தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் தமிழனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த நாட்டுப்புற மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைப் பாடம். இப்பாடத்தை படித்தமேதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல, சராசரி கல்வியறிவற்ற மக்களால் உருவாக்கப்பட்ட அறிவுப்பெட்டகம். அறிவியலின் அடிப்படை செயல்பாடுகள் அறியாமக்களால், தங்கள் வாழ்க்கை நெறிமுறையை ஒழுங்கியலோடு கலாச்சார பண்பாட்டை மையப்படுத்தி மக்களை ஒருநிலைப்படுத்திப் பக்குவப்படுத்த அமைக்கப்பட்ட பாடல்கள், இவ்வறிவு சார்ந்த சிந்தனை தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வழியில் வாழ்வியலைச் செப்பனிட கொடுத்துச்சென்ற கொடை.
தமிழன் தன்வாழ்வியலை படிப்படியாகச் செப்பனிட்டு பாடல்களைத் தந்துள்ளான், முறையே;
தாலாட்டுப் பாடல்
தெம்மாங்குப் பாடல்
கும்மிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
முளைப்பாரிப் பாடல்
வள்ளிப் பாடல்
கதைப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
தாலாட்டுப் பாடல்:
ஏழு கட்டமாகப் பிரிக்கப்பட்டு, ஏழு நிலைகளிலும் அறிவும் ஒழுக்கமும் பண்பாட்டு சொல்லித்தரப்பட்டுள்ளது;
"ஆராரோ ஆரிரரோ ஆராரோ....
அல்லிமகனோ என் அய்யா நீ அருச்சுனர் புத்திரனோ.....
வீமன் மகனோ என் அய்யா விஜயனார் அரசுபேரரசோ...
முல்லை முருங்கை மலை
என் அய்யா நம்ம முப்பாட்டன் ஆண்டமலை...
பாட்டியடிச்சாளோ பாலுட்டும் கையாலே"
உறவின் மேன்மையையும் பரம்பரை வரலாற்றையும் குழந்தை பருவத்திலேயே புகுத்திய பண்பாடு தமிழ்வழி பண்பாடு;
"என காட்ட கலச்சு என் அய்யா கடி நாய ஏவிவிட்டோ
என் ஓடுமான் ஓட என் அய்யா ஒம்பதுமான் தொடரும்
என் பன்னி படுமோ என் அய்யா பலதுரையும் மான் படுமோ
என் சிங்கம் படுமோ என் அய்யா சின்ன மாமன் வேட்டையில
என் வேட்டைக்கா போறாரோ என் அய்யா வீர புலி உன்மாமன்"
"கடல கடலாக்கி நீ கருங்கடலா ராட்டாக்கி
இரவ பகலாக்கி ராமா நீ இராவணன கொன்னவனோ"
தமிழர்கள் தங்கள் வாழ்விட அமைப்பே வேட்டையும் விவேகமும் வீரமும் வாழ்வியல் நெறிமுறையோடு வகுத்துத்தந்த பாடங்கள் இவை. கலை பண்பாட்டு இலக்கியங்களை கதைவழியாக குழந்தைப் பருவத்திலேயே தாய்ப்பாலோடு தமிழ்ப் பாலையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர்.
தெம்மாங்கு பாடல்:
தென் + பாங்கு = தென்மாங்கு
தேன் + பாங்கு = தென்மாங்கு என தென்மாங்குபாடலுக்கு விளக்கம் அளித்துள்ளனர் தமிழறிஞர்கள்.
தெம்மாங்கு பாடலும் அதன் வடிவமைப்பும் அந்தந்த பகுதி மக்களின் மண்ணின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் மாறுபடும். இப்பாடல், பெரும்பாலும் ஒரே மெட்டைக்கொண்டு, மலைவாழ் மக்களும் கடல்வாழ் மக்களும் சமவெளிமக்களும் சூழலைப் பாடுபொருளாக கொண்டு பாடுகின்றனர், சமவெளி மக்களால் அதிகம் பாடம்படும் தெம்மாங்கு பாடல் நையாண்டி கலந்து நடவுப்பாடல் களையெடுப்பு பாடல் கதிரறுப்புபாடல் எனச் சிறந்த இசையமைப்பில் எல்லோரும் ஏற்று இரசிக்கும் படி அனைவரும் கவரும்படி அமைந்துள்ளது.
முளைப்பாரிப் பாடல்கள்:
நாட்டுப்புறப் பாடல்களின் பாரம்பரிய பாடலான முளைப்பாரி பாடல், தெய்வவழிப்பாட்டின் போது பாடப்பட்ட பாடலாக உள்ளது. முளைப்பு போடப்பட்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளைச் சுற்றி நின்று, பெண்கள் சுற்றிநின்று கை கோர்த்தும் ,கைதட்டியும் பாடப்படும் பாடல் ,அதில் அற்புத அறிவியலும் விவசாயத் தொழில் நுட்பத்தையும் இணைத்துக் கற்பித்து, தெய்வபக்தியோடு பாடல் அமைக்கப்பட்டிருக்கும். நம் மூதாதையர்கள் அந்த காலங்களிலேயே அடிப்படை அறிவியலை கற்றறிந்தினர், விவசாய நாடான நம்நாட்டில் விவசாயிகளின் பொருளாதாரம் அவர்கள் விதைக்கும் விதையைக்கொண்டே நிர்ணயிக்கப்படும்.
விவசாயிகளின் மூலப் பொருள் விதை விதைக்கெட்டால் சிதைந்து போகும் அவர்களின் வாழ்க்கை முறை, "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பது பழமொழி வைகாசி மாதத்திலும் ஆடிமாத தொடக்கத்திலும் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் எடுப்பது மரபு. அந்தநாட்களில் நம்மூதாதையர்கள் தாங்கள் சேமித்துவைத்த நெல் பயிறு வகைகள் போன்ற தானியங்களைப் பரிசோதிக்க இந்த முளைப்பாரி முறை பயன்படுத்தி இருக்கிறார்கள், முளைப்பாரியை வைத்தே எந்த விதைகளை நல்ல விதையெனத் தேர்வுசெய்ய இந்தமுறையைப் பயன்படுத்தி உள்ளனர், அத்தோடு இதுதெய்வத்தின் தேர்வு எனவும் நம்பினர். இப்பாடலில் விதைகளின் தேர்வுமுறை பாதுகாக்கும் முறை பராமரிப்பு நீர்ப்பாசனம் ஆகியவற்றை வரிசைப்படுத்தி இப்பாடலின் மூலம் கற்றுத்தந்துள்ளனர் விவசாயிகளின் வாழ்வை நெறிப்படுத்தப் பாடப்பட்ட பாடல் முளைப்பாரிப் பாடல்கள்.
"ஒண்ணாங்கட தொறந்து ஒருவகை பயரெடுத்து
தானானே....தானே
ரெண்டாங்கட தொறந்து மொத்தபயிர் அள்ளிவந்து
தானானே... தானே
மூணாங்கட தொறந்து தட்ட பயிர் அள்ளிவந்து
தானானே....தானே
ஒண்ணாந் திங்களிலே ஊறி உதுச்சிருக்கும்
தானானே.....தானோ
ரெண்டாந்திங்களிலை ரெண்டுத்தாளும் போட்டிருக்கும்"
இப்படி பயிரின் வளர்ச்சியை படிப்படியாய் சொல்லி அஞ்சாந் திங்களிலே மஞ்ச நெறம் பிரிஞ்சிருக்கும் ஆறாம் திங்களிலே பயிருட்ட மாயிருக்கும் எனத்தொடரும்....
காடு வெட்டி முள்பெறக்கி மேடுபள்ளம் செப்பனிட்டு
காரானை கட்டி உழுக கவுண்டர் மக்கள் திணை விதைக்க
போரானை கட்டி உழுக புகை குறவர் தினைவிதைக்க.....
பங்குனி மாதத்திலே பதினஞ்சாம் தேதியில
முளப்பாரி.
வள்ளிப் பாடல்கள்:
குறிஞ்சி நிலநாயகி முருகக்கடவுளின் காதல் மனைவி வள்ளியைப்பற்றிப் பாடப்படும் பாடல் வள்ளிப்பாட்டு . இப்பாடல் காவடிச் சிந்து மெட்டில் பாடப்பெறும் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. மலைகளில் வள்ளிக்கிழங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வள்ளிகண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள் ,அவளின் வேலைத் தினைப்புனம் காப்பது, அறுவடைக்குப்பின் தானியங்களை காப்பது, தேனும் தினைமாவும் பிசைந்த உருண்டை களை தயாரிப்பது, சகோதரர்களுக்கும் இறைவன் முருகனுக்கும் அளிப்பது ,முருகன் நீரின்றி விக்குவது இவற்றை பாடலாகப் புனையப்பட்டது வள்ளிப்பாடல். மேலும் முருகன் கிழவனார் வேடத்தில் வந்து வள்ளியை மணந்ததையும் பாடலாக புனையப்பட்டுள்ளது. பெரும்பாலும் அன்றைய மக்களின் பொழுதுபோக்காக இரவுநேரங்களில் நாடகவடிவில் பாடப்பெற்ற பாடல் வள்ளிப் பாடல்.
"தன்னே னனன்னானே னன்னே னானனானன்ன னானே னன்னே
ஏ வள்ளி வள்ளி வனந்
"தன்னே னனன்னானே னன்னே னானனானன்ன னானே னன்னே
ஏ வள்ளி வள்ளி வனந்தனிலே கிள்ளி முள்ளி கிழங்கெடுத்து
தன்னனன னானே னன்னே னானனன னானே னன்ன
ஏ கிழங்கெடுத்து குழிதனிலே மான்கிடந்து மருகுதம்மா
ஏ மான் தடமு மயில் தடமும் மத்த தடமும் இங்கே இல்ல......"
இப்படியாக வள்ளி வள்ளிக்கிழங்கு குழியில் கண்டெடுத்ததில் தொடங்கிப் படிப்படியாக வள்ளியின் வாழ்க்கை, பண்பாட்டுக் கலாச்சாரம், மலைநாடு இயற்கை வளமென நீண்டு கொண்டே போகும்.
கதைப்பாடல்கள்:
கதைகளைப் பாடல் வரியில் பாடுவது கதைப்பாடலாகும். இப்பாடல்கள் பெரும்பாலும் அந்தந்த வட்டார வழக்குகளில் அங்கே ஆளும் மன்னன் புகழ் கொடைச் சிறப்பு போன்ற உண்மைகளை, கதைவடிவில் கொடுக்கப்பட்டது கொடைப்பாடல், எளிய மொழியமைப்பைக் கொண்டது. மாற்றுமொழி பெயர்ப்பாகவும் கதைபாடல்கள் உண்டு
"கோடி வந்தனம் மைந்தர்கள் தந்திட கோலடி ஆட்டம் தானானா
அந்த குவலைய மதிப்புகள் பிறநவ பதநொடு இனிமலர் துதியது செய்வோமே கை நாடு கண்டிடும் கட்டபொம்மு துரைராஜன் சரி தன்னை
பாட அது நத்திய சுத்தம் அத்துடன் நத்தனை நித்திய துதியது செய்வோமே
ஆதினாலய கொத்துனாரு பல்லாகிலாடியிருந்த கட்டபொம்மு துரை"
இப்பாடல் தெலுங்கு மொழியிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது, இப்பாடல் முழுமையாக இல்லை கட்டபொம்மு கதையைச் சொல்லும் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.
ஒப்பாரி பாடல்:
இறந்த ஒருவருக்காக அவர்களின் உறவினர்களால் பாடப்படும் பாடல் ஒப்பாரிப்பாடல். ஒப்பு வைத்துபாடப்படும் பாடல் ஒப்பாரிப்பாடல், இறந்தவரின் வாழ்க்கை வரலாற்றை இப்பாடல் விவரிக்கிறது இறந்தவர்களின் ஆவி ஒப்பாரிகளால் சாந்தியடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் பாடப்படுகிறது. இறந்தவரின் உறவினை அடையாளப்படுத்தும் விதமாக ஒப்பாரி பாடல்கள் அமைந்துள்ளது. அது வாய்மொழியாக அடுத்ததலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஒப்பாரிபாடல் இறந்தவர்கள் வீட்டில் மட்டுமே பாடப்படுகிறது வேறிடங்களில் பாடுவது அபசகுனமாகக் கருதப்படுகிறது.
"என்ன பெத்த அம்மா.......
என்ன பெத்த அம்மா.......
நீங்க பெத்த பொண்ணுக்கு பல நாளும் துன்பமய்யா
என்ன பெத்த அம்மா....
நீங்க மெத்த கவலையய்யா மெத்த கவலையய்யா
என்ன பெத்த பொண்ணாளுக்கு நெடுநாளும் துன்பமய்யா
நெடுநாளும் துன்பமய்யா"
இன்று நாகரீகத்தின் வளர்ச்சி நாட்டுப்புறப்பாடல்கள் பெரும்பாலும் அழிவுநிலையை அடைந்துவிட்டது, நாகரீகம் வளர்ச்சியற்ற பண்டைய காலத்தில் பொழுதுபோக்கு நாட்டுப்புறப் பாடல்கள்தான் வெள்ளிமின்னலாக திரைப்படத்துறை வந்தபிறகு மெல்ல நலிவுற்ற நாட்டுப்புறப்பாடல்கள் இன்றைய அதிநவீன வளர்ச்சிக்கு இப்பாடல்கள் ஈடுசெய்யமுடியாவிட்டாலும் நவீன சாயம் பூசி திரைப்பட பாடல்களில் வெற்றியைத் தொட்டு மக்களின் மரபணுவில் உள்ள நம் கலை உணர்வை மங்கவிடாமல் வைத்துள்ளது என்பது மிகையாகாது, பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற கலையை வெறும் படிப்புக்காக இல்லாமல் உணர்வோடு பேணிக்காக்க வேண்டும்.
காவிய சேகரன்
திருச்சி.