—— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அண்மையில் வெளியான நூல், “தொல்குடி-வேளிர்-அரசியல்” என்பது. எழுதியவர் தொல்லியல் அறிஞர் முனைவர் அர.பூங்குன்றன். நடுகற்களைப் பற்றிய விரிவானதொரு ஆய்வு நூல். அந்நூலில் ”தொறுப்பட்டி” என்னும் தலைப்பில் உள்ள செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது, அதை ஒட்டிச் சில தரவுகள் எனக்குக் கிடைத்தன. அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
நடுகல் வழிபாடு-ஓர் அறிமுகம்:
கால்நடை வளர்ப்புச் சமுதாயத்தில், மேய்ச்சல் நிலம் வேண்டிப் புலம் பெயரவேண்டியேற்பட்டது. மேய்ச்சல் தேடிக் குடிபெயரும் தன்மை பூசலை உருவாக்கியது. புதிய இடத்தில் ஏற்கெனவே உள்ள மேய்ப்பவர்களுக்கும் குடி பெயர்ந்தவர்களுக்கும் இடையில் மேய்ச்சல் நிலம் தொடர்பாகப் பூசல் உருவாகியது. சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை மாடே கேடில் விழுச்செல்வமாக விளங்கியது. எனவே, ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் நிகழ்ந்தன. மேய்ச்சல் நிலத்திற்காகவும், நிரைக்காகவும் நடைபெற்ற பூசல், மறவர் குலம் உருவாவதில் கொண்டு சென்றது. இவ்வகைப் பூசல் தொறுப்பூசல் என்றழைக்கப்பட்டது. மாடுபிடிச் சண்டையில் தம் புகழ் நிறுத்தி மாய்ந்த மறவர்களுக்கு நடுகல் எடுத்து வழிபட்டார்கள். நடுகற்களில், தொடக்கத்தில் வீரனின் உருவம் ஓவியமாக வரையப்படுதலும், பின்னர் சிற்பங்களாக வடிக்கப்படுதலும் நிகழ்ந்தன.
எழுத்து - ஓவியம்:
கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் எழுத்துப்பயன்பாடு குறைவு; எழுதிவைக்க வேண்டிய அவசியம் இல்லாத வாழ்க்கை. சங்க காலத்து வணிகம் வீழ்ச்சியடைந்த பின், வணிகர்கள், கால்நடை வணிகர்களாக மாறியிருக்கவேண்டும். அவ்வாறு மாறியபோது அவர்கள் நடுகல் பகுதியில் தங்கினர். இவ்வணிகர்களே பெரும்பாலும் எழுத்தை அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து எழுத்துடை நடுகற்கள் மிகுதியும் கிடைக்கின்றன. நடுகல் வழிபாடு பழங்குடியினரின் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது. தன் இனக்குழுவில் வாழ்ந்த மனிதன் இறந்த பின்னும் தன்னுடனே வாழ்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடுகல் வழிபாடு தொடர்ந்தது.
தொறு (சங்க கால ஆநிரை) கால்நடைக் கூட்டத்தைக் குறிக்கும் சொல் தொறு. தொழு என்றும் வழங்கும்.
தொறுப்பட்டி (நெய்த்தோர் பட்டி) நடுகற்களில், மாண்ட வீரனுக்கு அளிக்கப்பட்ட நிலம் பற்றிய செய்தி கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டிலிருந்து சுட்டப்படுகின்றது. இது, அரசு உருவாக்கம் நிலைபெற்ற காலத்துடன் தொடர்புடையது என்பதற்குச் சான்றாகும். மாண்ட வீரனுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்கு நெய்த்தோர்பட்டி என்று பெயர். நெய்த்தோர் என்பதற்கு இரத்தம் என்று பொருள் கொண்டு இரத்தம் சிந்துவதற்காகத் தரப்படும் நிலம் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இத் தானத்தினைக் கல்நாடு என்ற சொல்லாலும் கூறுகின்றனர்.
கல்நாடு:
வெ.கேசவராஜ், ”தென்னிந்திய வீரக்கற்கள் – ஓர் ஆய்வு” என்னும் தலைப்பிலான தம் பி.எச்.டி. ஆய்வேட்டில், கல்நாடு என்பதற்கு எல்லை வகுத்துக் கல்நாட்டிக் கொடுத்த நிலத்தானம் என்று பொருள் கூறுகிறார். ஆனால், நடுகல்லிற்குக் கொடுக்கப்பட்ட வேளாண் நிலம் அல்லது நிலம் என்ற பொருளில் அச்சொல் ஆளப்பட்டிருக்கவேண்டும்.
மேலே சொல்லப்பட்ட செய்திகள் யாவும் பூங்குன்றனார் அவர்களின் நூலிலிருந்து பெரும்பாலும் அவர் எழுத்துகளிலேயே தரப்பட்டவை. இனி வருபவை, அவருடைய ஆய்வுக்கருத்துகளுடன் ஒட்டிய – எனக்குக் கிடைத்த - சில தரவுகள்.
என் தரவுகள்:
நெய்த்தோர் - நெய்த்தோர் என்பதற்கு இரத்தம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இக்கருத்து மிகச் சரியே. கன்னட மொழியில் இரத்தம் என்பதற்கு “நெத்துரு” என்ற சொல்லே வழங்குகிறது. தெலுங்கு மொழியிலும் “நெத்துரு” என்னும் சொல்தான். கொங்கு நாட்டில் “ரத்தம்” என்பது “நத்தம்” என வழங்குவது கருதத்தக்கது. “நத்தம்”, “நெத்துரு” இரண்டும் நெருங்கிய தொடர்புள்ளன என்பது புலனாகிறது. கருநாடகத்தில், நடுகல்லுக்கு வீரகல்லு என்ற பெயர் வழங்குகிறது. கருநாடகக் கல்வெட்டுகளில் வீரகல்லு (வீரக்கல்) கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன. அவற்றில், இறந்துபட்ட வீரனின் குடும்பத்தார்க்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்திகள் காணப்படுகின்றன. ”கொடை” யைக் குறிக்கும் கன்னடச்சொல் “கொடகெ” என்றும் “கொடுகெ” என்றும் பயில்கின்றன. இரத்தத்தைக் குறிக்கும் “நெத்துரு”, “நெத்ர” ஆகிய சொற்களுடன் சேர்ந்து “நெத்துரு கொடகெ”, “நெத்ர கொடகெ” என வருகின்றன.
எடுத்துக்காட்டு-1:
மைசூர் மாவட்டம், ஹிரியபட்டண(ம்) வட்டம், ஜோகனஹள்ளி என்னும் ஊரில் உள்ள நடுகல்(வீரகல்லு) கல்வெட்டு கீழ்வருமாறு அமைகிறது:
1 பஹுதான்ய சம்வத்சரத மார்க
2 சிர .... மருளிஹரதி
3 ய நாகப்பகள மக்களு பைச்சண்ண
4 னூ ஜோகனஹள்ளிய இசுவண்ண
5 ஹுலிய இறிதனாகி நெத்ரகொ
6 டகெய கொடகெயனூ ஆரொ
7 பரு அளுசிதவரூ சத்த
8 நாயி திந்தவரு ஸ்ரீ
கல்வெட்டின் தமிழ் வடிவம் கீழே:
1 வெகுதான்ய வருடம் மார்கழி
2 மாதம் மருளிஹரதி ஊரைச்சேர்ந்த
3 நாகப்பனவரின் மகன் பைச்சண்ணன்
4 ஜோகனஹள்ளி ஊரைச்சேர்ந்த இசுவண்ணன்
5 புலியைக் கொன்றதற்கு (கொன்று இறந்துபட்டமைக்கு) குருதிக்
6 கொடை. இக்கொடையை யாரொருவர்
7 அழித்தவர் (கேடு செய்தார்) இறந்துபோன
8 நாயின் புலவை உண்டவர்க்கு ஒப்பாவார். ஸ்ரீ
கட்டுரை ஆசிரியர் குறிப்பு:
”ப” எழுத்தை முதலாகக் கொண்ட தமிழ்ச் சொற்கள் பல, கன்னடத்தில் ”ஹ” ஒலிப்பாக மாறுதல் இயல்பு. எடுத்துக்காட்டாக:
பால்=ஹாலு
பல்=ஹல்லு
பாழாயிற்று=ஹாளாயித்து
இங்கே, புலி, ஹுலி ஆயிற்று. கொடை என்னும் தமிழ்ச் சொல் கொடகெ என்பதும்,
அழித்தவர் என்னும் தமிழ்ச் சொல் அளுசிதவர் என்பதும், கன்னட மொழி தமிழ் வேர்களைக் கொண்டது என்பதைப் புலப்படுத்துகின்றன. (தின்றவர்=திந்தவர் என்பது இவ்வகையானதே) தமிழ்க் கல்வெட்டுகளில் பயிலும் இன்னொரு சொல் “எறிந்து” என்பதாகும். அது, ”கொன்று” என்னும் பொருளையுடையது. அதுவே, கன்னடத்தில் “இறிது” என்று திரிந்து வழங்கியிருக்கக் கூடும். கல்வெட்டின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு.
எடுத்துக்காட்டு-2:
மைசூர் மாவட்டம், யளந்தூர் வட்டம், யளந்தூரில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் ஒரு பலகைக் கல்லில் காணப்படும் கல்வெட்டு. முதல் எடுத்துக்காட்டு ஒரு கன்னடக் கல்வெட்டாக அமைய, இந்த எடுத்துக்காட்டு ஒரு தமிழ்க்கல்வெட்டாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின் காலம் போசளர் (ஹொய்சளர்) காலம். கி.பி. 1266. அரசன், மூன்றாம் நரசிம்மன். கருநாடகத்தின் கங்கபாடிப் பகுதி, முதலாம் இராசராசன் காலம் தொடங்கிச் சோழர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, தமிழரும், தமிழ் மொழியும் இப்பகுதியில் குடியேற்றம் பெற்றனர். சோழருக்குப்பின் போசளர் ஆட்சிக் காலத்திலும் தமிழின் செல்வாக்கு உயர்ந்தே இருந்தது. போசளரின் கல்வெட்டுகளும் தமிழில் பொறிக்கப்பட்டன. அத்தகைய கல்வெட்டுகளுள் இந்தக் கல்வெட்டும் அமைகிறது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு :
கல்வெட்டின் முன் பக்கம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ வீர ந
2 ரசிம்ஹதேவன் பிருதிவீரா
3 ஜ்யம் பண்ணி அருளாநிற்க
4 இளமருதூரான ராஜகேசரி ந
5 ல்லூர் நாலுகூற்றில் சமஸ்த கா
6 முண்ட
7 களும்
8 ஸ்தானிகரும்
9 இளமயரும்
10 வியாபாரிக
11 ளும் அய
12 ணிக்கு
13 மெங்க
14 ளூர் நாவித உடயச்சன் மகன்
15 கேத்தைக்கு பிரமாணம் பண்
16 ணிக் குடுத்தபடி க்ஷய சம்
கல்வெட்டின் பின் பக்கம் :
17 வத்சரத்து சித்திரை
18 மாசத்து இந்த நாவிதன் புலி
19 யெறிந்து வீரியஞ்செய்தது ப
20 க்கு இவனுக்கு நேத்தல் குடங்
21 கை கரிகூடபள்ளத்து குழி
22 60 இந்த குழி அறுபது இவ
23 ன் மக்களுள்ளதனை செலு
24 த்தி இவன் வம்சமுள்ளதன்
25 நாளுஞ்செல்லக்கடவதாக
26 தாராபூர்வம் பண்ணிக்கு
27 (டு)த்தோம் ஆசந்திராஸ்தாஹியாக
28 த்தை அழிம்பினார்கள் கங்
29 கைக் கரையில் குரால்பசு(வை)
30 கொன்ற பாவத்தில் (போ)
இக்கல்வெட்டில், இருபதாம் வரியில் “நேத்தல் குடங்கை” என்னும் தொடருக்கு, நூலின் பதிப்பாசிரியர் “நெத்தரு கொடகெ” என்றே பொருள் கூறுகிறார். கேத்தை என்னும் நாவிதன் புலியெறிந்து (புலியைக்கொன்று) வீரச்செயல் புரிந்ததற்காக நெய்த்தோர் பட்டியாக (நேத்தல் குடங்கை) அறுபது குழி நிலம் கொடையளிக்கப்பட்டது. கொடையளித்தவர்கள், சமஸ்த காமுண்டர்கள், ஸ்தானிகர், இளமயர், வியாபாரிகள் ஆகியோர். சமஸ்த, ஸ்தானிக ஆகியவை ஊரின் நிர்வாக அமைப்பைக் குறிக்கின்றன எனலாம். காமுண்டர்கள் என்பவர்கள் ஊர்த்தலைவர்கள். இளமையர் என்பதற்குக் காவலர், வீரர் என்று பொருள். மிளை என்னும் காவற்காட்டைக் காத்து நின்றவர் எனலாம். (மிளை, இளை எனத்திரிந்திருக்கலாம்.) கால்நடைகளைக் காத்த காவலரான இளையரும் கொடையளிக்கும் பிரமாணத்தில் பங்கு கொள்வதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. எனவே, ஊர்க்காமுண்டரும், இளையரும், வியாபாரிகளும், ஸ்தானிகரும் கொடை ஏற்பாடு செய்கின்றனர். தமிழ்க் கல்வெட்டுகளில் பயிலும் இளையர் என்னும் வழக்குச் சொல் கன்னடக் கல்வெட்டிலும் பயில்கின்றது. இது, தமிழகத்தின் கால்நடைச் சமுதாயத்தின் கூறுகள் கருநாடகப் பகுதியிலும் நிலைபெற்றிருந்தது என்பதை விளக்குகிறது.
தொறு - எடுத்துக்காட்டு-1:
அடுத்து, தொறு என்னும் வழக்கும் கருநாடக் கல்வெட்டுகளில் பயில்வதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, மைசூர் மாவட்டம், பிரியபட்டணம் வட்டம், கூரகல்லு என்னும் ஊரிலிருக்கும் வீரக்கல் கல்வெட்டு, தொறுப்பூசலைப்பற்றியது. தொறு என்பது கால்நடைக்கூட்டம் என்று முன்பே பார்த்தோம். கன்னடக்கல்வெட்டுகளில் “தொறு” என்பது “துறு” என்று சற்றே திரிந்து காணப்படுகிறது. இக்கல்வெட்டு, கங்க அரசன் பெர்மானடியின் காலத்தைச் சேர்ந்தது. (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு). கொங்கல் நாடு-8000 என்னும் நாட்டுப்பிரிவை ஆளும் தலைவனான இறெயப்பன், நிலக்கொடை அளிக்கிறான். கூரகல்லு ஊரின் காவுண்டன், தொறுப்பூசலில் சண்டையிட்டு இறந்துபடுகிறான். அவனுக்கு மூன்று கண்டுகம் நிலம் “கல்நாடாகக்” கொடுக்கப்படுகிறது. ஆகோள் என்று இலக்கியங்களில் பயில்கின்ற ஆநிரை கவர்தல், நடுகற்களில் “தொறு கொள்ளுதல்” என வழங்கும். தமிழகக் கல்வெட்டுகளில் காணப்படும் “தொறு கொள்தல்” அல்லது “தொறு கொளல்” என்னும் தொடர், பழங்கன்னடத்திலும் காணப்படும் சொற்றொடராகும். மேற்படி கல்வெட்டில் “துறு கொளல்” என்று கன்னடத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆளுத்திரெ, சத்தர் ஆகிய சொற்கள் தமிழ் வேர்களைக் கொண்டுள்ளதை நோக்குக. மண் என்னும் சொல் மண்ணு என்று தமிழ்ச் சொல்லின் வடிவம் மாறாது பயில்வது குறிப்பிடத்தக்கது. காதி என்னும் கன்னடச் சொல் சண்டையிடுதலைக் குறிக்கும்.
கல்வெட்டுப் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ பெர்ம்ம
2 னடிகள் பிரிதுவிராஜ்யம்
3 கெய்யுத்திரெ கொங்கல் நாடெ
4 ண்டாசிரமனு இறெய
5 ப்பனாளுத்திரெ குர்கல்ல
6 பூதுகனரசி பரமப்பெ
7 யாளுத்திரெ குர்கல்ல காவுண்ட
8 தம்முத்திர்பொர் துறுகொளல் காதி
9 சத்தர் இதக்கெ எறயப்பரசர்
10 கொட்ட மண்ணு மூகண்டுக கால்நாடு இத
11 க்கெ சக்கி முதிரெ பூவய்ய பெள்ளென கர
12 குடி பாரதர் எறெயம்ம கெதறெயரய்ய
13 ப
கல்வெட்டின் தமிழ் வடிவம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ பெருமானடிகள்
2 ஆட்சி செய்கையில்
3 கொங்கல் நாடு
4 எண்ணாயிரத்தை இறயப்பன்
5 ஆளுகையில் குர்கல்லைப்
6 பூதுகனின் அரசி பரமப்பை
7 ஆளும்போது குர்கல்லைச் சேர்ந்த காவுண்டன்
8 ...... தொறு கொளல் போரில் சண்டையிட்டு
9 செத்தான் இதற்காக எறயப்பரசர்
10 கொடுத்த மண் (நிலம்) மூன்று கண்டுகம் இது கல்நாடாக
11 ...........
12............
13..........
தொறு - எடுத்துக்காட்டு-2:
மைசூர் மாவட்டம், மல்லெகவுடன கொப்பல் என்னும் ஊரில் உள்ள ஒரு நடுகல் கல்வெட்டும் தொறுப்பூசல் பற்றியதே. கி.பி. 1036-ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கன்னடக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தது. ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் இக்கல்வெட்டில் செய்தியாக வருகின்றன. சங்காள்வா(ன்) என்பவன் தன் தம்பியோடு சேர்ந்து ஆநிரை கவர்கிறான். பாகுளி சிரியண்ண(ன்) என்னும் வீரன் ஆநிரை மீட்கும் முயற்சியில் சங்காள்வானுடன் சண்டையிட்டு இறந்துபடுகிறான்.
கல்வெட்டுப்பாடம் கீழ்வருமாறு :
1 ஸ்ரீ ராஜேந்த்ர சோழதேவர்க்கெ யாண்டு இப்பத்த மூ
2 ற மதறொ
3 ளெ த்து சம்வ
4 த்ஸரத ஆஷா
5 ட மாஸத
6 அமாவாச்யெ யந்து திலுகரமாரி சங்காள்வ கிறுசோதர கூடி
7 துறுவ கொ
8 ண்டு போகெ ஒ
9 ளி நாகய்ய
10 ர மக பாகு
11 ளிசிரியண்ண
12 சங்காள்வன
13 காதி துறுவ மகுழ்ச்சி பெண்டிர பெறகிக்கி காதி சத்த அவன
14 தம்ம
15 ஆ..ண்ண பரோக்ஷவினெய கெய்து
கல்வெட்டின் தமிழ் வடிவம்:
1 ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு இருபத்துமூன்று
2 ......
3 தாது வருஷம் ஆஷாட(ஆடி)
4 மாதம்
6 அமாவாசையன்று திலுகர மாரி (என்னும்) சங்காள்வானும் அவனது சிறிய சகோதரனும் கூடி
7 துறுவைக்
8 கொண்டுபோகும்போது (கவர்ந்து போகும்போது?)
9 ஒளிநாகய்யனின்
10 மகன் பாகுளி
11 சிறியண்ணன்
12 சங்காள்வானுடன்
13 பொருது துறுவை மீட்டு, பெண்டிரைக் காத்து
சண்டையில் செத்தான் அவனுடைய
14 தம்பி
15 .... இறந்தவர் நினைவாக......
சோழப் பேரரசன் காலத்துக் கல்வெட்டாகையால், தமிழ்க் கல்வெட்டு மரபுப்படி அரசனின் ஆட்சியாண்டு சுட்டப்பெறுகிறது. ஆனால், கன்னடச் சொல்லுக்கு ஈடாகத் தமிழ்ச் சொல்லான “யாண்டு” என்பது கையாளப்படுவதைக் காண்க. ஆநிரை, துறு என இக்கல்வெட்டில் பயில்கிறது. ஆநிரையைக் கவர்ந்து போகும் நிகழ்வு, “துறுவ கொண்டு போகே” என்னும் தொடரில் தமிழின் தாக்கத்துடன் கூறப்படுகிறது. சிறியண்ணன் ஆநிரை(தொறு) மீட்கச் சண்டையிடுதல் ”காதி” என்ற தொடரால் சுட்டப்பெறுகிறது. தொறுவை மீட்டல் என்பது “துறுவ மகுழ்ச்சி” என்னும் தொடரால் அறியப்படுகிறது. தொறு மீட்டல் நிகழ்ச்சியில், பெண்களைப் பாதுகாத்தலும் நிகழ்ந்தது இதை, ”பெண்டிர பெறகிக்கி காதி” என்னும் கல்வெட்டு வரி விளக்குகிறது. ”பரோக்ஷவினய(ம்) என்னும் வடசொல், இறந்தவர்க்கு மரியாதை செலுத்தும் முகத்தான் செய்கின்ற செயலைக் குறிக்கும். அதாவது, இறந்தவர் நினைவாகச் செய்வது. கல்வெட்டின் காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டாதலால், ”மகுழ்ச்சி” என்பது தமிழின் தாக்கத்தால் விளைந்த பழங்கன்னடச் சொல்லாக இருக்கக் கூடும். ஆனால், இச்சொல்லின் தமிழ் வேர் எது எனப் புலப்படவில்லை.
கல்நாடு:
எல்லை வகுத்துக் கல்நாட்டிக் கொடுத்ததால் கல்நாடு என்னும் வழக்கு ஏற்பட்டது என்னும் கருத்தைக்காட்டிலும், நடுகல்லிற்குக் கொடுக்கப்பட்ட வேளாண் நிலம் அல்லது நிலம் என்ற பொருளில் அச்சொல் ஆளப்பட்டிருக்கவேண்டும் என்னும் பூங்குன்றன் அவர்களின் கருத்தே கருநாடகக் கல்வெட்டில் காணப்படுகிறது.
கல்நாடு - எடுத்துக்காட்டு-1:
மைசூர் மாவட்டம், திருமுக்கூடல் வட்டம் தொட்டஹுண்டி என்னும் ஊர் வீரக்கல் கல்வெட்டில், கங்க அரசனான நீதிமார்க்கப் பெர்மானடி இறந்தபோது, அவனது பணியாள் ஒருவன் (ஆகய்யன் என்பது அவன் பெயர்)), அரசன் மேல் உள்ள பற்றால் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். அவனுக்கு நினைவுக்கல் எடுக்கப்பட்டது. கல்நாடாக ஓர் ஊர் கொடுக்கப்பட்டது என்னும் செய்தி கூறப்படுகிறது. கொடையளித்தவன் , இறந்த அரசனின் மகன் சத்தியவாக்கியப் பெர்மானடி. கல்வெட்டின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனக் குறிக்கப்படுகிறது.
கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ நீதிமார்க்க கொங்குணிவர்ம தர்ம மஹாரா
2 ஜாதிராஜ கோவளாலபுரவரேஸ்வர நந்த
3 கிரி நாத ஸ்ரீமத் பெர்மானடிகள் ஸ்வர்கமேறிதன்
4 ஏறிதொடெ பெர்மானடிகள மனெமகத்தின் ஆக
5 ய்ய நீதிமார்க்கப் பெர்மானடிகெ கீழ்குண்ட்டெ ஆத
6 பெர்மானடிகள் சுபுத்ர சதயவாக்ய பெம்மானடிகள் ..
7 பாடி ய
8 கல்நாடு
9 கொட்ட து
10 ப்பஹள்ளி
குறிப்பு: ஸ்வர்கம் ஏறித – சொர்க்கத்தை அடைந்தான்.
பெர்மானடிகெ – பெர்மானடிகளுக்கு
கீழ் குண்ட்டெ ஆத - கீழ் குண்ட்டெ ஆனான்.
கீழ் குண்ட்டெ என்பது, தமிழகக் நடுகற்களில் காணப்படும் நவகண்டச் செயலை ஒத்தது. அர்சனுக்காகத் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ளுதல். கல்நாடாகக் கொடையளிக்கப்பட்ட ஊர் துப்பஹள்ளி.
கல்நாடு - எடுத்துக்காட்டு-2:
”தொறு” வைக்குறித்த மேற்படி எடுத்துக்காட்டு-1, கல்நாடு என்னும் கருத்துக்கும்
எடுத்துக்காட்டாக அமைவதைக் காண்க. தொறு கொளல் பூசலில் இறந்துபட்ட காவுண்டனுக்கு மூன்று கண்டுகம் அளவுள்ள நிலம் (மண்ணு) கல்நாடாகக் கொடுக்கப்படுகிறது.
முடிவுரை:
நெய்த்தோர் பட்டி என்பது தொறுப்பூசலில் இரத்தம் என்னும் குருதி சிந்தி இறந்துபட்ட வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கவந்தது என்பதும், இதே கருதுகோள்
கருநாடகத்திலும் வழக்கில் இருந்தது என்பதும், இவ்வாறே, கல்நாடு என்பது தொறுப்பூசலில் இறந்த வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் என்பதும், தொறு என்னும் தமிழ்ச் சொல், கால்நடைச் சமுதாயப் பண்பாட்டின் கூறுகளுள் ஒன்று என்பதும், இந்தப் பண்பாடும், இந்தச் சொல்வழக்கும் கருநாடகத்திலும் இடைக்காலத்தில் இருந்துள்ளன என்பதும் பெறப்படுகின்றன.
___________________________________________________________
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி : 9444939156.
No comments:
Post a Comment