Sunday, January 10, 2016

விளையாட்டிலும் வெளிப்பட்ட வீரம்!

-மேகலா இராமமூர்த்தி

வீரமும் காதலும் தமிழர்வாழ்வின் இருகண்கள் என்பது நாம் அடிக்கடிக் கேட்கும் வாசம்தான்! ஆம்! அன்றையமக்களின் வாழ்வில் வீரமும் காதலும் இணையில்லா இருபெரும் உணர்வுகளாகவே காட்சியளித்திருக்கின்றன என்பதற்கு நம்இலக்கியங்கள் சாட்சிகூறுகின்றன. காதலைப் பாடும் அகத்திணைப்பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதி; எனினும், வீரத்தை விதந்தோதிய பாடல்களுக்கும் பஞ்சமில்லை. முடிமன்னர் கோலோச்சிய அன்றைய தமிழகத்தில், ’(போர்செய்து) விழுப்புண்படாத நாளெல்லாம் வீண்நாளே!’ என்பதே தமிழக வீரர்களின் எண்ணமாயிருந்திருப்பதை வான்புகழ் வள்ளுவரும் திருக்குறளில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. (776)

போரற்ற காலங்களில் ‘போரடிக்காமல்’ (not to get bored) பொழுதுபோக்குவதற்குக்கூட வீரவிளையாட்டுக்களையே நாடியிருக்கின்றனர் நம்மவர்! அவ்வாறு அவர்கள் விளையாடிய வீரவிளையாட்டுக்கள் சிலவற்றை இங்கே நாம் நினைவுகூர்வோம்!

ஏறுதழுவுதல்: ஏற்றினைத் தழுவி அதன் திமிலைப்பிடித்து வீரஆடவர் அடக்குதலே ஏறுதழுவுதல் அல்லது ஏறுகோளாகும் (it is a bull-taming sport). இவ்விளையாட்டு ஆநிரைகளைத் தம் செல்வமாய்க்கொண்டிருந்த முல்லைநிலத்து மக்களிடையே அன்று மிகச்சாதாரணமாய் நடந்த ஓர் நிகழ்வு என்பதைச் சங்க இலக்கியம் நமக்கு அறியத்தருகின்றது. காளைகளின் கொம்பைப்பிடித்தல் ஆண்மை, வாலைப்பிடித்தல் தாழ்மை என்பது தமிழர்கொள்கை.

முல்லைநிலத்துக் காரிகையரின் கைத்தலம்பற்ற அப்பகுதியைச்சார்ந்த ஆடவர் ஏறுதழுவுதல் எனும் வீரவிளையாட்டில் வென்றேயாகவேண்டும் என்பது நியதி. வளமான புல்லையுண்டுத் தளதளவெனக் கொழுத்துநின்ற ஏறுகள், கொடும்புலிகளையும் குத்திக்கொல்லும் வீரமும் ஆற்றலும் மிக்கவை. ஆதலால், அவற்றைக் ’கொல்லேறு’ என்று குறிப்பிட்டனர் மக்கள். அந்தக்கொல்லேற்றின் கொம்பைக்கண்டு அஞ்சாத வீரமறவரையே அந்நிலத்துமகளிர் மணப்பர். அவ்வாறில்லாது, ஏற்றைக்கண்டஞ்சித் தோற்றோடுவோனின் தோள்களை இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தழுவ மாட்டார்கள் அப்பெண்டிர்!

இதைத்தான்,

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள் என்கின்றது முல்லைக்கலி.


அற்றைநாளைய ஏறுதழுவுதலே இற்றைநாளைய ’சல்லிக்கட்டாகும்.’ மதுரை மாவட்டத்தைச்சார்ந்த அலங்காநல்லூர் எனும் ஊர் தமிழ்மரபின் எச்சமான இவ்வீரவிளையாட்டை அழிந்துவிடாமல் காக்கும் ஊராய்த் திகழ்ந்துவருகின்றது. சில்லாண்டுகளாக, இவ்விளையாட்டில் விதிமீறல்கள், அரசியல் போன்றவை (விரும்பத்தகாதவகையில்) உள்நுழைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்விளையாட்டுக்குப் ’பிராணிவதை’ என்று முத்திரைகுத்தித் தடைவிதித்துவிட்டது. அத்தடையைவென்று, நம்மறவரின் மாண்பைக்காட்டும் இவ்வீரவிளையாட்டு தமிழ்மண்ணில் மீண்டும் உயிர்த்தெழும் என்று நம்புகின்றனர் சல்லிக்காட்டு ஆர்வலர்கள்!

மல்லாடல்: மற்போர் (wrestling) என்ற பெயரில் அன்று நடைபெற்றுவந்த மல்லாடலும் ஓர் வீரவிளையாட்டே! தமிழகத்தில் வீரமல்லர்கள் பலர் அன்றிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவன் உறந்தையிலிருந்த (உறையூர்) வேளிர்தலைவனான தித்தனின் மகனான பெருநற்கிள்ளி. அழகும் ஆற்றலும் ஒருங்கே பொருந்திய வீரஇளைஞனான பெருநற்கிள்ளி, ’போரவை’ என்று அழைக்கப்பட்ட மற்போர் பயிற்சிக்கூடமொன்றை நடாத்திவந்தமையால் ’போரவைக் கோப்பெருநற்கிள்ளி’ என்றே இவனை அழைத்தனர் புலவோர். யாது காரணத்தாலோ, ’நொச்சிவேலித் தித்தன்’ என்று பரணரால் புகழந்துபோற்றப்பட்ட (அகம்.122) தித்தனுக்கும், அவனுடைய வீரமைந்தனான பெருநற்கிள்ளிக்கும் மனவேறுபாடு வந்துவிட்டது. அதனால், மகனென்றும் பாராது கிள்ளியை ஊரைவிட்டு வெளியேற்றிவிடுகின்றான் தித்தன்.

அத்தனால் (தந்தை) வெளியேற்றப்பட்ட பெருநற்கிள்ளி பலவிடங்களில் சுற்றிவிட்டு ஆமூர் எனும் ஊரில்வந்து தங்கியிருந்தான். அவ்வூரில் புகழ்பெற்ற மல்லன் ஒருவன் இருந்தான். அவன் பெருநற்கிள்ளி மல்லாடலில் வல்லவன் என்றறிந்து அவனை மல்யுத்தத்துக்கு அறைகூவியழைத்தான். சிலிர்த்தெழுந்த கிள்ளி, அந்த மல்லனின் மார்பின்மீது ஒருகாலும், முதுகின்மீது மற்றொருகாலும் வைத்து அவன் மதவலியை முருக்கி, பசித்த யானை மூங்கிலைத் தின்பதுபோல், அவன் தலையையும் காலையும் முறியமோதி அவனை வென்றான். இந்தக் காட்சியைக்கண்டு வியப்பும் பெருமிதமும் அடைந்த புலவர் சாத்தந்தையார், “மகன்புரிந்த இந்த அற்புதப்போரினை தித்தன் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) கண்டிருக்கவேண்டுமே!” என்று மெய்புளகித்துப் பேசுகின்றார்.

…. ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங்கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங்கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்
போர் அருந்தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகு மல்லர் கடந்தடு நிலையே. (புறம் – 80)

வேட்டையாடல்: வேட்டையாடுதல் அன்று சிலருக்குத் தொழிலாகவும் சிலருக்குப் பொழுதுபோக்கான வீரவிளையாட்டாகவும் விளங்கிற்று. வேட்டையைத் தொழிலாகக்கொண்டோர் ’வேடர்’ என்றும் ’வேட்டுவர்’ என்றும் அழைக்கப்பட்டனர். குறுநிலமன்னர்களான வேளிரும், பெருநிலமாண்ட வேந்தரும் இதனைப் பொழுதுபோக்காய்க் கொண்ருந்தனர். கொல்லிமலைத் தலைவனான ’வல்வில்’ ஓரி, ஓர் அம்பிலேயே யானை, புலி, மான், முள்ளம்பன்றி, உடும்பு என ஐந்து விலங்குகளை வீழ்த்தும் வில்லாளனாய்த் திகழ்ந்தான். அதன்காரணமாய், வில்லிலே வல்லவன் எனும்பொருள்பட ‘வல்வில்’ ஓரி என்று விளிக்கப்பட்டான்.

விலங்குகளுக்கு வீடுபேறளிக்கும் கொலைத்தொழிலாக வேட்டம் விளங்கியபோதினும், அதிலும் ஓர் அறநெறியைப் பேணினர் வேட்டுவர் என்பதைக் கண்ணப்பநாயனார் புராணம் கவினுறக் கழறுகின்றது. ஆம்! விலங்குகளின் குட்டிகளையும், கருவுற்று வயிறலைத்து ஓடும் பெட்டை விலங்குகளையும் கொல்லாது விடுத்து, வலிய விலங்குகளை வேட்டையாடுவதையே வேட்டுவர் தம் வழக்கமாய்க்கொண்டிருந்தனர் என்றறியும்போது, வீரத்திலும் வெளிப்படும் அவர்தம் ஈரம் நம்மை நெகிழ்ச்சியுறச்செய்கின்றது.

இச்செய்தியைப் பெரியபுராணம் மிடுக்கான சொற்களில் எடுத்தியம்புவதைக் காணுங்கள்.

துடியடியன மடிசெவியன 
   துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
   மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன 
   அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு 
   கொலைபுரிசிலை மறவோர்   (பெ.புராணம் – கண்ணப்பநாயனார் புராணம்)

இவ்வேட்டைக்கலை சங்ககாலத்தோடு மங்கிவிடவில்லை. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து, வெள்ளையரை எதிர்த்து வீரமரணடைந்த மருதுசகோதரர்களில் மூத்தவரான பெரியமருது மிகச்சிறந்த வேட்டைக்காரராய்த் திகழ்ந்திருக்கின்றார். இச்செய்தியை, அவர்களோடு நெருங்கிப்பழகிய ஆங்கிலஅதிகாரி ஒருவர் தன்நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனைப்போர்: மனிதரும் மனிதரும் புரிந்துவந்த போர் போதாதென்று விலங்கினங்களையும் மோதவிட்டு வேடிக்கைப்பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர் பண்டைத்தமிழர். அவற்றில் ஒன்று ஆனைப்போர். கருமலை போன்ற ஆனைகளை ஒன்றோடொன்று பொருதச்செய்து கண்டுகளித்திருக்கின்றனர் சீமான்களும் கோமான்களும். இப்போரைப் பாதுகாப்பாய்க் காண்பதற்கென்றே அரசர்களின் தலைநகரங்களில் அன்று தனிமாடங்கள் இருந்தனவாம்.

வள்ளுவரும், செல்வத்தைத் தன்னிடமுடைய ஒருவன் ஒருசெயலைத் தொடங்குவது, குன்றிலே ஏறிநின்று (கீழேநிகழும்) யானைப்போரைப் பார்ப்பதுபோல் பாதுகாப்பானது என்று கூறுவதை இங்கே நாம் நினையலாம்.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.  (758)

ஆட்டுப்போர்: ஆனைப்போரைப்போலவே ஆட்டுக்கடாக்களை மோதவிட்டுக் களித்திருக்கின்றனர் தமிழ்க்குடியினர். அதற்கென்றே ஆட்டுக்கடாக்களைச் சிலர் வளர்க்கவும் செய்திருக்கின்றனர். இவற்றைப் ’பொருதகர்’ என்கின்றார் தெய்வப்புலவர்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)

(ஊக்கமுடையவன் (காலம்பார்த்து) ஒடுங்கியிருப்பது, ஆட்டுக்கடா தாக்குவதற்குக் காலம்பார்த்து எவ்வாறு பின்வாங்குமோ அதனை ஒக்கும்.)

சேவற்போர்: பறவையினங்களையும் போரின்றி இருக்கவிடவில்லைcock fight நம்மனோர். கோழிச்சேவல்கள், காடைகள் போன்றவற்றையும் போரில் ஈடுபடுத்தி அவற்றை ஆர்வத்தோடு கண்டுகளித்திருக்கின்றனர். சேவல்களின் கால்களில் முள்ளையோ கத்தியையோ கட்டிச் சற்றுக்கோரமாய்ப் போரிடச்செய்திருக்கின்றனர் என்று அறிகின்றோம்.

கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றிச் சீறி
வெறுப்புஇல களிப்பின் வெம்போர் மதுகைய வீரவாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும்;

என்று சேவற்போரின் தன்மையைக் கம்பகாவியம் பேசும்.


அந்நாளில், சோழரின் பழையதலைநகரான உறையூரில் வீரக்கோழிகள் மிகுந்திருந்தமையால் அதற்குக் ’கோழியூர்’ என்ற பெயரும், அதனையாண்ட சோழருக்குக் ’கோழிச்சோழர்’ என்றபெயரும் ஏற்பட்டன.

இவ்வாறு, பொருதலில்லா வாழ்க்கை பொருளற்ற வாழ்க்கை எனும் கொள்கையுடையோராய் வாழ்ந்து, வீரவரலாற்றை வடித்துச்சென்றிருக்கும் தமிழரின் மறம் – அவர்தம் போர்த்திறம் நம்மை மலைக்கவைக்கின்றது அல்லவா?

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=65476

தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு அனுமதி - கவிஞர் வைரமுத்து அறிக்கை


மேகலா இராமமூர்த்தி
மேகலா இராமமூர்த்தி
megala.ramamourty@gmail.com

No comments:

Post a Comment