Wednesday, January 13, 2016

வள்ளுவத்தில் காப்பீடுக்கொள்கை

-- சொ.வினைதீர்த்தான். வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இன்சூரன்சு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீடுகொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு.

காப்பீடு:
காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து (Income generating Asset) எனக்கொள்ளலாம். அந்த பொருள் ஈட்டுகிற திறன் சந்திக்கிற இடர்பாடுகள் இரண்டு. அதாவது வாழ்வு சார்ந்த இரண்டு இடர்களால் ஒருவருடைய வருமானம் ஈட்டுகிற திறன் தடைப்படலாம்.
1.இளமையில் அகால இறப்பு.
2.முதுமையில் வயோதிகத்தால் வருமானம் ஈட்டுகிற திறனை இழத்தல்.
இந்த இரண்டு இடர்பாடுகளிலும் பொருள் ஈட்டுகிற திறன் பாதிக்கப்படுகிறது. அதனால் ஏற்படுகிற பொருளாதார இழப்பு ஈடுசெய்யப்படல் அவசியம். அதற்கான ஏற்பாடே காப்பீடு.

காப்பீடு “வாழும்போதும் வாழ்க்கைக்குப்பிறகும்” என்பார்கள். வாழும்போது ஒருவருக்கு எய்த்தகாலத்தில் வைப்பாக, சேமிப்பாக காப்பீடு உதவுகிறது. அவரின் வாழ்க்கைக்குப்பிறகு அவரைச் சார்ந்தவர்கள் தவிப்பின்றி வாழ உதவி புரிகிறது. எனவே காப்பீடு என்பது வாழ்கிறவர்களுக்கு! இறந்தவர்களுக்கல்ல!! ஒருவர் நீண்டநாள் வாழ்ந்தால் அவருடைய தேவைக்கான அல்லது இளமையில் அகலாமரணடைந்தால் அவரைச் சார்ந்தவர்கள் வாழ்வதற்கான பொருளாதார ஏற்பாடு.

வள்ளுவம்:
திருக்குறள் இடர் வருமுன்பாகக் காத்துக்கொள்ள வேண்டியதின் அவசியத்தை
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக்கெடும்.”
என்று வலியுறுத்தியது. அதாவது முன்ஏற்பாடு இல்லாதவன் வாழ்வு நெருப்பு முன் தூசியாகும்.

நிலையாமையைக் கீழ்க்கண்ட குறள் போல வலிமையாக வேறெவரும் கூறிவிட முடியாது.
“நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”
நேற்று இருந்த ஒருவன் இன்று? இல்லாமல் போனான். அடடா! வந்தவன் எல்லாம் தங்கிவிட்டால்? ‘கோடியும் மேலும் கருதும்’ இந்த மாந்தர் “ஒரு பொழுதும் வாழ்வது அறியார்!” என்பது தானே வள்ளுவம்.

இறப்பைத்தவிர்க்க முடியாது. ஆனால் அதனால் குடும்பத்திற்கு விளைகிற பொருளாதார இழப்பை ஓரளவு ஈடுசெய்யலாம்.

பொருளின் அவசியத்தைப் “பொருளல்லவரை பொருளாகச்செயும்” என்றும், “பொருளென்னும் பொய்யா விளக்கம்” என்றும், தீதின்றி வந்த பொருள் “அறன்ஈனும் இன்பமும்ஈனும்” என்றும் அதனால்

“செய்க பொருளை” என்றும் வள்ளுவம் அறிவுறுத்துகிறது. தர்மம்செய்து அருள் கிடைக்க வேண்டுமென்றால் கூட “பொருள் என்னும் செல்வச்செவிலியால்” தான் வருமாம்! நம்மிடமுள்ள பொருள் குறைவு. ஆனால் எதிர்பாராத இறப்பினால் நிகழும் பொருளாதார இழப்பு அளப்பரியது. அதனை எவ்வாறு ஈடுசெய்வது?

இழப்பை ஈடுசெய்தல்:
இழப்பை ஈடுசெய்தலே(INDEMNITY) காப்பீட்டின் நோக்கம். காப்பீட்டால் எவரும் இலாபம் அடையக்கூடாது என்பது கோட்பாடு. இலாபமடைந்தால் அது சூதாட்டமாகிவிடும். ஒரு ரூபாய் செலுத்தி நிகழ்வு நடக்கிறபோது இலட்சம் ரூபாய் அடைந்தால் அது சூதாட்டமல்லவா? ஆனால் இன்சூரன்சு சூதாட்டமல்ல. ஒரு இடருக்கு ஆளாகக்கூடியவர்கள் பலர் ஒன்றுசேர்ந்து தன்னுடைய இழப்புக்காளாகக்கூடிய பொருளுக்குத்தக்கவாறு ஒரு சிறுதொகையை அளிக்கிறார்கள். அவ்வாறு எல்லோரும் எடுத்துவைக்கிற தொகை பெருந்தொகையாகிறது. அப்படிச் சேர்ந்த பெருந்தொகையிலிருந்து அவர்களில் ஒருவரின் சொத்திற்கு குறிப்பிட்ட இடரால் இழப்பு ஏற்படுகிறபோது அந்த இழப்பு காப்பீடால் ஈடு செய்யப்படுகிறது. உதாரணமாக 40 வயதுக்காரர்கள் 1,000 பேரைச்சேர்த்து அவர்களிடமிருந்து ஆளுக்கு 20 ரூபாய் என்று பெற்றுக்கொண்டால் 20,000 ரூபாய் சேர்கிறது. அவர்களில் அந்த ஆண்டில் இருவர் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு 10,000 வீதம் வழங்கப்படுகிறது. 1000 பேரும் இறப்பதில்லை. இருவரே இறக்கின்றனர் என்பதே காப்பீட்டின் சூட்சுமம்! இந்தக் காப்பிற்கான பிரிமியப்பங்குடன் சேமிப்பிற்காகத் தேவைக்கேற்ப ஒரு பெரிய பங்குதொகையும் காப்பீட்டு நிறுவனத்தை நடத்தும் செலவினத்திற்க்காக ஒரு பங்குத்தொகையும் சேர்த்து காப்பீடு ஈவுத்தொகையாக பிரிமியம் என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது.
ஆக காப்பு+சேமிப்பு+நிதி பராமரிப்புச்செலவினம் = பிரிமியம் ஆக உருவாகிறது.
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
என்றார் வள்ளுவர். பழகிய ஒரு யானையால் மற்றொரு யானையையும் பிடித்தலைப் போல ஒருசெயலைச்செய்யும்போது மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளவேண்டுமென்றார். உயிர்க்காப்பிற்காக பணம் செலுத்தும்போதே ஒரு கூடுதல் பணம் சேமிப்பிற்காகச்சேர்த்து காப்பினையும் சேமிப்புத்தொகையையும் இலாபப்பங்கீட்டுடன் பெற்றுக்கொள்ளுதல் வள்ளுவர் கூறும் ஒரு செயலைச்செய்யும்போதே மற்றொரு செயலையும் முடித்துக்கொள்ளுதலுக்கு ஒப்பானதல்லவா!

மேலே விவரித்துள்ளதுபோல கப்பல் விபத்து காப்பீடு என்று உதாரணமாக எடுத்துக்கொண்டால் ஒரே சமயத்தில் காப்பீடுசெய்துள்ள அனைத்து கப்பல்களுக்கும் இடர்பாட்டால் இழப்பு ஏற்படுவதில்லை. ஏதாவது ஒரு கப்பலுக்கே நிகழ்கிறது. சிறு தொகையாகப் பல கப்பல்களிடமிருந்து பெறப்பட்டுப் பெருநிதியாக உருவான தொகையிலிருந்து இழப்பு கொடுக்கப்படுகிறது. எனவே தனிமனித இழப்பை ஒன்று சேர்ந்த சமுதாயம் பகிர்ந்துகொள்கிறது. ஆதலால் இன்சூரன்சின் அடிப்படைக்கொள்கை இழப்பை ஈடுசெய்தலும், இழப்பைப் பகிர்ந்து கொள்ளுதலுமாகும்! பகிர்தலைக்குறித்து வள்ளுவம் பகர்வதைக் கீழே காணலாம்.

பகிர்தல்:
வள்ளுவத்தின் உச்சக்கொள்கை பகிர்தலேயாகும். “மங்கை மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லெனில் சொல்லுமாறு எங்ஙனே” என்று கேட்டது சமய இலக்கியம். ஆனால் வள்ளுவர் அவ்வின்பத்தைக் காட்டுகிறார்.
“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்                              
அம்மா அரிவை முயக்கு”
அழகிய மாந்தளிர் நிறம்கொண்ட இவளுடைய தழுவுதல் தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்துக்கொடுத்து உண்டாற்போன்றது என்பது இக்குறளுக்கான பொருள். இங்கு உச்சபட்ச இன்பத்திற்கு அடிப்படை பகிர்தல் ஆகும். “ஈத்துவக்கும் இன்பம்” இணையற்றது. இன்சூரன்சில் பலரும் இணைந்து சிறுபொருள் பகிர்ந்து தமக்கு ஏற்படக்கூடிய பேரிழப்பிற்கு ஈடு பெறுவதோடு தன்னையொத்து இழப்புக்கு ஆளாகும் பிறருடைய இழப்பையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒவ்வொருவரும் கொடுக்கிற சிறுதொகையினால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையால் இழப்பும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட பெருந்தொகை காப்பீட்டு நிறுவனத்தின் எதிர்காலப்பொறுப்புக்களான முதிர்வு உரிமம் மற்றும் இறப்பு உரிமம் ஏற்படுகிறபோது கொடுக்கப்படவேண்டிய வைப்புத்தொகையாகும் (LIFE FUND). இந்த வைப்பின் பயன்கள் அளப்பரியவை.

இன்சூரன்சு நிறுவனத்தின் வைப்பு நிதி (LIFE FUND):
மேற்கண்டவகையில் இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனம் (Life Insurance Corporation of India) 1956 முதல் இதுவரை சேர்த்துள்ள வைப்புத்தொகை (Life Fund) ரூ18,24.194 கோடிகளாகும்! கற்பனைசெய்யவும் கடினமான இந்தப் பல்லாயிரம் கோடிப்பணம் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் 29 கோடி பாலிசிதாரர்கள் கொடுத்த பிரிமியத்தொகையிலிருந்து உருவானது. அவர்களுடைய பணம். அவர்களது எதிர்கால இறப்பு மற்றும் முதிர்வு உரிமம் ஏற்படுகிறபோது கொடுக்கப்படவேண்டிய தொகை. இத்தொகை அரசாங்கத்திட்டங்களிலும், பங்குச்சந்தையிலும் பிறவற்றிலும் இன்சூரன்சு சட்டத்தின்படி முதலீடு செய்யப்படுகிறது. இந்தப்பெருந்தொகை ‘மக்கள் பணம் மக்களுக்கே – Peoples’ money for Peoples’ welfare’ என்ற கொள்கையின்படி மக்களுக்குச் சாலை வசதியாக, மின்சாரவசதியாக, குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளாக, ஐந்தாண்டு திட்டங்களாக மாறி மக்கள் சமுதாயத்திற்கு பேருதவிபுரிகின்றது.
“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு”

”பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்”
என்பதிற்கிணங்க பொதுத்துறை இன்சூரன்சு நிறுவனத்தின் சொத்து மக்களுக்கே பயன்படுகிறது. தனியார் துறை நிறுவனங்களும் குறிப்பிட்ட கணிசமான சதவிகித தொகையை மக்களுக்கு உதவும் வகையில் முதலீடு செய்யவேண்டும் என்பது இந்திய இன்சூரன்சு சட்டம்.

ஒருவன் பொருள் பெற்றால் அதனைச் சேர்த்துவைக்கும் இடம் “கடும்பசியுடன் இருக்கும் வறியவரின் வயிறே” என்றது குறள்!
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி”
என்ற வள்ளுவத்திற்கிணங்க “மக்கள் பணம் மக்களுக்கே” என்பதே இன்சூரன்சு நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான நோக்கம்.

இதுகாறும் காட்டியவற்றால் காப்பீடுக்கொள்கைகளான பொருளாதர ஏற்பாடு, இடர்களைதல், இழப்பை ஈடுசெய்தல், பகிர்தல், மக்கள் பணம் மக்களுக்கே ஆகியவையும் வள்ளுவமும் ஒத்திருத்தல் வெள்ளிடைமலை!
            
குறிப்பு:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் தேவகோட்டை சேவுகன் அன்ணாமலைக்கல்லூரியும் இணைந்து 7.1.2016,8.1.2016,9.1.2016 தேதிகளில் திருக்குறள் பன்னாட்டுக்கருத்தரங்கை வெகு சிறப்பாக நடத்தின. அக்கருத்தரங்கில் 8.1.2016 பிற்பகல் இணைஅமர்வில் நான் கலந்துகொண்டு என்னுடைய “வள்ளுவத்தில் காப்பீடுக்கொள்கை” என்ற கட்டுரையை வாசித்தளித்தேன். விழாவில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இக்கட்டுரை வெகுசிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. கருத்தரங்கில் கலந்துகொண்ட சான்றோர்கள் வித்தியாசமான கட்டுரையென்றும் சிறப்பாகவுள்ளதென்றும் பாராட்டினர். மகிழ்ச்சியாக இருந்தது.
நண்பர்கள் பார்வைக்கும் கனிவான கருத்திற்கும் பகிர்ந்துள்ளேன்.

(சொ.வினைதீர்த்தான், மேனாள் பகுதி மேலாளர், எல்.ஐ.சி ஆப் இந்தியா,   மனிதவள ஆலோசகர், F10, மெசெச்டிக் டெரசு அடுக்ககம், சர்ச் ஐந்தாவது வீதி, காரைக்குடி – 630001  கைபேசி:9443446388)

 
 
சொ. வினைதீர்த்தான்
karuannam@gmail.comNo comments:

Post a Comment