Monday, October 9, 2017

சாயர்புரத்தில் வாழும் நெசவுக்கலை


நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது.

சாயர்புரத்தில் நெசவுத்தொழில் பற்றிய ஒரு பதிவு செய்வதற்குத் தூத்துக்குடி சென்றிருந்த போது புதிய அனுபவங்கள் எனக்குக் கிட்டின.

சாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆண்களும் பெண்களுமாகப் பாகுபாடின்றி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ, கைலியோ, துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன.

சாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில்  இன்றும் நெசவுத் தறிகள் இருக்கின்றன.

 கிராமத்திற்குள் நுழையும் முன் எங்கு பார்த்தாலும் பளிச்சென்ற செம்மண் திடல்கள். பின்னர் பசுமையான மரங்கள். கிராமத்திற்குள் நுழைந்ததும் சின்ன சின்ன வீடுகள். தூய்மையான தெருக்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன தேவாலயங்கள். வித்தியாசமான காட்சியாக இது எனக்குத் தோன்றியது.

நான் தங்குவதற்காக அந்த கிராமத்தில் முக்கியமானவர் பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்களின் இல்லத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பதிவுகள் முடித்து அங்கு சென்று சேர்ந்தவுடன் அப்பெரியவருடனும் அவரது மனைவியுடனும் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்கள் வீட்டின் மாடிப்பகுதியை முழுமையாக நூலகமாக மாற்றியுள்ளனர். கணினிகளை வைத்து கிராமத்துக் குழந்தைகள் வந்து பார்த்து படித்துச் செல்ல இலவசமாக அனுமதிக்கின்றனர். அன்பு நிறைந்த தம்பதியர்.

மறு நாள் காலையில் அவரது தமிழ் ஆய்வுகள் பற்றியும் அக்கிராமத்துப் பிரச்சனைகள் பற்றியும் பல விசயங்கள் பேசினோம். மேலும் பல நண்பர்களும் அங்கு வந்து கூடினர். நெசவுத்தொழிலை வளர்ப்பதற்காகவும் கைத்தறி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் முயற்சிகள் தேவைப்படுகின்றன என இவர்கள் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர்.

பெரியவர் திரு.ஆ.ந வாய்மை அவர்கள் நெசவுத்தொழிலை அறிமுகம் செய்யும் ஒரு கூடம் போன்ற ஒரு கட்டிடம் ஒன்றை தன் சொந்தச் செலவில் கட்டியுள்ளார். அதில் பயிற்சி வகுப்புக்கள், தொழில் முனைவர்களுக்கான ஆலோசனைகள் போன்றவற்றை நடத்த திட்டம் வைத்துள்ளார்.

சாயர்புரத்தில் சாலைகளில் நான் சந்தித்த பெண்கள் என்னிடம் அன்புடன் பேசினர். நான் சென்ற நாள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதல் நாள் என்பதால் அன்று மாலை அங்கிருந்த அனைத்து தேவாலயங்களிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு பாடல்கள், ஜெபங்கள் சொற்பொழிவுகள் என ஒலிப்பெருக்கியில் கேட்டுக் கொண்டே இருந்தது.

இந்தப் பகுதியில் பாதிரியார் ஜி.யூ போப் அவர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. அதில் கல்வி கற்று வாழ்வில் சிறந்த முன்னேற்றம் கண்டவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எனத் தயங்காமல் கூறலாம்.

சாயர்புரத்தின் நெசவுத்தொழில் மட்டுமல்ல - தமிழத்தின் பல இடங்களில் நடைபெறுகின்ற நெசவுத்தொழில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதையும் இத்தொழிலை விட்டு மக்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்வதையும் காண்கின்றோம்.

இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகளைப் பார்த்த போது அவை மிக அழகாக இருப்பதை என்னால் மறுக்கமுடியவில்லை. ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் கைத்தறியை விரும்புவதில்லை என்பதைக் கேட்கும் போது வருத்தம் மேலிடுகின்றது. இத்தொழிலை வளர்க்க வேண்டுமென்றால் நாம் கைத்தறி ஆடைகளை வாங்குவதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரை கைத்தறிகளைப் பற்றி யோசிக்காதவர்கள் இனிமேல் அவற்றை வாங்கி அணிய முயற்சிக்கலாமே!

முனைவர்.க.சுபாஷிணி

No comments:

Post a Comment