Wednesday, January 13, 2016

பொங்கலோ பொங்கல் !!!

--தமிழ்த்தேனீ.

போகித் திருநாள்:-
பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் சொற்றொடருக்கு ஆதாரமான நன் நாள்  பொங்கல் திருநாள் எனக்கு ஒவ்வொரு வருடமும் போகி பொங்கல் திருநாட்களில் நினைவுக்கு வருபவை நாம் உண்ணும் உணவில் பிரதான அங்கம் வகிக்கும் அரிசி,  அதை விளைவிக்கும் உழவன், ஆகவேதான் பொங்கல் திருநாளை உழவர் திருநாளாக கொண்டாடுகிறோம். இதன் தொடர்ச்சியாக   இங்கே ஒரு படத்தை இணைக்கிறேன். அதன் விளக்கமும் கூறுகிறேன்.



​இந்த வாழை இலையில் தங்கமும் வைரமும் கலந்த நகைகள் பரிமாறப்பட்டு இருக்கின்றன. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஒருகதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு மன்னர் இருந்தார் அவர் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது ஒரு மரியாதைக்குரிய புலவர் அங்கு வந்தார். அந்தப் புலவருக்கு எப்போது வேண்டுமானலும் அரசரிடம் வருவதற்கு உரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. அந்தப் புலவர் மன்னர் சாப்பிடும் வரை காத்திருந்தார், தன் இலையில் பறிமாறப்பட்ட அரிசி உணவை ருசித்து உண்ட மன்னர் தன் இலையிலிருந்து அரிசி உணவிலிருந்து கீழே விழுந்த ஒரு பருக்கையை எடுத்து தன் இலையில் போட்டுக்கொண்டு சாப்பிடுவதைக் கவனித்த புலவர் மன்னா இந்த ராஜ்ஜியமே உன்னுடையது கீழே விழுந்த ஒரு பருக்கை உணவை மீண்டும் எடுத்துப் போட்டு சாப்பிடுகிறாயே ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் என்று கேட்டார்.

அதற்கு புன்னகைத்த மன்னர், அது இருக்கட்டும் நீரும் பசியாய் இருப்பீர் கைகால்களை சுத்தம் செய்து கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு, உணவு பறிமாறுபவனிடம் புலவருக்குஒரு தலைவாழை இலைபோட்டு அதில் என்னென்னெ பறிமாற வேண்டும் என்று கூறிவிட்டு வந்தார். அதேபோல் புலவருக்கு தலை வாழை இலைபோடப்பட்டது. புலவரும் ஆசையோடு பசியாற இலையின் முன் உட்கார்ந்தார். வரிசையாக தங்கப் பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வந்து பறிமாறுபவர்கள் புலவருடைய இலையில் தங்கம், வைரம், கோமேதகம் , முத்து, பவழம், வைடூரியம் போன்ற நவரத்தினங்களைக் கொண்டு வந்து பரிமாறினர். மன்னர் இப்போது புலவரைப் பார்த்து சாப்பிடுங்கள் பசியாயிருப்பீர்கள் என்றார். கோபமுற்ற புலவர் "மன்னா என்ன என்னை கேலி செய்கிறாயா...? இதையெல்லாம் எப்படி உண்பது." என்றார். அதற்கு மன்னர் இப்போது புரிகிறதா?  இவையெல்லாம் இருந்தாலும் அரிசியாக, அல்லது தானியமாக, மாற்றினால்தான் உண்ணமுடியும். அதனால்தான் ஒரு பருக்கையையும் வீணடிக்காமல் எடுத்துப் போட்டுக் கொண்டு தான் சாப்பிட்டதையும் உரைத்தார் மன்னர். புலவர் வெட்கித் தலை குனிந்தார்.

சிறு வயதில் என்னுடைய அக்கா திரு மாலதி அவர்கள் ஒரு பாட்டு எனக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அந்தப் பாட்டில் எத்துணை கருத்து இருக்கிறது அதை பாடிப் பார்த்தேன் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

குருவி குருவீ கொஞ்ஜம் நில்
கொத்திய நெல்லைக் கீழே வை
காட்டைத்திருத்தி அமைத்தாயோ
கழனி கட்டி வைத்தாயோ
மண்ணைக் கிளரிப் போட்டாயோ
மாட்டைக் கட்டி உழுதாயோ
விதையை நீதான் விதைத்தாயோ
நீரை நீதான் இறைத்தாயோ
ஏரைக் கட்டி உழுதாயோ
களையும் நீதான் எடுத்தாயோ
அறிவாள் கொண்டு அறுத்தாயோ
அறுத்துக் களத்தில் போட்டாயோ
அடித்துத் தூத்தி எடுத்தாயோ
அயோ பாவம் பசிக்கிறதா
இந்தா தருவேன் புசித்துடுவாய்

இந்தப் பாட்டில் “உழைக்காமல் எந்தப் பொருளும் கிடைக்காது “, உரிமைகொண்டாட முடியாது,” “ ஆனால் பசி என்று சொல்லுபவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டும்,“அதே போல் ஒரு நெல் மணியை உருவாக்க எத்துணை வேலைகள் செய்யவேண்டும் போன்ற மிக நல்ல கருத்துக்கள் மிக எளிய வார்த்தைகளில் விளக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உழவரும் இத்துணை வேலைகளையும் செய்து தங்களுடைய உழைப்பை இட்டு வியர்வையை சிந்தி வேலை செய்து பருவ காலங்களுக்கு ஏற்ப பயிர் செய்து, இயற்கை சீற்றங்களை சமாளித்து பயிரை காத்து, அதன் மூலமாக வரும் தானியங்களை உணவுப் பொருட்களை நாம் எந்த உதவியும் செய்யாவிடினும் கருணையோடு நமக்களிக்கிறார்கள்.

நாம் உண்ணும் உணவை வீணடிக்காமல் உண்ணவேண்டும் என்று புரிகிறதா....? ஒவ்வொரு பருக்கை உணவும் பலருடைய உழைப்பினால் வரும் நெல்மணியிலிருந்து வருவதே அந்த உழவர்களுக்கு நாம் கைம்மாறாக என்ன கொடுக்கிறோம்? ஒரு நன்றியாவது சொல்ல வேண்டுமல்லவா? அதற்காகவும் அந்த உழவர்கள் தங்களுக்கு விவசாயம் செய்ய உதவும் , கலப்பை, ஏர், மாடுகள், இன்னும் பல துணைக்கருவிகளுக்கு நன்றி சொல்லும் திருவிழாவே பொங்கல் திருநாள். ஆகவே பொங்கல் திருநாளை உழவர் திருநாள் என்று சொல்லுதலே சாலச் சிறந்தது.

முதல் நாள் போகித்திருநாள், விடியற்காலையில் தூக்கம் கலையாத  போதிலும் எழுந்து அந்தக் குளிரில் பழைய பொருட்களை போட்டு கொளுத்தி அந்த சூட்டில் குளிர் காய்ந்து, கையில் ஒரு மண்ணாலான மேலே தோல் போர்த்தப்பட்டு, ஒரு வட்ட வடிவ நிலா போன்ற அமைப்புள்ள தப்பட்டை என்னும் வாத்தியத்தில் சங்கீதம் தெரிந்தோ, தெரியாமலோ நம் இஷ்டத்துக்கு அதை அடித்து தாளம் போட்டு  அதை எரியும் நெருப்பின் சூட்டின் வெப்பம் சற்றே படுமாறு செய்து, பிறகு அடித்தால் சத்தம் இன்னும் நன்றாக வரும் என்று சொல்லும் பெரிய வயதினர் சொல்லுவதைக் கேட்டு அவ்வாறே செய்து தட்டும் தாளமும், விடியற்காலை நேரத்துக்கே உண்டான மணமும், இனிமையும், சிறுவர்கள் கும்பலாக கூடி நின்று போடும் கும்மாளமும் நினைவிற்கு வருகிறது.

அப்படியே இந்த சூழலை ரசித்துக் கொண்டிருக்கும் போதே மெல்லமாக பொழுது விடிந்து கொண்டே வந்து சூரியனின் கதிர்கள் பட்டு பூமியின் இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகும் அழகை ரசித்துக் கொண்டே சூரியன் அழகாக எழுந்து வரும் காட்சியை கண்ணாரக் கண்டு வியந்து, ஹும்ம்ம்ம்.. சொல்லிக்கொண்டே போகலாம். இயற்கையின் வர்ணஜாலம் இறைவனின் மாயக் கோலம் வியந்து ரசிக்கலாம். மறுநாள்தான் பொங்கல் திருநாள் பொங்கல் திருநாள், தமிழர் திருநாள் என்று நினைக்கும் பொழுதே, கரும்பின் சுவையும் நெய் மணக்கும் சர்க்கரைப் (வெல்லப்)பொங்கலின் மணமும், இனிய தின்பண்டங்களின் நினைவும், புத்தாடைகளும் மனதுக்கு இதமான புத்தாண்டு நினைவுகளும் நம்மைச் சந்தோஷப் படுத்தும் .

சூரியனுடைய சுற்று வட்டப் பாதையை இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள், ஒன்று ஆடி மாதம் முதற்கொண்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் சூரியனுடைய சுற்று தெற்கு திசையாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும் காலம். இதை தக்ஷிணாயணம் என்று கூறுவர்.

அதேபோல் தைமாதம் முதல்  மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனிவரை சூரியனின் சுற்று வடக்கு திசையாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும் காலம் உத்திராயணம் என்று சொல்வர். இப்படிப் பார்க்கும் போது ஆடி மாதக் காற்று, புரட்டாசி, ஆவணி, வெய்யிலின் தூசுகள், ஐப்பசியின் அடை மழை, கார்த்திகை, மார்கழியின் பனி இவைகளால் ஏற்படும் மாசுகள், குளிர் இவைகளைப் போக்கிக் கொள்ள அந்த ஆண்டு முழுவதும் உபயோகித்து பழையதாகிப் போன பொருட்களை கழித்துவிட்டுபுதியன வாங்குதல் அவசியமாகிறது.

அந்தப் பழைய பொருட்களை குப்பையாக சேர்க்காமல், அவைகளை எரித்துக் குளிர் காய்ந்து, அதே சமையம், மீண்டும் சுத்தமாக மாறி புது வாழ்வு துவங்க, வீட்டிலிருந்து வாசல் வரை கழுவி கிருமி நாசினி என்று சொல்லக் கூடிய பசுமாட்டின் சாணத்தைக்கொண்டு மெழுகி, அரிசி மாவினால் கோலமிட்டு அவைகளையும் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவாக அந்த அரிசிமாவையும் ஆக்கி பழையன கழிதல் புதியன புகுதல் என்னும் ஆன்றோர் வாக்குக்கு ஏற்ப கொண்டாடும் திருவிழா தான் போகி என்று கொண்டாடப் படுகிறது.

பொங்கல் திருநாள் :-
பொங்கல் திருவிழா என்பது இந்தப் பிரபஞ்சத்திலிலுள்ள அனைத்து உயிர்களும் உணவைத்தான் ஆதாரமாக வைத்திருக்கின்றன, அப்படிப்பட்ட உணவுக்கு ஆதாரமான பயிர்களை உருவாக்குவது. இயற்கை அதாவது, பஞ்ச பூதங்கள், நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், வாயு, வளமான மண் என்று எடுத்துக் கொண்டால் அந்த மண்ணை வளமாக்க இயற்கையாகவே தங்கள் உணவுக்காக வளை தோண்டும் எலிகள் தங்கள் வளைகளில் கொண்டு வந்து வைக்கும் உணவுப் பொருட்களை உண்ண வரும் பூச்சிகள் மண் புழுக்கள், எறும்புகள், வண்டுகள், அத்தனையும் நாம் சொல்லாமலே மண்ணை உழுது சூரிய வெளிச்சம், நீர், காற்று, ஆகிய இயற்கை சக்திகளை ஊடுருவச் செய்கின்றன.  அதாவது நமக்கு மறைமுகமாக உதவுகின்றன.

மேலும், நமக்கு ஆதாரமான உணவுப் பொருட்களை உருவாக்குவதற்கு நமக்கு உதவும் காளை மாடுகள், பசு, எல்லாவற்றிற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம்,வருடம் முழுவதும் நமக்கு உதவும் இவை அத்தனைக்கும் நாம் நன்றி சொல்லும் நாளே புத்தாண்டுப் பொங்கல்திரு நாள். பொங்கல் என்பது பண்டிகை அல்ல அது திருநாள்,ஆமாம் பண்டிகை என்பது ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்துக்கு ஏற்ப அவர்கள் தர்மத்துக்கு ஏற்ப கொண்டாடுவது, ஆனால் திருநாள் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான திருநாள், திருவிழா ஆகவே பொங்கல் பண்டிகை என்று சொல்வதை விட பொங்கல் திருநாள் என்றே சொல்லுவோம். உலகத்தில் அனைத்து மதத்தவரும், அனைத்து மொழியினரும் வேற்றுமை பாராது கொண்டாட வேண்டிய ஒரே திருநாள் பொங்கல் திருநாள். ஏனெனில், விவசாயி இல்லையெனில் உலகமேஇல்லை. 

அப்படிப்பட்ட விவசாயி எல்லா நாட்டிலும், எல்லா மதத்திலும், எல்லா மொழியிலும் இருக்கிறான். ஆகவே பாரபட்ஷமின்றி விவசாயிக்கும், அவன் விவசாயம் செய்ய உதவும் அத்தனை இதர துணை உதவிகள் என்று அழைக்கப்படுகின்ற அத்துனை பேருக்கும் நன்றி சொல்லும் விதமாகவே பொங்கல் திருநாள் எந்த வேறுபாடுமின்றி ஒருமுகமாக அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஏற்படுத்தப் பட்டதுதான் பொங்கல் திருவிழா. அதனால்தான் நாம் முதலில் இயற்கை வழிபாடாக சூரியனுக்கு பொங்கல் வைத்து அவனுடைய கருணையினால் நாம் விளைவித்த அரிசி,மஞ்சள், பருப்பு,கரும்பு, அதன் விளைவாக ஏற்பட்ட வெல்லம், பசுக்களின் மூலமாக ஏற்பட்ட பால் நெய் போன்றவற்றையும் கலந்து பொங்கி அந்தப் பொங்கலை  பஞ்ச பூதங்களுக்கும் அளித்து, மேலும் நமக்கு உதவியாக இருந்த சாதனங்களாகிய ஏர் ,கலப்பை ,போன்றவைகளுக்கும் , மாடுகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல் திருவிழாவையும், மாட்டுப் பொங்கல் என்னும் திருவிழாவையும்  கொண்டாடுகிறோம்.

வருடம் முழுவதும் வயலில் உழைத்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த அத்துணைப் பொருட்களையும் வெகு நாட்களாக காணாமலிருந்த உறவுக்காரர்களையும் காணும் முகமாக காணும் பொங்கல் என்னும்  திருவிழாவையும், அன்று தங்கள் மாடுகளை வண்டியில் பூட்டி அந்த வண்டிகளில் அனைத்து  சுற்றத்தாரும் உட்கார்ந்துகொண்டு, அடுத்து அடுத்து ஊர்களில் வசிக்கும் தங்கள் சுற்றத்தாரைக்  கண்டு மகிழும் திருவிழாவாக காணும் பொங்கல் திருவிழாவையும் கொண்டாடுகிறார்கள்.

அதுவும் தவிர காணும் பொங்கலை கன்னுப் பொங்கல் என்று குழந்தைகள், கன்னிப் பெண்கள், திருமணமான பெண்கள், மற்றும் வயதானவர்கள் அனைவரும் குளித்து புத்தாடைகள் அணிந்து, மஞ்சள் என்னும்  செடியின் இலைகளைப் பறித்து அவைகளில் அரிசி உணவினால் செய்யப்பட்ட பலவகை உணவுகளளயும் கரும்பு, மஞ்சள் போன்றவற்றையும் அந்த இலைகளில் படைத்து சூரியனுக்கும் நன்றி சொல்லிவிட்டு இயற்கையாக செடி மரம் போன்றவைகள் பரவி வளர, பயிர்கள் செழிக்க, உதவும் கிளி, புறா, காகம்,போன்ற பறவைகள், அணில், எறும்புகள் போன்றவைகளுக்கு அவைகளை உணவாகட்டுமென்று படைத்துவிட்டு அவைகள் உண்டு செல்லும் காட்சியைப் பார்த்து மகிழும், திருவிழாவாகவும் காணும் பொங்கல் என்னும் திருவிழா கன்னுப் பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது.

ஆகவே, நாம் நம்மைப் படைத்த இறைவனுக்கும் நமக்கு உதவும் மற்ற இயற்கைக்கும் நன்றி சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட நாட்களே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலெனும் கன்னுப் பொங்கல்ஆகியவை ஆகும். நன்றி சொல்வோம்- தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம். ஆகவே, உணவுப் பொருளை வீணடிக்காமல், தண்ணீரை வீணடிக்காமல், காற்றை மாசுபடுத்தாமல், சுற்றுப் புற சூழலை மாசு படுத்தாமல், நம் நாட்டின் பொக்கிஷமான விவசாயத்தை பெருக்கும் வழிமுறைகள் கண்டு, நாட்டின் தரத்தை உயர்த்தும் வழிகள் கண்டு நாமும் நம் சுற்றமும் நோயில்லாத வாழ்வு பெற நமக்கு அள்ளிக் கொடுத்த வளங்களுக்காக நன்றி சொல்வோம்.


தமிழ்த்தேனீ

தமிழ்த்தேனீ
rkc1947@gmail.com



No comments:

Post a Comment