பவுத்தமும் பழந்தமிழ்க் குடிமக்களும் ஓர் ஆய்வு - புலவர் ஜே.ஆனந்தராசன்.
4.            க.அயோத்திதாசப் பண்டிதர்- கௌதம்சன்னா
5.            அம்பேத்கர் சிந்தனைத் தொகுதி Dr.B.R. அம்பேத்கர்

நன்றி: "உங்கள் நூலகம்,"   ஆகஸ்ட் - 2013

No comments:

Post a Comment