Tuesday, April 17, 2018

தொடர்ந்திடும் வளர்ந்திடும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப்பணிகள்

தலையங்கம்:


வணக்கம். 

சித்திரையை வரவேற்கும் இதழாக இந்தக் காலாண்டிதழ் மலர்கின்றது.

தமிழர்களின் வேர் நிலமான தமிழகத்தில் தொடரும் பல சமூக இன்னல்களை அறிகின்றோம். ஒன்றை அடுத்து மற்றொன்றாகச் சவால்விடும் இப்பிரச்சனைகளை எதிர்த்துப் பொதுமக்களும் அமைப்புக்களும் செய்யும் போராட்டங்களும் அவற்றில் எழும் எதிர் குரல்களும் தொடர்கின்றன.

இந்தியாவின் ஏனைய பிற பகுதிகளில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படும் கொடூரம் நிகழ்கின்றது. மதம், சாதி, இன வேறுபாட்டின் வக்கிரத் தன்மையின் வெளிப்பாடாக இத்தகைய கொடூரச் செயல்கள் எளிய மக்களைத் தாக்கிச் சீரழிக்கின்றன. உலகளாவிய அளவில் வாழும் நம் தமிழ் உறவுகளுக்கு இது ஆழமான மன வலியையே ஏற்படுத்துகின்றது. அன்பு, அறம், நேர்மை, உண்மை, நீதி ... இவை இழந்த சமூகமாக மாறிவிட்டோமா? வேர் அழுகிய மரமாக  மாறிவிட்டதா நம் தாய்நிலம்? இந்தக் கேள்விகளுக்கிடையே தொடர்கின்றது நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று மற்றும் தமிழ் மொழி தொடர்பான செயல்பாடுகள்.

2018ம் ஆண்டின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில் தொடர்ச்சியாக மலேசியாவிலும், தமிழகத்திலும், ஒடிசாவிலும் பல செயல்பாடுகள் நிகழ்ந்தன. அவை குறிப்பாக:
தமிழகக் கல்லூரிகளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு தொடர்பான சொற்பொழிவு, சந்திப்பு நிகழ்வுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட களப்பணி ஆய்வுகள், மாநாடுகள் கருத்தரங்கங்கள், குமாரபாளையத்தில் நிகழ்ந்த முதலாம் உலக மரபு மாநாடு;
ஒடிசாவில், கலிங்கம், சமணம், பௌத்தம், சைவம் ஆகிய மதங்கள் பற்றியும், தொல் பழங்குடி இன மக்கள் பற்றியதுமான ஆய்வுகள்; புவனேஷ்வர் தமிழ்ச்சங்கத்தில் ஒன்று கூடும் நிகழ்ச்சி; சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான தகவல் சேகரிப்புக்கள்;
மலேசியாவின் செர்டாங் வட்ட தமிழ் இலக்கிய நிகழ்வு, கிள்ளான் நகரத் தமிழ் இலக்கிய நிகழ்வு, உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்வு.
குறிப்பிடத்தக்க வகையில் இவ்வாண்டு தொடக்கம் சீரிய முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டன.  திருச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை உருவாக்கப்பட்டது.  தமிழகத்தின் பிஷப் ஹீபர் கல்லூரி (திருச்சி), செந்தமிழ் கல்லூரி (மதுரை), அய்யநாடார் கல்லூரி (சிவகாசி) ஆகிய மூன்று கல்வி-ஆய்வு அமைப்புக்கள் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. தமிழ் வரலாற்று ஆய்வுப் பணிகள் செம்மையாக நடைபெறும் நோக்கத்தை முன் வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தமிழர், தமிழகம், தமிழ் மொழி, மற்றும் வரலாறு தொடர்பான முயற்சிகள் சீரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய சூழல் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை உடனடியாக செய்யப்பட வேண்டியனவாக நாம் கருதும் பரிந்துரைகளை முன்வைத்திருந்தோம். இந்தப் பரிந்துரைகள் அடங்கிய கோப்பினை  தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி அவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை முன்வைத்து அத்தேவைகளைத் தெளிவுபடுத்தி, கலந்துரையாடி, அவற்றைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்.

இந்த ஆண்டு உலகெலாம் பரந்து வாழும் தமிழ் மகளிருக்கான மேம்பாட்டினை மையமாக வைத்துத் தொடங்கப்பட்ட ஐயை அமைப்பு என்றதொரு அமைப்பின் முதலாம் உலக மகளிர் மாநாடு மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின் செயல்பாடுகளை வாழ்த்தியதோடு இம்மாநாட்டின் சில செயல்பாடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை உடன் இருந்து செயல்படுத்தியது என்பதில் பெருமை கொள்கின்றோம்.

நம் ஆய்வுத் தளம் பெரிது. நம் நடவடிக்கைகள் மிக விரிவாக வளர்ந்து வருகின்றன. உலக நாடுகளில் எங்கெங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் தமிழர் வரலாற்றுத் தடங்கள் உள்ளன. காலப்போக்கில் அவை சுவடுகள் இழந்து மறைந்து விடும் அபாயம் உள்ளதை நாம் பார்க்கத் தவறிவிடக்கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழர் வாழும் நிலங்களிலெல்லாம் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளைகளை அமைக்கும் முயற்சியை நாம் சீரிய வகையில் இவ்வாண்டு தொடக்கம் செயல்படுத்த உள்ளோம்.

தமிழர் வரலாறு குறுகிய நிலப்பரப்பில், குறுகிய ஆய்வுப் புலத்தில் மட்டும் நிகழ்வதால் பயனேதுமில்லை. உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர் தொன்மையை அவற்றின் சுவடுகள் மறையும் முன்னே தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு பதிந்து  பாதுகாப்போம். தமிழர் பண்பாட்டின் பெருமையைத் தரமான, திடமான ஆய்வுகளின் வழி உலகறியச் செய்வோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி





No comments:

Post a Comment