குருகோவிந்தரும் இராமலிங்கரும்
~ இராம. மலர்விழி மங்கையர்க்கரசி ~
தமிழ்த்துறைத் தலைவர்
தியாகராசர் கல்லூரி
~ இராம. மலர்விழி மங்கையர்க்கரசி ~
தமிழ்த்துறைத் தலைவர்
தியாகராசர் கல்லூரி
அக்டோபர் மாதம் அகிம்சை மாதம் என்றாற்போல அடுத்தடுத்து அருளாளர்களின் அவதாரத் தினங்களால் நிறைந்திருக்கிறது. அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி, அக்டோபர் ஐந்து இராமலிங்கர் ஜெயந்தி, அக்டோபர் 7 (1708 அக்டோபர் 7) குருகோவிந்த் குரு பூஜை (மறைவு) என இரண்டு, மூன்று நாட்கள் இடைவெளியில் அருளாளர்கள் அவதரித்துள்ளனர். காந்தியடிகளை அருளாளர் என அழைக்கலாமா எனில் சமய ஆன்மிக அன்பர்களை மட்டுந்தான் அவ்வாறு அழைத்தல் மரபு எனினும் அகிம்சையால் ஆங்கிலேயரைத் துரத்தியவரும், சர்வோதயம் கண்டவரும், இராமராஜியத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டவரும், தள்ளிவர்களை ஹரிசனங்கள் (இறைவனின் குழந்தைகள்) என அழைத்து இன்பங்கண்ட ஆன்மநேய காந்திமகானை அருளாளர் என அழைப்பதில் என்ன பிழையிருக்க முடியும் ?
ஆன்மநேய ஒருமைப்பாடு கண்டு சன்மார்க்கம் கண்டு நெறிப்படுத்தி தெனைச் சங்கம் அமைத்து நெறிப்படுத்திய இராமலிங்கர் பதினெட்டாம் நூற்றாண்டு அருளாளர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது மட்டுமன்றி வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் துறத்தவர். இத்தகையோரைக் கணித்து உலகளாவிய அளவில் “உலகச் சிந்தனையாளர்கள்” என்ற பெயரில் நூலாக்கிய இராபர்ட் எல். ஹெல்போர்னர் பின்வருமாறு கருத்துரைக்கிறார். “மத்திய நூற்றாண்டுகளின் சிந்தனைப் புரட்சியாளர்களின் சிந்தனை உருமாற்றம் குறிப்பாக பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் மண், மனிதர்கள், சமூகம், இயங்குதளம் இவற்றின் அடிப்படையிலேயே பழையனவற்றை மாற்றிப் புதிய முறைமைகளை இனங்கண்டு உரைத்தனர்” (‘The worldly philosohers’ - Robert L. Heilbroner IV edition -1972 - Simon and Schuster, Newyork, Page - 25) என்பது பொருத்தமே.
இந்து மற்றும் இஸ்லாமிய சமய ஒருமைப்பாடு கண்ட அருளாளராக பதினேழாம் நூற்றாண்டில் அவதரித்த குருகோவிந்தர் விளங்குகிறார். சீக்கிய ஒன்பதாவது மதகுருவாகக் கொண்டாடப்பட்டாலும் இவருக்குப் பின்னரே சீக்கிய மதம் குருகிரந்தம் என்ற பெயரில் சீக்கியப் பனுவல்களைப் பெறுகிறது. அதைத் தொகுப்பித்த பணியைக் குருகோவிந்தர் செய்ததோடு மட்டுமல்லாமல் உருவவழிபாட்டில் மிகப்பெரிய புரட்சியையே செய்துள்ளார் எனக் கூறமுடியும். அதுவரைக் கடவுளர் உருவங்கள், மதகுருமார்களின் உருவங்கள் ஆராதிக்கப்பட்டு வழிபடுதன்மையைப் பெற்றதெனின் இவரே மதநூலான குருகிரந்தத்திற்கு வழிபடுதன்மையை வகுத்துத்தருகிறார். பதினெட்டாம் நூற்றாண்டில் அதேபோல் இராமலிங்கரும் “அருட்பெருஞ்சோதி” என்று கடவுளர் உருவத்தை விடுத்து ஒளியைக் குறியீடாக்கி வழிபடும் ஒளிவழிபாட்டை ஜோதி தரிசனத்தைக் கூடியிருந்து கண்டு ஆன்மநெகிழ்வடையும் புதுமார்க்கத்தைக் கண்டறிந்து தந்தார். இவ்விருவரது மார்க்கங்களும் அவர்தம் காலத்துக்குப் பின்னரும் இன்றுவரை தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பும் அவரது கொள்கை வெற்றிபெற்றதை உணர்த்துதலுமாகிறது.
சீக்கியமதத்தின் சீரிய நெறிமுறைகளைக் கையிலெடுக்காது தனிமனித குருவழிபாட்டில் சிக்கி ராம்ரஹீம் போன்றவர்களால் ஹரியானா மாநிலத்தில் சென்ற மாதம் நிகழ்ந்த கலவரங்களை நாடே கண்டு வியந்து கண்டனக்குரல்களை எழுப்பியது என்பதையும் மனதிற்கொள்ளவேண்டும். தனிமனிதத் துதி இவ்வாறு தீமையில்தான் ஓர் எல்லை கடந்து செல்லும்போது முடியும் என்பதை உணர்ந்துதானோ என்னவோ குருகிரந்தத்தைப் பொற்கோவிலின் கடவுள் நிலைக்கு வைத்துப் புனிதப்படுத்தினார் குருகோவிந்த்சிங். சீக்கிய மதத்தின் வாழும் குருவாக வழிபடுத்திய குருகோவிந்த்சிங் பீஹார் மாநிலம் பாட்னாவில் 1666ஆம் ஆண்டு டிசம்பர் 22இல் பிறந்தார். இராமலிங்கர் 1853 - விழுப்புரம் மாவட்டம் மருதூரில் தமிழ்நாட்டில் பிறந்தார்.
குருகோவிந்தர் “அரபி, பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்” (பக்-8, தினமலர் நாளிதழ் - 07.10.2017 - மதுரை பதிப்பு) என்னும் தகவல் அவர் பன்மொழியாளர் என்பதை உறுதிசெய்கிறது. இராமலிங்கரும் ஆங்கிலம், பிரெஞ்சு, (பாண்டிச்சேரியில் வசித்த காலத்தில் அறிந்திருக்கக் கூடும் என்பாரும் உளர்) சமஸ்கிருதம் அறிந்தவராகத் திகழ்கிறார். தமிழ் தாய்மொழி, சமஸ்கிருதம் தந்தைமொழி என திருவருட்பா - உரைநடைப் பகுதியில் அவர் கூறியிருப்பது வியப்பிற்குரியது. அவரது உரைநடையே மணிபிரவாள நடைக்கான கடைசிச் சாட்சியாகத் தமிழ் எழுத்திலக்கிய வரலாற்றில் இருந்திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்களை உறுதிப்படுத்த வைக்கிறது. இராமலிங்கர் காலத்துக்குப் பின்னரே மறைமலையடிகள், நீதிக்கட்சி, தேவநேயப்பாவணர் போன்றோரால் தனித்தமிழ் இயக்கமும் தனித்தமிழ் நடையும் சமஸ்கிருத ஒறுப்பும் நிகழ்ந்திருக்கிறது.
குருகோவிந்தர் “குதிரைவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதில் சிறப்புப் பெற்று விளங்கினார்.” (பக்-8, தினமலர்) என்ற செய்தி தேக ஆரோக்கியம், தற்காப்பு ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அக்கறை முக்கியத்துவம் பெறுகிறது.
இராமலிங்கரும் தேக ஆரோக்கியம் பற்றி சுத்த தேகம், பிரவண தேகம், ஒளியுடம்பு ஆகியன குறித்துப் பேசியுள்ளார். உடல்நலன் குறித்த அக்கறையில் மூலிகை மற்றும் பயிரினங்களின் பயன்பாடு குறித்து மானுடர்களுக்கு உரைநடைப் பகுதியில் தனித்த பதிவினைக் குறித்துள்ளார். கரிசலாங்கண்ணிப் பொடியை அன்றாடம் உண்ணல் நலம் எனத் தானும் உண்டு பிறருக்கு முன்னோடியாக வழிகாட்டியும் விளங்கியுள்ளார்.
குருகோவிந்தரின் மதிப்புமிகு சிந்தனைகளாகத் தான் உருவாக்கிய சீக்கிய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒழுக்கமுறைகளை வகுத்துள்ளார். “மது அருந்தாமை, புகை பிடிக்காமை, நாள்தோறும் ஐந்துமுறை வழிபடுதல், வருமானத்தில் பத்தில் ஒருபங்கு தானம், வட்டி வாங்காமை ஆகியவற்றைக் கடைப்பிடித்து சீக்கியர் வாழவேண்டும்” என்று சிறந்த பண்புகளையுடைய மானுடச்சமூகம் உருவாகக் கட்டமைத்துத் தந்துள்ளார். அதனைக் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும் என்றும் சட்டம் இயற்றித் தந்திருக்கிறார். 1708 அக்டோபர் மாதம் ஏழாம்நாள் அவர் காலமானாலும் இன்றுவரை அவர் கொள்கைகளை சீக்கியர் பின்பற்றி வருகின்றனர். இராமலிங்கரும், புலால் உண்ணக்கூடாது. உருவ வழிபாடு கூடாது. ஒளி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல். பரோபகாரம், பசிப்பிணி மருத்துவம் போன்ற கொள்கைகளை வழியுறுத்தியுள்ளார். அவர் பசியாற்றுக்காக அன்று ஏற்றிவைத்த நெருப்பு அணையா அடுப்பாக இன்றும் வடலூர் சத்திய தருமச்சாலையில் பசித்தோருக்கு அன்றாடம் உணவு சமைத்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
அதுவரை இருந்த வழிபாட்டுத் தலங்களினின்றும் தனித்துப் பொற்கோயில் என்பதை வடிவமைத்து அமிர்தசரஸ் நகரிலே சீக்கிய வழிபாடு நடத்துகின்றனர். இந்தப் பொற்கோயிலை 1469 -இல் பிறந்த சீக்கிய சமய நிறுவனரான குருநானக் மெக்காவிற்குப் புனிதப்பயணம் மேற்கொண்டதன் பின்னர் இந்து முஸ்லிம் இருசமயக் கோவில் அமைப்புகளையும் இணைத்து வடிவமைத்ததாக இந்தியாவின் சிறந்த கோயில்கள் (The Great Temples of India - Ceylon and Burma Asian Educational Services - New delhi & Madras - 1988 - Page 43 - Slkm Temples) என்ற நூலில் சீக்கியக்கோயில் என்பதனுள் பொற்கோயில் என்ற கட்டுரையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
லாகூரிலிருந்து முப்பத்திரண்டு மைல் தூரத்தில் வெள்ளியும் தங்கமும் கலந்து கட்டுமானம் அமைத்த கோயிலாகவும் திகழ்கிறது. இந்துசமய மறுமலர்ச்சியாளரான கபீரின் சிந்தனைகளின் அடித்தளத்தில் குருநானக் அவர்கள் இந்து முஸ்லிம் மதக்கோட்பாடுகளை இணைக்கவேண்டும் என்ற அடிப்படையில் சீக்கியத்தை உருவாக்கியதாகக் கருத இடமுள்ளது.
இராமலிங்கரும் அவர்காலத்தே தமிழகச் சூழலில் இருந்த இஸ்லாமிய, கிறித்தவ ஊடுருவாக்கச் சிந்தனைகளில் அவற்றை இணைத்து வழிபடுதலத்தை வடலூரில் நிர்மாணிக்கிறார் எனக் காணும்போது வியப்பு மேலிடுகிறது. சத்தியஞானசபை என்பது அதுவரை தமிழகத்தில் இருந்த வழிபடுதலங்களினின்றும் மாறுபட்டுப் புதிய நிர்மாணமாக அமைகிறது. எண்கோண அமைப்பில் சத்தியஞானசபையை உருவாக்கி ஒளிவழிபாட்டை சமஸ்கிருதச் சொல்லாடல் பிரயோகத்தில் ஜோதி தரிசனம் என்ற முறைமையை அமல்படுத்தினார். சிதம்பரத்திலிருந்து சிலமைல்தூரத்தில் வடலூரை சத்தியஞானசபையைத் தேர்வு செய்தார். சிதம்பரத்தைப் பூர்வஞான சிதம்பரம் என்றும் வடலூரை உத்தரஞான சிதம்பரம் எனக்கொண்டு அமைத்தார் என்பது பதிவு.
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கும் வடலூர் சத்தியஞான தருமச்சாலைக்கும் ஒரு பரோபகார ஒற்றுமையுள்ளது. வளாகத்துள் வருபவர்கள் பசியாறிச் செல்கின்றனர் எனும் பெருங்காருண்ய உபகாரமேயிது.
சீக்கிய நூலான குருகிரந்தமும் இராமலிங்கரின் திருவருட்பாவும் கருத்துநிலையில் சில ஒருபோட்டுத்தன்மை உடையனவாக உள்ளன. குருகிரந்த ஜபுஜி (ஜபுஜி - ஜபம் - இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல்) யுள் புலப்படாத கடவுளின் குணநலன்கள் நிரல்படுத்தப்படுகின்றன.
“அவர் உண்மையானவர் அவர் நாமம் உண்மையானது
படைப்பு உண்மையானது கடவுள் பயமில்லாதவர்
எதிரிகள் இல்லாதவர், அன்பு நிறைந்தவர்
பிறப்பு இறப்பு இல்லாதவர்” (ஜபுஜி சாகிபு - தமிழாக்கம், லூர்து சகாயராணி, முதுநிலைப்பட்டயச் சான்றிதழ் படிப்பு ஆய்வேடு - 1998 - மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) என்றவாறு கடவுட்கருத்தாக்கம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
திருவருட்பாவில் இராமலிங்கர் கடவுளை,
“இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள் ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர் செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் திரிபில்லார் களங்கமே இல்லார் தீமை ஒன்றும் இல்லார் வியப்பற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய் உயத்தரும் ஓர் சுத்த சிவானந்தசபைதனிலே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்” (திருவருட்பா - திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை - 12) என்று கடவுள் பண்புநலன்கள் உரைக்கப்பட்டுள்ளன.
ஜபுஜி - திருவருட்பா
உண்மையானவர் - மெய்யே மெய்யாகி எங்கும் விளங்குபவர்
அன்பு நிறைந்தவர் - அன்புருவாம் பரசிவமே
பிறப்பு இறப்பு இல்லாதவர் - பிறப்பிலார் இறப்பிலார்
என்றவாறு குருகிரந்தத்து ஜபுஜியிலும் இராமலிங்கரின் திருவருட்பாவிலும் கருத்துகள் ஒத்த தன்மையினவாய் விளங்குவதைக் காணமுடிகிறது.
இறையின் முறைமை குறித்துப் பேசும் மற்றொரு இடமும் வியப்பில் ஆழ்த்துகிறது.
“இறைமுறை என்பதுதான் வாழ்க்கை
இறைமுறைமைக்குள் வாழ்வதுதான் ஆசீர்வாதம்
இறைமுறைமையால் உயர்வும் தாழ்வும்
இறைமுறைமையால் சந்தோசங்களும் துக்கங்களும்
இறைமுறைமைக்குள்ளே ஒவ்வொருவரும் வாழ்கின்றனர்
இறைமுறைமைக்கு வெளியே எவரும் இல்லை”
என்பதாக ஜபுஜியில் இடம்பெற்றுள்ளது. அதே கருத்துடன் அருட்பாவின் வரிகள் பின்வருமாறு அமைகின்றன.
“பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறங்குவித்தால்
உறங்குகின்றேன் உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ
இச்சிறியேனால் ஆவதென்னே”
(திருவருட்பா - தற்சுதந்திரம்இன்மை - 4)
மேற்குறித்த பாடல்கள் மனித வாழ்வின் அனைத்துமே இறைவிருப்பின்படியே இறைமுறைமையாலே நடைபெறுகின்றன என்பதற்குக் கட்டியங்கூறுவது போல அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. அப்படியே கொஞ்சம் இருபதாம் நூற்றாண்டிற்கு நகர்ந்து வந்தால் பாரதியும் “யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய் தீதுநன்மையாவும் உந்தன் தெய்வலீலையன்றோ” என்கிறான்.
எங்கிருந்தாலும் அருளாளர்களின் ஆன்மா ஒன்றுபோல்தான் அனுபவங்களை உணர்கின்றனவா அன்றி ஆண்டவர் அவர்க்கெல்லாம் ஒன்றேபோல உணர்த்துகின்றானா ? யாமொன்றறியேன் பராபாமே !
————————————————————————————————————————————————
தொடர்பு: இராம. மலர்விழி மங்கையர்க்கரசி (malarmangay64@gmail.com)
No comments:
Post a Comment